யாரை நம்பி வந்தாய்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: December 17, 2019
பார்வையிட்டோர்: 10,217 
 
 

அந்த ஆலமரத்து நிழலுக்கு வந்ததும் தார் ரோட்டில் நடந்து வந்த அலுப்புத் தீர நின்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான் சுடலைமுத்து. கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் வெள்ளியை உருக்கி ஊற்றியது போல் பளபளக்கும் தார் ரோடும், பளிச்சென்ற வெயிலும் அவன் கண்களைக் கூசச் செய்தன. அவனுடன் வந்த செல்லி பக்கத்தில் இருந்த குழாயடியில் முகத்தைக் கழுவிக் கொண்டு நாலு கை தண்ணீரையும் அள்ளிக் குடித்துவிட்டு, ”அப்பாடா! இந்தக் குழாய்த் தண்ணி கூடவா இப்படிக் கொதிக்கணும்?” என்றபடி அங்கிருந்த ஒரு கல்லில் உட்கார்ந்து புடவைத் தலைப்பால் வியர்வை வழியும் முகத்தைத் துடைத்துக் கொண்டாள். ”ஏன், குழாய்த் தண்ணி மட்டுமா கொதிக்குது? என் மனசு கூடத்தான் கொதிக்குது. ஒரு பெண்ணின் பேச்சைக் கேட்டு அவளைக் கலியாணமும் செய்து கொண்டு பட்டணத்துக்குப் பிழைக்க வந்து விட்டேன் பாரு. அந்த வயிற்றெரிச்சலை நினைச்சா என் மனசு கொதிக்குது. என் புத்தியைச் செருப்பாலடிக்கணும்” என்று வெறுப்புடன் பேசிக்கொண்டே மேல் துண்டை விரித்துச் சுடலைமுத்துவும் அவள் பக்கத்தில் உட்கார்ந்தான். செல்லி தன் கழுத்தில் மின்னும் மஞ்சள் கயிற்றை ஒருமுறை பார்த்துக் கொண்டாள். என்ன கஷ்டம் வந்தாலும் மனத்துக்குப் பிடித்தவனை மணந்து கொண்டு விட்டோம் என்ற மகிழ்ச்சியே அவள் இதயத்தில் நிறைந்திருந்தது.

”என்ன மச்சான் இப்படிக் கோவிச்சுக்கறே? ஏதோ பட்டணத்துக்கு வந்துட்டோம். இத்தனை ஜனங்கள் பிழைக்கும் இடத்தில் நமக்கு மட்டும் இடமில்லாமல் போய்விடுமா?” என்று அவனைச் சமாதானம் செய்ய முயன்றாள் அவள்.

”எதையும் பேசி விடுவது சுலபம். பட்டணத்து வாழ்க்கை இங்கு வந்த பிறகல்லவா தெரியுது! இரண்டு நாட்களாகப் பட்டினி. கையில் காலணா இல்லை. இங்கு யாரு நமக்கு வேலை வைச்சிக்கிட்டு இருக்கா?” என்று பொரிந்தான் சுடலைமுத்து.

”யாரு தம்பீ அப்படி வாழ்க்கையை நொந்து பேசறது?” என்றது ஒரு குரல். சுடலை முத்துவும் செல்லியும் நாலா பக்கமும் திரும்பிப் பார்த்தார்கள். மரத்துக்கு அருகே ஒரு சிறு பிள்ளையார் கோயிலைத் தவிர வேறு எதையும் அவர்களால் பார்க்க முடியவில்லை. பிள்ளையார் கோயில் என்பதற்கு அறிகுறியாக எண்ணெய் இல்லாத ஒரு விளக்கும், ஒரு பிள்ளையார் விக்கிரகமும்தான் அங்கிருந்தன. தென்னை ஓலையால் சிறு குடிசை போல் வேயப்பட்டிருந்தது அந்தக் கோயில். அந்த விநாயகரைப் பார்த்ததுமே செல்லிக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. ”கவலைப்படாதிங்க மச்சான். இதோ இந்தப் பிள்ளையார் அப்பனே நமக்கு வழி காட்டுவாரு. ஏதோ தெய்வவாக்குப் போல, ‘ஏன் வாழ்க்கையை நொந்துக்கிறீங்க?’ என்று ஒரு குரல் கேட்டது பாருங்க அதுவே நல்ல சகுனம்” என்றாள் செல்லி.

”தெய்வ வாக்கு ஒண்ணுமில்லே அம்மா. எல்லாம் மனுசன் பேசற பேச்சுத்தான். இப்படி இந்த மரத்துக்குப் பின்னாலே வந்து பாருங்க. நான் நீங்க பேசிக்கிறதையெல்லாம் கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன். எனக்கு எழுந்து நடமாட முடியாது. வாங்க இப்படி” என்றது அந்தக் குரல்.

மரத்துக்கு மறு பக்கம் சென்று பார்த்த செல்லியும் சுடலை முத்துவும் ஒரு கணம் திடுக்கிட்டுவிட்டார்கள். ஒரு கந்தல் கோணியில் கையையும் காலையும் முடக்கிக் கொண்டு ஓர் உருவம் படுத்திருந்தது. கை கால்கள் குறுகி, முறுக்கிக் கொண்டிருந்தன. எண்சாண் உடம்புக்குச் சிரசும் வயிறுமே பிரதானமாகக் காட்சியளித்தன. ஒரு தகரக் குவளையில் குடிக்கத் தண்ணீரும் விரித்திருந்த கந்தல் துணியில் நயா பைசா துட்டுகளும் கிடந்தன. ”ஏன் அப்படி மலைச்சுப் போயி நிக்கறீங்க? நானும் மனுசன்தான். உட்காருங்க அப்படி. நகர முடியாத நானே வாழ்ந்து கொண்டிருக்கும்போது உடல் பலம், இளமை இத்தனையும் இருக்க பிழைக்க மூக்கால் அழுகிறாயே தம்பீ!” என்றான். சுடலை முத்துவுக்கு எதுவுமே பேசத் தோன்றவில்லை. கிழவன் ஏதேதோ பேசிக் கொண்டேயிருந்தான். சுடலை முத்துவுக்குப் பசி வயிற்றைக் கிள்ளியது. செல்லிக்கும் களைப்பு மிகுதியும், ஆலமரத்துக் காற்றும் சேரவே தூக்கம் கண்ணைச் சுழற்றியது. இருவரும் அந்த மரத்தடியில் அயர்ந்து போய்ப் படுத்து விட்டார்கள்.

அவர்கள் எத்தனை நேரம் தூங்கினார்களோ தெரியாது. ”டேய், யாரடா அது புது ஆள்? நம்ம இடத்திலே படுத்துத் தூங்கறது? எழுந்திருடா” என்று குரலைக் கேட்டுத் திடுக்கிட்டுக் கண்ணை விழித்தாள் செல்லி. அப்பொழுது பொழுது நன்றாகச் சாய்ந்து இலேசாக இருள் பரவ ஆரம்பித்திருந்தது. தெருவில் வண்டியும் காரும் ஓடிக்கொண்டிருந்தன. எங்கும் ஒரே சத்தம். தன்னைச் சுற்றித் தனக்குப் பழக்கமில்லாத யார் யாரோ உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பது செல்லிக்குத் தெரிந்தது. மூன்று கல்லை வைத்து மூட்டிய அடுப்பில் ஒரு சட்டியில் கஞ்சி கொதித்துக் கொண்டிருந்தது. அடுப்பருகே உட்கார்ந்து பழைய காகிதம், குப்பை, இவைகளைப் போட்டு அடுப்பை எரிய விட்டுக் கொண்டிருந்தாள் ஒரு பெண். அவளைச் சுற்றி நாலைந்து குழந்தைகள் அந்தக் கஞ்சிப் பானையைப் பார்த்தபடி இருந்தன. பீடியைப் புகைத்துக் கொண்டே வந்த பாம்பாட்டி ஒருவன் பாம்புக் கூடையைக் கீழே வைத்துவிட்டு, ”சனியன், இந்தப் பாம்பு என்ன கனம் கனக்கிறது? தோளில் போட்டுக் கொண்டு நாலு தெருவு சுத்தறதுக்குள்ளே தோள் வலி எடுத்து விடுகிறது. வரும்படியாவது கை நிறைய வருதா? இன்னிக்குக் கிடைத்தது நாலணாத்தான்” என்று கூறிச் சில்லறையை அடுப்பருகே இருந்த தன் மனைவியிடம் கொடுத்தான்.

”நீ என்னிக்கித்தான் என்னிடம் கை நிறையக் காசு குடுத்திருக்கே. எல்லாம் எனக்குத் தெரியும். மீதித் துட்டுக்கு அந்த ரௌடி நல்லகண்ணுகிட்டேயிருந்து திருட்டுச் சாராயம் வாங்கிக் குடிச்சிருப்பே” என்றாள் அவள் குரோதத்துடன்.

அப்பொழுது தள்ளாடியபடி அங்கு வந்த ஒரு கர்ப்பிணிப் பெண் ”அய்யே இது யாரு புது ஜோடி நம்ம இடத்துக்கு வந்திருக்கு? பார்த்தா கிராமத்து ஆளுங்க போல இருக்கு. வூட்டுக்குத் தெரியாமே இந்தப் பொண்ணு இவன் பின்னாலே ஓடிவந்திருக்கு போலிருக்கு” என்றாள் கேலிச் சிரிப்புடன்.

இந்தப் பேச்சைக் கேட்ட செல்லியின் மனம் துணுக்குற்றது. அவள் மான உணர்ச்சி பொங்கி எழுந்தது. துள்ளி எழுந்து உட்கார்ந்து கொண்டு, ”இந்தா பாரு, அப்படியெல்லாம் நாக்கிலே நரம்பில்லாம பேசாதே. இவரு என் புருஷன். தொட்டுத் தாலி கட்டியவர். சந்தேகமாயிருந்தால் பார்த்துக்க” என்று கழுத்திலிருந்த தாலிச் சரட்டைக் காட்டினாள்.

கபடு இல்லாமல் பேசும் அக்கிராமத்துப் பெண்ணை ஒரு கணம் முறைத்துப் பார்த்தாள் அந்தக் கர்ப்பிணி. பிறகு மெதுவாக வயிற்றில் வைத்துக் கட்டிக் கொண்டிருந்த கந்தல் துணிகளை ஒவ்வொன்றாக எடுத்துக் கீழே போட்டபடியே ”கோவிச்சுக்காதே தங்கச்சி. ஏதோ சந்தேகமாயிருந்தது கேட்டேன்” என்றாள். செல்லிக்கு அவள் செய்கை விநோதமாக இருந்தது. கர்ப்பிணி போல் வயிற்றில் கந்தல் துணிகளை வைத்துக் கட்டிக் கொண்டிருக்கிறாள் இந்தப் பெண். எதற்காக இப்படி ஒரு வேஷம்? அவள் நடந்து வரும்போது எப்படிக் களைத்து, முகம் வாடி, தள்ளாடியபடி ஒரு நிஜக் கர்ப்பிணிப் பெண் போல் நடந்து வந்தாள்? எல்லாம் நடிப்பா என்று நினைத்த செல்லியின் வியப்பைப் பார்த்துவிட்டு, படுத்திருந்த கிழவன், ”என்ன அம்மா இப்படி அதிசயப்படறே? இதெல்லாம் பிழைக்கும் வழி. இந்திராணி இப்படிக் கர்ப்பிணி வேஷம் போடுவதில் கெட்டிக்காரி. பஸ் ஸ்டாண்டு, சினிமாக் கொட்டகை என்று போய் நின்று பார்ப்பவர்கள் உள்ளம் உருகும்படி ”ஐயா, கர்ப்பிணிப் பெண்ணுக்கு உதவுங்களேன். ஆஸ்பத்திரிக்குப் போக பஸ்ஸுக்குக் காசில்லை” என்று கெஞ்சும்போது, எந்தக் கஞ்சனும் காலணா போடாமல் இருக்க மாட்டான். இந்திராணிக்கு அத்தனை திறமை. பார்க்கப் போனால் இந்த மரத்தடியிலே அதிகப் பணம் சம்பாதிப்பது இந்த இந்திராணிதான்” என்று கூறிக் கண்ணைச் சிமிட்டினான்.

வயிற்றில் இருந்து எடுத்த கந்தல் துணிகளை மூட்டையாகக் கட்டி வைத்துவிட்டு, ”ஏன் தாத்தா அப்படி வயித்தெரிச்சல் படறே? உனக்கு மட்டும் சம்பாத்தியம் வருவதில்லையா? உன் உருவமே உனக்குச் சாதகமாயிருககு. வாயாலே நீ பேசவே வேண்டாம். துட்டு தானாக உன்னைத் தேடி வருது. எனக்கு அப்படியா? பிழைப்புக்கு எத்தனையோ வேஷம் போட வேண்டியிருக்குது. அதோ பாரு ரோட்டிலே” என்று இந்திராணி செல்லியைத் தட்டிக் கூப்பிட்டு, ”அந்தக் காரைப் பார்த்தாயா? அதுதான் நீல நிறக் காரு! அதிலே ஒரு அம்மா போறாங்க பாரு. அவுங்க ஒரு பிரபல சினிமா நடிகை. ஒரு படத்துக்கு ஆயிரக் கணக்கா வாங்கறாங்க. அவுங்களும் வயிற்றுப் பிழைப்புக்குக் கர்ப்பிணி வேஷம் போடறாங்க” என்று கூறிச் சிரித்தாள். இதையெல்லாம் கேட்கக் கேட்கச் செல்லிக்கு விநோதமாக இருந்தது. இந்திராணி புடவைத் தலைப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டு, ”பசி வயிற்றைக் கிள்ளுகிறது. நாயர் கடைக்குப் போய்ச் சாப்பிட்டு விட்டு வருகிறேன்” என்று சொல்லிப் போய் விட்டாள்.

பொழுது நன்றாக இருட்டி விட்டது. யாரோ ஒருவர் அந்தப் பிள்ளையார் கோயில் விளக்கில் சிறிது எண்ணெயை ஊற்றி ஏற்றி வைத்துவிட்டுப் போனார்.

”இந்தா பொண்ணு! எல்லாரும் சாப்பிடறாங்க. நீயும் உன் புருஷனும் மூணு நாளா பட்டினின்னு எனக்குத் தெரியும். இதோ கந்தல் துணியில் காசு கிடக்கு பாரு. எடுத்துப் போய் நாயர் கடையிலே ஏதாவது சாப்பிட்டுட்டு எனக்கு ஒரு தோசையும், ஒரு குவளை டீயும் வாங்கி வாங்க” என்றான் கிழவன். செல்லிக்கு எத்தனை பசி இருந்தாலும் அந்தக் கிழவனின் உதவியை நாட ஏனோ மனம் வரவில்லை. ”வேண்டாம் தாத்தா!” என்றாள் தயக்கத்துடன்.

கிழவன் மிகவும் வற்புறுத்தவே அவனிடமிருந்து எட்டணாவை எடுத்துக் கொண்டு இருவரும் நாயர் கடையை நோக்கி நடந்தார்கள். ஆளுக்கு இரண்டு தோசையும் டீயும் சாப்பிட்டுவிட்டு கிழவனுக்குப் பலகாரம் வாங்கிக் கொண்டு திரும்பினார்கள்.

வாயில் வாசனைப் பாக்கை மென்று கொண்டே பக்கத்தில் வந்து உட்கார்ந்த இந்திராணி ”ஆமாம், பட்டணத்திலே எப்படிப் பிழைப்பதாக உத்தேசம்?” என்று பேச்சை ஆரம்பித்தாள்.

”எங்காவது வீட்டு வேலை செய்வது, இல்லே வீடு கட்டும் இட்த்திலே கல்லு மண்ணு தூக்கிக் கையாள் வேலை செய்வது இப்படி ஏதாவது செய்துதான் பிழைக்க வேண்டும்’’ என்றாள் செல்லி.

இந்திராணி சற்று யோசித்துவிட்டு, ‘‘உங்களுக்கு இங்கே வீடு கட்டும் மேஸ்திரி யாரையாவது தெரியுமா?” என்று குறுக்குக் கேள்வி கேட்டாள்.

”அதெல்லாம் எங்களுக்கு யாரையும் தெரியாது. இந்தப் பிள்ளையாரப்பனைத் தவிர. இவர்தான் எங்களுக்கு வழிகாட்டி உதவி செய்யணும்” என்றாள். இந்திராணி சிரித்தாள். ”இந்தக் கல்லுப் பிள்ளையாரை நம்பி வந்து விட்டாயாக்கும்? இவரே பிறர் கையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். யாராவது எண்ணெய் விட்டால்தான் விளக்கு எரியும். இந்தக் கோயில் முற்றத்தில் தண்ணீர் தெளித்துப் பெருக்கிச் சுத்தம் செய்வதற்கும் மனிதன்தான் வேண்டியிருக்கிறது. யாராவது ஒரு முழம் கதம்பம் வாங்கி இவர் கழுத்தில் போட்டால்தான் மாலை போட்டுக் கொள்ளுகிறார். இப்படி இந்தப் பிள்ளையாரே தம் வாழ்வுக்கு மனிதர்களை நம்பியிருக்கும்போது நீ அவரை நம்பி வந்திருப்பது வேடிக்கையாக இருக்கு” என்றாள் அவள். பேச்சு செல்லிக்குப் பிடிக்கவே இல்லை.

மாதா கோயில் மணி எட்டு அடித்தது. இந்திராணி எழுந்து பிள்ளையார் கோயிலுக்குச் சென்று அந்த வளக்கிலிருந்து எண்ணெயை எடுத்துத் தன் தலையில் தடவிக் கொண்டாள்.

இதை பார்த்த செல்லிக்கு இதயம் பிளந்துவிடும் போலிருந்தது. கோபத்தை அடக்க முடியாமல் ”இந்தா அம்மா! இத்தனை நேரம் கடவுளைப் பற்றி இழிவாகப் பேசிவிட்டு அந்தக் கோயில் விளக்கு எண்ணெயை எடுத்துத் தலையில் தேய்த்துக் கொள்ள உனக்கு வெட்கமாக இல்லை? நீதான் எதுவும் கோயிலுக்குச் செய்யவில்லை. யாரோ புண்ணியவான் எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றினால் அந்த எண்ணெயை எடுத்துத் தலைக்குத் தேய்த்துக்கொண்டு விளக்கை அணைத்துவிட்டாயே!” என்றாள்.

இந்திராணி கலகலவென்று சிரித்துவிட்டு ”நீதான் கடவுள் கொடுப்பார் என்று சொன்னியே. எனக்குக் கடவுள் இப்படித்தான் கொடுக்கிறாரு. அவரோ கல்லுப் பிள்ளையாரு ‘இந்தா இந்திராணி, தலைக்கு எண்ணெய்’ என்று என் கையிலே கொண்டு வந்து கொடுக்க முடியுமா? மரத்தில் இருக்கும் பழம் ‘இதோ நான் இருக்கிறேன், என்னைச் சாப்பிடு’ என்று கையில் வந்து விழுமா? நாமாகப் பறித்துச் சாப்பிட வேண்டியதுதான். இதே நியதிப்படி கடவுளிடமிருந்து நானே எடுத்துக் கொண்டேன். கவலைப்படாதே. போ, படுத்துத் தூங்கு. நான் செய்யும் காரியங்களில் தலையிடாதே!” என்று கூறினாள்.

சற்றுத் தூரத்திலிருந்து யாரோ மெதுவாகச் ‘சீட்டி’ அடிக்கும் சத்தம் கேட்கவே இந்திராணி சொகுசாக அன்ன நடை நடந்து அந்தப் பக்கம் போனாள்.

”இந்தா பொண்ணு! ஏனம்மா அந்த இந்திராணிகிட்டே வார்த்தையாடறே? அவ பேச்சுக்குப் போகாதே. இந்த மரத்தடியில் அவள் வச்சதுதான் சட்டம். அவளுக்கு ஆள் பலம் அதிகம். இந்தப் பேட்டை ரௌடி நல்லகண்ணு அவளுக்காக எதையும் செய்யக் காத்திருக்கான். இந்திராணியைப் பகைச்சுக்கிட்டா நீ இந்த இடத்திலே வாழ முடியாது!” என்றான் கிழவன்.

எப்பொழுது செல்லி கண்ணயர்ந்தாளோ, தெரியாது. அவள் பொழுது விடிந்து கண்ணை விழித்தபோது சுடலைமுத்து குழாயடிக்குச் சென்று முகத்தைக் கழுவிக் கொண்டிருந்தான். பட்டணத்தில் பணம் இல்லாமல் கிடைக்கும் ஒரே பொருளான குழாய்த் தண்ணீரை அள்ளி அள்ளி முகத்தைக் கழுவிக் கொண்டிருந்த சுடலைமுத்துவைப் பார்க்கச் செல்லிக்கு லேசாகச் சிரிப்பு வந்தது. பாம்பாட்டியும் அவன் குடும்பமும் எழுந்து போய் விட்டிருந்தார்கள். இந்திராணி எப்பொழுது திரும்பி வந்தாளோ முகத்தில் வெய்யில் படுவதுகூடத் தெரியாமல் புரண்டு புரண்டு தூங்கிக் கொண்டிருந்தாள். செல்லி தண்ணீர் எடுத்து வந்து பிள்ளையார் கோவிலைச் சுத்தம் செய்தாள். பிறகு முகம் கழுவிக் கொண்டு கிழவனுக்குத் தேநீரும் இட்டிலியும் வாங்கிக் கொடுத்து விட்டுக் கணவனுடன் வேலை தேடக் கிளம்பிளாள்.

யாருக்காகவும், எதற்காகவும் காத்திராமல் காலம் ஓடிக் கொண்டிருந்தது. சுடலைமுத்துவும் பட்டணத்தில் வாழக் கற்றுக் கொண்டுவிட்டான். எப்படியோ கூலி வேலை செய்து தன் வயிற்றையும் தன் மனைவி வயிற்றையும் கழுவலானான். செல்லியும் சளைக்காமல் வேலை செய்தாள். ஒவ்வொரு நாள் இரவும் தன் கணவனுக்குக்கூடத் தெரியாமல் மீதம் வைக்கும் பணத்தைப் பத்திரமாக ஒரு தகர டப்பாவில் போட்டு மூடி, பிள்ளையார் விக்கிரகத்துக்குக் கீழே மறைத்து வைத்து வந்தாள். இரவு எல்லோரும் தூங்கின பின் மெதுவாக தகர டப்பாவிலிருந்த பணத்தை எண்ணிப் பார்த்துத் திருப்தியடைந்து வந்தாள்.

பக்கத்துத் தெரு மாயாண்டி நூறு ரூபாய்க்குத் தன் ரிக்‌ஷாவை விற்று விடுவதாகச் சொல்லிக் கொண்டிருந்தான். பணத்தைச் சேர்த்து அந்த ரிக்ஷாவை வாங்கிவிட்டால் தன் கணவனை அந்த மரத்தடியிலிருந்து அழைத்துக்கொண்டு வெளியே போய்விடலாம் என்று நினைத்தாள் செல்லி.

அன்று வழக்கம்போல் பிள்ளையார் கோயில் முற்றத்தைப் பெருக்கிக் கொண்டிருந்தாள் செல்லி. யாரும் எதிர்பாராத ஒரு சம்பவம் அப்பொழுது நடந்தது. அங்கு வந்து நின்ற காரிலிருந்து ஒருவர் இறங்கி போலீஸ் துணையுடன் வந்தார். ”நீங்கள் எல்லோரும் இந்த இடத்தை விட்டு இன்னும் ஒரு வாரத்தில் போய்விட வேண்டும். இந்த நிலத்தை ஒருவர் விலைக்கு வாங்கிவிட்டார். இங்கு வீடு கட்டப்போகிறார். ஒரு வாரம் தந்திருக்கிறேன். அதற்குள் போகவில்லையென்றால் பலவந்தமாகப் பிடித்துத் தள்ளி விடுவோம்” என்று எச்சரித்து விட்டுப் போனார். அவர் போய் இரண்டு நிமிஷங்களுக்கு யாருமே எதையும் பேசவில்லை. கிழவன் மெதுவாக ”ஏன் கவலைப்படறீங்க? இது பிறர் இடம். அவுங்க ஏதோ கட்டிடம் கட்டப் போறாங்களாம். போகச் சொன்னால் நாம் போக வேண்டியதுதானே! நமக்கென்ன இதை விட்டால் இன்னும் எத்தனையோ மரத்தடி!” என்று சமாதானம் சொன்னான்.

”அதெல்லாம் நாம்ப ஒண்ணும் போக வேண்டியதில்லை. நம்மை யாரு விரட்டுறாங்க பார்க்கலாம். பிடித்துத் தள்ளி விடுவாராமில்லை; அதையும் பார்த்து விடறேன். நான் ரௌடி. நல்லகண்ணுவை அழைச்சிட்டு வர்றேன். நம்மைக் கிளப்ப வருகிறவங்களுக்கு அவன் பதில் சொல்லுவான்” என்றாள் இந்திராணி.

அன்று இரவு பணத்தை எடுத்து எண்ணிப் பார்த்ததும் இந்த எட்டு மாத காலத்தில் நூறு ரூபாய் சேர்ந்து விட்டதை நினைத்துப் பெருமைப்பட்டுக் கொண்டாள் செல்லி. சுடலைமுத்து புது ரிக்‌ஷாவைப் பார்த்ததும் எப்படி மனம் மகிழ்வான்? இந்த இனிய நினைவில் லயித்த செல்லி ‘பொழுது விடிந்ததும் பணத்தைக் கொடுத்து ரிக்‌ஷாவை வாங்கிவிட வேண்டும்’ என்ற முடிவுடன் படுத்தாள். தூக்கத்தில் கனவில்கூட ரிக்‌ஷாவைத்தான் கண்டாள். இரவு இரண்டு மணி இருக்கும். திடீர் என்று ‘ஐயோ பாம்பு… பாம்பு அடியுங்களேன்’ என்ற கூக்குரலைக் கேட்டு விழித்தாள் செல்லி. பிள்ளையார் விக்கிரகத்தருகே கையில், பணம் வைத்திருந்த டப்பாவுடன் ரௌடி நல்லகண்ணு நின்று கொண்டிருந்தான். அவன் காலைச் சுற்றி ஒரு பாம்பு இருந்தது. நல்லகண்ணு பதறியபடி டப்பாவைக் கீழேயே போட்டுவிட்டான். அந்த டப்பாவை ஒரு சிறு பூட்டினால் பூட்டியிருந்தாள் செல்லி. அதனால் அவனுக்கு அதைத் திறக்க முடியவில்லை. ”அய்யோ! என் பணம். பிள்ளையாரப்பா நீதான் பாம்பைக் காட்டி என் பணத்தைக் காப்பாற்றினாய். இல்லையேல், நான் சாப்பிடாமல் சேர்த்த பணம் திருட்டுப் போயிருக்கும்” என்றபடி டப்பாவைக் கையில் எடுத்துக்கொண்டாள். அவளுக்கு விஷயம் புரிந்துவிட்டது. இந்திராணிக்கு எப்படியோ விஷயம் தெரிந்திருக்கிறது. நல்லகண்ணுவை விட்டுத் திருடச் சொல்லியிருக்கிறாள். அதை நினைக்க அவள் மனம் கொதித்தது.

”பாம்பை அடியுங்களேன்” என்ற கூக்குரலைக் கேட்டு விழித்துக்கொண்ட பாம்பாட்டி, ”அடாடா பயப்படாதே, ஐயா! அது என் பாம்புதான். நேற்று அவசரத்தில் சரியாகக் கூடையை மூட மறந்துவிட்டேன் போலிருக்கிறது. அது வெளியே வந்திருக்கிறது. நல்லவேளை! கிடைத்துவிட்டது. இல்லாவிட்டால் என் பிழைப்பிலே மண் விழுந்திருக்கும்” என்றபடி பாம்பை எடுத்துக் கூடைக்குள் போட்டு மூடினான். எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த இந்திராணி, ”அது சரி, அந்தப் பணத்தை இப்படிக் கொடு. அது என் பணம். நான் சேர்த்த பணம். பூனை மாதிரி இருந்துகிட்டுப் பணத்தை எடுத்துப் பிள்ளையார் விக்கிரகத்துக்கு அடியிலே மறைச்சு வசசிருக்கியே; உனக்கு எத்தனை தைரியம் இருக்கணும்? இதுக்குதான் பிள்ளையார் கோயிலைச் சுத்தம் பண்ணிக் கும்பிட்டுக்கிட்டிருந்தாயோ?” என்று கடிந்தாள். செல்லி நடுநடுங்கி விட்டாள். ”இப்படி ஒர் அபாண்டமா? கடவுளே, கை நோக, உடல் நோக, வயிற்றைக் கட்டி, வாயைக் கட்டி நான் சம்பாதித்த காசு என் புருஷனுக்குக் கூடத் தெரியாமல் சேர்த்து வைச்ச காசு” என்று பதறினாள் செல்லி.

சுடலைமுத்து நடப்பதை ஒன்றும் நம்ப முடியாமல் சிலையாக நின்றிருந்தான்.

”நன்றாகத்தான் கதை ஜோடிக்கிறாய்! பணத்தை கொடு அம்மே! இல்லைன்னா போலீசுக்காரனைக் கூப்பிட்டுடுவேன்” என்றாள் இந்திராணி மிடுக்குடன்.

நல்லகண்ணு பீடியைத் தூர எறிந்து விட்டு ”அம்மே டப்பாவைக் குடுத்திடு. நான் பொல்லாதவன். வீணா வம்புக்கு வராதே” என்று மிரட்டினான்.

இதுவரையில் பேசாமல் இருந்த சுடலைமுத்து, ”செல்லி! அந்த டப்பாவை அவள்கிட்டே குடுத்திடு. எனக்கு ரிக்‌ஷாவும் வேண்டாம்; ஒண்ணும் வேண்டாம். கோர்ட்டு, போலீசு என்று போகாமே மானமாக வாழ்க்கை நடத்தினால் போதும்” என்றான்.

”எப்படிங்க கொடுப்பேன்? என் உயிரை விட்டுச் சம்பாதிச்ச பணம். என் வாழ்வே இந்தப் பணத்தை நம்பித்தானே இருக்கு? இந்தப் பணம் என்னுடையது என்பதற்கு இந்தப் பிள்ளையாரே சாட்சி” என்று கதறினாள் செல்லி. அதிகப் பேச்சுக்கு இடம் வைக்காமல் நல்லகண்ணு செல்லியின் கையிலிருந்த டப்பாவைப் பறித்தான்.

”புருஷனுக்கு ரிக்‌ஷா வாங்கணும் என்கிற ஆசையிலே திருடவும் துணிஞ்சுட்டே!” என்றபடி வெற்றிலையைக் காரி உமிழ்ந்தாள் இந்திராணி. நல்லகண்ணு டப்பாவை இந்திராணியிடம் கொடுத்தான். செல்லி வயிற்றில் அடித்துக்கொண்டு ”கடவுளே! இந்த அநியாயம் எங்காவது நடக்குமா?” என்று புலம்பினாள். இந்திராணி ஒரு கல்லை எடுத்துத் தட்டி டப்பாவைத் திறந்தாள். அதை பார்த்ததும் ”அய்யோ!” என்று அலறினாள் இந்திராணி. டப்பாவில் காகிதத் துண்டும் ஓட்டாஞ்சல்லியும்தான் இருந்தன. இதைப் பார்த்த செல்லியும் திகைத்து நின்றுவிட்டாள். இந்திராணி ஒரு நிமிஷம் யோசித்தாள். ஏதோ விஷயம் புரிந்தது போல் நல்லகண்ணுவை நோக்கி ”என்ன மச்சான்! நாடகத்துக்குள்ளே நாடகமாடறியா? முதல்லே பணத்தை எடுத்துக்கிட்டு வேஷம் போட்டு என்னை ஏமாத்தறியா? எடு பணத்தை” என்று மிரட்டினாள். நல்லகண்ணுவுக்கும் கோபம் வந்துவிட்டது.

”நீதான் என்னை ஏமாற்றினாய். இந்த விளையாட்டெல்லாம் வேண்டாம்” என்றான் நல்லகண்ணு.

இந்திராணி பெண் புலியாக மாறினாள். ”அட சீ! நீயும் ஒரு மனுஷனா? நீ மட்டும் என் பணத்தைக் குடுக்கல்லே, உன்னைச் சும்மா விடமாட்டேன். உன் வண்டவாளங்களைப் போலீசுக்குச் சொல்லி விடுவேன். இந்த இந்திராணியை என்ன என்று நினைத்தாய்?” என்று சீறினாள்.

”எனக்கு அப்பவே தெரியும்… பணம் யாரு சேர்த்தாலும் அது பகையிலேதான் முடியும் என்று” என்றான் கிழவன்.

”ஏ கிழவா நீ பேசாமல் இருக்க மாட்டே! உன்னை யாரு கூப்பிட்டாங்க? நடுவே புகுந்து பேசினே, அடித்து நொறுக்கி விடுவேன்” என்றான நல்லகண்ணு. பிறகு இந்திராணியிடம் ”என்ன அம்மே, எங்கிட்ட படிச்ச வித்தையை என்கிட்டேயே காட்டறியா? போலீசுன்னா எனக்குப் பயமா? ஒண்ணு நினைச்சுக்க… நான் போலீசுக்குப் போனால் நீயும் என் பின்னாலே வரவேண்டியதுதான். உன் பணத்தைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது” என்றான் கண்டிப்பாக.

”சரி, இந்த இந்திராணியை யாரும் ஏமாத்த முடியாது. உங்கிட்ட பேசிப் பிரயோசனமில்லே. நான் போலீசாரை விட்டு உன்னைக் கவனிக்கச் சொல்றேன்” என்றபடி வேகமாக நடந்தாள் இந்திராணி. கீழே கிடந்த தகர டப்பாவைக் காலால் உதைத்து தள்ளிவிட்டு நல்லகண்ணுவும் அவளைப் பின்தொடர்ந்தான்.

”தாத்தா! நான் என்ன செய்வேன்? நீயே சொல்லு. நான் இந்திராணி பணத்துக்கு ஆசைப்படுவேனா?” என்றாள் செல்லி கிழவனிடம். கிழவனுக்கு அவளை எந்த விதத்திலும் தேற்ற முடியவில்லை. அழுது அழுது செல்லியின் கண்கள் கோவைப் பழமாகச் சிவந்து விட்டன. எத்தனை கட்டுப்படுத்தியும் அவளால் துக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சுடலைமுத்து பொறுமையாக, ”ஏம் புள்ளே இப்படி வருத்தப்படறே? உயிரா போயிடுச்சு? பணம்தானே; போனால் போகட்டும். இனிமேலும் சம்பாதிக்கலாம்” என்றான்.

”இனிமேல் எப்படிச் சம்பாதிப்பது? வேர்வை சொட்ட வேலை செய்த காசைக் காரணமில்லாமல் அநியாயமாக இழப்பதென்றால் அதை என்னால் தாள முடியாது” என்றாள் செல்லி.

நொண்டிப் பிச்சைக்காரன் ஒருவன் அந்த இடத்தை விட்டே போய்விட நினைத்துத் தன் சட்டிப் பானைகளை மூட்டை கட்டிக் கொண்டிருந்தான். கிழவன் எதுவும் பேசாமல் யோசித்துக் கொண்டும், உடல் உபாதை தாளமுடியாமல் முக்கி, முனகிக் கொண்டும் படுத்திருந்தான்.

தன் மூட்டை முடிச்சுக்களைப் புது இடத்துக்குப் பெயர்த்து எடுத்துச் சென்ற பாம்பாட்டி திரும்ப மேல் மூச்சு, கீழ்மூச்சு வாங்கச் செல்லியிடம் வந்து, ”நான் நெனச்சது சரியாய்ப் போச்சு. நல்லகண்ணுவும் இந்திராணியும் சண்டை போட்டுக்கிட்டாங்க. நல்லகண்ணு கோபத்தில் இந்திராணியை அடித்துவிட்டான். இந்திராணி, நல்லகண்ணு திருட்டுச் சாராயம் காய்ச்சும் இடத்தைப் போலீசுக்குக் காட்டிக் கொடுத்துவிட்டாள். இதை அறிந்த நல்லகண்ணு இந்திராணியை மேலும் உதைத்து அவள் வண்டவாளங்களையும் போலீசுக்குச் சொல்ல, போலீஸ் வண்டி வந்து, இந்திராணி நல்லகண்ணு சாராயம் காச்சும் பானை, துணை ஆட்கள், எல்லோரையும் ஏற்றிக்கொண்டு போய் விட்டது. இனிமேல் குறைந்தது ஆறு மாசம் அவுங்க சர்க்கார் விருந்தாளிதான்” என்றான். யாரும் எதையும் பேசவில்லை. வெகுநேர மௌனத்துக்குப் பிறகு, ‘யாரு ஜெயிலுக்குப் போனால் என்ன? என் பணம் போயிற்று’ என்றாள் செல்லி உடைந்த குரலில்.

கிழவன் சிரமப்பட்டு எழுந்து உட்கார்ந்தான். ”செல்லி! இங்கே வா! இதோ பாரு, நீ உழைச்சுச் சம்பாதித்த பணம் எங்கும் போய்விடவில்லை. இதோ என் கந்தல் துணி மூட்டைக்குள் இருக்கிறது. எடுத்துக்கொள். நேற்று இரவு இந்திராணி நல்லகண்ணுவிடம் பணத்தைத் திருடும்படி சொல்லிக் கொண்டிருந்ததை நான் கேட்டுவிட்டேன். உன் பணம் பறிபோவதை நான் விரும்பவில்லை. ஆகையால் அவர்களை முந்திக் கொண்டு பணத்தை எடுத்து மறைத்து வைத்துவிட்டு, காகிதத் துண்டையும் ஒட்டாஞ்சல்லியையும் வைத்து விட்டேன்” என்றான் கிழவன்.

பணத்தைப் பார்த்ததும் செல்லிக்கு மகிழ்ச்சியால் கண்ணீர் வந்துவிட்டது. ”தாத்தா! கடைசியாக நான் பாடுபட்டுச் சேர்த்த பணம் கிடைத்துவிட்டது. நான் நம்பி வந்த பிள்ளையார் என்னைக் கைவிடாமல் உன் உருவத்தில் வந்து என்னைக் காப்பாற்றியிருக்கிறது. கடவுள் எங்கே என்று தேட வேண்டாம். அவர் நல்லவர்கள் உள்ளத்திலும் இருப்பார் என்று தெரிந்து விட்டது” என்று கூறிய செல்லி, பிள்ளையாரை நோக்கி நன்றிப் பெருக்குடன் கரம் குவித்தாள். அந்த மரத்தடிப் பிள்ளையார் அப்பொழுதும் கல்லாகவே இருந்தார்!

***

ஜி.கே.பொன்னம்மாள்

கேரளாவின் ஒரு கிராமத்தில் பிறந்து தமிழ் எழுத்தாளரானார் ஜி.கே.பொன்னம்மாள். ஆறு வயதிலேயே ஹார்மோனியம் வாசிக்கக் கற்றிருந்தார். பாடல்கள் இயற்றுவது, பாடுவது, நாடகம் தயாரிப்பது என பல்திறன் கொண்ட கலைஞர் இவர். பின்னணிப் பாடகியாக இருந்ததுடன், நிருத்தோதயா நடனப் பள்ளியில் நடனப் பயிற்றுனராகவும் இருந்தார். 350 சிறுகதைகளும், கட்டுரைகளும், நாவல்களும் எழுதியிருக்கிறார். ‘வாழ்க்கைச் சகடம்’ இவரின் முக்கிய நாவல்களில் ஒன்று.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *