கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: April 27, 2014
பார்வையிட்டோர்: 12,558 
 
 

அர்த்தத்தோடுதான் அழைக்கிறார்கள்; கோலாலம்பூரை மாநகர் என்று.

மணி காலை பதினொன்று இருக்கும். இன்றைக்குப் பிழைப்பைப் பார்க்கப் புறப்பட்டேன்.

கோலாலம்பூரில் ராபிட் கே.எல். பஸ் இருக்கும்வரை எனக்கு எவ்வளவோ வசதி. நாள் முழுக்க நகரத்தில் பெரும்பகுதியைச் சுற்றினாலும் இரண்டு வெள்ளிக்குமேல் போகாத பஸ் கட்டணம். எனக்கு வேலை நிரந்தரமான ஒரே இடத்தில் இல்லை. இங்கும் அங்கும் அலைய வேண்டியிருக்கும். அதிக அவசரம் என்றால் ஓட வேண்டியதுகூட இருக்கும்.

மோட்டார் சைக்கில் வாங்கியிருக்கலாம்தான். ஆனால், வாங்காததற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, இன்னும் மோட்டார் வாங்கும் அளவுக்கு பணம் புரட்டவில்லை. இரண்டாவதைக் காலம் வரும்போது சொல்கிறேன்.

பஸ் பாசார் செனியில் நின்றது. இன்றைக்கு நிலவரம் எப்படி என்று பாசார் செனி எல்.ஆர்.டி. ஸ்டேஷன் மேலே ஏறிப் பார்த்தேன்.

வழக்கமான கூச்சலும் இரைச்சலுமாக இருந்தது. இன்று இங்கே கூட்டம் கொஞ்சம் அதிகம்தான்.

எல்.ஆர்.டி. டிக்கெட் கௌண்டர் வரை போய் நோட்டமிட்டுத் திரும்பினேன். கௌண்டரிலேயே எல்.ஆர்.டி. போல நீண்ட வரிசை கட்டிக் கொண்டு நின்றிருந்தார்கள் அவசரக்காரப் பயணிகள்.

சுற்றும் முற்றும் பார்த்தேன். மலாய்காரர்களுக்கும் சீனர்களுக்குமிடையே நம்மவர்கள் கொஞ்சம் குறைவுதான் இங்கே!

மலாய்காரர்களையும் சரி, சீனர்களையும் சரி, எனக்கு அறவே பிடிக்காது. நம்மவர்கள்தான்! நான் வேலை செய்வதுகூட நம்ம தமிழினத்தை நம்பித்தான்.

இன்று இங்கு நமக்குச் சரிபட்டு வரும் என்று தோன்றவில்லை. நடையைக் கட்டினேன்.

புடுராயா பஸ் ஸ்டேஷன்.

பஸ்களின் வெப்பம் உச்சி வெயிலின் சூட்டை மேலும் கூட்டிக் கொண்டிருந்தது. ஏறக் குறைய ஒரு மீட்டர் அகலமே கொண்ட அந்தப் பழைய இரும்புப் படிகளில் ஏறி பிளாட்பாரத்திலிருந்து மேலே வந்தேன்.

வலது பக்கம் திரும்பினால் வரிசை வரிசையாய் சின்னச் சின்னக் கடைகள். வெளியே உள்ளதைவிட இருபது முப்பது சென் விலையேற்றி விலைவாசியையே நிர்நயிக்கும் வியாபாரிகள், வாடிக்கையாளர்களை வாருங்கள் வாருங்கள் என்று அழைத்தாலும் வரமாட்டார்கள் என்று கையைப் பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்து வந்து வியாபாரம் செய்துகொண்டிருந்தார்கள்.

இடது பக்கம் திரும்பினால், “தைப்பிங், ஈப்போ, பினேங், மெலாக்கா, ஜொகொர் பாரு…” என்று என்று திரும்பத் திரும்பச் சலைக்காமல் கூவிக்கொண்டு டிக்கெட்டை விற்க மும்முறமாய் போராடிக்கொண்டிருந்தான் மலாய்காரன் ஒருவன். அவனுக்கு போட்டியாக கணக்கில் அடங்காத பல பேர் ‘வாக்கி-டாக்கி’யுடன் பயணிகளோடு போராடிக்கொண்டிருந்தனர்.

“ஹ்ம்ம்… பொழப்பப் பாரு!” என்று மனதில் தோன்றியது எனக்கு. “தைப்பிங், ஈப்போ, பினேங், மெலாக்கா, ஜொகொர் பாரு…” என்று கூவிக்கொண்டிருந்தவன் காதில் வந்து கூவ ஆரம்பித்துவிட்டான். “டேய், பெகீலா!” என்று நான் கத்தியதுகூட அவன் காதுகளில் விழுந்ததுவோ என்னவோ? கபடி ஆட்டத்தில் மூச்சு தம் பிடித்து கபடி கபடி என்று சொல்லிக்கொண்டே இருப்பார்களே அதுபோல.

“சே! வந்துட்டானுங்க மொத ஆளா. பஸ் ஏத்தி எங்கயாச்சும் அனுப்பி வைக்கலனா தூங்க மாட்டானுங்க! மூஞ்சையும் ஆளையும் பாரு, திருடனாட்டம்!” என்று கருவிக்கொண்டே புடுராயா பஸ் ஸ்டேஷனின் முன்வாசல் படிகட்டுவழி இறங்கிவிட்டேன். “இந்த இடமும் சரியா வராது போல”.

மேலே மேம்பாலம் கட்டியிருந்தார்கள். அதையும் மதித்துப் பயன்படுத்தி ஒன்றிரண்டு பேர் சாலையைக் கடந்துகொண்டிருந்தார்கள். நான் அதை மதிக்காதவன் பட்டியலில் இடம்பெருபவன். ரோட்டைத் தாண்டி இடது பக்கமாக நடக்க ஆரம்பித்தேன். செவன் இலெவன் கடைதான் அந்த வரிசையின் கடைசி கடை. அதற்குப் பிறகு ஒரு சின்ன ரோடு போகும். அதன் வழி நடந்து இந்தியர்களின் உணவகம் ஒன்றிற்குள் நுழைந்தேன். அடிக்கடி இங்கே சாப்பிட வருவதுண்டு.

மதிய உணவு வேளையும் வந்து வயிற்றுக்கு வஞ்சனை செய்யாமல் சாப்பிட்டாகிவிட்டது. நான் இன்னும் இன்றைய பொழுதுக்கு வேலை செய்த பாடில்லை.

கைகழுவிவிட்டு கடையை விட்டு வெளியே வந்தேன். வலது பக்கத்தில் கோட்டுமலை பிள்ளையார் கோயில்!

“அப்பனே புள்ளையாரப்பா, எனக்கு ஒரு வழி காமிக்கக் கூடாதா!” என்று மூடப்பட்டிருந்த கோயில் கணபதியை வெளியிலிருந்தே வணங்கினேன். பூசாரி கொடுக்கும் குங்குமத்தில் மிதமிஞ்சியவற்றை இந்த மேட்டில் கொட்டுவதுண்டு பக்தர்கள். அதை எடுத்து இரு புருவத்துக்கும் இடையில் குருக்கலாக இழுத்துவிட்டு வந்தேன். எனக்கு சாமி கும்பிட நேரங்காலமும் கிடையாது, சாங்கிய சம்பிரதாயமும் கிடையாது.

எனக்கு ரொம்ப ராசியான இடம், சாதகமான இடம், மஸ்ஜிட் ஜாமேக் எல்.ஆர்.டி. ஸ்டேஷன்தான். புடுராயாவிலிருந்து நடைதூரம்தான். ஆகக் கடைசியாய் போனது இரண்டு வாரங்களுக்கு முன்னால். கிட்டத்தட்ட பாதி மாத இடைவெளி விட்டு இப்போதுதான் மருபடியும் அங்கு போகப் போகிறேன்.

கோலாலம்பூரில் அப்படி என்னதான் நடக்கிறதோ, நடக்கப் போகிறதோ மக்கள் எல்லாரும் காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டதுபோல் ஊர்ந்துகொண்டிருந்தார்கள். நானும் அந்த ஜன நெரிசலில் கலந்து மஸ்ஜிட் ஜாமேக் எல்.ஆர்.டியை அடைந்தேன்.

“டைம் என்னண்ணே ஆச்சி?” என்று பழக்கப்பட்ட குரல் கேட்டுத் திரும்பினேன்; தியாகு நின்றுகொண்டிருந்தான்.

“என்ன? தனியா வேல செய்ய முடியலையா? இங்க இருக்க?” என்றேன்.
“ஆமாண்ணே! புதுசில்லே, அதான். நீங்க இங்க வருவிங்கன்னு தெரியும்; ஆனா இன்னிக்கு வருவிங்கன்னு தெரியாது.

“அதனால என் மடியில கை வைக்கப் பாக்குறியா?” என்று முறைத்ததில் ஒரேடியாக அடங்கிப்போனான் சின்னப்பயல் தியாகு.

“சரி சரி, இன்னைக்கு என்னோட சேந்துக்கோ; நல்லா பாத்துக்கோ. மறுபடியும் நான் உன்ன இந்தப் பக்கம் பாக்கக் கூடாது. நானே இங்க ஒரு தடவ வந்தா ரெண்டு வாரம் இடைவெளி விட்டு பிறகுதான் மறுபடி வருவேன். இடையில நீ புகுந்து எதையாச்சும் சொதப்பிடாத!”

குருபக்தி கொஞ்சம் அதிகமாகவே இருந்தது தியாகுவிடம்.

என்னென்ன எப்போது எப்படி செய்ய வேண்டும் என்ற விவரங்களையெல்லாம் விவரித்தேன் அவனிடம். அவனும் ஆர்வமாய்க் கேட்டுக்கொண்டான்.

“இந்த மாதிரி வேலைன்னா பரவாலண்ணே. ஆனா, நேரடியா குதிக்கிறதுன்னாதான் கொஞ்சம் பதட்டமா இருக்கு,” என்று வழிந்தான்.

“சரி சரி. வளவளன்னு பேசிக்கிட்டு இருக்காம போய் பொழப்பப் பாரு. ஏதாவது பொறி தட்ற மாதிரி இருந்த எனக்குக் ‘கால்’ பன்னு,” என்று சொல்லி அவனை இன்னொரு மூலைக்கு அனுப்பினேன். மஸ்ஜிட் ஜாமேக் எல்.ஆர்.டிக்கு இரண்டு வாயில்கள். ஒன்று வெளிச்சமாக வெளிபுறமாக இருக்கும். இன்னொன்று இருளாக, சற்று உட்புறமாக இருக்கும். நான் பொதுவாக ‘மீன் பிடிப்பது’ இந்தப் படிக்கட்டில்தான்.

இங்குக் கூட்டம் கொஞ்சம் குறைச்சலாகவே இருந்தது. நம்மவர்களைத் தேடிப் பிடிக்க வேண்டியதாய் இருந்தது.

“இவன் வேணா, அந்தப் பொம்பள வசதியாத்தான் இருக்கும்னு நெனைக்கிறேன். ஆனா புறிய வைக்கிறத்துக்குள்ளே போதும் போதும்னு ஆயிடும். அதுவும் வேணா. இந்தாளு வுட்டா என்னையே வித்துருவான் மாதிரியிருக்கு…”

உறுமீன் வரும்வரை வாடியிருக்குமாம் கொக்கு.

எனக்கு உறுமீனெல்லாம் வேணாம். சிறு மீனாயிருந்தாலும் சரியான மீனாயிருந்தால் அதுபோதும். ஒவ்வொருவராய் கணித்து எடைபோட்டுக் கொண்டே இருந்தேன்.

பொறி தட்டியது.

“இவன் ஓ.கே!”

சாம்பல் நிற பனியன்; காலர் இல்லாத சட்டை; ஆள் குள்ளம்; இருந்தால் இருபது வயசு இருக்கலாம்; மூஞ்சப் பாத்தா திருட்டு முழி. புதுசா கே.எல்லுக்கு வந்தவன் போல எல்லாத்தையும் அன்னாந்து பாத்துக்கிட்டே நடந்தான். இவந்தான் சரி.

அவன் படிகட்டு ஏறி நேராக டிக்கெட் கௌண்டருக்குத்தான் போகப்போகிறான். அதற்குள்’

“Boy… boy…”

நான் அழைத்தது தன்னைத்தான் என்று நின்று திரும்பிப் பார்த்தான் பையன்.

“ஐயா, நான் இப்பத்தான் கே.எல்லுக்கு வரேன். கையில இருந்த எல்லாத்தையும் ஒருத்தன் அடிச்சிட்டுப் போயிட்டான். என்னோட கூட்டாளிக்குக் போன் பன்னி நான் வந்துட்டேன்னு சொல்லனும். உங்க போனுல எனக்கு ஒரு ‘கால்’ போட்டுத் தரீங்கலா?” என்றேன்.

“நான் வேணும்னா சில்லரை தரேன். பப்லிக் போன் யூஸ் பன்னிக்கிங்கண்ணே” என்றான் பையன். உஷாராகி விட்டானோ என்னவோ தெரியவில்லை.

நான் விடவில்லை. “அதையெல்லாம் அப்பவே ட்ரை பன்னிட்டேன். அது கெட்டுப் போச்சி. ப்லீஸ் ஐயா, கொஞ்சம் ஹெல்ப் பன்னுங்க” என்று முகம். முழுக்க பரிதாபக் கலையை அப்பிக்கொண்டேன்.

அவன் இன்னும் யோசித்துக்கொண்டிருந்தான்.

“நம்மாளுக்கு நம்மாளே உதவலன்னா எப்படி தம்பி?” கொஞ்சம் செண்டிமெண்டையும் கலந்தேன்.

என்ன யோசித்தானோ தெரியவில்லை. “சரி இந்தாங்கண்ணே. நான் கொஞ்சம் அவசரமா போய்கிட்டு இருக்கேன். சீக்கிரம்ண்ணே!” என்று போனை எடுத்தான்.

அந்த சமயம் பார்த்து ஒரு வயதான சீனன் குறுக்க புகுந்து போனான். தோளில் பழைய சாக்கு மூட்டையைச் சுமந்து சென்றவன் குறுக்கில் நுழைந்தபோது அது என் மேல் பட்டுவிட்டது. எனக்குக் கோபம் மண்டைக்குமேல் ஏறிவிட்டது. சண்டையேதும் போட்டுவிட்டால் பையன் பயந்துவிடுவானோ என்று வந்த கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டேன்.

“போவதற்கு வேறு இடம் இல்லையா’ என்று மலாயில் கத்தினேன். அவன் ஒன்றும் கேட்காததுபோல் போய்க்கொண்டிருந்தான். “கேட்பது விளங்கவில்லையா?” என்று மறுபடியும் கத்தினேன். கண்கள் சூடேறின.

“என்னை வேலை பார்க்கவிடு” என்று மட்டும் சொல்லிவிட்டு நடந்தான்.

“வேலையா? பெரிய்ய்ய கழுட்ற வேலை!” என்று எண்ணிய எனக்கு பிறகுதான் தெரிந்தது அது கழுட்ற வேலையல்ல, பொறுக்குகிற வேலை என்று. குடித்துப் போடப்பட்டிருந்த காலி டின்களைக் குப்பைத் தொட்டிகளிலிருந்து பொருக்கி எடுத்து உதறிவிட்டு தனது சாக்குப்பையில் போட்டுக்கொண்டிருந்தான்.

“இதுதான் வேலையா?” என்று அலுத்துக்கொண்டு அவன் உணரும்வண்ணம் “தூ!” என்று எனக்குப் பக்கத்தில் இருந்த குப்பைத்தொட்டியில் எச்சில் துப்பினேன்.

“அண்ணே, கொஞ்சம் சீக்கிரம்ணே,”

போனில் தியாகுவின் நம்பரை டயல் செய்தேன்; எடுத்தான். “மச்சான், நான் குரு பேசறேண்டா. நான் இப்பத்தான் ஜெயில்லருந்து வெளியாவனேன். இப்ப மஸ்ஜிட் ஜாமேக் எல்.ஆர்.டியிலருந்து பேசறேன். “…(அமைதி)…” அப்படியா? சரி, சரி, நான் வேறாளோட போன்லருந்து பேசறேன். இந்த நம்பருக்கு இப்ப நீ கால் பன்னு.,” என்று சிவப்பு பட்டனை அழுத்தினேன்.

பையனைப் பார்த்தேன். கொஞ்சமாக வேர்த்திருந்தது. வியர்வைத்துளி பட்டு அவன் கழுத்தில் இருந்த சங்கிலி அழகாக மின்னியது.

“ஜெயில்லருந்து வந்தவன்னு சொன்னதக் கேட்டு பயந்துட்டியா?”

“இல்லை,” என்றான் பயத்துடன்.

ரைட். அதுதான் எனக்கு வேண்டும். பயத்தில் அலறி காரியத்தைக் கெடுக்கவும் மாட்டன், பயமில்லாமல் மல்லுக்கட்டவும் மாட்டான்.

“நான் இப்படித்தான்யா, சின்ன வயசுல இருந்தே அடிதடி, சண்டைன்னு வளந்துட்டேன். ஒருத்தன வெட்டிட்டு இப்பத்தான் ஜெயில்லருந்து வரேன். ஜெயில்லருந்து ரிலீசாவறத்துக்குள்ள எழுந்து நடக்கற அளவுக்கு குணமாயிட்டான்! பர்மணண்ட்டா அவன் படுத்தே கெடக்க வைக்கனும்…” என்று வார்த்தைகளை முதலில் ஆயுதமாகப் பயன்படுத்தினேன்.

“என் முதுகுல கைய வச்சுப் பாரேன்” என்றேன். பையன் தயங்கினான். அவனது கையை நானே பிடித்துக்கொண்டுபோய் முதுகில் வைத்துக் காட்டினேன்.
நிச்சயம் தெரிந்திருக்கும் அது கத்தி என்று.!

பையனுக்கு நடுக்கம் ஆரம்பித்துவிட்டது.

சொல்லிவைத்தபடி தியாகு வந்தான். “அண்ணே, நம்ம கைங்க எல்லாம் கரெக்டா பொசிஷன்ல நிக்கிறாங்க,” என்று படிக்குக் கீழே ரோட்டைத் தாண்டி நின்றுகொண்டிருக்கும் வெள்ளை நிற வண்டியைக் காட்டினான்; கண்ணடித்தான்.

“சரி, நீ போய் இந்த வாசல்ல நில்லு” என்று அனுப்பி வைத்தேன். சுற்றி ஆட்கள் நின்றிருப்பதைப்போல் பிரம்மையை உருவாக்கினேன். பையன் இந்நேரம் மருண்டிருப்பான்.

தியாகு போன் செய்தான்; அந்தப் பையனது போனுக்குத்தான்.

“மச்சான், இன்னிக்கு நாம அவன போட்டுத் தள்ளனும். கத்தி வெச்சிருக்கேன். ஒரே வெட்டுதான்…” வார்த்தைகள் நீள நீள பையனுக்கு வெடவெடப்பு ஓங்கி வளர்ந்துகொண்டிருந்தது.

போனைக் கட் செய்துவிட்டு இருட்டுப் படிக்கட்டுவழியாக பேச்சுகொடுத்தவண்ணம் அவனைக் கொண்டுவந்தேன். வரமாட்டேன் என்று அவனால் சொல்லவும் முடியாது, ஓடவும் முடியாது. போன் என் கையில்; ஆயிரம் வெள்ளி தேறும்.

“எங்க போற?”

“யூனிவர்சிட்டி.”

“யூ.எம் ஆ?”

“ம்…”

“மொதத்தான் ஒரு யூ.எம் பையன் மாட்டுனான்… வா, படியில உக்காந்துக்கிட்டு பேசலாம். உன்னமாதிரியேதான் கழுத்துல பட்டையா சங்கிலி போட்டுருந்தான். மரியாதையா கேட்டா கத்த ஆரம்பிச்சுட்டான். இப்ப வந்தானே ஒருத்தன், அவனோட சேந்து என்னோட ‘கைங்க’ மூனு பேரு அவன இழுத்துக்கிட்டு போனாங்க. இந்நேரம் பிச்சியெடுத்து வீசியிருப்பானுங்க….” என்றேன்.

பதில் ஏதும் வரவில்லை.

“நீயும் சங்கிலி போட்டுருக்க…” என்றேன்.

“சங்கிலிய குடுத்தா என்னை விட்டுருவிங்களாண்ணே?”

“மொதல்ல சங்கிலியக் கழுட்டு” என்று சொல்லிவிட்டு போனைத் திறந்து சிம் கார்ட்டை எடுத்து அவன் கையில் தினித்தேன். போன் என் பாக்கெட்டில்.

“எத்தனை பவுன் தேறும்?” என்றேன் சிரித்துக்கொண்டே.

“ஏன்ணே? நம்மாளு, நம்மாளுன்னீங்களே. நமக்கு நாமே இப்படி செய்யிறது நியாயமா?” என்று கேட்டான்.

சங்கிலிதான் கைக்கு வந்துவிட்டதே. கேட்ட கேள்விக்கு பதிலாவது சொல்லிவிட்டுப் போகலாம் என்று தோன்றியது.

“எனக்கு மலாய்காரங்ககிட்டயும் சீனங்ககிட்டயும் திருடப் பிடிக்காது. மலாய்காரங்க நகை போட்டிருந்தாலும் முக்காடு போட்டுருப்பதால எங்களுக்கு ஒன்னும் தெரியாது. சீனனுங்க கொழுத்த பணக்காரங்களா இருந்தாளும் நகைநட்ட ஒடம்புல மாட்டிக்கிட்டு சுத்தறதப் பாக்கறதே அபூர்வம். இதுல நம்மாளுங்கதான், சோத்துக்கே வழியில்லனாலும் பந்தாவுக்குக் கொறச்சல் இல்லாம பட்டை பட்டையா போட்டு மினுக்கிக்கிட்டு வருவாங்க. நீயே சொல்லு, நாங்க எங்க போவோம்?” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஒரு பெண்மணி கழுத்திலும் கையிலும் காதுகளிலும் ஜொலிக்க ஜொலிக்கக் கடந்துச் சென்றாள்.

“சே! உன்னக் குறி வச்ச பதிலுக்கு இவள குறி வச்சிருந்தாலாவது இன்னிக்குப் பொழப்பு அமோகமா இருந்திருக்கும்” என்று சலித்துக்கொண்டேன்.

எழுந்தேன்.

“போலீசுக்குப் போனே!!!” என்று மிரட்டினேன்.

இல்லை என்பதுபோல தலையை அசைத்து நடையைக் கட்டினான் பையன்.

சங்கிலியைப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு அந்தப் பெண்மணி எங்கே என்று தேடினேன்.

வெளிப்படிக்கட்டு வழியாக வெளியேறிக்கொண்டிருந்தாள். அவள் பின்னால் தொடர முயன்றேன்.

இங்கே திருடு நடக்கிறது என்று யார் சொன்னார்களோ? போலீஸ் காவலுக்காக அப்போதுதான் வந்திறங்கியது.

பையன் இந்தப் பக்கம் போயிருப்பானோ? ஒருவேளை போயிருந்தால்?

“போலீஸ்!”

முதலில் மோட்டார் சைக்கில் ஒன்றைத் திருடவேண்டும். தப்பிக்கச் சுலபமாக இருந்திருக்கும். அட, மோட்டார் வாங்காததற்கான இரண்டாவது காரணத்தைச் சொல்ல மறந்து விட்டேனே. சொந்த மோட்டாரையா தொழிலுக்குப் பாவிப்பது? அதனால்தான், நல்ல மோட்டார் சைக்கில் கண்ணில் சிக்கும்வரை பொருமையாக இருக்கிறேன்.

திரும்பி அந்த இருட்டுப் படிக்கட்டுக்கு ஓடி வந்தேன் வேகமாக. உடம்பெல்லாம் வியர்க்கத் தொடங்கியது. கீழே இறங்கத் தயாரானேன்.

“தூ!” என்ற சத்தம் கேட்டது.

திரும்பிப் பார்த்தேன்.

வேலை செய்யும் சீனன்…

(மலாயாப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரவை நடத்திய சிறுகதைப் போட்டி 2008-இல் நான்காம் பரிசு பெற்ற கதை)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *