கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: September 13, 2013
பார்வையிட்டோர்: 14,448 
 
 

பஞ்சாயத்து யூனியன் ஆபீஸில் கவுன்ஸில் மீட்டிங்கை அட்டெண்ட் பண்ணிட்டு ஊருக்குப் போக, பஸ்ஸுக்கு காத்துக் கொண்டிருக்கிறேன். இருக்கிற கூட்டத்தைப் பார்த்தால் எப்படியும் உட்கார இடம் கிடைக்காது, ஸ்டேண்டிங்தான். டவுனில் எங்கே பார்த்தாலும் கும்பல் கும்பல்தான்.எல்லா கூட்டமும் உணவுவிடுதிகள்லதான் இருக்கு.ரோட்சைடு கையேந்திபவனில் கூட கும்பல்.அதேசமயம்ஒரு சோகம் வெள்ளாமை அத்து போய்க்கிட்டு இருக்கு. கழனிகாடெல்லாம் இன்னிக்கு முள்ளுச் செடிங்க மண்டிக்கெடக்குது.அல்லது கலர்கலராய் கற்கள் நட்டு மனைபிரிவு அமைத்து காசாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியா ஒரு விவசாய நாடு. இப்படி ஒரு சமூகமே உழைக்கிறதை நிறுத்திட்டு தின்றுக் கொண்டிருக்க, அடுத்த முப்பது வருசத்தில நாமதான் வல்லரசு என்று ஒரு கூட்டம் கும்மியடித்துக் கொண்டிருக்கிறது. அப்போது சர்..சர்.ரென்று. இரண்டு டாடாசுமோக்கள் அங்கே வேகமாக வந்து நின்றன.. தடிதடியாக ஆட்கள் அவசரமாக இறங்கினார்கள்.இறங்கும் போதே டாய்!.. த்தா!…..டாய்! ..அடீங்!…என்று கூச்சல் வேறு. .எல்லோரும் முழு போதையில் ஆடிக்கொண்டிருந்தார்கள். வில்லங்கமான ஆட்கள்.

இந்த இடத்தில் என்னவோ கலாட்டா நடக்கப் போகிறது போலிருக்கு. அங்கே நின்றிருந்தவர்களில் சிலர் நைசாக இடத்தை காலி செய்ய ஆரம்பித்தனர். நமக்கு ஏன் வம்பு என்று நானும்நகரஆரம்பித்தேன்.பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவர்கள் திமுதிமு வென்று நேராக என்னிடம்தான் ஓடிவந்தார்கள். அய்யய்யோ!…அய்யய்யோ!. நான் ஓட எத்தனிக்கையில் எட்டி பிடித்துக் கொண்டார்கள். நாலைந்து பேர் என்னை கெட்டியாகப் பிடித்துக் கொள்ள, மின்னல் வேகத்தில் என்னை சரமாரியாக அடிக்க ஆரம்பித்தார்கள். ஒரு குண்டன் என்னை கீழே தள்ளி மிதித்தான்.. சுதாரிப்பதற்குள் வாயின்மேல் ஒரு குத்து விழுந்தது. கிர்ர்ரென்று தலை சுற்ற சட்டையெல்லாம் ரத்தம். . அக்கம்பக்கம் இருந்தவர்களில் ஒருத்தர்கூட என்னவென்று கேட்கவில்லை.. பார்த்துவிட்டு அவனவனும் தலைதெறிக்க விலகி ஓடுகிறான்..அடிதாங்காமல் ”ஐயோ..ஐயோ!…..காப்பாத்துங்க…காப்பாத்துங்க…டாய்!…டாய்!.”— கத்திக் கொண்டே ஓட ஆரம்பித்தேன்… பின்னாலேயே துரத்திக் கொண்டு வந்த ஒருத்தன் ஒரு குறுந்தடியில் என் மண்டையில் ஒங்கி அடித்தான். ,கண்களில் பூச்சி பறந்தது. நான் மயக்கமாகி சரியும் போது கத்தியால் என் கையைக் கிழித்தான் . அவ்வளவுதான் தெரியும். எங்கும் ஒரே இருட்டு. கண்விழிக்கும்போது ஆஸ்பிட்டலில் படுத்திருக்கிறேன். யார் கொண்டுவந்து இங்கே போட்டார்கள்?. தெரியாது மண்டையிலும், முன்கையிலும் பலமான கட்டு போட்டிருந்தது இந்த இடத்தில் என்னை அடித்தவர்களைசற்று தூர இருந்து வழி நடத்தியவனை ஒருநொடி பார்வையில் பார்த்துவிட்டிருந்தேன்..தொகுதி எம்.பி. பாண்டியனின் தம்பி கண்ணன்.. இரண்டு மாதங்களாக எனக்கும் எம்.பி க்குமிடையில கனன்றுக் கொண்டிருக்கும் பிரச்சினை ஒன்றிருக்கிறது. .ஆனால் அவர்கள் இந்தளவுக்கு போவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நிற்க, என்னைப் பற்றிய ஒரு ஷார்ட் நோட்—. நான் ஒரு சமூக பிரக்ஞையுள்ள ஆசாமி. இயற்கை வேளாண் விஞ்ஞானி, கோ.நம்மாழ்வார் கட்டுரைகளையும், இயற்கை விஞ்ஞானி ஆர்.எஸ்.நாராயணன் கட்டுரைகளையும் படித்துவிட்டு அருகிக்கொண்டேவரும் விவசாயம் பற்றி நிறைய கவலைப்படுவேன்..பசுமை விகடனில் கட்டுரை எழுதுவேன். பி.ஏ..வரை
படித்துவிட்டு, பிறந்த ஊரே சுகம் என்று , பூண்டி என்ற எங்கள் கிராமத்தில் பஞ்சாயத்து தலைவராக குப்பை வாரிக் கொண்டிருக்கிறேன். ஒருகாலத்தில் பெரும் செல்வந்தர்களாக வாழ்ந்த குடும்பம் எங்களுடையது., காலக்கிரமத்தில் எல்லாம் அழிந்து போய்விட்டதாம்.. அப்பா காலத்தில் டவுனில எங்களுக்கு ஒரு பெட்ரோல் பங்க்கூட இருந்திச்சி.. எல்லாம் போய், தற்போது ஏரி பாசனத்தில் ஐந்து ஏக்கரா பாட்டனார் சொத்து. ஜீவனத்துக்கு அதுதான். வேற ஐவேஜு இல்லை

தற்போது எங்களூர் விவசாய சங்கத்தின் தலைவரும் அடியேன்தான்.. தமிழ்நாட்டில் பத்துக்கு ஆறு பேர் விவசாயத்தை நம்பி வாழ்பவர்கள்தான், என்ற தகவல் உங்களுக்கெல்லாம் தெரியுமோ இல்லையோ, எனக்குத் தெரியும். 1979–80 ல்48.1% நிலபரப்பில் வெள்ளாமை நடந்த தமிழ்நாட்டில் இன்றைக்கு 29% க்குக் கீழே போய்க்கொண்டேயிருக்கிறது. என்ற அபாய தகவலும் எனக்குத் தெரியும்.இப்படியே போனால் கிட்டத்தட்ட எட்டு கோடி மக்களின் வயித்துப்பாட்டை ஆள்பவர்கள் எப்படி சமாளிக்கப் போகிறார்கள்? என்கிற மாதிரியான, கவலை எனக்கு இருக்கிறது, எங்கள் விவசாய சங்கத்திற்கும், என்னைப் போன்ற சமூக ஆர்வலர்களுக்கும் இருக்கிறது..யோவ்! உனக்கும் எம்.பி. க்ரூப்புக்கும் அப்படியென்ன தகராறு?. அத்த சொல்லுய்யான்னா அத்த வுட்டுட்டு…உங்கிட்டஊர்கதையை எவன்யா கேட்டான்?.அப்படீன்றீங்க. ஒரு விஷயம் நல்லா புரிஞ்சிப் போச்சிங்கண்ணா , சுவாரஸ்யம் கொடுக்கிற விஷயத்தை மட்டுமே பிடிச்சிக்கிற வடிகட்டி நீங்க.. அண்ணா! கோச்சிக்காதீங்கண்ணா உங்களுக்கு புடிச்ச விஷயங்களையும் இப்ப சொல்லிட்றங்கண்ணா. தலைவருது கோச்சடையான் டிசம்பர்ல ரிலீசுங்கண்ணா. குஷியாயிட்டீங்களா?. நம்ம தல படம் ஒண்ணு பாலிவுட்ல தயாராவுதுங்கண்ணா எஸ்டிமேட்டு எவ்வளவுன்றீங்க? நூறு. சி. அப்புறம் இந்த மாசம் ரேஷன்ல என்னன்ன ஃப்ரீயா தரப் போறாங்கன்னும் இப்ப சொல்லிட்றேங்கண்ணா. போதுமா?.சரி மேல விஷயத்துக்கு போவலாமாங்கண்ணா. விவசாயம் கட்டுபடி இல்லாமல் ஜனங்க சோர்ந்து கிடந்த பலவீனமான இந்த நேரத்தில எங்களில் சிலரை கைக்குள்ளே போட்டுக்கிட்டு, ரோட்டோரத்தில் உள்கையில் ஏரி பாய்ச்சல் பள்ளக்கால் பகுதியில் முப்பது ஏக்கரா பூமியை இந்தத் தொகுதியின் எம். பி,. ,பாண்டியன் கிரயம் பேசி வாங்கிவிட்டார். மனை போட்டு விக்கிறதுக்கு வசதியா பவர் ஆஃப் அட்டெர்னி வாங்கிக் கொண்டார். எங்க ஊரு ஜனங்க .விட்டில் பூச்சிங்க. சார். விதை நெல்லை எவனாவது தின்னுவானா?. எங்காளுங்க தின்னுட்டானுங்க. தின்னுட்டு நாளைக்கு என்ன பண்ணுவ?.சோத்துக்கு டிங்கி அடிக்கணும். அந்தாளு வெள்ளாமபண்ணவா வாங்கியிருக்காரு? .ரியல் எஸ்டேட் பிஸினஸ்..

பாவிங்களே! பள்ளக்கால்ல கழனி அகப்பட்றது ஒரு வரம்யா. மழை குறைஞ்சிப் போன காலத்தில் கூட ஒரு போகத்துக்கு பஞ்சமில்லை. சரி அதில உன் பிரச்சினை என்னய்யா?ன்றீங்க. மெய்ன்ரோடை ஒட்டி நெடுக்க நீளவாட்டத்தில வாலுமாதிரி அஞ்சு ஏக்கரா பூமி என்னுடையது. அதுக்கு அப்புறம்தான் எம்.பி வாங்கியிருக்கிற நெலம் இருக்கு. என் நெலத்தில் ஒரு பத்து சென்ட்டையாவது நான் கொடுத்தால்தான் முப்பது ஏக்கராவுக்கு வழி கிடைக்கும். இல்லேன்னா பேப்பே. சுத்திக்கிட்டு வரப்பு மேலதான் போயாவணும். ஒரு நாள் எங்கிட்ட எம்.பி வந்தார்.

“ ஐயா!இது வெள்ளாமை பண்ணிக்கிட்டிருக்கிற நிலம். நானு நெலம் எதுவும் . விக்கிறதா இல்லீங்க.. அதில்லாம இந்த ஊரு தலைவராவும், விவசாயிகள் சங்க செயலாளராகவும் சொல்றேன். நஞ்சை நிலத்தை அவ்வளவு சுலபத்தில நத்தமாக ( குடியிருப்புப் பகுதியாக ) மாத்திட முடியாது,ஏன்? கூடாது சமூகக் குத்தம். அதுக்கு கலெக்டர் தான் கழனியை கிராம நத்தமா மாத்தி ஆர்டர் போடணும்… அந்த உத்திரவு இல்லாம நீங்க மனை போடக் கூடாது, முடியாது. அப்ரூவல் கிடைக்காது.. இப்பல்லாம் எங்க விவசாய சங்கமும் நஞ்சை பூமியில மனைபிரிவு போட்றதுக்கு விட்றதில்லீங்க. ஏற்கனவே சில இடங்கள்ல போராட்டம் பண்ணி, கவர்மெண்ட் வரைக்கும் கொண்டுபோயி தடுத்துட்டாங்க. அதனால இறங்கிட்டு பின்னால நஷ்டப்படாதீங்க…” —அவர் முறைத்தார். ..“ஹும்! எனக்கு ரூல்ஸ் சொல்லித்தர்றியா? அப்ப ஏரியிலியே மனை போட்டு வித்துக்கிட்டு இருக்கானுங்களே அவனுங்களுக்கு எப்பிடி அப்ரூவல் கிடைக்குதாம்?..சொல்றா.” “ லஞ்சத்தாலும்,அதிகாரத்தாலும், சட்டத்தை ஏமாத்தறாங்க, வேறென்னங்க? செஞ்சிட்டு.பின்னால கஷ்டப்படாதீங்க. அவ்வளவுதான் சொல்வேன்.”

”ஆண்டிக்கு ஏன்டா அம்பாரம் கணக்கு?.கலெக்டர் விவகாரத்துக்கு என்ன செய்யணும்னு எனக்குத் தெரியும்…. சுண்டக்கா பவரை வெச்சிக்கிட்டு நீ சும்மா மணியம் பண்ணாத. கஷ்டப்படுவ. உனுக்கு ரெண்டு மனை ஃப்ரீயா தர்றேன் ஒதுங்கிக்க உன் கழனியிலயிருந்து வழிக்காக இருபது செண்ட் நெலம் எழுதிக்குடு போதும். இன்னா வெலைன்னு?, சொல்லு. இங்க செண்ட்டு மூவாயிரம் போவுது, உன் கழனிக்கு ஆறாயிரம் தர்றேன். வாணா, பத்தாயிரம் தர்றேன். என்ன சொல்ற?. ..”

“ஐயா! சாரிங்க, நாந்தான் என் நெலம் விக்கிறதுக்கு இல்லைன்னு சொல்லிட்டேனே. புரிஞ்சிக்கோங்க உங்களுக்கு கலெக்டர் அனுமதி கிடைக்காதுங்க..”.

”.கிடைக்கலேன்னா அன்அப்ரூவ்டு ப்ளாட்டாகவே வித்துட்டு போய்க்கிட்டே . இருப்பேன்டா.? உனுக்கு எதுக்கு அந்த கவலை?..”—— நான் அமைதியாக வந்துவிட்டேன். சுற்றிலும் அவருடைய அடியாட்கள். உச்சுக்கொட்டி கையைக் காட்டினால் என் மீது பாய்வதற்கு தயாராய் நிற்கிறார்கள். மக்களின் பிரதிநிதியாக முன்மாதிரியாக நமக்கு வாழ்ந்து காட்ட வேண்டியவர்கள். எப்படி வாழக்கூடாது என்பதற்கு முன்மாதிரியாக வாழ்கிறார்கள். அதனால்தான் நாட்டில் கொலை,கொள்ளைகள் நிறைய நடக்கின்றன போலும்..

மறுநாள் பார்த்தால் அவ்வளவு சொல்லியும் அவர் வாங்கின கழனிக்கு லாரிகள் செம்மண் லோடு அடித்துக் கொண்டிருந்தன. நான் நாற்றங்காலுக்காக விட்டுவெச்சிருந்த இருபது செண்ட்டு கழனி வழியாகத்தான் லாரிகள் போய்வந்துக் கொண்டிருந்தன. சில இடங்களில் பக்கத்து தளையில் இறங்கி, பயிர்மேலேயே லாரி போயிருக்கிறது. உடனே தலைமை சங்கத்துக்கு தகவல் சொல்லிவிட்டு, ஊரு விவசாய சங்க உறுப்பினர்களுடன் போய் ரோடுக்கு குறுக்கே சாலை மறியல்னு உட்கார்ந்து விட்டோம். லோடு அடிப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. எம்.பி, பாண்டியன். வந்தார்..

“டேய்! அல்பாயுசுல போயிடப்போறடா.பார்த்துக்கோ.”

“ மொதல்ல என் கழனிவழியா என் அனுமதியில்லாம எப்படிய்யா லாரி வரலாம்?.அத்த சொல்லு.. பாவிங்களே! வாய்க்கா வரப்பைல்லாம் துவம்சம் பண்ணி வெச்சிருக்கீங்களே இனிமே அதில பயிரேத்தறதா இல்லையா?. இனிமே என் அத்துல லாரி வந்துச்சி, நடக்கிறதே வேற. .”

“டேய்! நெலத்தை வித்தவன் அவன், வாங்கினவன் நானு. இடையில தெருவால போற நீ அத்து மீறி வந்து மனை போடக்கூடாதுன்னு வக்காலத்து பேசல?. அதுமாதிரிதான் இதுவும்..தோ பார்றா புரிஞ்சிக்கோ. உனுக்கு நல்லதுதான் பண்றேன்.முப்பது ஏக்கராவில மனை போட்டா தெருவுக்கு ஒதுக்கினது போவ, எப்படியும் ஐந்நூறு மனைங்க வருது.. அடுத்த மூணு வருஷத்தில ஐந்நூறு குடும்பங்கள்.இங்க வீடுகட்டி குடிவரப்போவுது. ஏற்பாடு பண்ணிட்டேன்.. யோசிச்சிப்பாரு அப்ப உன் கழனிகாடெல்லாம் மதிப்பு கூடிடும். சதுரஅடி எப்படியும் ஆயிரத்தைத் தாண்டும். கோடி கணக்குல வெலையாயிடும்.. பணமா புரளும்.யோசி இதுக்கு மேலயும் சின்னபிள்ளைத்தனமாய் யோசிக்கிறதை நிறுத்து.”

“அத்தையே இல்லை. அத்தைக்கு மீசை மொளைச்சிடுச்சின்றீங்க. எனக்கு கோடியெல்லாம் வாணாம்க. இதுமாதிரி ஆசை காட்டிதானே முப்பது ஏக்கராவையும் வளைச்சீங்க.?.போங்க. எங்கியாவது புஞ்சைக்காட்டை வாங்கி மனை போடுங்க வாணாங்கல. . .”.

. அவர் வேகமாக வெளியேறினார். மெய்ன் ரோடுக்கு தொடர்பு இல்லாமல் உள்ள நெலத்தை வெச்சிக்கிட்டு என்ன தைரியத்தில இந்தாளு குதிக்கிறான்னு தெரியலையே. போகவர வழியில்லாம எப்படி விப்பான்?.
இந்தந்த சர்வே நெம்பரிலுள்ள நிலங்களில் ஏழெட்டு வருஷங்களா வெள்ளாமை நடக்கல. விவசாயம் பண்ண தகுதி இல்லாத நிலம் அப்படீன்னு நான்தான் சர்ட்டிஃபிகேட் தரணும்.. பஞ்சாயத்து தீர்மானம் போட்டு தடையில்லா சான்று தரணும் இதுதான். அடிப்படையான ரெக்கார்டு. ஸோ என்னுடைய சர்ட்டிஃபிகேட் இல்லாம எதையும் நகர்த்த முடியாது.. .நஞ்சை பூமியை அழிக்கிறதில என்னா அவசரம்?. இப்படி கழனிகளை காலி பண்றதும்,, காடுகளை அழிக்கிறதும் நமக்குநாமே செஞ்சிக்கிற தவணை முறை தற்கொலைன்னு .ஒரு விஞ்ஞானி எழுதியிருந்தாரு. எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்?. நாலாம் நாளு எம். பி.யின் கார் என் வீட்டண்டை வந்துச்சி.

“யோவ்! நான்இந்தத் தொகுதியின் எம்.பி.. என்னையே பாந்தி வாங்கறீயா?.சரி..சரி..உனுக்கு என்னா வேணும்னு சொல்லு. இப்ப எனக்கு நீ நோ அப்ஜெக்ஷன் சர்ட்டிஃபிகேட் தர்ற, சரியா?. வழிக்காக இருபது செண்ட்டு கொடுக்கிறதைப் பத்தி அப்புறம் பேசிக்கலாம். நீ குடுக்கலேன்னாலும் பரவாயில்லை…”

“ஐயா! அதிலேயும் பிரச்சினை இருக்குதுங்க. கடந்த ஏழெட்டு வருஷங்களாவே இதில நெலத்தில பயிர் வைக்கல, வெள்ளாமைக்கு தகுதியில்லாத நிலமாக மாறிப்போச்சின்னு, நான் சர்ட்டிஃபிகேட் தரணும். ஆனா போன வருஷம் கூட சொர்ணவாரி பட்டத்தில, மோட்டாங்கால் பயிரெல்லாம் சாவியாப் போனப்போ கூட, நீங்க வாங்கியிருக்கிற கழனியெல்லாம் நல்லா வெளைஞ்சிருக்கு. போனபோகம் வரைக்கும் வருஷா வருஷம் நல்லா விளைஞ்சி, அதுக்கு தீர்வையும் கட்டினதுக்கு வி.ஏ,ஓ. ரெக்கார்டு இருக்கு. செக் பண்ணிட்டேன்..அப்புறம் எப்பிடி நான் பொய்யாக சர்ட்டிஃபிகேட் தர்றது?.பின்னால நான் மாட்டிக்குவேன். ஊஹும்! இது ஆவாதுங்க.”— என்றேன். இதுதாங்க எங்களுக்குள்ளே விழுந்த முடிச்சு.. என் குடும்பம் ரொம்பவும் பயந்து விட்டது.

”அந்தாளு கட்டைப் பஞ்சாயத்து பண்ற ரவுடிங்க. விரோதம் வாணா. அந்தாளுக்கு பத்துசெண்ட்டை குடுத்துடுங்க, கையெழுத்து போட்ருங்க”—– கையை பிடிச்சிக்கிட்டு என் மனைவி குலுங்கினாள். என் அப்பாவும் அம்மாவும் பயந்துபோயி இதுக்குமேல கத்தறாங்க. வார்டு மெம்பர்களும்,துணைத்தலைவர்களும் வேண்டாம் பொல்லாப்புன்றாங்க.பார்க்க வந்த ஊர்ஜனங்களும் அவன் ரவுடிப்பா, எதுக்கும் துணிஞ்சவன் தூர வந்துடுன்றாங்க. ஒரு விஷயம் உறுத்தியது.என்னை ஆஸ்பிட்டலில் சேர்த்தபோதே ஆஸ்பிட்டல் நிர்வாகமே போலீஸுக்கு தகவல் கொடுத்து விட்டது, இருந்தும் ஒரு போலீஸும் எட்டிப்பார்க்கவில்லை. இரண்டாம் நாள் சாவகாசமாக எஸ்.ஐ.இரண்டு கான்ஸ்டபிள்களுடன் வந்தார்.

“என்னாச்சிங்க? யாரு உன்னை அடிச்சதுன்னு ஷ்யூரா தெரியலையாமே சொன்னாங்க. என்னாச்சி?”— எம்.பி க்ரூப்புக்கு தோதாக எப்படி கோர்த்து வாங்கறார் பாருங்க.?. “தெரியும் சார்! எம்.பி. யின் தம்பி கண்ணனும் அவன் அடியாட்களும்தான் என்னை அடிச்சவங்க. நானே பார்த்தேன். எழுதிக்குங்க.” “வாணாம்யா இத்தோட வுட்ரு. அது பெரிய எடம். அரசியல் செல்வாக்கு, ரவுடிங்க படை, எல்லாம் உள்ள ஆளு. வீணா அடிபட்டுப் போவ.” ”என்ன சார் சமரசம் பேசறீங்க?. சார்! நான் சொன்னது சத்தியம். எஃப்.ஐ.ஆர். போட்டு அரெஸ்ட் பண்ணுங்க. எனுக்கு அதான் வேணும்..”—-அவர்கள் தயக்கமாய் எழுந்து போனார்கள். ஆஸ்பிட்டலில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன மறுநாள் எஃப்.ஐ.ஆர். காப்பி வந்தது. அடையாளம் தெரியாத யாரோ அடிச்சிட்டதாக பதியப்பட்டிருந்தது.

“சொல்லுங்க சார்! நீங்க அரசு அதிகாரியா? இல்லே அவர் ஆளா?.. நான் என் சுயலாபத்துக்கா உதை பட்டேன்?.”

“ தோ பாருப்பா! நீ இளங்கன்னு பயமறியாதுன்ற மாதிரி துள்ற. அந்தாளு தொகுதி எம்.பி,, நீ இந்த குட்டி ஊருக்கு தலைவரு. வீணா மோதி மண்டையை உடைச்சிக்காதே. இதுக்கு மேலும் கேட்டியானா, என்னால இப்படித்தான் செய்ய முடியும். நேத்திலயிருந்து ஐ.ஜி. ஆபீஸிலிருந்து அந்தாளுக்காக எத்தினி போன்கால்கள் வந்துச்சி தெரியுமா?. நான் இந்த சின்ன ஸ்டேஷனுக்கு எஸ்.ஐ. என்னால உன்னைமாதிரியெல்லாம் ஆடமுடியாது. அரசியல்வாதிகளை அடிச்சி இழுத்துட்டு வர்றதுக்கு இது ஒண்ணும் சினிமா இல்லை.”——எழுந்துப் போய்விட்டார். உள்ளே கொதித்தது.அந்தாளுநடுரோட்ல என்னை ஆளு வெச்சி அடிச்சிருக்கான். ஆஸ்பிட்டலில் அட்மிட் ஆகியிருந்தேன். மெடிகல் சர்ட்டிஃபிகேட் இருக்கு, அடிபட்ட நானே ஐ விட்னஸா ஸ்டேட்மெண்ட் குடுத்திருக்கேன். இவ்வளவு இருந்தும் போலீஸ் ஒரு நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை.தெரியுது. .
அந்தவார இறுதியில் மாநில விவசாய சங்கம் என்னை தொடர்பு கொண்டது. எம்.பி.யின் நஞ்சை பூமியில் மனை பிரிவு அமைக்கக்கூடாது என்று ஒரு தடை ஆணை பெற சங்கம் சார்பாக ஒரு பொதுநல வழக்கு போட சொன்னது. செய்தேன்…கூடவே என்னை ஆளை வெச்சி அடிச்சதுக்கு டாக்டர் சர்ட்டிஃபிகேட் வெச்சி ஒரு கேஸ் போட்டேன். கேஸ் கட்டு நெம்பர் ஆவதற்கே இன்னைக்கு நாளைக்கு என்று மூன்று நாள் இழுத்தடித்தார்கள். அதற்குள் வேகவேகமாக செம்மண் லோடு அடிப்பதாக ஆதித்தியன் வந்து சொன்னான்.. இன்றைக்கு எம்.பி எனக்கு இன்ஞக்ஷன் ஆர்டர் தரக்கூடாது என்று எதிர் மனு தாக்கல் செய்தாராம்.. அந்த பெட்டீஷன் அப்பவே நெம்பர் ஆயிடுச்சாம். ஹும்! நாட்டில் நீதி பரிபாலனம் கூட ரொம்பவே டேமேஜ் ஆயிட்டிருக்குப்பா. இதோட நான் காலி. எம்.பி. பாண்டியனின் மனுவை விசாரிச்சி, தள்ளுபடி பண்ணி, என் மனுவை விசாரிச்சி, எனக்கு தடைஆணை கிடைக்க எப்படியும் இருபது நாட்கள் ஆகும்னு சொல்றாங்க. அதுக்கே இதை ஸ்பெஷல் கேஸ்ஸாக விசாரிக்கணுமாம். அதுக்குள்ளே அங்கே பட்டணம் பறிபோயிருக்கும்..என்ன பண்ணப் போகிறேன்?

“தலைவரே! உன் கழனிய போய்ப் பாரு. அவன் என்னா பண்ணிவெச்சிருக்கான் பாரு.”——பள்ளத்தெரு ரங்கன் சொன்ன அதிர்ச்சியை உள் வாங்கிக் கொண்டு ஓடினேன். அங்கே நாற்றங்காலுக்காக நான் விட்டு வெச்சிருந்த அந்த இருபது செண்ட் நெலம் பாண்டியனால் அராஜகமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. பாறும்,செம்மண்ணும் ஒண்ணரை ஜல்லியும் கொட்டி மேடாக்கி அவர் இடத்துக்குப் போகவர நாற்பதடி அகல பாதையாக மாற்றப்பட்டிருந்தது.. பாதையின் இரண்டு பக்கங்களிலும் கற்கள் நடப்பட்டு அத்து பிரிக்கப்பட்டிருந்தது.அய்யய்யோ! நியாயம் கேட்க நாலு பேரைக் கூட்டிக் கொண்டு அவர். வீட்டுக்கு ஓடினேன். உள்ள நுழையவே அரை மணி நேரம் ஆச்சி. ஏக கெடுபிடி, சுற்றிலும் அடியாட்கள். நிறைய அரசியல் கொள்ளையர்களின் கிசுகிசுபேச்சுகள், அட்டகாச சிரிப்புகள். இந்த பந்தாக்களில் என் கூட வந்தவர்களுக்கு பாதி சுரத்து போய்விட்டது.
“இதோ பாருப்பா அந்த மனைகள்ல வீடு கட்டி குடிவரப் போறவங்க போகவர என்ன பண்ணுவாங்க?ஐந்நூறு குடும்பங்கள்.. நீயே நியாயத்தை சொல்லு. இன்னைக்கே அங்க வீடுகட்ட இருபது பேருக்குமேல ப்ளானோடு ரெடியா இருக்கான்.. இனிமே நீ குடுக்கமாட்டேன்னு சொன்னாலும் எதுவும் நிக்காதுப்பா. நாளைக்கு அவங்க கிட்ட பெட்டிஷன் எழுதி வாங்கிக்கிட்டு தாசில்தாரையே விட்டு அளந்து கல் போட வெக்கப்போறேன்.. இது பொது விஷயம் பாரு..புரியுதா? கவர்மெண்ட் ரேட்படி அந்த இடத்துக்கு என்னா மதிப்போ அதை அரசு உனக்குக் கொடுக்கும்.. ஹும்!.நீ ஒழுங்கா அப்பவே குடுக்கிறதை வாங்கிக்கிட்டு எழுதி குடுத்துட்டுப் போயிருக்கலாம். இல்லே?. இப்ப கைமீறிப்போச்சி .த்சு…த்சு…”

” இது அராஜகம்.அதிகார துஷ்பிரயோகம். .இதை நான் விடமாட்டேன். யார் வீட்டு நெலத்தில யாரு ரோடு போட்றது? வழி இல்லாம மனை போட்டுட்டு, அடாவடியா என் நெலத்தை எட்த்துக்கிற அதிகாரத்தை யாரு உனக்கு கொடுத்தது?.. ரொம்ப அநியாயம் பண்ணாதீங்க. விளங்க மாட்டீங்க.” எம்.பி.. சிரித்தார். நாலுபேருக்கு நல்லது நடக்குதுன்னா எதுவும் அநியாயமில்லப்பா என்று நாயகன் வசனம் பேசினார். வயிறெரிஞ்சி சபித்து விட்டு வெளியேறினேன்., .அதர்மத்துக்குத்தான் இன்னைக்கு காலமாய் இருக்கிறது. இதுக்காகத்தான் நீதிமன்றத்தில கூட எம்.பி..க்கு சாதகமாக கேஸை தாமதப் படுத்தினார்கள் என்று ஆதித்தியன் வந்து சொன்னான்.. எனக்குப் பின்னால வந்த ஒரு பெட்டிஷன் கூட அன்னைக்கே நெம்பர் ஆகி இருபது நாள்ல ஃபர்ஸ்ட் ட்ரையல் வந்திட்டது. என்னுது நெம்பர் ஆவதற்கே மூணு நாள் ஆச்சி. சே! தவறுகளுக்கு இப்படி கூட்டு சேர்ற இவங்க எல்லாரும் நல்லவைகளுக்கு கூட்டு சேர்ந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்?.மனசு ரணமாய் வலித்தது. எம்.பி. யின் ப்ளான்படி அடமாய் அங்கே ஒரு பத்து பேரை கொண்டுவந்து குடியமர்த்திட்டால் போதும். அப்புறம் எல்லா ரியல் எஸ்டேட் காரங்களும் மொய்க்க ஆரம்பிச்சிடுவாங்க., எங்கேயிருக்கிற கருப்பு பணத்தையெல்லாம் கொண்டுவந்து கொட்டி கொட்டி விலையை ஏத்தி ஏத்தி ஏரி பாய்ச்சவாரி நெலம் முழுசும் பேரம் ஆயிடும். அப்புறம் ஏரி நிரம்பி கலங்கு சாய்ஞ்சால் கூட ஒரு நெல்லுமணி உற்பத்தி இங்கே இருக்காது. அப்புறம் எதுக்கு இந்த விவசாய சங்கம்?, அதுக்கு ஒரு தலைவரு, செயலாளரு?. .சிட்டியை சுற்றி சில ஏரிகள் இன்னைக்கு இருக்கிற இடம் தெரியாம இப்படித்தான் போயிடுச்சாம். விவசாய சங்கத்தின் பேச்சாளர் ஒருத்தர் ஒருமுறை பேசியிருக்கிறார்.என்ன பண்ணுவதென்று தெரியவில்லை..அராஜகமா என் இடத்தை ஆக்கிரமிச்சிருக்கான் கேக்க ஒரு நாதி இல்லை..

இன்றைக்கு ஜே.ஸி.பி. வண்டியை வெச்சி இடத்தை நிரவப் போறதாக தகவல். போச்சு..இனிமே என் முயற்சிகள் எதுவும் பலிக்கப் போறதில்லை. தூரத்தில் ஜே.ஸி.பி என்ஜின் ஓடும் சத்தம் கூட கேட்கிறது.. சுருண்டு படுத்து விட்டேன். ஆத்திரத்தின் விளிம்பில் அது அழுகையாகத்தான் வெளிப்படுகிறது.சே! அப்போது ஆதித்தியன் வந்தான்.

“எம்.பி. பாண்டியன். நெலத்தில கலர்கலரா பெயிண்ட் அடிச்ச காணி கல்லுகள் வந்திறங்குதுப்பா. டேய்!…டேய்! என்ன…என்ன? ஏன்டா அழுவறே?. .சீச்சீ! நீ ஏண்டா ஊரு, நஞ்சை, வெள்ளாமைன்னு இப்படி எக்செண்ட்ரிக்கா இருக்கிற.? .எவன்னா எக்கேடும் கெட்டுப் போவட்டும்டா. .”

“ ஐயோ! என்னடா பேசற?. என் நெலத்தில ரோடு போட்டுக்கிட்டு, என்னையும் ஆள் வெச்சி அடிச்சான். என்னால ஒண்ணும் பண்ண முடியலயே. அத்தோட முக்கியமா நம்மூரு கழனி காடுங்க அழிஞ்சிப்போவ விட்ரக்கூடாதுடா. அதுதாண்டா நமக்கு படியளக்கிற கடவுள். இந்தாளை இன்னைக்கு விட்டுட்டோம்னா அப்புறம் அந்த ஏரியா முழுசையுமே வீட்டுமனையாக்கி ஆன்லைனில் அமெரிக்கா வரைக்கும் விலை கூவி வித்துட்டு போயிடுவாண்டா..”

”டேய்! என்னைப் பொருத்தவரைக்கும் அவன் மனைக்கு அப்ரூவல் வாங்கட்டும் இல்லே வாங்காம அன்அப்ரூவ்டு ப்ளாட்டாக வித்துட்டுப் போவட்டும் நமக்கென்ன. . ஆனால் நீ இருபது செண்ட்டு நெலத்தை தரமாட்டேன்னு சொன்னதுக்கு .உன்னை ஆள் வெச்சி அடிச்சான் பாரு அதை விடக்கூடாது, அதுக்கு மேல உன் நிலத்தை அடாவடியா ஆக்கிரமிச்சி கல் நட்டுக்கிட்டான். இவனுக்கு பாடம் கத்துக் குடுக்கணும்..ஆமாம். இதை வெச்சி அவன் மனையே போட முடியாதபடி அடிக்கணும்.”

” அதுக்குதானே இத்தனை நாளும் போராடி தோத்தேன். எல்லாரும் அவன் பக்கம் நிக்கிறாங்கடா முடியல. சே! ஊழல் பண்ற அரசியல்வாதிங்க., உளுத்துப்போன சட்டங்கள்.,செயல்படாத அரசு அதிகாரிங்க., தூங்கற அல்லது ஊழலுக்கு துணை போற நீதிமன்றங்க., இதில் நான் கையில் வெச்சிருக்கிறது சத்தியமேயானாலும் ஜெயிக்காது.”——-ஆதித்தியன் சற்றுநேரம் அமைதியாக உட்கார்ந்திருந்தான்.

“ இது ஜனநாயகம்டா. இங்க கும்பல் சேர்த்துக்கிட்டு போய் தட்டிக் கேட்டாத்தாண்டா நியாயம் கிடைக்குது. இந்த பாய்ண்ட்லதான் இன்னிக்கு சாதிச் சங்கங்கள்லாம் கொழிக்குது..” “ஆள்றவன் நேர்மையா ஆண்டா இதெல்லாம் இப்படி தலை தூக்குமா?..ஹும்!.”

“ஏண்டா! இந்த விஷயத்தை மந்திரி கருணாகரன் கிட்ட சொல்லலாம்டா. நம்ம தொகுதி எம்.எல்.ஏ.வாச்சே.” ?” “ போடா?, தன் கட்சி எம்.பி.யை வுட்டுக்குடுப்பாரா அந்தாளு.?..” “ட்ரை பண்ணித்தான் பார்க்கலாமே. ஒண்ணுமே முடியாததற்கு இதையும் முயற்சி பண்ணிட்டோம்னு இருக்கட்டுமே.. கிளம்பு.”—–என்னை வற்புறுத்தி அங்கே இழுத்துக் கொண்டு சென்றான். நாங்கள் போனபோது கட்சி ஆட்கள் புடைசூழ, ரெண்டு நிமிஷத்துக்கொரு முறை செல்லில் கட்டளை இட்டுக் கொண்டு பிஸியாக இருந்தார். நாங்கள் விஷயத்தை சொன்னதும் சீறி விழுந்தார்..ஏற்கனவே என் விஷயம் அவருக்கு தெரிஞ்சிருக்கு. . ”என் கட்சி எம்.பி, தம்பி பாண்டியனைப் பத்தி. எங்கிட்டயே கம்ப்ளையிண்ட் பண்ண வந்துட்டீங்களா ரெண்டு பேரும்.? எவ்வளவு திமிர்யா உங்களுக்கு?. அவரு ரியல் எஸ்டேட் பிஸினஸ்ல குறுக்க வந்து தடை சொல்றீயாம? நீ யாரு தடை சொல்றதுக்கு.?. சொம்மா கலாட்டா பண்ணிக்கிட்டிருந்தீங்க உள்ளே தூக்கி வெச்சிடுவேன். ஆமா.” “இல்லீங்கய்யா அவருதான் அடாவடியா….”—ஆதித்தியன் நெளிந்தான். “பேசாதே போ. போய் ஒழுங்கா நடந்துக்கோ. அவரு என் தம்பிமாதிரி.. ஜாக்கிரதை. ஆமா பாண்டியன் வாங்கியிருக்கிறது எத்தினி ஏக்கரா?.” “முப்பதுங்க.” “அடேயப்பா! தம்பி பரவாயில்லையே, செண்ட்டு ஐயாயிரத்துக்கு போவுதுன்னாங்க. அப்ப அய்யோ! ஒண்ணரை சி ஆவுதுடா. பரவாயில்லையே. எல்லாரும் பதினாறு அடி பாய்றாங்கன்னா,தம்பி முப்பதடி பாயறாப்பல.”—–எங்க பக்கம் திரும்பினார்

” ஏன்யா! உன் ஊர்க்காரன் நெலத்தை வித்தானே, அவன தடுக்கிறதுதானே?. வந்துட்டானுங்க கம்ப்ளைய்ண்ட் பண்றதுக்கு… போங்கய்யா..”.—சுற்றிலுமிருந்தவர்கள் டாய்!…டாய்!…என்று அதட்டல் போட்டு எங்களை வெளியே இழுத்துத் தள்ளினார்கள்.கொஞ்ச நேரம் அமைதியாய் நின்றோம், எனக்கு அவமானமாயிருந்தது. சோர்வு தட்டியது.இனி எந்த கடவுளும் வந்து என் பிரச்சினையை தீர்க்கப் போறதில்லை.

.ஆனால் மறுநாள் காலை படுக்கையிலிருந்து எழுந்திருக்கும் போதே ஒரு ஆச்சரியம் வெளி வாசலில் காத்திருந்தது. ஒரு புலனாய்வு பத்திரிக்கையின் நிரூபர் என்னைத் தேடிக்கொண்டு வந்திருந்தார். அந்த வார கடைசியில் என்னைப் பற்றிய செய்தி அந்தப் பத்திரிக்கையில் வெளியாகியிருந்தது. எனக்கு நடந்த அக்கிரமங்களை,. எம்.பி. .யின் ரியல் எஸ்டேட் பிஸினஸ்ஸையும், செய்திருக்கிற ஊழல்களையும், அதிகார துஷ்பிரயோகங்களையும், ஆள் வைத்து என்னை அடித்த ரவுடித்தனங்களையும், பட்டியலிட்டிருந்தது..ஆக்கிரமிக்கப்பட்டு, பாதையாகியிருந்த என்னுடைய நிலத்தின் புகைப்படம் வெளியாகியிருந்தது. மின்சார இலாகாவில் தினக்கூலியாக வேலை செஞ்சிக்கிட்டிருந்த இவர், எம்.பி. ஆகி இந்த ஒரு வருஷத்துக்குள்ளே முப்பது ஏக்கரா நஞ்சை பூமி வாங்க அவ்வளவு பணம் இவருக்கு எப்படி வந்தது?. .

என்னை அடிச்சது எம்.பி..யின் தம்பி கண்ணன்னு பூண்டி தலைவர் எழுதி குடுத்தப்புறமும் அடையாளம் தெரியாத ஆளுங்க அடிச்சதா எப்படி இன்ஸ்பெக்டர் எஃப்.ஐ.ஆர் போட்டார்?.என்று விலாவாரியாக போட்டிருந்தார்கள். அடுத்த நாள் தொலைக்காட்சி சேனல்களும் இந்த விஷயத்தை கையிலெடுத்துக் கொண்டு அலச ஆரம்பித்தன. மாலைக்குள் வரச்சொல்லி கட்சித் தலைவரிடமிருந்து அவசர ஆணை வர, எம் பி.. அலறியடித்துக் கொண்டு ஓடினார். மறுநாள் கோவையிலிருந்து விவசாயிகள் சங்கம் முப்பது ஏக்கர் நஞ்சை நிலம் அழியறதை விடமாட்டோம். வீட்டுமனையாக. மாற்றக் கூடாது, வரும் எட்டாம் தேதி அந்த கலெக்டர் ஆபீஸ் எதிரில் பெரிய அளவில் மறியல் போராட்டம் என்று தொடை தட்ட ஆரம்பித்தது. .எனக்கு இதெல்லாம் ஆச்சரியமாக இருந்தது. யாரோ பின்னாலிருந்து இயக்குகிற மாதிரி ஒரேநாளில்எப்படி இப்படியெல்லாம் நடக்கிறது?.. ஆனால் ஒரு நல்லது நடந்துவிட்டதில் எனக்கு சந்தோஷம். ஆதித்தியன் என் அருகில் உட்கார்ந்து வேர்கடலையை உரித்து தின்றுக் கொண்டிருந்தான்.. இவன் கொளுத்திப் போட்டுவிட்டு கமானமாக வந்துவிட, அதை அடுத்த கட்டத்திற்கு ஊடகங்கள் நகர்த்திக் கொண்டிருந்தன. ஆதித்தியன் சிரித்தான்.

”எனக்கு ஒண்ணுமே புரியலடா. எப்படி திடீர் திடீர்னு இப்படியெல்லாம் நடக்குது?..”—ஆதித்தியன் தெரியலடா என்று சிரித்தான்.

“ இல்லை நீதான் என்னவோ பண்ணியிருக்கிற. சரி அன்னிக்கு மந்திரி வீட்டிலிருந்து வெளிய வரும்போது மறுபடியும் திரும்பி உள்ளே போனியே, எதுக்கு?.”

“உன்னைப்பத்தி மந்திரி கிட்டஒரு வார்த்தை சொல்லப் போனேனேன்.”

“என்னான்னு?.”

“ டவுன்ல பெட்ரோல்பங்க் வெச்சிருந்த பூண்டி குமரேசன் அய்யாவுடைய புள்ளதான் நீ ன்னு.” ”அத எதுக்கு சொன்ன.?.”

“ஒரு காலத்தில உங்க அத்தைய இவருக்கு பொண்ணு கேட்டு வந்திருக்காங்க., ஆனா அது நடக்கல.”

“ தெரியும். அப்பா சொல்லியிருக்காரு.அந்தாளு. ஏதோ பொண்ணு கேட்டு வந்தான் நாங்க குடுக்கல.அவ்வளவுதான். அதுக்குமேல எங்களுக்கும் அந்தாளுக்கும் என்ன இருக்கு.?..”

“அட மரமண்டை. எதுக்காக உன் அப்பா பேரை அவர்கிட்ட யூஸ் பண்ணியிருக்கேன்னு. நுணுக்கமா யோசி. அந்த காரணம்தான் தானிருக்கிற கட்சியைத் தாண்டி. அவரை ரகசியமா வேலை செய்ய வெச்சிருக்கு. புரியுதா?. நமக்கு இன்னொரு ப்ளஸ் என்னன்னா எம்.பி. பாண்டியன் வேற சாதி. . அதனாலதான் கமுக்கமா காய்ங்க நகர்ந்திச்சி தெரியுமா?. இது தமிழ் நாட்டோட சாபக்கேடுடா.. இங்க நீதியே ஜெயிக்கணும்னா கூட இந்த கேம் ஐ இப்படித்தான் ஆட வேண்டியிருக்கு. என்ன பண்றது?. ..” ——-

– அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி—2013 இல் பிரசுரத்துக்கு தேர்வு பெற்ற கதை .

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *