ஒரு கிளைப் பறவைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: April 8, 2023
பார்வையிட்டோர்: 1,465 
 

(2009 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நிதார் அந்தச் சின்னஞ்சிறு வீட்டிலிருந்து வெளியே எட்டிப் பார்த்தபோது வெயில் நன்றாகக் காய்ந்து கொண்டிருந்தது. அவன் தெருவில் நடந்தான். லேசான காற்றுத் தவழ்ந்து கொண்டிருந்தது. சிவப்பு நிஜார் ஒன்றை நிதார் அணிந்திருந்தான். பழைய துண்டுஒன்று அவன் தோளிலே புரண்டது. அரிசிலாற்றில் குளிக்கப் போகும் ஆனந்தம் அவனுக்கு. வாளிப்பான அவன் உடம்பிலே எத்தனை வனப்பு! கட்டான உடல் அவனுக்குக் களையூட்டிக் கொண்டிருந்தது.

பத்து வீடுகளைத் தாண்டியிருப்பான். பால் ராஜூம் வந்து சேர்ந்து கொண்டான். ‘பால்கனி’யில் நின்றிருந்த குமார் தெருவிலே வரும் இருவரையும் பார்த்தான். அடுத்த கணம் மாடிப்படிகளிலிருந்து ‘தடதட’ வென்று இறங்கிக் கீழே வந்தான்.

“இதோ வந்து விட்டேன் நிதார். ஒரு நிமிஷம் இருங்கள், என் தங்கத்தையும் கூட்டி வருகிறேன்…” என்றவாறு குமார் ஓடினான். அடுத்த நிமிஷம் அழகான கன்றுக்குட்டி ஒன்றை இழுத்து வந்தான். குமார் அதைக் குளிப்பாட்டி விரட்டி விட்டானானால், அது தானாகவே வீட்டிற்கு வந்து விடும்.

நண்பர்கள் மூவரும் ஆற்றுக்குக் கிளம்பினர். அரிசிலாற்றில் இந்த வருஷம் தண்ணீர் வற்றாமல் போய்க் கொண்டிருந்தது. காவிரித் தாயின் கிளைக்கரம்தானே அந்த அழகிய அரிசிலாறு! காரைக்காலில் ஏதேனும் விசேஷ நாட்களாக இருந்தால் ஆற்றில் நிறையத் தண்ணீர் விடுவார்கள். மழைக்காலங்களில் இருகரைகளையும் தொட்டுக் கொண்டு புனல் பெருகிப் போகும். இப்போதும் சற்று அதிகமாகவே பிரவாகம் ஓடிக்கொண்டிருந்தது.

“குமார், தங்கத்தை துறைப்பக்கம் கொண்டு போய்க் குளிப்பாட்டிவிட்டு வா, நாங்கள் மாமரத்து மடுப்பக்கம் போகிறோம். அங்கே நல்ல ஆழம்; ஆனந்தமாகக் குளிக்கலாம். தங்கத்தை விரட்டிவிட்டு அங்கே வந்து விடு!” என்றான் நிதார்.

“சரி” என்றான் குமார்.

நிதாரும் பால்ராஜும் இப்பொழுது மாமரத்து மடுப் பக்கம் நடந்தனர். அந்த இடத்தில் எப்பொழுதுமே நல்ல ஆழம் நிலைத்திருக்கும். அன்றியும் அங்கே மாமரமொன்று வளைந்து நின்றது. மாங்காய்கள் அனைத்தும் அங்கே குளிக்கும் சிறுவர்களைச் சேர்ந்ததுதான்; மாமரத்திற்குச் சற்று அப்பால் தாழம் புதர்கள் நிறைந்திருந்தன. அந்தப் பக்கம் பாம்புகள் நெளிவதாகப் பலரும் பேசுவார்கள். எனவே அந்தப் பக்கம் ஆள் நடமாட்டம் அதிகமிருக்காது. ஆனாலும் இளம் உள்ளங்களில் தானாகவே அச்சம் தலைதூக்குவதில்லை. பிறர்தான் அச்சமென்னும் வித்தை நெஞ்சிலே விதைத்து விடுகிறார்கள்.

நிதார் எதற்கும் அஞ்சாதவன். எதையும் துணிந்து செய்வதில் அவனுக்குப் பெருமகிழ்ச்சி. அவன் ஏழைச்சிறுவன் தான். செல்லம் கொடுத்து வளர்க்க அவனுக்கு யாரும் இல்லை. ‘வாப்பா’ மட்டும் இருக்கிறார். ‘தயாராகட்டை’ அடித்துக் கொண்டு பாடுகிறார்களல்லவா பக்கிரிசாக்கள்? அந்த வேலைதான் அவருக்கு! ஊர்ப்பக்கிரிசாவாக இருந்த நிதாரின் தந்தைக்கு அந்த வேலைகளைக் கவனிப்பதிலேயே பொழுது போகும். மகனைக் கவனிக்க அந்த மனிதரால் முடியாது.

நான்கைந்து வருடங்களுக்கு முன்புதான் நிதாருக்கு ராஜ் நண்பனாகக் கிடைத்தான். பால்ராஜ் கிறிஸ்துவச் சிறுவன். ஆனாலும் அன்போடு பழகினான். அன்புணர்ச்சி களங்கமற்ற உள்ளங்களின் இணைப்பில் எழுவதுதானே! பால்ராஜின் தந்தை பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

நிதார் பள்ளியிலே படிப்பதற்கு உதவி வந்தவர் குமாரின் தந்தை என்றுதான் சொல்ல வேண்டும். பணம் படைத்த வரான அவரது அருமை மகன் குமாரோடு நிதாருக்குப் பழக்கம் ஏற்பட்டது. அது முதல் குமாரின் வீட்டிற்கு நிதார் போய் வருவான். கூடவே பால்ராஜும் செல்வான். அவன் தந்தை அன்போடு பேசுவார். அவன் அம்மாவும் தங்கையுங்கூட, பிரியத்தோடு பேசுவார்கள்.

நிதார், ராஜ், குமார் மூவரின் பழக்கமும் நட்பாக அரும்பியது. குமாரிடம் இயற்கையாகவே சற்றுப் பிடிவாத குணம் இருந்தது. என்ன இருந்தாலும் அவன் பணக்கார வீட்டுக் குழந்தையல்லவா? பிளவு ஏதும் நிகழவொட்டாமல் நட்பைப் பேணினர் மூவரும்.

“குளிக்கலாமல்லவா?” என்றான் ராஜ்.

“ராஜ், அதோ அந்த மரத்தைப் பார்! அழகான மாங்காய் கள் உனக்கு வேண்டுமா?” – நிதார் கேட்டான்.

“ஒன்று பறியேன்; தின்னலாம்!” சொல்லும்போதே பால்ராஜின் நாவிலே நீர் சுரந்தது. மெல்லச் சிரித்துக் கொண்டே நிதார் மரத்தில் ஏறினான். பெரிய மாங்காய் ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு, ஆற்றில் சாய்ந்திருந்த மாமரக் கிளையில் வந்து நிதார் உட்கார்ந்தான். ராஜ் கழுத்தளவு நீரில் அருகே நின்றிருந்தான். இப்போது நிதாரின் உடல் அழகாக இருந்தது. எந்த வருஷத்திலோ கையில் போட்டிருந்த அம்மைத் தழும்புகூட இப்போது தெளிவாகத் தெரிந்தது. உருண்டு திரண்டிருந்தது அவன் உடம்பு. வட்டமான அந்த முகத்திலே அரும்பி நெளியும் மகிழ்ச்சி எத்தனை மாசற்றது!

“மாங்காயைப் பார்த்தாயா? நீயே சாப்பிடு இதை… என்று நிதார் கையை நீட்டினான் நீரில் நின்றிருந்த ராஜிடம். ஆற்றிலே நீரோட்டத்தோடு நீந்தி வரும் குமாரை அவன் பார்க்கவில்லை. ஆனந்தம் மேலிட நீரில் நெளிந்து வந்தான் குமார். நிதார் கையிலிருக்கும் மாங்காயைத் தான் வாங்கிவிட வேண்டும் என்ற வேகத்தோடு!

“இதை வாங்கிக் கொள்!” என்றான் நிதார். ராஜின் கை நீண்டது.

“அது எனக்கு வேண்டும்!” என்ற குமாரின் குரல் கேட்டு நிதார் திரும்பினான்.

“இல்லை, குமார்; இது பால் ராஜுக்குத்தான்!”

“எனக்குக் கொடுப்பாயா, மாட்டாயா?”

“உஹூம்! ராஜுக்காகத்தான் பறித்தேன். உனக்கு வேண்டுமானால் அப்புறம்..!”

மாங்காய் ராஜின் கைக்கு மாறியது. எப்போதும் போலவே அன்புப் புன்னகையை நிதார் விரித்தான். அந்த மென்னகை குமாரைக் கொன்றது! ‘சே! ஒரு மாங்காயை ஆசையோடு கேட்டும் தர மறுத்துவிட்டானே, நிதார்! எத்தனை ஆணவம்! என் விருப்பத்தைப் புறக்கணித்து விட்டானே! ராஜ் என்னைக் காட்டிலும் உயர்ந்தவனா’? பிஞ்சு நெஞ்சத்திற்கே உரிய இந்த எண்ணம் குமாரை ஆட்டியது. அவன் மகிழ்ச்சி மறைந்து விட்டது அந்த விநாடியிலேயே!

“குமார், இந்த மாங்காய் எனக்கு மட்டுமில்லை; நம் மூவருக்கும்தான். நீயே உடைத்துப் பங்கிட்டுத் தா!” என்றான் ராஜ்.

“பங்கு போடுவதற்கு என்னைத்தான் பார்த்தாயோ! நீங்களே தின்னுங்கள். பறித்தவனே தின்னட்டுமே!”- குமாரின் பேச்சிலே சீற்றம் கலந்திருந்தது. நிதாரின் முகம் கணத்தில் வாடியது.

கடைசிவரை அந்த மாங்காயைக் குமார் திரும்பிப் பார்க்கவில்லை!

அவன் நெஞ்சிலே நெருப்பாகப் புகைந்தது ஆத்திரம். நிதார் ஏதும் புரியாமல் விழித்தான். பேசாமல் மூழ்கி மூழ்கிக் குளித்தான் குமார். வழக்கம்போல இன்று அவர்கள் பிடித்து விளையாடவில்லை. குளித்துவிட்டு வீடு திரும்பும்போது மூவருள்ளத்திலும் வெறுமையே நிலவியது. நிதாரின் சிரித்த வதனம்; ராஜின் நகைமுகம் – இரண்டும் குமாரின் உள்ளத்தே உருவெடுத்தாடின. சுமையேறிய இதயத்தோடு வீட்டிற்குச் சென்றான் குமார்.

“குமார். . .!” போர்டிகோவில் நின்றிருந்த நிதார் குமாரைக் கூப்பிட்டான். பால்கனிப் பக்கம் குமாரைக் காணவில்லை.

“குமார்…குமார்!” கூப்பிட்டுக் கூப்பிட்டு நிதாருக்கு அலுத்துவிட்டது, “இந்த நேரத்தில் குமார் எங்கும் போக மாட்டானே” என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தது அவன் வாய்.

“யாரது?” என்று கேட்டுக்கொண்டே கதவருகே வந்தாள் குமாரின் அம்மா.

“நிதாரா? உள்ளே வாயேன்” ஆசையோடு குமாரின் அன்னை அவனை அழைத்தாள்.

“குமார் வீட்டில் இல்லையா?”

“இங்கேதான் இருப்பான். மாடியில் இருக்கிறானோ, என்னவோ! கூப்பிடச் சொல்லட்டுமா?”

“அழைத்துப் பார்த்துவிட்டேன். மாடியில் இல்லை போல் தெரிகிறது.”

“வெளியே போயிருப்பான்” என்று சொல்லிச் சென்றாள் தாய்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த குமாரின் தங்கை மீனா அவனுடைய அறைக்குச் சென்று பார்த்தாள். அங்கே-

குமார் அசையாமல் உட்கார்ந்திருந்தான். இத்தனை கூப்பாடும் அவன் காதில் விழவில்லையா?

“அம்மா அழைத்தாளே, காதில் படவில்லையோ!” என்றாள் மீனா அவனிடம்.

“உன் வேலையைப் போய்ப் பார். கன்னம் சரியாகத் தானே இருக்கிறது?”

“டம்பப் பேச்செல்லாம் உன்னுடனே இருக்கட்டும்! நிதார் உன்னைக் கூப்பிடுகிறான். கீழே இறங்கி வா…”

“நான் இல்லையென்று சொல்.”

“திருட்டு விழி விழித்துக் கொண்டு மாடியிலே உட்கார்ந்திருக்கிறான் என்று சொல்லட்டுமா?”

“சீ, என்ன திமிர் உனக்கு!”

“உனக்கு மட்டும் குறைவா?”

குமாரின் ஆத்திரம் பொங்கியது. இத்தனை நேரம் நிதாரும் அம்மாவும் கூப்பிட்டார்கள். அது குமாருக்குத் தெரியும். அவன் ஏன் பதில் பேசாமல் உட்கார்ந்து விட்டான்? கூப்பிட்ட குரலுக்குப் பதில் சொல்லாமல் இப்பொழுது கீழே இறங்கிப் போனால் அம்மா என்ன கேட்பாள், அந்தத் தடியன் நிதார்தான் என்ன நினைப்பான்? அவன் சீற்றமெல்லாம் மீனாவின் மேல்தான் பாய்ந்தது. ‘யார் எது வேண்டுமானாலும் நினைக்கட்டும், என எண்ணியவாறு கீழே வந்தான் குமார்.

“தூங்கினாயா குமார்?”

“ஆமாம்…”

“இந்தச் சனியன் ஏன் இப்பொழுது வந்து உயிரை வாங்குகிறான்” என்று குமாரின் உள்ளம் பொருமியது. வெறுப்போடு அவனை முன்புறத்து ஹாலுக்கு இட்டுச் சென்றான். நிதாரை ஒரு முறை நிமிர்ந்து பார்த்தான். அமைதியும் தண்மையும் அந்த வட்ட முகத்திலே ஒளிர்ந்தன. ஆனால் குமார். . .? அவன் முகத்திலே சிவப்பல்லவா ‘ஜிவ்’ வென்று ஏறியிருக்கிறது?

“என்ன விஷயம்?” குமார் கேட்டான்.

“ஒன்றுமில்லை, குமார், உன்னிடம்..”

“ஒன்றுமில்லாமல் நீ இங்கே வரமாட்டாயே”

“இல்லை குமார்…படிப்பதற்குப் புத்தகம் ஒன்று வாங்கிப் போகலாமென்று…”

“எப்போதும் இந்தத் தொல்லைதானா உனக்கு? காசு கொடுத்துப் புத்தகம் வாங்க வகையில்லாதவனெல்லாம் பள்ளிக்கூடத்திற்கு வந்துவிடுகிறார்கள். ஓசி வாங்கியே காலத்தைக் கழித்து விடுகிறார்கள்!” குமார் இவ்வாறு தனக்குள் முனகினான்.

“குமார் ஒன்றே ஒன்று மட்டும், சமூகப் பாடப்புத்தகத்தைக் கொடுத்தால் போதும். நாளைக்கே கொடுத்து விடுகிறேன்…”

“அதை நான் படித்துக் கொண்டிருக்கிறேன்.”

“அப்படியானால் விஞ்ஞானப் புத்தகத்தை…’

“சாயந்தரம் அதைத்தான் படிக்கப் போகிறேன்!”

“ஆங்கிலத்தையாவது தருகிறாயா?”

“வீணாகப் பேசாதே; நாளைக்கு நான் படிக்கப் போவது அதைத்தான்…”

நிதாரின் இதயம் சாம்பியது. கேட்கும் முன்னரே புத்தகம் தரும் குமாரா இப்படிப் பேசுகிறான்?

“நான் போய் வருகிறேன் குமார்! ராஜிடம் வாங்கிக் கொள்கிறேன். அந்தியில் பனந்தோப்புப் படுகைப் பக்கம் வருவாயா?”

“பார்க்கலாம்.”

நிதார் போய்விட்டான். குமாரின் உள்ளத்தே பெருமிதம் மெதுவாகத் தலை தூக்கியது. வஞ்சம் தீர்த்துவிட்டோம் என்ற மகிழ்ச்சி! அவன் உள்ளம் பேசியது;

“மாங்காய் கேட்டேன்; மறுத்துவிட்டான். ராஜ் வாங்கிக் கொண்டான்; என் ஆசையை அழித்தான். இப் பொழுது அந்த நிதாரின் ஆசையை நான் அழித்துவிட்டேன். மாங்காய் தந்திருந்தால் நானும் புத்தகம் கொடுத்திருப் பேனல்லவா?”

நிதார் போர்டிகோவிலிருந்து இறங்கினான். மீனா வந்தாள்.

“ஏன் அதற்குள் திரும்பிவிட்டாய், நிதார்?”

“சும்மாதான்.”

“விஷயத்தைச் சொல்லேன்.”

“எதுவுமில்லை மீனா?”

“ஒளிக்கிறாயே, அவனிடம் என்ன கேட்டாய்?”

“படிப்பதற்குப் புத்தகம்…”

“இல்லை என்று சொல்லிவிட்டானா?”

நிதார் பதில் பேசவில்லை.

“ஒரு நிமிஷம் இரு. நிதார்!”

“ஏன்?”

“நான் எடுத்து தருகிறேன். புத்தகத்தை!.”

“வேணாம் மீனா. இப்பொழுது நான் படிக்கப் போவதில்லை!” என்று சொல்லி வீட்டுக்குச் சென்றான் நிதார்.

மீனா எவ்வளவு நல்லவள்! அண்ணனும் தங்கையும் இரு துருவங்களா? குமாரின் சீற்றத்திற்கு என்ன காரணம் என்று நிதாருக்கு விளங்கவில்லை.

அந்திப்பொழுது. செங்கதிர் வெம்மை தணிந்திருந்தது. தென்றல் உலாவிக் கொண்டிருந்தது. பொங்கி வரும் அரசிலாற்றுப் புனல் பொன்னிறம் பெற்றுப் பொலிந்தது. நிதாரும் ராஜும் பனந்தோப்பு மணல் மேட்டிலே அமர்ந்திருந்தனர். ஆற்றுப் புனலின் அலையசைவை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் நிதார். இதயத்தை ஏதோ உறுத்திக் கொண்டிருந்தது. மூவரும் உட்கார்ந்து நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருப்பார்களே அந்த மணல் மேட்டில்! குமார் அருகில் இருந்தால் இப்படி நிலவுமா அமைதி? சுற்றுப் புறத்தை ஏறிட்டுப் பார்த்தான் நிதார். அக்கரையிலே அதோ தெரிகிறதே ஊர்! கிழக்குக் கோடியிலே அமைந்த பள்ளிவாசலின் வெள்ளை மனோராக்கள் எத்தனை பொலிவோடு விளங்குகின்றன! ஆற்றுக்குச் சமீபத்திலேயே நிற்கும் அந்தக் கோயில் கோபுரம் கலையின் விளக்கமாக அல்லவா இலங்குகிறது!

அக்கரை நெடுஞ்சாலையிலே வண்டிகள் வரிசை வரிசையாகப் போய்க்கொண்டிருந்தன. பூந்தோட்டத்தையும் கும்பகோணத்தையும் இணைக்கும் அழகான சாலை அது! தோப்பின் ஒரு கோடியில் ஏழெட்டுக் குடிசைகள். குறவர்களின் குடிசைகள்தாம். நரிக்குறவர்களைப்போல் நாடோடிகள் அல்ல அவர்கள். ஐந்தாறு ‘குறக் குளுவான்கள்’ விளையாடிக் கொண்டிருந்தனர், ஒரு நாய்க்குட்டியோடு. எட்டத்தில் பனஞ்சாரிகள் காற்றோடு இணைந்து ஒருவித சத்தத்தை எழுப்பிக் கொண்டிருந்தன.

ஆழ்ந்த மோனத்தைக் கலைத்தான் ராஜ். “என்ன யோசனை, நிதார்?”

“ஒன்றுமில்லை ராஜ். நமது ஊர் எத்தனை இயற்கை அழகோடு இருக்கிறது, பார்த்தாயா!”

“குமார் ஏன் இன்னும் வரவில்லை?”

“அவன் வரமாட்டான் என்றுதான் முன்னமேயே சொன்னேனே! குளிக்கும் போதிருந்தே அவன் மனம் ஒரு மாதிரியாகவல்லவா இருந்தது? வீட்டுக்குப் போனபோது எத்தனை கோபமாகப் பேசினான், தெரியுமா”

நிதாரின் குரலில் ஏக்கம் சூழ்ந்திருந்தது.

“இன்றைக்கு வராவிட்டாலும் நாளைக்காவது குமார் வருவான். நாம் சாப்பிடலாமா?” என்றவாறு கையிலிருந்த பொட்டலத்தைப் பிரித்தான் ராஜ்.

ஏழெட்டு ‘பிஸ்கட்’டும் இரண்டு ஆரஞ்சுப் பழமும் அந்தக் காகித மடிப்பிலே இருந்தது. திறந்து வைத்தான் ராஜ். அவன் என்ன சொல்லியும் நிதார் தின்ன மறுத்தான். கடைசியில் ராஜின் பிடிவாதத்தின்மேல் கொஞ்சம் எடுத்துக் கொண்டான்.

நாய்க்குட்டி குரைத்துக்கொண்டே ஓடி வந்தது. அதைத் தொடர்ந்து ‘குஞ்சுக் குறவர்’களும் ஓடிவந்தனர். பாழாய்ப் போன நாய்க்குட்டி அவர்கள் அருகிலா வந்து நிற்க வேண்டும்? அந்தச் சிறுவர்களும் அங்கே வந்து விட்டனர். அந்தப் பொடியர்களின் பார்வை பொட்டலத்தில் நின்றது. நிதாரின் பார்வை அவர்களின் மீது பதிந்தது. ராஜைப் பார்த்தான் நிதார்.

“கொடுத்து விடட்டுமா?” என்றான் ராஜ்.

“அப்படியே செய்!” என்றான் நிதார்.

எஞ்சியிருந்ததைச் சிறுவர்களிடம் தூக்கிக் கொடுத்தான் ராஜ்.

“குமார் இன்னும் ஏன் வரவில்லை?”

‘அதுதான் எனக்கும் தெரியவில்லை, நிதார்!”

“ஒருவேளை அந்த மாங்காய் விஷயமாக இருக்குமோ, ராஜ்?”

“இருந்தாலும் இருக்கும். அவன்தான் பிடிவாதக் காரனாயிற்றே!”

நேரம் ஓடிக்கொண்டிருந்தது. மஞ்சள் வெயில் மறைந்து விட்டது. குளிர்ந்த காற்று நெளிந்தது. பனந்தோப்பில் சினிமாக் கொட்டகை ‘டிரம்’ ஓசை ஒலித்துக் கொண்டி ருந்தது. மாதா கோயில் மணி ஒலித்தது. பள்ளி வாசல் ‘பாங்கோசை’ கேட்டது. கோயிலிலே பூஜை மணி கிணுகிணுத்தது.

நிதாரும் ராஜும் ஆற்றங்காரைப் புல்தரையிலே நடந்து கொண்டிருந்தனர்.

அடுத்த நாள். நிதாரும் ராஜும் குளிக்கக் கிளம்பிய போது குமார் வீட்டில் இல்லை. மாமரத்து மடுவின் பக்கம் அவர்கள் வந்தபோது அவர்களுக்கு வியப்பே ஏற்பட்டது. குமார்தான் குளித்துக் கொண்டிருந்தான்.

“முன்பே வந்து விட்டாயா, குமார்?” என்றான் நிதார். குமார் மௌனமாக இருந்தான்.

“மாங்காய் வேண்டுமா?” ராஜ் கேட்டான்.

“வேண்டாம்.”

“ஒன்றுமட்டும் பறித்துத் தருகிறேன்.” நிதார் சொன்னான்.

“ஆசையாக இருந்தால் பறித்துத் தின்ன வேண்டியது தானே! அதற்கு என்னை ஏன் கேட்கிறாய்?”

“கோபிக்காதே குமார்! ஒரு நிமிஷத்தில்…”

நிதார் மரத்தில் ஏறினான். ஏறும்போதே சறுக்கி விட்டது. மரத்தில் பாதித் தூரம் ஏறிவிட்டான் நிதார். தாழம்பூ மணத்தது. பக்கத்துப் புதர்களின் மடலவிழ்ந்த பூவின் நறுமணம் அது. ராஜும் குமாரும் மடுவில் நின்றிருந்தனர்.

குமார் பேசிய ஒன்றிரண்டு வார்த்தையும் ராஜுக்கு எத்தனையோ ஆறுதலை அளித்தன.

நிதார் இடது கையால் ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டான். வலக்கரம் பெரிய மாங்காயொன்றைத் திருகியது அப்போது.

மரத்திலே அவன் கையிலிருந்த கிளையிலே சலசலப்பு! இலைகள் அசைந்தன. ஏதோ ஊர்ந்து வருவது போன்ற ஒலி.

அடுத்த விநாடி.

‘சுருக்’கென்று ஏதோ அவன் கையைக் கொத்தியது. அவன் கை கிளையின் பிடிப்பினின்று நழுவியது.

“ஆ…அல்லா!” கூக்குரல் அதிர்ந்தது.

ஆற்று நீர் இரண்டாகப் பிளக்க, நிதார் விழுந்தான். நீரோட்டம் அவனை இழுத்துச் சென்றது. நிதார் ஏன் ஓலமிட வேண்டும்? மரத்தை நோக்கினான் குமார். அடுத்த கணம் அவனும் கூச்சலிட்டான்.

“ராஜ், அதோ பார்! அந்தக் கிளையில்…!”

“பாம்பு!. . . பா. . .ம். . .பு!!”- ராஜ் திணறினான். அந்தக் கிளையில் நச்சுப் பாம்பொன்று சுற்றிக் கொண்டிருந்தது. பாம்புதான் நிதாரைத் தீண்டிவிட்டதோ? அதனால்தான் அவன் ஓலமிட்டு ஆற்றில் விழுந்தானோ!’

ஒரு நொடியில் எல்லாம் நடந்துவிட்டது.

ராஜின் உள்ளம் படபடத்தது. நிதாரின் தலைமட்டுமே நீர்மட்டத்தில் தெரிந்தது. நீரைக் கிழித்துக்கொண்டு ராஜ் பாய்ந்தான் நிதாரை நோக்கி. ஒரு நிமிஷங்கூட ஆகவில்லை. நிதாரின் தலையைப் பற்றிக் கொண்டான் ராஜ். திணறியவாறு எப்படியோ கரைக்கு இழுத்து வந்துவிட்டான் நிதாரை. குமாரும் பரபரப்போடு நின்றிருந்தான். நிதாரின் இடது கையைப் பார்த்தனர் இருவரும்.

அங்கே, கத்தியால் கீறினாற் போல் – முள்ளால் குத்திக் கிழித்தாற்போல் – தோல் பெயர்ந்திருந்தது. ரத்தக் கசிவு மட்டும் லேசாக இருந்தது. ராஜ் சோர்ந்து போய்விட்டான்.

“குமார்!”

“ஏன்?”

“பாம்பு தீண்டிவிட்டது போலிருக்கிறது. விஷம் பரவுவதற்குள்…!”

“தூக்கிப் போய்விடுவோம், கிளம்பு!” குமார் பரபரப் போடு பேசினான். ராஜ் நிதாரைத் தூக்கிக் கொண்டான் ஈரத் துணியோடு. குமார் பின்தொடர்ந்தான். அவனைப் பீதி கலக்கியது. நிதாரைப் பாம்பு கடித்துவிட்டது. அவன் பிழைப்பானா? நிதார் பிழைக்காவிட்டால்?… ஒரு நண்பனை அவன் இழக்க…! குமாரால் நினைத்துப் பார்க்கவே முடிய வில்லை.

போர்டிகோவை அடுத்த வேப்பமரத்தடியில் சிமெண்டுப் பெஞ்சியில் நிதார் கிடத்தப்பட்டிருந்தான். குமாரின் தந்தை பதறினார். அவன் தாய் வருந்தினாள். மீனாவும் விம்மினாள்.

“குமார், சீக்கிரம் ஓடு! டாக்டரைக் கூட்டி வா…!” அவர் துடியாய்த் துடித்தார். நஞ்சு உடல் முழுதும் பரவி விட்டால் பிழைப்பது அரிதுதானே!

“ஸார், குமார் டாக்டரைப் பார்க்கட்டும். நான் அங்கே போகிறேன்; ‘ஹகீம்’ சாஹிபைக் கூப்பிட்டு வருகிறேன். அவர் வந்தால் நல்லபடியாக ஏதேனும் நடக்கும்…” – ராஜ் ஓடினான்.

‘ஹகீம்’ சாஹிப் அந்த ஊரிலே பிரசித்தி பெற்றவர். நல்ல நாட்டு வைத்திய முறைகளைத் தெரிந்தவர். எங்கோ மலையாளத்து மூலையிலே பிறந்தவர். நாடோடியாக நாடுகள் பலவற்றையும் சுற்றிப் பார்த்தவர். என்ன காரணத்தினாலோ வயதான காலத்தில் இந்த ஊரிலேயே தங்கி விட்டார். ஊரில் எல்லோரும் அவரை அறிவார்கள். யார் எந்த நேரத்தில் அழைத்தாலும் முகம் கோணாமல் வந்து சிகிச்சை செய்வார். எத்தனையோ பயங்கரமான நிலையிலிருந்த ‘கேஸ்’ களையும் தம் மருத்துவத்தால் சரி செய்திருக்கிறார்! ஆண்டவனிடம் அளவற்ற பக்தியுள்ளவர்.

குமார் திரும்பி வந்தான்.

“டாக்டர் எங்கே?”- அவன் தந்தை கேட்டார்.

“அவர் வரவில்லை. வேறெங்கேயோ போகிறார்!”

“இந்தக் காலத்து டாக்டர்களே இப்படித்தான்!” அவர் சபித்துக் கொண்டிருந்தார்.

நிமிடங்கள் ஓடின. “கடவுளே, நிதாரைக் காப்பாற்று!” குமாரின் இதயம் பிரார்த்தித்தது.

“அப்பா, அதோ ராஜ்! ‘பாய்! கூடவே வருகிறார்!” – குமார் மகிழ்ச்சியோடு கூறினான்.

“பிஸ்மில்லாஹ்!’ ஹகீம் சாஹிப் வந்தார். ராஜ் துடிக்கும் இதயத்தோடு நின்றான். நிதாரை கவனித்தார் வைத்தியர். பெட்டியிருந்து ஏதோ மருந்தை எடுத்தார். இடது கையில் கடிவாய்க்கருகே மருந்தை வைத்துத் தேய்த்தார். அவர் வாய் முணுமுணுத்துக்கொண்டிருந்தது. அமைதி சூழ்ந்திருந்தது.

“எப்படி பாய், இருக்கிறது?” என்றார் குமாரின் தந்தை.

“பொறுங்கள். அல்லா(ஹ்)வின் நாட்டப்படி எல்லாம் நடக்கும். அவர் காப்பாற்றுவார்.”

ஹகீமின் பதில் குமாருக்கும், ராஜுக்கும் ஆறுதலாக இருந்தது. குமாரின் கவனம், ராஜின் பார்வை எல்லாம் நிதாரின் முகத்தில்தான் பதிந்திருந்தன. பாவம்! நிதாரின் ‘வாப்பா’ கூட ஊரில் இல்லை.

நிதாரின் மூக்கருகே கையை வைத்துப் பார்த்தார் சாஹிப். அவர் முகத்திலும் தெளிவு பிறந்தது. நிதாரின் உடலிலே சிறு அசைவு ஏற்பட்டதை ராஜும் குமாரும் கண்டனர்.

நிதாரின் கண்ணிமைகள் மெதுவாக விலகின. அவன் விழித்தான்!

சுற்றுமுற்றும் அவன் பார்வை விரிந்தது. அப்படியானால் அவன் பிழைத்து விட்டானா? ஹகீமின் சிகிச்சை பலனளித்து விட்டதா? ராஜின் இதயம் மகிழ அவன் எழுந்து விடுவானா? குமாரின் மனம் குதூகலிக்க நிதார் குணமடைந்து விடுவானா?

“இனிமேல் பயப்பட வேண்டியதில்லை. நஞ்சு முறிந்து விட்டது. ஆண்டவனின் அருள்தான் எல்லாம்…!” பெருமிதத் தோடு ஹகீம் பேசினார். பால்ராஜ், குமார், நிதார் மூவர் விழிகளும் கலந்தன. அந்தக் கண்கள் என்ன பேசிக் கொள்கின்றன? பச்சை மாங்காயால் ஏற்பட்ட சிறு பிளவு நீர்ப்பிளவாகி விட்டது என்பதையா? அல்லது, ‘நாங்கள் ஒரு கிளைப்பறவைகள், இனிமேல் என்றென்றைக்கும் பிரியவே மாட்டோம்’ என்பதையா?

– ஓரு கிளைப் பறவைகள், சிறுவர் நூல், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2009, பூம்புகார் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *