கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: July 8, 2012
பார்வையிட்டோர்: 13,065 
 

தெருவில் யாரோ வெள்ளையுஞ் சள்ளையுமாய் போய்க் கொண்டிருக்கிறார்கள் ஊருக்குப் புதுசா? திண்ணையிலிருந்த சுப்பன் கிழவன் கண் களை இடுக்கிக் கொண்டு பார்த்தான். ஒரு மண்ணுந்தெரியல.

“ஆரது.”

“அக்ரி ஆபீஸர்.”

“ம்..ம்..ம்..பயிர் பச்சை டாக்டரா?.” ——ஆபீஸர் சிரித்தார்.கிட்டே சென்றார். கிழவன் உட்காருமாறு திண்ணையைத் தட்டவும்,உட்கார்ந்தார்.

“என்னவோ புதுசு புதுசா நெல் ரகங்கள கொண்டாந்து இங்க பயிர் பண்ண வெக்கறீங்க. ஒண்ணும் புண்ணியமில்லை .மூட்டைமூட்டையாய் உரமும்,மருந்தும் கொட்டி கொட்டி, கிழவி புள்ளை பெத்த கதையாப் போச்சுது. சவலைப் புள்ளையாப் போயி சோறு பழையதுக்கு தாங்காம நொசநொசன்னு போவுது.. எங்க காலத்தில எந்த மருந்தைக் கண்டோம்?,எந்த உரத்தைக் கண்டோம்?.சம்பா பயிறு இடுப்பு உசரத்துக்கு தழையத் தழைய நிக்கும். இப்ப..?. அடி உசரத்திலேயே தலை சாய்ஞ்சி கெடக்குது..”—–ஆபீஸர் சற்று சுதாரித்தார். கிழவன் சற்று விவரவாளி போல.

“பெரியவரே! உன் காலத்துக்கும்,என் காலத்துக்கும் நிறைய வித்தியாசம். தளைக்கு இருபது மூட்டை அறுத்தாலே அன்றைக்கு சீந்துவாரில்லை. இன்னிக்கு அறுபது மூட்டை அறுத்தாக்கூட பத்தல.. ஜனங்க…ஜனங்க…பெருத்துப் போச்சில்ல?.” அப்பாடா கெழவன் வாயை அடைத்தாயிற்று..

“ஆங்! அஞ்சி புள்ள பெத்துப்புட்டா திருடி தின்னுவீங்களோ?.”

“இதுல என்னய்யா திருட்டு?.”

“பின்னே? மண்ல இருக்கிற சத்தையெல்லாம் இன்னிக்கே உறிஞ்சியெடுத்து, அம்பது,அறுவது மூட்டையின்னு அறுத்து தின்னுப்புட்டா, அடுத்த தலைமுறை என்னய்யா செய்யும்?. அவங்க பாகத்தையும் சேர்த்துதானே திருட்றோம்?..”

“அது கிடக்கட்டும். எத்தினி ஏக்கரா வெச்சிருக்கீங்க?.”

“இஞ்சிமோட்டாண்ட நாலு ஏக்கரா கொல்லைமோடுப்பா.எனுக்கு ஒரேபுள்ள. தெய்வத்துக்கு பொறுக்கலியே. மூணு புள்ளங்களை பெத்து எந்தலையில கட்டிப்புட்டு, கிடந்து பட்றா கிழவான்னு போய் சேர்ந்துட்டான்யா.”—குரல் நடுங்க, கண்களில் நீர் கோர்த்தது கிழவனுக்கு..ஆபீஸர் சற்று நேரம் மவுனமாக இருந்தார்.

“ஐயோ பாவமே! பெரியவரே! உங்களுக்கு ஒரு யோசனை சொல்லட்டுமா? உன் கொல்லையிலே கிணறு வெட்டி பம்ப்செட் போடுங்களேன். லோன் தர்றோம்.எண்பதாயிரம் சேங்ஷன் ஆகும்.நான் ஏற்பாடு பண்றேன்..”

“கடனா? வாணாஞ்சாமி.”

“அட! அதில பதினாறாயிரம் மான்யம்யா,தள்ளுபடி. மிச்சம் அறுபத்தி நாலாயிரத்தை பதினைஞ்சி வருசத்தில கொஞ்சம் கொஞ்சமா கட்டினாப் போதும். பேரன்களுக்கு ஒரு வழியைக் காட்டிட்டோம்னு நீ நிம்மதியா கண்ணை மூடிடலாம்.என்ன?.”

“இந்த வயசில கெணறு தோண்டி…என்னால ஆவுமா?.”—கதவோரம் நிழலாடியது.,மருமகள்.

“வர்ற லெச்சுமிய வாணான்னு சொல்லிடாத மாமா.”

“சரி ரெண்டுபேரும் நல்லா யோசனை பண்ணி சொல்லுங்க நாளைக்கு வர்றேன்.. அதில ஒரு விஷயம் இருக்கு. லோன் போட்றதுன்னா நீ ஒரு எட்டாயிரத்த புரட்டணும். அத போஸ்ட் ஆபீஸில சிறுசேமிப்பில அஞ்சி வருஷத்துக்குப் டெப்பாசிட் பண்ணணும்.. அப்பத்தான் சேங்ஷன் ஆகும். சும்மா இல்லைய்யா, போட்ற துட்டுக்கு வட்டி உண்டு.”

புழுதி ஓட்டி விறை விட்டுட்டு ஆபீஸர் போய்விட்டார்.தங்குமா?.முளைச்சி தானே ஆவணும்?.மாமனாரும், மருமவளும் அன்றைக்குப் பூரா பேசிப் பேசி, தூக்கம் வருமா?, யோசனை மேல் யோசனை. கற்பனையில் கிணறு வெட்டினார்கள். நிலத்தைச் சுற்றி ஐம்பது தென்னை மரங்கள், ஊடே தேக்குக் கன்றுகள். ஷெட்டைச் சுற்றி மா வும்,கொய்யாவும்,சப்போட்டாவும், நிலத்தாண்ட போறப்ப பறிச்சித் தின்னலாம். மூன்று போகம் அமோக விளைச்சல்.

“”சேலத்துக்காரவங்க கிட்ட மொத்தமா பேசி வுட்ரு மாமா..”

“அட எவடீ இவ?நாளைக்கி எட்டாயிரம்னானே,எங்க போறதாம்?.”

“இந்தா மாமா! இந்த ஒரு ஜதை வளையலை வித்துப்புடு. அவங்களே போனப் பெறவு இனிமே இத போட்டுக்கிட்டா குலுக்கப் போறேன். மருமவளை நினைக்கும் போது கிழவனுக்கு உள்ளேயும் போகாம, வெளியேயும் துப்ப முடியாம, தொண்டைக்குள்ளே சிக்கிக் கொண்ட வேதனையாய்….பய புள்ளைக்கு என்ன அவசரம்?. எதிலியும் அவசரந்தான். எண்ணி அஞ்சி வருஷத்தில சோலி தீர்ந்தது, நீ கெடந்து பட்றா கெழவான்னு போயிட்டானே.மருமவ பாவம், இப்பத்தான் வாலிபம் வயசு. இவ வாழ்க்கையை இப்படி மறுத்துப் போட்டானே கடவுள். சின்ன வயசு.வேற எங்கனமாவது ரெண்டாந்தாரமா கட்டி வெச்சிப்புடலாந்தான்,ஊருல உலகத்தில நடக்கிறதுதான். ஆனா பேரப்புள்ளைங்க கதி?, நமக்கோ அந்திமக் காலம்.

வளையல் வித்த பணம் போஸ்ட் ஆபீஸுக்குப் போய்விட்டது. நல்ல நேரம் பார்த்து, கடவூள் மேலே பாரத்தைப் போட்டுட்டு, அப்ளிகேஷன்ல கையெழுத்துப் போட்டார். ஒரு வாரம் கழிச்சி ஆபீஸுக்கு வரச் சொல்லிவிட்டு லோன் பாரத்துடன் ஆபீஸர் போய்விட்டார். கிழவனைப் பார்றா என்று ஊரில் எல்லோரும் மூக்கின் மேல் விரலை வைத்தார்கள்.ஒரு வாரம் கழித்து கிழவர் கிளம்பினார்.அன்றைக்கு காலையிலேயே வெங்காயம் கடிச்சிக்கிட்டு ஒரு சொம்பு கூழை குடிச்சிட்டு போன கிழவன் மூன்று மணி பஸ்ஸில் சோர்ந்து போய் வந்தார்..

“அடி பாவிப் பொண்ணே! வாணாண்டீன்னு சொன்னேனே கேட்டியா?. அந்த அக்ரி பயலை மாத்திப்புட்டாங்களாம். நாளைக்கு வரச் சொல்லியிருக்காங்க பார்ப்போம்..”—-உட்கார்ந்தார். மருமகள் அதிர்ச்சியுடன் அவரையே பார்த்துக் கொண்டு நின்றாள்.

“கவர்மெண்ட்டு காரன்லாம் ஏமாத்துக்காரப் பயலுவதான். எத்தினி பயலுவளை பார்த்திருக்கேன்?. இவன் என்னமோ அக்கறையாப் பரிஞ்சிக்கிட்டு வந்தானேன்னு ஏமாந்துப்புட்டேன். ஜனங்களோட பணத்த போஸ்ட் ஆபீஸில சேமிப்போ என்ன எழவோ?,அதுல கட்டவைக்கணும்னு அவனுக்கு நிர்பந்தமாம்.. அரசாங்க உத்திரவாம். பார்த்தியா என்னா எத்தா நம்மள சிக்க வெச்சிப்புட்டான்?..’

“ஐயோ! காளியாத்தா! இந்த முண்டச்சி பாவத்தில விழுந்தானே பாவி வெளங்குவானா?. பாவீ! ஐயோ!.”

“அடச்சீ! ஒப்பாரி வெக்காத. இந்த சுப்பன் யாரு?. கெயவன்னு பாக்கறியா? வுடமாட்டேன். அவன் கோலத்தில நுழைஞ்சா, நான் தடிக்குல பாய்வேன். லோனை வாங்காம வுடமாட்டேண்டீ தெரிஞ்சிக்கோ.”—-தன் நரைத்த மீசை மேல் கை போட்டார். ஆனால் ஜம்பமாய் மீசைமேல் கை போட்டது தப்பு என்று சீக்கிரத்திலேயே அவர் புரிந்துக் கொள்ள வேண்டி வந்தது. நாளைக்கு நாளைக்கு என்று நாலு மாசம் போல் இழுத்தடித்தார்கள். சீக்கிரத்திலேயே துவண்டு போனார். இவர் ஜம்பம் எதுவும் சாயவில்லை. இது போ ல எத்தனை வெடாசுக்கு தண்ணி காட்டியிருப்பார்கள்.?. இது கொசு.

அப்பப்பா…நாற்காலிக்கு நாற்காலி லஞ்சம்டா சாமீ. எத்தனை படிகள்?. வில்லங்க சர்டிபிகேட்,என்ஜினியர் சர்டிபிகேட்,இடத்தை பார்வையிட்ட அதிகாரியின் சர்டிபிகேட், இப்படி படிப்படியாய் , என்னத்த சொல்ல? படிக்குப்படி லஞ்சம்தான்.,ஐந்நூறு ஐந்நூறாய்… திருத்தணிக் கோவில் படியோரத்து திருவோடுகள்தான் நினைவுக்கு வருகிறது..கிழவருக்கு இப்ப ஊரைச் சுற்றிக் கடன்,ஐந்நூறு ஐந்நூறாய். அன்றாடம் கிழவன் பஸ் ஏறி இறங்கி, ஏறி இறங்கி….அன்றைக்கு தாளமுடியாமல் ஆத்திரமும்,இயலாமையுமாய் வந்து கண்கலங்கி நின்றார்..

“என்னாச்சி மாமா?.”

“என்னத்த சொல்றது?.ஆபீஸர் கடைசியாய் இப்ப மூவாயிரம் கொடுத்தாத்தான் சேங்ஷன் பண்ணுவேன்றான்.”

|மருமவள் திகைத்து நின்றாள். ஊரை சுற்றிக் கடன். இனிமே எங்க போறது.?.யார் குடுப்பா?.ஐயோ! காலை வெச்சிட்டோமே.,இனிமே திரும்ப முடியாதபடிக்கு பணத்தை தாரைவார்த்துட்டு நிக்கிறோமே.ராத்திரி முழுக்க இரண்டு பேரும் சரியாக தூங்கவில்லை. மறுநாள் கிழவனிடம் பணத்தைக் கொண்டுவந்து கொடுத்தாள்.

“இம்மாந்தொகை ஏதுடீ உனக்கு?.”

“தப்பா பேசாத மாமா! நாந்தான் கம்மல்,ஜிமிக்கியை,மெத்தவூட்டுக்காரி கிட்ட வித்துப்புட்டேன்.. போனாபோவுது. இன்னிக்கு கைல,கால்ல விழுந்து, எப்படியாவது வேலையை முடிச்சாந்துடு.” —- கிழவர் ஓரை,ராகுகாலம்,எமகண்டம், பார்த்து கிளம்பினார்.

“பெரியவரே! உன்கிட்ட பணம் வங்கிட்டேன். என் வேலையை கரெக்டா முடிச்சிட்டேன்.சரியா?. ஃபைல் ரெடி. நீ போயி தாலுக்காபீஸ்ல சிறு விவசாயி சர்டிபிகேட் வாங்கியாந்துடு..”—-கிழவருக்கு திக்கென்று இருந்தது.

“இப்ப பணம் கைக்கு வராதா சாமீ?.”

“சரியாப்போச்சி. இன்னும் நிறைய வேலை பாக்கி இருக்கே. எண்பதாயிரம்யா.சும்மாவா?.

கிழவர் வெளியே வந்தபோது கண்களை இருட்டிக் கொண்டு வந்தது.கம்மல்,ஜிமிக்கி போனதோடு, எல்லா கஷ்டங்களும் விடிஞ்சதுன்னு நெனைச்சேனே.இன்னும் எவனெவன் காலைப் பிடிக்கணுமோ.?.ஈஸ்வரா!. சிறுவிவசாயி சர்டிபிகேட் வாங்கறது, அது பரமபதம் விளையாட்டு மாதிரி.பணம் இருந்தால் அதுதான் ஏணி. தாயம் உருட்ட உருட்ட, அது மேலே கொண்டுபோய் விட்டுவிடும்.. பணம் இல்லையென்றால், என்ன உருட்டு உருட்டினாலும் காளிங்கன் ஸர்ப்பம் ஆளை கீழே தள்ளி ஆரம்பித்த இடத்தில் விட்டுவிடும். அப்படித்தான் ரெவின்யூ இன்ஸ்பெக்டர் கிட்ட இரண்டு வாரமாக நடக்கிறார்.

அவன் ப்ளாட்டிங் பேப்பர். சிரிச்சி சிரிச்சிப் பேசியே உறிஞ்சி எடுத்துக் கொள்வான். அவன் ஒவ்வொரு நாளும் இது தப்பு அது தப்பு, இது சொள்ளை, அது நொள்ளை…,இப்படியே சொல்லிக்கிட்டு வர்றான். இன்றைக்கும் ஆர்.ஐ.கிட்டே உப்பு பெறாத பதிலைக் கேட்டு விட்டு, துயரத்துடன்,அழமாட்டாத குறையாய், வெளியே சிமெண்ட் பெஞ்சில் வந்து உட்கார்ந்தார். விடியற்காலை குடித்த நீராகாரம் எப்பவோ காணாமல் போய், வயிறு பொருமியது.

“யோவ்!அவன்கிட்ட ஐந்நூறை வெட்டுய்யா முடிஞ்சிடும்.புரியாத மனுசனா இருக்கியே.”—டவாலி

“புரியுதுய்யா, இனிமே விக்கிறதுக்கு மருமவ கிட்ட ஒண்ணுமில்லையே, என்ன பண்ணுவேன்?..”—- கிழவர் பெருமூச்சு விட்டார். என்ன பண்றது காலை சுற்றிய சனியன். மறுநாள் மேலத்தெரு ராமப் பிள்ளை உபயத்தில் ஆர்.ஐ. கணக்கை செட்டில் பண்ணி முடித்தார்.

” பெரியவரே! ஃபைலை தாசில்தாருக்கு அனுப்பிட்டேன்.நீ நாளை மறுநாள் தாசில்தாரைப் பாரு.”

” ஐயா! கெழவன் என்னால முடியாதுய்யா,நடக்க தெம்பில்ல, அஞ்சிமாசமா அலையறேன். உங்க புள்ள குட்டிங்களுக்கு புண்ணியம் நீங்களே வாங்கிக் குடுத்துடுங்க சாமீ.”—-கையெடுத்து கும்பிட்டார். ஒரு நிமிடம் கிழவனை ஆழம் பார்த்த ஆர்.ஐ., இரு வர்றேன்னிட்டு ஃபைலுடன் தாசில்தார் அறைக்குள் நுழந்தார். பின்பு ஒரு பத்து நிமிஷம் கழிச்சி வந்தார்.

“தாசில்தார் ஐயாயிரம் கேட்கிறார்யா.”

கிழவருக்கு குபீரென்று வேர்த்தது. வயிறு கலவரமாய் சுருண்டுக் கொள்ள, லேசாக மயக்கம் வரும்போல் இருந்தது.ஐயோ ஐயாயிரத்துக்கு எங்கே போவேன்?.அழுகை வந்தது.

“எங்கிட்ட சல்லிக்காசு இல்ல சாமீ!. சிவனேன்னு கெடந்தோம். மருமவ கூலிதான் ஜீவனம்.. அரை வயிறு கஞ்சிதான்னாலும் குடிச்சிப்புட்டு நிம்மதியா கெடந்தோம். பாவி கெடுத்தானய்யா. கெணறுன்னான்,பம்ப்செட்டுன்னான்,. மாட்டி வுட்டுட்டான்யா. சனீஸ்வரன் லோனே வாணாம்னு உதறிடலாம்னா,அத்த வித்து, இத்த வித்து துட்ட இறைச்சிட்டோமே.. எல்லாம் ஆயி திரண்டு வர்ற வேளையிலே இப்பிடி குண்டை தூக்கிப் போட்றீயே.”—-கிழவன் ஓவென அழுதான். ஆபீஸில் எல்லாரும் வேடிக்கைப் பார்க்க, ஆர்.ஐ.கிழவரை மரத்தடிக்கு இழுத்துக் கொண்டு சென்றார்.

“யோவ்! என்னமோ ஒப்பாரி வெக்கிறியே. உங்கப்பன் வூட்டு சொத்தைய்யா கேட்டோம்?. சுளையா பதினாறாயிரம் மான்யம் வருதில்ல?.அதுல குடுக்க கசக்குதா?.”

“ஐயோ! இருந்தா வஞ்சனை இல்லை,எங்கிட்ட இல்லையே சாமீ!.”

“சரி…சரி..நான் ஒண்ணு பண்றேன். தாசில்தாருக்கு நானே பொறுப்பு நிக்கிறேன்.பணம் கைக்கு வந்தவுடன் குடுத்திடணும். மாறி பேசக்கூடாது.அந்தாளு சுடு தண்ணி. புரியுதா?.—–கிழவர் அவன் கையைப் பற்றிக் கொண்டார்.

“அப்பிடியே செய்யுங்க சாமீ.,கோடி புண்ணியம். துட்டு வந்ததும் வூட்டுக்குக்கூட போவல, நேரா வந்து பூ மேல வெச்சி குடுத்திட்டுப் போறேன்.”

“சரி…சரி..இனிமே நீ எங்கியும் அலைய வேண்டாம்.சரியா?. சேங்ஷன் வாங்கிக் கொடுக்கிறது வரைக்கும் நான் பார்த்துக்கறேன். நீ செக்கை வாங்க வந்தால் போதும். இன்னும் நான் நிறைய வேலை செய்யவேண்டியிருக்கு.அதுக்கு என்னை நீ தனியா கவனிச்சிடனும்.என்ன?.”

கிழவர் தலையாட்டிவிட்டுச் சென்றார்.

“பொணந்தின்னிப் பசங்க.மான்யம்…மான்யம்.,மான்யம்ன்றது ஏழைபாழைங்களுக்கு இல்ல, இவனுங்க கொடலுக்குத்தான். த்தூ!. அடக்கி வைத்திருந்த ஆத்திரமெல்லாம் ஒன்று திரள, கொத்தையாய் காறித்துப்பினார்.

ஆயிற்று லோன் சேங்ஷன் ஆகிவிட்டது.முழுசா எண்பதாயிரம்.அன்றைக்குத்தான் கலெக்டர் வந்து செக்கைக் கொடுக்கப் போகிறார்.பெரிய விழாவாக மேடை அலங்காரம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். கிழவர் மருமவ, பேரப் புள்ளைகளோடு வந்திருந்தார்..ஆடு லோன்,மாடு லோன்,டிராக்டர் வாங்க லோன், கிண்று வெட்ட லோன்… எல்லா லோன்தாரர்களும் கீழே கூட்டமாய் உட்கார்ந்திருக்க, கிழவர் குடும்பமும் அதில் சேர்ந்துக் கொண்டது.

மீட்டிங் ஆரம்பித்தது. ஏழைப்பங்காளன்,பாரி,காவல் தெய்வம்,கருணைவடிவம்,விடியல், என்றெல்லாம் முதலமைச்சரை புகழ்பாடி….,இதெல்லாம் இப்போது மேடை கட்டாயம். கிழவர் பெயரை யாரோ மைக்கில் சொல்ல, எழுந்தோடினார்..கலெக்டர் புன்சிரிப்புடன் கிழவரிடம் செக்கைக் கொடுத்தார்.

“பெரியவரே! என்ன இந்த வயசிலியா கிணறு வெட்டப் போறீங்க?.”

“ஐயா!.”—-நா தழுதழுத்தது,பேச்சு வரவில்லை,கண்ணீர் தளும்பியது.

“எனுக்காக இல்லீங்கய்யா. மூணு பேரப் புள்ளைங்களுக்கு என்னை காவலாக்கிட்டு செத்துட்டான் எம்மவன்.”—அங்கிருந்தே மருமவளையும், பேரப்பிள்ளைகளையும் காட்டினார்..தாசில்தார் ஓடிவந்தார்..

“ரொம்ப பாவம் சார். இந்த தள்ளாத வயசில, இவருக்கு குடுன்பச் சுமை. அதனாலதான் ரெகமண்ட் பண்ணேன் சார்..”

“குட்!”—-கலெக்டர் தாசில்தாரை சிலாக்கியமாகப் பார்த்தார். குளிர்ந்தது.

”நல்லா வாழ்ந்த குடும்பங்கய்யா. இன்னிக்கு கஷ்ட ஜீவனம். பர்ஸனலா எனக்குத் திரியும் ஐயா.”—ஆர்.ஐ. தன் பங்குக்கு வாலையாட்டி கொண்டிருந்தார்..

“பெரியவரே! இந்தப் பணத்தை நல்லபடியா யூஸ் பண்ணிக்கோங்க. உங்களை மாதிரி ஏழைகளுக்கு தரணுன்றதுதான் அரசாங்கத்தோட திட்டம்.அதனாலதான் பதினாறாயிரம் ரூபாய் மான்யமா தள்ளுபடி பண்றாங்க.”

கிழவருக்கு குமட்டிக் கொண்டு வந்தது. எல்லாம் முடிந்தது.செக்கை பேங்கில் மாற்றி, ஐயாயிரத்தை ஆர்.ஐ. கிட்ட கொடுத்து விட்டு,அவனுக்குத் தனியா ஐந்நூறு என்று பிடுங்கிக் கொண்டான்.மிச்சத்தை பையில் சுருட்டி அக்குளில் வைத்தார். தன் உறவுகளோட நடந்தார்.பட்ட கடனையெல்லாம் பைசல் பண்ணா,மிச்சம் என்ன தேறுமோ?. கவலையாய் வந்தது. மனசு ஆறவில்லை. வாங்கறது கடன், திருப்பி கட்டியாவணும். இடையில இந்தக் கம்மனா….…!மான்யம்..மான்யம்னு சொல்லிச் சொல்லியே ரொக்க ரொக்கமா சாப்பிட்டாங்களே. தெய்வம் குடுத்தாலும் பூசாரி புடுங்கின கதையாப் போச்சே.

“எத்தினி பாடு?,எம்மாம் அலைச்சலு?.கிராமத்தான்னா ஏமாளி.”

“வுடு மாமா.நமக்கு இட்டதுதான் கெடைக்கும்.”

தாலுக்காபீஸ் வாந்தது, நின்றார்.அந்தக் கட்டடங்களைப் பார்த்து காரித் துப்ப எத்தனித்தவர், நிதானித்தார். கலெக்டர் இன்னமும் இருக்கிறார். இங்கிருந்தே சன்னல் வழியாக பார்க்க முடிகிறது.தாசில்தார் ஃபைலுங்கையுமாய் ஓடிக் கொண்டிருக்கிறார். வி.ஏ.ஓ.க்கள்,ஆர்.ஐ.கள்,கிளார்க்குகள், என்று கும்பலாய் நின்றுக் கொண்டிருக்கிறார்கள். எல்லோரிடமும் ஒரு பரபரப்பு. கிழவனுக்கு ஆத்திரம்.ஒரு நிமிஷம் என்ன யோசித்தாரோ. மருமகள் கூப்பிடக் கூப்பிட,விடுவிடுவென்று நடந்து கலெக்டர் இருந்த அறைக்குள் நுழைந்து விட்டார். வேலை மும்முரத்தில் இவரை யாரும் கவனிக்க வில்லை.

“ஐயா!.”—–கூனிக்குறுகி நின்று கும்பிட்டார். நிமிர்ந்த கலெக்டர் ஒரு நொடி இவர் யார்? என்று யோசித்து, நினைவு வந்தவராக

“என்ன பெரியவரே! பணம் வாங்கிட்டீங்களா?.”

“இதோ!.”—–பையைப் பிரித்து மொத்த பணத்தையும் அவர் டேபிள் மீது கொட்டினார். ஐந்நூறு,நூறு,ஐம்பது, ரூபாய் நோட்டுக் கட்டுகளும்,சில்லரைக் காசுகளும் சிதறின. கலெக்டருக்கு சூடு ஏறியது.

“ஏய்!…ஏய்!…என்ன இது மடத்தனம்?.என்ன தைரியம்?எடு முதல்ல.க்விக்.!.”—-கிழவர் தடதடவென ஆடினார்.

“ஐயா…ஐயா…!தப்பா நெனைக்காதீங்க ஐயா.இந்த லோன் வாங்க ஆறு மாசமா அலைஞ்சேன். இங்க தோட்டியிலயிருந்து தொண்டைமான் வரைக்கும் எல்லாருக்கும் கரெக்டா பணம் குடுத்துட்டேன். மருமவ வளையலை வித்தேன், கம்மலை வித்தேன்,ஜிமிக்கி போச்சி. போவட்டும். அறுத்து கெட்டவளுக்கு இனிமே அதெல்லாம் எதுக்கு?.”—மேலே வார்த்தை வராமல் அழுதார்.

“எல்லார்க்கும் குடுத்துட்டேன்.நீங்கதான் பெரிய அதிகாரியாம். நீங்க கையெழுத்து போட்டுத்தான் எனுக்குப் பணம் கெடைச்சிதாம். உங்களுக்கு எம்மாந்தர்றதுன்னு தெரியலய்யா.கோச்சிக்காதீங்க சாமீ!,எம்மாந்தரணுமோ?. அதை எடுத்துக்கிட்டு மிச்சத்தை தந்தீங்கன்னா போதும். அதில கெணறு வெட்டி, எம்பேரனுங்கள கரை சேர்த்துட்டு,நிம்மதியா கண்ணை மூடுவேன்.”—–கலெக்டர் எதுவும் பேசவில்லை. முகம் இறுக்கமாக இருந்தது.

“பெரியவரே! அப்படி சேர்ல உட்காருங்க..”

“வாணாம்யா!.”—கூனிக்குறுகி கையால் மறுத்தார்..

“ச்சூ!. கலெக்டர் சொல்றேன் உட்காருங்க. மொதல்லயிருந்து யார் யாருக்கு எவ்வளவு குடுத்தீங்கன்னு ஏதாவது குறிப்பு வெச்சிருக்கீங்களா?.”

“இருக்குங்க சாமீ! மருமவளுக்குக் கணக்கு சொல்லணுமே.”

காலிங் பெல் அலறியது..

“எல்லா ஸ்டாப்ஸையும் உடனே இங்கே வரச் சொல்.”

ப்யூன் ஓடினான்.அடுத்த நிமிடம் எல்லோரும் பதற்றத்துடன் ஆஜரானார்கள். கிழவனை கலெக்டர் பக்கத்தில்,அதுவும் சேரில் பார்த்ததும், எல்லோருக்கும் அதிர்ச்சி.. வியர்த்துக் கொட்டியது.திருதிரு வென்று விழித்துக் கொண்டு நின்றார்கள். தாசில்தார் கர்ச்சிப்பால் திரும்பத் திரும்ப வியர்வையை துடைத்துக் கொண்டிருந்தார். வாய் பிசறியது.ஆர்.ஐ. எல்லோருக்கும் பின்னால் நின்றான்..

“லுக்! இந்தப் பெரியவர் கிட்ட யார் எவ்வளவு வாங்கினீங்க? என்ற லிஸ்ட் இதோ இருக்கு.உங்கள்ல ஒருத்தருக்கும் வெட்கம்,மானம் , இல்லை.சே! நான் வெட்கப் பட்றேன். திஸ் ஈஸ்தி வார்னிங். உங்களுக்கு ஒரு மணி நேரந்தான் டைம். அதுக்குள்ளார வாங்கின பணம் மொத்தமும் பைசா சுத்தமா என் டேபிளுக்கு வரணும்.. இல்லைஎன்னைப் பத்தி தெரியுமில்லே?.உங்க தவறுகளுக்கு சாட்சி இதோ ரெடியா இருக்கார்.ஒழிச்சிடுவேன்.ஜாக்கிரதை..”

“ஐயா!. நானு இங்க வந்தது தப்புங்க. அவங்கள ஒண்ணுஞ் செஞ்சிடாதீங்கய்யா. அவங்கதான் இந்த கிழவன் மேல இரக்கப் பட்டு, லோனுக்கு ஏற்பாடு பண்ணாங்க சாமீ.”——கலெக்டர் கிழவரை கனிவுடன் பார்த்தார். சே! ஹவ் இன்னொஸெண்ட் தான் ஏமாறுவதே தெரியாமல்..கலெக்டருக்கு பற்றிக் கொண்டு வந்தது..

“ஆல் ஆஃப் யூ கெட் அவுட்.. என் எதிரிலேயே நிக்காதீங்க.மைண்ட் இட் ஒன்லி ஒன் அவர் டைம்.”

எல்லோரும் ஓடினார்கள். இது எப்படித்தான் நடந்ததோ?அரை மணி நேரத்தில் எல்லாப் பணமும் அரண்டு புரண்டு வந்து விட்டது.. சும்மாவா?. இந்த கலெக்டர் நெருப்பாச்சே.. போகிற இடமெல்லாம் சஸ்பென்ஷனும், இங்கிரிமெண்ட் கட்,சில இடங்களிலே டிஸ்மிஸ்ஸும் கூட நடந்திருக்கு..எல்லாப் பணத்தையும் கட்டாய் கட்டி,பையை கிழவரிடம் கொடுத்தார். கிழவருக்கு பேச்சு வரவில்லை.கண்ணீர் திரையிட்டது.

“ஐயா! நீங்க சின்ன வயசு குத்தமில்ல.”—-குனிந்து அவர் கால்களைத் தொட, கலெக்டர் கால்களை இழுத்துக் கொண்டார்..

“போயிட்டு வாங்க பெரியவரே! டிரைவர்! பெரியவரை பத்திரமா அவர் வீட்டில விட்டுட்டு வா!.ஜாக்கிரதை கையில பணம் வெச்சிருக்கார்..”

மருமகளும்,பேரப் பிள்ளைகளும் விதிர்த்து நிற்க,  எல்லோரையும் ஏற்றிக் கொண்டு கார் பறந்தது. கிழவர் மருமகளைப் பார்த்து நமட்டுச்சிரிப்பு சிரித்தார்.

***இந்த சிறுகதை 1995ல் நடைபெற்ற குமுதம்-ஏர் இந்தியா இலக்கிய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றதாகும். வெற்றியின் பலன் பத்து நாட்கள் சிங்கப்பூர் உல்லாசப் பயணம்.

Print Friendly, PDF & Email

2 thoughts on “வியூகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *