கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: January 29, 2020
பார்வையிட்டோர்: 17,063 
 

ரமணி, ஜகந்நாதன் எல்லோருக்கும் தம்பி தங்கைகள் உண்டு. நந்துவிற்கு வெகு நாட்கள் வரையில் தம்பி இல்லை. தம்பி வரப் போகிறதும் அவனுக்குத் தெரியாது. தம்பி வேண்டாம் என்று அவன் நினைத்துக்கொண்டிருந்தான்.

ஒரு சமயம் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் படுத்துக் கொண்டிருந்தாள். நந்துவைக் கவனிக்கவே மாட்டாள். அக்காதான் நந்துவை விரட்டுவாள். ”இன்னும் குளிக்கலையா! இன்னுமா சாப்பிடலே! பின்னே எப்போ பள்ளிக்கூடம் போறது!” என்று சும்மா சும்மாக் கேட்பாள்.

ஒரு நாள் அம்மா, அந்தப் பக்கமாகத் திரும்பிப் படுத்துக் கொண்டு அழுவதைக் கூட நந்து பார்த்தான். அது அவனுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. கவனிக்காதது போல் பாசங்கு செய்து ஓடிப் போய்விட்டான்.

பிறகு ஒரு நாள், அம்மாவிற்கு உடம்பு சரியாகிப் போன பிறகு, அம்மாவே நந்துவையும் அக்காவையும் கூப்பிட்டு, ”உங்களுக்கு ஒரு தம்பி பிறக்கப்போகிறதே, தெரியுமோ” என்று கேட்டாள்.

”தெரியுமே!” என்று இரண்டுபேரும் சேர்ந்தாற்போல் சந்தோஷத்துடன் சொன்னார்கள். இந்த ரகசியத்தை அம்மாவிடம் சொல்லாமல் ஒளித்து வைத்திருப்பது அவர்கள் இரண்டு பேருக்கும் நிரம்பவும் கஷ்டமாக இருந்தது. அம்மா என்னவோ மாதிரி இருந்த படியால் தாங்களே அம்மாவிடம் சொல்வதும் அவர்களுக்குக் கஷ்டமாக இருந்தது. இப்போது அம்மாவே நேரே சொல்லி விட்டதால் அவர்கள் இரண்டு பேருக்கும் நிரம்பவும் சந்தோஷம்.

”யார் உங்களுக்குச் சொன்னார்கள்?” என்று அம்மா ஆச்சர்யத்துடன் கேட்டாள்.

பாட்டி என்று அவர்கள் பெருமையாகச் சொன்னார்கள். இந்த ரகசியம் அவர்களுக்குத் தெரிந்திருப்பதில் ஒரு பெருமை. அதற்கப்புறம் எல்லாரும் சந்தோஷமாக இருந்தார்கள்.

நந்துவின் சித்தி பிள்ளை ராம்ஜிக்குத் தங்கை பிறந்த சமயம் அவன் ரொம்பவும் வெட்கப்பட்டான். ”உனக்குத் தங்கை பிறந்திருக்கிறதா, ராம்ஜி?” என்று யாராவது கேட்டால் அவன் தன்னுடைய அம்மாவிற்குப் பிறந்திருக்கிறது என்று நினைக்காமல், தனக்குத்தான் பிறந்த விட்டது என்று எண்ணிக்கொண்டு வெட்கப்பட்டுக் கதவு மூலையில் போய் ஒளிந்து கொள்ளவான். நந்து அந்த மாதிரி இல்லை. சாதாரணமாக இருந்தான். தம்பி வரப்போகிறதைப் பற்றி நினைக்கவே இல்லை. அது எப்படியும் ஏற்படப்போகும் விஷயம் என்று அதை ஏற்றுக்கொண்டு விட்டான்.

தம்பி பிறந்த சமயம் நந்துவிற்கு அவ்விஷயம் அவ்வளவு பெருமையாகவும் இல்லை. அவன் அறைக்கு வெளியில் நின்ற வண்ணம் எட்டிப் பார்த்துவிட்டுப் போய் விடுவான். அம்மா மாத்திரம் சீக்கிரம் குளித்துவிட்டு வந்தால் தேவலை என்று அவனுக்குத் தோன்றும். அக்காவோ, ”தம்பி ரொம்ப அழகாய் இருக்கிறதே” என்று பெருமைப்பட்டுக்கொண்டு அறையின் வாசற்படியிலேயே எப்போதும் உட்கார்ந்து கொண்டிருப்பாள்.

பத்துப் பதினைந்து நாட்கள் கழித்து அக்கா குழந்தையை எடுத்துக் கொள்ள ஆரம்பித்தாள். நந்து பள்ளிக்கூடத்திலிருந்து வந்து, பஷணம் சாப்பிட்டு, விளையாடின பிறகு சாவகாசம் இருந்தால் தம்பியைப் போய்ப் பார்ப்பான், அது படுத்துக் கொண்டே இருக்கும். இவனும் அதன் பக்கத்தில் படுத்துக் கொள்வான். உடனே அக்கா, ”எந்திரு, நீ போ – அம்மா, இதோ பாரேன், வந்து குழந்தையை நசுக்கறான்” என்பாள். மேலும், ”அது சின்னதாய் அழகாய் இருக்கு. அதன் பக்கத்தில் நந்து படுத்துக் கொண்டால் இவனைப் பார்த்தால் ராஷஸன் மாதிரி இருக்கு” என்பாள்.

நந்து சிரித்துவிட்டு இன்னும் கொஞ்சம் நெருங்கிப் படுத்துக் கொள்வான். அக்கா கோபித்துக் கொண்டு குழந்தையை எடுத்துக் கொண்டு வேறிடம் போய்விடுவாள்.

தம்பிக்குப் பத்து மாதமாகித் தவழும் சமயத்தில் நந்துவும் கூடக்கூடத் தவழ்ந்து அதற்கு அழகு காண்பிப்பான், போட்டியிடுவான். அது சிரிக்கும். இவனும் சிரிப்பான்.

அது உட்கார்ந்திருக்கும்போது அதனுடைய மடியில் இவன் தலையை வைத்துக் கொண்டு படுத்துக் கொள்வான். அது இவனுடைய தலைமயிரைப் பிடித்து இழுக்கும், பிய்க்கும்.

அம்மா பார்த்துவிட்டு, ”ஐயையோ, எழுந்திரு. அது இந்த மாதிரி பண்ணுவதற்கு இடம் கொடுக்காதே” என்பாள். ஆனால் தம்பியின் சின்னக் கையால் நந்துவின் மயிரைப் பிடித்து இழுத்தால் அது நந்துவுக்கு வலிக்கவே வலிக்காது. வேடிக்கையாகத்தான் இருக்கும்.

பிற்பாடு தம்பிக்கு இரண்டு இரண்டரை வயசான பிறகுதான் இவர்களுடைய சண்டைகள் ஆரம்பித்தன.

நந்துவின் தம்பிக்கு ரகு என்ற பெயர். ஒரு நாள் ரகு, நந்துவின் புஸ்தகத்தை எடுத்துப் பார்த்தது. உடனே நந்து அதைப் பிடுங்கிக்கொண்டு ஓடினான். ரகு துரத்திக்கொண்டு ஓடிற்று. நந்துவை அதனால் பிடிக்கமுடியவில்லை. உடனே அசடாக அழுதது. அழக்கூடாதல்லாவா? ஆகையால் ஓடிப்போன நந்து திரும்பி வந்து அதனுடைய கன்னத்தில் மெதுவாக அடித்தான். ரகு உடனே அவனைப் பதிலுக்கு அடித்தது. அம்மா ஓடிவந்து பார்த்தாள்.

”பாரு அம்மா, ரகுவை. என் பொஸ்தகத்தைக் கிழிக்கணும்னு அழறான்” என்று நந்து பெரிதாய்ப் புகார் சொன்னான்.

”நந்து அடிச்சான்” என்று ரகு அழுதது.

”ஏன் நந்து? தம்பியை அடிச்சியா?” என்று ஆச்சர்யத்துடன் அம்மா கேட்டாள்.

‘‘நீ ரொம்ப சமர்த்தாயிற்றே! நீயா தம்பியை அடித்தாய்?’’ என்று மறுபடி கேட்டாள்.

