துர்வாசர் சாபமும் கைகேயி வரமும்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 12,124 
 

துர்வாச முனிவரது நீண்ட பயணத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது கேகய நாடு. தவம் செய்ய சிறந்ததோர் இடம் வேண்டி அலைந்த துர்வாசருக்கு, கேகயத்தின் அமைதியான சூழல் பிடித்துப் போனது. அங்கேயே தங்கி தவமியற்ற முடிவு செய்தார்!

தவசீலரான துர்வாசரது வருகையை அறிந்த கேகய அரசன் அசுவபதி ஓடோடி வந்தான். துர்வாசரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான்.

துர்வாசர் சாபமும் கைகேயி வரமும்”முனிவர் பெருமானே… தாங்கள் என் அரண்மனையை ஒட்டிய வனத்திலேயே தவம் மேற்கொள்ளலாம். உங்களது தேவைகளை என் மகள் கைகேயி உடன் இருந்து கவனித்துக் கொள்வாள்!” என்று வேண்டியவன், அருகில் நிற்கும் மகள் கைகேயியையும் அறிமுகம் செய்து வைத்தான். சிறுமியை ஆசீர்வதித்த துர்வாசர், மன்னனின் வேண்டுகோளை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.

நாட்கள் நகர்ந்தன. அமைதியான அந்த வனத்தில் யோக நிஷ்டையில் ஆழ்ந்து போனார் துர்வாசர். நாழிகைகள், நாட்களாக… நாட்கள், மாதங்களாக… வெகு காலம் நீண்டது துர்வாசரின் தவம்.

ஆடாமல் அசையாமல் கற்சிலை யாக அமர்ந்திருக்கும் துர்வாசரைக் கண்டு சிறுமி கைகேயியிக்கு ஆச்சரியம்! நாளடைவில், அந்த ஆச்சரியமே சந்தேகமாக உரு வெடுத்தது.

‘முனிவர் உயிரோடுதான் இருக்கிறாரா?’ என்ற தனது சந்தேகத்துக்குத் தீர்வு காண

ஒரு நாள் முற்பட்டாள் கைகேயி. முனிவரை நோக்கினாள். அவரின் நாசித் துவாரங்களைக் கவனித்தவள், ‘நாசியில் ஏதேனும் குச்சியை நுழைத்தால், முனிவரிடம் மாற்றம் தென்படலாம்!’ என்று தீர்மானித்தாள். ஆனால், அவள் கண்களுக்கு ஒரு குச்சிகூடத் தென்படவில்லை.

‘வேறு வழியில்லை… நம் விரலையே பயன்படுத்த வேண்டியதுதான்!’ என்று முடிவு செய்தவள், தனது சுட்டு விரலை துர்வாசரின் மூக்கில் நுழைத்தாள்!

நிஷ்டை கலைந்த துர்வாசர் கடுங்கோபம் கொண்டார். கைகேயியை சபித்தார்: ”துஷ்ட சிறுமியே! உனது விளையாட்டுத் தனத்துக்கு அளவில்லையா? நாசித் துவாரத்தில் நுழைந்து, எனது தவத்தைக் கலைத்த உனது விரல் இரும்பாகக் கடவது!”

பதைபதைத்தாள் கைகேயி. தான் ஒன்று நினைக்க, முனிவர் அதைத் தவறாகப் புரிந்து கொண்டாரே என்று வருந்தினாள். எனினும், தனது துக்கத்தை வெளிக்காட்டாமல் துர்வாசரிடம் வேண்டினாள்:

”ஸ்வாமி… என்னை மன்னியுங்கள். தாங்கள், வெகு நாட்களாக ஆடாமல்- அசையாமல் இருந்ததால், ‘தங்களுக்கு ஏதேனும் நேர்ந்து விட்டதோ’ என்று பயந்து போனேன். அதனால் விளைந்த தவறு இது. அறியாமல் செய்த பிழைக்கு, இவ்வளவு பெரிய தண்டனையா? ‘முனிவரின் மனம் நோகும்படி நடந்து கொண்டாயே’ என்று என் தந்தை கலங்க மாட்டாரா? தவிர, இரும்பு விரலைக் கண்டு என் தோழியரும் கேலி செய்வார்களே… தயவுசெய்து சாபத்தை விலக்குங்கள்!” என்று பணிவுடன் வேண்டினாள்.

துர்வாசர் மனம் இரங்கினார். ”இளவரசியே, கொடுத்த சாபத்தை விலக்க இயலாது. ஆனாலும் அதன் கடுமையை சற்று குறைக் கிறேன்… நீ விரும்பும்போது மட்டுமே உன் விரல் இரும்பாகும்!” என்று அருளினார்.

பருவ வயதை அடைந்தாள் கைகேயி. அழகும் அறிவும் நிறைந்த கைகேயியின் புகழ் திக்கெட்டும் பரவியது. கோசல நாட்டு சக்ரவர்த்தியான தசரதரும், கைகேயியைப் பற்றி கேள்விப்பட்டார். பட்டமகிஷி கௌசல்யா, அழகில் சிறந்த சுமித்திரை என மனைவிகள் இருவர் இருந்தும் குழந்தை பாக்கியம் இல்லாததால், தசரதரின் மனம் கைகேயியை மணக்க விரும்பியது. அவர், கேகய நாட்டுக்குப் புறப்பட்டார்.

தசரதரை சிறப்பாக உபசரித்தான் கேகய அரசன் அசுவபதி. சிறிது நாட்கள் அங்கு தங்கியிருந்த தசரதர், அசுவபதியிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.

திடுக்கிட்டான் அசுவபதி. சக்ரவர்த்திக்கும் தன் மகள் கைகேயிக்கும் வயது வித்தியாசம் அதிகம் ஆயிற்றே என்று அவன் மனம் தயங்கியது. எனினும், படைபலம் குறைந்த கேகயம், கோசல தேசத்தின் தாக்குதலைத் தாக்குப் பிடிக்காது என்பதையும் அவன் அறிந்தே இருந்தான். எனவே, நிபந்தனை ஒன்றின் பேரில், திருமணத்துக்குச் சம்மதித்தான்!

‘தசரதருக்குப் பிறகு, தன் மகள் கைகேயிக்குப் பிறக்கும் ஆண் வாரிசுக்கே பட்டம் சூட்டப்பட வேண்டும்!’ என்பதே அந்த நிபந்தனை. கைகேயியிடம் கொண்ட மையலின் காரணமாக, நிபந்தனையின் பின்விளைவுகளைப் பற்றி சற்றும் யோசிக்காமல் ஒப்புக் கொண்டார் தசரதர். திருமணம் இனிதே நடைபெற்றது.

கைகேயியை மணந்து வந்தும் புத்திர பாக்கியம் வாய்க்காததால், பெரும் கவலையில் ஆழ்ந்திருந்தார் தசரதர். இந்த நிலையில், வைஜயந்தம் எனும் நாட்டை ஆண்டு வந்த சம்பராசுரன் என்பவனைத் தோற்கடிக்க, தசரதரின் உதவியை நாடி வந்தான் தேவேந்திரன்.

அவனின் வேண்டுதலுக்கு இணங்கி வைஜயந்தம் நோக்கி தமது படைகளுடன் புறப்பட்டார் தசரதர். தானும் உடன் வருவதாக வேண்டினாள் கைகேயி.

”போர்க்களத்துக்குப் பெண்களை அழைத்துப் போவது வழக்கம் இல்லை!” என்று மறுத்தார் தசரதர். எனினும் கைகேயி ஒப்புக் கொள்ளவில்லை.

துர்வாசர் சாபமும் கைகேயி வரமும்2”மனதில் சஞ்சலத்துடன் தாங்கள் யுத்த களத்துக்குச் செல்கிறீர்கள். இந்த தருணத்தில் நானும் உடன் வருவதே நல்லது!” என்றபடி தானும் போர்க்கோலம் பூண்டு புறப்பட்டாள் கைகேயி.

போர்க்களம். பதினோரு நாட்களாக தொடர்ந்தது போர். இருந்தும் வெற்றி- தோல்வியைத் தீர்மானிக்க முடியாத நிலை. பன்னிரண்டாம் நாள் காலை. ‘வெற்றி பெற்றே தீருவது!’ என்ற முனைப்புடன் தேரைச் செலுத்தினார் தசரதர். தேர்த்தூணை இறுகப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தாள் கைகேயி.

திடீரென, வலப்பக்கமாக சற்று சாய்ந்தது தேர். காரணம் அறிய வலப்பக்க சக்கரத்தை எட்டிப் பார்த்த கைகேயி அதிர்ச்சி அடைந்தாள். கடையாணி கழன்றிருக்க… தேர்ச் சக்கரம், அச்சில் இருந்து மெள்ள நழுவிக் கொண்டிருந்தது! திகைத்தாள் கைகேயி. சட்டென்று, துர்வாசரது சாபம் அவள் நினைவுக்கு வர… தன் விரலை இரும்பாக மாற்றி அதையே கடையாணியாக்கி, தேர் குடை சாய்ந்து விடாமல் காப்பாற்றினாள். அதன் பின் நடந்த அன்றைய போரும் முடிவுக்கு வந்தது. தசரதர் அதில் பெரும் வெற்றி பெற்றார்.

வெற்றிக் களிப்பில் கைகேயியை இறுக அணைத்துக் கொண்டார் தசரதர். ”கைகேயி, நீ மட்டும் என்னுடன் வராமல் இருந்திருந்தால், இந்த வெற்றி கிடைத்திருக்காது. நானும் உயிருடன் இருந்திருக்க மாட்டேன். எல்லாவற்றுக்கும் நீயே மூல காரணம். உனக்கு ஏதாவது தர விரும்புகிறேன்… என்ன வேண்டும் கேள்!” என்றார்.

”ஸ்வாமி, தங்களின் அன்பும் அரவணைப்புமே போதும்!” என்றாள் கைகேயி.

”இல்லை… இரண்டு வரமாவது கேள். அப்போதுதான் எனக்கு திருப்தி!” – வற்புறுத்தினார் தசரதர்.

”சரி, உங்களுக்காக இரண்டு வரங் களை ஏற்கிறேன். ஆனால், அவற்றைத் தேவைப்படும்போது பெற்றுக் கொள் கிறேன்!” என்ற கைகேயி, தசரதரின் மார்பில் சாய்ந்து கொண்டாள். அவர்களைச் சுமந்தபடி அயோத்தி நோக்கி விரைந்தது அந்தத் தேர்.

பாவம் தசரதர்! கைகேயிக்கு தான் அளித்த வரங்களே, தனது உயிரைப் பறிக்கப் போகின்றன என்பதை, அப்போது அவர் அறிந்திருக்கவில்லை!

இந்தப் போரின் மூலம் தசரதனுடன் துவங்கிய விதியின் விளையாட்டு… ஸ்ரீராம பட்டா பிஷேகத்தை சீர்குலைத்ததுடன், தசரதனின் உயிரையும் பறித்த பிறகே ஓய்ந்தது!

கண்மணி ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்ய தசரதர் நாள் குறிக்க… அவர், வாக்களித்த இரு வரங் களை இப்போது தரும்படி கேட்டாள் கைகேயி. அதன்படி ஸ்ரீராமன் வனம் செல்ல… சோகம் தாளாமல் வானகம் சேர்ந்தார் தசரதர்!

– ஏப்ரல் 2008

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *