கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: November 4, 2013
பார்வையிட்டோர்: 12,653 
 
 

அவனை எங்கேயோ பார்த்தது போலிருந்தது. அந்த விடைத்த மூக்கு. நடுவகிடு எடுத்து முன் நெற்றியில் புரளும் முடி. அடுத்தவரை கடுகளவும் கவனியாமல் எங்கோ வெறித்த யோசனைப் பார்வை. ஆமாம். இதே ஆளை நிச்சயம் எங்கேயோ பார்த்திருக்கிறேன்.

அவன் அந்த ஹோட்டலில் எனக்கு அடுத்த மேஜையில் உட்கார்ந்திருந்தான். நான் அவனை மிக தீர்க்கமாய் உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பதை அறியாமல் மிக நிதானமாக டபரா டம்ளரில் காப்பியை உறிஞ்சிக்கொண்டிருந்தான். என் மூளைக்குள் பரபரவென்று தேடல் நடந்துகொண்டிருந்தது. எங்கே? எங்கே? எங்கே பார்த்திருக்கிறேன் இவனை? ஒரு பத்து விநாடிகள் போதாதா இவனை ஞாபக அடுக்கிலிருந்து வெளியே கொண்டு வருவதற்கு? ஏற்கனவே இவனது அங்க அடையாளங்கள் எனது மனதில் துல்லியமாகப் பதிந்திருக்கிறது. இல்லாவிட்டால் இவனைப் பார்த்ததும் மண்டையில் மணியடித்திருக்காது.

ஆனால் மணி சரியாய் அடிக்கவில்லை. அவன் யார் என்று சட்டென்று சொடக்குப் போட்டது போல ஞாபகம் வரவில்லை.

ச்சே.. ரொம்ப மோசம்! இதற்கு முன்னர் இவ்வாறு நடந்ததேயில்லை. பார்க்கிற ஆட்களை பார்த்த இடத்தில் பார்த்த மறுகணம் இன்னார் என்கிற விவரத்தைச் சொல்லும் ஞாபகத்திறன் கொண்டவனல்லவா நான்! இப்போது என்ன ஆயிற்று எனக்கு?

அவன் காபி குடித்து முடித்துவிட்டு பில் தொகையை பேரரிடம் கொடுத்துக்கொண்டிருந்தான். இதோ இப்போது வெளியேறி தெருவின் அடர்ந்த ஜனத்திரளில் கலந்துவிடுவான். அப்புறம் அவனை மறந்துவிடவேண்டியதுதான்.

அதெப்படி? மறக்க வேண்டும் என்றால் முதலில் ஞாபகமிருக்க வேண்டுமல்லவா? அப்புறம்தானே மறப்பதற்கு? அவன் யார் என்றே இன்னும் புலப்படவில்லையே.

என்மேல் மிதமானதொரு அவமானம் கவிந்ததுபோல் உணர்ந்தேன். அடுத்த மேசையில் அமர்ந்திருக்கிற எனக்கு நன்கு பரிச்சயமான ஒரு முகத்தை யார் என்று நினைவு படுத்திக் கொள்ள ஐந்து நிமிடங்களுக்கு மேலாகியும் முடியவில்லை என்கிற ஏமாற்றம் எனக்கு என்னவோ போலிருந்தது.. அவனை எங்கேயோ பார்த்திருக்கிறேன். அவன் முகம் மனதில் ஒரு புள்ளியாய் எங்கேயோ பதிந்திருக்கிறது. இப்போது மறுபடியும் பார்க்க நேரிட்டுவிட்டது. உலகம் உருண்டைதான் என்பது மறுபடியும் நிரூபணமாகிவிட்டது.

அவன் மேசைக்கடியில் வைத்திருந்த ட்ராவல் பேக்-ஐ எடுத்துக் கொண்டு வாசலைப் பார்த்து நடந்தான். இப்போது அவனது பின்புறம் தெரிந்தது. நல்ல வெளிர் நீலத்தில் ஜீன்ஸ் அணிந்து கருப்பு நிற காலர் இல்லாத டி-சர்ட் அணிந்திருந்தான். காலில் கான்வாஷ் ஷூ. கொஞ்சம் கூட அவசரம் இல்லாமல் நிதானமாக நடந்துபோய்க் கொண்டிருந்தான்.

அவன் பின்னாலேயே என் பார்வை நீண்டு சென்றது. அவன் போவதை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் யாரென்று தெரியாமல் வீட்டுக்குத் திரும்பிப் போவது என்னால் இயலாத காரியமென்று தோன்றியது. அவனை பின் தொடரவேண்டும். அவன் நிச்சயம் இந்தப் பகுதியைச் சேர்ந்தவனாக இருக்கவேண்டும். இங்கேதான் பக்கத்தில் எங்கேயாவது! அவன் பின்னாலேயே நடந்தால் அவன் இருப்பிடம் தெரிந்துவிடப் போகிறது.

இத்தனை பரிச்சயமான முகத்தை நொடியில் ஞாபகப்படுத்திக் கொள்ளமுடியாததன் தவிப்பு மனதிற்குள் சுழன்று ஒரு தவிர்க்க இயலாத அவஸ்தை மையமாய் நிலை நின்றது.

பில் கொண்டுவந்த பேரரிடம் அவசரமாய் பணம் கொடுத்துவிட்டு வாசலுக்குப் பாய்ந்தேன். அவன் ரொம்ப தூரம் போய்விடுவதற்குள் அவனைப் பிடித்துவிட வேண்டும். அவன் ஹோட்டல் வாசலிலிருந்து இடது பக்கம் திரும்புவதை கவனித்திருந்தேன். நானும் அதே திசையில் நகர்ந்தேன். ஹோட்டல் வாசலையொட்டிய கடைத் தெருவில் சோடியம் வேப்பர் விளக்குகளுக்குக் கீழே நடைபாதைக் கடைகள். பழ வண்டிகள். ஜூஸ் ஸ்டால், பூ விற்பவர்கள். தெருவெங்கும் பரபரப்பாய் மனிதர்கள். கார்கள், ஸ்கூட்டர்கள். ஸ்கூட்டிகள். நகரச் சொன்ன ஹாரன்கள், சைக்கிள் மணி. எல்லாவற்றையும் சடுதியில் தாண்டி அவனைத் தேட ஆரம்பித்தேன். அவன் ரொம்ப தூரம் போயிருக்க முடியாது. இத்தனை தலைகளுக்குள் எங்கேயிருக்கிறான்?

அவனைப் பார்த்துவிட்டேன். பக்கத்து பஸ் நிறுத்தத்தின் குடையின் கீழ் பஸ் வரும் திசையைப் பார்த்தவாறு நின்றிருந்தான். அவன் வேறு எங்கோ போவதற்காக நின்று கொண்டிருக்கிறான் என்பது உறைத்தது. நான் மெதுவாக அவன் பக்கத்தில் போய் கொஞ்சம் தள்ளி நின்று கொண்டு அவன் முகத்தை இன்னும் உற்றுப் பார்த்தேன். அண்மையில் பார்க்கையில் அந்த முகம் இன்னும் பரிச்சயமானது போலத் தோற்றமளித்தது. அவன் என்னை லேசாகத் திரும்பிப் பார்த்தான். ஒரே ஒரு நொடி. பின்னர் திரும்பிக் கொண்டான். பஸ் வருகிறதா என்று மறுபடியும் பார்க்க ஆரம்பித்தான். ப்ராட்வே போகிற 21 வருவதைப் பார்த்ததும் அவன் கால்கள் சிறிது முன்னுக்கு நகர்ந்தன.

நான் ஓரிரு விநாடிகள் குழப்பமாய் நின்றேன். நான் இப்போது என்ன செய்ய வேண்டும்? பேசாமல் வீட்டுக்குத் திரும்புவதா? அல்லது மேலும் பின் தொடர்வதா? தொடர்வது என்றால் முன் பின் தெரியாத இவன் பின்னால் ஒரு அல்ப காரணத்திற்காக செல்வதென்பது எத்தனை பைத்தியக்காரத்தனம்? எனக்கு வேறு வேலை வெட்டி இல்லையா என்ன?

அவன் போகட்டும். பஸ்ஸில் நெரிக்கிற கூட்டத்துக்குள் அவன் மறுபடி தொலைந்து போகட்டும். நான் என் பாதையில் திரும்பிப் போகிறேன். எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன.

21 வந்து நின்று அவன் அதில் தொற்றிக்கொண்டான். அநேகமாக அவன் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குத்தான் போவான் என்று யூகித்துக்கொண்டேன். கையில் ட்ராவல் பேக் இருக்கிறதல்லவா?

நான் ஒரு கணம் ஸ்தம்பித்துப் பின்னர் சட்டென்று முடிவு செய்து அதே பஸ்ஸில் ஏறிக்கொண்டேன். அவனை அடையாளப் படுத்திக் கொள்ள எனக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் தேவைப்படுகிறது. ஆக நான் அத்தனை சீக்கிரம் இந்த விஷயத்தில் விட்டுக் கொடுப்பதாயில்லை.

அவன் யாரென்று வீட்டுக்குப் போய் நிதானமாய் யோசித்துப் பார்த்து கூட கண்டுபிடிக்கலாம். சட்டென்று பொறி தட்டி ‘அட இவன்தானா?’ என்று பளிச்சென்று மூளையில் மின்னலடிக்கலாம். ஆனால் அதைவிட அவன் என்முன்னே என் பார்வையில் இருக்கும்போதே யோசித்துக் கண்டுபிடிப்பதுதான் இன்னும் வசதி. ஒரு வேளை நடுவழியிலேயே மின்னலடித்துவிட்டால் ‘அப்பாடா’ என்று ராயப்பேட்டையிலோ, மவுண்ட் ரோட்டிலோ இறங்கித் திரும்பிவிடலாம்.

ஏன் இத்தனை அவஸ்தை?

சின்ன வயதிலிருந்து தொடர்ந்துவந்த பழக்கம் இது. ஒரே ஒரு முறை எங்காவது ஒரு கணம் மட்டுமே பார்க்க நேரிட்ட பல பேர்களை அடுத்த தடவை வேறு எங்கேயாவது பார்க்கிறபோது இந்த மின்னல் பளிச்சிட்டுவிடும் என்று சொன்னேனில்லையா?. இது பல முறை என் அனுபவத்தில் நிகழ்ந்திருக்கிறது. ஒரு முறை தீவுத்திடல் பொருட்காட்சியில் ராட்டினம் ஆட டிக்கட் வாங்கும்போது கவுண்டரில் பார்த்த பெண்மணியை மறுமுறை கற்பகாம்பாள் சன்னதியில் பார்த்தபோது இழை பிசகாமல் ஞாபகம் வந்திருக்கிறது. இன்னொரு முறை கார்த்திக்கிடம் ஸ்பென்சரில் அமெரிக்கன் கார்ன் தின்று கொண்டிந்த ஒரு குண்டு ஆசாமியைக் காட்டி ’சத்யம் தியேட்டர் திரைப்பட இடைவேளையின் போது கழிவறையில் இவரை என் பக்கத்து ஸிங்கில் பார்த்திருக்கிறேன்’ என்று சொல்லி அவன் முறைப்பை வாங்கிக் கொண்டேன்.

ரோட்டில் போகும்போது அல்லது கடையில், ஆஸ்பத்திரியில், கடற்கரையில், மின்சார ரயிலில், கோவிலில், வீட்டுவரி கட்டுகிற இடத்தில் என்று இது போன்று அடையாளம் காணுதல் சட்டென்று நிகழ்ந்துவிடுகிறது. ஒரே நொடியில்.. ரொம்ப யோசிக்காமல்.. உடனே! முகங்களை அடையாளம் காணும் இத்தனை துல்லியமான ஞாபக சக்தி உனக்கு எப்படி வாய்த்தது என்று நிறைய பேர் ஆச்சரியப்பட்டுக்கூட கேட்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் இது எனக்கு ஒரு பொழுதுபோக்கு போலவும், பெருமையாகவும் கூட ஆகிவிட்டிருந்தது.

அது ஒரு பிறவித் திறமை அல்லது வரப் பிரசாதம் என்றெல்லாம் முழுசாய் சொல்லிவிட முடியாது. எப்படியென்றால்.. எனக்கு ஒரு பழக்கம் இருந்தது. தினசரி பார்க்கிற முகங்களை ஒரு சில விநாடிகளாவது உற்றுப் பார்த்துவிடுவது. ஒவ்வொரு முகத்துக்கும் ஒரு தனித்தன்மையிருக்குமல்லவா? வித்தியாசமான மூக்கு, புருவம் சரிந்த கண்கள். ஓரம் சுழிந்த உதடுகள். வரிசை அல்லது வரிசை தவறின பற்கள், சுருள் முடி, நீளக் கழுத்து, குள்ளம், இரட்டை நாடி அல்லது மிகப் பரிச்சயமான ஒரு ஆளை நினைவு படுத்தும் சாயல், துளைக்கும் பார்வை, மானரிசம், உடல் மொழி அல்லது நடை. ஏதோவொன்று! அந்த முறை அந்த வித்தியாசத்தை அந்த குறிப்பிட்ட முகத்தின் தனித்தன்மையை என் மனதிற்குள் ஏற்றிக் கொண்டுவிட்டால் அப்புறம் எங்கே பார்த்தாலும் சொல்வேன்.

ஒருமுறை ரயிலில் செல்லும்போது எதிரிலிருந்தவனுடைய மனைவிக்கு வித்தியாசமான முகம். கொஞ்சம் சுமாரான அழகுதான் என்றாலும் யாரையும் முதல் பார்வையில் திரும்பிப் பார்க்கும் வகையில் இருந்தாள் என்றுதான் சொல்லவேண்டும். அவள் ஒரு மாதிரி சீனப் பெண்களை ஒத்த கண்களை உடையவளாயிருந்தாள். அந்த மாதிரிக் கண்கள் அவள் சிரிக்கத் தேவையில்லாமலேயே அவளுக்கு ஒரு மலர்ச்சியான ஈர்ப்பை முகத்தில் தக்கவைத்திருந்தது என்றே எனக்குத் தோன்றியது. அதிகம் காணக் கிடைக்கிற கண்களின் வகை அல்ல அது. சற்றே வித்தியாசமாய் தனித்துவமாய். பார்த்துக் கொண்டேயிருந்தால் அரைமணி நேரத்தில் அவள் வசீகரமான உலக அழகியாய் தோன்ற ஆரம்பித்துவிடுவாள் என்று தோன்றியது. நான் அவளை அடுத்த முறை பார்க்கும்போது நிறைய யோசனைகளுக்கு அவசியமின்று உடனே ’ரயிலின் எதிர் ஸீட்’ என்று சொல்லிவிடமுடியும். சீனக் கண்ணழகி! இந்த எண்ண ஓட்டத்தில் நான் அவளை ரொம்பவும் உற்றுப் பார்த்துவிட்டேன் போலிருக்கிறது. அவள் கணவன் என்னை விரோதப் பார்வையுடன் முறைக்க ஆரம்பித்தான். ’அநாகரீகனே’ என்று செய்தியுடன் அவன் கண்களில் எரிச்சல் தேங்கியிருந்தது. நான் சுதாரித்து மறுபக்கம் திரும்பிக் கொண்டேன்.

முகங்களை உற்றுப் பார்க்கும் இந்த கெட்ட பழக்கத்திலிருந்து என்னை மீட்டெடுக்க நான் பட்ட பிரயாசைகள் தோல்வியில் முடிந்திருந்தன. முகங்கள். கோடி முகங்கள். ஒரு வேளை நான் சீனாவில் பிறந்திருந்தால் இந்தப் பிரச்சனை வந்திருக்காதென்று தோன்றியது. அங்கே எல்லோருக்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி முகம்.

ராயப்பேட்டையிலோ, மவுண்ட் ரோட்டிலோ இறங்கி வீடு திரும்புகிற அதிர்ஷ்டம் இன்றைக்கு வாய்க்கவில்லை எனக்கு. பஸ்ஸில் அவன் எனக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தான். அவன் ரயில் நிலையத்திற்குத்தான் டிக்கட் வாங்கினான் என்பதை நான் கவனித்திருந்தேன். திட்டமிடப்படாத பயணமாகிவிட்டது இது. ரொம்பப் பசிக்கிறதே என்று ஒரு சாம்பார் வடை சாப்பிடப் போனவனுக்கு இது திடீர்த் திருப்பம்.

ச்சே! இப்படி ஒரு ஞாபக மறதியா எனக்கு? அவன் யார்? ஏதாவது கல்யாணத்தில் பார்த்தேனா? பள்ளிக் கூடத்தில் மகளைக் கொண்டுபோய் விடும்போது எதிர்பட்டவனா? சினிமாவில் நடிப்பவனா? தொலைகாட்சியில் ஏதாவது பேட்டியில் வந்தானா? என் தெருவிலேயே எங்காவது குடியிருப்பவனா? அல்லது என் சர்வீஸ் செண்டருக்கு என்றாவது விஜயம் செய்த வாடிக்கையாளனா? என்றாவது ரோட்டோரம் இளநீர் சாப்பிடுகையில் பக்கத்தில் நின்றிருந்தானா? அல்லது இந்த முகவரி எங்கேயிருக்கிறதென்று வழியில் மடக்கி இவனை விசாரித்திருக்கிறேனா?

யார்? எங்கே?

மண்டை சூடாகிவிட்டது. இதோ ஒருவன் தன் பின்னால் நின்றுகொண்டு மனக் குடைச்சலில் மறுகுகிறானே என்ற கவலை துளியுமின்றி அவன் தன் பாட்டுக்கு வேடிக்கை பார்த்துக்கொண்டே வருகிறான். யோசனையின் கனம் என்னை அழுத்தியிருந்தது.

சென்ட்ரல் வந்துவிட்டது. அவன் நிதானத்துடன் மெதுவாய் இறங்கினான். நான் சற்றே இடைவெளிவிட்டுப் பின் தொடர்ந்தேன். அவனை மாதிரியே ஏகப்பட்ட ஜீன்ஸ்கள். கருப்பு பனியன்கள். பயணப் பைகள். ஜனத்திரள்களுக்கு நடுவே அவனைத் தொலைத்துவிடாமல் முன்னேற வேண்டியிருந்தது. பயணிகளின் இரைச்சல்களுக்கிடையே அறிவிப்புக் குரல் தத்தளித்துத் திணறியது. பெருநகரத்தின் பரபரப்பான வாழ்க்கையின் தினசரி ஆரம்பம் இதுபோலவொரு இடத்திலிருந்துதான் துவங்குகிறதென்று தோன்றியது.

அவன் ரயில்களின் வருகை மற்றும் புறப்பாடுகளைக் காட்டும் மின்னணுத் திரையின் எதிரில் நின்று ஒரு கணம் அண்ணாந்து பார்த்தான். ஒன்பதாவது ப்ளாட்பாரத்தை நோக்கி அவன் கால்கள் நடந்தன. கோயமுத்தூர் செல்கிற ரயில் அது என்று தெரிந்தது. ப்ளாட்பாரத்தின் முக்கால்வாசி தூரத்தை அளந்து நடந்துவிட்டு ஒரு இரண்டாம் வகுப்புப் பெட்டிக்குமுன் நின்றான். பெயர்ப்பட்டியலில் விரல் ஓட்டி தன் பெயரிருப்பதை உறுதி செய்துவிட்டு பெட்டிக்குள் ஏறினான். பெட்டிக்குள் அநேக இருக்கைகள் ஏற்கனவே நிரம்பியிருந்தன. ஒரு வேளை ரயில் புறப்படுகிற சமயமாயிருக்கும். அவன் ஜன்னலோரமாய் ஒரு இருக்கையில் வந்து உட்கார்ந்தான். ஜன்னல் வழியே பிளாட்பாரத்து மனிதர்களை அசுவாரஸ்யமாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

அடப் பாவி! ஏழு கிலோமீட்டர் ஒருவன் தன்னை பின் தொடர்ந்து வந்து கவனித்துக் கொண்டிருக்கிறான். அதை அறியாமல் தேமே என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான். இவனையெல்லாம் என்ன செய்வது?

நான் நினைத்தது சரிதான். அறிவிப்பினைத் தொடர்ந்து பச்சைவிளக்கு எரிய ரயில் ஊளையிட்டது. இப்போது நான் என்ன செய்யவேண்டும்? அவனுடனேயே அவன் செல்லுமிடத்துக்கு செல்வதா? எனக்கு திடீரென்று அந்த ரயிலில் தொற்றிக் கொள்ளலாம் என்றுதான் தோன்றியது. இதோ ஒரு சில விநாடிகள் மட்டுமே மிச்சமிருக்கின்றன. அவ்வளவே. அப்புறம் அவன் ரயிலோடு நகர்ந்துவிடுவான்.

ஒரு கருநிழலைப் போல என்மேல் ஒரு ஆயாசம் வந்து கவிந்துகொண்டது. இப்போது ரயில் நகரத்துவங்கியது. ஜன்னல் வழியாகத் தெரியும் அவன் முகத்தை ஒரு முறை ஆழமாகப் பார்த்தேன்.

அப்போதுதான் நான் சற்றும் எதிர்பாராத ஒரு நிகழ்ச்சி நடந்தது. அது என்னவென்றால், அவன் நகர்கிற ரயிலின் ஜன்னல் வழியாக என்னை திடீரென்று நன்கு உற்றுப் பார்த்து பின்பு சற்றே ஆச்சரியமடைந்தவனைப் போல முகம் மாறினான். பின்பு என்னை நோக்கி லேசாகச் சிரித்துக் கையசைத்தான்.

என்னைப் பார்த்துத்தானா? நான் நம்பிக்கையற்று லேசாய்த் திரும்பிப் பார்த்தேன். எனக்குப் பின்னால் ஒரு கடை மட்டுமே இருந்தது. அப்படியானால் அவன் என்னைப் பார்த்துச் சிரித்திருப்பதற்கான வாய்ப்பு மட்டுமே உள்ளது.
யார்ரா நீ?

இதுவரை கண்டறியாத பரபரப்புடன் ரத்தம் உடலெங்கும் வேகமெடுக்க நான் தீர்மானித்தேன். அவனுக்கும் எனக்கும் நடுவே ஏதோ ஒரு இழை உள்ளது. இல்லையென்றால் ஏதோ ஒன்று என்னை இதுவரையில் கூட்டிவந்திருக்காது. இருக்கிற மிகக் குறைந்த அவகாசத்தில் நான் அதை இப்போதே உறுதிப் படுத்திக் கொள்ளவேண்டும்.

ரயில் லேசாக வேகமெடுக்க ஆரம்பித்திருந்தது. நான் நகர்கிற பெட்டியை நோக்கி வேகமாக ஓடினேன். இன்னும் இரண்டே எட்டுக்களில் அவனைப் பிடித்துவிடலாம். அவன் யாரென்று தெரிந்து கொண்டே ஆகவேண்டும்.

அவன் என்னை இப்போது ஏறிட்டுப் பார்த்தான். அவன் முகத்தில் புன்னைகை மறைந்து லேசாய்ப் பதட்டம் தெரிந்தது.

திடீரென்று யாரோ ஒருவன் என் முன்னே ஓடுகிற ரயில் பெட்டியிலிருந்து ப்ளாட்பாரத்துக்குக் குதித்தான். நான் அவனைத் தவிர்க்க முயற்சித்து முடியாமல் தட் என்று அவன் மேலே வேகமாய் மோதினேன். இருவரும் தடுமாறி தடாலென கீழே விழுந்து உருண்டோம். சட்டைப் பையிலிருந்து என் செல்ஃபோன் வெளியே அதிர்ந்து விழுந்தது. நான் ஒரு நொடியில் சுதாரித்து எழுந்து கொண்டேன்.

அவன் என்னைப் பார்த்து ‘ஸாரி’ என்றான். நான் செல்ஃபோனை பொறுக்கிக்கொண்டேன். அதன் திரை விரிசல் விழுந்திருந்தது. எட்டாயிரத்தைந்நூறு ரூபாய்க்கு போன வாரம் வாங்கியது.

நான் விரக்தியாய் ரயில் போகிற திசையை பார்த்தவாறு நின்றிருந்தேன். மேலும் வேகமெடுத்து அவன் பெட்டி இன்னும் தூரமாகப் போய்விட்டிருந்தது. இப்போது ரயிலின் கடைசி பெட்டியின் X தெரிந்து பின்பு அதுவும் மறைந்தது. நான் சொல்லவொண்ணாத ஏமாற்றத்துடன் கால்கள் தயங்க வாசலைப் பார்த்து நடக்க ஆரம்பித்தேன். திடீரென்று ப்ளாட்ஃபாரச் சீட்டு வாங்கவில்லையென்று உறைத்தது.

நானொரு முட்டாள்.

அவன் யாரென்று கடைசி வரை ஞாபகம் வரவில்லை. ஆனால் இனிமேல் அவனை மறக்க முடியாதென்று தோன்றியது.

– ஆகஸ்ட் 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *