தன் முயற்சியில் சற்றும் மனம் ததளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீதேறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழே இறங்கி அதனைச் சுமந்து மயானத்தை நோக்கிச் செல்கையில் அதனுள்ளிருந்த வேதாளம் எள்ளி நகைத்து “மன்னனே! இந்த பயங்கர நடுராத்திரியில் நீ இப்படிப் பாடுபடு வதைப் பார்த்தால் நீ இந்த உலகிலேயே காண முடியாத ஏதோ ஒரு பொருளைக் கற்பனை செய்து கொண்டு அதற்காக அலைந்து திரிகிறாயோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இதுபோல சுற்றிய பானுசிம்மன் என்பவனின் கதையைக் கூறுகிறேன் கவனமாக கேள்” எனக் கூறிக் கதையை ஆரம்பித்தது.
வெகு காலத்திற்கு முன் ஒரு நாட்டில் அரச குடும்பத்தில் பிறந்த பானுசிம்மன் என்ற இளைஞன் இருந்தான். அவனிடம் ஏராளமான பணத்தோடு அழகும் நிறைந்திருந்தது அவனுக்குப் பெண்ணைக்கொடுக்க பலர் வந்தார்கள். ஆனால் அவனுக்கு எந்தப் பெண்ணையுமே பிடிக்கவில்லை அதற்குக்காரணம் அவன்தன் மனதில் அழகிய பெண் ஒருத்தியைக் கற்பனை செய்து வைத்திருந்ததேயாகும். அப்படிப்பட்ட அழகியை அவன் தேடித் திரியலானான்.
விந்தியமலைப் பகுதியில் ஓரிடத் திலுள்ள குளத்திற்கு ஒவ்வொரு பௌர்ணமியின் போதும் பல கந்தர் வக் கன்னிகைகள் வருவதாக பானுசிம்மன் கேள்விப்பட்டான். அப்பகுதிக்குச்செல்லும் வழியில் பல கொடிய மிருகங்கள் இருந்ததால் யாரும் அங்கே போகத் துணிவு கொள்ளவில்லை. பானுசிம்மன் துணிவுடன் அங்கு சென்றான்.
அந்தக்குளம் ஒரு கந்தர்வ மன்னனின் அதிகாரத்தின் கீழ் இருந்தது. அவனது புதல்விகள் அதில் நீராடி விளையாட அவ்வப்போது வந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவ்வாறு வந்தவர்களில் ரத்தினமாலா என்ற கந்தர்வக் கன்னிகை பானுசிம்மனின் பார்வையில் பட்டாள். அவளைக் கண்டதும் அவன் அவளேதான் தான் கற்பனை செய்து வைத்திருந்த காரிகை எனக் கண்டான். அவன் தன் விருப்பத்தை அவளிடம் சொல்ல நினைக்கையில் அவள் மாயமாய் மறைந்து போனாள்.
இதனால் பானுசிம்மன் மனம் தளர்ந்து விடாமல் அடுத்த பௌர்ணமி வரை அவளது வருகைக்காக அங்கேயே காத்திருந்தான். இம்முறை மறைந்திருந்து அவள் வந்ததும் ஓடி வந்து அவள் கையைப் பலமாகப் பற்றிக் கொண்டான். அவளோ சற்று சிரமப்பட்டுத் தன் கையை அவனது பிடிப்பிலிருந்து விடுவித்துக்கொண்டு மாயமாய் மறைந்து போனாள்.
அவள் குளத்தில் குதித்து மறைந்த தால் பானுசிம்மனும் அக்குளத்தில் குதிக்கப் போனான். அப்போது கந்தர்வ மன்னன் கம்பீரமான குரலில் ‘நில்’ எனக் கூறி ஒரே தோற்றமுள்ள மூன்று கந்தர்வக் கன்னிகளோடு வந்து “இவர்களில் நீ விரும்பியது யாரை என்று சரியாக அடையாளம் காட்டினால் அவளை நான் உனக்கு மணம் செய்து வைக்கிறேன்” என்றான்.
பானுசிம்மன் முதலில் சற்றுத் திகைத்தாலும், பிறகு அவனுக்குத்தான் ரத்தினமாலாவின் கையைப் பற்றியதும் அவள் சற்றுப் போராடி அக்கையை விடுவித்துக் கொண்டதும் நினைவிற்கு வந்தது. அவளது கையில் தன் நகங்களால் உண்டாக்கப்பட்ட கீறல்கள் இருக்க வேண்டும் என எண்ணி அவன் அவர்களது கைகளைப் பார்த்தான். அவன் எதிர்ப்பார்த்தபடி ஒருத்தியின் கையில் கீறல்கள் இருந்தன. உடனே அவன் அவள்தான் தான் விரும்பிய பெண்ணென்று கந்தர்வ மன்னனுக்குச் சுட்டிக்காட்டினான்.
கந்தர்வ மன்னனும் மகிழ்ந்து “பேஷ். சரியாகத்தான் காட்டி இருக்கிறாய். ரத்தினமாலாவுக்கும் உன்னைப் பிடித்திருக்கிறது. ஆனால் ஒரு நிபந்தனையின் பேரில்தான் இந்த விவாகம் நடக்கும். பொறுப்பது எங்கள் குணம். நீயும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். நீ கோபித்துக்கொண்டு அவளை மூன்றுதடவைகளில் அடித்தால் அவள் மறுபடியும் கந்தர்வலோகத்திற்கே வந்து விடுவாள். இதை நினைவில் வைத்துக் கொள்” என்று கூறி ரத்தினமாலாவை அங்கேயே விட்டு விட்டு தன் மற்ற இருபுதல்விகளுடன் அவன் மாயமாய் மறைந்து போனான்.
பானுசிம்மன் அப்போதே ரத்தினமாலாவை காந்தர்வ விவாகம் செய்து கொண்டு தன் ஊருக்கு அழைத்துக் சென்றான். சில நாட்களுக்குப்பின் பானுசிம்மன் ரத்தினமாலாவை அழைத்துக்கொண்டு தன் நண்பன் ஒருவனின் வீட்டிற்குப் போகவேண்டி வந்தது. அந்த நண்பனுக்குக் குழந்தை பிறக்கவே அதற்குப் புண்ணியா வசனம் அன்று நடக்க இருந்தது. குழந்தையைத் தொட்டிலில் போட்டிருந்தார்கள். பானுசிம்மன் அக்குழந்தையை எடுத்து முத்தமிட்டு விட்டுத் தான் கொண்டு வந்த பரிசை அளித்தான். பிறகு அக்குழந்தையைத் தன் மனைவியிடம் கொடுக்க முயன்றான்.
ஆனால் ரத்தினமாலா அதனைத் தன் கைகளில் எடுத்துக் கொள்ளாமல் சட்டென முகத்தைத் திருப்பிக் கொண்டு வேறுபுறமாகப் போய் நின்றாள். அதுக்கண்டு எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். வீடு திரும்பிய தும் பானுசிம்மன் தன் மனைவியைக் கோபித்துக் கொண்டான்.
அவள் “நான் அப்படி நடக்கக்காரணம் உள்ளது” எனத் தலை நிமிர்ந்து கூறவே பானுசிம்மன் கோபம் கொண்டு அவள் கன்னத்தில் ஒரு அறை அறைந்து “இதுதான் நீ நடந்து கொள்ளும் விதமோ?” எனக் கேட்டான். அவள் தழுதழுத்த கரலில் “அக்குழந்தையின் எதிர்காலம் பற்றி நீங்கள் அறிய மாட்டீர்கள், ஆனால் எனக்குத்தெரிந்து விட்டது. அவன் பெரியவனானால் கெட்ட வழிகளில் போய்ப் பல கொலைகளைச் செய்வான். முடிவில் அவன் தூக்கிலிடப்படுவான். அப்படிப்பட்டவனை நான் தொடக்கூட மாட்டேன். நீங்கள் என்னை அடித்து விட்டீர்கள். இது முதல் தடவை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்” என்றாள்.
பானுசிம்மனுக்குத்தன் தவறு தெரிந்தது. அது முதல் தன் மனைவி மீது கோபப்படாமல் ஜாக்கிரதையாக இருக்காலானான். சிலநாட்களாயின. அவ்வூர் கிராம அதிகாரியின் மகளின் திருமணத்திற்கு அவனும் அவன் மனைவியும் போக வேண்டி வந்தது. அவர்கள் அங்குபோகும் போது மணமகன் மணமகளின் கழுத்தில் திருமாங்கல்யத்தைக் கட்டப் போனான். எல்லோரும் அக்காட்சியைக் கண்டு மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.
ஆனால் ரத்தினமாலாவோ பலத்த குரலில் அழலானாள். எல்லோரும் திடுக்கிட்டு அவளையே பார்க்கலானார்கள். பானுசிம்மனும் தன் மனைவியிடம் “ஏன் இப்படி அழுகிறாய்? என்ன நடந்து விட்டது?” என்று கேட்டான். அதற்கு அவள் “இவர்களது ஜோடிப் பொருத்தம் சரியில்லை . இவர்கள் இனி தினமும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள். அதனால் இவர்கள் இருவரது வாழ்க்கையும் பாழாகப் போகிறது” என்றாள். அதைக் கேட்டு பானுசிம்மன் “சரிசரி கண்ணைத் துடைத்துக் கொண்டு பேசாமல் இரு” என்றான். அப்போது யாரோ ஒருவன் “மனைவியை அடக்கத் தெரியாதவனெல்லாம் இப்படி நாலுபேர் முன் வந்து அவமானப்படத்தான் வேண்டும்” என்று சற்று பலமாகக்கூறினான். அது கேட்டு பானுசிம்மன் ரத்தினமாலாவின் முதுகில் ஒரு குத்து விட்டு “மானத்தை வாங்காதே” என்றான். ரத்தினமாலாவோ “என்னை அடிப்பது இது இரண்டாவது தடவை” என்றாள்.
இதற்குப்பின் பானுசிம்மன் தன் மனைவி விஷயத்தில் எச்சரிகையுடன் நடக்கலானான். ஏனெனில் இன்னும் ஒருமுறை அவளை அடித்து விட்டால் அவள் கந்தர்வலோகத்திற்கு போய் விடுவாளே. சில நாட்களாயின பானுசிம்மனின் சிற்றப்பாவின் மகன் இறந்து விட்டதாகத் தகவல் வரவே உடனே அவன் தன் மனைவியுடன்தன் சிற்றப்பாவின் வீட்டிற்குச் சென்றான். அங்கு எல்லோரும் இறந்து கிடந்த வாலிபனின் உடலைச் சுற்றி நின்று அழுது கொண்டிருந்தார்கள்.
அந்த உடலைக் கண்டு ரத்தினமாலா பலமாகச் சிரிக்கலானாள். எல்லோரும் அவளை விசித்திரமாகப் பார்த்தார்கள். பானுசிம்மனும் அவளிடம் “இறந்து கிடப்பவனைப்பார்த்து நீ இப்படி சிரிக்கக்கூடாது. நீயே பார் எல்லோரும் அழுது கொண்டிருக்கிறார்கள்” என்றான். அப்போதும் அவள் சிரிப்பதை நிறுத்தவில்லை. அது கண்டு கோபம் கொண்டு பானுசிம்மன் அவள் கன்னத்தில் அறைந்து விட்டான். ஆனால் ரத்தினமாலா “இறந்தவன் மகா அதிர்ஷ்டசாலி. இப்போது மறுபிறவி எடுத்து ஒரு சக்கரவர்த்தியின் மகனாகப் பிறந்திருக்கிறான். இதை அறியாமல் எல்லோரும் அழுகிறார்களே என்பதை நினைக்க நினைக்க எனக்கு சிரிப்பு அடக்க முடியாமல் வந்துவிட்டது. இது இருக்கட்டும் என்னை மூன்று தடவைகளில் நீ அடித்துவிட்டதால் இனி நான் உன்னோடு வாழமுடியாது. இப்போதே கந்தர்வலோகம் போகிறேன்” எனக்கூறி மாயமாய் மறைந்தாள். பானுசிம்மனும் அவளைத் தடுக்காமல் பேசாமல் நின்றான்.
வேதாளம் இக்கதையைக் கூறி “மன்னா! பானுசிம்மன் கந்தர்வ மன்னன் விதித்த நிபந்தனையை ஏன் மீறினான்? ரத்தினமாலா கந்தர்வ லோகத்திற்குப் போகும் போது ஏன் அவன் தடுத்து அவளை நிறுத்த வில்லை? இக்கேள்விகளுக்குச் சரியான பதில் தெரிந்திருந்தும் நீ அவற்றைக் கூறாவிட்டால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகி விடும்” என்றது.
அதற்கு விக்கிரமனும் “மனிதப் பிறவி எடுத்தவனுக்கும் கந்தர்வ கன்னிக்கும் திருமணம் நடப்பது சரியல்ல. அது ஒரு திருமணம் என்றே ஆகாது. இருவரிடையே என்னதான் அன்பு இருந்தாலும் மனிதனின் இயல்பே வேறு, கந்தர்வர்களின் இயல்பே வேறு. பானுசிம்மனால் ரத்தினமாலாவை மனித இயல்பு கொண்டவளாகச் ஆக்கமுடியாது. அவர்களது போக்கு நேர் விரோதமானது என்பது அவர்களது நடத்தையில் வெளிப்பட்டு விட்டது. மனிதனுக்கு சமுதாய வாழ்க்கை உள்ளது. சமூகத்திற்கு அவன் செய்ய வேண்டிய நெறிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைச் சரி வரச் செய்ய வேண்டுமென்றுதான் பானுசிம்மன் எண்ணினானேயொழிய தான் கந்தர்வ மன்னன் விதித்த நிபந்தனையை ஏற்றதைப் பற்றி நினைக்கவில்லை. ரத்தினமாலாவோ கந்தர்வர்களுக்குள்ள சக்தியால் மனிதர்களின் எதிர்காலம் பற்றி அறிந்து அதற்கேற்ப நடந்தாள். அதனால் மனிதர்களை அவளது நடத்தை எவ்வாறு பாதிக்கும் என்பது பற்றி அவள் கவலைப்படவில்லை. இந்த நேர் எதிரான இயல்புகளைக் கொண்டு இருவரும் இல்வாழ்க்கை நடத்த முடியாது என்பதை பானுசிம்மன் கண்டு கொண்டான். அதனால் தான் ரத்தினமாலா கந்தர்வ லோகத்திற்கு போவதை அவன் தடுக்கவில்லை” என்றான்.
விக்கிரமனின் சரியான இந்த பதிலால் அவனது மௌனம் கலை யவே, அவன் சுமந்து வந்த உடலோடு வேதாளம் உயரக் கிளம்பிப் போய் மீண்டும் முருங்க மரத்தில் ஏறிக் கொண்டது.
– மார்ச் 1996
அருமையான கதை; கதையும், கருத்தும் மிகச் சரியானது.
இவர்களது ஜோடிப் பொருத்தம் சரியில்லை. இவர்கள் இனி தினமும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள். அதனால் இவர்கள் இருவரது வாழ்க்கையும் பாழாகப் போகிறது” என்றாள். அதைக் கேட்டு பானுசிம்மன் “சரிசரி கண்ணைத் துடைத்துக் கொண்டு பேசாமல் இரு” என்றான். அப்போது யாரோ ஒருவன் “மனைவியை அடக்கத் தெரியாதவனெல்லாம் இப்படி நாலுபேர் முன் வந்து அவமானப்படத்தான் வேண்டும்” என்று சற்று பலமாகக்கூறினான்.
என்னதான் அன்பு இருந்தாலும் மனிதனின் இயல்பே வேறு, கந்தர்வர்களின் இயல்பே வேறு. பானுசிம்மனால் ரத்தினமாலாவை மனித இயல்பு கொண்டவளாகச் ஆக்கமுடியாது. அவர்களது போக்கு நேர் விரோதமானது என்பது அவர்களது நடத்தையில் வெளிப்பட்டு விட்டது.
வ.க.கன்னியப்பன்