‘நேற்று’- என்று ஒன்று இருந்தது

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: February 15, 2012
பார்வையிட்டோர்: 14,229 
 
 

சென்னை பிராட்வேயில் ராஜா அண்ணாமலை மன்றம் அருகே ஷேர் ஆட்டோவிலிருந்து இறங்கிய நொடியில் என் செல்போன் ஒலித்தது. நம்பரைப் பார்த்தேன். குணசேகர்.

“என்ன மச்சி. இந்த வாட்டியும் லேட்டா?”- என்றான்.

“எல்லாரும் வந்தாச்சா?”

“நீயும் சையதும் தான் எப்பவும் லேட்டு மச்சான்.”

“பஸ் ஏறிட்டா அரை மணி நேரம்டா குணா. ஒரு தம்மை போட்டு ரெண்டாவத பத்த வைங்க வந்துருவேன்.”

“வீக் – என்ட கெடுத்துராம வந்து சேர்ந்தா சரி.”

செல்போனை அணைத்து பாக்கெட்டில் போட்டபடி ரோட்டைக் கடந்து பழைய திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்டுக்குள் நுழைந்தேன்.

கூரையில்லாத, வானம் பார்த்த பஸ் ஸ்டாண்டு. முனையில் ஒரு பங்க் கடையும்..பஸ் ஸ்டாண்டின் உள்வளைவில் பிளாட்பாரத் திண்டில் ஒரு நரிக்குறவர் குடும்பமும் அதன் பிரதான அடையாளம். நான் போக வேண்டிய இடம், தேனாம்பேட்டை சிக்னலருகே. எனவே கிளம்பும் நிலையில் எஞ்சின் உறுமலோடு நின்றிருந்த 18 A பஸ்ஸை நோக்கி நகர்ந்தேன்.

டிரைவர் சீட்டு காலியாக இருந்தது. முன்பக்கமாக உள்ளே ஏறினேன். அது மட்டும் தான் காலியாக இருந்தது. அடைசலாக இல்லாமல் ஆனால் ஸ்டாண்டிங்கில் பயணிகள் நிறைந்த பஸ். முன் வழியில் ஏறி..மனிதர்களை ஊடுருவி பின்பக்கம் வந்தேன். ஆண் ஸீட் வரிசையில், கடைசியிலிருந்து இரண்டு வரிசைக்கு முன்னாl ஒரு ஸீட் காலியாக இருந்தது.

‘யாராவது இடம் பிடித்து வைத்திருப்பார்கள் போல’- என்று நினைத்தபடி அந்த ஸீட்டை நெருங்கினேன். ஜன்னலோரத்தில் ஒரு பெரியவர் உட்கார்ந்திருந்தார். என்னை ஏறிட்டுப் பார்த்தார்.

“யாராவது வர்றாங்களா.?”- என்றேன் அவரிடம்.

“இல்ல சார்”- என்றார் சிரித்தபடி.

எனக்குக் கிடைத்த ஆச்சரியமான அந்த பதிலோடு, சுற்றியிருந்தவர்களை சந்தேகமாய் பார்த்தபடி தயக்கத்தோடு அந்த ஸீட்டில் உட்கார்ந்தும் விட்டேன். எல்லோரின் பார்வையும், இப்போது என் மீது.

அந்தப் பார்வைகளின் உறுத்தலில், சட்டென்று ஸீட்டுக்குக் கீழே குனிந்து பார்த்தேன். எவனாவது வாந்தியெடுத்துத் தொலைத்திருக்கிறானா.?

ஊஹூம்ம்.!! அப்படி எதுவும் இல்லை. சுத்தமாயிருந்தது.

“இன்னா சார். எதுனாச்சி கீழ போட்டீங்களா.சார்.?”

பக்கத்திலிருந்த பெரியவரின் குரல். கூடவே அவரிடமிருந்து லேசான, மிக லேசான சாராய வாடை.

சட்டென்று நிமிர்ந்து அவரைப் பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தேன். ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை நினைவுப்படுத்தும் தலைமுடி. கருப்பு – வெள்ளை – சாம்பல் கலந்த நிறம். காற்றுக்குக் கட்டுப்படாமல் கலைந்துக் கிடந்தது. அதிலிருந்து ஒரு சிக்கு வாடை. அழுக்கான உடை. பழுப்பு நிறத்தில் மடியில் ஒரு சிறிய துணி மூட்டை. முகத்தில் ஏகப்பட்ட சுருக்கங்கள். மோவாயிலும் மீசையிலும்.’இருந்துவிட்டுப் போகட்டுமே’- என்கிற தினுசில் கொஞ்சம் மயிர் பிசிறுகள். பொக்கை வாயில் பள்ளமான புன்னகை. கண்களில் ஒளி.

இந்த ஸீட்டை, யாரும் உட்காராமல் விட்டு வைத்த காரணம் புரிந்தது. இப்போது, மற்றவர்கள் பார்வையில் ஒரு ஆர்வம். அடுத்து நானும் எழுந்து நிற்கப் போகிறேன் என்ற நக்கலான எதிர்பார்ப்பு.

ஆனால் எனக்கு அவருடைய கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் போலிருந்தது. “கீழ எதையும் போடலங்கைய்யா. பஸ்ஸ சீக்கிரம் எடுத்துட்டா நல்லாருக்கும். கொஞ்சம் காத்தாவது வரும். புழுக்கமா இருக்குல்ல.?”

அவர் சிரித்தார். தலையசைத்துக் கொண்டார்.

“எடுத்துருவான். டீ காபி சாப்ட போயிருப்பான்.”

நான் ‘உஸ்.உஸ்.’- என்று ஊதிக்கொண்டேன். கசகசவென்று இருந்தது.

“உங்களல்லாம் பார்த்தா பாவமா இருக்கே சார்.”

திடீரென்று அவர் அப்படி சொன்னதில்.. எனக்கு ஒன்றும் புரியவில்லை. சாராய வாடை. இன்னும் நெருக்கத்தில் கப்பென்று மூக்கை நெருடி அந்தப் பக்கம் ஓடியது.. ஒயின் ஷாப் வாடை ஏற்கனவே பழக்கம் தான் என்பதால் அப்படி ஒன்றும் இந்த வாடை ஒரு இம்சையாகத் தோன்றவில்லை. எனவே நிதானமாக அவரை திருப்பிக் கேட்டேன்.

“ஏன் அப்படி சொல்றீங்க.?”

“இவ்ளோ கசகசன்னு கீது. இப்டி இறுக்கமா உடுப்ப போட்டுக்கினு. எப்டி ஆபீஸ் போய் வர்றீங்களோ.? பேஜாரா இல்லீயா சார்.?”

அவருடைய வெகுளித்தனமான விசாரிப்பில் எனக்கு சிரிப்பு வந்தது.

“என்ன பண்றது.பழகிட்டோம். வேற வழியில்ல.”

என் தொடைகளை இறுக்கிப் பிடித்திருந்த ஜீன்ஸ் பேண்ட்டின் சுருக்கங்களை நீவி விட்டுக் கொண்டேன்.

அவருடைய ஏழ்மையான தோற்றமும், சுத்தமின்மையும் இத்தனை பயணிகளிடமிருந்து அவரை அன்னியப்படுத்துகிறதா? ஏறக்குறைய.எல்லாருமே களைத்தும், காலையில் வீட்டிலிருந்து புறப்பட்ட புத்துணர்ச்சியை இழந்தும் தானே இருக்கிறார்கள்? ஆனாலும் மனிதர்கள்.!

பஸ் கிளம்பியது. பெரியவர் விடாமல் தன் பேச்சைத் தொடர்ந்தார். குரலில் வயோதிக நடுக்கம் இருந்தது. இருந்தாலும் குரலில் மெலிதாக ஒரு ‘கணீர்’தன்மை. அவருடைய சிரிப்பும், அந்த சாராய வாடை கலந்த பேச்சும் இத்தனை நேரம் பழகிவிட்டது.

18 A – பஸ் ஸ்டாண்டிலிருந்து வெளியேறி, அண்ணாமலை மன்ற சிக்னலில் வளைந்து, கோட்டை ரயில் நிலைய பயணிகள் நடைமேடையை ஒட்டின பாதையில் டெண்ட்டல் ஆஸ்பத்திரியின் எதிர் சாரியில் கடந்த போது சாலை விளக்குகள் மஞ்சளாகி விட்டிருந்தன.

மீண்டுமொரு சிக்னல். பச்சை – ஆம்ப்பர் – சிகப்பு. வித வித வாகனங்கள். வித வித ஹாரன் ஒலிகள். நகரம் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது. அதுவும் சனிக்கிழமை மாலை நேர ‘பீக்-அவர்’. என் செல்போன் மீண்டும் ஒலித்தது. குணசேகர் தான்.

“என்ன மச்சி எங்க இருக்க.?”

“பஸ் எடுத்துட்டாண்டா .வந்துருவேன். சையதுக்கு கால் போட்டியா.?”

“அவனும் பஸ்ல தான் வந்துகிட்டு இருக்கான். ஏண்டா தெரியாம தான் கேக்குறேன். பைக்கை ரெண்டு பேருமே வீட்டுல தொடச்சி தொடச்சி வச்சீப்பீங்களா.? ஓட்ட மாட்டீங்களா.? ஏண்டா கொல்றீங்க.?”

“டிராபிக் ஏரியாடா. சனிக்கிழமை மச்சான். உயிர் போயிரும். மூட் அவுட் ஆயிரும். புரிஞ்சுக்கடா.. ஜஸ்ட் ட்வெண்ட்டி மினிட்ஸ் மச்சி.”

“வந்து தொலை.”

சிரித்தபடி செல்போனை பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன். வாராவாரம் சனிக்கிழமை மாலைகள் எங்களுக்கானது..கல்லூரி காலங்கள் முடிந்த பின்பும் ஆளுக்கொரு வேலையில் உட்கார்ந்த பிறகும் தொடரும் சந்திப்பு. கல்யாணம் முடிந்தாலும் சந்திப்பு தொடரவேண்டும் என்று தீர்மானித்திருக்கிறோம். இதில் பிரபு, குணசேகர், நந்து, தரணி, பாஸ்கர், ரஞ்சித், மௌரியா ஏழு பேரும் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டில் குடியிருப்பு. நானும் சையதும் தான் தொலைவிலிருந்து வருபவர்கள். நான் வண்ணாரப்பேட்டை. சையது விருகம்பாக்கம்.

எனக்கு பஸ் பயணம். பால்ய சிநேகம் மிகவும் பிடித்த விஷயம். நிறைய மனிதர்கள். நிறைய சுவாரசியங்கள். காலப்போக்கில் வாழ்வின் அவசியங்கள் என்ற பேரில் அதை நான் முற்றிலும் இழந்துவிட விரும்பவில்லை. அது குணாவுக்கோ இன்ன பிற நண்பர்களுக்கோ புரியாது. புரிய வைக்க நான் முயன்றதும் கிடையாது.

“செல்போனுங்களா சார்.? பத்திரமா வையிங்க சார்.”

பெரியவர் என் உரையாடலை கவனித்திருக்கிறார் என்பதை அவர் சொன்னதிலிருந்து புரிந்து கொண்டேன்.

“பத்திரமா தான் வச்சிருக்கேன்.”

“இத்துனூண்டா எலிக்குஞ்சு மாரி கீது. அதுல பேசிக்குறீங்க. அதிசயமா இருக்கு சார்”- வியப்பில் அவர் முகம் பிராகசித்தது.

“விஞ்ஞானம் பெரியவரே.! விஞ்ஞானம்.! நாடு முன்னேறுதுல.? புதுசு புதுசா கண்டுபிடிச்சா தானே எல்லாமே ஈஸியா இருக்கும்.?”

புரிந்தது போல தலை ஆட்டிக்கொண்டார்.

“ரெண்டு வாரத்துக்கு முந்தி ஒங்கள மாரி ஒரு சாரு. இத மாரியே ஒரு போனை பஸ்சுல வுட்டுட்டு அவசரமா ஸ்டாப்பு வர்றதுக்குள்ள சிக்னல்ல எறங்கிட்டாரு. நான் எடுத்து வச்சிக்கினேன்.

அத பாத்துட்டு இன்னொருத்தரு சொன்னாரு ‘உனக்கு லக்கு தான்னு’. இன்னா லக்கு.? பாவம்.! அப்புறம் எனக்கு ஒரு ஐடியா தோணிச்சி. ஒரு வாரம் பூரா அதே டைமுக்கு டெய்லி அதே பஸ்சுல ஏறி ஒக்காந்தேன். செல்போனை தொலைச்சவரு அதத் தேடிக்கினு வருவாரு. வந்தா குடுத்திரலாம்னு. ப்ச்.! ஆனா ஆளு வரல சார்.”

அவர் முகம் இதை சொல்லும்போது சோகமாகியது. நான் அவரை ஆச்சரியமாக பார்த்தபடியே இருந்தேன். இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு மனிதர்.!

“அப்புறம் என்ன பண்ணீங்க அந்த போனை.?”

“அத வச்சிக்கினு நான் இன்னா பண்றது.? என் மவன்கிட்ட குடுத்துட்டேன். அவன் ‘ஏதுன்னான்.?’ இந்த மாரின்னு விஷயத்தை சொன்னேன். சரி வுடுன்னான். வுட்டேன்.”- சிரித்தார்.

“கரக்ட் தான்.”- நானும் சிரித்தேன்.

“எத்தனை பசங்க உங்களுக்கு.?”- என்றேன் தொடர்ந்து.

“பையன் ஒன்னு. பொண்ணு ஒன்னு. பையன் டாக்சி ஓட்டுறான். பொண்ண மொகப்பேறுல கட்டி குடுத்துட்டேன். இப்போ மாசமா கீறா. மாப்ள சொந்தமா அச்சாபீஸ் வச்சிக்கீறான்.”

“நீங்க யாரோட தங்கியிருக்கீங்க.?”

“மவனோட தான். மருமக ரொம்ப மருவாதியான பொண்ணு சார். நல்லா கவனிச்சிப்பா. மவனுக்கு மூணு வயசுல புள்ள கீறான்.. ஷோக்காருப்பான்.. நான் வூட்டுக்குள்ள பூந்ததுமே, என் சொக்காய புட்சி, ஏறி கழுத்த கட்டிக்கினு தொங்குவான்.”- பெரியவருக்கு தன் பேரனைப் பற்றி சொல்ல சொல்ல குரலில் உற்சாகம் பீறிட்டது.

“உங்க வொய்ப்.?”

“கீறா. அவளும் என்கூட தான் கீறா. சொம்மா இல்லாம அக்கம்பக்கத்துல வூட்டு வேலக்கி போவுறா. ‘ஏன்டினா.?’- ’கையி காலு நல்லாருக்க சொல்லோ சொம்மா கெடக்க சொல்றியா?’-ம்பா. மருமவளுக்கு புடிக்கல. ‘வேனாத்தங்கறா.’ கெழவி கேக்காது. சரி தான்னு நானும் வுட்டேன்.”

பெரியவரிடமிருந்து சிரிப்பு. கண்கள் இடுங்கிய சிரிப்பு.

“நீங்க என்ன வொர்க் பண்ணுறீங்க.?”

“நான் மின்ட்ல வேல செய்யுறேன் சார். இப்போ வேல முடிஞ்சி வூட்டுக்கு போயிட்ருக்கேன்.”

“வீடு எங்க இருக்கு.?

“தாம்பரம் சார்.”

“அவ்ளோ தூரத்துல இருந்தா வந்து போறீங்க.?

“மொதல்ல மின்ட்ல தான் இருந்தேன். இப்போ கீற வெலவாசிக்கு கட்டுபடி ஆவுல. அதான் அங்க போயிட்டன்.”

“மின்ட்ல கடை எங்க.?”

“கிரவுன் தியேட்டரு பக்கமா. பாத்திரத்துக்கு பாலீஷ் போடற கட சார். முப்பத்தஞ்சி வருஷமாச்சி வந்து. கடக்கி பக்கத்துல தான் வூடும் இருந்துச்சி.”

“வாட்.? முப்பத்தஞ்சி வருஷமா அதே கடையா.? ஐ மீன் ஒரே கடையிலா வேலை செய்றீங்க.?

என்னால் நம்ப முடியவில்லை. ஆனால் பொக்கை வாய் சிரித்தது.

“ஆமா சார். என் மொதலாளி தங்கமானவரு. நான் மெட்ராசுக்கு வந்த புதுசுல, எனக்கு யாரயும் தெரியாது. ஒரு எடமும் புரியாது. வேல கேட்டு வந்தேன். சேத்துக்கினாரு. கூடவே தொழில் கத்துக் குடுத்து நல்லா பாத்துக்கினாரு. இப்பவும் அதட்டி தான் பேசுவாரு. நல்ல மனுஷன்.”

எனக்கு ஆச்சரியங்களை அள்ளி வீசிக்கொண்டே இருந்தார் அந்த மனிதர். முப்பத்தஞ்சு வருடங்கள். கிட்டத்தட்ட என் வயது. நாங்களெல்லாம் அடுத்த பத்தாண்டுகளுக்கான எதிர்காலத்தை திட்டமிடுகிறோம். தனியாக ஒரு சாப்ட்வேர் கம்ப்பெனி என்று கனவு வைத்திருக்கிறோம்.

ஒரு மனிதன். ஒரே கடையில் கடந்த முப்பத்தஞ்சு வருடங்கள் தொழிலாளியாகவே தன் காலத்தை கழித்திருக்கிறான். தலைமுறைகள் மாறியது பற்றிய கவலை அவர் பார்வையில் வேறாக இருப்பதை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. மறுக்கவும் முடியவில்லை.

என்னைக் குழப்பிக் கொண்டிருக்கிறார் இந்த மனிதர்.

“பெரியவரே. உங்க பேரு.என்ன.?”

“முருகேசன்ங்க.”

“என்ன வயசாகுது உங்களுக்கு.?”

“கணக்கு தெரில சார். லேட்டா தான் கல்யாணம் கட்னேன்.. மவன் பொறந்தே முப்பது வருஷத்துக்கு மேல ஓடிருச்சே.. அண்ணாதொர தனிக் கட்சி ஆரம்பிச்சாரே அப்போல்லாம்.. கல்யாணம் கட்ல நான். வண்ணாரப்பேட்ட ராபின்சன் பார்க்ல தான தலைவருங்க கூடுவாங்கோ. எப்போ பாரு மேடை பேச்சு தான். ஜே ஜேன்னு ஜனம் கூடும். நான் அண்ணாதொர மாதிரியே பேசிக் காட்டுவேன். ஜோரா பேசுறடா. நீ-ம்பாரு மொதலாளி.”

ஒரு அட்டகாச சிரிப்பு. பஸ் சென்ட்ரல் கடந்து, பழைய மத்திய சிறைச்சாலைப் பாலத்தைக் கடந்து சிம்ப்ஸன் சிக்னலில் நின்றது.

“நானும் நீங்க வேலைப் பார்க்குற ஏரியா தான் பெரியவரே.! ஆனா. மின்ட் பிரிட்ஜூக்கு அந்த பக்கம். சிமிட்ரி ரோடு.”

“ஹ.ஹ.ஹ.ஹ.!”

குழந்தைத்தனமான சந்தோஷ சிரிப்பு ஒன்று அவரிடமிருந்து வெளிப்பட்டது.

“அப்போ நம்ம கடப்பக்கம் வந்திருப்பீங்களே..சார்?”

“இருக்கலாம். எனக்குத் தெரியல. கிரவுன் தியேட்டர்ல படம் பார்க்க வருவேன்.. முன்ன காலேஜ்ல படிக்கும்போது கிரவுன் தியேட்டர் எதிரே பிளாட்பாரக் கடைல.. பழைய புக்ஸ் வாங்க வருவேன்.. இப்போ அங்க புக் கடை இல்லை.”

“ஆமா. ரத்னம் கட அது.. ரொம்ப வருஷம் வச்சிக்கினுருந்தான். இப்போ கட்டுப்படி ஆவுலன்னு தூக்கிட்டான். எங்க பாத்திர கட. மெயின்ல இல்ல சந்துல கீது..”

“அடுத்த முறை கட்டாயம் தேடி வர்றேன்.”

“வாங்க.வாங்க. எங்க மொதலாளிய பாத்தீங்கன்னா ரொம்ப குஷியாயிடுவாரு.”

“நிச்சயமா வருவேன்.”

பஸ் சிக்னலில் இருந்து புறப்பட்டு பெரியார் சிலையருகே டிராப்பிக்கில் நகர்ந்தது.

பெரியவர் பெரியார் சிலையைத் திரும்பிப் பார்த்தார். நான். இடது பக்கம் அரசினர் தோட்டத்து வளாகத்தில் மிக பிரம்மாண்டமாய் ரெடியாகிக் கொண்டிருக்கும் புதிய சட்டமன்றக் கட்டிடத்தை பார்த்தேன்.

பஸ்ஸில் இருக்கும் அணைத்து பயணிகளுமே.. குனிந்து குனிந்து ஒரு அதிசியத்தை பார்ப்பது போல ஜன்னல் வழியே நோட்டம் விட்டார்கள். கிடுகிடு என்று கம்ப்யூட்டர் கிராபிக்சில் உருவாவதை போல ஒரு சில மாதங்களில் பார்வைக்கு முளைத்த அந்தக் கட்டிடம். அண்ணா சாலையின் ரெகுலர் பயணிகளுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் ஒரு ஆச்சரியம் தான்.

“கரெக்டா தான் சொன்னாரு..”

“யாரு.?”- எனக்குப் புரியவில்லை.

“ராமசாமி அய்யா.”

எனக்கு தாமதமாக உரைத்தது.

“பெரியாரா.?”

“ஆமா சார். விஞ்ஞானம் வளர வளர மனுசன் முன்னேறுவான். கையில புடிக்க முடியாது. வெங்காயம்-பாரு”

“ஆமா.ஆமா.. உங்க காலத்துல நீங்கல்லாம் கொடுத்து வச்சவங்கல்ல.? அவர் பேச்செல்லாம் நேருல கேட்டுருப்பீங்க. எங்களுக்கு புக்கு தான் வழி.”

“ஒரே ஊரு தான் சார்.”

“என்ன சொல்லுறீங்க.?”

“ஈரோட்ல அவரு இருந்த தெருவுல தான் என் வூடு. அப்போ நான் தம்மாத்தூண்டு தான் இருப்பன். இங்க வாடா வெங்காயம்பாரு. ஆளு சும்மா ஜம்முன்னு இருப்பாரு சார்”

எனக்கு நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது.

“அவரு எவ்ளோ நல்லது செஞ்சாரு.. எவ்ளோ போராட்னாரு. கடசீல இங்க தூக்கியாந்து செலயா ஒக்கார வச்சி கருப்பு பெயிண்ட்ட அடிச்சி வுட்டுட்டானுங்கோ. பஸ்சுங்க பொகை கக்கிக்கினு போவுது. ஜனங்கல்லாம் ஆபீஸ் போய்க்கினேருக்குது. காலம் ஓடிப்பூட்சி.”

நான் அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தேன். செல்போன் ஒலித்தது. எடுத்தேன்.

“குணா.! மவுண்ட் ரோடு கிராஸ் பண்றேன்.மச்சி..ஓ.! அப்படியா.? சையதும் வந்துட்டானா.? ஓகே.ஓகே.”

செல்போன் அணைந்தது.

“போன்னு வந்துக்கினே இருக்குதுங்களே சார்.! எங்க வேல பாக்குறீங்க.?

சிஸ்டம் அனலிஸ்ட் என்பதை இவருக்கு எப்படி விளக்குவது.என்று ஒரு நொடி குழம்பினேன்.

“வெளிநாட்டு கம்பெனிகளுக்கு இங்கருந்தே வேலை செஞ்சி தர்றோம். ஒரு டீமா வொர்க் பண்றோம். நல்ல சம்பளம்.”

புரிந்தது போல மையமாகத் தலையசைத்துக் கொண்டார்.

“மச்சினு சொன்னீங்களே..யாரு..சார்.? சிநேகிதக்காரரா?”- கண்கள் இடுங்க சிரித்தபடி கேட்டார்.

“ஆமா.”

“என் மவன் என்ன ‘மாமா’னு தான் சொல்லுவான்.”

எனக்கு வேடிக்கையாக இருந்தது. மெட்ராஸ் பாஷையில் ‘மாமா’என்கிற விளிப்பு அன்பின் வெளிப்பாடு. நண்பர்களுக்கிடையே சகஜம். இது எனக்கு தெரியும்.

ஆனால் தகப்பனையே.. அப்படி அழைப்பது என்பது. நான் புன்னகைத்தேன். உறவையே கேள்விக்குள்ளாக்கும் ‘அன்பு’ அவர் சொல்ல வருவது.

“கலக்சன் நல்லாருந்தா.’ தண்ணீ சாப்பிடறீயா மாமா’ம்பான். எனக்கு சீமை சரக்கு ஒத்துக்காது. கையில துட்டு தந்துருவான். நமக்கு எப்பவுமே சாராயம் தான் லாயக்கு. மருமவ தான் திட்டிக்கினே இருக்கும். புடிக்காது அதுக்கு.. ஒடம்ப ஏன் கெடுத்துக்கறனு கத்தும். ஆனா.புருஷன ஒன்னும் சொல்லாது.. சின்ன வயசுல்ல.? அதான். ஆனா பாசம் ஜாஸ்தி. என் மேல.எனக்குன்னு தனியா கோழிக் கறி வறுத்து வச்சிரும்.”

சொல்லும்போதே அவர் கண்கள் மின்னியது. நான் அமைதியாகிவிட்டேன். பஸ் அண்ணா மேம்பாலத்தில் மெதுவாக ஊர்ந்துக் கொண்டிருந்தது. அவர் உற்சாகமாக பேசிக் கொண்டிருந்தார்.

“என் மவன் கல்யாணத்துக்கு என் மொதலாளியும் நானும் தான் எங்க பாத்திர கடயிலருந்து கெளம்பனோம். ஏற்பாடெல்லாம் அவரு தான் செஞ்சாரு. திருவொத்தியூர் கோயில்ல கல்யாணம். கெளம்பும் போதே சொன்னாரு. ’டேய்.! மவன் கல்யாணத்துக்கே மொய் எழுதிராத. நீ ஏடாகூடமான ஆளு’னு. தாலி கட்டிட்டு என் மவனும் மருமவளும் மொதலாளி கால்ல வுளுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கினு என் கால்ல வுளுந்து எழுந்தாங்கோ. டக்குனு அவங் கையில ஐநூறு ரூபாவ திணிச்சிட்டேன். மொதலாளி திட்னாரு. ‘என்னடானாரு?’ எனக்கோ ஒரே சிரிப்பு. மவனும் முழிக்கறான் மருமவளும் முழிக்குது.”

“ஆமா.ஏன் அப்படி செஞ்சீங்க.?”

“அவன் என்னை ’மாமா’னு தான கூப்புடறான். அதான். மருமவனுக்கு மாமனோட மொத சீர்னு சொன்னேன்.”

சொல்லிவிட்டு அட்டகாசமாக சிரித்தார். என்னாலும் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பஸ்ஸின் இரைச்சலுக்கு எதிராக எங்கள் உரையாடல் சத்தமாக இருந்ததால் எல்லோரின் கவனமும் இந்தப்பக்கம் குவிந்திருந்தது. என் மனசுக்குள் பலவித எண்ணங்கள் முன்னும் பின்னும் கலைந்து மோதின.

பஸ் – டி.எம்.எஸ்ஸில் டிக்கட் பரிசோதனைக்காக ஸ்டாப் ஓரமாக நிறுத்தப்பட்டது. ஏனோ மனம் நண்பர்களை நிராகரித்துத் தனிமை நாடியது.

அடுத்த ஸ்டாப்.. தேனாம்பேட்டை சிக்னல். சையதும் இந்நேரம் வந்து சேர்ந்திருப்பான். நண்பர்கள் ஆவலோடு எனக்காகக் காத்திருப்பார்கள். நான் என் முடிவை மாற்றிக்கொண்டேன்.

“நான் இறங்குறேன் பெரியவரே.. மின்ட் வரும்போது உங்கள எப்படியும் தேடி கண்டுபுடிக்கிறேன். வரட்டுமா.?”

“சரிங்க சார். உங்க போன் பத்திரமா இருக்கான்னு பாத்துக்கோங்க.”- என்று சிரித்தார்.

பதிலுக்கு புன்னகைத்தபடி பாக்கெட்டைத் தொட்டுக் காட்டினேன். “இருக்கு” என்றேன்.

கண்கள் இடுங்க சிரித்தார். பஸ்சிலிருந்து இறங்கி செக்கிங் இன்ஸ்பெக்டரிடம் என் பஸ் டிக்கட்டை கொடுத்துவிட்டு, பஸ்ஸை சுற்றிக் கொண்டு நடந்தேன். ஜன்னலோரமாக உட்கார்ந்திருந்த அவருடைய பார்வை.

தொலைவில் ஒரு உயரமான கட்டிட மேற்தளத்தில் நிறுவப்பட்டிருந்த அகலமான விளம்பர போர்டில் நிலைக் குத்தியிருந்தது.

நான் சுரங்கப்பாதையில் இறங்கி மறுபுறம் சாலையில் ஏறி இந்தப்பக்கம் பார்த்தேன். பஸ் போய்விட்டிருந்தது. தலைத் திருப்பி அந்த விளம்பரப் போர்டை கவனித்தேன். டாப்சும் டைட்சும் அணிந்த கவர்ச்சியான மாடல் பெண்ணின் கையில் ஒரு தனியார் நிறுவனத்தின் நவீன செல்போன் விளம்பரப்படுத்தப் படுத்தப்பட்டிருக்கிறது.. அவள் தன் அழகான புன்னகையால்.ஒயிலாக தலை சாய்த்தபடி இந்த நகரத்து மனிதர்கள். அத்தனை பேரையும் சலிக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

மீண்டும் என் செல்போன் ஒலித்தது.

“என்னடா.?”- என்று ஆரம்பித்த குணாவை இடையில் வெட்டி..

“ஸாரி மச்சி..தலைவலிக்குது.. நான் பாதியிலயே கிளம்புறேன். நீங்க கண்டினியூ பண்ணுங்க.. நாம நெக்ஸ்ட் வீக் மீட் பண்ணலாம்.”

அவனுடைய பதிலுக்கு காத்திருக்காமல் போனை துண்டித்தேன். சுவிட்ச் ஆப் செய்து விட்டு பஸ் ஸ்டாப்புக்கு பின்புறம் இருந்த பெட்டிக் கடையில் ஒரு சிகரட் வாங்கி பற்றவைத்தேன். கொஞ்சம் வெள்ளை தாள்கள் வாங்கிக் கொண்டேன். சிகரட்டை ஊதி பாதியில் எறிந்துவிட்டு பஸ் ஸ்டாப்பிலிருந்த சிமன்ட் திண்டில் உட்கார்ந்து எழுதத் தொடங்கினேன்.

முதல் பக்கம் முழுக்க குறிப்புகளும் இரண்டாம் பக்கத்தில்.. ஒரு கதைக்கான வடிவமும் தொடங்கியிருந்தது. பிராட்வேக்கு போகும் பஸ் ஒன்று வரவே.. ஓடி சென்று ஏறிக் கொண்டேன். எனக்கு உடனே வீட்டுக்கு போயாக வேண்டும். இதை அப்படியே எழுதியாக வேண்டும். மனதின் எண்ண அலைகள்.. கண்டதையும் யோசித்தபடி விரைந்தது. பஸ் அதே பெரியார் சிலையையும் புதிய சட்ட மன்றக் கட்டிடத்தையும் கடக்கும்போது அந்தப் பெரியவரின் இடுங்கிய கண்களும் சிரிப்பும் மனதுக்குள் ஒரு முறை வந்து போனது.

Print Friendly, PDF & Email

1 thought on “‘நேற்று’- என்று ஒன்று இருந்தது

  1. அருமையான கதை மனதிற்கு இதமான வாசிப்பு .மிகவும் நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *