(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருக்குறள் கதைகள்
நற்குணமில்லாத கீழோரது தன்மை
தருமபுர ஏழாவது தலைவராக விளங்கினவர் ஸ்ரீ திருவம்பல தேசிகர். இவர்கள் காலத்தில் தஞ்சை அரசன் கடலாட விரும்பிச் சேனை சூழக் காவிரிப்பூம் பட்டினம் நோக்கிச் சென்றான். செல் பவன் தருமபுரம் அணுகினான். ஞானபுரீஸ்வரர் ஆலயத்தில் மணி ஓசை கேட்டது. அருகிருந்தவ ரைக்கேட்டான். அர்த்தசாமபூசை நடக்கிறது என் றார்கள். உடனே குதிரையிலிருந்து கீழிறங்கி வணங்கிப் பின் சென்றான். வணங்கியதைக்கண்ட சில பொறாமையுடையவர், “தாங்கள் வணங்கியது சைவசமாதி ஆகும்; இதை அரசர்வணங்கினால் பிரா யச்சித்தம் செய்யவேண்டும்” என்றார்கள். இதைக் கேட்ட அரசன், “இவ்விதம் உள்ள சமாதியை இடித்து எறியுங்கள்” என்று சொல்லிப் பின் தான் செல்லும் இடத்தை நோக்கிப் புறப்பட்டான். அர சன் உத்தரவின்படி ஆட்களும் இரும்புக் கோல் கொண்டு கட்டிடத்தை இடிக்கச் சென்றார்கள். இடிப்பதைக் கண்டு அடியவர் குழாம் ஓடிக் குரு நாதரிடம் தெரிவித்தார்கள். குருநாதர் நீங்கள் எதிர்த்து யாதும் செய்யாதீர்கள்? அடங்கி இருங்கள்” என்று பின் வரும் பாடலைப் பாடினார்கள். அடியவர் குழாம் தம் இருப்பிடம் சென்று தங்கியது.
ஈசன் பலகீனன் என் றக்கால் ஆலயத்தின்
மோசம் வந்ததென்று மொழியலாம்-ஈசனே
ஆக்குவதும் ஆக்தி அழிப்பதுவும் தான் ஆனால்
நோக்குவதென் யாம் பிறரை நொந்து.
இப்பாடல் சொன்னவுடனே இடித்தவர்கள் கண் பார்வை அழிந்து குருடராயினர். கடலை நோக்கிச் செல்லும் காவலன் கண் பார்வையும் கெட்டது. விழிதெரியாமையால் அரசன் மீண்டும் தருமபுரம் வந்து சுவாமிகளின் காலில் விழுந்து குற்றத்தைப் பொறுத்துக் காத்தருள வேண்டினான். சுவாமிகள் மன மிரங்கி விபூதி கொடுக்க ஒரு கண் தெரிந்தது. இடித்தவர்களுக்கும் விபூதி கொடுத்துக் கண் அறி வை உண்டாக்கினார்கள். பின்கடலாடிவந்து 48நாள் சுவாமிகளை வழிபட்டிருக்க மற்றொரு கண்ணும் தெரிந்தது. அப்போது அரசன் சிலர் சைவசமாதி என்றார்களே! இதன் பெருமை என்ன? என்பதை எனக்கு விளக்க வேண்டும்” என்று கேட்டுக் கொள்ள வருணாச்சிரம சந்திரிகை என்னும் நூலை, சுவாமிகள் இயற்றி அரசனுக்கு யாவற்றையும் அறி யும்படிச் செய்தார்கள். இதனால் செருக்குள்ள கீழ் மக்களைத் துன்புறுத்தினால் அவர்கள் பிறர்க்குப் பயன் படுவர்; என்பதும், மேலோர் சொன்ன அள விலே அடங்கி நடப்பர் என்பதும் அறியக்கிடக் கிறது. இக்கருத்தையே இக்குறளும் அறிவிக்க வந் துள்ளது.
சொல்லப் பயன்படுவர் சான்றோர்; கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ். (80)
சான்றோர் = மேலாயினோர்.
சொல்ல = பிறர் தங்குறையைச் சொன்னமாத்திரத்தில்
பயன் படுவர் = வருந்திப் பயன் படுவார்கள்.
கீழ் = மற்றைய கீழ் மக்கள்
கரும்பு போல் = கரும்பைப் போல
கொல்ல = வலியவர் நைந்து போகும்படி நெருக்கிய இடத்து
பயன் படும் = பயன் படுவர்.
கருத்து: மேலார் பிறர் தம் குறையைச் சொல்லக் கேட்டு உதவி செய்வர். கீழோர் துன்பம் நிகழ்ந்தால் உதவி செய்வர்.
கேள்வி : கரும்பு போல் கொல்லப் பயன்படும் எவர்?
– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.