கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: September 29, 2015
பார்வையிட்டோர்: 12,489 
 

நான்கு குறைப் பிரசவங்கள். பின்னர், சோதனைக்குழாய்வழி வயிற்றில் வளர்ந்த கருவும் மூன்றே மாதங்களில் வெளிப்பட்டு விட்டது. `தத்து எடுக்கலாம்,’ என்று அவர் சொன்னதற்கும் அவள் செவி சாய்க்கவில்லை. குழந்தை அவள் உதிரத்தில்தான் உதிக்க வேண்டுமாம்.

ஒருவரையும் ஏறிட்டுப் பார்க்க விரும்பாது, சுவற்றுப்புறம் திரும்பி விசும்பிக் கொண்டிருந்த ஆசைமனைவியின் முகத்தில் சிரிப்பைக் காண வேண்டுமென்றால், தமிழ்நாட்டுக்கென்ன, உலகின் எந்தக் கோடிக்கானாலும் அழைத்துப் போகலாமே என்ற யோசனை வந்தது அந்தச் செல்வந்தருக்கு.

`மனசைத் தளர விடாதேம்மா. இன்னும் ஒரு வழி இருக்கு. இதைப் படிச்சுப் பாரு!’ என்று ஒரு பத்திரிகையில் வந்திருந்த கட்டுரையைக் குறிப்பிட்டுக் காட்டிவிட்டு அப்பால் சென்றார்.

பல பெண்களின் பேட்டியுடன் வந்திருந்ததை ஒரு கதையாக நினைத்துப் படித்தாள்.

“தே! நீ என்னா சொல்றே? இப்ப தலையைத் தலையை ஆட்டிட்டு, யார் பிள்ளையோ என் வயத்திலே வளர்றதைப் பாக்கிறப்போ, ஒன்னால அதை ஏத்துக்க முடியுமா?”

ஆட்டோ ஓட்டிப் போனபோது ஏற்பட்ட விபத்தில் இடுப்புக்குக்கீழ் சுவாதீனம் அற்றுப்போய், காலமெல்லாம் மனைவியின் கையை எதிர்பார்க்க வேண்டும் என்ற நிலை வந்தபோதுகூட ராசப்பா அவ்வளவு குழம்பவில்லை. எதுவும் சொல்லத் தெரியாது, அவளையே பார்த்தான். அவனைக் கணவனாக வரித்த கொடுமை, இப்போது குடும்ப பாரத்தைச் சுமக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவளுக்கு.

எந்த இளம்பெண் எப்போது நிர்க்கதியாக நிற்பாள் என்று காத்திருந்தவர்போல, அவர்கள் வாழ்க்கையில் நுழைந்திருக்கிறரே இந்த மனிதர்! இப்படியெல்லாம்கூடவா பணம் சம்பாதிப்பார்கள்!

“ஒங்களுக்கென்ன! ஒங்க பேரைச் சொல்ல லட்டுமாதிரி பிள்ளை இருக்கு. எத்தனை பேருக்குக்கி டைக்கும் இந்தப்பாக்கியம்!” என்று நைச்சியமாக ஆரம்பித்த தரகர் பூபதி, “சில பேருக்கு, கல்யாணமாகி பத்து, பதினஞ்சு வருஷமானாலும் பிள்ளை பாக்கியமே இல்லை, பாவம்!” என்று பொய்யாகப் பரிதாபப்பட்டார். பின், அவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “எல்லாத்துக்கும் கொடுப்பினை வேணுமில்ல!” என்று கொக்கி போட்டார்.

அவர் மேலும் சொன்னதைக் கேட்டு, நாகம்மாதான் வெகுவாக அதிர்ந்து போனாள்.

யாருடைய கர்ப்பப்பையிலோ வளரவேண்டிய கருவை அவளுடைய வயிற்றில் விதைப்பார்களாம். அதை முழுமையாக வளரவிட்டு, பெற்றெடுத்து, அதற்கு உயிர் கொடுத்தவர்களிடமே கொடுத்துவிட வேண்டுமாம்!

“சும்மா இல்ல. மாசாமாசம் ஆயிரம் ரூபாய் குடுப்பாங்க. பிள்ளை பிறந்ததும், சுளையா இன்னொரு அம்பதாயிரம்!” நைச்சியமாகச் சொன்னார் பூபதி. பணத்தாசைக்கு மசியாதவர் யார் என்று எண்ணித்தான் அவர் அந்த இடத்துக்கு வந்திருந்தார்.

ஆனால் நாகம்மா வேறு ஒன்றை யோசித்தாள்: `என் வயத்தை வாடகைக்குக் கேக்கறாங்க!’

உடலை விற்றுப் பிழைப்பதுபோல் ஆகிவிடாது?

இவளை அதிகம் யோசிக்கவிட்டால் ஆபத்து என்று பூபதி மேலும் தூபம் போட்டார். “இதெல்லாம் முப்பது, நாப்பது வருஷமா அமெரிக்காவில இருக்கிற நடைமுறைதான். இல்லாதவங்களுக்கு இருக்கிறவங்க குடுக்கிற தானம்! அதோட.., நீங்க ஒண்ணும் சும்மா குடுக்கப்போறதில்ல!”

தன்னை எதற்குக் குறிவைத்தார் இந்த மனிதர்? வெளிப்படையாகவே கேட்டாள் நாகம்மா.

“அது வந்தும்மா..,” சற்று யோசனையில் ஆழ்ந்தார். “பிறக்கப்போற குழந்தைக்கு நீங்க அம்மா இல்லியா? கண்ட கழிசடை எல்லாம் அம்மா ஆகிட முடியுமா? அதான், ஒங்களைமாதிரி.. நல்ல விதமா குடும்பம் நடத்தி, ஒரு பிள்ளையாவது பெத்துக்கிட்டவங்களாப் பாக்கறோம். வயசு.. ஒரு இருபத்தஞ்சிலேருந்து முப்பதுக்குள்ளே இருந்தா, பிரசவத்திலும் குளறுபடி இருக்காது”.

இன்னொரு உயிரா! வீட்டிலிருக்கிற மூன்று பேருக்கே அவள் கூலிவேலை செய்து கொண்டு வருகிற சொற்ப வருவாயில் அரை வயிறுகூட நிரம்புவதில்லை.

அவளது மன ஒட்டத்தைப் புரிந்துகொண்டவராக, “பேசினதைத் தவிர, ஒங்களுக்கு ஆகிற சாப்பாட்டுச் செலவு, பால், பழம், உடை எல்லாத்துக்கும் தனியா குடுப்பாங்க. நீங்க வேலைக்குப் போக வேணாம்,” என்று மேலும் ஆசை காட்டினார்.

நாகம்மாவுக்கு ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. அழுகைதான் வந்தது.

அதைப் பார்க்கப் பொறாதவனாய், முதன்முறையாக ராசப்பா பேசினான்: “யோசிச்சுச் சொல்றோங்க ஐயா!”

“ஒங்க இஷ்டம்!” என்றபடி எழுந்தார் பூபதி. வாசலுக்கு வந்தவர், தன்னையும் அறியாது மூக்கைப் பிடித்துக்கொண்டார். ஆறெனப் பெருகி ஓடும் சாக்கடை. அதையே நீச்சல் குளமாகப் பாவித்து, மனமகிழ்ந்து, எம்பி எம்பி குதித்துக்கொண்டிருந்த பன்றிகள்.

`எப்படித்தான் இந்த நாத்தத்திலே சாப்பிட்டு, தூங்கி, குடும்பம் நடத்தறாங்களோ!’ அருவருப்புடன் உதட்டைச் சுழித்துக்கொண்டார். `இந்த லட்சணத்தில, சுலபமா சம்பாதிக்க வழி காட்டினா, அதுக்கு ஆயிரம் யோசனை!’ இயலாமையில் ஆத்திரம் பிறந்தது அவருக்கு.

மீண்டும் ஏதோ நினைத்துக்கொண்டவராய், குடிசையினுள் நுழைந்து, சாணி போட்டு மெழுகியிருந்த தரையில் அமர்ந்தார். “முக்கியமான ஒண்ணைச் சொல்ல மறந்துட்டேனே! இதில தில்லுமுல்லு ஏதுமில்ல. ரெண்டு தரப்புக்கும் வக்கீல் வெச்சு ஒப்பந்தம் எழுதுவாங்க டாக்டரம்மா. ஒங்களுக்கும், பிள்ளையை வாங்கப்போறவங்களுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. இருக்கக்கூடாது!” என்று அழுத்திச் சொன்னார். இந்த ஏற்பாட்டால் தனது பொருளாதாரம் கணிசமாக உயரப்போவதை கற்பனை செய்து மகிழ்ந்தார்.

ராசப்பாவுக்கும் ஆசை பிறந்தது. கைநிறையப் பணம் கிடைத்தால், தான் இப்படி படுக்கையே கதி என்று இருக்க வேண்டாம். ஒன்றுக்குப் போக, குளிக்க என்று எந்த ஒன்றுக்கும் பிறர் கையை எதிர்பார்க்க வேண்டாம். எத்தனை நாட்கள்தான் முகம் சுளிக்காமல் செய்வாள் நாகம்மா!

“இன்னும் என்ன யோசனை, நாகு! ஐயா சொல்றதுபோல, இது ஒரு வியாபாரம்னு நெனச்சுக்கயேன்,” என்றான்.

அடைத்த குரலில் நாகம்மா பூபதியைக் கேட்டாள்: “அந்தப் பிள்ளை எப்படி..?”

அவர் நெற்றியில் அடித்துக்கொண்டார். “முக்கியமானதைச் சொல்லாம விட்டுட்டேன், பாருங்க! என்று பெரிதும் நொந்துகொண்டவராக, “இது மத்த பிள்ளைங்களைப்போல இல்ல. அம்மா ஒடம்புக்கு வெளியே உருவாகுது. அப்பாவோட உயிரணு, அம்மாகிட்டேயிருந்து சினைமுட்டை ரெண்டையும் டாக்டரே ஒண்ணா சேர்த்து..,” என்று உற்சாகமாக ஆரம்பித்தவர், இந்தப் பாமரர்களுக்கு விஞ்ஞான ரீதியில் விளக்கம் எதற்கு என்று நிச்சயித்தவராக, “மண்ணிலே விதை போட்டா, செடி முளைக்கிற மாதிரிதான்னு வெச்சுக்குங்களேன். கரு உருவாகிடுச்சுன்னு உறுதி ஆனப்புறம், ஒங்க வயத்தில அதை விதைச்சுடுவாங்க. ஏன்னா, அந்த அம்மா வயத்தில கரு தங்கறதில்லே!”

“நாத்து நடறமாதிரி!” என்றாள் நாகம்மா. அவளுடைய முகத்தில் தெளிவு. தான் அறியாத அந்தப் பணக்காரப் பெண்மணியின்மேல் இரக்கம் சுரந்தது. தான் அவளைவிட ஒரு விதத்தில் மேலானவள்!

அச்சமயம் பார்த்து, சிறுவன் வேலு தூக்கத்திலிருந்து எழுந்தான். நேராக நடந்து வந்து, தாயின் மடியில் அமர்ந்துகொண்டு, “பசிக்குதும்மா,” என்று முனகினான்.

இன்னும் கொஞ்ச காலத்துக்காகவாவது அவள் குடும்பத்தினர் வயிறாரச் சாப்பிடுவது அவள் கையில்தான் இருக்கிறது. அதைப்போய் தடுப்பானேன்!

பெருமூச்சுடன் அவனை அணைத்து, “ஒனக்குத் தம்பிப்பாப்பா பொறக்கப்போறாண்டா!” என்றாள்.

மாதங்கள் உருண்டன.

தாயின் பருத்திருந்த வயிற்றைத் தொட்டுப்பார்த்தான் வேலு. கரு உருண்டு, இன்னொரு கோடிக்குச் சென்றது. நாகம்மா கனிவுடன் வயிற்றைத் தடவினாள். சுகமான சுமை.

யாருடைய உயிராக இருந்தால் என்ன! இப்போதெல்லாம் இந்தப் பிள்ளைக்காகவே அவள் சாப்பிடுகிறாள், தூங்குகிறாள்!

இந்தக் குழந்தைக்கு செடிகளைப் பிடிக்கும், இசையில் ஆர்வம் என்று தன் மனதில் எழும் நெகிழ்ச்சியால் புரிந்து போகிறது அவளுக்கு. வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்திலேயே நாளின் பெரும்பகுதியைச் செலவழிக்கிறாள். குழந்தை அதிர்ந்துவிடப்போகிறதே என்ற கரிசனத்துடன், சினிமாப் பாடல்களைத் தவிர்க்கிறாள். மலேசிய வானொலியில் கேட்டிருந்த பழம்பாடல்களையும், பக்திப் பாடல்களையும் வாய் ஓயாது முணுமுணுக்கிறது. ஸ்ருதி, ஸ்வரம் போன்ற வார்த்தைகள் அவளது அகராதியில் கிடையாது. ஏதோ, தனக்குத் தெரிந்தவரை கள்ளக்குரலில் கீச்சுமூச்சென்று பாடுகிறாள். அவள் வயிற்றுக் கருவும் அதில் திளைத்து ஆனந்தப்படுவதாகத்தான் தோன்றுகிறது அவளுக்கு.

வேலுவை உண்டாகி இருந்தபோது இப்படி ஆழ்ந்து யோசித்ததாக நினைவில்லை. எதுவுமே கைநழுவிப் போய்விடும் என்ற நிலை வரும்போதுதான் அதன் மீதுள்ள ஆசை அதிகரிக்குமோ என்று யோசிக்க, கலக்கம் பெருகியது.

தன்னுடலின் ஒரு பாகமாக பத்து மாதங்கள் இருக்கப்போகும் பிள்ளை. அது ஆணா, பெண்ணா, கறுப்பா, சிவப்பா, தலைமயிர் சுருட்டையா, அடர்த்தியா என்றெல்லாம்கூட அவள் பார்க்கக்கூடாதாம்

நாகம்மாவுக்கு அழுகை வந்தது. “அம்மா!” என்று விம்மினாள்.

“அம்மான்னு இப்போ கத்தக்கூடாது. அப்புறம், குழந்தை ஒன்னை விட்டுவர மனசில்லாம தவிக்கும்!” பிரசவ வலி எடுத்திருந்தவளை தாதி மிரட்டுகிறாள்.

“குழந்தைக்கும் தன்னை விட்டுத் தனியாகப் பிரிய மனம் வராதா?’ லேசான திருப்தி நாகம்மாவுக்குள். உடனே, தன் மனம் போன போக்கிற்காகத் தன்மேலேயே கோபம் எழுகிறது.

`இது என்கூட இருக்கப்போவது இன்னும் சில நாட்களே!’ என்று தான் உருகியதோடு போகட்டும். அருமையாக வளர்த்த இக்கருவும் துயரப்பட வேண்டாம்.

வலி தாளாது, கண்களை இறுக மூடி, வாயை மட்டும் கோணுகிறாள்.

திடீரென ஒரு நிம்மதி, உடல் லேசாகியதுபோல். தொடர்ந்து, பூனைக்குட்டி கத்துவதுபோல ஓர் ஒலி!

குழந்தை பிறந்துவிட்டது என்று உணர்ந்தபோதே அச்சமும் அலைக்கழைத்தது. அவசரமாகக் கண்ணைத் திறந்தாள். சமநிலைக்கு வந்திருந்த வயிற்றைத் தன்னிச்சையாகத் தடவினாள். பக்கவாட்டில் கண் போயிற்று.

வெறுமை — அவள் வயிற்றிலும், பக்கத்திலும். நாகம்மா விம்ம ஆரம்பித்தாள்.

“இப்போ எதுக்கு அழுவறே? மொதல்லேயே எல்லாம் கேட்டுட்டுத்தானே ஒத்துக்கிட்டே? பேசாம தூங்குவியா!” பச்சைப்பிள்ளைக்காரி கண்கலங்கி, அவள் உடம்பு கெட்டுவைத்தால், தனக்கு வேலை அதிகமாகுமே என்ற எரிச்சல் தாதிக்கு.

கண்ணை மூடிக்கொண்டாள் நாகம்மா. குழந்தையின் ஈனஸ்வரமான அழுகைக் குரல் இன்னிசையாக அவள் காதில் ஒலித்துக்கொண்டே இருக்க, அப்படியே உறக்கத்தில் ஆழ்ந்தாள்.

“என்ன ராசப்பா? சக்கர நாற்காலி வாங்கிட்டாப்பல இருக்கு! சாப்பாட்டுக் கடை வெச்சிருக்கியா? நடக்கட்டும், நடக்கட்டும்,” ஆரவாரமாகப் பேசியபடி வந்தார் தரகர் பூபதி. “ஒன் பெண்டாட்டி எங்கே? கூப்பிடு!”

வெந்த இட்லிகளைத் தட்டில் கொட்டிக்கொண்டிருந்த நாகம்மா அவர் குரலைக் கேட்டதும் பாய்ந்து வெளியே வந்தாள். “பிள்ளை எப்படிங்க ஐயா இருக்கு?”

“அதுக்கென்ன! பெரிய இடத்துப் பிள்ளை! அதைப் பெத்தவங்க ஒங்களை தெய்வமாத்தான் நினைச்சுக்கிட்டு இருக்காங்க,” என்று அளந்தார். குரலைக் கனைத்துக்கொண்டு, “அதே மாதிரி இன்னொரு கேசில்ல! இதை நீங்க ஒத்துக்கிட்டா, பெரிய ஹோட்டலே வெச்சுடலாம்,” என்று ஆரம்பித்தார்.

ராசப்பாவின் முகத்தில் லேசான ஆசை படர்ந்தது. விளங்காத பயலென்று தன்னை இப்போது பழிப்பவர்கள் தான் ஹோட்டல் முதலாளியானால் எப்படி மரியாதை செய்வார்கள் என்று கற்பனை பாய, உடல் நிமிர்ந்தது. சற்றே கெஞ்சலான பார்வையை மனைவியின்மேல் ஓடவிட்டான்.

யாரும் சற்றும் எதிர்பாராவண்ணம், நாகம்மா தரகர்மேல் பாய்ந்தாள். “ஒங்களுக்கு ஒரு பெரிய கும்பிடு, சாமி. இந்த எடத்தைவிட்டுப் போயிடுங்க. என்னோட வயத்திலே சுமந்து, சுமந்து யாருக்கோ தூக்கிக் குடுக்க என்னால முடியாது. `தம்பிப் பாப்பா எங்கம்மா?’ன்னு எம்பிள்ளை கேக்கறப்போ எல்லாம் நான் துடிக்கிற துடிப்பு ஒங்களைமாதிரி ஆம்பளைங்களுக்கு எங்க புரியப்போகுது!” என்று நேரிடைத் தாக்குதலில் இறங்கினாள்.

“நாகு!” தங்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியவரிடம் மரியாதைக் குறைவாகப் பேசுகிறாளே என்ற பதைப்புடன் அவளை அடக்க முயன்ற கணவனின் குரல் அவள் காதில் விழவில்லை. தான்பாட்டில் பேசிக்கொண்டே போனாள்.

“அன்னிக்கு நாத்துன்னு சொன்னேன். ஆனா, நான் மண்ணில்லே. அது இப்பதான் புரியுது!” என்று விம்மியவள், “ஒரு செடியைப் பிடுங்கி நடறப்போகூட வேரோட கொஞ்சம் தாய்மண்ணையும் சேர்த்துத்தான் எடுப்போம். எனக்கு அந்த கொடுப்பினைகூட இல்லாம போச்சே! பிள்ளை முகத்தைக்கூட பாக்க முடியாத பாவி ஆயிட்டேனே!” என்று பெரிதாக அழ ஆரம்பித்தாள்.

அவளுடைய ஆத்மாவின் ஓலத்தைப் புரிந்துகொள்ள முடியாது, “ஏதோ குழப்பத்திலே இருக்கீங்கபோல! நான் போயிட்டு, அப்புறமா வரேன்,” என்று எழுந்தார் தரகர்.

“வராதீங்க. போங்க! பிள்ளை பெத்ததும், மாரிலே பால் கட்டிக்கிட்டு நான் துடிச்ச துடிப்பு ஒங்களுக்குப் புரியுமா?” வெறிபிடித்தவளாகக் கத்தினாள் நாகம்மா. “எங்களுக்கு இனிமே சோத்துக்குப் பஞ்சம் இல்லாம இருக்கலாம். ஆனா, நான் சாகிறவரைக்கும், `என் வயத்திலே சுமந்து பெத்த பிள்ளை எங்கே இருக்கோ, எப்படி இருக்கோ! அதைப் பாக்கக்கூட முடியலியே!’ன்னு என்னோட அடிமனசு குமுறிக்கிட்டே இருக்குமே! ஒங்க பணத்தால அதைச் சமாதானப்படுத்த முடியுமா? ஏன்யா? ஏழைங்கன்னா, பணந்தான் கிடையாது. உணர்ச்சிங்ககூட இருக்காதா?” வார்த்தை குழற முடித்துவிட்டுக் கதறினாள்.

`படிச்சுட்டியா? சென்னைக்குப் போக ரெண்டு டிக்கெட் புக் பண்ணடடுமா, டியர்?’ மனைவியின் முகம் தெளிந்திருக்கிறதே என்ற உவகையுடன் கேட்டார் செல்வந்தர்.

‘நாடு விட்டு நாடு போய், வாடகைத் தாயெல்லாம் வேணாங்க. நம்ப மகிழ்ச்சிக்காக இன்னொரு பொண்ணை அழவிடறது நியாயமில்லே. இங்கேயே ஒரு குழந்தையை தத்து எடுக்கலாம்!’

(மலேசிய சுதந்திர தின சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது, 2005)

Print Friendly, PDF & Email

1 thought on “நாற்று

  1. நாற்று நெகிழ வைத்தது . அருமையான கதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *