(1988ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மண்ணின் மாண்பு | உலகநாதன் சொன்ன பூமியின் கதை | கங்காதரன் கூறிய நீரின் கதை |
அமலாபுரத்துச் சிறுவர்கள்-அழகப்பன் உட் பட அனைவரும் குறித்த நேரத்திற்கு முன்பே மண்டபத்தில் வந்து கூடி விட்டனர்.
எல்லோருடைய கண்களும் அந்த தேவகுமாரர்களின் வருகையையே ஆவலுடன் எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருந்தன.
ஆனால் –
எங்கிருந்தோ, எப்படியோ, குறித்த நேரத்தில் அந்த ஐந்து தேவகுமாரர்களும் மண்டபத்தில் அவர்களின் கண் எதிரில் வந்து நின்றனர்.
அனைவரும் மகிழ்ச்சிப் பெருக்கில் ஆரவாரம் செய்து வரவேற்றனர். தேவகுமாரர்கள் ஒவ்வொரு வரும், அவர்களுக்குத் தனித்தனியே வணக்கம் தெரிவித்தனர்.
கூடி இருந்த அனைவரும், தேவகுமாரர் களைச் சுற்றி வட்டமாக உட்கார்ந்து கொண்டதும் உலகநாதன் கூறினான்:
“என் அருமை நண்பர்களே! உலகத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும்-மனிதர்கள் உட்பட- உயிர் வாழ்வதற்கும் தங்குவதற்கும் உறைவிடமாக; தளமாக உள்ளது இந்த மண்தான்; அதாவது இந்த பூமிதான். அனைத்திற்கும இதுவே ஆதாரம். அனைத்து உயிர்களிடத்தும் மட்டமற்ற அன்பும், இரக்கமும் கொண்டவள் பூமி அன்னை.
உண்ணுவதற்கு உணவாக நெல்லும், மணியும், கனியும், கிழங்குகளுமாகத் தருபவள் அவளே –
மனிதனின் மானத்தைக் காப்பதற்கு உடைகளாகப் பருத்தியும், பட்டும் தருபவள் அவளே –
அழகிய மாதர்கள் அணிகலன்கள் பூட்டி மகிழத் தங்கமும், வைரமுமாகத் தன்னிலிருந்து தருபவளும் அவளே-
இத்தகைய கருணையே வடிவான பூமி அதாவது உலகம் பிறந்த கதையையும்; மற்றும் அதன் பல்வேறு சிறப்புக்களையும் நான் இப்போது உங்களுக்குக் கூறப்போகிறேன்.
அண்டம் (UNIVERSE) என்றால் என்ன? என்று ஆங்கிலக் கல்விபடிக்கும் அழகப்பனுக்குப் புரியும் என்று நினைக்கிறேன். அண்டம் என்பது இந்தப் பிரபஞ்சத்தைக் குறிப்பதாகும்.
இந்த அண்டம் தோன்றி கோடிக்கணக் கான ஆண்டுகள் இருக்கும் என்று வானியல் ஆராய்ச்சியாளர்களும், புவி இயல் ஆராய்ச்சி யாளர்களும் கூறுகின்றனர்.
அண்டவெளியில் காணும் கிரகங்கள், நட்சத் திரங்கள் இவையாவும் அண்டத்தினுள் அடக்கம் விஞ்ஞான ஆராய்ச்சியாளர் கருத்துப்படி சூரியன் (SUN); சந்திரன் (MOON); பூமி (EARTH); வியாழன் (JUPITER); வெள்ளி (VENUS); சனி (SATURN): பூளூட்டோ (PLUTO) முதலிய கிரகங்களும், எண்ணற்ற நட் சத்திரங்களும், அண்ட வெளியும் சேர்ந்தே அண்டமாகக் கருதப்படுகிறது. (அவை):
உலகம் என்பது -நாம் வாழும் பூமியை மட்டுமே குறிப்பதாகும்.
விஞ்ஞானக் கருத்துப்படி உலகம் ஒன்றாயினும்; புராணக் கருத்துப்படி உலகங்கள் பதினான்கு உள்ளன.
1) பூலோகம்; 2) புவலோகம்; 3) சுவலோகம் 4) சனலோகம் 5) தபோ லோகம் 6) மகலோகம் 7) சத்திய லோகம் ஆகிய ஏழும் மேல் உலகங் களாகவும்; 8) அதலம் 9) விதலம், 10) சுதலம் 11) தராதலம் 12) இரசாதலம் 13) மகாதலம் 14) பாதாலம் ஆகிய ஏழும் கீழ் உலகங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
புண்ணியம் செய்பவர்கள், ‘மோக்ஷம்’ அல்லது வைகுண்டம் என்று மதிக்கப்படும் மேலுலகிற்குச் செல்வதாகவும் –
பாவம் செய்பவர்கள் “நரகம்” என்னும் கொடிய கீழ் உலகிற்குச் செல்வதாகவும் புராணங்கள் கூறுகின்றன.
இவற்றில் பூலோகம் என்பது நீங்கள் வாழும் பூமியைக் குறிப்பதாகும். பூமி – முதல் ஏழு மேலுலக வரிசையில் இருக்கிறது.
எனவே, ஒரு மனிதன் இந்தப் பூமியில் பிறந்திருப்பதே அவன் முற்பிறவியில் செய்த புண்ணியத்தினால் தான். அப்படி இந்தப் புண்ணிய பூமி யில் பிறந்தும்; பாவம் செய்கிறவன் தான் மறு பிறவியில் நரகத்தில் கிடந்து உழல்கிறான் என்று புராணம் கூறுகிறது. ஆனால் –
பாவம், புண்ணியம், சுவர்க்கம், நரகம் என்பனவெல்லாம், மனிதன் மண்ணில் நல்ல வண்ணம்; நீதி நேர்மையோடு வாழ வழி வகுக்கும் உயர் நோக்கோடு தான் புராணத்தில் இடம் பெற்றிருக்கிறது. விஞ்ஞானம் இந்தப் புராண உலகங்களை ஏற்றுக் கொள்ளவில்லை.
நிதர்சனமாகவும்-ஆராய்ச்சி முடிவுகளின் மூலமாக நிச்சயமானவற்றையுமே விஞ்ஞானம் ஒப்புக் கொள்கிறது,
நாம் உறக்கம் தெளிந்து படுக்கையை விட்டு எழுந்திருந்தாலும், எழுந்திருக்காவிட்டாலும்; அதிகாலையில் கதிரவன் தன் பொற் கிரணங்களை வீசிய வண்ணம் உதிக்கத் தவறுவதில்லை. கடமையே உருவானவன் கதிரவன். இந்த சூரிய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கிரகமே நீங்கள் வாழும் இந்த பூமி.
இந்த பூமி சூரியனிலிருந்து சுமார் 92, 870,000 மைங்கள் தூரத்திலிருக்கிறது. பூமியானது ஐந்தாவது பெரிய கோளாகும்.
பூமியின் கன அளவு:
(259, 913,575, 000 சதுர மைல்கள்)
பூமியின் குறுக்களவு (துருவ வழி)
7900 சதுர மைல்கள். பூமத்திய ரேகை வழி 7926.7 மைல்கள்.
பூமியின் சுற்றளவு (துருவ வழி) 24861 : ச.மைல்கள்.
பூமியின் சுற்றளவு:
(பூமத்திய ரேகை வழி) 24902. 5 சதுர மைல்கள்.
பூமியின் பரப்பளவு : 196, 195, 072 சதுர மைல்கள்.
இந்த பூமியின் உயிர் நாடி சூரியனே. சூரியனை மையமாகக் கொண்டுதான் பூமியும், பிற கிரகங்களும் சுற்றுகின்றன; வாழ்கின்றன. சூரியன் தானே ஒளிரக் கூடிய ஒரு கோளம். எல்லா சக்திகளுக்கும் சூரியனே மூல காரணம். சூரியன் இல்லை என்றால் ஒளியில்லை, நீரில்லை, உயிரில்லை, விலங்குகள் இல்லை, தாவரங்கள் இல்லை-ஏன்-வாழ்வே இல்லை எனலாம்.
சூரியனுக்கும் பூமிக்குள்ள தூரம் சுமார் 92, 870, 000 மைல்கள். சூரியனின் குறுக்களவு 864 100 மைல்கள். சூரியனுடைய மேற்பரப்பு, பூமியினுடைய மேற்பரப்பைப் போல், 12000 மடங்கு அதிகமானது. கன அளவு, பூமியைப் போல 1, 300, 000 மடங்கும்; எடை பூமியைப் போல, 332 000 மடங்கும்; சூரியனின் அடர்த்தி, 1.412 மடங்கு மாகும்.
மற்ற கிரகங்கள் சூரியனைச் சுற்றுகின்றன; சூரியனோ, தன்னைத் தானே சுற்றிக் கொண்டு வருகிறது. இவ்விதம் சூரியன் ஒருமுறை தன்னைச் சுற்றிக் கொள்வதற்கு சுமார் 4 வாரங்களாகின்றன.
சூரியனுடைய கவர்ச்சியானது பூமியினுடைய கவர்ச்சியை விட சுமார் 28, மடங்கு அதிகம்.
சூரியனின் மேற்பரப்பு வெப்ப நிலை.12.000 டிகிரியாகவும், மத்தியில் 40,000 000 டிகிரியாகவும் உள்ளதால், இந்த அதிகமான வெப்ப நிலையில் எல்லா உலோகமும் உருகி விடும்.
எனவே, சூரியன் திடப் பொருளாகவோ, திரவப் பொருளாகவோ இருக்க முடியாதாகை யால், ஆவியாகவே இருத்தல் வேண்டும்.
பல கோடி ஆண்டுகளுக்குமுன் பிரபஞ்சத்தில் இப்போது நாம் பார்க்கிற சூரியன், சந்திரன் நட்சத்திரங்கள், இந்த பூமி- ஆகிய ஏதுமே இல்லை.
அண்டம் முழுதும் பரந்த வானக் கடலில், ஆவியும், தூசிகளுமாகவே சுழன்று சுழன்று வீசிக் கொண்டிருந்தன. வானமண்டலம் தாங்கமுடியாத குளிர்ச்சியுடையதாக இருந்தது. அதனால் அந்தக் சூளிர்ச்சியில் ஆவியும், தூசியும் திரவ நிலையை அடைந்து நீரைப் போன்ற உருவைப் பெற்றது. இது சூரியனின் முதல் உருவம். சூரியன் ஒரு நெருப்புக் கோளமாதலால் அதன் மூலப்பொருளாகிய ஆவியும், நீரும்கூட வெப்பமாயிருக்கும். வாயு உருவில் சூரியன் உருப்பெற்று விண்வெளியில், வேகமாகச் சுழன்று வந்தது. அப்போது விண்வெளியில் மிதந்து கொண்டிருந்த மூலப் பொருட்கள், சுழன்று கொண்டிருந்த சூரியன்மீது வளையங்களாகவும், உருண்டையாகவும், பலவித தோற்றங்களிலும் படிந்தன. நாளடைவில், சூரியனின் சுழற்சி காரணமாக, சூரியனின் மேல்படிந்த பொருட்கள் ஒவ்வொரு வடிவத்தில், ஒவ்வொன்றாய் தெரித்து விழுந்தன.
இப்படிச் சூரியனிலிருந்து பிறந்த கிரகங்கள் பூமி உட்பட, (செவ்வாய், புதன், வியாழன் வெள்ளி, சனி, யுரானஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகிய) ஒன்பது கிரகங்களாகும்.
பூமியின் வயது சுமார் 200 கோடி ஆண்டுகள் இருக்குமென விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
சூரியனிலிருந்து பிரிந்து, அக்கினிப் பிழம்பாக கொதிக்கும் ஆவி உருவில் இருந்த பூமியானது விண்வெளியில் உள்ள குளிர்ச்சியால், திரவ நிலையை அடைந்து; அந்த திரவநிலையும், தொடர்ந்த குளிர்ச்சியின் காரணமாகவும்கெட்டிப் படத் துவங்கியது.
சூரியனிலிருந்து தீப்பிழம்பாக வெளியே விழுந்த பூமி, நீர் உருவுக்குமாறி, குளிர்ச்சியின் காரணமாக கெட்டியாகிவிட்டாலும், பூமியின் உட்புறம் உள்ள அதன் பழைய நெருப்புத் தன்மை அப்படியேதான் இருக்கிறது.
சூரியனின் மேற்புறத்தின் வெப்பநிலை எட்டாயிரம் டிகிரி என்றால், பூமியினுள்ளும், சில இடங்களில் இந்த எட்டாயிரம் டிகிரி வெப்ப நிலை உள்ளது. அதனால்தான் எரிமலைகள் வெடிக்கும் போது பூமிக்குள்ளிருந்து, நெருப்பும், உலோகங் களும், வெடித்துச் சிதறுகின்றன. பூமியை சுமார் 5 மைல் ஆழத்திற்குத் தோண்டினாலே உள்ளிருந்து தீப்பிழம்புகள் வெளிவந்து விடும். சூரியனிடம் என்ன பொருள்கள் உள்ளனவோ; அவையனைத்தும் சூரியக் குழந்தையான பூமியினடியிலும் உள்ளன.
சூரியனிலிருந்து பிறந்த குழந்தைகளான கிரகங்கள் ஒன்பது என்றாலும், பூமி ஒன்றைத் தவிர வேறு ஒரு கிரகத்திலும் புல் பூண்டு கூட முளைக்க முடியாது. ஆனால் இந்த அதிர்ஷ்டக் குழந்தையான பூமியில் மட்டுமே உயிரினங்கள் பிறந்து வாழ முடிகிறது.
இதற்குக் காரணம் மற்றகிரகங்களுக்கு கிடைக் காத வசதி பூமிக்குக் கிடைத்திருக்கிறது. ஆம்! உயிரினங்கள் தோன்றி, வாழ்ந்து வளம் பெறு ஏற்ற அமைப்புக்கள் அனைத்தும் பூமியில் மட்டும் தான் இருக்கிறது.
உலகிலுள்ள அனைத்து உயிர்களும் இயங்கு வதற்கு சூரியன் இன்றியமையாதவனாயிருக்கிறான். அவனது ஒளிக்கற்றையினால்தான் புல் பூண்டு முதல் அனைத்து ஜீவராசிகளும் உயிர் வாழ்கின்றன. சூரியது வெப்பத்தையும், ஒளியை யும் போலவே -காற்றும், நீரும் இன்றியமையாத ஒன்று.
– சூரியனிலிருந்து அதிக வெப்பம் பூமியைத் தாக்கினால் உயிரினங்கள் பொசுங்கி அழிந்து விடும்.
– வெப்பம் குறைந்தாலும்,தாங்க முடியாத குளிரினால் உயிரினங்கள் விறைத்துப் போய் விடும்.
இந்தத் தீமைகளை, பூமிக்கு மேலே உள்ள வாயு மண்டலம் தடுத்து சமனப்படுத்தி தேவையான சூரிய வெப்பந்தை மட்டும் பூமிக்கு அனுப்புகிறது.
இப்படி ஒரு வடிகட்டியைப் போல் பூமிமயப் பாதுகாத்து வரும் வாயு மண்டலம், விண்ணி லிருந்து பூமியை நோக்கி வரும் ஆபத்தான எரிகற் களையும்கூட பூமியின் மீது விழாதபடி, குடையாகத் தாங்கி-வாயு மண்டலத்திலேயே பொசுக்கிச் சாம்பலாக்கி விடுகிறது.
அதே சமயம்-சூரிய வெப்பத்தினால் ஆவியாக மேலே எழும்பும் நீராவியை, தன்னைக் கடந்து செல்ல முடியாதபடித் தடுத்து நீராவியைக் குளிரச் செய்து திரும்பவும் மழையாகப் பூமிக்கு அனுப்பி வைக்கும் பணியையும் இந்த வாயு மண்டலங்களே செய்கின்றன.
இப்படிப் பூமிக்கு உற்ற துணைவனாகச் செயல்படும் வாயு மண்டலம் மற்ற கிரகங்களுக்கு இல்லாமையினால்தான் மற்ற கிரகங்கள் மொட்யைாக உயிரினங்கள் அற்றுக் கிடக்கின்றன
சூரிய ஒளியில், பச்சை. ஊதா, அவுரி, பழுப்பு. மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகிய ஏழு நிறங்கள் அடங்கியுள்ளன. இந்த வண்ணக் கலவைகளை வானத்தில் எப்போதாவது தோன்றும், வானவில் வில் காணலாம். சூரியனின் வெப்ப ஒளி இவ்வித வர்ண ஜாலங்களைத் தோற்றுவிக்கின்றன. வானத் திலுள்ள வண்ணத் துகள்கள் மீது சூரிய ஒளி பட்டுச் சிதறும் போது; அந்தத் துகள்களில் எந்த வண்ணம் அதிகமாயிருக்கிறதோ அந்த வண்ணம் பளிச்சென்று வானில் தெரியும். அதனால்தான் ஆகாயம் சில சமயம் சிவப்பாகவும், நீலமாகவும், பிறவண்ணங்களாகவும் நம் கண்ணிற்குத் தோன்றுகிறது.
பூமியின் வடிவம் உருண்டை என்று பொதுவாகக் கூறினாலும்,அதன் இயற்கை வடிவம் பந்தைப் போன்றது அல்ல; ஆரஞ்சுப்பழம் போன்றது. மேலும், கீழும் சிறிது தட்டையாக இருக்கும்.
பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டு எல்லா கிரகங்களையும்! போலவே சூரியனை வலம் வருகிறது. பூமி தன்னைத்தானே ஒரு முறை சுற்றிக் கொள்ள அதற்கு ஆகும் நேரம், சுமார் 24 மணித்துளிகள். அதாவதுஒரு முழு நாள் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர், மனிதரின் மூதாதையர்களாகக் கருதப்படும் சில விலங்குகள் தோன்றினவென்றும்-சிலவகைக் குரங்குகளிலிருந்தது, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளில் சிறிது சிறிதான அங்க அவயவ மாற்ற அமைப்புக்களுடன் மனித இனம் தோன்றி; சிறிது சிறிதாக வளர்ச்சி யுற்று சரியான அங்க அமைப்புகளுடன் ஆதி மனிதன் – முழு மனிதனாக உருப் பெற்றதாக சில அறிஞர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர்.
எப்படியோ, முழுமனிதன் உருவாகி மனிதன், நாகரிக வளர்ச்சி பெற்று வளரத் துவங்கியபோது; அவனுக்கு வேண்டிய அனைத்தையுமே இந்த பூமி வஞ்சனையில்லாமல் வாரி வழங்கத் தயாராக உள்ளது என்பதை உணர்ந்து கொண்டான்.
பூமியில் உள்ள பெரும்பாலான பகுதி- அதாவது பூமியின் முக்கால் பாகத்திற்கு மேல் நீரால் சூழப்பட்டுள்ளது. கடலால் சூழப்பட்ட முக்கால் பகுதி போக மீதமுள்ள கால்பகுதி நிலப் பரப்பில்தான் பெரிய ஏழு கண்டங்களும்; பெரிய பெரிய நாடுகளும் உள்ளன. 1) ஆசியா, 2) ஆப்பிரிக்கா, 3) வட அமெரிக்க, 4) தென் அமெரிக்கா, 5) அண்டார்டிகா, 6) ஆஸ்திரேலியா 7) ஐரேப்பா ஆகியவையே ஏழு கண்டங்களாகும்.
இந்த ஏழு கண்டங்களையும்,
1. பசிபிக்கடல் 69,374,182 சதுர மைல்
2. அட்லாண்டிக் 41,105,436 சதுரமைல்
3. இந்தியக் கடல் 28,925,524 சதுரமைல்
4. அண்டார்டிக் 5,731,350 ச. மைல்
5. ஆர்டிக் 5,440,000 சதுரமைல்கள்
ஆகிய ஐந்து பெருங்கடல்கள் சூழ்ந்துள்ளன.
இதேபோல் பூமியின் மீதுள்ள பெரிய மலை கள் ஆசியாவில் 1. இமய மலை, 2. இந்துகுஷ் மலை. 3. சுலைமான் மலை, 4. அல்டாய் மலை, 5. யாப்ளனாய் மலை. 6. சயான் மலை 7.ஊரல் ஆகிய ஏழு பெரிய மலைகளும்:
ஐரோப்பாவில் 1. ஸ்காண்டி நேவியன் 2. கார்ப்பேத்தியன் 3. ஆல்ப்ஸ் 4 பிரான்னீஸ் 5. காண்டாபிரியன் ஆகிய மலைகளும், ஆப்பிரிக்காவில்: அட்லாஸ், அபிசீனியன், டேபிள் ஆகிய மலைகளும்-அமெரிக்காவில் இராக்கிஸ், ஆண்டிஸ் ஆகிய மலைகளும் உள்ளன.
பூமி அன்னையின் செல்லக் குழந்தைகளில் காடும் ஒன்று. எந்த ஒரு நாடும், வளமுடைய தாகத் திகழ வேண்டுமானால் அதன் மொத்தப் பரப்பில் குறைந்தது மூன்றில் ஒரு பங்கு காடுகளா வது இருக்க வேண்டும் என்பது புவி இயல் நிபுணர் களின் கருத்து.
ஊற்றுப் பெருகிடவும், ஆறுகள் நீர் நிரம்பி ஓடிடவும் ஆதாரமாக உள்ள மழைதனை ஈர்த்து மண்ணுக்கு அளிப்பன காடுகளே.
கதிரவன் வெம்மையால் ஆவியாக மாறுகின்ற கடல் நீரெல்லாம் கரிய மேகங்களாக உருவெடுத்து வானில் உலா வரும்போது! அதனைத் தடுத்து குளிர்வித்து, மழையாய் பொழிய வைக்கும் கருவியாய்க் கடமையாற்றுவது காடுகளே.
கடலை நோக்கி ஓடும் மழைநீரை, மரங்கள், தன் உடலால் தடுத்து; வேர்க்கால்கள் வழியே, மண்ணுக்குள் அனுப்பி வைக்கின்றன. அந்த நீரை, இயற்கை நீர்த்தேக்கங்களாய் மண்ணுக்குள் தேக்கி வைத்துப் பின், அதனை சுனையாகவும், ஊற்றாகவும், ஆறாகவும் அருவியாகவும். பூமி அன்னை வெளிப்படுத்துகிறாள். இயற்கையின்- இந்த அரிய செயல்களுக்குக் காரணமாய் இருப்பது காடுகளே.
அடர்ந்த காடுகளில் மனிதப் பிணியை நீக்க வல்ல அரிய மூலிகைகள் கிடைக்கின்றன. மூங்கில், ஈத்தை, ரப்பர், யூகலிப்டஸ், வாட்டில், பைன் போன்ற மரங்களிலிருந்து கிடைக்கும்கூழ், காகிதம் தயாரிக்க உதவுகின்றது.
இவைதவிர, வீடுகளில் உணவு தயாரிக்கவும், ஆலைகளில் பற்பல பணிகள் புரிவதற்கு எரிபொரு ளாக உதவுவதும் மரங்களே!
வீடு கட்டவும்; பாலங்கள் அமைக்கவும், ரயில் எஞ்சின் தண்டவாளங்கள் நிறுவவும், இப்படி எண்ணற்றவகையில் காடும், காட்டுப் பொருளான மரங்களும் பயன் தருகின்றன.
பூபூமியின் வயதைக் கண்டறிவதில் புவி இயல் நிபுணர்கள் பற்பல முறைகளைக் கையாண்டனர், கடல் நீரிலுள்ள உப்பின் பரிமாணத்தைக் கொண் டும் பூமியின் வயதைக் கணக்கிட்டனர். உலகி லுள்ள ஆறுகள் அனைத்துமே கடலில்தான் சங்கம மாகின்றன. அதன்படி ஒவ்வொரு வருடமும் உலகிலுள்ள ஆறுகள் அனைத்துமாக சுமார் 16 கோடி டன் உப்பைக்கடலில் கொண்டு போய்த் தள்ளுகின்றனவாம். இந்தக் கணக்குப்படி கடலிலுள்ள உப்பு 8 கோடி வருஷத்தில் சேர்ந்திருக்கலாம் என்று எண்ணுகின்றனர். எனவே பூமியின் வயதும் 9 கோடி வருஷங்களாக இருக்கலாம் என்று அணக்கிட்டுள்ளனர். இந்த 9 கோடி ஆண்டுகளில் பூமி தன்னை வெகுவாக மாற்றிக் கொண்டே வருகிறது.
இப்போது பல கண்டங்களாக உள்ள நிலப் பறப்பு ஆரம்பத்தில், உலகம் முழுவதும் ஒரு மாபெரும். கண்டமாகவே இருந்துள்ளது. கடல் அரிப்பினாலும், நில நடுக்கங்களினாலும், இந்த ஒரே கண்டத்திலிருந்து, பல நிலப்பரப்புகள், பிரிந்து விலகத் துவங்கின. இவ்வாறு, பிரிந்து வந்தவை தனித்தனிக் கண்டங்களாக விளங்குகின்றன.
பசிபிக் கடலில் சில இடங்களில் கடலுக்குள் ஏற்படும் அழுத்தத்தினால் புதிய தீவுகள் தோன்று கின்றன. தீவுகள் என்பது-கடலில் அமிழ்ந்திருக் கும் மலைகள். கடல் நீருக்கு மேல் உந்தப்பட்டு விடும்போது அவைகள் தீவுகளாக அங்கே நிலைக்கின்றன.
இப்போது இமயமலை இருக்கும் இடத்தில் முன்பு கடல் இருந்ததாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் இது சாத்தியமே.
மிகப் பெரிய எவரெஸ்ட் மலையின் உயரம் 29000 அடி. ஆனால், இதைவிட 316000 அடி ஆழமான கடல் பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் விழுந்தால் இமயமலை மறைந்து விடும்.
இத்தகைய மாறுதல்கள் மெல்ல மெல்ல ஏதோ ஒரு வகையில் பூமியில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அவை வெளிப்பட பல ஆயிரம் ஆண்டுகளாகின்றன.
நிலக்கரியின் கதையும் இப்படித்தான்.
மலைகள் ஆழ்கடலுக்குள் புதைவதும்; கடலுக் குள்ளிருந்து புதிய மலைகள் வெளியே உந்தப்பட்டுத் தீவுகளாக விளங்குவதோ போல-
இயற்கையின் வேகத்தில் காடுகள் அழிகின்றன. அவை மண்ணோடு மண்ணாகக் கலந்து மக்கிப் போகின்றன. பின்னர் அதே இடத்தில் புதிய காடுகளை-மரம், செடி, கொடிகளை- இயற்கை சிருஷ்டிக்கிறது.
லட்சக் கணக்கான ஆண்டுகளில் தொடர்ந்து இப்படிப் பூமியின் ஆழத்திற்குச் சென்று இடம் பெற்று விட்ட தாவரங்கள், நிலத்தினுள் புதைந்து சிதைகின்றன. அங்கே அவை பற்பல ரசாயன மாறுதல்களுக்கு இலக்காகி, நிலக்கரியாக உருமாறுகின்றன.
இந்த மாற்றங்கள் உடனுக்குடன் ஏற்படக் கூடியவை அல்ல. படிப்படியாக பல மாறுதல்கள் நிகழ்கின்றன. ஆயிரக்கணக்கான
ஆண்டுகள் மரங்கள் மண்ணில் அழுந்திக் கிடப்பதால், அவை கருமை நிறம் அடைந்து கெட்டித் தன்மை பெற்று நிலக்கரியாகிறது.
நிலக்கரி ஓர் எரிபொருள் என்பதை முதன் முதலாக கண்டு பிடித்தது யார் என்பதை உறுதி யாகச் சொல்ல முடியவில்லை. ஏறக்குறைய 2500 ஆண்டுகளுக்கு முன்னரே கிரேக்கர்கள் நிலக்கரியைப் பயன்படுத்தி வந்தனராம். அவர்கள் அப்போது அதற்கு இட்ட பெயர் “எரியும் கல்” என்பதாகும்.
மின்சாரத்தை எரிபொருளாக எல்லோராலும் பயன்படுத்த முடியாது. அது விலை மிகுந்த எரி பொருள் வசதி படைத்த நாடுகளில் கூட -ஓரள வுக்குத்தான் அதை எரிபொருளாகப் பயன் படுத்துகின்றனர். மண்ணெண்ணை மக்களுக்குப் பயன்படுகிற ஒருமு க்கியமான எரிபொருள். ஆனால் எண்ணைக் கிணறுகள் எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை. அரேபிய நாடுகளில் தான், பெருமளவு எண்ணை ஊற்றுக்கள் உள்ளன.
அங்கிருந்து இதர நாடுகளுக்கு எண்ணை இறக்குமதி ஆவதால், எண்ணை விலை அதிகமே. பாரத நாட்டில் தேவைக்கு ஏற்ப எண்ணை ஊற்றுக்கள் இல்லாததால்-இறக்குமதியாகிற எண்ணை மலிவாக இல்லை. மூன்றாவது எரி பொருளாகப் பயன்படுவது தான் நிலக்கரி, மின்சாரம், எண்ணை. இவற்றைவிட நிலக்கரி மலிவானது.
எனவே, இந்திய நாட்டில் பல இடங்களிலுள்ள நிலக்கரிச் சுரங்கங்களை, படிப்படியாக அரசு தேசிய உடமையாக்கி, மக்களுக்கு அதிக அளவிற்கு நிலக்கரியை உதவி வருகிறது.
வளர்ந்து வரும் மனித நாகரிகத்திற்கு காடு, மலைகளைப் போலவே நதிகளின் பங்கும் மகத்தானது.
காடுகளும், நதிகளும், மனிதனின் உணவிற்கு வகை செய்கின்றன. சமவெளிப் பிரதேசங்களில் விளை நிலங்களில்-மனிதன் இன்னும் தனக்கு வேண்டிய உணவுகளை எல்லாம் பெற பூமி உதவுகிறது.
மலையிலிருந்து மழைநீராகவும்; பனி உருகி யும், நதிகள் நீரைச் சுமந்து செல்கின்றன. அந்த நீரை மனிதன் அங்கங்கே அணைகள் கட்டித் தடுத்து, விவசாயத்திற்கும், மின்சார உற்பத்திக் கும் வகை செய்து கொண்டான்.
நீரிலிருந்து கிடைக்கும் மின்சாரம் மனித நாகரீகத்தின் வளர்ச்சிக்கு பெரும் துணையாகத் திகழ்கிறது. அது போலவே; பூமியின் அடியிலிருந்து தோண்டி எடுக்கப்படும் நிலக்கரியும், மனித நாகரிக வளர்ச்சிக்கு உதவியதோடு– அத்தியாவசியமான மிகச் சிறந்த எரிபொருளாக வும் பயன்படுகிறது.
முதன் முதலாக இங்கிலாந்திலுள்ள “நியூ காசில்” என்னுமிடத்தில், 18-ம் நூற்றாண்டில் நிலக்கரி தோண்டி எடுக்கப்பட்டது. இன்று உலக நாடுகள் அனைத்தும் நிலக்கரியின் பால் கவனம் செலுத்தியுள்ளன.
ஏனெனில் –
வெறும் எரி பொருளாக மட்டுமின்றி, மின்சாரம், எண்ணை, பெட்ரோல், இவற்றைப் போலவே நிலக்கரியும் பல விதங்களில் மக்களின் தேவைக்கு இன்றியமையாத தாகிவிட்டது.
நிலக்கரியிலிருந்து தார்; கந்தகம்; கோக் என்னும் கல் கரி; காஸ்; பிளாஸ்டிக்; வெடிமருந்துகள், அம்மோனியா, நோய்தீர்க்கும் மருந்துகள், வாசனைத் தைலங்கள், சாக்கரின் என்னும் சர்க்கரை; ‘பெட்ரோல்’ எண்ணை; பூச்சி மருந்துகள், செயற்கை ரப்பர்; சாயங்கள், உரங் கள் போன்ற பல பொருள்கள் தயாரிக்கப்படுகின் றன. இன்னும் நிலக்கரியிலிருந்து சோப்புகள், சலவைக்கு வேண்டிய பொருள்கள், கொடிய நோய்களைக் குணப்படுத்தும் ‘சல்பர்’ மருந்துகள் தலைவலி மருந்துகள் கூடத் தயாரிக்கப்படுகின்றன.
நிலக்கரியில் கரிப் பொருள் 80 சதவிகிதமும், உயிர்வளி 8.8. சதமும்; நீர்வளி 5.5. சதமும், உப்புவளி 1.5. சதமும், கந்தகம் 0.8. சதமும் சாம்பல் 3.4 சதவிகிதமும் உள்ளன.
நிலக்கரியிலிருந்து வெளிப்படும் ஆவியினால் 1787-ம் ஆண்டு “டொனால்டு” என்னும் விஞ்ஞானி விளக்கெரியவைத்துக் காண்பித்தார். அதைத் தொடர்ந்து 1802-ம் ஆண்டு பர்மிங் ஹாம் தொழிற்சாலையில் முதன் முதலாக நிலக்கரி காஸ் விளக்குகள் போடப்பட்டன.
புன்சன் என்னும் விஞ்ஞானி 1860-ம் ஆண்டு நிலக்கரி ஆவியைப் பற்றி விரிவாக ஆராய்ந்து இந்த நிலக்கரி ஆவியுடன்; காற்றையும் கலக்கவிட் ால் புகையின்றி எரியுமென்றும், அதிகமான வெப்பம் தரும் என்றும் கண்டு பிடித்தார்.
மின்சாரமும், நிலக்கரியும் கிடைக்க வழி செய்த பூமி அன்னையே, மனித முயற்சியையும் முன்னேற்றத்தையும் அதன் உச்சிக்குக் கொண்டு நிறுத்தபூமிக்குள்ளிருந்தே பெட்ரோலும், மண் எண்ணையும் கொடுத்து உதவுகிறாள்.
இன்றைய விஞ்ஞான உலகில் இப்பொருட்கள் நாகரிக முன்னேற்றத்தோடு, உலக வளர்ச்சிக்கும் உயிர் மூச்சாகத் திகழ்கின்றன என்றே கூறலாம்.
மண்ணில் மாந்தர் நல்லவண்ணம் வாழ பூமி அன்னையே அருள் பாலிக்கிறாள் என்றால் அது மிகையல்ல.
அதனால்தான் இந்த பூமியை ‘பாரதமாதா’ என்று தாய்க்குச் சமானமாக பாரத மக்கள் போற்றித் துதிக்கிறார்கள்.
– தொடரும்…
– பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 1988, சாரதி பதிப்பகம், சென்னை.