(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இரவு நேரம். நாரையொன்று காற்றில் பறந்து சென்று கொண்டிருந்தது. எங்கும் பட்டப் பகல்போல் ஒளி பரவியிருந்தது. அந்த ஒளியில் வெப்பம் இல்லை. குளிர்ச்சி நிறைந்த அந்த இன்ப ஒளி எங்கிருந்து வருகிறது என்று தேடித்தான் அந்த நாரை பறந்து கொண்டிருந்தது.
உலகமெங்கும் அந்த இன்ப ஒளி பரவியிருந்தது. நாரை சென்ற இடமெல்லாம் அந்த ஒளி நிறைந் திருந்தது. நாரை சிந்தனையோடு வானை நோக்கி நிமிர்ந்தது.
உயரத்தில் ஒளித்தகடு போல் வட்ட நிலா அழகுடன் விளங்கியது. நாரை அதன் அழகில் மயங்கி நிலாவையே பார்த்துக் கொண்டு நின்றது.
நிலா அழகாகத்தான் இருந்தது. உலக முழு வதும் ஒளி பரப்பும் பேரொளியைப் பெற்றுத்தான் விளங்கியது. ஆனால் அந்த ஒளி நிலாவின் இடை யிலே ஓர் இருட்டுப் பகுதியும் இருந்தது. அது நிலவின் இடையில் ஒரு கறை போல இருந்தது.
இவ்வளவு அழகான நிலவின் இடையில் இப்படி ஒரு கறையிருக்கிறதே என்று வருந்தியது நாரை. தன்னிடம் உள்ள கறையை நீக்கிக் கொள்ளாமல் உலகைச் சூழ்ந்துள்ள இருளை ஓட்டப் புறப்பட்டு விட்டதே இந்த நிலவு ! இதன் கருத்து என்ன என்று அறிய நாரை ஆசைப் பட்டது.
அது நிலாவை நோக்கிப் பறந்தது. எவ்வளவு உயரம் பறந்தும் அதனால் நிலாவை அடைய முடிய வில்லை; போகப் போக நிலா மேலும் மேலும் தொலைவில்தான் இருந்து கொண்டிருந்தது.
நிலாவை நெருங்க முடியாது என்று கண்டு கொண்ட நாரை, அருகில் காற்றில் தவழ்ந்து சென்று கொண்டிருந்த ஒரு மேகத்தைப் பார்த்தது. “மேகமே, நிலா தன்னிட மூள்ள கறையைப் போக்கிக் கொள்ளாமல், உலகில் உள்ள இருளைப் போக்குகிறதே! இதன் கருத்து என்ன ?” என்று கேட்டது.
“நாரையே, உயர்ந்த பெரியோர்கள் தங்கள் குறையைக் காட்டிலும் பிறருடைய குறையை நீக்கு வதே முதற்கடமை என்று நினைப்பார்கள். அது போன்றதுதான் நிலாவின் இயல்பு!” என்றது மேகம். நிலாவின் உயர்ந்த தன்மையை வியந்து பாராட்டிக் கொண்டே நாரை உலகு நோக்கி இறங்கி வந்தது.
கருத்துரை:- தன் துன்பத்தைக் காட்டிலும் பிறர் துன்பத்தைப் பெரிதாக நினைத்து அதைப் போக்க உதவி செய்வதே நல்லோர் இயல்பாகும்.
– நல்வழிச் சிறுகதைகள் – முதல் பாகம், முதற் பதிப்பு: ஜனவரி 1965, வானதி பதிப்பகம், சென்னை.