தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 10,395 
 

ஷூகு கவலையுடன் இருந்தான். அவனுடைய தாய் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தாள். சிகிச்சைக்கோ, சாப்பிடுவதற்கோ அவனிடம் பணமில்லை!

“திரும்பவும் சித்தப்பா கிட்டே போய் உதவி கேட்கலாம்…’ என எண்ணியவாறே தனது சித்தப்பா வீட்டுக்குப் புறப்பட்டான்.

அவரது வீட்டில், “ஏய், நீ திரும்ப வந்துட்டியா? நான் என்ன பணமரமா வச்சிருக்கேன், ஓடிப்போ இங்கிருந்து…’ விரட்டியடித்தார் சித்தப்பா.

அதிசய செருப்புபாவம் ஷூகு! கவலையுடன் சாலையோர மரத்தடியில் அமர்ந்து அழுதுகொண்டே தூங்கிவிட்டான்.

திடீரென்று, பெரியவர் ஒருவர் அவனருகே வந்து நின்று, “மகனே! நீ இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்?’ என்று கேட்டார்.

‘எங்கம்மாவுக்கு ரொம்ப உடம்பு சரியில்லை ஐயா! மருந்துச் செலவுக்குக்கூட கையில் காசில்லை… சீக்கிரம் வைத்தியர்கிட்ட காண்பிக்கவில்லையென்றால் அம்மா செத்துப் போயிடுவாங்களோன்னு பயமா இருக்கு…’ என்றபடியே அழ ஆரம்பித்தான்.

“அழாதேப்பா, நான் உனக்கு உதவி செய்கிறேன். இந்தா, இது ஒரு அதிசய செருப்பு. இதைக் காலில் அணிந்து கொண்டு குதித்தால் இதிலிருந்து ஒரு தங்கக் காசு வரும்! எத்தனை முறை குதித்தாலும் ஒவ்வொரு முறையும் ஒரு தங்கக் காசு வரும். நீ ஒரு தடவைக்கு ஒருமுறை மட்டும் குதித்து ஒரு காசு மட்டுமே எடு. ஏனென்றால் நீ எப்பொழது குதித்தாலும் உன் உயரம் சிறிதளவு குறையும்! சிறிது நேரத்துக்குப் பிறகு உன் பழைய உயரத்துக்கு வந்துவிடுவாய்! ஒரே தடவையில் நிறையத் தங்கக் காசு வேண்டுமென்று அதிக ஆசைப்பட்டு பலமுறை குதித்து விடாதே! அப்போது நீ எறும்பு அளவுக்குச் சிறியதாகிப் போய்விடுவாய்!’ என்று சொல்லிவிட்டு அந்தப் பெரியவர் மறைந்து விட்டார்.

திடுக்கிட்டு எழுந்த ஷூகு, “நான் என்ன கனவு கண்டேனா/ ஆனால் செருப்புகள் இருக்கே! வீட்டுக்குப் போய் சோதித்துப் பார்க்கலாம்’ என்று மனதுக்குள் எண்ணியபடி அந்தச் செருப்புகளை எடுத்துக் கொண்டு தனது வீட்டுக்கு ஓடினான்.

வீட்டுக்குச் சென்றதும், செருப்புகளில் கால்களை நுழைத்துக் கொண்டு குதித்துப் பார்த்தான். உடனே கீழே ஒரு தங்கக் காசு கிடப்பதைக் கண்டு, “அட! தங்கக் காசு!’ என்று ஷூகு வியந்து போனான்.

“ஹைய்யா, ஒரு தங்கக் காசு கிடைத்துவிட்டது! நான் இப்போது எனது அம்மாவுக்காக மருந்து, சாப்பாடு எல்லாமே வாங்க முடியும்!’ என்று சந்தோஷப்பட்டுக் கொண்டான்.

இப்படியே நாட்கள் சென்றன. ஷூகு மிக விரைவில் வசதியானவனாக மாறிவிட்டான். ஆனால், ஒரு தடவைக்கு ஒரு தங்கக் காசு மட்டுமே எடுப்பதில் மிகவும் கவனமாக இருந்தான். அளவுக்கு மீறி அவன் ஆசைப்படவில்லை. பெரியவர் சொன்னதைத் தட்டாமல் கடைப்பிடித்தான்.

ஷூகு மகிழ்ச்சியாகவும் வசதியாகவும் இருப்பது அவனுடைய சித்தப்பாவுக்குத் தெரிய வந்தது. இது அவருக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை.

“என்னவோ, ரகசியம் இருக்கிறது! அது என்னவென்று கண்டுபிடித்தே ஆகவேண்டும்’ என்று எண்ணியவர், வேகமாக ஷூகுவின் வீட்டுக்கு வந்தார்.

“என்ன கண்ணா! எப்படி இருக்கீங்க எல்லோரும்?’ என்று அன்பொழுக விசாரித்தார்.

“வாங்க, சித்தப்பா வாங்க1′ என்று களங்கமில்லாமல் வரவேற்றான் ஷூகு.

ஷூகுவும் அவனது தாயாரும் சித்தப்பாவை நன்கு உபசரித்தனர்.

“ஆஹா! எத்தனை வகையான உணவுகள்! கண்டிப்பாக உங்களுக்கு ஏதாவது புதையல் கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன். என்கிட்டே சொல் ஷூகு… நான் யாரிடமும் சொல்ல மாட்டேன்’ என்றார் சித்தப்பா.

“புதையல் இல்லே, சித்தப்பா… ஒரு ஜோடி செருப்பு…’ என்றபடியே, ஓடிப்போய் அந்த அதிசய செருப்பை எடுத்துக் கொண்டு வந்து சித்தப்பாவிடம் காட்டினான் ஷூகு.

“இதுவா? சாதாரண செருப்புதானே! இது எப்படி உன்னைப் பணக்காரனாக மாற்றியது? என்னை ஏமாற்றப் பார்க்கிறாயே… உண்மையைச் சொல்லு…’ என்றார் சித்தப்பா.

“உண்மைதான் சித்தப்பா! இதைக் காலில் மாட்டிக்கிட்டு குதித்தால் ஒரு தங்கக் காசு வரும். இது அதிசய செருப்பு சித்தப்பா!’

“சரி..சரி.. இந்த அதிசய செருப்பை ஒரே ஒரு நாளைக்கு எனக்குக் கொடு!’

“இல்லை, சித்தப்பா! இதை நான் உங்ககிட்ட கொடுக்க முடியாது… நான் சொல்வதைக் கேளுங்க..!’

ஆனால் ஷூகுவின் சித்தப்பா எதையும் கேட்கும் மனநிலையில் இல்லை.

அவனிடமிருந்து அந்தச் செருப்பைப் பறித்துக் கொண்டு, “கொடு, ஒரே ஒருநாள்தானே! நாளைக்குத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன். நீ முன்பு வாங்கிய கடனைக்கூட நான் கேட்க மாட்டேன். நீ திருப்பித் தரவேண்டாம்’ என்றார் சித்தப்பா.

“சித்தப்பா, கொஞ்சம் நான் சொல்வதைக் கேளுங்க…’ அவன் முடிப்பதற்குள் பேராசை பிடித்த அந்த மனிதர் தனது வீட்டுக்கு அந்தச் செருப்புகளுடன் கிளம்பிப் போய்விட்டார்.

தனது வீட்டுக்குச் சென்றதும், ஒரு பெரிய துணியை விரித்து வைத்துக் கொண்டு செருப்பைக் காலில் மாட்டிக் கொண்டார்.

“உண்மையிலேயே அதிசயச் செருப்புதானான்னு பார்த்துவிடலாம்…’ என்றவாறே ஒரு குதி குதித்தார்.

“அட, நம்பவே முடியவில்லையே! தங்கக் காசு!’

மீண்டும் குதித்தார்… மீண்டும் தங்கக் காசு..!

‘உண்மையிலேயே தங்கக் காசுதான்… அசல் தங்கம்!’

மகிழ்ச்சியில் ஒன்றும் பிடிபடவில்லை அவருக்கு. மீண்டும் மீண்டும் குதித்தார். அவர் விரித்த துணியில் தங்கக் காசுகள் குவிந்துகொண்டே இருந்தன.

“ஹஹ்ஹஹ்ஹா… நான்தான் ஜப்பானிலேயே மிகப் பெரிய பணக்காரன். குதித்துக் குதித்துக் காலெல்லாம் வலியெடுக்கிறது. சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் குதிக்க ஆரம்பிக்கலாம்…’ என்று எண்ணியபடியே அந்தத் துணிவிரிப்பில் அமர்ந்தார்.

“அட..! ஏன் இந்தக் காசு இவ்வளவு பெரிசாத் தெரியுது! இந்தக் குவியல் ஒரு மலை போல இருக்கின்றதே!’ என்ற ஆச்சரியப்பட்டவர், திரும்பிப் பார்த்தார்.

“அட, இந்த மரம் வானத்தைத் தொடுதே! இறைவா! இதெல்லாம் என்ன? இங்கே, என் வீட்டில்தானே இருக்கிறேன்… ஆனா, பெரிய மைதானத்தில் இருப்பதுபோலத் தெரிகிறதே..!’ என்று பயத்தில் புலம்ப ஆரம்பித்தார்.

அப்பொழுது, அவரைத் தொடர்ந்து வந்த ஷூகு அங்கே வந்து சேர்ந்தான்.

சித்தப்பாவை வீடெங்கும் தேடினான். எங்கும் அவரைக் காணவில்லை!

அப்போது தங்கக்காசு குவியல் மீது அவனது பார்வை பட்டது!

“எவ்வளவு பெரிய தங்கக்காசு குவியல்! ஆனா… ஆனா… சித்தப்பா எங்கே போய்விட்டார்..! சித்தப்பா…சித்தப்பா…’ என்று கூவ ஆரம்பித்தான்.

திடீரென்று அதிசயச் செருப்பைக் கொடுத்த பெரியவர் சொன்னது ஷூகுவின் நினைவுக்கு வந்தது.

அந்தக் காசுக்குவியலைக் கூர்ந்து கவனித்தான். சித்தப்பாவைக் கவனித்தும் விட்டான்.

“சித்தப்பா கொசு அளவுக்கு சுருங்கிப் போய்விட்டாரே! இவ்வளவு காசு எடுத்திருக்கிறாரே! செருப்பு மேல சின்னப் பூச்சி மாதிரி, சித்தப்பா உட்கார்ந்திருக்கிறாரே!’ என்று வியந்து போனவன், “சித்தப்பா, நீங்களா? பேராசையால இப்படி ஆயிடிச்சே…’ என்று கலங்கினான்.

அவனது சித்தப்பா அலறினார்… “மகனே! என்னைக் காப்பாத்து… ஏதாவது செய்..’

ஆனால் அவரது அலறல் சத்தம் ஷூகுவின் காதில் விழவேயில்லை.

“சித்தப்பா, நீங்க உங்க உண்மையான உருவத்துக்கு சீக்கிரம் திரும்பிவிடுவீர்கள்… ஆனால், இப்போது என்னால் ஒன்னும் செய்ய முடியாது…’ என்று கூறியபடியே அங்கிருந்த தங்கக் காசுகளை ஒரு மூட்டையாகக் கட்டிக் கொண்டு தனது வீட்டுக்குக் கிளம்பினான்.

அதன்பிறகு அதை வைத்துக் கொண்டு தாங்களும் நன்றாக வாழ்ந்து பிறருக்கும் உதவி செய்து வாழ்ந்தனர் ஷூகுவும் அவனது தாயாரும்!

– உம்மு மைமூனா (பெப்ரவரி 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *