முன்னொரு காலத்தில் அரசர் ஒருவர் மிகுந்த பராக்கிரமசாலியாக விளங்கினார். அவருக்கு மூன்று ஆண் பிள்ளைகள் இருந்தனர்.
மூவரும் கல்வியை மிகவும் வெறுத்தனர். இளவரசர்களுக்குரிய எந்தத் தகுதியையும் வளர்த்துக் கொள்ளாமல் சதாசர்வ காலமும் விருந்து, கேளிக்கை, வேடிக்கை, விளையாட்டு எனக் காலம் கழித்தனர்.
பாடம் கற்றுத் தர வரும் ஆசிரியரையும் கிண்டல் செய்து விரட்டி விட்டனர். இதனால் ஒருவரும் அவர்களுக்குப் பாடம் சொல்லித் தர முன் வரவில்லை. இதைக் கண்ணுற்ற மன்னர் சான்றோர்களையும் அறிஞர் பெருமக்களையும் அழைத்து “இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு என்ன வழி?’ என்று கேட்டார்.
அவர்களுள் ஒருவரே விஷ்ணுசர்மா என்னும் அறிஞராவார். அவர் குருகுலக் கல்வி போன்று இல்லாமல் அரண்மனையை ஒட்டிய தோட்டம் ஒன்றில் இருந்த பெரிய மரத்தின் நிழலுக்கு இளவரசர்கள் மூவரையும் அழைத்துச் சென்று கதைகள் பல சொல்ல ஆரம்பித்தார்.
அதுவரை கதைகளையே கேட்டறியாத அம்மூன்று இளவரசர்களும் மிகுந்த ஆர்வத்துடன் அவர் கூறிய கதைகளைக் கேட்க ஆரம்பித்தனர்.
அவர் கூறிய கதைகளில் பெரும்பாலும் விலங்குகளே கதாபாத்திரங்களாக இருந்தன. ஆனால், உண்மையில் அவை கல்வி, ஒழுக்கம் ஆகியவற்றைப் போதிப்பவைகளாக இருந்தன.
மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத தேவைகளாக விளங்கும் பொறுமை, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, பெருந்தன்மை, திறமை ஆகிய ஐந்து நற்குணங்களையும் விஷ்ணுசர்மா கூறிய கதைகள் விளக்கியதால் அவை “பஞ்சதந்திரக் கதைகள்’ என்று அழைக்கப்பட்டன.
இக் கதைகளைத்தான் இன்று வரை சிறுவர்கள் மட்டுமன்றி பெரியவர்களும் படித்துப் பயன்பெறுகின்றனர்.
– ந.லெட்சுமி, கடுவெளி. (ஜூலை 2012)