கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: December 28, 2022
பார்வையிட்டோர்: 3,878 
 
 

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தீபாவளிக்குப் பட்டுச்சேலை வாங்க ‘அங்மோகியோ’விலிருந்து பேருந்தில் புது மணப் பெண்ணின் உற்சாகத்துடன் கிளம்பினாள் ரோகிணி. வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. அண்ணி கவிதா வேலை முடிந்து நேராக ‘குட்டி இந்தியா’விற்கே வந்து விடுவதாகச் சொல்லியிருந்தார்.

வழியெல்லாம் அண்ணியைப் பற்றிய பெருமிதமான நினைவுகள் அவளுள் வியாப்பித்தன. அடுத்தவருக்கு உதவும் இயல்பான குணம் அதிகம். படிப்பிலும் படுகெட்டி. பல்கலையில் நிர்வாகப் படிப்பு முடித்து பெரிய வேலையில், செலவழிக்க முடியாத அளவிற்குச் சம்பளம். உயர்பதவியில் இருப்பதால், ஒரு கம்பீரம் அவருடனேயே பிறந்ததைப் போலத் தொற்றிக் கொண்டிருந்தது. அலுவலகத்திலோ அவருக்கு மதிப்புக் கலந்த மரியாதை. இவற்றிற்கெல்லாம் திருஷ்டிப் பரிகாரமாக அவரது பிடிவாத குணம் அமைந்திருந்தது.

அண்ணியைப் பார்க்கும் போது அண்ணனுக்குப் படிப்பும் பதவியும் குறைவு. சம்பளமுமே கூட குறைவு தான். இதெல்லாம் அவர்களிடையே எந்த விதமான பிரச்சனையையும் ஏற்படுத்தியதில்லை. சமீபமாக அண்ணன் குழந்தைக்காக ஏங்க ஆரம்பித்திருந்தார். கல்யாணத்தின் போதே, குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டேன், கேட்கக் கூடாது என்று அண்ணி நிபந்தனையிட்டு விட்டார். திருமணத்தின் போது எல்லோரும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அண்ணா கேட்கவில்லை. காதல் அவர் கண்களை மட்டுமல்லாது காதுகளையும் செயலிழக்கச் செய்து விட்டிருந்தது. அண்ணியோ தான் அன்று சொன்னதையே தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்.

ஏதோ காரணத்தினால் தம்பதிகள் பிரிய வேண்டியிருந்தால், குழந்தைகள் துன்பப் படும் என்பதே அவர் கவலை. அண்ணியின் பெற்றோர் அவரது சிறு வயதிலேயே மணவிலக்கு பெற்று விட்டிருந்தனர். இதனால், அண்ணி அவரின் அம்மாவிடமும், அவரது தம்பி அவரது அப்பாவிடமும் வளர்ந்திருந்தனர். அவரது தம்பியும் அப்பாவும் அமெரிக்காவிற்குப் போய் விட்டனர். இதனால், அண்ணிக்கு சகோதரப் பாசம் முற்றிலும் மறுக்கப் பட்டு, பெற்றோர் பாசம் பாதி மட்டுமே கிடைத்திருக்கிறது. அண்ணி படிப்பு முடித்த சமயம் அவரது அம்மாவும் புற்று நோயால் இறந்து விட்டார்.

பேருந்திலிருந்து இறங்கும் போதே, “ஹாய் ரோகிணி பாத்தியா, உனக்கு முன்னாடியே நான் வந்துட்டேன்”, என்று நிறுத்ததில் நின்றிருந்த அண்ணியின் குரல் அவளுள் புத்தம்புது உற்சாகத்தைக் கொண்டு வந்தது. இருவரும் சேர்ந்து ‘நல்லி’யை நோக்கி நடையைக் கட்டினர்.

சிரங்கூன் வட்டாரமே தீபாவளிக் கோலாகல ஒளி வெள்ளத்தில் மிதந்தது. சாலையெங்கும் மக்கள் கூட்டம். வாடிக்கையாளர்களைச் சமாளிக்க முடியாது கடைக்காரர்கள் இன்ப அவஸ்தையில் திணறினர். அடித்துப் பெய்திருந்த மழையில் சாலைகள் கழுவி விடப் பட்டிருந்தன. இத்தனைச் சிறிய தீவில் ஒருபகுதி மழையில், மறுபகுதி வெயிலில்! ஆயிரத்தோராவது முறையாய் ஆச்சரியப் பட்டாள்.

எதிரே வந்து கொண்டிருந்த இளைஞனைப் பார்த்ததும், பேச்சை நிறுத்திவிட்டு, அவனையே கூர்ந்து கவனித்தார் அண்ணி. அவன் அவர்களைக்கடந்து போன பிறகும் தலையைத் திருப்பி அவனைப் பார்த்தார். “என்ன அண்ணி, யாரும் ஒங்களுக்குத் தெரிஞ்சவங்களா?”

கண்களை அகற்ற முடியாமலே, “இல்ல ரோகிணி, அந்தப் பையனப் பார்த்ததும், ஏனோ தெரியல்ல என்னோட தம்பி இப்ப இப்பிடித்தான் இருப்பான்னு சட்டுன்னு தோணிச்சி எனக்கு.”

“தொடர்பே இல்லையா அண்ணி? ஒரு போட்டோ கூடவா உங்களுக்கு அனுப்பல்ல?”, சற்று முன்னர் இருந்த அண்ணியின் துள்ளல் கலந்த உற்சாகம் இருந்த சுவடு தெரியாது மறைந்திருந்தது.

“ஹூம், சுத்தமா இல்ல. எங்கப்பா போன மாசம் தான் திடீர்னு நாங்க குடியிருந்த பழைய வீட்டு விலாசத்தக் கண்டு பிடிச்சி ஒரு லெட்டர் போட்டிருந்தாரு. வேற ஒரு விவரமும் இல்ல. அம்மா இறந்தது அவருக்குத் தெரியாதுல்ல. அதான் அவங்களப் பத்தியே நீளமாக் கேட்டு எழுதிருக்காரு.”

“பதில் போட்டீங்களா?”

“ஹூஹும், இல்ல. உங்கண்ணனும் போடத் தான் சொன்னாரு. ஆனா, நாம் போடல்ல. தானே எல்லா விவரமும் எழுதிப் போட்டுட்டாராம்.”

“ஓஹோ.”

“ரோகிணி, ப்ளீஸ், நீ தப்பா எடுத்துக்கல்லன்னா நாம இன்னொரு நாளைக்கு வேணா கடைக்கு வருவோமா, எனக்கு புடவை பாக்கற ‘மூடே’ கொஞ்சங்கூட இல்ல. மனசு திடீர்னு வெறுமையா ஆயிடிச்சி. வர சனிக்கெழம உங்க வீட்டுக்கே வந்து நானே கூட்டிட்டு வரேன். மறுபடியும் கொண்டு ட்ராப்பும் பண்ணிடறேனே.”

“ம், இன்னிக்கி எப்படியும் ஷாப்பிங் முடிச்சிறல்லாம்னு நெனச்சேன். சரி, பரவால்ல. அப்பிடியே செய்வோம் அண்ணி.”

இருவரும் அதிகம் பேசாது பயணித்தார்கள் விரைவுச் சாலையில். அண்ணிக்குத் தன் தம்பியின் நினைவுகள் மனதில் அழுத்த அவர் முகம் வாடிய தாமரையானது. அண்ணியின் ஏக்கமும் வேதனையும் முகத்தில் அப்பிக் கிடந்தன. தம்பிப் பாசம் மட்டுமே எஞ்சியிருந்தது அவரிடம். அவரைப் பார்க்கவே அவளுக்குப் பரிதாபமாக இருந்தது.

தீபாவளிக் கோலாகலம் முடிந்து சிங்கை நகரம் கிருஸ்துமஸ் கோலம் பூணத் தொடங்கிய நேரம். ஒரு நாள் காலையில், “ரோகிணி, என்ன செய்யிறதுன்னு ஒண்ணும் புரிய மாட்டேங்குதும்மா. அவ சொல்றதையே சொல்லி கிட்டிருக்கா. என்னிக்கித் தான் என்னச் சரியாப் புரிஞ்சுக்கப் போறாளோ இவ”, என்று அண்ணன் தொலைபேசியில் ஒரே புலம்பல்.

“கவலப் படாதீங்கண்ணா. அண்ணியோட ஒக்காந்து பேசுங்க, புரிஞ்சுப்பாங்க.”

“எப்ப? இல்ல எப்பன்னு கேக்கறேன்? ம், இப்பவே கவிதாவுக்கு நாப்பது முடியப் போகுது ரோகிணி.”

“பேசாம நீங்க ரெண்டு பேரும், ம், ஒரு ரெண்டு வாரம் லீவு எடுத்துகிட்டு வெளியூருக்கு எங்கேயாவது போயிட்டு வாங்களேண்ணா. நானும் இதையே ஒரு வருஷமாச் சொல்லிக் கிட்டிருக்கேன். ஒரு நல்ல மாறுதலா இருக்குமில்ல. எப்பப் பாத்தாலும் ‘வேலை வேலை’ன்னு அண்ணியும் ஒரு எடத்துக்கும் போறதில்ல.”

“எங்கம்மா லீவு? எனக்கிருந்தாலும் கூட அவளுக்கு? அத வுடு, பசங்க எல்லாம் எப்டியிருக்காங்க? மச்சான் நல்லா இருக்காரா?”

“ம், நல்லா இருக்காங்கண்ணா. ரிஷி, ரியாவுக்கு அடுத்த வாரம் ஆண்டிறுதித் தேர்வு. ரிமா தான் வீட்ட ரெண்டு பண்ணுது. ஒரு பொருளயும் வச்ச எடத்துல இருக்க விடறதில்ல. மூணு சக்கர சைக்கிள் வாங்கினோம்ல, ஒரே குஷியா ‘வோய்ட் டெக்’ல ஓட்டுது. இந்த வாரக் கடைசியில வாங்களேண்ணா வீட்டுக்கு, அண்ணியையும் கூட்டிக் கிட்டு. நீங்க இங்க வந்து நாளச்சு. போன்லயே தான் பேசிக்கிறோம்.”

“சனிக்கெழம தான் கவிதாவோட அப்பா வராரு. ம், ஞாயித்துக் கெழம வர முடியுதான்னு பாக்கறேன். எப்படியும் நாளக் கழிச்சு மறுபடியும் போன் அடிக்கறேன் என்ன, பை.”

“சரிண்ணா, பை.”

அண்ணனின் பிரச்சனைக்கு ரோகிணியால் ஒரு தீர்வைக் காண முடியவில்லை. யோசித்து யோசித்துத் தலைவலி வந்தது தான் மிச்சம். பாவம், அவரும் தொலைபேசியை எடுத்தால் இதைப் பற்றியே பேசிக் கவலைப்படுகிறார். இதெல்லாம் அவரவர் யோசித்துப் பேசி முடிவெடுக்க வேண்டிய பிரச்சனை. அண்ணனுக்காக ஆறுதல் வார்த்தை சொல்லலாமே தவிர தீர்வு சொல்லவா முடியும்? துவைத்த துணிகளை மூங்கில் கழிகளில் உலர்த்தியபடியே அடுப்பில் கொதிக்கும் ‘சம்பால்’ மீதும் ஒரு கண் வைத்திருந்தாள். ஒரு மணியானதும் ரிஷியும் ரியாவும் பள்ளி முடிந்து பசியோடு வருவார்கள்.

அண்ணனின் வீட்டில் துள்ளி விளையாடப் பிள்ளையில்லை. ஆனால், இருவரின் சம்பாத்தியத்தில் தரை வீடும் ஆளுக்கொரு ‘காடி’யுமாக செல்வம் வளர்ந்தபடியிருந்தது. வீட்டில் வைத்த பொருள் வைத்த இடத்தில் இருந்தது, ரோகிணியின் வீட்டிற்கு நேர் எதிராய். அண்ணிக்குச் சொந்தம் என்று யாரும் கிடையாது. வருவோர் போவோர் கூட அதிகம் இல்லாததால், சமீப காலங்களில் தான் அண்ணி வெறுமையை உணர ஆரம்பித்திருந்தாற் போலத் தெரிந்தது. இருந்தாலும் குழந்தை உற்சாகத்தைக் கொண்டு வருமென்று அவர் துளியும் நம்பவில்லை. தன் கருத்தை மாற்றிக் கொள்ளாமல், உடும்புப்பிடியாக குழந்தை வேண்டாமென்றிருந்தார். வழக்கம் போல அதே காரணங்கள்.

சம்பாலை கிளறி அடுப்பை அணைத்து விட்டுக் கூடத்திற்கு வந்தாள் ரோகிணி. மூளை யோசனையில் ஆழ்ந்திருக்க, கை தன்னிச்சையாய் இரைந்து கிடக்கும் பொருள்களை உரிய இடத்தில் வைத்தது. ரிமா தூக்கத்திலிருந்து எழுந்ததும் மறுபடியும் சாமான்கள் இரையவே செய்யும். வீடு கலகலவென்று ரோகிணிக்கு மூன்று குழந்தைகள். அவளின் கணவன் குமார் மட்டுமே சம்பாதிப்பதால், நான்கு வருடமாக ஐந்தறை வீடு வெறும் கனவாகவே இருக்கிறது. செலவுகள் சொல்லிக் கொள்ளாமல் திடீரென்று வந்து நெருக்கும்போது, பேசாமால் தானும் வேலைக்குப் போகலாமா என்றிருக்கும்.

பெரிதாய் கடனெல்லாம் இல்லாமல், பிள்ளைகளைப் படிக்க வைக்கவும் பிடித்ததை வாங்கிக் கொடுக்கவும் கணவன் குமாரின் கணக்கர் உத்தியோகம் பொருள் ஈட்டவே செய்தது. என்றாலும் சில வேளைகளில் இழுத்துக்கோ பிடிச்சுக்கோ’ என்றிருக்கும். மாதத்தில் பத்திருபது வெள்ளிகளை ‘நான்கிலக்கச் சீட்டு வாங்கச் செலவிட்டு வந்தாள். அதிருஷ்டமாவது இருக்கிறதாவென்று சோதிக்கத் தான். அதன் முடிவுகள் வெளியாகும் நாளில் ரோகிணி தேர்வு முடிவுகளுக்குக் காத்திருக்கும் பள்ளி மாணவியாகத் தவிப்பாள். பார்க்க மிகவும் வேடிக்கையாக இருக்கும். குமார் ரோகிணி வேலைக்குப் போவதை மட்டும் அடியோடு வெறுத்தான். கடைக்குட்டி ரிமாவிற்கு வேறு இன்னமும் மூன்று வயது கூட நிரம்பவில்லை.

சமையலைக் கவனித்த படியே ‘ஒலி’ யின் ஒலியைக் கூட்டி தனக்கு விருப்பமான பிரேமாவின் அறிவிப்பில் நிகழ்ச்சியினைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“அம்மா, இன்னிக்கு அத்தை மாமா வராங்களா?” கை வேலையை கவனிக்க விடாமல் தொடர்ந்து தொண தொணவென்று நான்கைந்து முறை காலையிலிருந்து கேட்டுவிட்டாள் ரியா.

“எதுக்கு ரியா, சும்மா இதையே கேட்டுக்கிட்டு இருக்க? வருவாங்கன்னு தான் நெனைக்கிறேன். இல்லன்னாலும் அடுத்த வாரம் உன்னோட பிறந்த நாளுக்கு வருவாங்க.”

“அதில்லம்மா, அத்தைக்கி இந்த ‘பார்பி’ பொம்மைன்னா பிடிக்காதில்ல. ஏசுவாங்க. அதையெல்லாம் கப்போர்டுக்குள்ள ஒளிச்சு வைக்கணுமே, அதுக்குத் தான் கேட்டேன்”, சொல்லிக் கொண்டே பரபரவென்று இரைந்து கிடந்த பொம்மைகளை யெல்லாம் பொறுக்க ஆரம்பித்தாள் ரியா.

அண்ணி வந்தால், ரியா தன்னுடையது மற்றும் ரிமாவுடைய ‘பார்பி’ பொம்மைகளையெல்லாம் கண் காணாமல் எடுத்து அலமாரிகளில் ஒளித்து வைப்பாள். இதைப் பார்த்தால், ரிமா புரியாமல் பொம்மை வேண்டுமென்று கத்தி அடம் பிடிப்பாள். இல்லையென்றால், மறைத்து வைத்ததையெல்லாம் ஒவ்வொன்றாக வெளியில் எடுத்து விடுவாள். மறுபடியும் ரியா அலுத்துக் கொண்டாவது மறைத்து வைப்பாள்.

“ரோகிணி, நல்ல புத்தகங்கள் வாங்கிக் கொடும்மா. இதெப் போய் வாங்கி கொடுத்து, இப்பவேயிருந்து ‘நீ கல்யாணம் கட்டிப்பிள்ள பெறணும்`னு மூளைச் சலவை செய்யணுமா? ரியா, இனிமே உனக்கும் பாப்பாக்கும் இந்தப் பொம்மையே வேணாம். நா உங்களுக்கு நல்ல புக்ஸ் M வாங்கிட்டு வரேன், என்ன?”, என்று ஆசிரியரின் கண்டிப்போடு சொல்வார். அண்ணிக்கு பெண் குழந்தைகளுக்கு அத்தகைய பொம்மைகளை வாங்கிக் கொடுப்பது பிடிக்கவே பிடிக்காது. பெண் குழந்தைகள் நன்கு படித்து பெரிய வேலைகளில் அமர வேண்டுமென்று அடிக்கடி சொல்வார்.

இப்போதெல்லாம் குழந்தைகளைப் பெற்றுத் தள்ளச் சொல்லி ஊக்குவிக்கிறது அரசாங்கம். எத்தனையெத்தனை சலுகைகள்! சலுகைகள்! இருந்தும் கூட பெற்றுக் கொள்ளத் தயங்குபவர்கள் தான் அண்ணியைப்போல அதிகம் பேர் இருக்கிறார்கள். அண்ணனுக்கு மட்டும் இந்த ஒன்பது வருடங்களில் தோன்றாத பிள்ளை ஆசை சமீப காலங்களில் அதிகம் தோன்றுகிறது.

முதல் முறையாக அண்ணன் மட்டும் தனியாக வந்தார். கோபத்துடன் வேண்டா வெறுப்பாகத்தான் சாங்கி விமான நிலையத்திற்கு அண்ணி வந்தாராம். வழியெல்லாம் மொண மொணவென்று ஒரே புலம்பல். கோபத்தில் யாரோ முன்பின் தெரியாத குற்றவாளியை ஏசுவதைப் போல தன் தந்தையை ஏசினார். ‘மாமனாரப் பார்க்க உங்களுக்குத் தான் ஒரே கரிசனம். உங்களுக்காகத் தான் நா வரேன். மத்தபடி நீங்களாச்சு, உங்க மாமனாராச்சு. அவரு திரும்பிப் போகிறவரை நா ரோகிணி வீட்டுல போயித் தங்கிக்கப் போறேன்’, என்று கராராய்ச் சொல்லிவிட்டார்.

நேரில் அப்பாவைப் பார்த்ததும் பரிதாபமே மேலோங்கியிருக்கிறது. மாமனார் என்ற அந்த மனிதர் தமிழை முற்றிலும் மறந்து, கிழடுதட்டி ‘பார்க்கின்ஸன்’ நோயினால் கைகள் நடுங்கிய படி பார்க்கவே பரிதாபமாக இருந்தார் என்றும் முப்பத்தைந்து வருடங்களாகப் பார்க்காத தன் அப்பாவைப் பார்த்த கவிதா சாந்தமானாள் என்றும் கதை கதையாக அண்ணன் சொல்லிக் கொண்டிருந்தார். கிழவர் தன் வேரை சிங்கை மண்ணிலும், அண்ணி தன் வேரைத் தந்தையிலும் கண்டு பூரித்து விட்டனர்.

அப்பாவைக் கவனித்துக் கொள்ள விடுப்பெடுத்திருந்தாராம் அண்ணி. ரோகிணிக்கு இது தான் இமாலய அதிசயமாக இருந்தது. தான் இல்லா விட்டால் நிறுவனத்தின் நிர்வாகம் கெட்டுக் குட்டிச் சுவராகி விடுமென்று நம்பும் அண்ணி விடுப்பெடுத்திருந்ததை அவளால் நம்பவே முடியவில்லை. தனது வாகனத்திலேயே ஊர் சுற்றிக் காட்டியும் மருத்துவரிடம் காட்டியும் அப்பாவைத் தங்கத் தம்பாளத்தில் வைத்துத் தாங்கினார் அண்ணி.

“கார் விபத்துல ரெண்டு வருஷத்துக்கு முந்தியே முந்தியே தம்பி இறந்த செய்தி அனுப்பினாராம் மாமா. ஆனா, எங்களுக்குத் தான் தகவல் வந்து சேரல்ல. இருந்த ஒரே தம்பியும் இல்லன்ன ஆனது கவிதாவுக்கு ரொம்பவே வருத்தம். என்னமோ நேத்திக்கித் தான் தம்பி செத்தா மாதிரி மூக்கச் சிந்திச் சிந்தி ஒரே அழுகை. இத்தன வருஷமா என்னால செய்ய முடியாதத, மாமா சொன்ன செய்தி செஞ்சிருக்கு. ஹா,ஹா,”, அண்ணன் ரோகிணியிடம் தொலைபேசியில் பேசினார்.

“ஐயோ அண்ணா, அண்ணி அழுகறதப் பார்த்தா உங்களுக்குக் கேலியாயிருக்கா? சரி, அத விடுங்க. ஆமா,. அண்ணி ரொம்பக் கவலையா இருக்காங்களா?”

“ரோகிணி, இப்பல்லாம் கவிதாவப் பார்க்கவே ரொம்ப வித்தியாசமா இருக்கு. இப்பல்லாம் ஆபீஸக்கூட மறந்து இருக்கான்னா பாத்துக் கோயேன். மாமாவோட நிலை அவள ரொம்பவே பாதிச்சிருக்கு. எப்பவும் அப்பா நினைப்புத் தான்.”

“ஏதோ அவங்களுக்கு அப்பாவாவது ஆறுதலுக்கு இருக்காங்களே”

“மாமா உங்க அண்ணிய மொள்ள வழிக்குக் கொண்டு வந்துடுவாருன்னே நெனக்கிறேன். நிறைய பேசி சம்மதிக்க வச்சிடுவாருன்னு தான் எனக்குத் தோணுது, பார்ப்போம், ஒகேம்மா, பை.”

“எப்பிடியோ நல்லது நடந்தாச் சரி. வர சனிக்கெழமை ரியா பிறந்த நாளைக்கு மூணு பேரும் வந்துடுங்கண்ணா. பை.”

வாழ்க்கையில் ஒன்றிருந்தால் ஒன்றிருக்காதோ. அண்ணியின் அப்பாவிற்கு அமெரிக்காவில் வியாபாரம் கொழித்ததில் ஏராளமான சொத்துக்கள். அதை அனுபவிக்க இருந்த மகனும் உலகை விட்டு மறைந்ததில், மகளுக்காவது அவை சேர வேண்டும் என்று மிகவும் விரும்பினார். அண்ணனையும் அண்ணியையும் தன்னுடன் அங்கேயே வந்து விடுமாறு கூறியிருக்கிறார். ஆனால், அண்ணி முடியாதென்றும் அப்பா இங்கேயே தன்னோடு இருக்க வேண்டுமென்றும் வற்புறுத்தவே, சரியென்று தங்கிவிடச் சம்மதித்திருக்கிறார். எல்லாச் சொத்தும் தன் மகள் வயிற்றில் பிறக்கப்போகும் வாரிசுக்கே எழுதி வைத்து விட்டார். ‘சொத்துக்காகப் பிள்ளையா?’ என்று பெரிதாகச் சிரித்திருக்கிறார் அண்ணி. சொத்தெல்லாம் அவர் மனதை மாற்றவேயில்லை.

விடாமல் பழைய பல்லவியையே பாடினாராம். ஒரு வேளை ஏதோ காரணத்தால் பெற்றோர் பிரிய நேர்ந்தால், குழந்தைதானே அதிகம் பாதிக்கப் படும் என்பதை விடாமல் பற்றிக் கொண்டு வழக்கம் போல அப்பாவிடமும் தர்க்கம் செய்திருக்கிறார். ஆனால், கிழவர் படு புத்திசாலி. அண்ணியின் தம்பிப் பாசத்தைச் சாதகமாகப் பயன் படுத்தி மகளை மூளைச் சலவை செய்வதில் ஒன்றரை மாதமாய் முனைப்பாயிருந்திருக்கிறார். அவரின் விடாமுயற்சி அண்ணியின் இருகிய மனசையும் மெதுவாக இளக்கத் தொடங்கியது.

“கவிதா, இப்ப ரோகிணியோட பையன் ரிஷியப் பாரு. அப்படியே அவங்க மாமா, அதான் என்னோட மருமகனயே உரிச்சி வச்சிருக்கான். உனக்கொரு மகன் பிறந்தால் அவன் உன்னோட தம்பி கதிரைப் போலவே இருப்பான்”, என்று தன் தந்தை சொன்னது அண்ணிக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது. தம்பியை நினைத்த நினைப்பில் அவருக்கு அப்பாவின் யோசனை கூட சரியோ என்று யோசிக்க வைத்திருக்கிறது. குழந்தை தன் தந்தை வழிகூட ஜாடையைப் பின் பற்றலாம் என்ற ஆராய்ச்சியெல்லாம் அவருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியில் தோன்றவேயில்லை.

சனியன்று பிறந்தநாள் விழாவிற்கு எல்லோரும் வந்திருந்தனர். வந்திருந்தவர்களில் முக்கால் வாசி வாண்டுப் பட்டாளம். அவர்கள் செய்த ஆர்பாட்டங்களில் நேரம் போனதே தெரியவில்லை. மற்ற அனைவரும் விருந்து முடிந்து கிளம்பினர். அண்ணியின் முகத்திலும் கண்களிலும் புதிதாய் ஏதோ ஒரு புது மினுமினுப்பைப் பார்க்க முடிந்தது.

பின்னிரவில், பரிசுப் பொட்டலங்களைப் பிரித்தாள் ரிமா. தன் அத்தை கொடுத்த பொட்டலத்தை ஆர்வமாய் கையில் எடுத்தாள். கவர்ச்சியாகவும் நேர்த்தியாகவும் கட்டியிருந்தது. அழகிய வெளிர் மஞ்சள் நிறத்தில் பளபளத்த அந்த சுற்றப்பட்ட காகிதத்தில் ஏராளமான சின்னச்சின்ன மலர்க் கொத்துக்கள். ஆவலுடன் மெதுவாகப் பிரித்தாள். பிரித்தபடியே, சுற்றியிருந்த அனைவரையும் நிமிர்ந்து இருமுறை பார்த்துக் கொண்டாள்.

உள்ளே புத்தகங்கள் இருக்குமென்று எதிர்பார்த்த ரியாவிற்கு ஒரே ஆச்சரியம், அத்தையிடமிருந்தா இந்தப் பரிசு?! புன்னைகை பூத்திருந்த அத்தையையே உற்று நோக்கினாள் ரியா. அவள் கையில் ‘பார்பி’ பொம்மை. அதன் கையில் ஒரு சின்னஞ்சிறு மொட்டைத்தலைப் பொம்மை!

– சங்கமம்.காம் – மே 04, தமிழ் முரசு – 30-05-04, முத்தமிழ் விழா 2004 சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் மற்றும் தமிழ் முரசு ஏற்பாட்டில், வளர் தமிழ் இயக்கத்தின் ஆதரவில் நடந்த அமரர் சே.வை. சண்முகம் நினைவு சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *