புறப்படும்பொழுது எதுவும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. பேருந்தில் ஏறியவுடன் இதுபோன்ற உணர்வுகளுடன் பயணம் செய்வதை என்னால் தவிர்க்க முடிவதில்லை. கீழே இறங்கிவிடலாமா என்ற எண்ணம் எப்பொழுதும் போல சற்றுத் தாமதமாகவேத் தோன்றியது. எண்ணங்களுக்கும் அப்பாற்பட்டவை சில இருக்கத்தான் செய்கின்றன. முழுமையான பயணம் எனக்கு எப்பொழுது கடைசியாக வாய்த்ததென்று மனம் ஆராய முற்பட்டது. மெதுவாகச் சுழிய ஆரம்பித்த நீர், வழிந்து மனதில் சொட்ட ஆரம்பித்தது. வெண்மை படர்ந்து, மனம் கரித்தது. பயணத்தின் இறுக்கம் இதனை ஸ்தூலமாகக் காட்டியது. என்னுடைய இயல்பு நீரில் நனைந்து நெளிந்து கொண்டிருந்தது. கண்ணாடிக்குடுவை மெதுவாக சூடேறிக்கொண்டிருந்தது. விரிவடைந்த நரம்புகள் வழி வெப்பம் பரவிக் கொண்டிருந்தது. திரவத்தின் குடுவை எப்பொழுது வேண்டுமானாலும் உடையலாம். கீறல் விழுந்து கசியலாம் அல்லது முட்டை மாதிரி நொறுங்கி சூடாக வெளிப்பட்டு என் வளைந்த கால்கள் வழி பாதங்களில் தேங்கி என்னை நசநசக்கச் செய்யலாம். இதனை என்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவர ஒரே வழி இப்பேருந்தைவிட்டு உடனே இறங்குவதுதான் என்ற முடிவு ஒரு மின்னலைப் போன்று ஒளியைப் பரப்பி மறைந்தது.
நெரிசல் மிகுந்த இந்நகரத்தின் மையப்பகுதியில் ஒரு குறுகலான இடத்தைத் தேடிக் கண்கள் சுழன்றன. வாகனங்களின் இரைச்சல் மனதில் அசூயையை ஏற்படுத்தியது. நடைமேடையை முழுக்கக் கடைகள் ஆக்கிரமித்திருந்தன. நகரத்தின் பிரதான சாலையை விட்டு சந்துசந்தாகப் பிரியும் தெருவிற்குள் இறங்கினேன். இந்நகர வீதிகள் ஏற்கனவே பழக்கப்பட்டவைதான் எனினும், இதற்கு முன்பு இதுபோன்று சிறுநீர்க் கழிக்க இடம் தேடி அலைந்ததாக நினைவில்லை. பிரதான சாலையிலிருந்து பிரிந்த ஒருவழிப் பாதையின் இடதுபுறத்தில் திரும்பி நடக்க ஆரம்பித்தேன். சிறிது நேரம் நின்று யோசிக்கவும் வேகமாக நடக்கவும் பயமாக இருந்தது.
இடைவெளிகளற்று இருந்த கடைகளும் அடுக்குமாடிக் குடியிருப்புகளும் “இடமில்லை போ’ என்பது போல மிரட்டின. இன்னும் சிறிது தூரம் நடந்தால் ஏதாவது மாநகராட்சி கட்டணக் கழிப்பிடம் தென்படும் என்ற எண்ணம் தன் வலிமையை இழந்து கொண்டிருந்தது. நண்பனிடம் வருவதாகக் கூறிய நேரமும் நெருங்கிக் கொண்டிருந்தது. என் உடலின் கீழ்ப்பகுதி மட்டும் நீரால் நிரம்பி அழுத்தியது. பிடிப்புகளற்று அந்தரத்தில் தொங்குவது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. உடல் மீதே எரிச்சல் உண்டாகியது. என்னைப் புரிந்துகொள்ளாத என் உணர்வுகளை மதிக்காத இந்த உடலை நான் மட்டும் எப்படிப் புரிந்து கொள்வது? ஒரு தெருப்பொறுக்கியைப் போன்று அலைந்துகொண்டிருக்கும் எனக்குள் ஏற்கனவே ஒருமுறை வந்துபோன அந்தக் குறுகலான சந்து நினைவிற்கு வந்தது.
வேட்டியைத் தூக்கியபடி போஸ் கொடுத்துக்கொண்டிருக்கும் மம்முட்டியின் போஸ்டருக்குப் பக்கத்தில் குப்பையைக் கொட்டி இடத்தை அடைத்திருந்தார்கள். குப்பை மீது பெய்துவிட்டு அம்மாவிடம் அடிவாங்கியதை அவ்வளவு எளிதாக மறந்துவிடமுடியாது. இந்த தியேட்டரில் எப்பொழுதும் மலையாளப் படம்தான் ஓடிக்கொண்டிருக்கும். மக்கள் நடமாட்டம் மிகுந்த அந்தச் சாலையின் கிழக்குத் திசையில் ஒரு தெரு திரும்பியது. பர்னிச்சர் கடைகள் நிரம்பிய நகரத்தின் மையப் பகுதி இது. நீர்மத்தை வடித்துவிட்டு ஒரு டீ குடித்தால் சற்று ஆறுதலாக இருக்குமென்று தோன்றியது. நின்று சுற்றும்முற்றும் பார்த்து அந்த மஞ்சள் நிறம் பெயர்ந்த அரசாங்க கட்டிடத்தின் பக்கத்தில் உள்ள முட்டுச்சந்தில் நுழைந்தேன். ஏற்கனவே பலபேர் ஒன்றுக்கு அடித்துவிட்டுச் சென்றதற்கான அடையாளங்கள் சுவரிலிருந்து வழிந்து கொண்டிருந்தன. மெல்ல ஆசுவாசப்படுத்திக்கொண்டு சுவரை உற்றுப்பார்த்தேன். சுவரில் எழுதியிருந்த “இங்கு சிறுநீர் கழித்தால் செருப்பால் அடிக்கப்படும்’ என்ற எச்சரிக்கை வாசகமும் அதன்மீது வெளிர்மஞ்சள் நிறத்தில் வழிந்து கொண்டிருக்கும் திரவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
ஒரு மழைக்காலப் பகல் நேரத்தில் வேலூர் பேருந்து நிலையத்தில் வந்து இறங்கியபோது, கூரையில்லாத அந்தச் சிறுநீர் கழிப்பிடத்தில் அடைந்த அதிர்ச்சியே இதுவரை முதல் இடத்தைப் பிடித்திருந்தது. மழைக்காலத்தில் சிறுநீர் கழிப்பிடத்தின் தேவை சற்றுக் கூடுதலாகவே இருக்கும். “வியர்வை சுரப்பிகளின் வேலை நிறுத்தம்தான் இதற்குக் காரணம்’ என்றார்கள் என் ஆறாம் வகுப்பு அறிவியல் டீச்சர். கான்கிரீட் போடப்பட்ட அந்தப் பேருந்து நிலையத்தில் மழைத்துளி செதில் செதிலாகத் தெறித்துக்கொண்டிருந்தது. கழிப்பிடத்தில் காணப்படும் மஞ்சள் நிறம் மழையின் காரணமாகத் தன் நிறத்தை இழந்து வெறும் படிவமாகக் காட்சியளித்தது. இதுபோன்ற இடங்களை மழை பெய்து கழுவினால்தான் உண்டு. கையில் வைத்திருந்த பையை வைக்க இடமற்று வெளியே வந்தேன். வெளிச்சுவரின்மீது பையை வைத்துவிட்டுப் பணியை முடிக்க எத்தனித்தபோது, நீல நிறத்தில் எழுதி வைத்திருந்த “இங்கு நாய்கள் மட்டுமே மூத்திரம் பெய்யும்’ என்ற எச்சரிக்கை என்னை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தியது. பயணத்தின் இடையில் எனக்கு முன் சீட்டில் அமர்ந்திருந்த அந்த சந்தனச் சட்டைக்காரர் டிரைவரிடம் சொல்லி வண்டியை நிறுத்திக் குடையால் மறைத்துக்கொண்டு நுரைக்க நுரைக்கப் போனபோதே நம்முடைய வேலையையும் முடித்திருக்கலாம் என்று அந்தக் கணத்தில் தோன்றியது.
வெப்பத்தின் எதிர்வினையால் சட்டை உடலோடு ஒட்டிக் கொண்டது. மனம் மரங்கள் நிரம்பிய சாலையில் இடம் தேட முனைந்தது. நான் சென்ற சாலை ஒரு பள்ளிக்கு எதிரில் போய் முடிந்தது. இதற்காகவா இவ்வளவு நேரம் நாய் காலைத் தூக்கிக்கொண்டு அலைவதுபோல அலைந்தோம் என்ற எண்ணம் மனதை விரைவில் சோர்வடையச் செய்தது. யூரினை அடக்கி வைத்திருந்தால் யூரின் குழாய் அழுத்தம் தாங்காமல் வெடித்துவிடும் என்று நண்பன் ஒருமுறை கூறியிருந்தான். அவரை விதை வடிவில் இருக்கும் சிறுநீரகத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றம் பற்றிப் பாடம் நடத்தும்போதெல்லாம் இதனை டீச்சரிடம் கேட்கவேண்டும் என்ற எண்ணம் எழும். ஆனாலும் ஒரு முறையும் கேட்டதில்லை. நண்பனின் கூற்றை உறுதிப்படுத்துவதாக இருந்தது “ஆ’வன்னாவில் தொடங்கும் அந்தப் பழமொழியும். நண்பன் வரும் முன் எப்படியாவது சென்றுவிட வேண்டும். துணிக்கடையை வெறித்துக் கொண்டிருப்பான். இதையெல்லாம் ஒரு காரணமாகச் சொல்லி ஏளனத்திற்கு உள்ளாவதைவிட, அவன் வருகைக்கு முன்பு வெற்றிக்கொடி நாட்டிவிட்டுச் சென்றுவிட வேண்டும்.
சிறுவயதில் ஓடைக்கரையில் முளைத்திருந்த நாவல் செடியின் கருமை நிறப் பழத்திற்கு ஆசைப்பட்டு ஆளுக்கொரு செடியைப் பிடித்துக் கொண்டு, “”உன்னுடைய செடி முதலில் காய்க்கிறதா? என்னுடைய செடி முதலில் காய்க்கிறதா?” என்று இருவேளையும் போட்டி போட்டுக்கொண்டு மூத்திரம் பெய்ததில், ஒரே வாரத்தில் செடி உலர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியபோது தெரியவில்லை இதன் மகத்துவம். மாநகரத் தெருக்களில் இடம்தேடி அலையும்போதுதான் தெரிந்துகொண்டேன் கம்பீரமான ட்ரான்ஸ்பார்மர்களையே சாய்க்கும் சக்தி இதற்கு உண்டென்று.
அகன்ற சாலையின் இரு மருங்கின் நடைபாதைகளும் தள்ளுவண்டிக் கடைகளால் நிரம்பி வழிந்தன. வேகமாக நடப்பதற்கே சிரமமாயிருக்கையில் இதற்கு எங்கே இந்தச் சாலையில் இடம் இருக்கப் போகிறது? குறிப்பிட்ட நேரத்திற்குள் நண்பனைப் பார்த்தாக வேண்டும் என்ற எண்ணம் மேலும் வலுகொண்டு வளர்ந்தது. மனதில் பயம் படரும்போதெல்லாம் நீர்க்குடுவை, நரம்புகள் புடைக்க விரிந்து பின் மெதுவாகச் சுருங்குகிறது.
சாலையின் வலது ஓரத்தில் தெரிந்த ட்ரான்ஸ்பார்மர் எனக்குள் ஒரு புது நம்பிக்கையை ஏற்படுத்தியது. சினிமா மூலம் அறிமுகமான சிறுநீர்க் கழிப்பிடம் இது. பக்கத்தில் இருந்த கரும்பு ஜூஸ் கடையும், செருப்பு தைப்பவரும் அந்தக் குறைந்த இடத்தையும் தனதாக்கிக் கொண்டிருந்தார்கள். இந்நேரம் அருகிலுள்ள பேருந்து நிலையத்திற்குச் சென்றிருந்தாலாவது கதவில்லாத கழிப்பிடமாவது கிடைத்திருக்கும். பேருந்திலிருந்து பாதியிலேயே இறங்கிய என்னை, நானே நொந்து கொள்வதைத் தவிர வேறென்ன இப்பொழுது செய்ய முடியும். நகரத்தின் மையத்திலுள்ள பூங்காவை நோட்டமிட்டன கண்கள். பூங்காவின் தென்மேற்கு மூலையிலுள்ள பொதுக்கழிப்பிடத்தின் கதவில் கருப்பு நிறப் பூட்டு தொங்கிக்கொண்டிருந்தது. நுழைவு வாயிலின் ஓரத்தில் நிறைய விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. ஏதாவதொரு வாகனத்தின் சந்தில் திட்டத்தைச் செயல்படுத்தி விடலாமா என்ற எண்ணம் வலுக்க ஆரம்பித்தது. நடைமேடை ஆங்காங்கே ஈரமாகக் கிடந்தது. இன் பண்ணிய ஒருவர் எந்தவிதமான கூச்சமுமற்று தலையைக் கீழே கவிழ்த்துக்கொண்டு பெய்துகொண்டிருந்தார். பூனை பற்றின அந்தப் பழமொழிதான் எனக்கு நினைவிற்கு வந்தது. பக்கத்தில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள், நடைபாதைக் கடைக்காரர்கள், பூங்காவின் உள்ளே கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள், நடந்து செல்பவர்கள், காருக்குள் அமர்ந்து பாடல் கேட்டுக்கொண்டிருக்கும் டிரைவர்கள், “”எங்க போகணும் சார்?” என்று கூடவே வரும் ஆட்டோக்காரர்கள். இவர்களை மீறி அவசரந்தான் என்றாலும் நிச்சயம் என்னால் முடியாது.
“”சார் இங்க எங்கயாவது யூரின் போக இடம் இருக்குதா?” வெள்ளரிப்பிஞ்சு விற்பவரிடம் கேட்டேன்.
சற்றும் யோசிக்காமல், “”அந்த ஓரமாப் போப்பா” பூங்காவின் மதில் சுவரைக் காட்டினார்.
“”வேற இடம்?”
“” ……………………….”
“”பப்ளிக் டாய்லெட்? …..””
“”இந்த ரோட்ல கடசியா இருக்கும் போ”
அயர்ன்காரர் மட்டும் நான் சென்ற அந்த முதல் தெருவில் இல்லையெனின் அப்பொழுதே வினைமுற்றி மீண்டிருக்கலாம். ஆள் அரவமற்றத் தெருக்களிலும் இவர்களின் பணி மட்டும் ஒற்றை வானொலியின் துணையுடன் எப்பொழுதும் நடந்துகொண்டிருக்கிறது. முதன்முதலில் அவர்களை வெறுக்கத் தொடங்கியது தன்னலம் விரும்பும் மனம். இப்பொழுதெல்லாம் இதுபோன்ற மாநகரங்களில் வீடு கட்டும்பொழுதே மதில் சுவர்களில், “”நோட்டீஸ் ஒட்டாதீர், சிறுநீர்க் கழிக்காதீர், மீறினால் தண்டிக்கப்படுவீர்கள்” போன்ற வாசகங்கள் பெரும்பாலான சுவர்களை அலங்கரிக்கின்றன. ஒருசிலர் பாரபட்சமின்றி மதில் சுவரில் அனைத்து மதக் கடவுளின் உருவங்களையும் வரைந்துவிடுகின்றனர். திருவண்ணாமலையின் பிரதான சாலையின் ஓரத்தில் அமைந்திருக்கும் அரசு அலுவலகத்தின் சுவர்ப்பக்கம் அவசரமாக ஒருமுறை ஒதுங்கியபோது, நான் ஏற்கனவே இருமுறை பெய்த அந்த இடத்தில் சிவபெருமான் உமாதேவியுடன் அர்த்தநாரீஸ்வரராகப் பாம்புடன் பயமுறுத்தினார். பலமுறை எச்சரிக்கை விடுத்தும் பலனில்லாமல் இந்த உத்தியை இவர்கள் கடைபிடித்திருந்தார்கள்.
வெள்ளை மாளிகைபோல் அந்த விளையாட்டுத் திடலின் ஓரத்தில் செம்மாந்து நின்றுகொண்டிருந்தது நவீனப் பொதுக்கழிப்பிடம். சமீபத்தில்தான் திறப்புவிழா நடந்திருக்கிறது. இதற்கு எப்படி திறப்புவிழா நடத்துவார்கள் என்ற எண்ணம் திடீரெனத் தோன்றியது. வெண்மைநிற டைல்ஸ், சுவர் முழுக்க பதிக்கப்பட்டிருந்தது. நவீன பொதுக் கட்டணக் கழிப்பிடம் குளியலறையும் இணைந்தது என்ற வாசம் கவர்ச்சியாகப் பொன்னிறத்தில் மின்னிக்கொண்டிருந்தது. திறந்தவர் பெயர், உடனிருந்தவர்கள் பெயர்கள் என தனியாக ஒரு கல்வெட்டு சுவரில் பதிக்கப்பட்டிருந்தது. சாலையில் வாகனங்கள் சீரான வேகத்தில் சென்றுகொண்டிருந்தன. நகரின் பல நவீன கழிப்பிடங்கள் தண்ணீர் வசதியின்றி நாற்றம் தாங்காமல் முள்ளடைத்து மூடப்பட்டதுபோல் இதுவும் ஒருநாள் மூடப்படலாம்.
வாசலில் மர நாற்காலியில் நடுத்தர வயதுடைய ஒருவர் தினசரியைப் புரட்டிக்கொண்டிருந்தார். அவர் தலைக்குமேல் மளிகைக்கடையில் இருப்பது போன்று விலைப்பட்டியல் எழுதப்பட்டிருந்தது. ஆட்கள் வேகமாக உள்ளே செல்வதும் ஆசுவாசமாக வெளியே வருவதுமாக இருந்தார்கள். கழிவறையின் சன்னல்களில் புகை கசிந்துகொண்டிருந்தது. சாலையைக் கடந்து வேகமாக வந்த ஒருவர் விளையாட்டுத் திடலின் சுவர்மீது போய்விட்டு போய்க்கொண்டிருந்தார். “”முட்டாள்ப் பசங்க, ஆயிரக்கணக்குல ரூபா கொடுத்து டெண்டர் எடுத்துட்டு உட்கார்ந்திருக்கேன், 1 ரூபா குடுத்துப் போக வக்கில்லாம நாய் மாதிரி வெளியப் போறாம் பாரு” முன் தயாரிப்புகளில்லாமல் அவர் வாயிலிருந்து வந்த வசை எனக்குள் பனிக்கத்தியாக இறங்கியது.
அவசரமாக உள்ளே நுழைய முயன்றேன்.
“”தம்பி காசு குடுத்திட்டுப் போ”
கை வேகமாக பாக்கெட்டைத் துழாவியது. சில்லறையாக ஒன்றும் அகப்படவில்லை. பர்ஸில் ஒரே ஒரு 50 ரூபாய் நோட்டுதான் இரண்டாக மடிக்கப்பட்டுக் கிடந்தது.
“”சில்றையா குடுப்பா… 1 ரூபாவுக்குப்போய் 50 ரூபாவ நீட்ற. நானென்ன லட்சக்கணக்குல வியாபாரம் நடக்குற துணிக்கடையா வச்சி நடத்துறன்”
என் அவசரம் உணராதவராக, சில்லறை மாற்றிவந்துத் தருகிறேன் என்று சொல்லி ஏமாற்றிச் சென்றவர்கள் குறித்து கொச்சையாகத் திட்டிக்கொண்டிருந்தார். மாற்றி வந்து தருகிறேன் என்ற வழியும் தானாகவே அடைபட்டது.
“”சில்லறை இல்லீங்க”
“”போய் மாத்திக்கிட்டு வா”
என் அவசரத்தை அவருக்கு எப்படி உணர்த்துவது. மனம் சிந்திக்கத் திராணியற்று மின்சாரக்கம்பியில் அடிபட்ட காக்கையென மூர்ச்சையாகிக் கிடந்தது. நண்பன் இந்நேரம் வந்திருப்பான். இனியும் தெருத்தெருவாக அலைய முடியாது. இவருக்கு இதெல்லாம் தினமும் நடக்கிற சாதாரண நிகழ்வுகள். அங்கு நிற்பதே நெருடலாக இருந்தது. வேறு ஏதாவது அசிங்கமாகத் திட்டிவிடுவாரோ என்ற பயம் சிறுநீரை வேகமாக முட்டித்தள்ளியது.
வேகமாக அந்த இடத்தை விட்டகன்று விளையாட்டுத் திடலின் சுவர்ப்பக்கம் வந்தேன். பிளீச்சிங் பவுடர் நெடி நாசியில் ஏறியது. அந்த இடமே சொதசொதவென்றிருந்தது. நடைபாதையிலிருந்து சிறுநீர் சாலைக்கு வழிந்துகொண்டிருந்தது.
“நாய்கள் இங்கே, மனிதர்கள் உள்ளே’ என்று அடுப்புக்கரியால் அழுத்தமாக எழுதி அம்புக்குறி போட்டு கழிப்பிடத்தை அடையாளம் காட்டியிருந்தார்கள். திரும்பிப் பார்த்தேன், தினசரியில் மூழ்கியிருந்தார். எதிரில் சிறுவர்கள் கூட்டம் கூட்டமாக விளையாடிக்கொண்டிருந்தார்கள். இத்திறந்தவெளியில் ஏராளமான மக்கள் வாகனத்திலும் நடந்தும் என்னைக் கடந்துகொண்டிருந்தார்கள். நான் கொஞ்சம் கொஞ்சமாக நாயாக மாறிக்கொண்டிருந்தேன்.
– அக்டோபர் 2012