ஓர் ஊரில் கந்தன் என்ற விவசாயி இருந்தார். அவருக்கு இரண்டு பெண்கள். மூத்தவள் பெயர் சுப்பக்கா. இளையவள் பெயர் அம்மு. இருவருக்கும் திருமணம் நடந்தது.
மூத்தவள் சுப்பக்கா, விவசாயி ஒருவரைத் திருமணம் செய்து கொண்டாள். இளையவள் மண்பாத்திரம் செய்யும் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டாள்.
திருமணம் நடந்து பல நாள்கள் சென்றன.
ஒருநாள் விவசாயி கந்தன் தனது பெண்களைப் பார்த்துவரப் புறப்பட்டார்.
அவர் முதலில் மூத்த மகள் சுப்பக்காவின் வீட்டுக்குப் போனார்.
“என்னம்மா, சவுக்கியமாக இருக்கிறாயா?’ என்று கேட்டார்.
“ஆமாம் அப்பா! நல்ல சவுக்கியம். ஆனால் இந்தப் பாழும் மழைதான் பெய்யவில்லை. மழை பெய்தால் பயிர்களுக்கு உதவியாக இருக்கும்… அதைத் தவிர மற்றபடி நாங்கள் எல்லாம் நல்ல சுகம் அப்பா!’ என்றாள்.
அடுத்த நாள், இளைய மகள் அம்முவைப் பார்க்கப் போனார் கந்தன்.
அவள் அவருக்கு விருந்து பரிமாறினாள். விருந்தின்போது பேசிக் கொண்டிருந்தனர்.
பேச்சினிடையே, “என்னம்மா சவுக்கியம்தானே…’ என்றார் கந்தன்.
“சவுக்கியம்தான் அப்பா! நானும் என் கணவரும் சந்தோஷமாக இருக்கிறோம். ஆனால் இந்த மழைதான் திடீர் திடீரென்று வந்து மண்பானை சட்டிகளைக் காயவிடாமல் பண்ணுகிறது’ என்று குறைப்பட்டுக் கொண்டாள்.
விவசாயி கந்தன் ஒன்றும் புரியாமல் விழித்தார். மூத்தவள் மழை வேண்டும் என்கிறாள். இளையவளோ மழை பெய்தால் ஆபத்தாக இருக்கிறது என்கிறாள்.
“ஒருவருடைய விருப்பம் அடுத்தவருக்கு ஆபத்தாக இருக்கிறது. மனிதனால் ஆகக்கூடியது என்ன இருக்கிறது…’ என்று குழம்பிக் கொண்டே தன் வீட்டுக்குச் சென்றார் கந்தன்.
– நவம்பர் 2011