எதைத் தின்பது?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 10,457 
 
 

ஒரு வேடன் ஒரு நாள் காட்டில் அலைந்து கொண்டு இருந்தான். காலை முதல் ஒரு விலங்கு கூட அவன் கண்ணில் படாததால் அதிகக் கவலையும், பசியுமாக வருந்தினான். அப்போது எதிர்பாராமல் அவன் எதிரில் ஒரு பெரிய முள்ளம் பன்றி வந்தது. அது பார்ப்பதற்கு ஒரு பெரிய கருப்பான மலையைப் போல இருந்தது. உடனே வேடன் மனம், மகிழ்ச்சியில் துள்ளியது. தனது வில்லில் அம்பை ஏற்றி முள்ளம் பன்றி மீது ஏவினான். அடுத்த நிமிடம் அம்பு முள்ளம் பன்றியின் உடலை துளைத்தது. வலியால் பன்றி பெரிதாக அலறியது என்றாலும் தனக்கு துன்பம் செய்த வேடனை நோக்கி பாய்ந்தது. அவன் வயிற்றைக் கிழித்து அவனைக் கொன்றது.

அடுத்த நிமிடம் தானும் அவன் அருகில் விழுந்து இறந்தது. அதே நேரத்தில், அந்த வழியாக ஒரு குள்ள நரி வந்தது. இறந்து கிடந்த வேடனும் பன்றியும் அதன் கண்ணில் பட்டவுடன் அதிவேகமாக அங்கு ஓடி வந்தது. உடன் அதன் நாவில் எச்சில் ஊறியது. “கொழுத்த வேடனின் கறியும், பன்றியின் கறியும் கிடைத்துள்ளது,” என நினைத்து மகிழ்ந்தது.

“குறைந்தது மூன்று நாட்களுக்காவது உட்கார்ந்து சாப்பிடக் கூடிய அளவிற்கு ஏராளமான உணவு நமக்கு கிடைத்துள்ளதே’ என மகிழ்ச்சியுடன் கூத்தாடியது.
“இப்போது கொஞ்சம் சாப்பிடலாம்’ என நினைத்தது. திடீரென வேடனுக்கும், பன்றிக்கும் அருகில் கிடந்த வேடனின் வில்லின் நாண் அதன் கண்ணில் பட்டது. அந்தக் காலத்தில் வில்லின் நாண் என்பதனை மிருகங்களின் நரம்பினால் தான் கட்டுவர். அப்படிப்பட்ட வில்லின் நாணை நரி கண்டதல்லவா? உடனே, “சே! இந்த நாணை முதலின் தின்போம். இல்லாவிட்டால் வேறு ஏதாவது மிருகம் வந்து இதை தின்றுவிடும்’ என்று நினைத்தது.
உடன் வேடனையும், பன்றியையும் விட்டு, வில்லின் நாணைத் தனது வாயில் கவ்வி இழுத்தது.

அடக்கடவுளே! நாணை இழுத்த வேகத்தில் வில்லின் கூரிய மேல் நுனி நரியின் தொண்டையில் பாய்ந்தது. தொண்டையைக் கிழித்து கழுத்து வழியே வெளியே வந்தது.
நரியின் பேராசை பெரு நஷ்டத்தில் முடிந்தது. முதலிலேயே வேடனையும், பன்றியையும் இழுத்துப் போய் ஒரு பாதுகாப்பான இடத்தில் வைத்து தின்று இருந்தால் நரிக்கு இந்தக் கதி வந்து இருக்குமா? அதிகமாக ஆசைப்பட்டதால் நரி பட்ட துன்பத்தை பார்த்தீர்களா?
எதிலும் அளவோடு ஆசை வைத்து வாழும் வாழ்வே துன்பமற்ற நல்ல வாழ்விற்கு வழி. இதனால் தான், “”போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து,” என்று நம் பெரியோர்கள் கூறினர். போதும் என்ற மனம் உடையவர்கள் வீட்டில் தங்கமும் செல்வமும் பெருகும் என்பது இதன் பொருளாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *