கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: November 28, 2022
பார்வையிட்டோர்: 5,926 
 
 

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அரன் பள்ளிக்கூடம் முடிந்து வீடு வரும்போது உற்சாகமாய் வந்தான். உடம்பு முழுவதும் ஏதோ ஒரு உணர்வு அவனை அரித்தது. நாலு பேருக்கு சொல்லி முடித்து கும்மாளமிட வேண்டும் போல் இருந்தது. வீடு வரும்போது நண்பர்கள் வைத்த ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டு வழமைபோல் பின்னால் வராமல், நண்பர்களை இன்று பின்னுக்குத் தள்ளினான்.

மதிய வெயிலில் மண் சூடாகி புழுதி விரைந்து மேலெழுந்தது. தொலைவில் குண்டுவீச்சு விமானத்தின் இரைச்சல். அவன் நண்பர்கள் காலில் ஒன்றும் போட்டிருக்கவில்லை.

“கெதியாய் போங்கடா கால் கொதிக்குது” என்று கூப்பாடு போட்டார்கள்.

“அரன், ரீச்சர் நாளைக்கு வீடு செய்து கொண்டு வரச் சொல்லி சொன்னவவெல்லே?”

நெட்டையான உருவம் கொண்ட ரகுசாந் சந்தேகமாகக் கேட்டான்.

“பின்ன வீடு செய்து கொண்டு வரச் சொல்லி சொன்னவ தானே.”

ரகுசாந்தை விடக் குள்ளமான அரனுக்குக் கோபம் வந்தது.

“நீர் செய்துகொண்டு வருவீரே?”

அகல முகமும் பெரிய கண்களையும் உடைய வைஷ்ணவன் கண்களை வெட்டியபடி கேட்டான்.

“பின்ன செய்து கொண்டு தான் வருவன். அப்பாட்ட சொல்லி பெரீய்ய்ய வீடா செய்து கொண்டு வருவன். எனக்கு ஒரே அந்தரமாய்க் கிடக்கு, வீடு எப்ப செய்யப் போறனெண்டு.”

சொல்லிக்கொண்டு துள்ளிக் குதித்தான். அவனது சிவந்த முகம் மதிய வெயிலில் மேலும் சிவந்தது.

“நீங்களும் செய்து கொண்டு தானே வருவியள்” அரன் நண்பர் களைப் பார்த்துக் கேட்டான்.

“நாங்களும் செய்து கொண்டுதான் வருவம்.”

“கெதியாய் ஓடிப் போவமடா. பிள்ளையார் கோவிலடி பைப்பில தண்ணி குடிக்கலாம்.”

அரன் புத்தகப் பையைக் கதிரையில் தூக்கிப் போட்டுவிட்டு அவன் தாயாரைத் தேடினான். வேப்பமர நிழலில் சாக்குக் கட்டிலைப் போட்டு அதில் லேசாகக் கண்ணயர்ந்து கொண்டிருந்த கமலம் மகனின் குரல் கேட்டுத் திடுக்கிட்டு எழும்பினாள்.

“என்னப்பு! இப்பதான் வந்து படுத்தனான். கத்தி எழுப்பிப் போட்டாய்” அவன் தாய் சொன்னதைக் காதில் போட்டுக் கொள்ள வில்லை .

“அம்மா! எனக்கு இப்ப உடன வீடு செய்ய வேணும். ரீச்சர் நாளைக்கு வரேக்க வீடு செய்து கொண்டு வரச் சொல்லி சொன்னவ.”

அவன் அந்தரப்பட்டான்.

எழுந்து நின்ற தாயின் கைகளைப் பற்றி, வீட்டுக்குள் இழுத்தான்.

“அப்பு! பொறுங்கோ முதலில் சாப்பிடுங்கோ . எனக்கு வீடு செய்யத் தெரியாது. அப்பாக்குத்தான் தெரியும்.” கமலம் மெலிதான புன்னகையுடன் மகனுக்குக் கூறினாள்.

“என்னம்மா! உங்களுக்குத் தெரியாதோ? போங்கோ அங்கால ” அவன் முகத்தைச் சுருக்கிச் சிணுங்கினான். தாயோடு கோபிக்கவும் செய்தான்.

நேற்றுத் தான் தூக்கி வளர்த்த பயல் ‘நேசரி’ போய் தரம் ஒன்று வந்து இன்று தன்னைக் கோபிக்கும் அழகை தாய் ஆனந்தமாக ரசித்தாள்.

“என்னம்மா சிரிக்கிறியள்?”

கமலத்துக்கு மேலும் பொறுக்க முடியவில்லை. மகனை வாரியெடுத்ததாள்.

“நல்ல பிள்ளையெல்லே. உடுப்பை மாத்திப்போட்டு வாங்கோ சாப்பிடுவம். அப்பா வந்தவுடன் பிள்ளைக்கு டக்கெண்டு வீடு செய்து தந்து விடுவார்.

“உண்மையாவே அம்மா?”

“அம்மா பிள்ளைக்குப் பொய் சொல்லுவனே. அப்பா வந்த பிறகு செய்து தருவார்.”

“அம்மா! அப்பா எங்கட வீடு மாதிரி பெரிசாய் செய்து தருவரே?”

அவன் கண்களை அகலத் திறந்து கேட்டான். “அவற்ற கேள்வியைப் பார். பெரிசாய் செய்தா எப்படித் தூக்கிக் கொண்டு போவீர்?”

அவள் அவன் கன்னங்களை வருடியபடி கேட்க அவனுக்குச் சிரிப்பு வந்தது.

“நான் விசரன். தூக்கிக் கொண்டு போகேலாது. அப்பா வந்து சின்ன வீடு செய்து தரட்டும்.”

சாப்பாடு முடிந்தது. இப்போது அவனுக்கு விளையாட்டு நேரம்….. வாசலில் பெருத்த ஆரவாரம். சாம்பவி, மதன், ஆரணி, விதுரன் எல்லோரும் வழமைபோல் விளையாட வந்து அரனை அழைத்தார்கள். அவன் அசையவில்லை.

கொய்யாப் பழம் தருவோம், மாங்காய் தருவோம் என ஆசை ஊட்டிப் பார்த்தார்கள். அவன் அசையவே இல்லை.

“நான் இண்டைக்கு விளையாட வரமாட்டன். அப்பா வந்தவுடன அப்பாவும், நானும் வீடு செய்யப் போறம். நாளைக்குப் பள்ளிக்கூடத்தில் ரீச்சரிட்ட கொண்டு போய்க் காட்ட வேணும்.”

இவன் தனது ‘வீடு’ பற்றிப் பெருமையடிக்க அவர்கள் அவனுடன் கோபம் போட்டுவிட்டு வெளிநடப்பு செய்தார்கள்.

வழமையாக பொழுதுபடும் நேரத்தில்தான் அப்பா வருவது அவனுக்குத் தெரியும்.

இண்டைக்கு அவர் கெதியாய் வரவேணுமென்று அவன் எதிர்பார்த்தான். ஏதோ நினைத்தவனாக தங்களது சொந்த வீட்டை ஆர்வமாகப் பார்த்தான்.

எவ்வளவு நல்ல பெரீய்ய வீடு, குட்டிக்குட்டி அறையளும், கதவும், யன்னலுமாய் வடிவாய்க் கிடக்கு. அப்பா! வீட்டு உள்ளுக்கயெல்லாம் பச்சை நிறமெல்லே அடிச்சு வைச்சிருக்கிறார். நான் கட்டுற வீட்டுக்கும் இந்த நிறம்தான் கொடுக்க வேணும்.

வீட்டு யோசனையில் இருந்தவன் திடுக்கிட்டு எழுந்தான்.

‘ஐயோ! மறந்து போய் இருந்திட்டன். ரீச்சர் சொன்னவவெல்லே வீடு செய்யிறதெண்டால் பிஸ்கற் பெட்டி, வாணீஸ் பேப்பர், கம், ஈர்க்கு எல்லாம் வேணுமெண்டு. நான் எடுக்காமல் சும்மா இருந்திட்டன். இப்ப எல்லாத்தையும் எடுத்து வைச்சால் தான் அப்பா வந்த உடன வீடு செய்து போடலாம்.’

அரன் துள்ளி எழுந்தான்.

“அப்பா வந்திட்டார். எங்கட அப்பா வந்திட்டார்.” அரன் தகப்பன் வந்ததை அறிந்து துள்ளலுடன் போனான்.

“அப்பா கெதியாய் வாங்கோ. எனக்கு வீடு செய்து தர வேணும். உடுப்பை மாத்திப்போட்டு கெதியாய் வாங்கோ.”

மகனின் இந்த திடீர் கெரில்லாத் தாக்குதலை நாதன் எதிர் பார்க்கவில்லை. காய்த்துப்போய் சீமெந்துத் தூசு நன்கு படிந்திருந்த தலையும் உடம்பும் நாதனை ஆள்மாறாட்டம் செய்தன.

கைகளைப் பற்றி இழுத்த மகனை யோசனையுடன் அவன் உற்றுப் பார்த்தான்.

“என்னப்பா! யோசிக்கிறியள். கெதியாய் வாங்கோ. எனக்கு வீடு செய்ய வேணும்.” அவன் தகப்பனை விடாமல் தொந்தரவு செய்தான்.

“அப்பு! அப்பாவை விடுங்கோ. என்னப்பா நல்லாய் களைச்சுப் போய் வந்திருக்கிறியள்?”

கமலம் கணவனைப் பார்த்து கவலையுடன் கேட்டாள். “இண்டைக்கு வேலைக்கு வாற ஆக்கள் ரண்டு பேர் வராம விட்டுட்டாங்கள். வீட்டுக்காரரும் ஒரே அரியண்டம். வீட்டைக் கெதியா செய்து முடியுங்கோ. குடிபூரலும் செய்ய வேண்டுமெண்டு. அது தான்…

“உங்கட வேலையை முடிச்சுப்போட்டு வாங்கோ. பிள்ள அப்ப தொடக்கம் விளையாடவும் போகாமல் வீடு செய்யுறதுக்கு உங்களைப் பாத்துக்கொண்டெல்லே இருக்கிறான். வந்து உடன செய்து குடுங்கோ .”

பிஸ்கற் பெட்டி அளவாக இருந்தது. பெட்டியின் மேற்பக்கம் வெட்டி எடுத்து வீட்டுக்குக் கூரை செய்தார்கள்.

“அப்பா! எங்கட வீட்டுக்கூரை மாதிரியே என்ர வீட்டுக்கூரையும் கிடக்கு.” அவன் ஆர்வமாகச் சொன்னான்.

“அப்பு எங்கட வீடு போலத்தான் இந்த வீடும் செய்யப் போறன். இங்க பாருங்கோ. இது விறாந்தை, அடுத்தது முன்ஹோல், இது அரன் படிக்கிற அறை, பக்கத்தில் சாமியறை, அங்கால அம்மான்ர குசினி…… என்ன சரியே?”

“நல்ல வடிவாய் செய்யிறியள் அப்பா.” அவன் மகிழ்ச்சியில் மூழ்கி நின்றான். “அப்பு ஈர்க்கை எடுங்கோ. ஜன்னல் செய்யிறதுக்கு கம்பி வைக்கவெல்லே வேணும்.

ஜன்னலுக்கு உடன் கம்பி வைக்கப்பட்டது.

“அப்ப! எங்கட வீட்டுக்கு அடிச்ச மாதிரி உள்ளுக்கு பச்சை வாணிஷ் பேப்பர் வெட்டி ஒட்டுங்கோ.”

வீட்டின் உள்ளுக்கு பச்சைக் கலரும் வெளியே நீலமும் அடிக்கப் பட்டது. வீட்டின் ஒவ்வொரு பகுதியும் அங்குலம் – அங்குலமாய் பார்த்துப் பார்த்துச் செய்யப்பட்டது. வீட்டுக்கு வெளிச்சம் வர கூரையில் ‘கண்ணாடி பதித்தார்கள்.

மறுபடியும் வீடு சரி பார்க்கப்பட்டது. பூச்சு , கலர் வேலைகளின் குறைகள் திருத்தப்பட்டன. மெல்லிய கம்பியில் ‘அன்ரனா’ செய்யப் பட்டது.

அரனுக்கு தலை கால் புரியாத சந்தோஷம். வீடு, குடிபூருதலுக்காகக் காத்து நின்றது. அவன் கூப்பாடு போட்டுத் தாயாரை அழைத்தான்.

“அம்மா! அம்மா! ஓடி வந்து அப்பா கட்டின வீட்டைப் பாருங்கோவன். நல்ல வடிவான வீடம்மா…. அப்பா டக்கெண்டு கட்டிப் போட்டார்.”

கமலம் விரைந்து வந்து பார்த்தாள்.

“நான் ஒவ்வொரு நாளும் தானே அப்பா கட்டின வீட்டைப் பார்த்துக் கொண்டு இருக்கிறன்.”

அவன் கண்களை பெரிய வீட்டில் சுழல விட்டான்.

“அம்மா எங்கட வீட்டையும் இப்பிடிக் கெதியிலேயே கட்டினவர்.”

“அப்பா உழைச்ச காசைக் கொட்டிக் கட்டின வீடெல்லே. கொஞ்சம் கொஞ்சமாய் கஷ்ரப்பட்டுத்தான் கட்டினது.”

இரவு அப்பா கட்டிக் கொடுத்த வீட்டை அவன் ஆசையுடன் மடியில் வைத்தான்.

“ராசா, நேரமெல்லே போகுது. வந்து படுங்கோ.”

சாப்பாடு முடித்து படுக்கையில் வீழ்ந்தும் அவனுக்கு நித்திரை வரவில்லை. புரண்டு புரண்டு படுக்கிறான். மேசையில் வைத்த வீடு அவன் நித்திரையைக் கலைத்தது. எழுந்து உட்கார்ந்தான். இடையில் கண் விழித்த கமலம் மகனைப் பார்த்தாள்.

“அப்பு! என்ன செய்யுது?”

அவள் பதறினாள்.

“அம்மா! வீட்டை எனக்குப் பக்கத்தில வைச்சுக்கொண்டு படுக்கப் போகிறனம்மா?”

அவன் தாயைக் கெஞ்சிக் கேட்டான். “ஏனப்பு வைச்சுக்கொண்டு படுக்கிறது கஷ்ரமெல்லே.” “என்ர அம்மாவெல்லே, வைச்சுக்கொண்டு படுப்பன் அம்மா.”

தலையணைக்குப் பக்கத்தில் ‘வீடு’ வைக்கப்பட்டது. அவன் கண்ணயர்ந்த வேளையிலும் இடது கை ஆதரவாய் வீட்டை அணைத்துக் கொண்டிருந்தது.

நள்ளிரவு நேரம். நாய்களும் பேய்களும் தமது அட்டகாசமான ஆட்டத்தை ஆரம்பிக்கும் நேரம். உள்நாட்டு இனப்போரும் அதே போலத்தான் இரவில் ஆட்டம் போடத் தொடங்கும். முதலில் தரையில் விழுந்த ‘ஷெல்’ வெடித்த சத்தத்தோடு ஆட்டம் தொடங்கியது. சூடான ஆட்டம். நிறுத்த முடியாத ஆட்டம். சனங் களை ஓட ஓட விரட்டும் ஆட்டம். சொத்துக்களை, உடைமைகளை, உயிர்களைப் பலி கொண்ட பிறகுதான் ஆட்டம் களைத்து நிற்கும்.

நாதன் வெளியே ஓட கமலம் அரனைத் தூக்கித் தோளில் சாய்த்தபடி சேர்ந்து ஓடினாள். பேரிடியான சத்தத்தில் உறைந்து போய்க் கிடந்த அரன் பயத்தினால் தாயின் கழுத்தை இறுகக் கைகளால் கட்டிக்கொண்டான்.

வாய் மெல்லியதாக நடுக்கத்துடன் அரற்றியது. “என்ரை வீடு…. என்ரை வீடு…. ரீச்சரிட்ட காட்ட வேணும்.”

விடிய வைரவ கோயிலுக்கு முன் சனங்கள் கூட்டம் கூட்டமாக நின்றார்கள். ஆட்டம் சற்று ஓய்ந்திருந்தது.

அரன் சிணுங்கலுடன் அழுதுகொண்டிருந்தான். “அப்பா! என்ரை வீட்ட எடுத்தாங்கோ.”

“அப்பு, அழக்கூடாது. ராத்திரி சண்டையெல்லே நடந்தது. சண்டை முடிய அப்பா வீட்டை எடுத்தருவர்.”

கமலம் மகனை சமாதானப்படுத்தினாள். கணவனைப் பார்த்தாள்.

“என்னப்பா! இப்ப அமைதியாய் கிடக்கு. வீட்டுக்குப் போகலாம் போல.”

வீட்டைவிட்டு ஓடி வந்தவர்கள் வீடுபோக அவதிப்பட்டார்கள். “என்ன யோசிக்கிறியள். நாதண்ணை வாங்கோ போவம்.”

“அப்பா வரேக்க என்ரை வீட்டை எடுத்துக்கொண்டு வந்திடுங்கோ.”

அரன் விம்மலுடன் கத்தினான். நாதன் வீடு பார்க்க புறப்பட்டவர்களுடன் கிளம்ப , எதிரே முன்னரே இவர்களிடம் சொல்லிக் கொள்ளாமல் வீடு பார்க்கப் போனவர்கள் பதைபதைப்புடன் ஓடி வந்தார்கள்.

“ஐயோ! எல்லோரும் திரும்பிப் போங்கோ. வீட்டுப் பக்க மெல்லாம் ஷெல் விழுகுது. நாதண்ணை உங்கட வீடு இடிஞ்சுபோய் தரைமட்டமாய்க் கிடக்கு. நாங்கள் நிற்காமல் ஓடிவாறம்.”

“கடவுளே! என்ரை வீடு தரைமட்டமாய் போச்சுதோ? நான் பாடுபட்டுக் கட்டின வீடு. என்ர ஐயோ நான் என்ன செய்வன். இனி எப்பிடி ஒரு வீடு கட்டப்போறன். கமலம் என்ரை காசு…. வீடு போட்டுதோ….”

நாதன் நிலத்தில் விழுந்து புரண்டு அழுதான். கமலம் தலையில் அடித்தபடி கத்த…… அரன் தாயின் நாடியை இறுகப் பிடித்து இருந்தபடி கேட்டான்.

“அம்மா! என்ரை வீடும் உடைஞ்சிருக்குமே?”

அவன் குரல் விம்மலுடன் உடைந்து விழுந்தது.

– 19.02.2004, 15 ஆவது ஆண்டு மலர் ஈழநாதம் – கனகசெந்தி கதாவிருது பெற்ற சிறுகதைகள், முதற் பதிப்பு: 21-07-2008, தொகுப்பாசிரியர்: செங்கை ஆழியான், மீரா பதிப்பகம், கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *