மாரி! – முத்து! – மாணிக்கம்!

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: November 9, 2019
பார்வையிட்டோர்: 10,364 
 

சரியாய்க் காலை மணி 7.00க்கெல்லாம் அந்த முதியோர் காப்பக வாசலில் ஆட்டோ வந்து நின்றது.

பங்கஜம். வயது 82. வற்றிய உடல். சுருக்கங்கள் விழுந்த முகம். நீண்டு தொங்கும் தொல்லைக் காதுகள். சாயம் போன தொளதொள ஜாக்கெட். துவைத்துக் கட்டிய சுமாரான நூல் புடவை. இடுப்பில் சின்னதாய் சுருக்குப்பை. குளித்து முடித்துக் கிளம்பியதற்கடையாளமாய் பளீர் தோற்றம்.

வாசல் நாற்காலியில் தயாராய் அமர்ந்திருந்த அவள் எழுந்து சென்று ஆட்டோ அருகில் சென்றாள்.

எப்போதும்….பின்னிருக்கையில் எந்தவித ஆளுமில்லாமல் ஏறிப் பழக்கப்பட்டவளுக்கு… வழக்கத்திற்கு மாறாய் உள்ளே வயசுப் பையன் ஒருவன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து நின்றாள்.
வயசு 40. குண்டு முகம். அதற்கேற்றாற் போல் கொஞ்சம் சதை பூசிய உடல். கீழே நீல நிற பேண்ட். மேலே….வெள்ளைச் சட்டைக்கு மேல் காக்கி சட்டையில் ஓட்டுநர் இருக்கையிலிருந்து கவனித்த மாணிக்கம்.

” பாட்;டி ! தம்பி கும்பகோணத்திலேர்ந்து வர்றார். .உங்க ஊரைத் தாண்டிதான் போறார். ஏறிக்கோங்க. ” என்றான்.

பங்கஜம் கம்பியைப் பிடித்துக்கொண்டு இருக்கையின் இந்த முனையில் அமர்ந்தாள். ஆட்டோ கிளம்பியது.

பக்கத்தில் அமர்ந்திருந்த முத்துவிற்கு வயது 30. பேண்ட், சட்டையில் நல்ல வெள்ளையும் சள்ளையுமாக இருந்தான். இருக்கையில் ஒரு பேக் வைத்திருந்தான். அது கிழவிக்கும் இவனுக்கும் நடுவில் ஒரு எல்லைக்கல் போலிருந்தது.

ஆட்டோ ஓட்டத்தில் கொஞ்ச நேரம் அமைதியாய் வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வந்தவனுக்குப் பேசாமல் வருவது போரடித்தது.

” எங்கே பாட்டி போறீங்க ? ” வலிய கேட்டான்.

” கண்ணாங்குளத்துக்கு ? ”

” சொந்த ஊரா ? ”

” ஆமாம். ”

” அங்கே எங்கே…? ”

” பேரன் வீட்டுக்கு.”

” மகள் வயித்துப் பேரனா, மகன் வயித்துப் பேரனா ? ”

” மகன் வயித்துப் பேரன். ”

” பேரனுக்குப் பொண்டாட்டி புள்ளைங்களெல்லாம் இருக்கா ? ”

” சின்னப் பையன், பத்து வயசு. அம்மா அப்பா இருக்காங்க..”

” அப்போ…மகன் வீட்டுக்குப் போறேன்னு சொல்ல வேண்டியதுதானே! ஏன் பேரன் வீட்டுக்குப் போறேன்னு சொல்றங்க…. ? ”

பங்கஜம் பதில் சொல்லாமல் வெளியே பார்த்தாள்.

” மகன் பிடிக்காதா ? ” முத்து அடுத்தக் கேள்வியைப் போட்டான்.

” பி……பிடிக்கும். ” கிழவி பட்டும் படாதது போல் சொன்னாள்.

” பேத்தி இருக்கா ? ”

” இல்லே. ”

” பேரன் மட்டும்தானா ? ”

” ஆமாம். ”

” மகன் என்ன வேலை பார்க்கிறார். ”

” ஒரு வேலையும் பார்க்கலை. ”

” படிப்பு ? ”

” ஏறலை. ”

” மருமகள் வேலைக்குப் போறாங்களா ? ”

” இல்லே. கிராமத்துப் பொண்ணு. ”

” குடும்ப வருமானத்துக்கு வழி ? ”

” கொஞ்சம் நிலம் இருக்கு. ”

” வயலா, திடலா ? ”

” ரெண்டும் கலந்து இருக்கு.”

” புருசன் பொண்டாட்டி அதுல உழைச்சிப் பொழைக்கிறாங்களா ? ”

” இல்லே. குத்தகைக்கு விட்டுப் பொழைக்கிறாங்க. ”

” குத்தகை நெல்லுல பசி இல்லாம சாப்பிட முடியுமா ? ”

” முடியாது! ”

” அப்புறம்…? ”

” குடும்ப அட்டைக்கு…அரசாங்கம் மாசா மாசம் இலவச அரிசி படி அளக்கலைன்னா நாறிப் போகும்.” பங்கஜம் வாயிலிருந்து குரல் கொஞ்சம் வெறுப்பாக வந்தது,

” மேலே குடும்பச் செலவுக்குக் காசு ? ”

” என் பணம்தான்.! ”

” உங்க பணமா ? ”

” மாசா மாசம் வரும் முதியோர் பணத்துல முக்கால்வாசி தருவேன்.”

” எவ்வளவு தருவீங்க ? ”

” எண்பது வயசுக்கு மேல மூவாயிரம் ரூபாய். அதுல ரெண்டாயிரத்தை ஆயிரம் ஆயிரமாய் ரெண்டு தவணையாய்க் கொண்டு போய் கொடுப்பேன். ”

” நீங்க அரசாங்க முதியோர் இல்லத்துலதானே இருக்கீங்க.. உங்களுக்கு எதுக்கு மீதிப் பணம் ஆயிரம் ? ”

” கைச்செலவுக்குப் போக….மீதியை அப்பப்போ பேரன் வந்து வாங்கிப் போவான். அதிலும் முக்கால்வாசி அந்த வீட்டுக்குத்தான் செலவாகும். ”

” நீங்க ஏன் முதியோர் இல்லம் வந்தீங்க…? ”

” சு….சும்மாதான். ” – கொஞ்சம் தடுமாறினாள்.

” சின்ன கூரை வீடு. உங்களுக்கு அங்கே இருக்க, படுக்க இடமில்லியா ? ”

” இருக்கு….”

” அப்புறம்….ஏன் வந்தீங்க ? ”

கிழவி….சொல்ல விருப்பம் இல்லாதவள் போல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

முத்துவிற்;கு அதைத் தெரிந்து கொள்ள ஆவல் வந்தது.

” மருமகள் கொடுமையா ? ” கேட்டான்.

” மகன் கொடுமை ! ” அழுத்தம் திருத்தமாய்ச் சொன்னாள்.

” என்ன ! மகன் கொடுமையா…? ” கேட்ட இவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. திடுக்கிட்டான்.

” வேலை வெட்டிக்குப் போகாமல் குடியேத் தொழிலாய்க் குடிச்சிக் குடிச்சிப் படுத்துக்கிடந்தால் யாருக்குப் பொறுக்கும், புடிக்கும் ? ”

” புரியலை ? ! ”

” அரசாங்கம் வருமானம் பார்க்க ஊர் முழுக்கச் சாராயக்கடைகளைத் திறந்து இப்படி ஏழைக் குடிகளைக் கெடுக்குது தம்பி. ”

” உங்களுக்கு இலவசம் கொடுக்கத்தானே இந்த வருமானம் ? ”

” யார் கேட்டா இந்த இலவசம் ? அவுங்க ஆள்றதுக்காக அள்ளி விடுறாங்க. நாமளும் நம்ம காசுல கொடுக்கிறாங்களேன்னு வாங்கித் தொலைக்கிறோம். ரொம்ப ஊழலுத் தம்பி. அந்தப் பேச்சு வேணாம் விடுங்க. மனுசனுங்க குடிச்சி அழியறதை நெனைச்சாதான் வேதனையா இருக்கு. என் மவன் அதை வாயில வைச்சதிலிருந்துதான் கோளாறு.” நிறுத்தினாள்.

” அப்படியா ? ”

” ஆமாம் தம்பி!….பத்து வருசம் கழிச்சி பொறந்த ஒத்தப்புள்ளை. படிப்பு ஏறலைன்னாலும்…அப்பனோட…சொந்த நிலத்துல உழைச்சது மட்டுமில்லாம கூலிக்கும் போய்…சம்பாதிச்சு முப்பது வயசுவரை நல்ல புள்ளையாய் இருந்தான். அப்பாரு இவனுக்குக் காலாகாலத்துல ஒரு கலியாணத்தைப் பண்ணி அடுத்த வருசமே ஒரு பேரனையும் பார்த்து பொசுக்குன்னு போனாரு. அப்ப வந்துது இந்த ஊருக்குப் பக்கத்துல ஒரு இழவெடுத்த அரசாங்க சாராயக்கடை. அன்னைக்குப் புடிச்சுது சனி. அன்னையிலேர்ந்து இந்த ஊரும் கெட்டுப் போச்சு இவனும் கெட்டுப் போனான். ”

” ………………………. ”

” காலையில நீராகாரம், டீத்தண்ணியைக் குடிச்சிட்டு காலா காலத்துல வயல் வேலைக்கு வந்த ஆம்பளையும், ஆம்பளைப் பசங்களும் இதைக் குடிச்சதும்….குடிக்காக வேலை செய்தர்னுங்க. குடியே பழக்கமானதும்…அந்த வேலையையும் மறந்து குடியே தொழிலாக்கிட்டானுங்க. அப்படித்தான் தம்பி என் மவனும் குடிச்சான். கையில காசு கெடைக்கலைன்னா….வீட்ல இருக்கிறதையெல்லாம் வித்துக் குடிச்சான். படுபாவி நெலத்தையும் வெலை பேசினான்…மருமவள் சுதாரிச்சு…அதை அடுத்தவன்கிட்ட குத்தகைக்குக் கொடுத்து காப்பாத்தினாள். கட்டையில போறவன்….குடிக்காக… என் முதியோர் பணம், பொண்டாட்டி குடும்பத்துக்காக நடவு நட்டு, களை பறிச்சு, கூலி வேலைக்குப் போய் கொண்டு வர்ற காசை எல்லாம்;; தெரியாம எடுத்துப் போய்த் திருடிக் குடிச்சான். வயித்துல மறைச்சி வைச்சிருந்தாலும்…. பெத்தத் தாய், கட்டின பொண்டாட்டின்னு பார்க்காம…அடிச்சி, மிதிச்சி, உதைச்சிப் புடுங்கிப் போய் குடிச்சான். எத்தினி நாளைக்குப் பொறுப்பாள் பொண்டாட்டி….? ‘ இந்தா ! கட்டின தோசத்துக்கு நான் வாங்கித் தொலையுறேன். பெத்தத் தோசத்துக்கு நீ ஏன் வாங்கித் தொலையனும். இது திருந்துறவரை, தொலையுறவரையோ….. தாங்கித் தொலைக்கனும்ன்னு தலை எழுத்து நான் தாங்கித் தொலையுறேன். நீ வயசானது தாங்க வேணாம் ! ‘ ன்னு என்னைப் பிடி பிடின்னு கொண்டு வந்து இந்த முதியோர் இல்லத்துல சேர்த்துட்டாள் தம்பி. ” நிறுத்தினாள்.

” …………………………….”

” அன்னையிலேர்ந்து நான் வாங்கித் தொலையுறது நின்னுபோச்சு. தாங்கித் தொலையுற அந்த மகராசிக்காகத்தான் ரெண்டுத் தவணையாய் இந்த முதியோர் பணம். மொத்தமாக் கொடுத்தா…பாவிப் பய….முழுசா எடுத்துப் போய் குடிச்சிடுவானேன்னு பயம். இந்த ஆட்டோத் தம்பி மாணிக்கம்தான் என்னை கொண்டு வந்து விட்டு அழைச்சிப் போகும். விடும். உண்மையைச் சொல்றேன் தம்பி.! என் குடிகார பைய செத்து…. என் மருமவள் தாலி அறுத்தாலே…அவ உழைப்புக்கு நிலத்தை மீட்டு நல்லா விவசாயம் பண்ணி சவுகரியமாய் வாழ்வாள். ” சொன்னாள்.

‘ பெற்றத்தாயே… மகன் செத்தால் பரவாயில்லை ! என்று வெறுக்கிறாள் என்றால்…. அவன் எவ்வளவு கொடுமை செய்திருக்க வேண்டும். எப்படிப்பட்ட குடிகாரனாய் ஆகி இருக்க வேண்டும் ! ‘ – நினைக்க முத்துவிற்;குச் சங்கடமாய் இருந்தது.

” அப்போ சுருக்குப் பையில ஆயிரம்தான் இருக்கா ? ” நினைப்பை மாற்றி இருப்பைக் கேட்டான்.

” ஆயிரத்து நூறு இருக்கு. இந்த வண்டிக்கு அம்பது பேரனுக்கு அம்பது. ” அவளும் இருப்பைச் சொல்லி கணக்கைச் சொன்னாள்.

” இந்த வண்டிக்கு கூலி அம்பதுதானா….? ”

” அது ஆவும் நூத்து அம்பது. இந்தப் புள்ளை என் மேல இரக்கப்பட்டு அம்பது வாங்கும். உனக்கு எவ்வளவு கூலி ? ” கேட்டாள்

” இருநூறு ! ” – என்றான்.

‘ அடுத்து என்ன பேச…? விபரம் தெரிய…! ‘ – முத்து உள்ளுக்குள் தேடினான். வேறெதும் தோன்றவில்லை. வெறுமையாய் இருந்தது. வெளியே பார்த்தான். ஆட்டோ கிராமத்து சாலையில் ஓடிக் கொண்டிருந்தது. இருபுறமும் பச்சைப் பசேல் வயல்கள். வரப்புகளில் மரங்கள். பச்சையில் வெள்ளையாய் கொக்கு, மடையான், நாரை, பறவைகள். இந்தப் பக்கம் பார்த்;தான். இங்கேயும் அதே காட்சிகள். கிழவி கொட்டாவி விட்டாள்.

இந்த மாதிரி எல்லாம் பெண்கள் இருக்க….. அம்மா ஏன் அப்பாவை விட்டு எவனோடோ ஓடிப் போனாள் ?! – ஞாபகம் வந்தது.

வலிய வந்த நினைவைக் கலைத்தான். தொலைவில்…. அங்கும் இங்குமிங்குமாக ஐந்தாறு போர் செட்டுகள் பூமிக்கு அடியிலிருந்து தண்ணீரை உறிஞ்சி குழாய் வழியே குபுகுபுவென்று கொப்பளித்துத் துப்புவதைப் பார்க்க ஆசையாக இருந்தது. அந்தத் தண்ணீரை அள்ளிக் குடிக்கவும் ஆவல் தோன்றியது.

இவன் நினைப்பிற்குத் தக்கப்படி தூரத்தில் சாலையோரம் ஒரு போர் செட் தண்ணீரைக் கொட்டிக் கொண்டிருந்து.

” ஆட்டோ அண்ணே ! ” அழைத்தான்.

” என்ன தம்பி ? ”

” தாகமா இருக்கு. தண்ணி குடிக்கனும். அந்த போர் செட் பக்கத்துல நிறுத்துறீங்களா ? ” கேட்டான்.

மாணிக்கத்திற்கும் ஒன்னுக்கு முட்டிக்கொண்டிருந்தது.

” சரி! ” – தலையசைத்தான்.

பத்து நிமிடத்தில் ஆட்டோ அங்கு ஓரம் கட்டி நின்றது.

மாணிக்கம் அவசரமாக இறங்கி… சாலையோரம் உள்ள புளியமரத்தின் அருகில் சென்று மறைந்தான்.

பாட்டி விழிக்க வில்லை.

முத்து…ஆட்டோவைவிட்டு இறங்கி…போர் செட் தண்ணீர் ஓடும் சிறு ஓடையில் கால் வைத்தான். குளிர்ச்சி….. ஜிலீரென்று கால்களைத் தாக்கி மூளையைத் தொட்டு பரவசப்படுத்தியது. தாண்டி தண்ணீர் விழும் குழாயடிக்குச் சென்றான். குழாய் ஓரம் வாய் வைத்து பக்குவமாய்க் குடித்தான். நகராட்சி, மாநகராட்சி…குழாய் குளோரின் தண்ணி, சுத்திகரிக்கப்பட்ட தண்ணி, அந்தத் தண்ணி இந்தத் தண்ணி என்று பலதரப்பட்ட தண்ணீரைக் குடித்துப் பழக்கப்பட்டவனுக்கு இந்த நிஜத் தண்ணீரின் சுவை அமிர்தமாக இருந்தது. இன்னொரு வாய் வேண்டும் மட்டும் குடித்து ஆசையை நிறைவேற்றிக் கொண்டு வண்டிக்கு வந்தான். மாணிக்கமும் மர மறைவிலிருந்து பேண்டை சரி செய்து கொண்டு ஆட்டோ நோக்கி வந்தான்.

ஏறப் போன முத்துவிற்குப் பாட்டி இன்னும் விழிக்காதது ஆச்சரியமாக இருந்தது. விழித்து கண் மூடி இருக்கிறாளா ? சந்தேகம் வந்தது.

” பாட்டி ! ” அழைத்தான்.

அசைவில்லை.

” பாட்டி ! ” இன்னொரு முறையும் அழைத்தான்.

அப்படியே இருந்தாள்.

கொஞ்சம் பீதியாய்….அவள்; மூக்கின் அடியில் விரல் வைத்து சோதித்தான்.

முகம் ரொம்ப கலவரமானது.

” அண்ணே…! ” அழைத்தான்.

” என்ன தம்பி ? ”

” பா…பாட்டி மூக்குல மூச்சு வரலை….! ”

” என்ன ! மூச்சு வரலையா ?! ” மாணிக்கம் அதிர்ச்சியில அரக்கப்பரக்க ஓடி வந்து கிழவி மூக்கினடியில் விரல் வைத்தான்.

” ஆமாம்! செத்துப் போச்சு..! ” குரல் திகிலாய் வந்தது.

முத்துவிற்கு இப்போது அடிவயிற்றுக்குள் அமிலம் சுரந்தது.

” இப்போ என்னண்ணே பண்றது ? ” மாணிக்கத்தை ஏறிட்டான்.

வண்டியில் வந்த ஒரு பயணி இப்படி திடீர் இறப்பு என்றால்…?! – அவனுக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. மனம் படபடத்தது. என்ன செய்ய…..? ஒன்றும் புரியவில்லை.
திரும்பிப் போய் பிணத்தை யாரிடம் எப்படி, ஒப்படைக்க ? உயிரோடு கொண்டு செல்லும் கிழவியைப் பிணமாகக் கொண்டு சென்றால்…குடும்பம் எப்படி ஏற்றுக் கொள்ளும்…. கிராமம் எப்படி ஒப்புக் கொள்ளும் ?

இரண்டு பேருக்குமே இதே குழப்பம். பயம்!

சிறிது நேரத்தில் மாணிக்கம் ஒரு தெளிவிற்கு வந்தான்.

” ஏறு தம்பி ! ” என்றான்.

” எங்கேண்ணே…? ” – முத்து அவனைக் கிலியாய்ப் பார்த்தான்.

” வீட்டுல கொண்டு ஒப்படைக்க வேண்டியதுதான் வேற வழி இல்லே. ? ”

” அண்ணே…! ” முத்து மெல்ல அலறினான்.

” என்ன ? ”

” கிராமத்துக்காரங்க. கொன்னுட்டோம்ன்னு….” இழுத்தான்.

” சந்தேகப்படத்தான் செய்வாங்க. சந்தேகப்பட்டால் போலீஸ்ல சொல்லட்டும், பிரேத பரிசோதனை செய்யட்டும்.”

” அப்படி புத்திசாலித்தனம்… சுமூகமா போனால் பரவாயில்லியே. ஆத்திரப்பட்டு திடீர்ன்னு நம்மை கன்னாபின்னான்னு அடிச்சி ஆட்டோவைச் சேதப்படுத்தினால்….? ”

” செய்யத்தான் செய்வாங்க அப்புறம்…போலீசுக்குத்தானே போவாங்க.? ”

” அ….ஆமாம்.! ”

” போவோம். ”

” அதுக்குப் பேசாம நாமே இப்படியே வண்டியைத் திருப்பி போலீசுக்குப் போய் நடந்ததைச் சொன்னால்…? அந்த அடி உதை, சேதமெல்லாம் மிச்சமாகும்ண்ணே! ”

” இல்லே. அது இன்னும் வில்லங்கம், விவகாரமாய் மாறும். கொலை… ! உட்காரு என்கிற அந்த உருட்டல் மிரட்டல்லேயே பாதி உயிர் போகும். பிரேத பரிசோதனை முடிவு வரும்வரை உள்ளாற போடுவான். இல்லே.. தினம் கையெழுத்துப் போடனும். கைது செய்து நேரடியாய் கோர்டுக்குக் கொண்டு போனாலும் நீதிபதி பதினைஞ்சு நாள் உள்ளாற இருக்க வைப்பாரு. அதுக்குப் போசாமல் இப்படி போகலாம். ”

” இல்லே…. ஆட்டோ… சேதம்….? ”

” பரவாயில்லே. கிராமத்து மக்கள் நிலைமை புரிஞ்சு…சுமூகமாய்ப் போக வாய்ப்பிருக்கு. போலீஸ்ல இந்த வாய்ப்பே இல்லே. பாட்டி மேல பாரத்தைப் போட்டு நேரா வீட்டுக்கேப் போவோம்.” சொல்லி… மாணிக்கம் வண்டியில் ஏறினான்.

முத்து மனம் சமாதானமாகவில்லை. ஏறாமல் நின்றான்.

” தம்பி ! உனக்குப் பயமாய் இருந்தால்….நீங்க வந்ததுக்குக் காசுகூட கொடுக்க வேணாம். இங்கிருந்தே நடந்து வாங்க. இல்லே திரும்பிப் போங்க. ஆனா நான்….பிணத்தை உடையவங்கிட்ட ஒப்படைச்சே ஆகனும். அது என் விதி, கடமை. ” என்று வண்டியை உயிர்ப்பித்தான்.

அடுத்தப் பேச்சு பேசாமல் முத்து அரை மனதாய் ஏறி அமர்ந்தான்.

ஆட்டோ ஊர்ந்தது.

உயிரற்ற உடலுக்கு அருகில் உயிர் உடல் ! சிறிது நேரத்திற்கு முன்வரை பேசி வந்த பாட்டி. இப்போது பிணம். மரணம்….எவ்வளவு கொடியது. அற்புதமானது. – முத்து… தன்னையும் பாட்டியையும் நினைத்தான்.

மாணிக்கம் துணிச்சல் இவனுக்கு இன்னும் வரவில்லை. கிராமத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். ! மனம் நினைத்தது.

” நீயும், ஆட்டோக்காரனும் சேர்ந்து கிழவியை என்னடா பண்ணுனீங்க ? எப்படி கொன்னீங்க. எதுக்காக கொன்னீங்க ? ” – ஆளாளுக்குக் கேட்டு மாணிக்கத்துடன் தன்னையும் சேர்த்து மார மல்லாக்க அடிப்பார்கள். மனசுக்குள் கலவரம், பீதி ! வெளியே பார்த்து வெறித்தப்படி வந்தான்.

பதினைந்து நிமிடப்பயணம் முடித்து ஆட்டோ தெருவிற்குள் நுழைந்து பத்து கூரை வீடுகள் தாண்டி ஒரு குடிசை முன் நின்றது.

முத்து இறங்கினான்.

நடுவில் சாலை. இருபுறமும் சிறு குடிசை, கூரை வீடுகள் கொண்ட குக்கிராமம். தெருவில் ஆடு, மாடு, கோழிகள், இரண்டொருவர் நடமாட்டத்தைத் தவிர தெரு வெறிச்சோடி இருந்தது.

மாணிக்கம் இறங்கி….அந்த குடிசை முன் நின்று…” மாரி ! மாரி ! ” அழைத்தான்.

” என்னண்ணே..! ” குரலோடு உள்ளிலிருந்து அவள் கூந்தலை அள்ளி முடித்துக் கொண்டு வெளியே வந்தாள்.

மாணிக்கம் அவள் காதில் விழும்படி மெல்ல..

” பா…பாட்டி வர்ற வழியில….” தொண்டைக் கமறியது.

” என்னண்ணே சொல்றீங்க….? ” அவள் முகத்தில் திடீர் திகில், இருள்.

”ஆமாம். தங்கச்சி. பாதி வழியிலேர்ந்து .தூங்கி வருதுன்னு நெனைச்சேன். செத்திருக்கு. அந்த தம்பிக்கூட பக்கத்துலதான் உட்கார்ந்து வந்துது. ” முத்துவைக் காட்டினான்.

மாரி… ஒரு நிமிடம் ஆட்டோவைப் பார்த்து சிலையாக நின்றாள்.

உடன் தெளிந்து….சேலையைத் தூக்கி இடுப்பில் சொருகி….

” சரி ! உள்ளாற தூக்கிக்கிட்டு வாங்க.” சொல்லி சடனாய்த் திரும்பி உள்ளே சென்றாள்.

மாணிக்கம் வண்டி அருகில் வந்தான்.

முத்துவைப் பார்த்து… ” புடிங்க தம்பி ! ” என்றான்.

இருவரும் கை, கால்களை ஆளுக்கொரு பக்கம் பிடித்து ஆட்டோவிலிருந்து இறக்கி பிணத்தை குடிசைக்குள் கொண்டு சென்றார்கள்.

அங்கே மாரி தயாராய் பாய் விரித்துப் போட்டிருந்தாள்.

நீட்டி படுக்க வைத்தார்;கள்.

” மாரி ! பாட்டி சுருக்குப் பையில பணம் இருக்கு. ” மாணிக்கம் சொன்னான்.

” சரிண்ணே..! ” மாரி அதை எடுத்து தன் இடுப்பில் சொருகினாள்.

மாணிக்கமும், முத்தும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் வெளியே வந்தார்கள். கூடவே மாரியும் வந்தாள்.

” அண்ணே ! ஒரு நிமிசம் இங்கேயே இருங்க. அக்கம் பக்கமெல்லாம் சொல்லி வர்றேன்.! ” அவள் இவர்கள் பதிலை எதிர்பார்க்காமலேயே விரைவாய் நடந்து…அடுத்தக் குடிசைக்குள் நுழைந்தாள்.

மாணிக்கம் இந்தக் குடிசை முன் நின்ற தன் ஆட்டோவைப் பின் பக்கமாகத் தள்ளி…கொஞ்சம் தூரத்தில் ஓரமாக நிறுத்தி பக்கத்தில் நின்றான். முத்தும் அவனருகில் சென்று நின்றான்.
அடுத்த வீட்டிற்குள் உள்ளே நுழைந்த மாரி நிமிடத்தில் திரும்பினாள். வரும்போது அவளுடன் அந்த வீட்டுக்காரி கலவரமாக வெளிவந்து மாரி குடிசைக்கு வந்தாள்.

மாரி பத்துக்குடிசைகளுக்குள் நுழைந்து வருவதற்குள் தெருவிலிருந்து பத்துப் பதினைந்து பெண்கள், நாலைந்து ஆண்கள் அரக்கப் பரக்க அவள் வீட்டிற்கு வந்தார்கள்.

ஆட்டோ, மாணிக்கம், முத்துவைப் பொருட்படுத்தாமல் துக்க வீட்டிற்குள் போய் தொங்கிய முகத்தோடு திரும்பி வாசலுக்கு வந்தார்கள்.

மாரி அவர்களையெல்லாம் விலக்கி….ஆட்டோ நோக்கி வந்தாள்.

” அண்ணே! நீங்க கிளம்புங்க. இந்தாங்க பணம்.” கையில் சுருக்கி மடக்கி வைத்திருந்ததை நீட்டினாள்.

” வேணாம். தாயி ! ” மாணிக்கம் தழுதழுத்தான்.

” அப்போ கிளம்புங்க. ”

” இல்லேம்மா நான் இருக்கேன். இந்த தம்பியை விட்டுட்டு வர்றேன்.” என்றான்

” சரி ! ” அவள் அவசரமாக அகன்றாள்.

மாரி நகர்ந்ததும்….” தம்பி போகலாமா ? ” முத்துவைப் பார்த்துக் கேட்டு வண்டியைத் தொட்டான் மாணிக்கம்.

” வேணாம்ண்ணே! ” என்றான் அவன்.

” ஏன்ன்…? ”

” எனக்கு என்னமோ இந்த பாட்டி சாவு கலந்துக்கனும் போல இருக்கு. உங்களைத் தனியே விட்டுப் போக வேற மனசில்லே. நானும் உங்களோடேயே இருக்கேன்.” சொன்னான்.

மாணிக்கத்திற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

” சரி. ” ஆட்டோ தொட்ட கையை எடுத்தான்.

இருவரும்…ஆட்டோ ஓரத்திலேயே நின்று நடப்பதை வேடிக்கைப் பார்த்தார்கள்.

தெரு சுறுசுறுப்பாக இயங்கியது.

எங்கெங்கிருந்தோ…சில மூங்கில் மரங்கள், கழிகள், கீற்றுகளை ஆண்கள் கொண்டு வந்தார்கள்.

அவர்களே மாரி வீட்டு முன் மரங்கள் நட்டு, கம்புகள் கட்டி…மேலே கீற்றுகள் வேய்ந்து சிறு பந்தல் போட்டார்கள்.

எங்கிருந்தோ மாரி மகன் வேந்தன் வத்தலாய், கெச்சலாய் வந்து, ” பாட்டீ..” அழுதான்.

அருகில் இருந்த அவள் அவனை இழுத்து தன்னோடு ஒட்டி இறுத்திக்கொண்டு மௌனமாய் நெஞ்சைத் தட்டிக் கொடுத்து சமாதானப்படுத்தினாள்.

தெருவில்… இருப்பவர்கள் வீட்டிலிருந்தெல்லாம்….இரண்டு பெஞ்சுகள், இரண்டு மூன்று பாலிமர் நாற்காலிகள் வந்தன. அவைகளைப் பந்தலில் போட்டார்கள்.

ஒருவர் மாணிக்கம், முத்துவிடம் வந்து….

” சார்! பந்தல்ல வந்து நாற்காலியில் உட்காருங்க. ” பணிவாய்ச் சொன்னார்.

இவர்கள் அவருடன் வந்து நாற்காலிகளில் அமர்ந்தார்கள். துக்கத்திற்கு வந்த மற்றவர்கள் அவர்களை ரொம்ப மதிப்பு, மரியாதையாய்ப் பார்த்தார்கள்.

பந்தலில் பெரிய மனிதர் மாதிரி உட்கார்ந்திருந்த 50 வயது ஒரு பெரியவர், ” என்னப்பா ! மாரி புருசன் வந்துட்டானா ? ” கேட்டார்.

” இன்னும் இல்லே நாட்டாமை. ” பதில் சொன்னான் ஒருவன்.

” எங்கிருந்தாலும் அவனை இழுத்து வாங்கப்பா. ” அவர் குரலில் கொஞ்சம் சலிப்பு, கோபம் தெரிந்தது.

இளைஞன் வாசு கூட்டத்தை விட்டு விலகிச் சென்றான்.

சிறிது தொலைவில் எதிர்வீட்டு வாசல் ஓரம் நிறுத்தி இருந்த தன் பழைய டி.வி.எஸ் 50ஐ எடுத்துக் கொண்டு வேகமாக விரைந்தான்.

பத்து நிமிடப் பயணத்தில் இவன் தேடிச் சென்ற மாரி புருசன் அடுத்தக் கிராமத்தில் இருக்கும் சாராயக்கடை ஓரத்தில் உள்ள மரத்தடியில் முழு போதையில் கண்கள் சொருக….தள்ளாடியபடி உட்கார்ந்திருந்தான்.

வாசு வண்டியை விட்டு இறங்கி ஓடிச் சென்று…

” கலியாணம். ! ஆத்தா செத்துப் போச்சு கிளம்பு. ” அசைத்தான்.

அவன் இவனை நிமிர்ந்து பார்த்தான்.

” உன் அம்மா செத்துப் போச்சுடா ! ”

” போயிட்டா….” குழறலாய்த் தலையை நிமிர்த்திச் சொன்ன கலியாணம் தலை அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் டக்கென்று கவிழ்ந்து தரையைப் பார்த்தது. வாயிலிருந்து எச்சில் ஓழுகி சட்டை, வேட்டியை நனைத்தது.

வாசுவிற்கு அதற்கு மேல் பொறுமை இல்லை. அவன் இரு கைப்பட்டை கக்கத்திலும் கை கொடுத்து தூக்கினான். இவன் அவனைத் தூக்கச் சிரமப்படுவதைப் பார்த்து பக்கத்தில் இருந்தவன் உதவிக்கு வந்தான்.

இருவரும் அவனைக் கொண்டு வந்து டி.வி.எஸ் 50யில் உட்கார வைத்தார்கள். உதவி செய்வன் பிடித்துக் கொள்ள…..வாசு வண்டியில் அமர்ந்து கிளப்பினான். உதவி செய்தவன் வாசு இடுப்பைச் சுற்றி கலியாணம் கைகளைப் பிடித்து பிணைத்துக் கொள்ளச் செய்து விட்டு….

” பத்தரமா போ.” சொன்னான்.

வாசு மெல்ல வண்டியைக் கிளம்ப…..கலியாணம் இவன் முதுகில் மொத்தமாகச் சாய்ந்தான்.

வாசு அரைமணி நேரம் சிரமப்பட்டு வண்டியைக் கொண்டு வந்து துக்க வீட்டு முன் நிறுத்தினான். இரண்டு கிராமத்து இளைஞர்கள் அருகில் வந்து வாசு முதுகில் சாய்ந்தபடி வந்த கலியாணத்தை டி.வி.எஸ் 50யிலிருந்து கைபற்றாக இறக்கி….குடிசை வாசல் ஓரம் கால்களை நீட்டி உட்கார வைத்து உடம்பை சுவற்றில் சாய்த்தார்கள்.

போதை…. கலியாணத்திற்கு நடப்பு எதுவும் தெரியவில்லை. கண்களையும் திறக்கவில்லை.

எங்கிருந்தோ பச்சை மூங்கில், பச்சை தென்னை மட்டைகள் வந்தது. நான்கு வீடுகள் தள்ளி மூங்கிலை வெட்டி, பிளந்து… பாடை கட்ட ஏற்பாடுகள் நடந்தது. இருவர் பச்சை மட்டைகளை இரண்டாகக் கிழித்து பாடையில் கட்ட முடைந்து கொண்டிருந்தார்கள்.

உட்கார்ந்து இருந்த கலியாணம்…இப்போது உணர்வற்று அப்படியே சரிந்து மடங்கி தரையில் படுத்துத் தூங்கினான். சட்டை, வேட்டியெல்லாம்….அழுக்கு, மண், சகதி.
துக்கத்திற்குத் தெரு மக்கள் வந்தும் போய்க்கொண்டும் இருந்தார்கள்.

எல்லாவற்றையும் கவனித்த நாட்டாமை….

” எப்பா! தண்ணி எடுக்கனும். கொள்ளி வைக்கிற பெத்தப்புள்ளைத் தலையில தண்ணிய ஊத்தி எழுப்பி ஏற்பாடு பண்ணுங்கப்பா. ” கூட்டத்தைப் பார்த்துச் சொன்னார்.

” தண்ணிய ஊத்தினாலும் போதை….அவனால எழுந்து நடக்க முடியாது நாட்டாமை. ” என்றான் அவர் அருகில் நின்ற ஒருத்தன்.

மாணிக்கம், முத்;து முதல்….எல்லார் கண்களும் கலியாணம் மேல் பாய்ந்தது.

அவன் இருந்த இருப்பிலிருந்து அசையவில்லை. மூச்சு மட்டும் ஓடியது.

‘ பிரயோசனமில்லை! ‘ – எல்லோருக்குமே புரிந்தது.

” அவனை விடுங்க. பேரனை ஏற்பாடு பண்ணுங்க. ” என்றார் நாட்டாமை.

இப்போது….உள்ளிருந்து வெளி வந்து இதைக் கேட்ட மாரி, ” நாட்டாமை! யாரும் என் மாமியாருக்குக் கொள்ளி வைக்கக் கூடாது. நான் தான் வைப்பேன்.! ” என்றாள் கறாராய்.

” என்ன மாரி சொல்றே ? ” நாட்டாமைத் திகைப்பைத் தொடர்ந்து மொத்தக் கூட்டமும் அவளை அப்படியேப் பார்த்தது.

” பெத்தப்புள்ளை….. பெத்தப் புள்ளையாவே இல்லே. உழைச்சிப் போட்டுக் காப்பாத்த துப்பில்லாம, குடிக்காக அம்மாவை அடிச்சி உதைச்சி…. கொடுமைப் படுத்திய குடிகார மனுச மிருக சென்மம் அது. அது கொள்ளி வைச்சா…அந்த அம்மா பொணம் எரியாது. நான் வைச்சாதான் எரியும். ஏன்னா….நான்தான் அதுக்கு மகனாய், மகளாய் இருக்கேன். நான்தான் கொள்ளி வைப்பேன். வேற யாரையும் கொள்ளிப்போட விடமாட்டேன்! ” ஆணித்தரமாய்ச் சொன்னான்.

மொத்தக் கூட்டமும் அப்படியே உறைந்து ஒருவரை ஒருவர் பார்த்தார்கள்.

சுதாரித்த….நாட்டாமை…” மாரி சொல்றது சரிப்பா. வேலை ஆகட்டும். ” சொன்னார்.

அடுத்ததாய் சடசடவென்று வேலைகள் தொடங்கின.

மகன், நான்கைந்து ஊர் மக்களுடன் மாரிதான் முதன்மையாகத் தண்ணீர் எடுத்து வந்தாள்.

பாடைக்கு முன் அவள்தான் ஈரப்புடவையுடன் கொள்ளிச் சட்டித் தூக்கைச் தூக்கிச் சென்றாள்.

அவள்தான் சிதையில் கொள்ளி வைத்து விட்டு கூட்டத்தோடு திரும்பினாள்.

எல்லாரும்… குளித்து முடித்து மாரியை உள்ளே அனுப்பிவிட்டு இழவு வீட்டிலிருந்து பிரிந்தார்கள்.

முத்தும், மாணிக்கமும் வண்டிக்கு வந்தார்கள்.

ஆட்டோ பின்னால் ஏறிய முத்து…

” என்னை திரும்ப நான் ஏறிய பேருந்து நிலையத்திலேயே விடுங்கண்ணே..” என்று சொல்லி அமர்ந்தான்.

” ஏன்? ” மாணிக்கம் கேட்டான்.

” நான் வந்த ஊருக்குப் போகலை ? ”

” ஏன்…?? ” மறுபடியும் மாணிக்கத்திடமிருந்து அதே கேள்வி பிறந்தது.

” அந்த டாஸ்மாக் கடையிலதான் நான் வேலையில் சேர ஆர்டர். எனக்கு இந்த குடியைக் கெடுக்கும் குடி வேலை வேணாம்ண்ணே.! நாட்டுல எத்தனையோ வேலை இருக்கு அதைப் பார்த்து பொழைச்சுக்கிறேன்.! ” சொல்லி தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து அந்த வேலைக்கான உத்தரவு தாளை எடுத்து சுக்கு நூறாக் கிழித்தான்.

மாணிக்கம் பதிலேதும் சொல்லாமல் ஏறி ஆட்டோவை வந்த வழியேத் திரும்பினான்.

Print Friendly, PDF & Email

1 thought on “மாரி! – முத்து! – மாணிக்கம்!

  1. அருமையான கதை.
    “யார் கேட்டா இந்த இலவசம் ? அவுங்க ஆள்றதுக்காக அள்ளி விடுறாங்க. நாமளும் நம்ம காசுல கொடுக்கிறாங்களேன்னு வாங்கித் தொலைக்கிறோம். ரொம்ப ஊழலுத் தம்பி.”
    எவ்வளவு உண்மையான சொற்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *