எமது 15 வருஷ கனடியவாழ்வின் அருஞ்சேமிப்பில் இந்தவீட்டை நோபிள் ரியல் எஸ்டேட்ஸ் என்கிற ஒரு குழுமத்தின் அனுசரணையுடன்தான் வாங்கினோம். இங்கே வீடுகளைவாங்கும் தமிழர்கள் அநேகமாகச் செய்வதைப்போலவே நாங்களும் இவ்வீட்டை நிலவறைகள் உள்ள வீடாகத்தேர்வுசெய்தோம். ஆனாலொன்று எப்படி ஒரு அடுக்ககத்தின் உச்சிமாடத்தில் கூரைமுகடுகளுக்குள் அமைந்த வீடுகளை குடியிருப்பாளர்கள் தவிர்த்துக்கொள்வார்களோ, அதேபோல் இந்த நிலங்கீழமைந்த வீடுகளும் குடியிருப்பாளர்களின் முதல் விருப்புக்குரியவையல்ல.
நிலங்கீழ்வீட்டையும் யாருக்காவது வாடகைக்கு விட்டால் அவர்கள் தரக்கூடிய வாடகையும் எமது மாதாந்த தவணைத்தொகையைச் செலுத்துவதற்கு உதவும் என்பதே இவ்வீட்டைத் தேர்வுசெய்ததின் சூக்குமம். நிலவறைகள் என்றால் நீங்கள் கிட்டங்கி மாதிரிகளையோ, அலுவலகங்களில் இருக்கும் பொருட்களை வைப்பதற்கான களஞ்சியவறைகளையோ உருவகப்படுத்திவிடக்கூடாது. அவையும் வதியுமறை, படுக்கையறை, குளிப்பறை, கழிப்பறை எல்லாவற்றுடனும்கூடியதும் மானுஷர் வதிவதற்கேற்றமான (பேஸ்மென்ட்) மனைகள்தான்.
இவ்வகைமனைகள் குடியிருப்பாளர்களின் முதல்விருப்பாக அமையாமைக்கு காரணங்களும் இல்லாமலில்லை. பனிவீழ்ச்சியும், நீண்ட குளிர்காலங்களுமுள்ள நாடுகளில் ஏனைய வீடுகளை விடவும் இவ்வீடுகளை குளிர் மிகையாகத் தாக்கும், அதனால் கணப்புகளுக்கான மின்சாரம்/எரிவாயுச்செலவுகளும் சற்றுக்கூடுதலாகவே இருக்கும். இன்னும் கடவுளர்கள்தான் மலைகளில் குளிர் அதிகமாகியோ, கொஞ்சம் பணிஓய்வுகொள்வோமென்றோ, இல்லை ரொறொன்டோ தேவதைகளைக் கொஞ்சம் அணுக்கத்தில் பார்த்து ஒத்திவிட்டுப்போகலாமென்றோ இவ்வகை மனைகளுக்கு வெளியே வந்திறங்கி நின்றாலும் அம்மனைவாசிகளுக்கு அவர்களின் தரிசனம் கிட்டவேகிட்டாது. அஃதாவது நேரடியான சூரியஒளிக்கதிர்கள் இவ்வகை மனைகளுக்குள் கடவுள்களில் பட்டுத்தான் தெறித்துவந்தாலும் பாயாது. ஒரேயொரு பொருண்மிய அநுகூலம் என்னவென்றால் அவற்றின் மலிவான வாடகைதான். 100 ச.மீட்டர்கள் விஸ்தீரணமான சாதாவீட்டொன்றுக்கு வாடகை 1000 டாலர்கள் என்றால் இதுபோன்றவற்றை 500, 600 க்குள் தேற்றிவிடலாம். ஆதலால் இவ்வகை வீடுகளிலும் கணிசமான மக்கள் வதிவதும் லௌகீக, மற்றும் வர்க்க நியதியே.
எமது நிலவீட்டை வாடகைக்கு விடத்தீர்மானித்தபோது நான் யாரேனும் மாணவர்களுக்கோ, குறைவருமானமுள்ள குடும்பத்துக்கோதான் இது பொருத்தமாக இருக்குமென்று நினைத்திருந்தேன். இன்னும் எம் குடியிருப்பாளன் சத்வகுணத்தோனாகவோ, உதாரபுருஷனாகவோ இல்லாவிட்டாலும் கொஞ்சம் சிநேகபாவமுள்ள, மானுஷநேயனாகவும், எதிர்ப்படும்வேளைகளில் சற்றே முகமன் செய்யக்கூடிய அளவுக்கு இயல்பானவனாகவும் இருக்கவேண்டுமென விரும்பினோம். சாதனாவும் மனை, மனைவி, குழந்தைகள், குதிரை மாத்திரமல்லப்பா…… நல்ல அயலவன் வாய்ப்பதுவும் 16 வகைச்செல்வங்களில் ஒன்றென பெரியமனுஷிமாதிரி அடிக்கடி சொல்லுவாள். ஒரு அறிவுரையோடு அறிமுகப்படுத்துவதிலிருந்து அவளே என் பத்தினி என்பதைப் புரிவதில் சிரமமிருந்திருக்காது. இலவச அறிவுரைகள், நீதிபோதனைகள் வேறுயாரிடமிருந்து கிடைக்கும். நானும் அவளின் கருத்தூட்டலில் என்வல்லபத்துள் விழிப்பாகத்தான் இருந்தேன், எனது வாகனத்திருத்தகத்துக்கு உருத்திரன் என்றொரு வாடிக்கையாளன் வந்துசேரும்வரை. உதைபந்தாட்டவீரனைப்போல் கட்டுமஸ்தான தேகம், தலையில் சியாமளம் குறைவு, அதைமறைக்க சாதுர்யமாக தலையை முற்றாக மழித்துவிட்டிருந்தான். அவனது வண்டிக்கான திருத்தச்செலவு உதிரிப்பாகங்களுடன் 600 டாலராகியிருந்தது. “ இந்தமாதம் இது நான் கொஞ்சமும் எதிர்பாராத ஒரு செலவண்ணே………. 600 டாலரை இந்தக் காருக்கு இறைத்தேனா இந்த மாதம் குழந்தைக்குப் பால்மா வாங்கவே நான் சிங்கியடிக்க வேண்டியிருக்கும்” என உணர்வுபூர்வமாகத் தாக்கினான். மனசு ஈரமாகவும் எனக்குள்ளிருந்து இதைக்கேட்டுக்கொண்டிருந்த கர்ணனோ பாரியிடமிருந்து வந்திருக்கக்கூடிய ஜீன் ஒன்று விழித்து அதிர்ந்து என் நாவின் நரம்புகளைத்தூண்டி “சரி இந்த மாதம் ஒரு போர்ஷனைக்கொடும், அடுத்த மாதம் மீதியைக்கொடுத்துவிடும்” என்று சொல்லவைத்தது. போன் நம்பரைத்தந்துவிட்டுக் கிளம்பிப் போய்விட்டான். அடுத்தமாதம் இரண்டாவது வாரமாகியும் பெம்மானைக்காணவில்லை. அம்மறவனுக்குப்போன்பண்ணி விசாரிக்க எண்ணியிருந்தபோது எதிர்பாராத ஒரு மாலையில் நான் திருத்தகத்தை அடைக்கத்தயாராகையில் ஒரு Honda – CR V Truck வண்டியுடன் வந்தான்.
“ ஒரு சின்னவேலை அண்ணே……… பிறேக்லைட்ஸ் ஒன்றும் வேலை செய்யுதில்லை.”
“ சரி விட்டிட்டுப்போய் நாளையின்றைக்குப் பின்னேரம் வாரும் பார்த்துவைக்கிறன்….”
“ ஐய்யோ ஐய்யோ ஐய்யோ இது என்னுடைய வைஃபின்ட டிறக் அண்ணே….. இதுமட்டும் இல்லையென்றால் நாளைக்கு பிள்ளையளின்ர பள்ளிக்கூடம், அவளின்ர வேலை எல்லாம் பட்டுப்போடும்.”
“ இப்படிக்கடைசி நேரத்தில ஓடிவந்திட்டு என்னை என்ன செய்யச்சொல்றீர்.”
“ஒரு சின்னவேலை அண்ணை, நீங்கள் சடக்கென்று செய்துபோடுவியள்……… பிளீஸ்.”
“ அப்படிச் சின்னவேலை என்றால் நீரே செய்திருக்கலாமே…. பிறகேன் இங்கே கொண்டுவந்தனீர்.”
“ என்னட்டை றிப்பேர் பிற், அணியங்களெல்லாம் கிடக்கே.”
“ வேணுமென்ட சாவிசெட்டெல்லாம் நானே தாறன்…….. எடுத்துவைச்சு றிப்பேரைப்பண்ணி முடிச்சிட்டு நீரே கராஜையும் அடைச்சிப்போட்டுப்போம்.”
“ என்னண்ணே இப்படிச் சொல்லுறியள்….. என்ட நிலமையைக் கொஞ்சமும் யோசியாமல்.”
“ நான் ஆறுமணிக்கும்மேலே இதுக்குள்ள நொட்டிக்கொண்டிருந்தேனென்றால் உற்றுக்கேட்டுக்கொண்டிருக்கிற பக்கத்துவீட்டுக்கிழவி ஒன்று உடனே 911 ஐக்கூப்பிட்டுடுவாளப்பனே…. பிறகு வேலையளைத் தள்ளிவைச்சிட்டு நான் பொலீஸுக்கும், கோட்டுக்கும் உலையவேண்டியிருக்கும்…… என்னுடைய பக்கத்தையும் யோசியும்……….ப்ளீஸ்.”
“ உங்களை விளங்கிறன்……….. ஒரு தமிழன் இன்னொரு தமிழனுக்கு இக்கட்டில் உதவுவாட்டி எப்பிடி. ”
“ தோழர் பாரும் நான் என்னால முடிஞ்சகாரியமென்றால் செய்வன், இது எனக்கும் மேல……….. ஒரு லைட் மாத்திரம் எரியவில்லையென்றால் ஏதும் லூஸ் கொன்டாக்டினாலாக இருக்கும், பார்த்திடலாம்… பிறேக்லைட் ஒன்றுமே பத்தவில்லையென்றால் அது முழு யூனிட்டையும் கழற்றித்தான் செக்பண்ணவேணும் அப்பனே, குறைஞ்சது இரண்டு மணத்தியாலம் பிடிக்கிற ஒரு எஃபோர்ட் அது. நினைச்சவுடன செய்யேலாது…… எனக்கும் அரை மணிக்குள்ள வைஃபை வேலையிலையிருந்து பிக் அப் பண்ணவேணும் என்ன.”
“ என்னுடைய நிலைமைய அனுசரிச்சுக் கொஞ்சம் மனசு வையுங்கோ ப்ளீஸ் ”
நொய்த இடத்திலேயே அவன் மேலும் மேலும் மொத்தவும் மயங்கினேன்.
சாதனாவை போனில் அழைத்து குரலில் பரிவைக்குழைத்து “ இன்றைக்கு குட்டிஇளவரசன் கொண்டாந்திருக்கியாம்மா” என்றேன். “ ஆமா என் பாக்கில இருக்கு……….. எதுக்குக் கேட்கிறீங்க ”
“ இங்கேயொரு அர்ஜன்ட் வேலை இன்னும் முடியாமல் இருக்குச் செல்லம், அருகிலிருக்கும் Tim Hortons க்குப்போய் கோப்பிகுடித்துக்கொண்டே குட்டிஇளவரசன் மீதியையும் படித்துக்கொண்டிருப்பியா, இதோ ஒரு மணிநேரத்தில வந்திடறேன்.”
“ என்ன Tim Hortons இலபோய் கோப்பி குடிக்கிறதோ……..”
“ ஓமடா என்ர தங்கமல்லே…… ஒருகாரை இன்றைக்கு முடித்தேயாக வேண்டியிருக்கு, அந்த கஸ்டமர் மிட் நைற்போல யாரையோ ஏர்போர்ட்டுக்குப் பிக் அப் பண்ணப் போகவேணுமாம் டியர்.” இறைஞ்சினேன்.
“ சார் குழையும்போதே நினைத்தன் ஏதோ வில்லங்கம் வரப்போகுதென்று………. அவனோட கார் றிப்பேர் என்றால் அது அவனோட பிரச்சனையப்பா……. அவன் வேற காரைப்பார்க்கட்டும். இல்லை டாக்ஸியில போகட்டும், நீங்கள் எதுக்கப்பா லூஸுமாதிரி அவன்ட பிரச்சனையை உங்க தோளில ஏத்திறியள். ”
“ நிஜந்தான்………..உஸ்ஸ்ஸ்ஸ் மெல்ல பக்கத்திலதான் கஸ்டமர் நிக்கிறார்………. Only Primates Can help Primates…… அதோட காசும் வருகுதல்லே ஹனி….. எப்படியும் ஜஸ்ட் ஒரு மணியில வந்திடறேன்டா……..என் கண்ணில்ல.”
சிணுங்கினாள், அவள் வேறேதாவது மடுத்துச்சொல்லமுன் போனை அணைத்துவிட்டு வேகமாக அவன் வண்டியைக் கழற்ற ஆரம்பித்தேன்.
வேலை முடிந்ததும் வண்டியில் ஏறி அமர்ந்துகொண்டு “எவ்வளவு அண்ணே” என்றான்.
“வழக்கத்தில் 400 டாலர் வாங்கவேண்டிய ஜொப்……., நீர் ஒரு 300 ஐக்கொடும்” ஆசனத்தில் அமர்ந்தபடியே பிட்டத்தை உயர்த்தி ஜீன்ஸின் பின் பொக்கெட்டில் விரல்களைச்செலுத்தினான். பின் உதடுகளைப் பிதுக்கியபடி
“ அண்ணை நான் அவதியில ஃபேர்ஸை எடுக்க மறந்திட்டன், குறை நினைக்காதையுங்கோ……….. பொறுங்கோ ஒருவேளை இதுக்க ஏதாவது……… வண் மினிட்” என்றுவிட்டு வண்டியின் கொன்ஸோலுக்குள் தேடி 100 டாலர் தாள் ஒன்றை எடுத்துத்தந்தான்.
“ நீர் பழைய பாக்கியையுமல்லோ சேர்த்துத்தருவீரென்று றிஸ்க் எடுத்துச்செய்தனான்………… இப்படிப்பண்றீரே. தொழில் செய்பவனுடைய கூலியை அவன் வியர்வை உலரமுதலே தீர்த்துவிடவேணுமென்று விதியிருக்கு………. ஏன் உம்மட்ட அந்தக் கிறெடிட், டெபிட் கார்ட்டுகள் ஒன்றும் இல்லையோ”
“ எல்லாம் இருக்குத்தானண்ணை…… தெரியுந்தானே கடனைத்தந்திட்டுப் பிறகு பாங்குகள் என்ன வீதத்தில வட்டி உரிக்குமெண்டு.”
“ அப்பப் பாங்க்வட்டியையும் என்ரை தோள்லவைச்சா எப்பிடி…….. ”
“ அப்படி இல்லையண்ணை….. இப்போதைக்கு இப்படிசெய்தாப்போச்சு… போனமுறை தந்த 300 இல 100 ஐக்கழிச்சு இந்த100 டொலரோட வையுங்கோ இன்டைக்கு உங்களுக்கு 200 ஆச்சா, அப்ப முந்தினதில 100 போனா மிச்சத்தோட இன்டையான் பாக்கி 100 ஐயுஞ்சேர்த்தா இன்னும் 400 தானே….. யோசிக்காதையுங்கோ அடுத்த கிழமையே கொண்ணந்து விசுக்கிவிடுவன்……..பொஸ், புறொமிஸ்.”
அண்ணை, உதவுந்தமிழர் எல்லாம் விடுத்து இப்போ “பொஸ்” ஆகத் திடுப்பென உயர்த்தப்பட்டேன்.
காரியத்தைச் சாதிப்பதற்காய் அநேகரும் பிரயோகிப்பதும், ஒரு அடிமைப்புத்தியிலிருந்து புறப்படுவதுமான இந்த “பொஸ்” ஐ யாரும் போட்டால் எனக்கு அண்டம் பிண்டம் எல்லாம் ஒன்றாய் பற்றும். இன்னும் அவன் சொன்ன கணிதத்தைப் புரிந்துகொள்ளவாவது எனக்கு ABACUS வகுப்பில் உடனடியாகச் சேரவேணும் போலிருந்தது. ஒருவேளை சரியாய்த்தான் சொல்லுகிறானோ நான் யோசிப்பில் சிக்க அவனது டிறக் வண்டி கண்ணுக்கெட்டாத தூரத்துக்குப்போயிருந்தது.
இப்படி சொகுசான இரண்டு வண்டிகள் வைத்திருக்கக்கூடிய ஒருவனுக்கு நிச்சயம் 500 டொலர்கள் ஒரு பொருட்டாக இருக்காது. என்ன சில நாதாரிகளுக்கு இருப்பில கைவைக்க மனம்வராது. அதனால பொய்யுக்குமேல் பொய்களாய் அடுக்குவார்கள். வட்டிவருமோ என்னவோ ஒருவனுக்குச் செலுத்தவேண்டியதைச் செலுத்திவிட்டு மனதை இலேசாக வைத்திருக்க முடிவதில்லை. தமிழர்களில் இப்படிப்பல பன்னாடைகளை என் தொழிலுக்கு வெளியேயும் கவனித்திருக்கிறேன்.
நான் தொலைபேசி எடுத்தபோதிலெல்லாம் என்னுடன் பேசுவதைத் தவிர்த்து வந்தவன் அடுத்த மாதம் வேறொரு திருத்தவேலை வரவே மீண்டும் வந்தான். நான் முதலில் அவனிடம் சொன்னேன். “ இங்கே பாரும் உருத்திரன்……. இது என்னுடைய சொந்தக் கராஜ் அல்ல…….. நான் இன்னொருத்தனுடன் சேர்ந்துதான் இங்கே வேலை செய்கிறேன். இப்படி எங்களுடைய ஆட்களுக்கு நான் கிறெடிட்ஸ்களை அனுமதிக்கிறேன் என்றால் அதை ஒரு கனடியன் ஒத்துக்கொள்ள மாட்டான்.”
“ இல்லை பொஸ் நான் வேணுமென்டே உங்கடகாசை டிலே பண்ணேல்ல……… இந்தமாதம் முழுக்க வீடு ஒன்று தேடி அலைஞ்சு கொண்டிருந்தனா…………….. என் ஷெடூல்ஸ் எல்லாம் படு ரைற்றாப்போசு வெறி சொறி. ”
வீடென்றதும் எனக்கு நடுமண்டையில் வியர்த்தது.
“ உமக்குத்தானே வீடு……… எந்த ஏரியாவில தேடுறீர்……..”
அவன் சொன்ன 3 ஏரியாக்களில் ஸ்காபறோவும் இருந்ததும், இப்படி ஆரம்பித்த துர்லபமான அந்த சம்பாஷணையும் சேர்ந்து 500 டொலர்களுடன் தொலைந்துபோயிருக்கக்கூடிய ஒரு பிஸாசை நடு வீட்டில் கொண்டுவந்து குடியமர்த்துவதில் முடிந்தது.
அவனுக்கு இன்னும் குழந்தைகளே பிறந்திருக்கவில்லை. அன்றைக்கு மனைவிக்கு பிள்ளைகளை பாடசாலைக்கு எடுத்துப்போக கார் அவசியம் என்றது “றீல்”. ஏதோ தன் காரை அன்றைக்கே திருத்திவிடவேண்டும் என்பதற்காக விட்ட பொய்யென்று அதை மன்னித்தேன்.
‘பேஸ்மென்ட்வீடு மொத்தமும் 70 சதுரமீட்டர், இரண்டு படுக்கைஅறைகள்தான்’ என்று அவனுக்கு நான் திரும்பத்திரும்பச் சொல்லியிருந்தேன். மனைவியோடு வந்து பார்த்தவிட்டு ” சரியான சின்னனாய்க்கிடக்கு எங்களுக்குக் காணாது ” என்றுவிட்டுப் போய்விட்டான். பிறகு அடுத்தநாள் இரவு போன்பண்ணி “அண்ணை யோசிச்சுப்பார்த்தம் உங்கட இடமென்றால் எனக்கு வேலைக்குப்போகக் காரே தேவையிருக்காது. சுற்றுச்சூழலுக்கும் என்னாலான உபகாரம். அதில இருந்தென்ன ஒரு கிலோமீட்டர்தான் எனக்கு, நான் சைக்கிளிலிலேயே போய்வருவன்……….. வசதியாய் கொஞ்சம் விசாலமாயொருவீடு கிடைக்குமட்டும் அங்கேயே இருக்கலாமென்று யோசிக்கிறம் ” என்றான்.
“ உங்க விருப்பம், குட் நைட்”
“எப்பிடியும் ஒரு வருஷத்துக்குள்ள பெரியவீடு எடுத்துப்போயிடுவம்” என்று அழுத்திச்சொன்னதால நாங்களும் எழுத்திலான வாடகை ஒப்பந்தம் எதையும் செய்துகொள்ளவில்லை. அவர்களும் அதில் நாட்டங்காட்டவில்லை.
அதுதான் நாங்கள் விட்ட இரண்டாவது தவறு.
வீட்டுக்கு குடிவரமுதல் மேலும் பலபொய்கள் சொல்லியிருக்கிறான் அவைகள் ஒன்றும் என்னை நேரடியாகப் பாதிக்காததாலும், என் வாக்கைக்காப்பாற்றவேண்டும் என்கிற சத்தியவிருப்பிலும் அவனுக்கு வீட்டைத் தரமுடியாதென்று மறுத்துவிடமுடியவில்லை. இன்னும் நாலுபேரிடமும் அவனைப்பற்றி விசாரித்திருந்திருக்கலாம், சரி கடல்கடந்துவந்த இடத்தில் இவனும் ஒரு தமிழ்மறவன்தானே என்பதாலும் என் அசிரத்தையாலும், உளவுவேலைகளில் தேர்ச்சியின்மையாலும் ஆற அமரச்சிந்திக்காமல் அவர்களைக் குடியேற்றிவிட்டேன்.
‘ஒரு வருஷத்துக்குள்ள போயிடுவோம்’ என்றவன் இப்போ 3 வருஷங்களாக இழுத்தடிச்சுக்கொண்டு இருக்கிறான். அவன் இருந்தால் பரவாயில்லை, குடியிருப்புக்கு வாடகைதரவேண்டுமென்கிற விஷயம் அவன் மூளையின் மெமொறி டிஸ்கிலிருந்து அழிந்தவனைப்போல இருக்கிறான்.
எமது வளவுக்குள் இருவருக்கும் பொதுவான வாகனநிறுத்தத்துக்கான இடத்திலிருந்து வீடுவரை செல்லும் சீமெந்தினாலான பாதை ஒன்று இருக்கிறது. அதில் பனிக்காலங்களில் பனிகுவிந்திருக்கும். குடியிருப்பாளர்கள் அதைத்தள்ளித் துப்புரவாக வைத்திருந்தால் யாரும் வழுக்கிவிழவேண்டியிராது. பனிவீழ்ச்சியிருக்கும் நாட்களில் நான் பனியைத்தனித்துத் தள்ளி அப்புறப்படுத்துவதைக் கண்டால் “ சிரமமான வேலைதான் என்ன பொஸ் “ என்பான். தேங்காய்ப்பூவிலிருந்து நெல்லுப்பொரி வரையிலான பருமனில் பனித் துருவல்கள் உலர்நுரையைப்போல் தூவியிருக்கும்போது இலேசாகத் தள்ளிவிடலாம், அதுவே நிலத்தில் உருகி இறுகிற்றாயின் பிறகு தள்ளுவதோ வழிப்பதோ வல்லை. மென்மையான தூவலாகப்படிந்திருக்கும் நாட்களில்கூட அவன் ஒருமுறையேனும் பனியைத் தள்ளிவிட்டது கிடையாது. மற்றும்படி அவன்வீட்டில ‘பொம்பிலிக்கருவாடு’போல் எதையாவது கொண்டுவந்து சமைத்து கந்தம் கிளப்புவது போன்ற பிறவகையான அலுப்புகள், இல்லை. ஆனால் எந்தநோக்கத்துக்காக வீட்டைவாடகைக்குக் கொடுத்திருந்தோமோ அதுக்குத்தான் மோசம் பண்ணினான். அதாவது முதல் 6 மாதங்கள் ஒழுங்காக வாடகை எம்வங்கிக் கணக்குக்கு வந்துகொண்டிருந்தது. பின்னர் மெல்ல ஆரம்பமாகின அவனது சாங்கியங்கள்.
ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி வந்திருக்கவேண்டிய வாடகையை முதலில் அவனாக 30ம் தேதிக்கு மாற்றினான். பின் அதையும் ஒருமாதம் தாமதமாக்கி அடுத்த மாதம் 15 இல் தருவதையே வாடிக்கை ஆக்கினான், பின் அதையும் அவனாக 30 தேதிக்கு நகர்த்தினான். கொஞ்சக்காலம் சகித்துப்பார்த்தோம்.
குடியிருப்பாளர் ஒருவர் மாதாமாதம் குறித்த தேதியொன்றில் வாடகையை உரிய வங்கிக்கணக்கில் செலுத்திவிடுமாறு தன் வங்கிக்கு அறிவுறுத்தலாம். அவனுக்கும் அது தெரியாமலிக்காது, இருந்தும் அவனிடம் அவன் வங்கியுடன் அப்படியான ஏற்பாடொன்றைச் செய்துவிடுமாறு ஆலோசனை வழங்கினேன்.
“ பொஸ்……. அதொரு சின்னவேலை, பிரச்சனை என்னென்றால் பாங்கில காசிருந்தால் நான் டைமுக்குக்கட்டமாட்டனே, அப்படியான ஏற்பாட்டைச்செய்துவிட்டேனாயின் பாங் உரிய தேதிக்கே காசை பாஸ்பண்ணிவிட்டு நான் அதை பலன்ஸ் பண்ணும் வரையில் என்னட்டையல்லே வட்டி உரிப்பாங்கள்.”
எங்கள் வீட்டுக்கு குடிவந்தநாளிலிருந்து என்னை ‘பொஸ்’ என்று அழைப்பதை வாடிக்கையாக்கியிருந்தான். போகப்போகப் பின் சேஷ்டைகள் எகிறத்தொடங்கின. அடுத்து இரண்டு மூன்று மாதங்களுக்கு வாடகையைச் செலுத்தாமல் இருந்தான். எனக்கும் வீட்டின் தவணைப்பணத்தைச் செலுத்துவதற்கு அது மிகவும் இடையூறாக இருந்தது. ஒருநாள் நானும் சாதனாவும் வீட்டின் வெளித்தளத்தின் புல்லை வெட்டிக்கொண்டிருக்கும்போது வெளியே போய்விட்டு லப்டொப்கேஸுடன் காரிலிருந்து இறங்கிவருந்தவன் “குட் ஈவினிங் பொஸ்” என்றான்.
ம்ம்ம்….. முகமன்களுக்கு ஒன்றுங்குறைச்சல் இல்லை. என்னைக்கடந்துபோனவன் திரும்பிவந்து “ஓட்டோவேய்ஸ் டிறைவ்களில ஸ்பீட் அப் பண்ணும்போது பொஸ் இஞ்ஜின்லயிருந்து ஒரு கேரல் சத்தம் வருது…….. ,அதோட அதுக்கு எம் .இ. டெஸ்டும் இந்தமாதம் செய்யவேணும் ” என்றான்.
“ மிஸ்டர்.உருத்திரன் நீர் கார் றிப்பேர் செய்தவகையால எங்க கராஜுக்கு இன்னும் பாக்கி வைச்சிருக்கிறது உமக்கும் நினைவிருக்கவேணும், எங்களுடைய கராஜில கிறெடிட்டுக்கெல்லாம் றிப்பேர்கள் செய்யிறேல்ல, அது எனக்கும் பார்ட்னருக்கும் விரிசல்களை உண்டாக்கும் , அதனால தயவு செய்து நீர் உமக்கேற்ற இடமாய்ப்பார்த்து அதுகளைச் செய்விக்கிறதே நல்லது.”
நிஜமாகவே மறந்துவிட்டவன்போல நெற்றியைத் தேய்த்துக்கொண்டு “ ஜா……ஜா………..கொஞ்சம் பலன்ஸ் இருக்கில்ல” என்றுவிட்டுப் போய்விட்டான். உருத்திரன் பிராட்டியும் பர்த்தாவுக்கென்றே வாய்த்த பதிவிரதை. நான் எப்போதாவதுபோய் ‘உருத்திரன் இருக்கிறானா’ என்று விசாரித்தால் நான் வாடகைவிஷயமாகத்தான் வந்திருக்கிறேன் என்பது அவளுக்கு மூக்கில் வியர்த்துவிடும். “ உதில கிட்டத்தான் கடைக்கோ எங்கேயோ போயிருக்கிறார்போல ” என்பாள். ஆனால் அவனுடைய 44ம் நம்பர் சப்பாத்துக்கள் வாசல்லயே கிடந்து சிரிக்கும்.
சாதனாவும் இப்போ என்னை நச்சரிக்கத்தொடங்கினாள். ‘உந்த உலுத்தனோட இனியும் மல்லுக்கட்டேலாது. சினிமாக்கொமெடி சீன்களில வாறமாதிரிச் சும்மா மாசாமாதம் டெனெண்டைக் கலைச்சுக்கொண்டு திரியிறது துன்பமப்பா இது. அவனுடைய விளையாட்டெல்லாம் இனிப்போதும், எங்களுக்குத்தேவை முதல்ல நிம்மதி. அவனை எங்கவீட்டைவிட்டுக் கலையுங்கோ……………. உங்களுக்குசொல்லத் தைரியம் போதாவிட்டால் என்னை விடுங்கோ நான் போய் மூஞ்சைக்கு நேராய்ச்சொல்லிப்போட்டுவாறன்………. அல்லாவிட்டால் உடனடியாய் ஒரு சொலிசிட்டரிட்டைப்போய் ஒரு நோட்டீஸை அனுப்புற வேலையைப் பார்ப்பம். நீங்கள் என்னண்டால் அவனைக் கண்டவுடனே ஏதோ சம்பந்திமாதிரியல்லே உள்ளே இருத்தி பியரும், வைனுமாய்க் கொடுத்து உபசரிக்கிறியள்…………..” அம்மாமி மாதிரி நொடித்தாள்.
எங்கள் திருத்தகத்துக்கும் அடுத்தடுத்த மாதங்களில் வாடிக்கையாளர்களின் வருகையும் குறைவாக இருந்தது. வீடு வாங்கியதுடன் வங்கியில் இருந்த கொஞ்ச நஞ்சச்சேமிப்பும் தீர்ந்துபோக மிகவும் காய்ந்துபோயிருந்தோம். உருத்திரனுக்கும் அன்றைக்கு வெளியேபோக ஒரு இடமும் தோதுப்படவில்லைப்போல, வெகு இயல்பாக எங்கள் வீட்டுக்கு வந்திருந்தான். வழமைபோல் அவனை உபசரித்து பியரும் கொடுத்துக் கடிக்கக் கருவாட்டுப்பொரியலும் கொடுத்தேன். இருவரும் சேர்ந்து குடித்தோம், அவன் மூன்றாவது மக்கையும் நிரப்பத்தொடங்கியபோது மெல்லச் சொன்னேன் “ பாங் எங்களுக்கு டியூஸ் பாக்கிக்காக ப்றெஷர் கொடுக்குது, தயவுசெய்து இனியும் அரியேர்ஸ்விடாமல் வாடகையைத் தந்து இதுக்குள்ளால எங்களைக் கொஞ்சம் ‘றிலீஃப்’ ஆக்கிவிடவேணும் உருத்து.”
தலையைச்சிலுப்பி “என்ன டியூஸ்” என்றான் போதை ஏறிவிட்டவன் போலவொரு பொய்யான பாவனையுடன்.
“ இல்லை நான் எங்களுடைய ஹவுஸிங் டியூஸைத்தான் சொல்றன்.”
“ மாசம் எவ்வளவு கட்டுறியள் பொஸ்?”
“ ஆயிரத்து அறுநூற்றிச்சொச்சம் ”
சின்னதாய் கிளம்பிய ஏவறையை வெளிப்படுத்திவிட்டு
“ ஓ………… பெரியவீடென்றதால டியூஸும் அப்பிடித்தான் வரும் ………..எது உங்கட கொம்பனி.” என்றான்.
“ நோபிள் றியல் எஸ்டேட்ஸ் என்று ரொறன்டோவில இருக்கு அதன் ஹெட் ஒஃபீஸ். ”
“நோபிள் றியல் எஸ்டேட்ஸ்…… அடடடடடட தெரியும் தெரியும் தெரியும் நம்ம சிவபெருமான்ட கொம்பனி“
“ என்ன உமக்குப் பார்ட்டியை தெரியுமோ……..”
“ தெரியுமாவது…………….. அவன் என்ர சொந்தகாரப்பயல்தான், பார்த்தால் அவனுடைய அப்பா எனக்கொரு பெரியப்பாவாக்கும். காய் இப்ப றியல் எஸ்டேட் பிஸினெஸில பூந்து………. ஹை றேஞ்ஜுக்கு எழும்பிவிட்டுது என்ன பெரியப்பா குடுப்பத்தைவிட்டு அழகோ சொத்தோ கொஞ்சம் பிறத்திப்பெண்ணுக்காக இழுபட்டதால எங்களுக்க தொடர்புகள் கொஞ்சம் அப்பிடியிப்பிடியென்று ஈஞ்சுபோய்ச்சு…….……. என்டாலும் பாதகமில்லை வேணுமென்றால் நான் உங்களுக்காக அவனோட பேசி அந்தத் டியூஸைக் கொஞ்சம் குறைச்சுவிடுகிறன்.”
நோபிள் குழுமத்தின் பிரதான பாகஸ்தரும் முகவருமான சிவபெருமானுக்கு 40 அகவைகளுக்கும் மேலிருக்கும். இவன் தனக்கும் அவருக்குமான நெருக்கத்தை நிரூபிக்கத்தான் அவரை ‘அவன்’ ’இவன்’ என்கிறான் என்றாலும் எனக்கு அது நெருடலாயிருந்தது.
“ தவணைப்பணம் குறைஞ்சால் அங்கால மற்றப்பக்கம் இன்றெஸ்டெல்லே எம்பிவிடும்…..……. பிறகு லோனும் இழுபட கணக்கு எல்லாம் சரியாய்த்தான் இருக்கும்.……… இப்போதைக்கு உங்களால செய்யக்கூடியதும், நான் உங்களைக் கெஞ்சிக்கேட்கிறதும் என்னென்றால் எங்களுக்கு இழுத்தடிக்காமல், அரியேர்ஸ் வைக்காமல் மாதாமாதம் வாடகையை ப்றொம்ப்ராய் கட்டிவிடுறதைத்தான் மை ஃப்றென்ட்“
அதற்கு அடுதடுத்த மாதங்களிலும் “ தங்கைச்சிக்கு பிள்ளைப்பேற்றுசெலவு வந்திட்டுது , சகலனைச் சவூதிக்கு அனுப்பினேன், காருகள் இரண்டுக்கும் ஒன்றாய் இன்ஸூரன்ஸ் கட்டவேண்டிவந்திட்டுது” என்று சாட்டுக்களை அடுக்கினானான்.
“ தெரியாமல்த்தான் கேட்கிறன் உருத்திரன் நீங்கள் ஒரு கொம்பனி வீட்டில இருந்தாலும் இப்படியான கதையள் அங்கேயும் எடுபடுமோ.”
“ சச்சச்சச்சாய்………. சாளம்பன் பிள்ளையார் அறிய இனிமேல் எல்லாம் ‘கறெக்ட்’ ஆயிருக்கும் டோன்ட் வொறி பொஸ்” என்று சத்தியம் பண்ணினான்.
மிஸ்டர்.சிவபெருமான் மிகவும் நாணயமான மனிதர். இப்படி உலுத்தன்கள் அவருக்கு உறவென்றால் இன்னும் நிறைய விஷயங்களைச் சந்தேகப்படவேண்டியிருக்கும். அவரைக் காரியாலயத்தில் அடுத்தமுறை சந்திக்க நேர்ந்தபோது “ சேர்………இப்பிடி மிஸ்டர்.உருத்திரன் என்று ஒருத்தர் எங்கட பேஸ்மெண்டில குடியிருக்கிறார் உங்களைத் தன் பெரியப்பாபிள்ளை என்கிறார்……….. ஒருவேளை உங்களுக்கும் அவரைத்தெரியுமோ” என்று கேட்டேன்.
“ எனக்குத் தெரிந்துபாரும் எங்கட தாத்தாவுக்கு என்னுடைய அய்யாவைவிட்டால் மற்ற அஞ்சும் பெண்பிள்ளைகள், தவிர வேறொரு வகையிலும் எனக்குப் பெரியப்பாவோ சித்தப்பாவோ கிடையாது” என்றார்.”
நான் “அப்படியா” என்று அதிசயிக்கவும் “என்னுடைய ஞாபகத்தில உருத்திரன் என்றொரு பையன் வீடொன்றை வாங்கிற விஷயமா இங்கே இரண்டொருதடவைகள் வந்திருக்கிறான், தானொரு ‘இன்சொல்வன்ட்’ என்கிறதை மறைக்கப்பார்த்தான், எனக்கு நம்பிக்கை வரேல்ல கேஸைத்திருப்பி விட்டிட்டன்………………..கவனம் உலுத்தன்கள் சும்மா எனக்கு பிறைம் மினிஸ்டர் ஹாப்பரைத்தெரியும், கமரூனைத்தெரியும், கபினெட்டில வேறையொரு குழாயற்றை சுட்டியரைத்தெரியும் என்று றீலுகள் விடுவாங்கள், ஒரு பயலையும் ஆதாரம் இல்லாமல் நம்பிவிடாதையும் ” என்றார். சாதனாவைப்போலவே அவரும் உருத்திரனை உலுத்தன் என்றது எனக்கு வியப்பாயிருந்தது.
பிறகும் வாடகை அடுத்து மூன்றுமாதங்களாகியும் வந்திராமலிருக்கவே நானும் சாதனாவும் குடியிருப்பாளர், ஈடுவிவகாரங்களில் அனுபவமிக்க ஒரு சொலிஸிட்டரைப்போய் ஆலோசித்தோம். அவர் எமது பிரச்சனையை முழுவதும் கேட்டுவிட்டுச்சொன்னார்:
“ஆறுமாசத்தில வீட்டைக்காலிபண்ணச்சொல்லி இவாகுவேஷன் ஓடரை அனுப்பலாம். ஆனால் அதிலேயுள்ள இரண்டொரு வியாகூலங்களையும் நீங்கள் எதிர்பார்க்கவேணும்.
ஒன்று…… பிரதிவாதி கோட்டில நாங்கள் வீடு தேடிக்கொண்டுதான் இருக்கிறோம்………. இன்னும் எங்களுக்கு வீடு கிடைக்கவில்லை, மனைவி கர்ப்பமாயிருக்கிறா, எங்கட ஜிம்மிக்கு வாந்திபேதி போன்ற காரணங்களைக்காட்டி மேலுமொரு 6 மாதங்கள் ஸ்டே வாங்கலாம். ”
“ பரவாயில்லை சேர்.”
“ இரண்டாவது………….. இப்படியான ஒரு குடியிருப்பாளன் இவாகுவேஷன் ஓடரைக்கண்ட கணத்திலிருந்து உங்களுக்கு வாடகை தரமாட்டானே……… பிறகு ஒன்றுஞ்செய்யேலாது. சொல்லுவமே அவன் மேலும் ஒரு வருஷத்துக்கு அங்கே இருந்திட்டுக் காலிபண்றானென்றுவைத்தால்…………… பின்னாலும் நீங்கள் வாடகைப் பாக்கிக்காக இன்னொரு வழக்கு தாக்கல் செய்யவேண்டியிருக்கும்.”
“ செலவுதான் எங்கிறீங்க.”
“ செலவுமாத்திரமல்ல………… அவன் என்னால இரண்டு வீடுகளுக்கு வாடகை செலுத்தேலாது வேணுமானால் உங்களுக்கு மாதம் 50 டாலர்படி செலுத்திக்கடனை மெதுவா அடைக்கிறேனென்று பல்டியடித்தானென்றால் உங்களால எதுவும் பண்ணமுடியாது……. பெஞ்ச் அவனுடைய நியாயத்தைத்தான் முதல்ல கேட்கும்.”
விஷயம் விவகாரமாகி அரிவு சாலுக்குக்குள் எதையோ விட்டு நசிபட்ட குரங்கின் கதியானது. இப்போது சட்டத்தை விடுத்த மேலும் சாணக்கியமான ஒரு மாற்று யோசனை அவசியமாகியது,
உடனடியாக எதுவும் புலனாகாததில் குடியிருப்பாளர்களால் இவ்வகையான நெருக்கடிகளைச் சந்தித்தவர்களையும்; நெருக்கமான நண்பர்களையும் கலந்து ஆலோசித்ததில் அவர்களும் தத்தம்பங்குக்குச் சில மாற்று யோசனைகளை அள்ளிவீசினார்கள்.. அவற்றுள் வேலைசெய்யுமென நம்பிய ஒன்றைப் பிரயோகித்துப் பார்க்க முடிவு செய்தோம்.
ஒரு நாள் முன்னறிவிப்பின்றிப்போய் அவர்கள் வீட்டு பஸ்ஸரை அமுக்கினேன், அவனும் மனைவியும் இருந்தனர். இயல்பாகப் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தேன். அதேசமயம் வாடகை விஷயமாக என் எரிச்சலையும் அவர்களுக்கு உணர்த்தவிரும்பி மேசையில் அவன் மனைவி கொணர்ந்துவைத்த பால்சேராதகோப்பியின் பக்கம் திரும்பியும் பார்க்காமல் இருந்தேன். அவன் கோப்பியைக்குடிக்க மூன்றாம்முறையாகவும் வற்புறுத்தியபோது அதைச்சட்டைசெய்யாமல் “நாங்கள் வீட்டை விற்பதற்கு முடிவுசெய்துவிட்டோம்” என்றேன்.
ஒரு நிமிஷம் இருவரும் மௌனமாக இருந்தனர். அம்மௌனத்தைப் பொருள் பெயர்க்க முடியாமலிருந்தது. கதிரையில் சாய்ந்திருந்த நான் ‘அட……..எதுக்கென்று காரணத்தைக்கூடக் கேட்கிறார்கிறார்களில்லையே என்று நொந்து வந்த பெருமூச்சை அடக்கி எழும்புவதுமாதிரி உடம்பை நிமிர்த்துகையில்………….
“ஏன்……………….” என்று இழுத்தனர் இருகுரலில்.
“வீட்டை போகப்போறன்”
“அதில்லை ஏன் வீட்டை விக்கிறியள்………”
“ தவணை அரியேர்ஸ் 46,000 க்கும்மேல வந்திட்டுது……… பாங்க் கொடுக்கிற பிறெஷர் எங்களால தாங்கேலாது…………. நீங்களும் ஒழுங்காக வாடகை கட்டுறேல்ல……………… தவணைக்காசு கட்டுறதுக்காக வெளியில பிறைவேற் பார்ட்டியளிடமும் கடன்பட்டு கடனுக்குமேல கடனாய் வளர்ந்திட்டிருக்கு, இனியும் எங்களால தாக்குப்பிடிக்கேலாது உருத்திரன். எங்களுக்கு வேறவழியொன்றுந் தெரியேல்ல. மிஸ்டர்.சிவபெருமானும் அதைத்தான் எங்களுக்கு சஜெஸ்ட் பண்றார்…….. அதுதான் இந்த முடிவுக்கு வந்திட்டம். ஒரு டெனென்டை வைச்சுக்கொண்டு வீட்டை விக்கிறதும் கஷ்டம்……………….. வாங்கிறவனும் சம்மதிக்கான்……. என்ன நீங்களும் சீக்கிரம் வேற வீடு பார்க்கவேண்டியிருக்கும்.”
இருவரும் நிலத்தைப்பார்த்துக்கொண்டு தொடர்ந்தும் மௌனமாயிருந்தார்கள்.
பின் உருத்திரன் வாய் திறந்தான்:
“ நான் கொம்பனியோட கதைச்சு தவணைத்தொகையைக் குறைச்சுத்தாறன் என்டவும் சம்மதிக்கிறியள் இல்லை, நீங்க விற்கத் தீர்மானிச்சிட்டால் அதுக்கும்மேல ஆலோசனை சொல்ற தகுதி எனக்கு இல்லை…………………………. அந்தளவுக்கு நான் பெரிய ஆளெல்லாங்கிடையாது…… ஆனா ஒன்று மட்டும் சொல்லுவன் பொஸ், வேணுமென்டால் நீங்களதை ஒரு றிகுவெஸ்டாயும் கொள்ளலாம்.”
“ எதென்டாலும் சொல்லும் ”
“ எங்களுக்குத் தெரியாமல் வீட்டைமட்டும் யாரும் அந்நியருக்கு வித்துப்போடாதையுங்கோ…………… நாங்களும் வீடுதான் ஒன்று தேடிக்கொண்டிருக்கிறம்.”
வீட்டை அவர்களுக்கே விற்றுவிடமுடிவுசெய்தோம். அந்தப்பிசினை அங்கிருந்து கிளப்புவதைவிட , இம்மாம் பரந்த கனடாவில் இன்னொரு வீட்டை வாங்குவது இலேசாகத்தான் இருக்கும்.
– தீராநதி (ஆகஸ்ட் 2015)