ஒரு இளவரசியின் கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: February 1, 2014
பார்வையிட்டோர்: 20,650 
 
 

நகரத்துஅங்காடியில் சில வீட்டுச்சாமான்கள் வாங்கவேண்டியிருந்தது. ஒருநாள் இதற்காக நகரத்தைநோக்கி நடைபயணமாகச் சென்றுகொண்டிருந்தான் ராமன். அப்படிச் சென்றுகொண்டிருந்தவனை ஆள்அரவமற்ற இடத்தில் பூதம்ஒன்று வழிமறித்தது. அதுஅவனிடம் “என்னைத்திருமணம் செய்துகொள்”- என்றது. ராமன் ஒருகணம் துணுக்குற்றுப்போனான். பின் சுதாரித்துக்கொண்டு பூதத்திடம் “நான் ஏன் உன்னைத்திருமணம் செய்துகொள்ள வேண்டும்”-என்று கேட்டான். அதற்கு அந்தபூதம் “நான் ஒரு இளவரசி! முனிவர்ஒருவரின் சாபத்தால் இப்படி பூதமாகிப்போனேன்”-என்றது. ஏதோ காரணகாரியங்களை முன்னிட்டே பூதம் தன்னை வழிமறித்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட ராமன் “முனிவர் ஏன் உன்னை சபிக்கவேண்டும்”- என்று கேட்டான்.

“நான் எனதுதோழியரோடுத் தடாகம்ஒன்றில் நீராடச்சென்றேன்! அப்போது தடாகம்அருகே முனிவர்ஓருவர் தவமியற்றிக் கொண்டிருப்பதைக் கண்டேன்! தடாகநீரினைக் கைகளால்அளைந்து முனிவர்மீது தெளித்துவிளையாடினேன்! தவம்கலைந்துபோன முனிவர் கடுஞ்சினம் கொண்டார்! என்னை பூதமாகக்கடவது என்று சபித்துவிட்டார்! அவரிடம் சாபவிமோசனம் வேண்டினேன்! என்னைத்திருமணம் செய்துகொள்ளவிருக்கும் ஆடவன்மூலமாக எனக்குச் சாபவிமோசனம்கிட்டும் என்றார்!”- என்றது பூதம்@

“உன்னைத்திருமணம் செய்துகொள்ளவிருக்கும் ஆடவன்நான்தான் என்று எப்படி முடிவுசெய்தாய்?”-ராமன் கேட்டான்.

“முனிவரின்சாபப்படி என்னைத்திருமணம் செய்துகொள்ளும் ஆடவன் நற்பண்புகள் நிறையப்பெற்றவனாக இருப்பான்!”-என்றது பூதம்.

“ஒருமனிதனின் தோற்றத்தைவைத்து அவனை நல்லவன்கெட்டவன் என்று சொல்லிவிட முடியுமா என்ன?”- குரலில்சற்று ஏளனம் பொங்கக் கேட்டான் அவன்.

“அதோ கூப்பிடுதூரத்தில் தெரிகிறதே சத்திரம்! தாங்கள் வரும்வழியில் அதில் சற்றுநேரம் இளைப்பாறினீர்கள் அல்லவா? அப்போது நடந்தநிகழ்வுகள் தங்களைஅளவிட எனக்குப்பெரிதும் உதவின!”-என்றது பூதம். ராமன் அமைதியாக இருக்கவே பூதமே தொடர்ந்துபேசியது.

“கொண்டுவந்த கட்டுச்சோற்றைத் தாங்கள் உண்ணவில்லை! பசியில் மயங்கிக்கிடந்த முதியவர்ஒருவருக்கு அதைத் தந்துவிட்டீர்கள்! சத்திரத்தில் இருந்தநீரைக்குடித்து தாங்கள் பசிஆறீனீர்கள்! இதில் தங்களின் பரோபகாரம் தெரிந்தது! பாரம்ஏற்றியவண்டி சத்திரத்தின்முன்னால் மேட்டில்ஏற சிரமப்பட்டது! வண்டிஏறத் தாங்கள் வண்டிக்காரருக்கு உதவிசெய்தீர்கள்! அதோடு நிற்கவில்லை! இருநடையாகக் கொண்டுவர வேண்டியபாரத்தை ஒருநடையில் கொண்டுவந்ததற்காக வண்டிக்காரரைக் கடிந்தும்கொண்டீர்கள்! இதில் தங்களின் உதவிசெய்யும்குணம் அதேவேளையில் தவறைச்சுட்டிக்காட்டும் பண்பும் தெரிந்தது! சத்திரத்தில் திடீரென்று கொள்ளளையர்கள் புகுந்து அங்கிருந்த அனைவரின் உடமைகளையும் கொள்ளையிட ஆரம்பித்தார்கள்!

சத்திரத்துவாசலில் மாங்காய்கூறு விற்றுக்கொண்டிருந்த மூதாட்டி வைத்திருந்த உப்புக்கலந்த மிளகாய்பொடியை கொள்ளையர்கள் கண்களில்தூவி அவர்களை நிலைகுலையச் செய்தீர்கள்! கொள்ளையர்கள் பிடிபட்டார்கள்! இதில் தங்களின் சமயோசிதம் மற்றும் துணிவு தெரிந்தது! இப்படித் தாங்கள் அனைத்துவிதத்திலும் நற்பண்புகள் நிறையப்பெற்றவர் என்பதை நான் தெளிவுபடப் புரிந்துகொண்டேன்!”-என்றது இளவரசிபூதம்.

ராமன் அமைதியாக இருந்தான். அவன்மனத்தில் பல்வேறுயோசனைகள் ஓடியது. அவன்முடிவெடுக்க சில மணித்துளிகள் அவகாசம் எடுத்துக்கொண்டான். பின் பூதத்திடம் பேசஆரம்பித்தான்.

“என்னால் உனக்கு சாபவிமோசனம் கிடைக்கும் என்றால் மிக்கமகிழ்ச்சி! ஆனால் முனிவரின்சாபத்தால் நீ யுகங்கள் கடந்துவந்திருக்கிறாய்! நான் ஒரு சாதாரணக்குடியானவன்! என்னை நீ திருமணம் செய்துகொண்டால் ஒரு குடியானவன் வீட்டுப்பெண்ணாகவே எளிமையானவாழ்வை வாழவேண்டியிருக்கும்! இளவரசியாக அல்ல!”- என்றான் ராமன்.

“ஆனால் என்னிடம் ஒரு பெரும்புதையல் இருக்கிறது! அதோ சத்திரத்தின் எதிர்வரிசையில் சற்றுஉள்ளடங்கி ஒர் ஒற்றைப்பனைமரம் தெரிகிறதே! அதுவே எனதுவசிப்பிடம்! அதனடியில் நான் அந்தப்புதையலை பாதுகாத்துவருகிறேன்! என்னை நீங்கள்திருமணம் செய்துகொண்டால் நான் அதைத்தங்களுக்குச் சீதனமாகத்தருவேன்!”- என்றது பூதம்.

பூதத்தின் இந்தவார்த்தைகளைக் கேட்டதும் வாய்விட்டுசிரித்தான் ராமன்@ “நீ உனது முந்தையபிறவியில் அளவற்ற செல்வளத்துடன் பிறந்தாய்! அதுவே உனக்கு நல்லதுகெட்டது அறியமுடியாத ஆணவத்தைத் தந்தது! முனிவரின்சாபத்தை ஏற்கும் துர்பாக்கியநிலையையும் உண்டுசெய்தது! அதனால்தான் உனக்கு எந்தவிதத்திலும் பயன்படாதபுதையலை நீ பூதமாகக் காத்துக்கிடந்தாய்! புவியல்கிடைக்கும் யாவும் புவியாளும் அரசுகளைச் சேரும்! நான் அந்தப்புதையலை அரசின்வசம் ஒப்படைத்துவிடுவேன்! நீ இந்த நிபந்தனையை ஏற்றுக்கொள்வதாக இருந்தால் நான் உன்னைத்திருமணம் செய்துகொள்வேன்!”- என்றான் ராமன்.

“பெரும்புதையல் என்றவுடன் சற்றும் மனம்பிறழாமல் மீண்டும்ஒருமுறை தங்களின்நற்குணத்தை நிரூபித்துவிட்டீர்கள்! தங்களின் நிபந்தனையை நான் ஏற்றுக்கொள்கிறேன்!”- என்றபடி ராமனின் காலில்விழுந்து வணங்கியதுபூதம். அடுத்தகணம் அதுஓர் இளநங்கையாக உருவெடுத்தது. ராமன் அந்தப்பெண்ணை தனது ஊருக்குக்கூட்டிச் சென்றான். அவளை தனது துணைவியாக்கி இனிதே இல்லறம் கண்டான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *