ஆறாவது முட்டாள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 7,599 
 
 

அரசர் கிருஷ்ணதேவராயருக்கு அன்று விபரீதமான ஓர் ஆசை ஏற்பட்டது. அவர் அப்பாஜியிடம், “”அமைச்சரே, இன்று மாலை ஆறு மணிக்குள் நம் தலைநகரான விஜயநகரை நீர் நன்றாகச் சுற்றிப் பார்த்து, ஆறு முட்டாள்களின் விலாசத்தைக் குறித்துக் கொண்டு வாருங்கள்,” என்று ஆணையிட்டார்.

“”முட்டாள்களின் முகவரி எதற்கு?” என்று பணிவுடன் கேட்டார் அப்பாஜி.

“”வீணாக விளக்கம் கேட்க வேண்டாம். சொன்னதைச் செய்யும்!” என்று அரசர் கண்டிப்பாகக் கூறினார்.

அரசர் விருப்பப்படி முட்டாள்களைத் தேடி அலைந்தார் அப்பாஜி. அந்தி நேரத்திற்குள் ஆறு முட்டாள்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்கள் விலாசத்தைக் குறிக்க வேண்டுமே! எங்கே போவது? எப்படி முட்டாள்களைச் சந்திப்பது?

அப்பாஜி இரண்டு மணி நேரம் மாறு வேடமணிந்து முட்டாள்களைத் தேடினார். யாரையும் காணோம். நகர எல்லையை ஒட்டிய மரத்தின் நிழலில் சிறிது நேரம் நின்றார்.

அப்போது ஒருவன் கழுதை மீது ஏறி வந்தான். அவன் தலை மீது ஒரு புல்கட்டினைச் சுமந்து கொண்டிருந்தான்.

“”ஐயா, கழுதை மீது இருக்கும் நீர் ஏன் புல்கட்டினைச் சுமந்துக் கொண்டிருக்கிறீர்?” என்று கேட்டார் அப்பாஜி.

“”உமக்கு அறிவு இருக்கா? என் கழுதைக்கு வயதாகிவிட்டது. ரொம்பவும் தளர்ந்து விட்டது; அதனால், என்னை மட்டுமே சுமக்க இயலும். இந்தப் புல்கட்டினையும் சேர்த்துச் சுமக்க இயலாது. ஆகவே, நான் புல்கட்டினைச் சுமந்து செல்கிறேன்,” என்றான்.

அப்பாஜிக்கு ஒரே மகிழ்ச்சி. தான் தேடி வந்த முட்டாள்களில் ஒருவன் அகப்பட்டுக் கொண்டானே! அவனிடம் சாமர்த்தியமாகப் பேசி அவனது விலாசத்தைக் கேட்டுக் குறித்துக் கொண்டார்.

சிறிது துõரம் சென்றதும் அருகில் உள்ள ஒரு மரத்தின் நுனி கிளையில் ஒருவன் உட்கார்ந்துக் கொண்டு மரத்தை வெட்டிக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்த அப்பாஜி,

“”ஐயா! இப்படி உட்கார்ந்துக் கொண்டு வெட்டினால் நீங்கள் கீழே விழுந்து விடுவீர்கள்.
அந்த பக்கமா உட்கார்ந்து வெட்டுங்க,” என்றார்.

“”ஏன்யா… நான் என்ன மடயன்னு நெனச்சியா… நான் இப்படி உட்கார்ந்துகிட்டு மரத்தை வெட்டினா இந்த மரக்கிளை கீழே விழும். நீ உடனே துõக்கிகிட்டு ஓடலாம்னு பார்த்தியா? அதுக்காகத் தானே நான் இங்க உட்கார்ந்துகிட்டு வெட்டுறேன்,” என்றான்.

“”சே! உங்க புத்திசாலித்தனம் யாருக்கு வரும்… உங்க வீட்டு முகவரியை கொடுங்க…” என்று வாங்கிக் கொண்டார். அடுத்து பாட்டி ஒருத்தி அடுப்பை பற்றவைக்க மிகவும் போராடிக் கொண்டிருந்தார்.

“”பாட்டி என்ன பிரச்னை? என்றார் அப்பாஜி, “”அய்யா! இது நல்லா காய்ஞ்ச விறகு தான். மண்ணென்ணெய் இல்லை. தண்ணியும், மண்ணென்ணெயும் ஒரே மாதிரி தானே இருக்கு அதனால இந்த விறகுகள்ல நல்லா தண்ணிய ஊத்தி எரிய வைக்க முயற்சி செய்றேன் எரியவே மாட்டேங்குது,” என்றாள். சிரித்துக் கொண்டே அவளது முகவரியையும் குறித்துக் கொண்டார் அப்பாஜி.

அடுத்த முட்டாள் அவ்வளவு எளிதில் கிடைக்கவில்லை. இன்னும் மூன்று முட்டாளைத் தேடியாக வேண்டும்! ஒரு மணி நேரமே உள்ளது.

அலுத்துப் போய் ஆற்றங்கரைக்குச் சென்றார் அப்பாஜி. அங்கே ஒருவன் குளித்து முடித்துவிட்டு இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தார். அப்பாஜி அவனிடம்,

“”தாங்கள் எதைத் தேடிக் கொண்டு அலைகிறீர்கள்?” என்று விசாரித்தார்.

அவன், “”ஐயா, நான் என் உடைகளையும் கொஞ்சம் பணத்தையும் ஓர் இடத்தில் வைத்துவிட்டுக் குளித்தேன். குளித்துவிட்டு வந்து பார்த்தால் பணத்தையும், உடைகளையும் காணோம்,” என்று கவலையுடன் கூறினான்.

“”ஏதாவது அடையாளம் வைத்து இருந்தாயா?”

“”ஆமாம், அடையாளத்தையும் காணோம்.”

“”என்ன அடையாளம்?”

“”வானத்தில் வெண்மேகம் ஒன்றிருந்தது. அதை அடையாளமாகக் கொண்டு அதன் அடியில் அவற்றை வைத்தேன்.”

அவனது முட்டாள்தனத்தைப் புரிந்து கொண்ட அப்பாஜி அவன் பெயரோடு விலாசத்தையும் குறித்துக் கொண்டார்.

மாலை ஆறு மணி அப்பாஜி அரசனிடம் விரைந்து சென்றார். நான்கு முட்டாள்களுடைய விலாசத்தையும் கொடுத்தார்.

கிருஷ்ணதேவராயர் அவற்றைப் பார்த்தார். முட்டாள்களின் விபரங்களை அறிந்து ரசித்து சிரித்த அரசன், “”அமைச்சரே, இன்னும் இரண்டு முட்டாள்களின் விலாசம் எங்கே?” என்று கேட்டார்.

அப்பாஜி, “”அரசே, ஒரு பெரிய சாம்ராஜ்ஜியத்தின் மந்திரி நாள் முழுவதும் முட்டாள்களைத் தேடிக் கொண்டு அலைந்தது முட்டாள்தனமல்லவா! ஆகவே, எனது விலாசத்தை ஐந்தாவதாக எழுதிக் கொள்ளுங்கள்,” என்று பணிவோடு வேண்டினார். அரசரும் அப்பாஜியின் முகவரியை எழுதிக் கொண்டார்.

பிறகு, “”அமைச்சரே, ஆறாவது முட்டாளின் விலாசம் எங்கே?” என்று அரசர் ஆர்வத்துடன் கேட்டார்.

“”அரசே, கோபித்துக் கொள்ளாதீர்கள்! உங்கள் விலாசம் உங்களுக்குத் தெரியாதா? ஒரு நாட்டின் அமைச்சருக்கு என்ன வேலை கொடுக்க வேண்டும் என்று ஒரு ஒழுங்கு கிடையாதா? நாம் அறிவாளிகளைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களால் பல நன்மைகளைப் பெற வேண்டுமே தவிர, முட்டாள்களைத் தேடிக் கண்டு பிடித்து, அவர்களது தொடர்பால் நம்மையும் முட்டாளாக்கிக் கொள்ளக் கூடாதல்லவா!” என்று உருக்கமாகக் கூறினார்.

அரசனுக்குத் தான் செய்த தவறு புரிந்து விட்டது. தன் கையிலிருந்து நான்கு முட்டாள்களின் விலாசத்தையும் உடனே கிழித்து எறிந்தார். அப்பாஜியின் அறிவுக் கூர்மையையும் துணிச்சலையும் பாராட்டி அவருக்குப் பரிசு அளித்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *