(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஓர் ஊரிலே கண்ணப்பர் என்று ஒருவர் இருந்தார். அவர் பெரிய பணக்காரரல்லர். இருப்பினும் அவர் தம் மகனுக்கு ஒரு நோய் ஏற்பட்டபோது ஏதாவது ஒரு நல்ல அறம் செய்வதாகத் தெய்வத்திடம் உறுதி செய்து கொடுத்தார். மகன் பிழைத்து விட்டான்.
உறுதியை நிறைவேற்ற வேண்டும். என்ன அறம் செய்யலாம் என்று சிந்தித்தார். அந்த ஊரில் குளம் இல்லை. குடிநீருக்காக அரைக்கல் தொலைவில் உள்ள குளத்திற்கு மக்கள் சென்று வந்தார்கள். இதைக் கருதிய கண்ணப்பர் தம் ஊரில் ஒரு குளம் வெட்டினார்.
குளம் வெட்டும் செலவுக்கு அவரிடம் பணம் இருந்தது அதற்குக் கல்லினால் கரையமைத்துப் படிபோடும் அளவிற்குப் பணம் இல்லை. ஆகவே அவர் கற்கரையும் படியும் அமைக்காமலே குளத்தை வெட்டி முடித்தார். குளத்தின் கரையில், “குளம் வெட்டியவர் கண்ணப்பர்” என்ற எழுத்துகள் பொறித்த ஒரு கல்லும் நாட்டினார்.
அதே ஊரில் நல்லப்பர் என்ற ஒருவர் இருந்தார். அவரும் செல்வரல்லர். சாதாரண வணிகர்தாம். அவர் ஒரு நாள் கண்ணப்பர் வெட்டிய குளத்தை வந்து பார்த்தார். கற்கரையும் படியும் அமைக்காமல் விட்டது ஒரு பெருங் குறையாக அவருக்குத் தோன்றியது.
அவர் கண்ணப்பரிடம் சென்றார். தம் மனக் கருத்தை வெளியிட்டார். கரையமைக்காவிட்டால் குளம் விரைவில் தூர்ந்துவிடும் என்ற உண்மையை எடுத்துக் கூறினார். “நான் என்ன செய்வேன். என்னிடம் அதற்கு மேல் பணம் இல்லையே!” என்றார் கண்ணப்பர். “என்னிடம் சேமிப்புப் பணம் சிறிது இருக்கிறது. அதைத் தருகிறேன். கரையும் படியும் அமைத்து விடுங்கள்” எனக் கூறினார் நல்லப்பர். அவ்வாறே பணமும் கொடுத்தார். கண்ணப்பர் அதன்பின் தம் அறப்பணியைச் செவ்வனே செய்து முடித்தார். கண்ணப்பர் நல்லப்பர் செய்த உதவிக்கு நன்றி தெரிவிக்க வில்லை. நல்லப்பரின் நண்பர் சிலர் அவரிடம் வந்து, “கரை கட்டிப் படி அமைத்தவர் நல்லப்பர்” என்று ஒரு கல் நாட்டும்படி கண்ணப்பரை வற்புறுத்த வேண்டும் என்றார்கள்.
நல்லப்பர் மறுத்துவிட்டார். “அறம் செவ்வனே நடக்க வேண்டும். அதுதான் நம் குறிக்கோள். பெயர் நாட்டுவது அல்ல” என்று கூறினார் நல்லப்பர்.
கருத்துரை:- நல்லவர்கள் மக்கள் நலத்தையே நாடுவர். தங்கள் புகழை நாட்டிக்கொள்ள நினைக்க மாட்டார்கள்.
– நல்வழிச் சிறுகதைகள் – முதல் பாகம், முதற் பதிப்பு: ஜனவரி 1965, வானதி பதிப்பகம், சென்னை.