(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
கீரோ சிசிலி நாட்டின் அரசன்.
அவனுக்குத் தூய பவுணில் புதிய முடியொன்று செய்து அணிந்து கொள்ள வேண்டுமென்ற ஆசை திடீரென ஏற்பட்டது.
மழைக்குப் பிந்திய இளமஞ்சள் வெயில் தோன்றிய ஒரு மாலைப் பொழுதில் அவன் ஒரு பொற் கொல்லனை அழைத்தான்.
முடி செய்வதற்குத் தேவையான தூய பவுணைப் பொற்கொல்லனிடம் கொடுத்தான்.
“இரண்டு வாரத்திற்கிடையில் இந்தப் பவுணைக் கொண்டு நீ எனக்கு அழகான முடி ஒன்று செய்து தரவேண்டும்.” என்று கட்டளையிட்டான்.
அரச விருப்பம் நிறைவேறுவதற்கு யார் தடையாக இருக்க முடியும்?
அரச கட்டளையை யார் நிறைவேற்றாது விட முடியும்? கி.மு மூன்றாம் நூற்றாண்டிலே அரசன் என்றால் ஒருவகையிற் சர்வாதிகாரிதான்!
இரண்டு வாரம் முடிவதற்கு முதல் நாள்…..ஒரு நாள் உழைப்பின் சோம்பலில் சூரியன் மேற்குத் திசையில் சரிந்து கொண்டிருந்த வேளையில்,
பொற்கொல்லன் முடியை அரசனிடம் சேர்ப்பித்தான். முடியைப் பெற்றுக் கொண்ட அரசனின் மனதில் உள்ளுக்குள்ளே புகை மூட்டமாய் ஒரு சந்தேகம் நிறைந்தது.
இந்தப் பொன் முடியில் வெள்ளி கலந்திருக்குமோ?
முடியை நிறுத்துப் பார்த்தான் அரசன்! அவன் கொடுத்த பவுணின் நிறையும் முடியின் நிறையும் சமமாகவே இருந்தன. ஆனால்…
சிறிதளவு பவுணை அகற்றிவிட்டு, அதே நிறை கொண்ட வெள்ளியைச் சேர்த்திருக்கலாம் அல்லவா?
இதை எப்படி கண்டு பிடிப்பது? அரசனுக்குத் தலை சுற்றியது.
யோசனையில் இருந்த அரசனின் முகத்தில் சடக்கென்று ஒரு ஒளி இதுதான் வழி!
அந்நாட்டின் பிரபல விஞ்ஞானி “ஆக்கிமிடிஸ் இருக்கவே இருக்கிறார் அல்லவா? அவரை அழைத்தான் அரசன்.
“இந்தப் பொன் முடியில் வெள்ளி கலந்திருக்கிறதா என்று நீர் கண்டு பிடித்துச் சொல்ல வேண்டும்” என்று கட்டளையிட்டான்.
இரவும் பகலும் இதைப்பற்றியே யோசித்தார் ஆக்கிமிடிஸ்.
விட்டம் பார்த்தபடி தனக்குள் பேசிக் கொண்டார் பல நாள்.
ஒன்றும் தோன்றவில்லை.
ஒரு நாள் தொட்டி நிறைந்த நீரில் குளித்துக் கொண்டிருந்தார். இவரது உடலை ஒரு விசை மேல் நோக்கி தள்ளுவதை உணர்ந்தார்.
பதார்த்தங்களின் உண்மையான நிறையையும் அவை நீரில் அமிழ்ந்திருக்கும் போது காட்டும் தோற்ற நிறையையும் கொண்டு, பதார்த்தங்களை இனங்காண முடியும் என்ற ஒரு உண்மை ஒரு ஒளி வெள்ளம் போலத் திடீரென அவரது மூளையில் தோன்றியது.
வெற்றிதான்!
இனி,அரசனுடைய கேள்விக்கு விடை காண்பது சுலபம்.
ஆக்கிமிடிஸீக்கு எல்லையில்லாத மகிழ்வு.
குளித்துக் கொண்டிருந்தவர் உடைமாற்றக் கூட மறந்து போனார்.
“உரேக்கா, உரேக்கா” என்று கத்திக்கொண்டே சிசில நாட்டின் தெருவில் ஓடினார். “உரேக்கா” என்றால் அவர்களது மொழியில் “கண்டுபிடித்துவிட்டேன்” என்று பொருள்.
– விஞ்ஞானக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 2000, கலை இலக்கியக் களம் தெல்லிப்பழை, ஸ்ரீலங்கா.