நந்துவுக்கு வெட்கமாய் இருந்தது. இருந்தாலும் தான் செய்தது சரி என்று காண்பிப்பதற்காக, ”அவன் மாத்திரம் என் புத்தகத்தைக் கிழிக்கலாமோ?” என்று கேட்டுவிட்டுக் கோபித்துக் கொண்டு முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு குப்புறப் படுத்தான்.

உடனே ரகுவும் ”அவன் என்னே அடிச்சான்” என்று சொல்லி, நந்துவை போலவே கோபித்துக்கொண்டு குப்புறப் படுத்தது. நந்துவைப் போலவே அதுவும் முகத்தை வைத்துக்கொள்ளும், நந்துவைப் போலவே அதுவும் கையால் முகத்தை மூடிக் கொள்ளும்.

மறுதினம் அம்மா ரகுவிற்கும் ஒரு புஸ்தகம் வாங்கிக் கொடுத்தாள். அதை ரகு பெருமையாகக் எடுத்துக் கொண்டு இங்கும் அங்கும் உலாவிற்று. நந்துவிற்குத் தம்பியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதே தெரியாது. உடனே ரகு நந்துவின் தலைமயிரை இரண்டு கையாலும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு இழுத்தது. நந்து கத்தினான். அம்மா ஓடி வந்தாள்.

”பாரும்மா! நான் ஒண்ணும் பண்ணாம இருக்கச்சே ரகுதான் என்னே மொதல்ல அடிச்சான்” என்றான் நந்து.

அம்மா ரகுவைத் திரும்பிப் பார்த்தாள். உடனே ரகு முதல் நாள் நந்து முகத்தைக் கோபமாக வைத்துக் கொண்டிருந்த மாதிரி வைத்துக் கொண்டு கைகளால் முகத்தை மூடிக்கொண்டு குப்புறப் படுத்தது. தலையைத் தூக்கவே மாட்டேனென்றது.

நந்து, ”இந்தா உன் புஸ்தகம்” என்று சொல்லி ரகுவின் புஸ்தகத்தை அவனிடம் வீசி எறிந்தான். ரகு உடனே அதை வாங்கிக் கொள்ள மாட்டேனென்று நந்துவிடம் திரும்ப எறிந்தது. புஸ்தகம் கிழிந்துவிட்டது.

உடனே அம்மா புஸ்தகத்தை எடுத்துக் கொண்டு ரகுவையும் அழைத்துக் கொண்டு உள்ளே போய்க் கோந்து தடவி அதை ஒட்டிக் கொடுத்தாள். ரகு உடனே தானும் கொஞ்சம் கோந்தை எடுத்துத் தன்னுடைய தொப்பையில் தடவிக்கொண்டு அதன் மேல் சொக்காயை வைத்து ஒட்டிக் கொண்டது.

நந்துவிற்கு அதைப் பார்த்ததும் சிரிப்புச் சிரிப்பாக வந்தது. இந்த மாதிரி ஒரு பைத்தியம் இருக்குமோ என்று தோன்றிற்று. அவனுடைய கோபம் போய்விட்டபடியால் அவன் விளையாட ஓடிப் போய்விட்டான்.

ஆனால் நாளுக்கு நாள் இவர்கள் இரண்டு பேர்களுடைய சண்டையும் அதிகரித்தது. அம்மா நந்துவிடம், ”நீ சமத்தாக இரு, நந்து. அப்பொழுதுதான் அவனும் சமத்தாக இருப்பான்” என்று சொன்னாள். நந்துவும் சமத்தாக இருக்கத்தான் பார்ப்பான். பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் ஆவலாய்த் தம்பியுடன் விளையாட வருவான். ஆனால் ரகு தப்புச் செய்தால் அதைத் திருத்த வேண்டாமா? திருத்தப் பார்த்தால் உடனே சண்டை ஏற்பட்டுவிடும்.

ஒரு நாள் இவர்கள் சண்டை போடுவதைப் பார்த்துக் கொண்டே இருந்த அப்பா, ”நந்து நீதான் ரகுவைச் சீண்டுகிறாய். அந்த மாதிரி செய்யக்கூடாது!” என்று கண்டித்தார்.

அதை ரகு கேட்டுக் கொண்டிருந்தது போலிருக்கிறது. மறுபடி எப்பொழுதோ இவர்கள் சண்டையிட்ட சமயம் குடுகுடுவென்று அம்மாவிடம் ரகு போய், ”அம்மா, நந்து என்னே சீண்ட்றான்” என்றது.

”அப்படிச் சொன்னால் என்ன அர்த்தம்?” என்று அம்மா கேட்டாள். அவன் இவ்வளவு பெரிய வார்த்தையைச் சொன்னது அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

அம்மா கேட்டதற்குப் பதில் சொல்ல ரகுவிற்குத் தெரியவில்லை. திருதிருவென்று விழித்துவிட்டு, ”நந்து என்னே சீண்ட்றான்!” என்று மறுபடி சொல்லி அம்மாவின் பின்னால் போய் ஒளிந்து கொண்டது.

நாளுக்கு நாள் நந்துவிற்குத் தன் தம்பியின் பேரில் பிரியம் அதிகம்தான். ஆனால் பெரியவனான இவன் புத்திமதி சொன்னால் ரகு கேட்கவே கேட்காது. தான் நல்லது சொன்னால் அவன் கேட்கவில்லையே என்று நந்துவிற்குக் கோபம் வரும். சண்டை உண்டாகும்.

அம்மா ஏதாகிலும் பழம் வாங்கினால் ரகுவிற்குக் கொடுத்துவிட்டு, மற்றொன்றை ”இது நந்துவிற்காக” என்று எடுத்து வைத்தால் ரகு உடனே, ”அதுவும் நேக்கு. நந்துவுக்கு வேண்டாம். அவென் என்னே அடிச்சான்” என்று சொல்லி அதையும் கொடுக்க வேண்டும் என்று அழும். அம்மாவிற்கு ரொம்ப வெட்கமாக இருக்கும். என்ன செய்வது என்று தெரியாமல் வருத்தப்படுவாள்.

பிறகு ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று நந்து பள்ளிக்கூடம் போகாமல் வீட்டில் இருக்கும் சமயம், அம்மா அவனைத் தனியாக அழைத்து, மடியில் உட்கார வைத்துக் கொண்டு, ”நந்து, நீ பெரியவன். ரொம்பப் புத்திசாலி. பாடம் நன்றாகப் படிக்கிறாய். அப்படியிருக்க, நீ தம்பியோடு சண்டை போடுவது எனக்கு ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறதே” என்றாள்.

”அவன்தான் நான் சொல்றதைக் கேட்கமாட்டேன் என்கிறான். சண்டை போடுகிறான்” என்றான் நந்து.

”ஆமாம், அது சின்னது. ஒன்றும் தெரியாதது. சின்னக் குழந்தைகளுக்கெல்லாம் பிறக்கும்போது ஒன்றும் தெரியாது. நாம் செய்வதைப் பார்த்துப் பார்த்துத்தான் அதுகளும் கற்றுக் கொள்ளும். குரங்குக் குட்டிகள் பெரிய குரங்கு செய்வதையே தாங்களும் செய்வதை நீ பார்த்ததில்லையா? அதே மாதிரிதான் தம்பியும். நீ ஒரு தினம் அதனுடைய கையில் இருந்த புஸ்தகத்தை வெடுக்கென்று பிடுங்கினாய். அதைப் பார்த்துக் கொண்டே இருந்த ரகுவிற்கு மற்றொருவர் கையில் இருப்பதைப் பிடுங்கக்கூடாது என்பதே தெரியாமல் போய்விட்டது. இப்பொழுதெல்லாம் அது எல்லார் கையில் இருப்பதையும் பிடுங்குகிறது. நீ அடித்தால் அதுவும் அடிக்கிறது. நீ கோபித்துக் கொண்டால் அதுவும் கோபித்துக் கொள்ளுகிறது. அன்றைக்கு நீ பார்த்துக் கொண்டே இருந்தாயே, நான் கோந்தை எடுத்துப் புஸ்தகத்தில் தடவினேன். ரகுவும் உடனே கோந்தை எடுத்துத் தன்னுடைய தொப்பையில் தடவிக்கொண்டது. சின்னக் குழந்தைகள் எல்லாம் இப்படித்தான் இருக்கும். நாம்தான் பொறுமையாக அவர்களுக்கு நல்ல வழி காண்பித்துச் சொல்லிக் கொடுக்க வேண்டும்” என்றாள்.

”அது சரிம்மா. ஆனால் நான் சொல்றதே கேட்க மாட்டேன்றதே! அன்னிக்கு வெந்நீருள்ளே போச்சு. உடனே நான் ‘பச்சத்தண்ணித் தொட்டிலே எறங்காதே’ன்னு சொன்னேன். அது வேணும்னு உடனேயே சொக்காயோட அந்தத் தொட்டிக்குள்ளே எறங்கி அத்தனே தண்ணியையும் அழுக்காய்ப் பண்ணித்து” என்றான் நந்து.

”ஆமாம். நாம் ஏதாவது காரியத்தைச் செய்யக்கூடாதுன்னு அதட்டிச் சொன்னால் உடனே அதைச் செய்யவேண்டும்னு குழந்தைகளுக்குத் தோன்றும். நீ பெரியவன்தான். அவனைவிடப் புத்திசாலிதான். ஆனால் அதற்காக அதை எடுத்துக் காண்பித்து டம்பமாய்ப் பேசக்கூடாது. மரியாதை, பிரியம், பெருந்தன்மை எல்லாவற்றையும் நீ தம்பியிடம் காண்பித்து காண்பித்து அவனுக்கும் அதைக் கற்றுக் கொடுக்க வேண்டும். கெட்ட குணம் உடனே பழகிவிடும். நல்ல குணம் பழக நாள் ஆகும். நாம் திரும்பித் திரும்பிச் சொல்லிக் கொடுக்கணும். செய்து செய்து காண்பிக்க வேண்டும். தம்பி எதிரில் தப்பாகவே நடக்கக்கூடாது. கோபித்துக் கொள்ளக்கூடாது. அவன் அசடாக இருந்தால் பொறுத்துக் கொண்டு உன்னுடைய பெருந்தன்மையைக் காண்பித்து அவனுக்கு நல்ல வழி பழக்கணும். அவன் ஒரு பங்கு சமத்தாக இருக்க வேண்டுமென்றால் பெரியவனான நீ நாலு பங்கு சம்த்தாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவனுக்கு ஒரு பங்காவது பழகும். அவன் தப்புச் செய்யச் செய்ய, உன்னுடைய பிரியத்தை எல்லாம் அவனிடம் காண்பி. நல்ல வார்த்தைகளே சொல்லு. அவனுக்குப் புரியாததைத் தெளிவாகச் சொல்லு. அவன் எவ்வளவு சமத்தாகப் போய்விடுகிறான் என்பதைப் பார்த்து நீயே ஆச்சர்யப்படுவாய்” என்றாள்.

அதற்குப் பிறகு நந்து நிரம்பச் சமர்த்தாக இருந்தான். தம்பியைக் கோபித்துக் கொள்ளவே மாட்டான். கோபம் வந்தால் அடக்கிக் கொண்டு தம்பியிடம் நயமாகப் பேசி அவனைச் சமர்த்தாகச் செய்யப் பார்ப்பான். தம்பியும் நாளடையில் சமர்த்தாகி விட்டான்.

இது ஒரு பொய் கதைபோல் இருக்கிறதல்லவா? நாட்டில் பெரிய பெரிய சகோதரர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருக்கையில் எங்காகிலும் சிறு குழந்தைகள் ஓர் இரவில் சமர்த்தாகப் போய்விடுவார்களா?

***

குமுதினி

(1905 – 1986)

திருவிதாங்கூர் திவானாக இருந்த கோபாலாச்சாரியார் குடும்பத்தைச் சார்ந்த ரங்கநாயகியே குமுதினி. தன்னுடைய பத்தாவது வயதிலேயே திருமணம் செய்விக்கப்பட்ட இவர், திருமணத்திற்குப் பிறகும் வீட்டிலிருந்தே கல்வி பயின்றார். காந்தியின் கொள்கையில் பற்றுடைய குமுதினி, பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையிலும் அதனைப் பின்பற்றத் தவறவில்லை. எதிர்ப்பு வலுப்பட்ட சில நேரங்களில், காந்தியின் வார்தா ஆசிரமத்திற்குச் சென்று தங்கியுள்ளார். 1950களில் கலைமகளில் இவர் தொடராக எழுதிய உளவியல் கட்டுரைகள் அக்காலத்தில் மிகுந்த கவனிப்பைப் பெற்றவை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *