நேர்மைக்கு விலையில்லை

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு:  
கதைப்பதிவு: October 29, 2020
பார்வையிட்டோர்: 24,419 
 

பள்ளி விட்டு வந்ததும் புத்தகப்பையை ஒருபுறமும் ஷு-சாக்ஸ் ஒருபுறமும் என தூக்கி எறிந்து விட்டு முகத்தை “உர்” என்று தூக்கிவைத்தபடி கோபமாக பெட்ரூமினுள் நுழைந்தாள் சஞ்சனா…

வாசற்கதவை லாக் செய்து விட்டு கிச்சனின் உள்ளே வந்து பாலை காய்ச்சி ஒரு டம்ளரில் ஊற்றி சஞ்சனாவிடம் நீட்டினாள் சவீதா..கோபம் குறையாதவளாக முகத்தை வேறுபுறம் திருப்பி கொண்டாள் சஞ்சு…

சரி அவளே அடங்கட்டுமென பாலை மேஜை மீது வைத்து விட்டு கூடவே திண்பண்டங்கள் சிலதையும் வைத்து விட்டு வெளியேறி தன் வேலைகளை தொடர்ந்தாள் சவீதா…

ஒரு மணிநேரம் கழித்து வந்தபோதும் பால் அப்படியே கிடந்தது..தன்னை நிமிர்ந்தே பார்க்காமல் ஹோம்ஹோர்க் செய்து கொண்டிருந்தவள் மீது கோபமாக வந்தாலும் அடக்கி கொண்டாள் சவீதா….இரண்டுங்கெட்டான் வயது…அப்படிதான் இருக்கும்… அதட்டி மிரட்டினால் திமிறி ஓடும் வயது…பக்குவமாக தான் கையாளவேண்டும் இவளை…

சஞ்சு என மெதுவாக அழைக்க…என்கிட்ட பேசாதே போ..என கத்தினாள் மிகுந்த எரிச்சலுடன்..உனக்கு என் மேலே அக்கறையுமில்லை..பாசமுமில்லை போ…என கத்தினாள்… எதுவுமே பேசாமல் அமைதியாக வெளியேறினாள் சவீதா

இரவு வேலையை முடித்து அலுப்புடன் வீடு வந்த சுமேஷ்…சவீ காபி தாயேன் தலையை வலிக்குது ….

“த்தோ தரேன்ங்க.”..ஏன் என்ன ஆச்சு என்றாள்…

எக்கசக்கமான வேலைம்மா ஆபிஸில் ப்ரமோஷன் டைம் வேற நிறைய போட்டி உழைச்சு தானே ஆகணும்… வேறவழியில்லை..என்றார் அயர்ச்சியுடன்…சுமேஷ் முன்ணனி சாப்ட்வேர் அலுவலகத்தில் பல வருடங்களாக வேலை செய்பவர்…கிரிடிகல் ரீசோர்ஸ் என பலரின் பாராட்டுதல்களை பெற்றவர்..இந்த வருடத்தின் சிறந்த எம்ப்ளாயி என்ற சான்றிதழை இருமுறை பெற்றவர்…

காபியை குடித்தவாறு ..சஞ்சனா எங்கே என்றபடி பெட்ரூமில் நுழைந்து …ஏய் சஞ்சு என்ன பண்ணிட்டிருக்க என்றார் அன்புடன்…

ஹோம்ஒர்க் பண்றேன் ப்பா…நீங்க எப்ப வந்தீங்க….என்ற சஞ்சனாவிற்கு அப்பாவென்றால் உயிர்..

அவளின் முகவாட்டத்தை கண்டும் காணாதவர் போல. இப்ப தாண்டா வந்தேன் …நீ எழுதிட்ரு…தலையை வலிக்குது..காபி குடிச்சி ரெஸ்ட் எடுக்குறேன் என அடுத்த அறையினுள் நுழைந்தார்..

காபியுடன் வந்தவளிடம் .ஏன் சவீ உன் பொண்ணு உம்முன்னு இருக்கா….என்ன விஷயம்…

அவளுக்கும்..அவ பிரண்ட் திவ்யாவிற்கு எதுக்கெடுத்தாலும். போட்டி தான்…இந்த முறை ஸ்கூலில் ஒரு ஓவிய போட்டி நடந்தது…அதற்கான பொறுப்பை என் பிரண்ட் மஞ்சு தான் கவனிக்குறா….அவகிட்ட சொல்லி மறைமுகமாக இவளுக்கு சிபாரிசு பண்ண சொன்னா..நான் செய்யலைன்னு கோபம்..இப்ப திவ்யா முதல்பரிசு வாங்கிட்டா…இவளுக்கு பரிசு கிடைக்கல அந்த கோபம் தான்…அவ சொல்வதற்காக இதை செய்தால் அது என் ஆசிரியர் பணிக்கே அவமானம் சுமேஷ்…ஆக்சுவலா திவ்யா ப்ரமாதமா ஓவியம் வரையுறா…நம்ம சஞ்சனாவை விட…இவளுக்கு எப்படி பரிசு தர முடியும்… இவளுக்கு அது புரிய வேண்டாமா…

சரி விடு சவீ..சின்ன பொண்ணு தானே…எடுத்து சொன்னா புரிஞ்சிக்குவா ..நாளைக்கு நான் பேசுறேன்..ப்ரீயா விடு…

என்ன சின்ன பொண்ணு ..பதினைந்து வயசாகுது..நீங்க செல்லம் குடுத்து கெடுக்கறீங்க..என் பேச்சை கேட்கவே மாட்டேங்குறா ..என அலுத்து கொண்டாள்…நல்லது எது கெட்டது எதுன்னு நாம தான் அவளுக்கு புரிய வைக்கணும். என்னவோ போங்க என சொல்லியவாறு கிச்சனில் நுழைந்தாள்.

இரவு உணவை சஞ்சனா படித்து கொண்டிருந்த மேஜை மேல் வைத்து விட்டு ஏதும் பேசாமல் திரும்பினாள் சவீதா.

காலையில் எழுந்ததும் கூட கோபம் குறையாமலே சஞ்சனா பள்ளிக்கு கிளம்பினாள்…சஞ்சனா படிக்கும் பள்ளியில் தான் அம்மா சவீதாவும் ஆசிரியராக வேலை பார்க்கிறாள்…இருவரும் போகும்போதும் கூட பேசிக்கொள்ளவேயில்லை…

மாலை சீக்கிரமே வீடு திரும்பிய சுமேஷ் மிகவும் டென்ஷனாக இருந்தார். சஞ்சனா சோபாவில் அமர்ந்து டிவி பார்த்து கொண்டிருந்தாள். சமையறையில் வேலையை முடித்து ஹாலுக்கு வந்த சவீதா…சோபாவில் தலைசாய்ந்திருந்த கணவனை பார்த்து..காபி..சாப்பிடுறீங்களா…என கேட்டாள்…

ம்…என்றவருக்கு காபி கொடுத்து…அவரே சொல்லட்டுமென காத்திருந்தாள்…

சவீ…அந்த ப்ரமோஷன் விஷயமா நேத்தைக்கு சொல்லியிருந்தேன்ல . நான் இந்த ஆபிஸ்காக எவ்வளவு உழைச்சிருப்பேன் தெரியுமா..ராத்திரி பகல்னு பாக்காம உழைச்சிருந்தேன் சவீ…ஆனா போன வருஷம் ஜாயின் பண்ண சுந்தர் மேனேஜரோட சொந்தகாரன்ற ஒரே காரணத்துக்காக ப்ரமோஷன் வாங்கிட்டான்…எனக்கு கிடைக்கலை சவீ…அது எனக்கு கிடைக்குலைங்குறதை விட தகுதியும் திறமையும் இல்லாத இன்னொருத்தன் அதை சிபாரிசு மூலமாக வாங்குவதை என்னால் ஜீரணிக்கவே முடியலை சவீ…என புலம்பினான்…

சரி விடுங்க சுமேஷ்..அடுத்த வருஷம் பாத்துக்கலாம்…

அப்ப நேர்மைக்கும் உழைப்புக்கும் எந்த மரியாதையுமே கிடையாதா? சவீ..ரொம்ப வருத்தமாக இருக்கு ..

கவலைபடாதீங்க சுமேஷ்… நம் உழைப்பிற்கேற்ற பலன் நிச்சயம் ஒருநாள் கிடைக்கும்…டிபன் ரெடி பண்றேன் சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க…வீணா மனசை போட்டு குழப்பிக்காதீங்க….நேர்மைக்கென ஒரு மரியாதை நிச்சயம் உண்டு ..மனசை தளர விடாதீங்க…

சமையலறையில் டிபனை ரெடி பண்ணி சஞ்சனாவின் ரூமின் மேஜை மேல் வைக்க போனவளிடம் …அம்மா நான் ஹாலிலேயே வந்து சாப்பிடுறேன் என்றாள் சஞ்சனா…

டைனிங்டேபிளில் எதுவும் பேசாமல் டிபனை சாப்பிட்ட சுமேஷை கண்டு சவீதாவிற்கு மனதுக்குள் கஷ்டமாக இருந்தது…சஞ்சனாவிற்கும் தன் அப்பாவை அப்படி பார்க்கவே பிடிக்கவில்லை…

அப்பாவின் மூடை மாற்ற ஸ்கூலில் நடந்த ஏதேதோ விஷயங்களை சுவராஸ்யமாக சொல்லி கொண்டேயிருந்தாள் சஞ்சனா.. ஆனால் அதை சுவராஸ்யமற்று கேட்டு கொண்டிருந்தார் சுமேஷ்….

அனைவரும் சாப்பிட்டு முடித்து கிச்சனை கிளின் செய்து பாலை காய்ச்சி சுமேஷ்க்கு ஒரு டம்ளர் கொடுத்து விட்டு மற்றொரு டம்ளரை சஞ்சனாவிடம் கொடுத்தவளிடம்..சாரி அம்மா…என்றாள் சஞ்சனா…

அதனாலென்னடா…நீ புரிஞ்சிகிட்டாயென்றாலே போதும் என்றாள் வாஞ்சையுடன்…

இருந்தாலும் நான் அப்படி நினைச்சிருக்கவே கூடாது… தப்புதான்மா..மன்னிச்சுரு…என்றாள் குற்றவுணர்வுடன்….

சஞ்சனா ..நீ வளர்ந்த பெண் இன்னமும் போக போக பல விஷயங்களை தானாகவே புரிந்து கொள்வாய் …திருடுவது பொய்சொல்வது எவ்வளவு தவறோ..அதே போன்றதொரு தவறு தான் கண்ணம்மா…மற்றவருக்கான வாய்ப்புகளை குறுக்கு வழியில் தட்டி பறிப்பதும்… வாய்ப்புகளை இழந்த அவர்களின் வயிற்றெரிச்சல் நம்மை நெடுநாள் தூங்க விடாது..குறுக்கு வழியில் வந்த எந்த ஒரு வெற்றியும் நிச்சயமாக நெடுநாள் நிலைக்காது.. வெற்றி பெறுவது தோல்வியடைவது என்பதை விட நேர்மையாக இருப்பது தான் அதிக நிம்மதியை தரும்டா செல்லம்… என் பெண் சகலகலாவல்லியாக இருப்பதை விட நேர்மையாக இருக்கிறாள் என்பதில் தானேடா எங்களுக்கு பெருமையே….என்று தலையை கோதினாள் சஞ்சனா…

புரிந்து கொண்டவளாக சஞ்சனாவை கட்டிகொண்டாள்…சட்டென யோசித்தவளாக… அம்மா….அப்பா பாவம் இல்லையாம்மா…என கவலைபட்டாள்…

உன் அப்பாவை போல திறமையாளர்கள் பலர் ஒரு வாய்ப்பு கிடைக்காத முன்னேற என ஏங்கி கிடக்க குறுக்குவழியில் அதை அடைய சிலர் நினைப்பது நியாயமான விஷயமா? ..நீயே சொல்…ஒரே ஒரு குறுக்கு வழியாளனால் பல நேர்வழியாளர்கள் வாழ்வின் மீதான நம்பிக்கையை இழந்து போகிறார்கள் கண்ணம்மா…அந்த நம்பிக்கைகளை உடைக்க ஒரு போதும் நாம் காரணமாக இருக்ககூடாது என்ற உறுதியை நீ எடுத்து கொள்ளவேண்டும் உன் வாழ்விலும்….எல்லோரும் இப்படி நினைச்சா நல்லாதானே இருக்கும்..

இன்று நீ புரிந்து கொண்டதை போல சில விஷயங்களை உன் அப்பாவும் புரிந்து கொள்வாரடி கண்ணு..அப்போது அவர் வருத்தமும் மறையும். வாழ்க்கையில் பல விஷயங்களை தோல்வியாக பார்க்ககூடாதுடாம்மா.. அதை ஒரு அனுபவமாக பார்க்க கற்று கொள்ள வேண்டும். சரி நீ தூங்குடா செல்லம்..காலையிலே ஸ்கூல் போகணுமில்லை.. அப்பாகிட்ட நான் பேசிக்கிறேன்.. என சஞ்சனாவை சமாதானபடுத்தி விட்டு தூங்க போனாள்..

சஞ்சனாவை சமாதானபடுத்தினாலும் சுமேஷை நினைத்து கவலையாகவே இருந்தது சவீதாவிற்கு. எதற்கும் சமாதானமாகாதவராக இரவெல்லாம் தூங்காமல் புரண்டு புரண்டு படுத்தபடியே இருந்தார் சுமேஷ். சஞ்சனாவின் பிரச்சினை முடிந்தது ..இப்போது சுமேஷின் பிரச்சனைக்கு என்ன ஆறுதல் சொல்வதென யோசித்து கொண்டே தூங்கி போனாள் ..

காலையில் எழுந்து குளித்து விளக்கேற்றி விட்டு ஓரு ஐந்து நிமிடம் கண்களை மூடி நின்றாள். எதுவுமே கடவுளிடம் வேண்ட தோன்றவில்லை.. பிறகு சஞ்சனாவை எழுப்பி விட்டு சமையலறையில் பம்பரமாக சுழன்று கொண்டிருந்தாள் சவீதா… டிபனை செய்து முடித்து மதிய உணவை தயாரித்து முடித்து அயர்ச்சியாக உணர்ந்தாள். இரவெல்லாம் தூங்காமல் புரண்டு காலையில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த கணவனை எழுப்ப மனமில்லாமல் வேலையை தொடர்ந்தாள்…

சஞ்சு குளிச்சிட்டயாடா…டிபனை டைனிங் டேபிள் மேலே வைச்சிடும்மா என குரல் கொடுத்தாள்…

வரேன் மா …என்றாள் சஞ்சு தலையை சீவியபடி…

நிதானமாக எழுந்து வந்த சுமேஷ் …சவீ காபி என்றான் டைனிங் டேபிளில் அமர்ந்து லேப்டாபை திறந்தவாறு…

அவள் கொடுத்த காப்பியை ஊறிஞ்சியபடி மெயிலை செக் பண்ணி கொண்டிருந்தவன்… சவீ…என்றான் துள்ளி குதித்தபடி….என் ஆன்சைட் ஆபர்சுனிட்டீ லாட்ல பிக் ஆகியிருக்கும்மா…என சந்தோஷ கூத்தாடி கொண்டிருந்தான் குழந்தை போல..சுமேஷின் கம்பெனியின் மூலம் அமெரிக்க ஆன்சைட் செல்வதற்காக ஆறு மாதத்திற்கு முன்பே திறமையின் அடிப்படையில் சுமேஷின் பெயர் லிஸ்டில் இருந்தது. தற்போது தான் உறுதி கிடைத்திருக்கிறது. இங்கே இருந்ததை விட பல மடங்கு அதிக சம்பளம் அதுவும் டாலர்களில்….

டேபிள் மேல் டிபனை வைக்க வந்த சஞ்சுவையும் அந்த சந்தோஷம் தொற்றி கொள்ள….அப்பாவும் மகளும் மகிழ்வுடன் கொண்டாடினர்…

சிறுபுன்னகையுடன் வேலையை தொடர்ந்தவாறு தன் அர்த்தம் பொதிந்த பார்வையை அவர்கள் மேல் வீசினாள் சவீதா…ப்ரமோஷன் கிடைத்த சந்தோஷத்தை விட நேர்மைக்கு நிச்சயம் பலன் உண்டென்பதை சஞ்சனாவின் மனதில் அழுத்தமாக பதிய வைத்த கடவுளுக்கு நன்றி சொல்லியபடி பூஜையறையை நோக்கினாள்…

No fear..when I am here என்று பூஜை அறையில் கடவுள் சிரித்து கொண்டிருந்தார்….நேர்மையும் ஒரு வகையில் கடவுள் தானே!

– 18.9.20

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *