வாழ்க்கை நொடிகளால் ஆனது. விநாடிகளைத் தான் நொடி என்று சொல்கிறேன். என் தாத்தா ‘நொடி’ என்று வளைவையோ, திருப்பத்தையோ குறிப்பிடுவார். அவர் சொல்லும் அர்த்தத்தில் வாழ்க்கை என்பது திருப்பங்களால் ஆனது; அதுவும் சரிதான்! ஆக மொத்தத்தில், வாழ்க்கை என்பது எனது நொடிகளாலும், எனது தாத்தாவின் நொடிகளாலும் ஆனது. சரிதானே!
தேவதைகள் பரிசளித்த ஒரு நொடியில் தான் நான் மின்னியைச் சந்தித்தேன். அந்த நொடியில் துவங்குகிறது இந்தக் கதை. இன்னும் நிறைய நொடிகள் வரும். (இது தாத்தா சொல்லும் நொடி).
வீட்டில் அப்பா பருத்தி விற்று வைத்திருந்த பத்தாயிரத்துச் சொச்சத்தை நான் எடுத்துக் கிளம்புகையில் அதிகாலை நாலு மணி இருக்கும். சத்தமில்லாமல் சாவியை எடுத்து மர பீரோவைத் திறக்கை யில், அதிலிருந்த கண்ணாடியில் என் உருவத்தைப் பார்த்தேன். சர்வ யோக்கி யன் போன்ற அப்பாவி முகம். இருந் தாலும் திருட வேண்டியிருக்கிறது.
வேறு என்னதான் செய்வது? படிப்பு ஏறவில்லை. பி.ஏ., ஹிஸ்டரி. தமிழ் மீடியம். பக்கத்து டவுன் காலேஜ். தெரிந்த வாத்தியார்கள். இவ்வளவு தார்மிக பலம் இருந்தும், பானிப்பட்டு யுத்தம் தவிர, சரித் திரத்தில் வேறு எதுவும் ஞாபகம் இருக்க மாட்டேன் என்கிறது.
சரித்திரம் வராதே தவிர, தமிழ் சுமாராக வரும். சில கவிதைகள் எழுதி, அவை வாராந்திர இணைப்பு களில் பிரசுரமாகி இருக்கின்றன. எனவே, அடுத்ததாக சென்னை சென்று சினிமாவுக்குப் பாட்டெழுத வேண்டும்; டி.வி&யில் பேட்டி கொடுக்க வேண்டும். அதற்காகத் தான் என் பிதுரார்ஜித பங்காக ஒரு பத்தாயிரத்திச் சொச்சத்தை அப கரிக்கவேண்டியதாகிவிட்டது. பணத்தை இடுப்பில் சொருகி, வீட்டைவிட்டு சைக்கிளில் கிளம்பி டவுனில் தெரிந்த கடையில் சைக் கிளை நிறுத்திவிட்டு, பஸ் ஏறி விட்டேன். கம்பத்திலிருந்து கிளம்பி திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் மார்க்கமாக சென்னை அடைகிற உத்தேசம்.
கூட்டம் குறைவாகக் கிளம்பிய பஸ்ஸில் ஜன்னலோரமாக ஏதோ ஒரு நொடியில் தூங்கத் தொடங்கிய வன், ஒரு (அ)தட்டலில் விழித்தேன். ‘‘இறங்கு, இறங்கு… அவ்வளவுதான்… பஸ் போகாது! நாட்ல ஒரே கலவரமாய்ட்டு இருக்கு. உறக்கத்தைப் பாரு!’’
பஸ் காலியாக இருந்தது. பஸ்ஸி லிருந்து இறங்கிய சொற்பப் பயணி களையும் காணவில்லை. நான் இறங்கியதும், டிரைவர் பஸ்ஸை ‘விருட்’டென்று எடுத் தார்.
‘‘சார், சார்… என்னாச்சு?’’
‘‘விஷயம் தெரி யாதா? குண்டு வெடிச் சுத் தலைவர் செத்துட் டாரு. இங்க நின்னா பஸ்ஸைக் கொளுத்திடு வாங்க. அதான் பஸ்ஸ§ டிப்போவுக்குப் போகுது!’’
பஸ் விரைந்துவிட்டது. ஏதோ ஒரு விபரீத நொடி. எங்கோ ஒரு குண்டை வெடிக்கவைத்து, நாட்டின் முக்கியத் தலைவர் கொல் லப்பட்டுவிட, நாடே ஸ்தம் பித்துப் போயிருப்பதை வெகு தாமதமாக உணர்ந் தேன். அது ஏதோ ஒரு கிராமத்துக்குச் செல்லும் சாலைப் பிரிவு. அங்கே நான் மட்டும் தனியே… இல்லை… சற்றுத் தள்ளி ஒருத்தி நின்றிருந்தாள்.
இளமஞ்சள் நிற பனியனும், பழுப்பு நிறத்தில் முக்கால் பேன்ட்டும் அணிந்து, ஒரே ஒரு சின்ன பேக்குடன் குழப்பமாக விழித்தபடி நின்றிருந்தாள். என்னால் அவளிடம் இருந்து பார் வையை விலக்க முடியவில்லை. யாராலும் முடியாது. அவ்வளவு வசீகரமானவள். அவளிடம் போய்ப் பேச வேண்டும் என்று தோன்றியது. ஆனால், முடியவில்லை. கூச்சமோ, வெட்கமோ காரணம் இல்லை. அவள் இருக்கிற ஸ்டைலுக்கு, நான் போய் நின்றதும் இங்கிலீஷில் ஏதாவது கேட்டுவிட்டால்?
அவளே என்னிடம் வந்தாள். பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த, தமிழிலேயே என்னிடம் பேசினாள். ‘‘எக்ஸ்கியூஸ் மி… இது எந்த ஊர்?’’
எனக்கும் சரியாகத் தெரியவில்லை. திண் டுக்கல்லுக்கு அருகே ஏதோ ஒரு இடம் என்று பட்டது. அதைச் சொல்லி விட்டு, ‘‘எந்த ஊரு நீங்க? இங்க எங்க வந்தீங்க?’’ என்று கேட்டேன்.
அவள்வெகு இயல்பாகப் பேசத் துவங்கினாள். அவளது தோற்றத்தையும், தோரணை யையும் பார்த்து நிச்சயமாக அதிகம் பேச மாட்டாள், ‘கெத்’தாக இருப்பாள் என்று நினைத்ததற்கு மாறாக இருந் தது அவளது பேச்சு.
அவள் சென்னையிலிருந்து வரு கிறாள். தேக்கடிக்குச் செல்கிறாள். திருச்சி வரை ரயிலில் வந்து, அங்கி ருந்து ஒரு வாடகைக் காரில் தேக்கடி நோக்கிச் சென்றுகொண்டு இருந்த போது, இங்கே நிற்கவேண்டியதாகி விட்டது.
‘‘கார்ல ஏதோ சின்ன பிராப்ளம். திண்டுக்கல் போய்ச் சரி பண்ணிட்டு வர்றேன்னு அந்த டிரைவர் கிளம்பிப் போனான். பிரச்னைல மாட்டிக் கிட்டான் போலிருக்கு..!’’
‘‘நீங்களும் கூடப் போயிருக்கலாமே? எதுக்காக இந்த அத்துவானக் காட்ல தனியா நிக்கணும்?’’
அவள் புன்னகைத்தாள். ‘‘பிராக்டி கலா யோசிச்சா அதான் பண்ணி யிருக்கணும். பட், ஐம் நாட் பிராக்டிகல். இந்த இடம் அழகா இருந்தது… போட்டோஸ் எடுத்துட்டு இருந்தேன். டிரைவர் கூப்பிட்டப்போ, நீங்க போய்ச் சரிபண்ணிட்டு வாங்க, நான் இங்கேயே இருக்கேன்னு சொன்னேன்… யாருக்குத் தெரியும், எங்கியோ ‘பாம்’ வெடிக்கும்… போன கார் திரும்பி வராதுன்னு… ம்?’’
‘‘ஆமாங்க… நான்கூட சென்னைக்குப் போய்ட்டு இருக்கேன்… இப்படி ஆகிப்போச்சு?’’
‘‘லைஃப்ல எல்லாமே ப்ளான்படி நடக்கிறது கிடையாது. ஆனா, அதானே வாழ்க்கையோட சுவாரஸ்யம்!’’
‘‘அடப்போங்க… இதுல என்ன சுவாரஸ்யம் கிடக்கு? மெட்ராஸ் போறது கெட்டுப்போச்சேன்னு கவலையா இருக்கு. இனி என்னிக்கு பஸ் ஓடி, எப்ப கிளம்பி… கரெக்டா நான் ஊருக்குக் கிளம்புறப்பயா குண்டு வைப்பாங்க… வெளங்காத பசங்க!’’
அவள் முகத்தில் ஓர் அழகான சிரிப்பு பரவியது.
‘‘என்ன சிரிக்கிறீங்க?’’
‘‘ஊருக்குப் போக முடியாதது உங்களுக்கு வருத்தம். குண்டு வெடிச்சு ஒருத்தர் திடீர்னு செத்துப்போறது அதைவிடப் பெரிய வருத்தம் இல் லியா? இறந்தவரோட குடும்பத்தை யோசிச்சுப் பாருங்க…’’
‘‘ம்’’ என்றேன். விவரமாகப் பேசும் பெண். கவனமாக இருக்க வேண்டும்.
‘‘குண்டை வெடிச்சவனுக்கும் ஏதாவது துக்கம் இருக்கும்ல?’’
‘‘எனக்கு இதெல்லாம் யோசிக்க வரலைங்க!’’
புன்னகைத்தாள்… ‘‘ஓ.கே! பக்கத் துல ஏதாவது ஊர் இருக்கும்ல?’’
‘‘ஆமாங்க… இது ஏதோ விலக்கு… உள்ள நடந்தா ஊர் வரும்.’’
மெயின் ரோட்டிலிருந்து உள்ளே பிரிந்த மண் சாலையில் நடந்தோம். 12 கிலோமீட்டர் தாண்டி, ‘தாமரைக் குளம்’ எனும் ஊர் இருப்பதாக ஒரு சின்ன மைல் கல் சொன்னது. அவள் வெகு சகஜமாகப் பேசியபடி வந்து கொண்டு இருந்தாள். நான் தயங்கி அவள் பெயர் கேட்டேன்.
‘‘மின்னு.’’
‘‘பேரே அதானா?’’
‘‘வீட்ல வெச்ச பேரு வேற… நான் மாத்திக்கிட்டேன்.’’
அந்தப் பெயர் ரொம்பவும் பிரிய மானதாக இருந்தது. செல்லமானதாக, நிஜமான செல்லப் பெயராகத் தோன்றி யது. இந்த ஆண்டுதான் எம்.ஏ., தத்துவம் முடித்திருக்கிறாள்.
‘‘தேக்கடிக்கு எதுக்குப் போறீங்க?’’
‘‘எனக்கு நகரத்தைவிட காடுதான் பிடிக்கும். வருஷத்துல பாதி நாள் எப்படியாவது பிச்சுக்கிட்டு மலைப் பக்கம் ஓடிடுவேன். முதுமலை, டாப்ஸ் லிப், கொடைக்கானல், கேரளாவுல மலப்புரம், தேக்கடின்னு… நாள் கணக்கா வாரக்கணக்கா போய் உக்காந்துக்கு வேன். மின்னுங்கிறது ‘மினர்வா’ வோட சுருக்கம். மினர்வான்னா கானக தேவதை…’’
‘‘சிட்டி பொண்ணு நீங்க… சந்தடி இல்லாத காட்டுப் பக்கம் உங்களுக்கு போர் அடிக்காதா?’’
‘‘போர் அடிக்கிறதா? உங்களுக்கு ஒண்ணு தெரி யுமா? யோசிக்கத் தெரிஞ்சவங்களுக்கு போர் அடிக் காது. காட்டுக்குள்ள, மனு ஷங்க சப்தமில்லாம இயற் கைச் சப்தங்களுக்கு நடுவுல ஒரு நாலு நாள் இருந்து பாருங்க… உங்களுக்குள்ள ஏதேதோ பண்ணும். எவ்வ ளவு போலியான வாழ்க் கையை நாம எல்லாரும் வாழ்ந்துட்டு இருக்கோம்னு தோணும். நாமெல் லாம் இயற்கையை விட்டு, யதார்த் தத்தைவிட்டு நிறைய விலகிட் டோம். நிறையப் பிரச்னைகளுக்கு அதான் காரணம். நான் சொல்றது சரிதானே?’’
நான் பேசாமல் இருந்தேன்.
‘‘என்ன பேசாம இருக்கீங்க. ஐம் ஸாரி… உங்க பேர் என்ன?’’
‘‘சக்திவேலுங்க.’’
‘‘படிச்சிருக்கீங்கள்ல… ஸாரி, சும்மா தெரிஞ்சுக்கக் கேக்கிறேன்.’’
‘‘பி.ஏ., ஹிஸ்டரி… நானும் கிராஜு வேட்தாங்க’’ என்றேன், குற்ற உணர்வும் கூச்ச உணர்வும் மூழ்கடிக்க!
‘‘ஓ! சரி, நான் சொன்னதை ஏத்துக்கி றீங்களா?’’ என்றாள்.
‘‘இல்லீங்க… பணம் இல்லாததுதாங்க வாழ்க்கைல பிரச்னைகளுக்குக் காரணம். பணம் மட்டும் இருந்துட்டா, யாருக்கும் எந்தப் பிரச் னையும் வராதுங்க.’’
அவள் புன்னகைத் தாள். ‘‘மை குட்னஸ்! ரொம்ப சிம்பிளா யோசிக் கிறீங்க, சக்தி! என்கிட்ட எவ்வளவு பணம் இருக் குன்னு தெரியுமா உங்க ளுக்கு? என் அப்பா ரொம் பப் பெரிய பணக்காரர். என் அம்மா அவரோட ரெண்டாவது மனைவி. ஆஸ்திரேலியாவுல இருக்காங்க.’’
‘‘அட! அப்ப நீங்க இங்க தனி யாவா இருக்கீங்க?’’ என்னை அவள் வேலு என்று கூப்பி டாமல் சக்தி என் றது ரொம்பவும் பிடித்திருந்தது.
‘‘ம்… அஞ்சு வருஷமாதான் சென்னைல. அப்பாவோட ஃப்ரெண்ட் வீட்ல ‘பேயிங் கெஸ்ட்’டா இருக் கேன்.’’ பெருமூச்சு விட்டாள். ‘‘ஆஸ்தி ரேலியால அம்மாகூட இருக்கப் பிடிக்காமல்தான் தமிழ்நாடு வந்தேன். பட்… இங்கியும் என்னால ஒட்ட முடியலை. ப்ச், நான் சந்தோஷமா இல்லை சக்தி. பணம் மட்டும் சந்தோஷம் தந்துடாது… இது என் னோட எக்ஸ்பீரியன்ஸ்!’’
நாங்கள் ஊரை நெருங்கிக் கொண்டு இருந்தோம். காற்றில் ஒலி பெருக்கியின் மூலமாக ஒப்பாரிச் சத்தம் மிதந்து வந்தது. காற்றின் வேகத் துக்கு ஏற்றவாறு கூடிக் குறைந்தது.
‘‘என்னது… எதுக்கு அழறாங்க? அதுவும் ஸ்பீக்கர்ல?’’
‘‘தலைவரு போய்ட் டார்ல… அதான் நாடு தழுவிய ஒப்பாரி!’’
ஊருக்குள் நுழைந் தோம். பந்தல் போட்டு பெண்கள் தரையில் சாக்கு விரித்து அமர்ந் திருந்தார்கள்.
பந்தலில் கயிறு கட்டி ‘மைக்’ தொங்கிக்கொண்டு இருந்தது. தலைவர் படத்துக்கு மாலை போட்டு சந்தனம் குங்குமம் வைத்து, முன்னாடி ஊது பத்தி கொளுத்தி இருந்தது. பெண்கள் ஒவ்வொருவராக எழுந்து ‘மைக்’ முன்னால் நின்று ஒன் பை ஒன்னாக அழுதுகொண்டு இருந்தனர்.
‘‘…வடக்கே இடி இடிக்க
வாழை மரம் சாஞ்சதென்ன?
தெக்கே இடி இடிக்க…
தென்ன மரம் வீழ்ந்ததென்ன?
எங்க ராஜ்ஜியத்தை ஆண்டவரே
ராசா… என் தர்மதுரை…
திருநாளும் வந்ததுன்னு…
தேர் ஏறிப் போனீரோ..?’’
மின்னு ஒப்பாரியை ஆர்வத்துடன் செவிமடுத்தபடி வர… அந்த ‘முக்கா டவுசர்’ பெண்ணை முறைத்த படி திருகு மீசைக்காரர் ஒருவர் என்னை விரலசைத்து அழைத்தார்.
‘‘எந்தூர் தம்பி, என்னா விசயம்?’’
‘‘பஸ்ஸை நிறுத்திட்டாங்கண்ணே!’’
‘‘நிறுத்திப்புட்டோம்ல! ரெண்டு மூணு நாளைக்கு ஓடாது… தலைவரே போய்ட்டாரு! மயிரு… பஸ் போனா என்னா, போகாட்டிதான் என்னா?’’
‘‘அதாண்ணே… என்னா பண்றதுன்னு தெரியலை.’’
‘‘இதாரு பொம்பளைப் புள்ளை, முக்கா டவுசரு போட்டுக்கிட்டு… உன் சிநேகிதமா?’’
‘‘ஆமாங்க’’ என்றாள் மின்னு.
‘‘பஸ்ஸெல்லாம் ஓட ஆரம்பிக்கிற வரைக்கும் உங்க ஊர்ல நாங்க தங்க லாமா… ப்ளீஸ்’’ என்றாள்.
‘‘தாராளமா தங்க லாம் தாயி! நம்ம வீட்டுலயே இருந்துக் கங்க… நான்தான் ஊர்ப் பெரியதனம்!’’
எங்களை அவர் தன் வீட்டுக்குக் கூட்டிப்போய் அறிமுகப்படுத்தினார். நன்றாகக் கவனித்தார்கள் அங்கிருந்த பொம்பளைகள். கழுத்து, காதில் ஏதுமணியாத முக்கா டவுசர் மின்னு தான் அங்கே அட்ராக்ஷனாக இருந் தாள். நான் இரண்டாந் தரப் பிரஜை யாக திண்ணையில் உட்கார்ந்திருந் தேன். மின்னு குளித்து உடை மாற்றி ஃப்ரெஷ்ஷாக வந்தாள்.
‘‘அப்படியே ஊரைச் சுத்திப் பாக்க லாமா?’’
ரெண்டு பேரும் தெருவில் நடந்தோம். ஊரின் கண்கள் துளைப்பது எனக்கு அசௌகரியமாகவும், மின்னுவுக்கு வேடிக்கையாகவும் இருந்தது.
‘‘யாருமே வேலைக்குப் போகலை போலிருக்கு ஊர்ல?’’
‘‘ஆமாங்க… துக்கம் நடந்திருச்சில்ல! எப்படிப் போவாங்க!’’
மின்னு வியப்புடன் ஒப்பாரிப் பந்தலைக் கவனித் தாள். நடுத்தர மற்றும் வயதான பெண்கள் பீறிடும் துக்கத்துடன் அழுது கொண்டு இருந் தனர்.
‘‘ப்ச்! யாரோ இறந்த துக்கு எவ்வளவு ஃபீல் பண்ணி அழ றாங்க பாத்தீங்களா! எவ்வளவு தூரம் எல்லாரையும் நேசிக் கிற மனசு வேணும் இதுக்கு?’’
‘‘நீங்க வேற.. அதெல்லாமில்ல! எல்லாரும் அவங்க வங்க வீட்டுத் துக்கத்தை மனசுல வெச்சுத்தான் அழறாங்க. இதுல எத்தனை பேரு புருஷனை நினைச்சு அழுறாளோ, அப்பனை நினைச்சு அழுறாளோ, யாருக்குத் தெரியும்?’’
அவள் சிரித்தாள்… ‘‘ரொம்ப ‘சினிக்’கலா இருக்கீங்க!’’
‘‘அப்படின்னா?’’
‘‘ம்… எல்லாத்துலயும் நெகடிவ்வா யோசிக்கிறது… குதர்க்கமா பாக்கிறது…’’
‘‘என்ன பண்றதுங்க… வளர்ப்பு அந்த மாதிரி. உங்களை மாதிரி நல்ல, படிச்ச, வசதியான வீட்ல பொறந் திருந்தா…’’
‘‘ஸ்டாப் இட்!’’ என்றாள் வெடுக் கென்று என் முகம் சுருங்கியது. சற்று அவமானமாக உணர்ந்தேன்.
‘‘என்னோட வீட்டைப் பத்தி உயர்வா பேசறீங்க.. உங்களுக்கு என்ன தெரி யும் அதைப் பத்தி? தெரி யாம எதையும் பேசக் கூடாது!’’
எனக்கு அதற்கப்புறம் சகஜமாக அவளிடம் பேச முடியவில்லை. மனது சுருங்கி விட்டது. ஆனால், அவள் வெகு சாதாரணமாகப் பேசியபடி வந்தாள். இருவரும் ஊரைத் தாண்டி ஏதோ ஒரு மரத்தடிக் கோயிலுக்கு வந்து விட்டோம்.
அவள் சற்று அமைதியாக இருந்து விட்டு, பிறகு ‘‘ஸாரி’’ என்றாள். ‘‘நான் பட்டுனு பேசினது உங்களை வருத்தப் படுத்திருச்சோ?’’
‘‘இல்லீங்க… அதெல்லாம் இல்லை!’’
‘‘இல்லை, நான் பேசின தொனி தப்பு… ஸாரி!’’
நான் பேசாமல் இருந்தேன்.
அன்று இரவு வரை ஊரையும், ஊரைச் சுற்றியிருந்த தோட்டம், கண் மாய் என்று எல்லா இடங் களையும் இலக்கின்றி சுற்றி வந்தோம். மின்னு பேசிக் கொண்டே இருந்தாள். தன்னைப் பற்றி, தனக்குப் பிடித்த விஷயங்கள் பற்றி, தனது பிறப்பு பற்றி, சென்னையில் தனக்குக் கிடைத்திருக்கும் நண்பர்கள் பற்றி… எல்லாவற்றையும் என்னிடம் சொல்லியே ஆக வேண்டும் என்று யாரோ உத்தரவிட்டதைப் போல பேசிக்கொண்டே இருந்தாள். அவள் பேச்சின் அடிநாதமாக ஒரு சோகமும் தவிப்பும் இருந்துகொண்டே இருந்தது.
ராத்திரியானதும் என்னைத் திண்ணையில் படுக்கச் சொல்லிவிட்டு, அவளை உள்ளே படுக்க ஏற்பாடு செய்தார்கள். எனக்கும் திண்ணை தான் வேண்டும் என்று திடமாகச் சொல்லிவிட்டு, அவளும் வந்து திண் ணையின் மறு கோடியில் படுத் துக்கொண்டாள். எனது ஆச்சர்யம் கூடிக்கொண்டே போனது.
அது வளர் பிறைக் காலம். நிலவின் ஒளி திண்ணையை வெளிச் சப்படுத்தியிருக்க… அன்று முழுவதும் அவள் பேச்சைக் கேட்டு, அவள் பற்றி எனக்கு வந்திருந்த சந்தேகத்தை அவளிடம் கேட்டேன்… ‘‘ஏங்க, எப்ப வும் ஒரு சோகத்தோடவே பேசறீங்களே… எதைப் பேசினாலும் விரக்தியாவே முடிக்கிறீங்களே… என்ன தாங்க பிரச்னை உங்களுக்கு? படிச்சிருக்கீங்க, அழகா இருக்கீங்க, காசு பணத்துக்கும் பஞ்சமில்லாத மாதிரி தெரியுது. அப்புறம் என்னங்க?’’
அவள் அமைதியாக இருந்தாள். சற்று அதிகப்படியான அமைதி. ‘‘என் னோட பிரச்னையா? ம்… தனிமைதான் என்னோட பிரச்னை. தனிமைன்னா தனியா இருக்கிறது கிடையாது. என்னைப் புரிஞ்சுக்க ஒருத்தர்கூட இல்லாத தனிமை. என் கவலையைத் தைரியமா சொல்றதுக்கு ஒருத்தர்கூட கிடையாதுங்கிற தனிமை.’’
‘‘ஃப்ரெண்ட்ஸ் இல்லியா?’’
‘‘ப்ச்… இருக்காங்க, தலைவலின்னு சொல்வேன். எந்த உணர்ச்சியும் இல்லாம டாக்டர்கிட்ட காட்டு, இல்லாட்டி மாத்திரை போட்டுக்க அப்படின்னு பதில் வரும். அவளை நான் எப்படி ஃப்ரெண்டுன்னு நினைக்கிறது? எனக்கு மாத்திரை தரணும். என் தலையைத் தடவிக் கொடுத்து சரியாயிடும்னு சொல்லணும். அப்படி நிஜமான அக்கறையோட, எதிர்பார்ப்பு இல் லாத நேசத்தோட ஓர் ஆத்மாவை நான் இப்ப வரைக்கும் சந்திக்கலைப்பா!’’
நான் அவளையே பார்த்தேன்.
‘‘எனக்கு ரூம்மேட்ஸ் உண்டு. ஃப்ரெண்ட்ஸ் கிடையாது. காதலிக் கிறதா சொல்ற பசங்க உண்டு. அன்பா அக்கறையா விசாரிக்க எவனும் கிடை யாது. அம்மா இருக்காங்க, பிரியம் கிடையாது. மனுசங்க மேல வெறுப்பு வந்துதான் அப்பப்ப காட்டுக்கு ஓடறேன். சரி, ஐ ஃபீல் டயர்ட். குட் நைட்!’’ என்று படுத்தவள் சற்று நேரத்தில் தூங்கி விட்டாள்.
எனக்குத் துளியும் உறக்க மில்லை. கண்ணை மூடினால், அவள் முகமும் பேச்சும் கேட்டுக்கொண்டே இருந்தது. அதிகாலை இரண்டு மூணு மணிவாக்கில் ஏதோ சத்தம் கேட்டது. நிமிர்ந்து பார்த் தேன்… மின்னு நடுங்கிக்கொண்டு இருந்தாள். பனி விழுந்துகொண்டு இருந்தது. அதைத் தாங்க முடியாத வள் போன்ற அனத்தல். நான் எழுந்து அருகே போனேன். லேசா கக் கூப்பிட்டுப் பார்த்தேன். பிறகு எனது ஜமுக் காளம், போர்வை எல்லாவற்றையும் அவளுக்குப் போர்த்திவிட்டேன். சுருட்டிக்கொண்டுபடுத்துவிட்டாள்.
கொஞ்ச நேரம் கழித்துதான் எனக்குக் குளிர் உறைத்தது. அந்நேரம் என்ன பண்ணுவதென்றே புரியவில்லை. ஓரமாக முழங்கால் கட்டிக்கொண்டு நடுங்கியபடி அமர்ந்திருந்தவன், எப்படியோ தூங்கிப் போனேன்.
காலையில் விழித்தபோது, மின்னு ஒரு ஓரமாக அமர்ந்து காபி குடித்துக் கொண்டு இருந்தாள். பெரியதனக் காரர் மனைவி எனக்கு தண்ணீரும் காபியும் கொடுத்தது. காபியுடன் எதிரே போய் அமர்ந்தேன்.
‘‘நல்லாத் தூங்கினீங் களா?’’
‘‘ம்!’’ என்றவள் சற்றுப் பொறுத்து, ‘‘தேங்க்ஸ்’’ என்றாள்.
‘‘எதுக்கு?’’
‘‘எனக்குப் போர்த்தி விட்டதுக்கு!’’
‘‘அட! இதுல என்னங்க இருக்கு?’’ என்றேன். அவள் பேசாமல் இருந்தாள். பிறகு வீட்டி னுள் போய் விட் டாள். பெரும் ஆச் சர்யமாக அன்று அவள் அதிகம் பேசவே இல்லை. ‘உம்’மென்றே இருந் தாள். ஒரு நாவலை எடுத்துக்கொண்டு போய் திண்ணையில் சாய்ந்து படிக்கத் துவங்கிவிட்டாள். முகத்தில் ஒரு இறுக்கம்.
நான் எதுவும் புரியாதவனாக அமர்ந்திருந்தேன். இன்று நான் பார்ப் பது வேறு மின்னு என்று தெளிவாகத் தெரிந்தது. நேற்று முழுக்கப் பேசிக்கொண்டு இருந்தவள், இன்று மவுன விரதம் போல உட்கார்ந் திருந்தாள். நான் இரண் டொரு முறை ஏதோ கேட்டபோது வெறுமனே தலையசைத்து பேச்சை கட் பண்ணினாள். மதிய மானது. முதல் முறையாக அவளது செல்போன் ஒலித்தது. எடுத்தாள்.
‘‘யெஸ்… யெஸ்… ம்…’’ என்றவள் நாங்கள் தங்கியிருந்த ஊர் பேரைச் சொன்னாள்.
‘‘யாருங்க போன்ல?’’ என்றேன்.
‘‘எனக்குக் கார் வருது. அநேகமா கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவேன்!’’ என்றாள். எனக்குள் எதுவோ பிளந்தது. ஒரு பெரும் பாதாளமாகப் பள்ளம் தோன்றியது. வாய் உலர்ந்தது.
‘‘என்னங்க அதுக்குள்ளே…’’
அவள் என்னை விநோதமாகப் பார்த்தாள். ‘‘புரியலை… வேற என்ன பண்ணணும்கிறீங்க?’’
என்னிடம் பதில் இல்லை. யோசித் தேன். ‘‘எந்த ஊருக்குப் போறீங்க. நானும் வரட்டுமா?’’
‘‘என்ன முட் டாள் மாதிரி பேசறீங்க… நீங்க சென்னைக்கில்ல போகணும்?’’
அந்தக் குரலின் உறுதி என்னை அச்சுறுத்தியது. கார் வந்ததும், மின்னு எல்லோரி டமும் சொல்லிக் கொண்டாள். கடைசியாக என்னிடமும் வந்தாள்.
‘‘நான் கிளம்பறேன்.’’
‘‘சரிங்க’’ என்றேன். என் கண்கள் ஏனோ கலங்கிவிட்டன. ஆனால், அவள் கண்கள் சலனமற்றிருந்தன.
அவள் சற்று யோசித்து பின்னர், ‘‘தேங்க்ஸ்’’ என் றாள். நான் பேசாதிருந்தேன்.
‘‘என்ன எதுவுமே பேசமாட் டேங்கிறீங்க?’’ என்றாள்.
நான் மெதுவாகச் சொன்னேன், ‘‘உங்க தலைமுடி மாதிரிதாங்க நீங்களும்! ரொம்பச் சிக்கல். புரிஞ் சுக்கவே முடியலை!’’ சற்று நிறுத்தி னேன்… ‘‘இருந்தாலும் உங்க கூந்தல் ரொம்ப அழகுங்க. ரொம்ப அழகு.’’
மின்னு என்னைப் பார்த்தாள். அந்த ஒரு விநாடி அவள் என்னைப் பார்த்த பார்வை வேறுவிதமானது. அதில் நிறைய சேதிகள் இருந்தன. புதிரான, அழகான ஒரு பார்வை.
‘‘எனக்கு உங்க அட்ரஸ் வேணும்’’ என்றாள். சென்னையில் நான் தங்கப் போகிற நண்பனின் ரூம் அட்ரஸ் கொடுத்தேன். அவளது அட்ரஸோ, போன் நம்பரோ கேட்கும் துணிச்சல் எனக்கு வர வில்லை.
மின்னு காரில் ஏறி னாள். கார் கிளம்பிவிட்டது.
அன்றிலிருந்து என் ஒவ்வொரு கணமும் மின்னுவின் நினைவில் கழிந்தது. நான் சென்னை சென்று பத்து நாட்கள் கழித்து ஒரு கடிதம் வந்தது.
‘சக்தி, நான் சிக்கலான வள் அல்லது சுயநலமிக்கவள் என்று நீங்கள் நினைப்பீர்கள். அது நியாய மும்கூட. ஆனால், நான் அப்படி நடந்துகொண்டதற்கு ஒரு காரணம் இருக் கிறது.
நம்புவீர்களோ இல் லையோ, உங்களை எனக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. காரணம் தெரியவில்லை. உங்களுக்கும் எனக்கும் நிறைய ஏற்றத் தாழ்வுகள். இருந்தாலும் அன்று உங்களிடம் பேசப் பேச, ஏதோ ஒருவித அந்நியோன்யத்தை உணர்ந்தேன். எனக்கு நீங்கள் போர்த்திவிடுகையில் நான் விழித்துக்கொண்டுதான் இருந் தேன்.
உங்களை நானும் நிச்சயம் பாதித்து இருப்பேனென்று தெரியும். மேற் கொண்டு எந்தக் கனவுகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டாம் என்றுதான் எரிச்ச லூட்டும் விதமாக அப்படி நடந்து கொண்டேன். நீங்கள் புண்பட்டுப் போனதை உங்கள் முகம் சொன் னது. ஸாரி!
நமது தற்செய லான சந்திப்பு வேறு எந்தவிதத்திலும் நீட்சியடைய வாய்ப்பு இல்லை. ஏனென் றால், என் அம்மா வின் தற்போதைய கணவர்(?) ஆஸ்திரேலி யாவின் ஒரு முக்கியப் பிரமுகர். ஒரு மாதத்தில் நான் ஆஸ்திரேலியா திரும்பியாக வேண்டும். அங்கு என் தலை விதி எப்படி நிர்ணயம் ஆகுமென்று தெரியாது. உங்களைவிட்டு நான் உடனே விலகியதற்கு அதுவும் ஒரு காரணம்.
நீங்கள் அப்பாவி. நல்லவர். வாழ்வில் சந்தோஷங்கள் உங்களை எதிர்கொள் ளட்டும். மறுபடியும்… ஸாரி! – மின்னு’.
கடிதத்தையும் கவரையும் நூறு முறையாவது படித்தும் புரட்டியும் இருப்பேன். அதில் மின்னுவின் முகவரி இல்லை. போன் நம்பர் இல்லை. என் தேவதை மின்னு… மின்னல் மாதிரி வந்து போய்விட்டாள். என் கண்களில்தான் மழை நிரந்தரமாக!
– வெளியான தேதி: 27 டிசம்பர் 2006