கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: March 13, 2014
பார்வையிட்டோர்: 12,130 
 

தாவூது மாஸ்டருக்கு உடனடியாகச் செயற்படும்படியாக இடமாற உத்தரவு கிடைத்த போது விக்கித்துப் போனார். அந்தக் கணமே தான் அந்தப் பாடசாலையிலிருந்து அந்நியப்பட்டுப்போன மாதிரியான உணர்வு….

சிறியதொரு காகிதத்துண்டினால் தனக்கும் அந்தப் பாடசாலைக்கும் இடையிலிருந்த உறவை, நட்பைப் பிரித்து விட முடியுமா? தானும், தனது பெற்றாரும் தொடர்ந்து கல்வி கற்று வந்த பாடசாலை… தனது மகனும் இங்குதான் கல்வி கற்க வேண்டி இருக்கின்றது….

இடமாற்றக் கடிதம் கிடைத்த போது காலை பத்து மணி. இடமாற்றம் செய்யப்பட்டுள்ள பாடசாலை எது என்று அறிய கடிதத்தை மீண்டும் திருப்பிப் பார்த்தார். கலங்கலான காபன் பதிவு. அல்லிக்காடு…. இங்கிருந்து எட்டு மைல் இருக்குமா?….

இருக்கும். அல்லிக்காடு பெரும்பாலும் ஓர் ஆசிரியர் பாடசாலையாக இருக்கும்.

தாவூது மாஸ்டரை வசதிக்கட்டண ஐயா என்றுதான் மாணவர்கள் அழைப்பார்கள். இருபது வருஷ உழைப்பு, வசதிக்கட்டண வரவு-செலவு, பரீட்சைக் கட்டண அறவீடு, கணக்குகள், ரிசீட்டுக்கள், வவுச்சர்கள்… அங்கீகாரம், பேரேடு என்று எத்தனை கச்சிதமாக, ஒரு சதக் கணக்கும் பிசகாமல், ஒவ்வொரு சதத்தையும் நெருப்பின் நெருக்கத்தோடு சுத்தமாகக் கையாண்டு….

அது போதாது என்று பாடசாலை அனுமதி வேலைகளையும் அவரே செய்வார். அதற்கு வசதியாக இந்த இருபது வருசமாக முதலாம் ஆண்டிலேயே நிரந்தர ஆசிரியர். மாணவர்கள் வகுப்பேறிச் சென்று விடுவார்கள். ஆனால், அவர் மட்டும் அதே வகுப்பில். இடது உடைந்த அதே கதிரையில்…. அந்த சிம்மாசனத்திற்கு இனி யார் வரப்போகிறார்கள்?

எட்டு, எட்டு பதினாறு மைல்…. தனது அதரப் பழசான சைக்கிளை, வாஞ்சையோடு பார்த்தார். தன்னை தினசரி பதினாறு மைல்கள் கொண்டு செல்ல வேண்டிய நண்பன் இனி அதுதான். தாங்குமா? தனது திருமணத்தன்று பெண்சாதியின் வாப்பா மருமகனுக்கென்று அன்பளிப்புச் செய்த சைக்கிள். நிகாஹ் முடிந்த கையோடு இணைந்து கொண்ட சைக்கிள்… இன்னுமொரு பெண்சாதி போல….

ஆசிரியர்கள் சூழ்ந்து கொண்டார்கள்.

“தாவூது மாஸ்டர் உங்களுக்கா டிரான்ஸ்பர்? உங்களையும் இந்தப் பாடசாலையையும் நாங்கள் பிரித்துப் பார்த்ததில்லை. இதை உடனடியாகக் கேன்சல் செய்ய வேண்டும். உழைப்பாளிக்கு உரிய கௌரவம் கொடுக்கப்படா விட்டால் கல்வியில் எந்த முன்னேற்றமும் இல்லை” அன்வர். அவரது மாணவன். இங்கு புதிய ஆசிரியர். பொரிந்து தள்ளுகிறான். உள்ளூர் அரசியலிலும் கொஞ்சம் ஈடுபாடு. அடுத்த பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் எண்ணமும் உண்டு.

“சேர், நீங்கள் அதிபரைக் கேளுங்க. வயதுபோன காலத்தில இவ்வளவு தூரம் தினமும் போய்வர முடியுமா? நான் கல்வி அதிகாரியைக் கேக்கிறன். நீங்க முதல்ல அதிபரின் அபிப்பிராயத்தைக் கேளுங்கோ” முஸ்தபா ஆசிரியர் முறுக்கிக் கொண்டார். தாவூது மாஸ்டருக்கு மெல்லிய சலனம்… இடமாற்றத்த ரத்துச் செய்யவும் முடியுமோ? என்ன காரணம் சொல்லிக் கேக்கிறது…?

அதிபரின் காரியாலயம். தனியாகவே இருந்தார். தாவூது மாஸ்டர் வந்ததைக் கண்டு கொள்ளவே இல்லை. எதேச்சையாகத் திரும்புபவர் போல் சிலாகித்தார்.

“என்ன தாவூது இடமாற்றக் கடிதம். நான் நினைக்கல்ல. உங்களை எடுப்பாங்கண்டு. இங்கதானே இருபது வருசமா இருக்கீங்க. பக்கத்து ஊர்தானே காலையிலே போனா, பின்னேரம் வந்துடலாம்”

தாவூது மாஸ்டருக்குத் திக்கென்றது. வசதிக் கட்டணம், மாணவர் அனுமதி, பரீட்சைக் கட்டணம் என்று மிகப் புனிதமாக சதக் கணக்குகளையும் சரியாகப் பேணி, கூடவே முதல் வகுப்பு மாணவர்களின் கல்வியையும் மேம்படுத்தி, லீவு பெறாமல், தினசரி பாடசாலைக்கு வந்து (இந்த இருபது வருட சேவையில் மொத்தமாக பத்து நாள் லீவு எடுத்திருப்பாரா?) குடும்பம் ஒன்று இருப்பதை மறந்து, பொருளாதார அபிவிருத்தி என்பதே என்னவென்று தெரியாமல்…. அதிபரின் வார்த்தையில் தனது இருபது வருட ஆசிரியப் பணி அர்த்தமற்றுப் போய்விட்டதாக தாவூது உணர்ந்தார்.

“இண்டைக்கு கையெழுத்துப் போட்டுட்டீங்க. இடமாற்றம் உடனடியாக என்று போட்டிருக்கு. என்றாலும் இன்றைக்கு நீங்க போகத் தேவையில்ல. நாளைக்குப் போகலாம். அதைக் கேக்கவா வந்தீங்க?”

“அதுக்காக நான் வரவில்ல சேர். இந்த வசதிக் கட்டண கணக்கெல்லாம் பாரம் கொடுக்க வேண்டும். அதைப் பொறுப்பெடுத்திட்டீங்கண்டா….”

“இண்டைக்குச் செவ்வாய், பத்தொன்பது. ம்… நாளைக்குப் பள்ளிக்கூடம் போய் பாரம் எடுத்திடுங்கோ. சனிக்கிழமை நான் இங்க இருப்பன். அப்ப வந்து பாரம் தந்தாற் போதும்”

தாவூது விடைபெற்றுக் கொள்வது போல மென்மையாகப் புன்னகைத்து திரும்பி நடக்கத் தொடங்கினார்.

“மிஸ்டர் தாவூது. நாளைக்குச் சம்பள நாள். நீங்க இங்க இருக்க மாட்டீங்க. மறக்காம டீ போம் கொடுத்திட்டுப் போங்க”

“நன்றி சேர்” – அதிபருக்கு நன்றி சொன்னாரா, பாடசாலைக்கு நன்றி சொன்னாரா…? நடையில் சின்ன தளர்ச்சி ஏற்பட்டது….

இந்த இடமாற்றத்தால் தனக்கும் தனது குடும்பத்திற்கும் அதிகபட்சம் என்ன நட்டம் ஏற்படும்? – முதல் முறையாக தனது தொழிலோடு தனது குடும்பத்தை இணைத்துச் சிந்தித்தார்.

சிறிய வீடொன்றையும் மகளையும் தாவூதுக்குக் கொடுத்த கையோடு காலமாகிப் போனார் மாமனார். இந்த வீட்டில் இரண்டு பேருக்கு மேல் இருக்க இடமில்லை என்பதாலோ என்னவோ அவருக்குப் பதினேழு வருடங்களாகக் குழந்தை பிறக்கவில்லை.

நண்பர்களின் கேலிப்பேச்சையும், மனைவியின் மலட்டுப்பட்டத்தையும் போக்கும் வகையில் பிறந்த ஆண் குழந்தைக்கு மூன்று வயது. மனைவியின் தொய்வு நோய்க்கும் மூன்று வயது. குழந்தை பெற்றுக் கொண்டதால்தான் மனைவிக்கு இந்த நோய் வந்ததா என்ற நினைப்பு வரும் போதெல்லாம் இந்தக் குழந்தை பிறந்திருக்க வேண்டாமோ என்று வருந்திய நாட்களும் உண்டு….

வெப்பம், குளிர், புழுதி கூடும் நாட்களிலெல்லாம் மனைவி, தகரத்தில் அடிப்பது போல இருமிக்கொண்டு கிழிந்த நாராய் பாயில் சுருண்டு விடுவாள். அவளுக்குச் சுடுநீர் வைத்துக் குளிப்பாட்டி உணவு தயாரித்து, மகனையும் பராமரித்து என்றாலும் பாடசாலைக் கடமைகளில் அவர் குறை விட்டது கிடையாது.

இனி, பகல் பொழுது முழுவதும் அல்லிக்காட்டிலேயே கழியப் போகிறது. பெண்சாதிக்கு இடையில் தொய்வு நோய் வந்துவிட்டால் யார் கவனிப்பது? ஆண்டவன் விட்ட வழி என்று மனச் சுமையைக் குறைத்து, புன்முறுவலோடு சைக்கிள் வைத்துள்ள இடத்திற்கு வந்தார்.

முன்சில்லில் காற்று இறங்கிப் போயிருந்தது. இம்மாதச் சம்பளத்தில் டயரும் ரியூப்பும் வாங்கி முன் சில்லைப் புதுப்பிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டார்.

“சேர், காற்றுப் போயிட்டுதா? இருங்க சேர், கெண்டீன் அறையிலே பம்ப் இருக்கு. காற்று அடிச்சுத் தாரன்” மாணவன் பாறூக் சொன்ன கையோடு தாவூதின் பதிலுக்குக் காத்திராமல் பம்ப் எடுத்து வர ஓடினான்.

மாணவரின் வசதிக் கட்டண நிதியிலிருந்து வாங்கி வைத்துள்ள சைக்கிள் பம்ப் அது. இந்தப் பாடசாலையிலிருந்து இடமாற்றம் பெற்றுவிட்ட பிறகு, அந்தப் பம்பைப் பாவித்துக் காற்று அடித்துக் கொள்ள தனக்கு உரிமை இருக்கின்றதா?….

“இல்ல பாறூக். வீடு பக்கத்திலதான இருக்கு. நான் அங்கேயே காற்று அடித்துக் கொள்றன். பம்ப் வேண்டாம்” என்று கூறி விடுவிடுவென சைக்கிளைத் தள்ளிக் கொண்டு போகும் தாவூது மாஸ்டரை பாறூக் வியப்போடு பார்க்கிறான்.

பாடசாலையோடு சம்பந்தப்பட்ட நிதி, தளபாடம், புத்தகங்கள் என்று எல்லாவற்றிலும் தாவூது மாஸ்டர் அப்படியரு கண்ணியத்தோடுதான் நடந்து வந்திருக்கிறார் என்பதையும் பாறூக் அறிந்தே வைத்திருந்தான்.

தாவூது மாஸ்டர், மனைவி கதீஜாவிடம் தனது இடமாற்ற விபரங்களைக் கூறிய போது அவள் அதிர்ந்து போனாள்.

“என்னங்க இது? யார் செய்த வேலை இது? நிண்டது நிக்க எப்படி அவ்வளவு து}ரம் இடமாத்துறது? இது ஆண்டவனுக்கு அடுக்குமா? எனக்குச் சுகமில்லை. இருக்க ஒரு ஒழுங்கான வீடில்லை. சம்பளம் பிந்தினா அரிசிக்குக் காசில்லை. கடிதம் வந்தவுடனே ஊமையாட்டம் வாங்கிட்டு வந்திட்டீங்களே. தட்டிக் கேக்கப்படாதா?”

மனைவியோடு சண்டை பிடித்துப் பழகாதவர். இரைந்து பேசிப் பழக்கமில்லை. அவள் என்னவாவது பேசித் தீர்க்கட்டும் என்று மௌனமாகவே இருந்தார்.

“இப்படித்தான் சும்மா இருங்க. அவங்க வசதிக்கேத்தமாதிரி எதையாவது செஞ்சிட்டுப் போவாங்க. நீங்க ஒன்டையும் கேக்காதீங்க. பள்ளிக்கூடம், பள்ளிக்கூடம் எண்டு இரவாப் பகலா செத்தீங்க. அதுக்கு இதுதான் பரிசா? நீங்க கடமை செஞ்சதில குறைவா? பள்ளிக்கூட வேல பாத்ததில குறைவா….? அதிபர் ஒன்னும் சொல்லலையா?”

“அதிபர் என்ன சொல்றது கதீஜா. இது காரியாலயத்தில இருந்து வந்த உத்தரவு. அவர் என்ன செய்வார். நானும் இருபது வருசமா இருந்திட்டன். திருப்பியும் அங்கதான் இருக்கப் போறன் என்று விடாப்பிடியாக் கேக்கிறதில நியாயம் உண்டா?”

“பெரிய நியாயத்தக் கண்டிட்டீங்க. சின்ன வயசில உங்கமாதிரி இருந்தா மாத்துனது சரி. இப்ப வயசுபோன நேரத்தில எட்டு மைல் சைக்கிளோட உங்களுக்கு ஏலுமா?”

தாவூது மாஸ்டர் ஒன்றும் பேசவில்லை.

“இப்பவே போங்க. நேரா ஒபிசுக்குப் போங்க. அதிகாரிகிட்ட கேளுங்க. வயசு போன இந்த நேரத்தில இப்படியரு இடமாற்றத்த செஞ்சது நீதியான்னு கேளுங்க. என்ன…. போறீங்களா?”

“இன்டைக்கு செவ்வாய்க்கிழமை. இன்டைக்கு யாரும் ஒபிசு10க்குப் போக முடியாது. நாளைக்குப் புதன்கிழமை போறன்”

அடுத்த நாள் சுபஹூத் தொழுகை அதானுக்கு முன்னரே தாவூது மாஸ்டர் உறக்கத்திலிருந்து எழுந்து விட்டார். சுறுசுறுப்பாகக் காரியங்களை முடித்தார். கதீஜாவுக்கு சுடுநீர் கலந்து வைத்தார். பேக்கரியில் வாங்கிய பாணுக்கு இதமாக உருளைக் கிழங்கிட்டு ஒரு சொதியும் வைத்தார். போற இடத்தில் சாப்பாடு கிடைக்குமோ…? இரண்டு பாண் துண்டுகளைச் சுருட்டி பார்சலாக்கிக் கொண்டார். காற்று இறங்கி இருந்த சைக்கிள் முன் சில்லுக்கு காற்றடித்துக் கொண்டார்.

பம்ப்பையும் பத்திரமாகத் தன்னுடைய பன் பையில் வைத்துக் கொண்டார்.

அவருடைய பன் பை கொஞ்சம் பிரக்யாதி பெற்றது. அந்தப் பை அவருடைய கைக்கு எப்போது வந்து சேர்ந்தது என்புது அவருக்கே ஞாபகமில்லை. அந்தளவு பழைமை வாய்ந்தது. ஆனால், ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தைக்குக் கொண்டு வந்தாரானால், அந்த வாரத்திற்குத் தேவையான அரிசி, கருவாடு, தேங்காய், சீனி, பருப்பு என்று எல்லா சாமான்களையும் அதற்குள் அடக்கிக் கொண்டு வருவார். இன்று அந்தப் பை அவருடன் அல்லிக்காட்டுக்குப் புறப்படப் போகின்றது.

முன் சில்லில் காற்று இருக்கிறதா என்பதை மீண்டும் ஒரு முறை நசித்துப் பார்த்தார். குறைந்திருந்தது. வழியில் இன்னும் ஒரு தரம் காற்றடிக்க வேண்டும். எப்படியும் இந்த மாதத்தில் ஒரு டயர், ரியூப் வாங்கிட வேண்டும்.

“கதீஜா, நான் போய் வாரன்”

“எங்கேயப்பா, கல்விக் காரியாலயத்திற்கா?”

“இல்ல கதீஜா, உடனடியாக பாரம் எடுக்கும்படிதான் கடிதம் வந்திருக்கு. பாரம் எடுக்காட்டி ஏதும் நடவடிக்கை எடுத்துப் போடுவாங்க. நான் பாரம் எடுத்திட்டப் புறம் அடுத்த கிழமை வந்து பாக்குறன். மேசயில் டீ போம் வச்சிருக்கிறன், மறக்காம சம்பளத்தெ எடுத்திடு. மகன் எழும்பிட்டானா?”

“இன்னும் ஊர் ஒரு பக்கத்தால விடிந்து முடியல. அதற்குள்ள வெளிக்கிட்டீங்க. இந்த நேரத்தில பச்சப்புள்ள எழும்புமா? சரி, சரி, பத்திரமாப் போய்ட்டு வாங்க”

இந்த மனுஷனுக்கு என்ன சொன்னாலும் கேக்காது. இவரோட பேசிப் பயனில்லை. இவரோட வாதிச்சும் எந்தப் புண்ணியமுமில்லை என்ற வெறுப்பையும் சேர்த்து விடை கொடுத்து அனுப்பினாள் கதீஜா.

அதைப் பற்றிச் சிந்திக்க தாவூதிற்கு நேரமில்லை. எட்டு மைல் பிரயாணம். இப்ப இருந்து சைக்கிள் மிதிச்சாத்தான் பள்ளிக்கூடம் தொடங்குவதற்கு முன் போய்ச் சேர முடியும். படலையைச் சாத்திவிட்டு வீதிக்கு இறங்கினார்.

இரண்டு மைல் சைக்கிள் மிதிப்பதற்கிடையில் மூச்சு வாங்கியது. சைக்கிளை நிறுத்தி, முன் சில்லில் காற்று இருக்கிறதா என்பதைச் சரிபார்த்துக் கொண்டு, மீண்டும் ஓடத் தொடங்கினார். காலைக் காற்று முற்றிய நெற்கதிர்களில் மோதிவிட்டு, புடரிப் பக்கம் அலையாகப் புகுந்து செல்வதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது. நீள் வட்டமாக அமைந்த குளக்கட்டுக்கு அண்மையாக சைக்கிள் சவாரிக்கத் தொடங்கியது.

சீதக்காதியை நோக்கி முத்தாமணக்கு கைவிரித்தது போல, அடக்கமாகத் தாமரைகள் இப்போதுதான் முகையவிழ்ந்து அவரை வரவேற்றன. எனக்கும் இந்த இடமாற்றத்திற்கும் தொடர்பில்லை என்று கூறுவது போல கானாங் கோழிகள் நீருக்குள் பாய்ந்து ஓடின.

தாவூது வாத்தியாருக்கு தனது பழைய ஞாபகத்திற்கு வந்தது. இந்நேரம் திறந்திருப்பார்களா? நான்தானே முதல் ஆசிரியராகப் பாடசாலைக்கு வருவேன். அதிபரின் அறை வாசலைக் கூட்டித் துப்பரவு செய்து, முதலாம் வகுப்பு மாணவர்களின் தளபாடங்களை ஒழுங்கு செய்து, பானை நிறையத் தண்ணீர் அள்ளி வைத்து, கரும்பலகையில் முன்கூட்டியே பாடங்களை எழுதி வைத்து… இன்றைக்கு முதலாம் ஆண்டிற்கு யார் பாடம் எடுப்பார்கள்? பின் வரிசையில் அமர்ந்திருக்கும் மாணவர்கள் இரண்டுபேர் சண்டை போட்டு, ஒருவனுக்கு மற்றவன் பென்சிலால் குத்த இலேசாக இரத்தம் கசிந்து, கட்டுப் போட்டு அனுப்பினேனே. காயம் இன்றைக்கு ஆறியிருக்குமா…?

தாவூது மாஸ்டர் திடீரென்று சைக்கிளை பிரேக் போட்டு நிறுத்தினார். கட்டுக் கதிர்களை மாட்டு வண்டி நிறைய ஏற்றி, நிறைமாதக் கர்ப்பிணிபோல அது நடு வீதியை அடைத்துக் கொண்டு நிற்க, இடுப்பளவு உயரத்திற்கு தொங்குகின்ற வரால் மீன்களை மொத்தமாக விலைபேசிக் கொண்டிருப்பவர்களைத் தாண்டி சைக்கிளைக் கொண்டு செல்வது இயலாத காரியம்.

வரால் மீன்கள் மலிவாக இருக்குமோ? நாமும் ஒன்றை வாங்குவோமா? வாங்கினால் சமைக்க முடியுமா? பாடசாலை நேரத்தைச் சமையலுக்கென்று பாவிப்பது முறையாகுமா…?

தாவூது மாஸ்டர் தனது ஆசைக்கு ஆப்பு வைத்துவிட்டு, சைக்கிளில் இருந்து இறங்கி ஓரமாக, பிரதான பாதைக்கு வந்து பிரயாணத்தைத் தொடர்ந்தார்.

தாவூது மாஸ்டர் பாடசாலையை நெருங்கிய போது மாணவர்கள் இங்குமங்குமாகக் கூடி நின்று விளையாடிக் கொண்டிருந்தார்கள். பெரிய பாடசாலை இல்லை. ஒரேயரு கட்டிடம். அதற்குள்ளேயே அதிபர் காரியாலயமோ. அதிபர் விடுதியோ – தெரிக்கப்பட்டுள்ள ஓர் அறை. சுற்றிவர ஒழுங்கற்ற வேலிகள். மாடுகளும் சுதந்திரமாக உள்ளே நுழைந்து மேய்ந்து கொண்டிருந்தன. பாடசாலையின் பின்புறமாக ஐந்து கறுத்தக் கொழும்பான் மாமரங்கள், மஞ்சள் நிறத்தைப் பூசிவிட்டது போல ஏகமாகப் பூத்து இலைகளின் பச்சை நிறம் மறைந்து, மெல்லிய மணத்தோடு சு10ல் கொண்ட சினைப்பசுவைப் போல சிலிர்த்துக் கொண்டு நின்றன.

அதிபர் இன்னும் வந்து சேரவில்லை.

மாணவர்கள் தாவூது வாத்தியாரின் பழைய சைக்கிளையும் பன்பேக்கையும் பார்த்துவிட்டு சந்தேகத்தோடு விலகத் தொடங்கினார்கள்.

தாவூது சைக்கிளைப் பூட்டி வைப்பதற்காக ஒரு இடம் பார்த்தார். தாவூதின் குறிப்பை உணர்ந்து கொண்ட மாணவன் ஒருவன் சைக்கிளைத் தானே வாங்கிக் கட்டிடத்தின் ஓரமாகத் தள்ளி வைத்தான்.

“உன் பேரென்னப்பா?”

“சுலைமான்”

“எத்தனையாம் ஆண்டு?”

“நாலு சேர்”

“அதிபர் எத்தனை மணிக்கு வருவார், வேறெயும் ஆசிரியர்கள் இந்தப் பாடசாலையில் படிப்பிக்கிறாங்களா?”

“அதிபர் வார நேரந்தான். அவர் மட்டுந்தான்”

அதிபர் வரும் வரைக்கும் என்ன செய்வது? பாடசாலை வளவை ஒரு சுற்றுச் சுற்றி வந்தார். மாம்பூக்களில் இருந்து எழுந்த சுகந்த மணம் நாசியைத் துளைத்துச் சென்றது. மூச்சை நீளமாக உள்ளெடுத்து அதனை அனுபவித்தார். வளவு பூராகப் புல்லும் பூண்டும் மண்டிக் கிடந்தது. கட்டிடம் ஒட்டறை அடிக்கப்படாமல் து}சு விரவிக் கிடந்தது. வளவு இரண்டு ஏக்கர் இருக்குமா? இருக்கும். சுற்றிவர நல்ல வேலி இருந்தால் பயிர்கள் செய்து, மாணவர்களுக்கு வீட்டுத் தோட்டப் பயிற்சி வழங்கலாம்.

திடீரென்று தலைக்கு மேல் ‘சோ’ வென்று சப்தம். மேகம் திரண்டது போல, ‘சடசட’வென்று சிறகுகளை அடித்துக் கொண்டு நு}ற்றுக்கும் மேற்பட்ட கொக்குகள் நிறக் கொக்குகள், பாடசாலை வளவுக்கு அப்பாலுள்ள அல்லிக் குளத்தினுள் தரை இறங்குகின்றன. ‘கீச்மூச்’சென்று கத்திக் கொண்டு சிறிய மீன்களை வேக வேகமாகப் பிடித்து விழுங்குகின்றன. ஊமை இரைச்சலோடு எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து திசைமாறி உயர்ந்து, பறந்து பிரிகின்றன. கலர் கலரான சிறகுகள், கால்களில் அசாத்திய நீளம், அலகுகளிடை கருநீலப் புள்ளிகள், இந்த வகைக் கொக்குகளை இந்தப் பிராந்தியத்தில் இதுவரை அவர் கண்டதில்லை. ஊருக்குப் புதிதாக இருக்குமோ? தன்னைப் போல….

எவ்வளவு ரம்மியமான காட்சி. ஒரு நாளைக்கு கதீஜாவையும் கூட்டிக் கொண்டு வந்து காட வேண்டும். கதீஜா வருவாளா? எப்படிக் கூட்டிக் கொண்டு வருவது? சைக்கிள் முன்பாரில் ஏற்றிக் கொண்டு… வேண்டாம் ஊர்ப்பொடியன்கள் சிரிப்பான்கள்.

சுலைமான் நெருங்கி வருகிறான். “இந்தக் கொக்குகள் எப்பவும் வராது சேர். கச்சான் காற்று தொடங்குமுந்தி வரும். கொஞ்ச நாளைக்கு இந்தப் பக்கம் திரியும். காற்று தொடங்க எங்காவது கூடிப் பறந்து போயிடும்”

“சுலைமானுக்கு என்ன வயசு”

“பன்னென்டு”

“பன்னிரெண்டு வயசுக்கு ஏழாம் ஆண்டல்லவா படிக்கணும்?”

“பிந்திதான் சேர் பள்ளியில் சேந்தது”

“வாப்பா என்ன செய்கிறார்?”

“கூலி வேல. மீன் பிடிப்பாங்க. விளைஞ்ச நேரம் வயல் காவல். சில நாளையில வேற ஊருக்குப் போயி வேளாமை வெட்டுறதுண்டு”

“நீங்களும் போறதா?”

“நானும் தான். வேளாம வெட்ட சூடு மிதிக்க என்டு போவன். வாய்க்கால்ல தண்ணி வார நேரம் வரால் மீன் பிடிக்கப் போவன்”

“பள்ளிக்கூட நாளெலுமா?”

“ஆமா சேர், இங்க மிச்சம்பேர் அப்படித்தான்”

தாவூதுக்கு நெஞ்சில் துணுக்கென்றது. படிக்கின்ற காலத்திலேயே குடும்பச் சுமையையும் தாங்க வேண்டிய நிலையில் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பதை எண்ணிய போது, இதனைத் தீர்த்து வைக்க யாராவது முன்வந்தால் நன்றாக இருக்குமே என்ற நினைப்புத்தான் மேலோங்கி நின்றது.

பாடசாலை மணி கிணுகிணுவென்று ஒலித்தது. மாணவர்கள் சிதறி ஓடி வகுப்பறைக்குள் புகுந்தார்கள். கதிரைகள் அரக்கும் ஒலி. சத்தம் அடங்கி மண்டபம் அமைதியானது. ஓ! அதிபர் வந்து விட்டாரா?

“வாங்க மிஸ்டர் தாவூது. இடமாற்றக் கடிதத்திலே உங்கட பேரெப் பாத்தான். நான் வெளியூர். உங்களெச் சுந்திச்ச ஞாபகம் இல்ல. எப்படி காலெயிலா புறப்பட்டு வந்தீங்க?”

தாவூது ஒன்றும் பேசவில்லை. வெறுமனே தலையை ஆட்டினார். அதிபரை நாணம் கலந்த புன்னகையோடு ஆராய்ந்தார். நாற்பது வயதிருக்குமா? நல்ல உயரம். யாரையும் பயம் கொள்ளச் செய்யும் ஆஜானுபாகுவான தோற்றம். கையில் பிரம்பு, நீல நிறச் சாயமூட்டப்பட்ட மூக்குக் கண்ணாடி…

அது சரி இந்தளவு நீளத்தில் பிரம்பு எதற்கு…?

“சுலைமான் இங்கே வா, வீட்ட போய் ரெண்டு சேருக்கும் தேத்தண்ணி வெச்சித்தரட்டாம் என்டு வாங்கிட்டு வா”

தாவூது, சுலைமானை நிமிர்ந்து பார்த்தார். பாடசாலை நேரத்தில் மாணவன் ஒருவனைச் சொந்தக் காரியத்திற்காக வெளியே அனுப்பலாமா…?

“உங்களெப் பத்திக் கேள்விப்பட்டிருக்கன். பள்ளிக்கூடத்தையே உங்கட வீடுபோல நினைத்து வாழ்ந்தவராம். தொழில்ல நேர்மை, கடமை தவறாமை… பள்ளிக்கூட நிதிப் பொறுப்பெல்லாம் நீங்கதானென்டும் கேள்விப்பட்டனான்” அதிபர்.

மாணவர்கள் பக்கமிருந்து மழை இரைச்சலாகச் சத்தம் தொடங்கியது.

“யார் அங்க சத்தம் போடுறது?” என்று பிரம்பை உயர்த்திக் கொண்டு அதிபர்….

தாவூது வீட்டு ஞாபகம் வந்தது. மகன் எழுந்திருப்பானோ? காலையில் அவனைச் சைக்கிள் சீற்றில் வைத்து ஒரு சுற்றுச் சுற்ற வேண்டும். ஏக்கப்பட்டுக் கொண்டிருப்பானோ? கதீஜாவைப் பாடுபடுத்துவானோ…?

அதிபர் திரும்பி வந்தார்.

“எல்லாம் ஐம்பத்திரண்டு பிள்ளைகள். நான் மட்டும்தான். நாலாம் ஆண்டு வரைக்கும் இருக்கும். இன்னொரு ஆசிரியர் கேட்டிருக்கிறன். ஜனவரிக்குத் தாறன் என்டு சொல்லி இருக்கிறான்கள் – பிரச்சினை இல்லாத பள்ளிக்கூடம் – நல்ல சனங்கள். பணிவான பிள்ளைகள். அழகான ஊர். எனக்கு இங்கு இருந்திடத்தான் விருப்பம். ஆனா வீட்ல ஒரு தேவையண்டு வத்திட்டுது. நானே பேசிக் கொண்டிருக்கிறன். நீங்க ஒன்டுமே சொல்ல இல்ல. சைக்கிளில் வந்த களைப்போ?”

‘எனக்கு அதிகம் பேசிப் பழக்கமில்லை என்று இவரிடம் எப்படிக் கூறுவது?’ என்று யோசித்துக் கொண்டிருக்கையில் சுலைமான் தேநீரோடு வந்து சேர்ந்தான்.

ஒன்றுக்கொன்று அளவில் வேறுபட்ட இரண்டு கிளாஸ்களில் தேநீரை ஊற்றி, பெரிய கிளாஸைத் தாவூதிடம் தந்துவிட்டு மற்றதை அதிபர் கையில் எடுத்தார்.

தாவூது தேநீரை உறிஞ்சுமுன் யோசித்தார். இது யாருடைய தேநீர்? சுலைமானின் வீட்டுக் கணக்கா? அல்லது அதிபரின் உபயமா? அதிபரின் உபயமென்றால், நான் அவருக்குக் கடமைப்பட்டுப் போக மாட்டேனா?….

தாவூது தாமதிக்க விரும்பவில்லை. தேநீரை அருந்தி முடிந்தவுடன் முதலாம் ஆண்டிற்குச் சென்று விட்டார். இருபது பிள்ளைகள். குவளை மலர்போல ஒளிவீசும் கண்களுடன் தாவூது வாத்தியாரை மிரட்சியுடன் பார்த்து, அங்குமிங்குமாக தரையில் சிதறி அமர்ந்தனர்.

வரவு பதிந்து முடித்தார். இன்றைய நாளையும் அவர் வீணாக்க விரும்பவில்லை. மாணவர்களின் பெயர்களைக் கேட்டறிந்தார். தன்னுடைய கைவிரல்களை மடக்கி மாணவர்களுக்கு எண்களைக் கற்பித்தார்.

கட்டிடத்திலுள்ள எல்லா வகுப்புகளுக்கும் தானே மாறிமாறிப் பாடங்களை நடத்தினார். புதிய ஆசிரியர் என்பதாலோ என்னவோ, மாணவர்கள் மிகுந்த பயபக்தியுடன் பாடங்களைக் கேட்டார்கள், வாசித்தார்கள், பயிற்சிகளைச் செய்தார்கள்.

அதிபர் தனது அறையில் வேலையாக இருந்தார்.

தாவூது இன்றையப் பொழுதைத் திட்டமிட்டார். இன்று மாலைக்குள் ஒட்டறை அடித்து முடிக்க வேண்டும். இயலுமானால் பெற்றாரின் உதவியுடன் கட்டிடத்திற்கு சுண்ணாம்பு வெள்ளை அடிக்க வேண்டும். கதவுகளைத் திருத்த வேண்டும்.

கட்டிடத்தைச் சுற்றி உள்ள புல்பூண்டுகளை அகற்ற வேண்டும்…..

இன்றைக்கு வீடு செல்ல முடியாது. இனி வெள்ளிக்கிழமைதான். மதியம் மாணவர்கள் சென்று விட்டார்கள். சுலைமான் வந்தான். அதிபர் அழைப்பதாகக் கூறினான். அதிபரின் அறை மேசையில் உணவு பரிமாறப்பட்டிருந்தது. அதிபரின் தயவில் தான் எப்படி உணவு உட்கொள்ள முடியும்? தேநீர் கணக்கே மனதில் உறுத்திக் கொண்டிருக்கிறது….

“நான் சாப்பாடு கொண்டு வந்திருக்கிறேன். நீங்கள் சாப்பிடுங்கள்” என்று மென்மையாக மறுத்துவிட்டு, அதிபர் பதில் கூறுமுன்னர் அறையை விட்டு வெளியே வந்தார். மேசையில் தன்னுடைய பாண் பார்சலைப் பிரித்தார். கிழங்குச் சொதியில் ஊறி, பாண் கனத்துப் போயிருந்தது. ஒரு வேலையைச் செய்து முடிக்கும் வேகத்தோடு பாணைச் சாப்பிட்டு முடித்த போது, அதிபர் வாய் நிறைய வெற்றிலையை அடக்கிக் கொண்டு தாவூதுக்குமான கொஞ்சம் பாக்கு கொண்டு வந்தார்.

“பழக்கமில்லை” என்ற ஒரே சொல்லோடு தாவூது மறுத்துவிட்டார்.

‘கமகம’வென்று கறுத்தக் கொழும்பான் மாம்பூக்கள் மெல்லிய வாசனை வீச, அளவில் சிறிய தேனீக்கள் பூக்களை மொய்த்துக் கொள்ள – பலமாக அசைந்தால் மாம்பூக்கள் சொரிந்து விடுமோ என்ற வகையில் மாவிலைகள் மெல்லிதாக சாமரம் வீச தாவூது மாஸ்டரும் அதிபரும் மர நிழலில் கதிரைகளைப் போட்டு அமர்ந்தனர்.

“மாஸ்டர், ‘இன்வென்ரறி’ எல்லாம் சரி பார்த்து மூன்று பிரதிகளில் கொப்பி பண்ணி விட்டேன். அவ்வளவு சாமான் இல்லை. லொக் புத்தகத்திலும் குறிப்பு எழுதிட்டன். நீங்கள் கையெழுத்துப் போட்டு எடுத்துக் கொண்டால் சரி. சாமான்கள் எல்லாம் சரியாகத்தான் இருக்கு. நான் இன்றைக்கு இரவு இங்கதான் தங்குவன். வேறு விபரங்கள் ஏதும் இருந்தால் கேட்டுக் கொள்ளுங்கோ”

தாவூதுக்கு அதிபராக இருந்து பழக்கமில்லை. மேலதிகமாக என்ன விபரம் கேட்பதென்பதும் புரியவில்லை.

“மாஸ்டர் டெய்லி வந்து போற யோசனையா? அல்லது இங்கேயே தங்கி இருக்கிற மாதிரி ஏற்பாடா?”

“ஒன்டும் முடிவு பண்ணல்ல. ஆனா, இங்க தங்கி இருக்கிறது நல்லமென்டுதான் படுது. முடிவு எடுக்கணும்”

“இங்கு தங்குறது எண்டாலும் நல்லதுதான். டெய்லி பத்து மைல் பதினைந்து மைல் சைக்கிள் ஓடுறது கஷ்டம். அதக்காட்டி இங்கேயே தங்கிக் கொள்ளலாம். நல்ல ஊர், நல்ல சனங்கள். பிள்ளைகளோ நல்ல உதவிகள் செய்யும். தேவை என்டு சொன்னால் அரிசி, விறகு, மரக்கறியெல்லாம் அவங்களே கொண்டு வருவாங்க. உங்களுக்கு மட்டுந்தானே…? நீங்களே சமைச்சுக் கொள்ளலாம். கறிக்கும் பஞ்சமில்லை. வேண்டிய மீன் எடுக்கலாம். இங்கே வரால் மீன் பிரபலம். விலையும் மலிவு. நான் இங்கு வந்தால் வரால் மீன்தான் கறி. வீட்ட போகும் போது பத்து கிலோ கருவாடு கொண்டு போவன். பிள்ளைகள் விரும்பிச் சாப்பிடும். நீங்க விரும்பினா இங்கேயே இரண்டு மூன்று ஏக்கர் வயல் செய்யலாம். ஆயமெல்லாம் குறைவு. நல்லா விளையுற வயல்…” என்று அதிபர் அடுக்கிக் கொண்டே போனார். தாவூதுக்கு அருவருப்பாக இருந்தது. எழுந்து சென்று விடலாமா என்று கூட நினைத்தார். பாடசாலை அபிவிருத்தி, மாணவர் கல்வி நலன் இது பற்றி ஒன்றுமே பேசமாட்டாரா…?

“என்ன மிஸ்டர் மௌனமாகிட்டீங்க? உண்ட களைப்பா? வரால் கருவாடு ஊருக்குக் கொண்டு போறதெண்டால் இப்பவே சுலைமானுக்கிட்டச் சொல்லி வையுங்கோ. இங்கத்தய வரால் மீன் படு விஷேசம். வரால் மீன் மற்ற மீன் மாதிரி இல்ல. மிக்க வைராக்கியம் கொண்டது. எல்லா இரைகளையும் அது சாப்பிடாது. உயிர் மீன், உயிர் இறால் இப்படித்தான் சாப்பிடும். செத்த மீனையோ, செத்த இறாலையோ கடைசி வரைக்கும் சாப்பிடாது. உணவே கிடைக்காமல் சாக வேண்டிய நிலை வந்தாலும் சரிதான். வரால் மீனின் குணம் மாறவே மாறாது. அப்படியரு பிடிவாதம். மனிதர்களிலும் அப்படிப் பிடிவாத குணம் கொண்டவர்கள் சிலர் இருக்கிறார்கள்” அதிபர் நீட்டிக் கொண்டே போனார்.

தாவூதுக்கு மனதில் வேறு சிந்தனை தடம் புரண்டது. கொண்ட கடமையில் வரால் மீனின் பிடிவாதத்துடன் ஆசிரியர்கள் தொழிற்பட்டால் மாணவ சமூகம் இலகுவாக முன்னேறிவிடுமே. ஆனாலும் தாவூது மாஸ்டர் ஒன்றும் பேசவில்லை.

வீட்டில் கதீஜாவும் மகனும் என்ன செய்து கொண்டிருப்பார்கள்? சம்பளம் எடுத்திருப்பாளோ…? நான் வரும்போதும் வீட்டில் பணம் இருக்கவில்லையே… சமையல் என்ன செய்திருப்பாள்? தாவூதுக்குத் தோள் குறுகுறுத்தது. பாடசாலை விட்டு வந்ததும் மகன் தோள் மீது ஏறிக் கொண்டு குனிந்து மூக்கில் விரலைச் செலுத்தி கிச்சுக்கிச்சு மூட்டி….

தாவூது திரும்பிப் பார்த்தார். அதிபர் இலேசான குறட்டை ஒலியுடன் உறங்கிக் கொண்டிருந்தார். தாவூதுக்கு இப்படியான நேரங்களில் உறங்கிப் பழக்கமில்லை. பன்பையைத் திறந்து பிஜாமா சாரனை எடுத்து உடுத்துக் கொண்டார். சட்டையைக் கழற்றி வைத்து விட்டு சாரனை சண்டிக் கட்டுக் கட்டிக் கொண்டு புறப்பட்டார்.

தும்புத்தடியுடன் நீளமான தடியன்றை இணைத்துக் கட்டினார். பாடசாலைக் கட்டிட உள்புறம், வெளிப்புறமெல்லாம் ஒட்டறை அடித்து முடித்தார். ஆங்காங்கே முளைத்திருந்த குளவிக் கூடுகளை எல்லாம் தட்டி விட்டார். கட்டிடத்திற்கு வெளிப்புறமாக சிவலைக் குருவியன்று கூடு கட்டி முட்டை இட்டிருந்தது. பழைய அட்டைப் பெட்டியன்றை எடுத்துக் குருவிக் கூட்டை மறைத்து ஆதரவாக இணைத்துக் கட்டினார். கட்டிடத்தினுள் சேர்ந்த ஒட்டறைக் கழிவுகளையும் மற்றும் கஞ்சல்களையும் ஒன்றாகச் சேர்த்துத் திரட்டிக் குழி ஒன்றை வெட்டிப் புதைத்தார். இன்னொரு நாளில் இந்தக் குழியில் வாழைக் கன்றொன்று நட வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார்.

அதிபர் அறையில் கிடந்த துண்டுக் கயிறுகளை ஒன்றாக முடிந்து நீளக் கயிறொன்று தயாரித்தார். பாடசாலைக்க ட்டிடத்தைச் சுற்றி பத்து அடிக்கு வெளியே கயிறினால் செவ்வகம் ஒன்று அமைத்தார். அதற்குள் அகப்பட்ட புல், பூண்டு முதலிய சகலதையும் மண்வெட்டியால் செதுக்கி எடுத்துத் துப்புரவு செய்தார். கட்டிடச் சுவரின் வெளிப்பக்கத்தில் கட்டமமைத்து, பாடசாலையின் பெயர் எழுதப்பட்டிருந்த இடத்தை நோக்கினார். எந்த எழுத்தும் புரியவில்லை. வாளியில் நீர் அள்ளி சிறிய கயிற்றுத் துண்டால் தேய்த்து ஊத்தை அகற்றினார். இப்போது அந்த இடம் பளிச்சென்று துப்புரவாக, பாடசாலையின் பெயர் தெளிவாகத் தெரிந்தது. அல்லிக்காடு அ.மு.க. பாடசாலை. கொஞ்சம் சுண்ணாம்பு வெள்ளையும் அடித்து முடித்தால் நன்றாக இருக்கும் என்று தாவூது நினைத்துக் கொண்டார்.

இதையெல்லாம் செய்து முடிக்கவும் மாலைச் சூரியன் செந்நிறம் பெற்றுச் சரியவும் சரியாக இருந்தது. அதிபர் அப்பொழுதுதான் நித்திரைவிட்டு எழுந்திருந்தார். அங்கு நடைபெற்றிருந்த மாற்றங்களைக் கண்டு புருவங்களை உயர்த்திப் பார்த்தார்.

“நல்ல வேலைகள் நடந்திருக்கு போல….”

“அப்படியண்டும் பெரிசா இல்ல. சும்மா இருந்த நேரத்தில உடம்புக்குக் கொஞ்சம் எக்சசைஸ். அவ்வளவுதான்”

சுலைமான் தேநீரோடு வந்தான். இப்போது தாவூது மாஸ்டரே வாங்கிக் கொண்டார். இரண்டு கிளாஸ்களில் தேநீரை நிரப்பி, சின்ன கிளாஸைத் தான் எடுத்துக் கொண்டார். பெரிய கிளாஸ் தேநீர் அதிபருக்கு.

“சுலைமான், இனி தேநீர், சாப்பாட்டுக் கணக்கெல்லாம் என்னோடது சரியா? எல்லாம் குறிச்சி வைச்சிக்கோ. கிழமை முடிஞ்சி என்கிட்டக் காசு வாங்கிக்கோ. என்ன சரியா?” தாவூது சுலைமானுக்கு மட்டும் கேட்கும்படி கூறினார்.

“என்ன சொல்றீங்க சுலைமானுக்கு?”

“ஒன்றுமில்லை… ராச்சாப்பாடு பற்றி”

இரவுச் சாப்பாட்டை சுலைமான் கொண்டு வந்த போது தாவூது மாஸ்டரே அதனை வாங்கிப் பரிமாறினார். அளவுக்கதிகமாக தேங்காய்ப்பூ இட்டு அவித்த மஞ்சள் நிற சோளம் பிட்டு, வரால் மீன் குழம்பு, கூடவே செம்பொன் நிறத்தில் வரால் மீன் பொரியல். இனிமேல் இது கிடைக்குமோ என்ற கவலையில் அதிபர் மீன் குழம்பை ஒரு கை பார்த்தார். அல்லிக்காட்டு வரால் மீனை தாவூது முதன்முறையாகச் சுவைத்துப் பார்த்தார். ருசிதான். அலாதிச் சுவை. வரால் மீனுக்கு இப்படியரு ருசியையும் கொடுத்து, அப்படியரு பிடிவாதத்தையும் ஆண்டவன் தந்துள்ளானோ?

சாப்பாடு முடிந்த கையோடு அதிபர் பாலர் மேசைகளை அடுக்கி படுக்கை தயாரித்தார். பாக்கை வாயில் போட்டுக் கொண்டார். தாவூதுக்கு நித்திரை வர நேரமாகும். பாடசாலை வளவை ஒரு முறை சுற்றி வந்து மாமரத்தின் கீழ் நின்றார்.

“என்ன மாஸ்டர் பள்ளிக்கூடம் பிடிச்சிருக்கோ?”

“ஆமாம், ஆனால் இங்க கனக்க வேலைகள் செய்ய வேண்டி இருக்கு. முழுமையாகப் பாடுபட்டா இந்தப் பாடசாலையை நல்ல உருப்படுத்தி எடுக்கலாம். பிள்ளைகளும் கெட்டித்தனம் கொண்ட பிள்ளைகளாகத்தான் படுது”

“ஒரு நாள் அனுபவத்தோடயே பிள்ளைகளைப் புரிஞ்சி கொண்டீங்க போல. இங்க இன்னொரு ஆசிரியர் வேண்டும். அப்பதான் படிப்பித்தல முறையாகச் செய்யலாம். எனக்குக் கூட இந்தப் பள்ளிக்கூடத்த விட்டுப் போக விருப்பமில்லை. ஆனால ஊரில வீடொன்று கட்ட வேண்டியிருக்கு. திருத்தம் கொம்பன்சேஷன் எடுத்தநான். காசு அங்கால இங்கால செலவாகிப் போகும். அதக்காட்டி பழுதான வீட்டைத் திருத்திப் போடுவம் என்டு பாக்கிறன். ஊரோட இருந்தாத்தான் அதுக்கெல்லாம் வசதி”

கொம்பன்சேஷன் என்றதும் தொண்ணூறு கலவரங்களில் தனது வீடும் சேதமடைந்தது ஞாபகத்திற்கு வந்தது. ஒரு பக்கம் கூரை இடிந்து வீழ்ந்து, சுவரின் காரை பெயர்ந்து பழுதடைந்து திருத்துவதற்கு காசில்லாமல் விறாந்தைக்குள் மட்டும் கொஞ்சக்காலம் முடங்கிக் கிடந்து அல்லல்பட்டது ஞாபகத்திற்கு வந்தது. கூரையைத் திருத்த பதினைந்தாயிரம் வரை செலவாகும் என மதிப்பிட்டார். அதனைக் கொம்பன்சேஷனாகப் பெற்று திருத்தம் செய்ய நினைத்து விண்ணப்பிக்கப் புறப்பட்டார். தேவைப்பட்ட ஆவணங்களைச் சேகரிப்பதற்காக ஏற்பட்ட அலைச்சலில் அதனைக் கைவிட்டு பின்னர் ஆறுமாத சம்பள முற்பணம் பெற்று கூரையைத் திருத்திக் கொண்டார். ஆறு மாதச் சம்பள முற்பணத்திற்கான தவணைப் பணம் இப்போதும் வட்டியுடன் தனது சம்பளத்தில் வெட்டப்பட்டு வருவதையும் நினைவுபடுத்திக் கொண்டார்.

“தாவூது மாஸ்டர், ஏன் நீங்கள் கொம்பன்சேஷனுக்குப் போடவில்லை? சேதங்கள் ஏதும்…?”

“வீட்டுக் கூரையன்று சேதம். பதினைந்தாயிரம் மட்டில எஸ்டிமேட், கூட இருந்தவங்களெல்லாம் முப்பதுக்குப் போடு என்டு வற்புறுத்தினாங்க. எனக்கு விருப்பமில்ல. என்னத்துக்கு பொய் சொல்லிக் காசு எடுக்கணும். அலைச்சல் வேற… விட்டுட்டன்”

“நேர்மைதான். பிடிவாதம்தான். வரால் மீன்ட பிடிவாதம் உங்களுக்கிட்டயும் இருக்கு என்டு சொல்லுங்க” என்று கூறி வேடிக்கையாகச் சிரித்தார் அதிபர்.

தாவூது புன்முறுவலோடு நிறுத்திக் கொண்டார்.

பாலர் வாங்கில் நித்திரைக்காகப் புரண்டு கொண்டிருந்த அதிபரை நோக்கி தாவூது மாஸ்டர் கேட்டார்.

“பாடசாலையைச் சுற்றி நல்ல வேலயண்டு போட்டா நல்லதில்லையா? வேலிக்கட்டை, இரண்டு அந்தர் கம்பி, அள்ளு இவ்வளவும் இருந்தால் அழகான வேலியண்டு போட்டுடலாம். மாடு வராது. மாணவர்களுக்கு வீட்டுத் தோட்டப் பயிற்சி வழங்கலாம். காய்கறி பயிர் செய்யலாம். வேலி போட எவ்வளவு கோஸ்ட் ஆகும்?”

கொட்டாவி விட்டுக் கொண்டே அதிபர் கூறினார்.

“ஒரு மூவாயிரம் ரூபா தேவைப்படும். ஒபீஸ்ல கேட்டுக் கேட்டு அலுத்துப் போனன்”

“எப்படியும் வேலி போட வேணும்”

“பணத்துக்கு என்ன செய்யப் போறீங்க?”

“அதுக்கு ஒரு திட்டம் வெச்சிருக்கிறன்”

அதிபர் நிமிர்ந்து பார்த்தார். தாவூது மாஸ்டர் கட்டிடத்திற்கு வெளியே மஞ்சள் நிற சேலையுடுத்தி, முக்காடிட்டு, நாணம் கலந்த பெண்களைப் போல குனிந்து நிற்கும் கறுத்தக் கொழும்பான் மாமரங்களைப் பார்த்தார்.

“கறுத்தக் கொழும்பான் மாம்பழங்களை விற்றெடுத்தால் அந்தப் பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியாதா?”

“பாதுகாத்து எடுக்க முடியுமானால் பெறலாம் மாஸ்டர்”

“சிரமம்தான். நான் அதனையே சவாலாக ஏற்றுக் கொள்கிறேன். தாவூது மாஸ்டர் வெளியே பேசவில்லை. மனதுக்குள் பிடிவாதத்துடன் திட்டமொன்றைத் தீட்டினார். அதிபர், தாவூது மாஸ்டரை வினோதமாகப் பார்த்தார். வரால் மீனின் பொரியல் ஏப்பமும் பாக்கு மணமும் தந்த மயக்கத்தில் அப்படியே உறங்கிப் போனார்.

வெள்ளிக்கிழமை மாலை தாவூது மாஸ்டர் வீடு திரும்பினார். மகனுக்குக் காய்ச்சல் கண்டிருந்தது. கதீஜாவும் இருமிக் கொண்டிருந்தாள்.

“டீ போம் கொடுத்து சம்பளம் எடுத்ததா?”

“இல்ல. டீ போம்ல ரெண்டு கையெழுத்து வேணுமாம். நீங்க அவசரத்தில் ஒரு கையெழுத்துதான் போட்டிருக்கீங்க. பணத்தை பேங்குக்குத் திருப்பிட்டாங்க. அடுத்த மாதச் சம்பளத்துடன் எடுக்கலாமாம்” கதீஜாவின் எரிச்சலை தாவூது புரிந்து கொண்டார்.

“அப்ப காசுக்கு என்ன செய்யுரது?”

“இதோ” கதீஜா வலது கைக்குள் பொத்திய வண்ணம் தாவூதுக்கு முன் எதையோ நீட்டினாள். கல்யாண மோதிரம். கதீஜாவிடமுள்ள இரண்டு நகைகளுள் ஒன்று. கல்யாணத்தன்று தான் வாங்கிப் போட்டது.

“ஈடு வைக்க வேணாம். காசு காணாது. விற்றுப் போடுங்கோ”

கதீஜாவின் குரலில் தொனித்தது விரக்தியா, வேதனையா என்பதை தாவூதால் புரிந்து கொள்ள முடியவில்லை. வேறு வழியுமில்லை.

வாசலில் சத்தம் கேட்டது. அன்வர் ஆசிரியர்.

நாளை சனிக்கிழமை காலை பத்து மணிக்கு உங்களுக்குப் பாடசாலையில் பிரியாவிடை ஒழுங்கு செய்திருக்கிறோம். மறக்காம வாங்க சேர். அத்தோட உங்கட சினேகிதன் சமீம் தொர ஊருக்கு வந்திருக்கிறார். நல்ல செல்வாக்கான மனுசன். அவர்ட்ட சொல்லி உங்கட டிரான்ஸ்பரை கேன்சல் செய்யுங்க சேர்”

“பார்க்கலாம் அன்வர். சமீம் என்ர இள வயதுச் சினேகிதன். எனக்கென்று சொன்னால் என்னமும் செய்வான்” சமீமும் தானும் பிஞ்சு வயதில் இருந்து கொண்டிருந்த சினேகிதத்தையும் ஒருவருக்கொருவர் அன்புடனும் வாஞ்சையுடனும் வாழ்ந்த அந்தக் காலத்தையும் தாவூது நினைத்துக் கொண்டார்.

அடுத்த நாள் காலையில் பிரியாவிடைக் கூட்டம். அதிபரும் ஆசிரியர்களும் தாவூதின் சேவைகளைப் பாராட்டிப் பேசினார்கள். பிரியாவிடை அன்பளிப்பாக அழகான அட்டைப் பெட்டியில் ஆறு கிளாஸ்களை அடுக்கி அன்புடன் வழங்கினார்கள். தான் அந்தப் பாடசாலையில் செய்த சேவைக்கான அங்கீகாரமாக நினைத்து அதனை மகிழ்வுடன் பெற்றுக் கொண்டார்.

வீட்டுக்குச் சென்றதும் அட்டைப் பெட்டியைப் பிரித்து, கதீஜாவுக்கு கிளாஸ்களைச் சந்தோஷத்துடன் காட்டினார். அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்று விட்டாள். ஆறு கிளாஸ்களையும் பூரிப்புடன் திருப்பி அடுக்கி, அல்லிக்காட்டுப் பாடசாலையில் பாவனைக்கு வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்து பன்பையினுள் அடுக்கிக் கொண்டார்.

“கிளாஸ் கொண்டு வந்ததெல்லாம் சரி, மத்தியானச் சோற்றுக்கு அரிசி இல்லையே, மோதிரம் வித்தாச்சா?”

அப்போதுதான் தாவூது மாஸ்டருக்கு நகைக் கடைக்குச் செல்ல தான் மறந்து விட்டது ஞாபகத்திற்கு வந்தது. அரைப்பவுண் மோதிரத்தை இரண்டாயிரத்திற்கு விற்கலாமா? இரண்டாயிரத்தில் இம்மாதத்தைக் கட்டுப்பாட்டோடு கடத்தி விடலாமா? சைக்கிளுக்கு டயர், ரியூப் வாங்க நினைத்தோமே… பணம் போதுமா?

டயர், ரியூப் வாங்குவதை அடுத்த மாதத்திற்கு ஒத்திப் போட்டார். சந்தையில் அரிசி, கருவாடு, மரக்கறி எல்லாம் வாங்கிக் கொண்டு வீடு திரும்பிய போது, கதீஜா வாசலிலேயே நின்று புன்முறுவலோடு வரவேற்றாள்.

“என்னங்க சமீம் தொர ஆள் விட்டிருந்தார். உங்கள பின்னேரம் வீட்டில சந்திக்கட்டாம். இடமாற்றத்த கேள்விப்பட்டாரோ என்னவோ அவரிட்ட கொஞ்சம் பேசி ஒழுங்கு பண்ணுங்க என்ன?” இப்போதே அல்லிக்காட்டுக்கான இடமாற்றம் ரத்துச் செய்யப்பட்டு விட்ட மகிழ்ச்சியோடு கதீஜா காணப்பட்டாள்.

கதீஜா மறக்கவில்லை. மாலையில் தாவூதை வெளிக்கிடுத்தி அனுப்பி வைத்தாள். நீண்ட நாட்களுக்குப் பிறகு சமீமைச் சந்திக்கும் ஆர்வத்தோடு முன்சில்லில் காற்றிறங்கிய சைக்கிளையும் தள்ளிக் கொண்டு புறப்பட்டார்.

கணவர் திரும்பும் வரை மகனையும் இடுப்பில் வைத்துக் கொண்டு கதீஜா முற்றத்திலேயே நிற்கின்றாள்.

“என்ன கதீஜா வாசலிலேயே நிற்கிறீங்க…? மகன்ட காய்ச்சல் எப்படி?”

சைக்கிளை வேலியோரம் சாய்த்துக் கொண்டே தாவூது கேட்டார்.

“மத்தியானம் குறைஞ்சிருந்துது. இப்ப கொஞ்சம் கூடிவிட்டுது. ராத்திரிக்கு மருந்து வாங்கணும். அதுசரி, அவரக் கண்டீங்களா? என்னங்க கேட்டாரு?”

“பழைய கதை, புதிய கதை எல்லாமே கேட்டாரு. அல்லிக்காட்டுக்கு இடமாற்றம் வந்ததும் அவருக்குத் தெரியும், அது விசயமாகத்தான் கூப்பிட்டாரு”

“இடமாற்றத்தை மாற்றித் தாரனென்டாரா?”

“அதெப்பத்திப் பேசல்ல”

“அப்ப, எதெப்பத்திங்க பேசினாரு?”

“அடுத்த வாரம், வெளிநாட்டிலிருந்து அவர்ர மகன் வாரானாம். ஒரு வாரம் நிப்பானம். அல்லிக்காட்டிலிருந்து கொஞ்சம் வரால் மீன் கருவாடு கொண்டு வந்து தரமுடியுமான்னு கேட்டாரு” கணவரின் வார்த்தைகளில் சூடேறுவதை கதீஜா அவதானித்தாள். மகனை இறுக அணைத்துக் கொண்டாள். தன் இதயத்திலுள்ள தீயும், மகனின் காய்ச்சல் சூடும் சேர்ந்து தன்னைப் பொசுக்கி விடுமோ என்ற பயத்தில் கதீஜா உள்ளே சென்று விட்டாள்.

தாவூது ஆவேசமானார். இனி என்ன ஆனாலும் சரி, தன்னுடைய சேவைக் காலத்தில் எஞ்சியுள்ள வருஷங்களை அல்லிக்காட்டின் கல்வி வளர்ச்சிக்காகவே செலவிட தான் எடுத்துக் கொண்ட தீர்க்கமான முடிவை, தான் இனி, யாருக்காகவும் மாற்றிக் கொள்ளப் போவதில்லை… மூக்கு நுனியில் முத்தாக வியர்க்கத் தொடங்கியது.

அடுத்த வாரமே அல்லிக்காட்டுப் பெற்றாரைப் பாடசாலைக்கு அழைத்தார். தன்னைச் சுருக்கமாக அறிமுகம் செய்து கொண்டார். பாடசாலை அபிவிருத்திச் சபையை ஏற்படுத்தினார். தான், இந்தப் பாடசாலையில் செய்ய நினைத்துள்ள அபிவிருத்திப் பணிகளைப் பெற்றாருக்கு விளக்கினார்.

தான் பாடசாலை நேரத்தில் மட்டுமல்ல, மாலை நேரத்திலும் மாணவர்களுக்காகப் பாடம் நடத்த உத்தேசித்திருப்பதைக் கூறினார். இரவில் பெற்றாரும் கொஞ்சம் பிள்ளைகள் படிப்பதைக் கவனிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பாடசாலைக் காலங்களில் மாணவர்களைத் தொழிலில் ஈடுபடுத்த வேண்டாம் எனக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்… ஒரு புதியவரிடமிருந்து புதிய விஷயங்களைக் கேட்கும் ஆர்வத்துடன் பெற்றார் அவரது பேச்சில் ஐக்கியப்பட்டுப் போனார்கள்.

பாடசாலைக் கட்டிடத்திற்குச் சுண்ணாம்பு வெள்ளை அடிப்பதைப் பற்றிக் கூறினார். சிலர் பணம் தர முன்வந்தார்கள். சிலர் உடல் உழைப்பைத் தர உறுதி அளித்தார்கள். அடுத்த வாரமே பாடசாலைக் கட்டிடம் வெண்ணிறச் சீருடைக்கு மாறிவிட்டது.

ஒரு நாள் வெள்ளிக்கிழமை மாலை. சுலைமானைக் கூப்பிட்டு, சாப்பாட்டுக் கணக்குகளைச் சரிபார்த்துக் காசு கொடுத்துக் கொண்டிருந்தார்.

“சேர், இன்டைக்கு கொஞ்சம் வரால் மீன் கருவாடு வீட்டுக் கொண்டு போறீங்களா என்டு வாப்பா கேட்டாங்க”

முதன்முறையாக தாவூதின் மனதில் சலனம் ஏற்பட்டது. இன்றைக்கு கொஞ்சம் கருவாடு வாங்கிப் போனால் என்ன? கதீஜா விரும்பிச் சாப்பிடுவாள். நான் இல்லாத ஓபுத அவவுக்கு கறிப்பிரச்சினையும் இருக்காது… காசைப் பிறகு கொடுக்கலாம்…

“வேண்டாம் சுலைமான்”

“ஏன் சேர்?”

“எங்க வீட்ல யாரும் சாப்பிடறதில்லை”

அல்லிக்காட்டு வரால் மீன் கருவாட்டைச் சாப்பிட விருப்பம் இல்லாதவர்களும் இருக்கிறார்களா என நினைத்துக் கொண்ட சுலைமான், மாஸ்டரை வினோதமாகப் பார்த்தான்.

பாடசாலை அபிவிருத்திச்சபை நிருவாகக் குழுவை ஒரு நாள் மாலையில் கூட்டினார். தான் இந்தக் கூட்டத்தை விஷேடமாகக் கூட்டுவதாகவும், தனது நோக்கத்தில் வெற்றியடைய எல்லாரும் உதவி செய்ய வேண்டும் எனவும் ஆரம்பத்திலேயே வினயமாகக் கேட்டுக் கொண்டார்.

“இந்தப் பாடசாலையில் இப்போது முக்கியமாக இரண்டு குறைகள் இருக்கின்றன. ஒன்று தளபாடப் பிரச்சினை. அதுபற்றி நான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குக் கோரிக்கைக் கடிதங்களை உத்தியோகபூர்வமாக எழுதியிருக்கிறேன். அடுத்தது, பாடசாலை வளவைச் சுற்றி முள்கம்பி வேலி அமைத்தல். ஆடு, மாடுகள் வருவதைத் தடுக்க வேண்டும். வளவை அச்சறுக்கை பண்ண வேண்டும். அப்போதுதான் இங்கு கொஞ்சம் பயிர்பச்சை வளர்க்கலாம். மாணவர்களுக்கு வீட்டுத் தோட்டப் பயிற்சி வழங்கலாம். சுற்றுவேலி அமைப்பதற்கு காரியாலயத்தை எதிர்பார்க்காமல், நாமே செய்து முடித்தால் என்ன என்று யோசிக்கிறேன். அதற்கான திட்டமும் ஒன்று வைத்திருக்கின்றேன்” என்று தாவூது மாஸ்டர் பேசிய போது, கூட்டத்தினர் ஆரவமாகக் கேட்கத் தொடங்கினர்.

பாடசாலை மண்டபத்திற்குப் பக்கமாக அணிவகுத்து நிற்கும் ஐந்து கறுத்தக் கொழும்பான் மாமரங்களின் பக்கம் கையை நீட்டிக் கேட்டார். “இந்த மாம்பழங்களுக்கு வழக்கமாக என்ன நடக்கிறது?”

“பிஞ்சிலே கொஞ்சத்த அடிச்சுப் போடுவான்கள். சனி, ஞாயிறிலே வெளியாரும் பிடுங்கிறது. மிச்சப்படுறத யாரும் பழகாகக் கொண்டு போய்ச் சேர்ப்பாங்க” பின்வரிசையில் இரந்த தம்பி லெப்பை என்பவர் ‘யாரும்’ என்ற சொல்லுக்கு ஓர் அலாதியான அழுத்தம் கொடுத்துக் கூறியபோது தாவூதிற்கும் ஆத்திரம் வந்தது.

“இம்முறை அப்படி நடக்காது”

“அப்போ?” கேள்விக் குறியோடு ஒருவர் எழுந்து நின்றார்.

“நான் இப்போ ஒரு திட்டம் சொல்லப் போறன். நீங்க எல்லாரும் இதுக்கு அனுமதி தரணும். இது சம்பந்தமான எழுத்து மூல அனுமதியை நான் காரியாலயத்திலிருந்து பெறுவன்”

கூட்டத்தில் சலசலப்பு…

“கொஞ்சம் எல்லாரும் அமைதியாக இருங்க. மாஸ்டர் சொல்லி முடிக்கட்டும்” சுலைமானின் வாப்பா சகலரையும் கையமர்த்தி மாஸ்டர் பேசுவதற்கு அமைதி ஏற்படுத்திக் கொடுத்தார்.

“இந்த மாமரங்கள் யாரால் வைக்கப்பட்டதோ தெரியாது. ஆனா, இப்ப அது பாடசாலைக்குச் சொந்தம். பாடசாலைச் சொத்து. இதனுடைய பூரணமான பயனும் பாடசாலைக்கும், மாணவர்களுக்கும் கிடைக்கணும். இந்த முறை எல்லாப் பழங்களையும் பக்குவமாகப் பாதுகாத்து எடுக்கணும். ஒரு பழம் கூட வீணாகக் கூடாது. முழுவதையும் விற்று இந்தப் பாடசாலையைச் சுற்றிவர வேலி போடணும். காவல் தேவை. நானே காவல் வேலையை முக்கியமாகச் செய்ய முடிவு எடுத்திருக்கன். ஆனா, நான் ஊருக்குப் போகின்ற நாளையில மட்டும் நீங்க யாராவது இதப் பாதுகாத்துத் தரணும்”

மாஸ்டரின் திட்டத்தை எல்லோரும் ஆமோதித்தனர். மாஸ்டர் ஊருக்குப் போகின்ற நாட்களைச் சொன்னால் தாங்கள் அந்த நாட்களில் மாமரங்களைப் பாதுகாத்துத் தருவதாக வாக்களித்தனர். பெற்றார்களின் பெயர்களை எழுதி, அவர்கள் காவல் செய்ய வேண்டிய நாட்களைக் குறித்துக் கொண்டிருந்த போது தம்பி லெப்பை முணுமுணுக்கும் சத்தம் கேட்டது.

“எல்லாம் கதைக்கிறதுதான். ஆனா, மாம்பழம் பழுக்கக்குள்ள மட்டும் பழமெல்லாம் மாஸ்டரின் வீட்டுக்குப் போயிடும்” தனக்கு மட்டும் கேட்கும்படிதான் அவர் கூறினாலும், அந்தக் கதை எப்படியோ தாவூதின் காதுகளிலும் விழுந்து விட்டது.

“பாடசாலைச் சொத்தை எனது வீட்டுச் சொத்து போலப் பாதுகாப்பேனேயழிய, வீட்டுக்குக் கொண்டு போக மாட்டன். இது என்ட அடிநாளயப் பழக்கம். இதில் யாரும் சந்தேகப்படத் தேவையில்ல. இன்டைக்கு நான் உங்களுக்கு ஒரு சத்தியம் செய்து தாரன். இந்த வருஷம் என்டில்ல, இனி எந்த வருஷமானாலும் சரி, இந்த மாம்பழத்தில் ஒரு சதத் துண்டு கூட என்ட வாயிலோ, என்ட குடும்பத்திட வாயிலோ படாது. இது சத்தியம், இது சத்தியம்”

மாஸ்டர் இவ்வளவு ஆத்திரமாகப் பேசியதை யாரும் கண்டதில்லை. மூக்கு நுனி சிவந்து விட்டது. கண்கள் பனிக்க ஆரம்பித்து விட்டன.

சுலைமானின் வாப்பா எழுந்து விட்டார்.

“மாஸ்டர் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளணும். அவர் ஏதோ பகிடியாகத்தான் சொன்னார். நீங்க கோபப்படப்படாது. உங்கள எங்களுக்கு நல்லாத் தெரியும்”

“நான் கோபப்படல்ல. ஆனா, நான் இந்த விஷயத்தில எவ்வளவு சுத்தமா நடந்து கொள்ளப் போறன் என்டத நீங்க பொறுத்திருந்து பாருங்க”

அத்துடன் கூட்டம் முடிந்தது. மாஸ்டர் தாமதிக்காமல், அன்றே மாமரத்தின் அடிப்பகுதிக்கு யாரும் மேலே ஏறா வண்ணம் முள் கம்பிகளைச் சுற்றினார். பழைய தகரடின்களைச்ச ஏர்த்தெடுத்து, அவற்றிற்கு கம்பி நாக்கு வைத்து நீண்ட கயிற்றில் மரத்தின் மேல் தொங்கவிட்டு மணி தயாரித்தார். கயிறை கீழே இருந்து இழுத்தால், கணகணவென்று மணி ஒலி கிளம்பும். அதனால் வெளவால்கள், பறவைகள் பறந்து விடும். இரவில் கயிறு நுனியைப் படுக்கைக்குப் பக்கத்தில் வைத்துக் கொண்டார்.

மாம்பிஞ்சுகள் சரம் சரமாகத் தொங்கிக் கொண்டிருந்தன. இலைகளின் எண்ணிக்கை கூடவா, பிஞ்சுகளின் எண்ணிக்கை கூடவா என பிரமிக்குமளவுக்கு இவ்வருஷம் தொகையாகக் காய்த்திருந்தது. இவ்வளவையும் பாதுகாத்து எடுத்தால் ஒரு மூவாயிரம் பழங்கள் தேறுமா? அதற்குக் கூடவே பார்க்கலாம்.

தாவூதின் மனக்குதிரை சிறகடித்தது. இரட்டைக் கடிவாளம் போட்ட புரவிகள் தடையை உடைத்தெறிந்து கொண்டு ஆகாயப் பாய்ச்சல் காட்டின. மளமளவென்று காய்கள் பறிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மரத்தின் கீழும் மலை மாதிரி சாம்பல் நிறத்தில் முற்றித் திரண்ட மாங்காய்கள்… ஏலக்காரர்கள் விலைகளை உயர்த்திக் கொண்டே போகிறார்கள்… ஐயாயிரம்… ஏழாயிரம்… பத்தாயிரம்… பாடசாலை வேலி கட்டப்படுகிறது. முன் பக்கப் படலைக் கதவு அகற்றப்பட்டு, சீமெந்துத் தூண்கள் எழுப்பப்பட்டு, இரும்புக் கதவுகள் போடப்பட்டு, அதன் மேல் பாடசாலையின் பெயர் பொன்னிற எழுத்துக்களில் பொறிக்கப்பட்டு… கற்பனைக் கயிறு சட்டெனத் தடம் புரண்டு அறுந்து போகின்றது. வளவு முழுக்க மாடுகள் ஏறி இருந்தன. அவற்றைக் கலைப்பதற்காக தாவூது மாஸ்டர் வெளியே வந்தார்.

மகனுக்குக் காய்ச்சல் உரத்திருப்பதாக அல்லிக்காட்டுக்குச் செய்தி வந்திருந்தது. அன்றிரவு சுலைமானின் வாப்பாவை பாடசாலை வளவுக்கு காவல் வைத்துவிட்டு, தாவூது ஊருக்குப் புறப்பட்டார்.

மகனின் காய்ச்சல் தணியவில்லை. டைபாயிட்டாக இருக்குமோ என டாக்டர் சந்தேகப்பட்டார். டவுனிலுள்ள பெரியாஸ்பத்திரியில் காட்டினால் நல்லது என கதீஜா அபிப்பிராயப்பட்டாள். தாவூது மாஸ்டர் மகனைத் தூக்கிக் கொண்டு டவுனுக்குச் சென்றார்.

டாக்டர் சந்தேகித்தது சரிதான். வாட்டில் ஒரு வாரம் இருக்கும்படி நேர்ந்தது. ஒரே மகன். பெயர் சொல்ல ஏக வாரிசு பக்கத்திலேயே இருந்து கவனித்துக் கொண்டார்.

காய்ச்சல் தணிந்து வீட்டுக்கு வந்த அன்றைய தினம் மாலையே தாவூது அல்லிக்காட்டுக்குப் புறப்பட்டு விட்டார்.

“ரெண்டு நாள் இருந்து காய்ச்சலைப் பார்த்துப் போகப்படாதா?”

“இல்ல கதீஜா, நிண்டது நிக்க வந்திட்டன். அங்க என்ன பாடோ தெரியாது. வேற ஆசிரியரும் இல்ல. லீவும் போட முடியாது. போயிட்டு ரெண்டு நாளில வந்திடுறன்”

அடிக்கடி காற்றிறங்கும் முன்சில்லை நசித்துப் பார்த்துக் கொண்டு, பம்பைப் பன்பையில் போட்டுக் கொண்டு சைக்கிளை மிதிக்கும் கணவனை கதீஜா ஏக்கத்தோடு பார்த்தாள்.

இந்த ஒரு வாரமும் சுலைமானின் வாப்பாவே பாடசாலைக் காவல் பார்த்த செய்தியை அறிந்து தாவூது மாஸ்டர் அதிர்ந்து போனார்.

“பகலில் மகன் பார்த்துக் கொண்டான். பின்னேரமும் இரவிலும் நான்தான் காவல். வேறு யாரும் வரல்ல. நம்பி விட்டுப் போட்டுப் போகவும் ஏலாது. சரியாக தொழிலுக்கும் போக முடியாமல் போயிட்டுது”

தாவூதுக்கு பெரிய கவலையாகிவிட்டது. சொந்தத் தொழிலையும் இழந்து காவல் பார்த்திருக்கிறாரா? மனதுக்குள் படம் ஒன்று விரிந்தது. இரண்டு மாதச் சம்பளப் பணத்தையும் ஒன்றாக எடுத்ததில் முன் சில்லுக்கு ரயர், ரியூப் வாங்க என ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள இரு நூறு ரூபாவையும் இவருக்குக் கொடுத்தால் என்ன?

இரண்டு நூறு ரூபாய்த் தாள்களை சிகரட்டைப் போல சுருட்டி, அவரின் கைகளுக்குள் வைத்து அழுத்தி விட்டு, “பரவாயில்லை, இத செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.

“எதுக்கு மாஸ்டர் பணம் எனக்கு?”

“பரவாயில்ல வைத்துக் கொள்ளுங்கள். பிறகு பார்த்துக் கொள்ளலாம்”

சைக்கிளுக்கு ரயர், ரியூப் வாங்குவதை மேலும் ஒரு மாதத்திற்குத் தள்ளிப் போட்டார். மாப்பிஞ்சுகள் முற்றி இருந்தன. அவை, தாவூது மாஸ்டரோடு கதைகள் பேசத் தொடங்கின. ஈச்சங்குலையில் காய்கள் கனத்திருப்பது போல மாமரமெங்கும் காய்களாகவே தொங்கின.

எல்லாம் மூவாயிரம் காய்கள் தேறுமா? – அதற்கும் கூடவே பார்க்கலாம். இன்னும் இரண்டு வாரத்தில் முற்றி விடுமா? மரத்தை அண்ணாந்து பார்த்தார். இப்பவே ஒன்றிரண்டு காய்களில் சாம்பல் நிறம் ஏறி இருந்தது.

அதற்குள் முதலாந் தவணைப் பரீட்சைகள் நடத்த வேண்டி இருந்தது. தவணை விடுமுறை இன்னும் இரண்டு வாரத்தில் வர இருக்கிறது. மகனின் காய்ச்சல் விட்டபாடில்லை. அடிக்கடி ஊருக்குச் சென்றார். ஒன்றிரண்டு நாளில் திரும்பி வந்தார். ஊரிலிருந்து வரும்போது வினாத்தாள்களையும் வாங்கி வந்து பரீட்சைகளையும் செய்தார். கதீஜாவிற்குப் பெரிய மனக்கவலை. தொடர்ந்தாற்போல ஒரு வாரம் தங்கி நின்று மகனின் வைத்தியத்தைக் கவனிக்கிறாரில்லையே என்று மனம் வெதும்பினாள். சைக்கிளுக்கு ரயர் மாற்றவில்லையா எனக் கேட்டபோது மௌனம் சாதித்தார்.

தவணை விடுமுறைக்கு ஒரு வாரம் இருக்கும் போது பாடசாலை அபிவிருத்திச் சபையைக் கூட்டினார். ஏற முற்றிச் சாம்பல் நிறம் திரண்டு குலை குலையாகக் கதை பேசி நிற்கும் கறுத்தக் கொழும்பான் காய்களைப் பெற்றார்.

ஆச்சரியத்துடன் பார்த்தனர். தாவூது மாஸ்டர் எதையும் சாதிக்கக் கூடியவர் எனப் பேசிக் கொண்டனர். புதன்கிழமைக் காலையில் மாங்காய்களைப் பறிப்பதென முடிவாயிற்று. அன்றைய தினமே வியாபாரிகளை அழைத்து ஏலத்தில் மாங்காய்கள் அனைத்தையும் விற்று விடுவதெனத் தீர்மானித்தார்கள்.

முதல் கூட்டத்தின் போது கிண்டல் பேசிய தம்பி லெப்பை அருகில் வந்து மாஸ்டரின் கைகளைப் பிடித்துக் கொண்டு, “மாஸ்டர், நான் பகிடியாக ஏதோ சொல்லிட்டேன். நீங்கள் மன்னிச்சுக் கொள்ள வேணும்” என்றார்.

“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. அதெல்லாம் நான் மனதில் வைக்கிற ஆள் இல்ல. வளவுக்கு வேலி கட்டும் போது நீங்களெல்லாம் வந்து உதவி செய்ய வேணும்”

செவ்வாய்க்கிழமை பாடசாலை விட்டதுமே, அடுத்த நாள் மாங்காய்களைப் பறிப்பதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கத் தொடங்கி விட்டார். மாமரத்தைச் சூழவுள்ள இடத்தைத் துப்பரவு செய்தார். காய்களைக் குவிப்பதற்கு வசதியாக சாக்குகளையும் சேகரித்துக் கொண்டார்.

நாளை அறுவடைக்காகக் காத்திருக்கும் மாமரங்களை வாஞ்சையுடன் அண்ணாந்து பார்த்த போது, அருகில் சுலைமான் நின்று கொண்டிருந்தான்.

“நீங்கள் அன்டைக்குக் கொடுத்த இரு நூறு ரூபாய்க்கு வரால் மீன் கருவாடு தரட்டுமா என்டு வாப்பா கேட்டு வரச் சொன்னாங்க”

“இல்லை வேணாம். இந்த மாங்காய்களைப் பாதுகாத்துத் தந்ததுக்காக அது சேரோட பிரசன்டாம் என்டு போய்ச் சொல்லு” என்று மகிழ்ச்சியோடு சொன்ன தாவூது, மறுபடியும் மாமரங்களை வாஞ்சையோடு பார்த்தார்.

மூன்றாவது மரத்தில் இருந்து பொத்து பொத்தென்று இரண்டு மாம்பழங்கள் விழுந்தன. சுலைமான் ஓடிச் சென்று கைகொள்ளாமல் அள்ளி வந்தான். முதற்பூவில் பிடித்த காய்களாக இருக்கும். அதுதான் வேளைக்கே பழுத்து விட்டன. இந்தப் பழங்களையும் நாளைய ஏலத்தில் சேர்த்து விடலாம்.

“சுலைமான் அதைக் கொண்டு போய் உள்ளே வை” என்று கட்டளையிட்டு விட்டுத் திரும்பிய போது, பாடசாலை வாசலில் ஆள் அரவம் கேட்டது.

“மாஸ்டர் பெண்சாதிக்குச் சுகமில்லையாம், உங்களை அவசரமாக வரட்டாம்”

தாவூது சுலைமானை அழைத்தார். இன்றைக்கும் நாளைக்கும் வாப்பாவை காவல் இருந்து, எல்லா வேலைகளையும் பார்த்துக் கொள்ளச் சொன்னார். பன்பையைச் சைக்கிளில் சொருகிக் கொண்டு ஊர் நோக்கிப் புறப்பட்டார்.

மனைவிக்குத் தொய்வு கூடியிருந்தது. நெஞ்சில் கரகரவென இழுப்பு, மூச்சுவிடக் கஷ்டப்பட்டாள். பாயில் படுத்தவண்ணம் முதுகுத் தண்டில் தலையைணையை வைத்து, தலையைத் தாழ்த்தி மூச்சுக்காக ஏங்கினாள். தாவூது தாமதிக்காமல், பன் பையை இறக்கி வைத்து விட்டு, சைக்கிளைத் தள்ளிக் கொண்டு டாக்டரை அழைத்து வர ஓடினார்.

டாக்டருக்குச் சேதி சொல்லி விட்டு வீட்டுக்குத் திரும்பி, சைக்கிளை வேலியோரத்தில் சாய்த்து விட்டு உள்ளே நுழைந்தவரை மகன் மாம்பழக் கையோடு வரவேற்றான். வாய்க்குள் மஞ்சள் சாறாக மாம்பழத் துண்டுகள். இவனுக்கேது மாம்பழம்? சந்தேகத்தோடு பன் பையைப் பார்த்தவருக்கு நிலைமை புரிந்தது. அங்கேயும் ஒரு கறுத்தக் கொழும்பான் மாம்பழம். தாவூதுக்கு நெஞ்சில் பொறி தட்டியது.

“உள்ளே வை” என்று சுலைமானிடம் சொன்னதை அவன் தவறாகப் புரிந்து கொண்டு மாம்பழத்தைப் பன் பையினுள் வைத்து விட்டானா?

என்ன அநீதி இது?

“கதீஜா” என்று நாலு வீடுகளுக்குக் கேட்கும்படியாக, தன்னையுமறியாமல் ஆவேசமாகக் கத்தினார் தாவூது.

கணவரின் கடூரமான அழைப்பைக் கேட்டு, அதிர்ச்சியைடந்தவளாக தலை நிமிர்ந்து பார்த்தாள் கதீஜா.

மகனின் வாய்க்குள் விரலை விட்டு மாம்பழச் சதையைத் தோண்டி எடுத்து, கையிலிருந்த மாம்பழத்தையும் பறித்துத் தூர வீசி எறிந்தார் அவர்.

தான் கொடுத்த சத்தியம் மீறப்பட்டுப் போனதாகக் கேவலப்பட்டுப் போனார் அவர். தம்பி லெப்பையும் இன்னும் சிலரும் தன்னைச் சுற்றிப் பம்பரம் ஆடிக் கொண்டே கேலி பேசுவதாகக் காதுகளுக்குள் இரைச்சல் கேட்டது.

அல்லிக்காட்டு மக்களுக்கும் பாடசாலைக்கும் தான் மாபெரும் துரோகம் செய்து விட்டதாக உணர்ந்தார் அவர்.

நெற்றிப் பொட்டில் பொறி கலங்க, கையைத் தலைக்கு முட்டுக் கொடுத்த வண்ணம் மெதுவாகத் தடுமாற, நெஞ்சுக் கூட்டுக்குள் புது வலி ஒன்று தோன்றி உடல் பூராக வியாபித்து…….

அல்லிக்காட்டுக்குச் செய்தி கிடைக்க நேரமாகலாம்.

ஆசிரியர் குறிப்பு:
வரால் மீன்கள் எனக்குப் பிடித்த கதை. உண்மையில் யுத்தச் சூழலில் அகால மரணமான எனது மூத்த சகோதரனின் வாழ்வுதான் அது. கொஞ்சம் அழகுபடுத்தி 1997ல் எழுதினேன். கல்வியமைச்சின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் தேசிய ரீதியில் இரண்டாம் பரிசைப் பெற்றுக் கொண்டது.

மூச்சுப் பிடிச்சுக் கொண்டு டைப் பண்ணி அனுப்பிய தம்பி ஸபீர் ஹாபிஸுக்கு ஸ்பெஷல் நன்றி!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *