கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: November 9, 2018
பார்வையிட்டோர்: 9,786 
 
 

தந்தியைப் படித்ததும் எனக்குப் பிரமை தட்டிப் போய் விட்டது. போன மாதம் தானே இங்கு வந்து விட்டுப் போனார்? நன்றாக இருந்தாரே அப்போது.

‘ஆவுடையப்ப பிள்ளைக்கு உடம்பு மோசமாகி விட்டது. உங்களைப் பார்க்க விரும்புகிறார்’ என்று அவர் மைத்துனர் அடித்திருந்த தந்தி அது. அதன் வாசகம் என் நெஞ்சத்தைக் குத்திக் குதறியது. கைகால்களெல்லாம் பதற ஆரம்பித்துவிட்டன எனக்கு,

எப்படியோ ரயிலேறினேன். மனத்தின் பதைபதைப்பு இன்னமும் அடங்காத நிலையில் பெஞ்சியில் உட்கார மாட்டாமல் நிற்கவும் முடியாமல் நான் தவித்தேன்.

பிள்ளைக்கும் எனக்கும் இன்று நேற்றைய சிநேகிதமா? முப்பது வருஷங்களுக்கு முன்னால் மீனாட்சிபுரத்தில் கிராம முன்சீப்பின் புது வீட்டுக் கிருஹபிரவேசத்தன்று அவர் எனக்குப் பரிச்சயமானார். சங்கீதத்தில் நான் கொஞ்சம் பற்றுள்ளவன். அன்று அவருடய தவில் வாசிப்பு என்னைப் பிரமிக்கச் செய்து விட்டது. அதற்குப் பிறகு எங்கள் வீட்டில் எந்தக் கல்யாணமானாலும் சரி, எங்கிருந்தாலும் சரி அவர் வந்து வாசிக்காமல் போவதில்லை. அவ்வளவு பரஸ்பர ஈடுபாடு ஏற்பட்டிருந்தது எங்களுக்குள்.

அவரிடம் ஏதோ சத்தியத்துக்குக் கட்டுப்பட்டது போல நடந்து கொண்டது தாளம். சொற்கட்டுகளை அவர் கையாளும் லாவகமே அலாதிதான். தவிர குணத்திலும் மனுஷன் நிறைகுடம்! லயமும் நாதமும் அவருக்கு மூச்சுக் காற்று மாதிரி!

அப்பேர்ப்பட்டவர் அபாயத்தில் இருக்கிறாரா? சங்கீதத்தின் அதிதேவதையே ஸ்வரமயமான தன் தூதர்களை அனுப்பி அவரை ஆட்கொள்ள ஆசைப்படுகிறதோ?

மீனாட்சிபுரத்தில் அவர் வீட்டில் ;போய் உடனே குதித்து விடமாட்டோமா என்ற தவிப்புத் தான் எனக்கு உண்டாயிற்று. ஆனால் ரயில் என்னமோ மெதுவாகத்தான் போயிற்று.

திடீரென்று வேறொன்று என் நினைவுக்கு வந்தது. நாகரத்தினம் இந்தச் சமயம் அங்கு வந்திருப்பானா? அவன் ஏன் வரப் போகிறான், தத்தாரிப் பயல்! தன்னை ஆதரவுடன் வளர்த்து, சங்கீதம் கற்றுக் கொடுத்த பெரியவரின் மனத்தை முறித்துக் கொண்டு ஓடிப் போன உதவாக்கரை தானே அவன்?

அவன் ஆவுடையப்ப பிள்ளைக்கு தூரத்து உறவு. இசையில் அவனுக்கு ஆர்வம் இருப்பதைக் கண்டு ஆசையுடன் அவனுக்கு நாயனம் கற்றுக் கொடுத்தார் பிள்ளை.

தங்கரத்தினம் துடியான பையன். சீக்கிரத்திலேயே அபாரமாக வாசிக்க வந்துவிட்டது அவனுக்கு. பிள்ளைக்கே ஆச்சரியந்தான். கொஞ்ச நாளைக்கெல்லாம் தாம் போகும் இடங்களுக்கெல்லாம் அவனையும் அழைத்துப் போனார் பிள்ளை. பெயரும் புகழும் அவனைத் தேடி வந்தன.

“முதலியார்வாள்! என் கண்ணே பட்டுடுமோன்னு எனக்குச் சந்தேகமாயிருக்கு. தம்பி வாத்தியத்தை எடுத்து ஊதினா நான் கூட தவுலை மறந்துட்டுக் கேட்டுக் கிட்டே நிப்பேன். அவவளவு அற்புதமா வாசிக்குது அது!” என்று பிள்ளை ஒரு முறை சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டார் என்னிடம்.

“கேட்க வேண்டுமா பிள்ளைவாள்! நீங்கள் வைத்த பயிர் தானே அது? அதுதான் அமோகமாக இருக்கிறது விளைச்சல்!” என்றேன் நான் புன்சிரிப்புடன்.

“அதெல்லாம் நம்மாலாகிறது ஒண்ணுமே இல்லீங்க! பையனுக்குப் பூர்வ ஜென்ம சுகிர்த பலம் இருக்குது. எப்பவோ விட்ட குறை. இப்போ நான் லேசாகத் தொட்டதும் ஊத்து மாதிரி பீறிட்டுக் கிட்டுக் கிளம்புது. என்ன ஞானம்? சங்கதிகளும், பிடிகளும் விழுகிற அநாயாசம் தான் என்ன? எனக்கே பிரமிப்பாகத்தானுங்க இருக்குது. தம்பி தோடி வாசிச்சு நீங்க கேட்டதில்லையே?”

“அந்த ராகம் எனக்கு ரொம்ப பிடித்தமானது. ஏன்? தம்பி நன்றாக வாசிக்குமா?”

“வாசிக்குமாவது! அது கிட்ட தோடி அவ்வளவு குளுமையா இருக்கும் தெரியுமா? ஆகா! மனசு அப்படியே மெழுகு மாதிரி உருகும். அதைக் கேட்டுக் கண்ணில தண்ணி தளும்பும். சோறு தண்ணியைக் கூட மறந்துட்டு கேக்க வைக்கும்!” என்றார்.

சில வருடங்களுக்குள்ளாகவே பிள்ளையின் சிஷ்யன் ‘தோடி தங்கரத்தினமென்று’ பெயர் வாங்கி விட்டான். ஆனால் எனக்கென்னவோ துரதிருஷ்டவசமாக இவனுடைய ஒரு கச்சேரியையாவது ஆற அமர இருந்து கேட்கக் கொடுத்து வைக்கவில்லை.

போன வருஷம் ஒரு நாள் மீனாட்சியம்மன கோவில் சந்நிதியில் நான் ஆவுடையப்ப பிள்ளையை சந்தித்தேன். மிகவும் இளைத்துப் போயிருந்தார் அவர்.

“தம்பி சௌக்யமா இருக்கிறதா?” என்று தான் நான் முதலில் கேட்டேன். ஆனால் ஏனோ சட்டென்று பிள்ளையின் முகம் விகாரமடைந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை.

“என்ன பிள்ளைவாள்! என்ன விஷயம்? ஏன் ஒரு மாதிரியாகி விட்டீர்கள்?” என்றேன் பரபரப்புடன்.

“அதை ஏன் கேக்கறிங்க முதலியார்வாள்! எந்தப் பாவியின் கண்ணோ பட்டுப் போச்சு!”

“பிள்ளைவாள்! கொஞ்சம் விவரமாகத்தான் சொல்லுங்களேன்!”

“கொஞ்சம் ஒதுக்குப்புறமாகப் போவோம் வாங்க!” என்றார் பிள்ளைவாள்.

ஆடி வீதியில் வைரத்தூணருகில் இருவரும் உட்காந்திருந்தோம். “தம்பி இப்ப என் கூட இல்லை. உங்களுக்குத் தெரியுமோ?” என்றார் பிள்ளை சோகம் தோய்ந்த குரலில்.

“பின்னே?”

“மரகதவடிவு கிட்டே இருக்குது அது!”

நான் திடுக்கிட்டுப் போனேன். “மரகதவடிவா? அவளிடம் எப்படிப் போய்ச் சிக்கிக்கொண்டான் தங்கரத்தினம்?”

பிள்ளை அந்தக் கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.

“போன விசாகத்தும்போது திருச்செந்தூரிலிருந்து தங்கரத்தினத்துக்கும் எனக்கும் அழைப்பு வந்திருந்தது. அன்னைக்கு ராத்திரி கோவில் வாசலிலே இருந்த பெரிய பந்தலிலே தம்பி வாசிக்கணுமின்னு ஏற்பாடு. பந்தல்லே நின்னு பார்த்தா, நேரே மூலஸ்தானத்திலே ஆறுமுகம் தரிசனம் கிடைக்கும். வாத்தியத்தை எடுத்து ஆண்டவன் முன்னிலையிலே வாசிச்சு நிறையப் பழக்கம் தம்பிக்கு. கச்சேரி பிரமாதமாக அமைஞ்சு போச்சுங்க! பிலஹரியிலே ‘ஸ்ரீ பாலஸ§ப்ரமண்யா’ கீர்த்தனையை எடுத்து வெளுத்து வாங்கிருச்சி. ராப்பொழுதாயிருந்தாலும் ராகம் பிரமாதமா இருந்து ‘களை’ கட்டிப் போச்சு. எனக்கு ரொம்ப சந்தோஷம். “தம்பி! சூடா தோடியை எடுன்னேன்.” எதனாலோ தங்கரத்தினத்தின் உடம்பு நடுங்கிச்சு. “அண்ணாச்சி! இன்னைக்கு ஒருநாள் தோடி வேண்டாம். என் மனசு ஏனோ கலவரப்படுது” என்றது தம்பி. இதுக்குள்ளே ‘தோடி, தோடி ன்னு ஒண்ணு ரெண்டு குரல் கேட்டுது கும்பலிலேயிருந்து. “அடப்பைத்தியக்காரப் பிள்ளே! இங்க தான் நீ நல்லா வாசிச்சுப் பெயரெடுக்கணும், தைரியமா வாசி!” என்று சொன்னேன். தம்பிக்கு அரை மனசுதான். தயங்கியபடியே ஆரம்பிச்சுது. தைரியமில்லாம வாசிக்கிறாப்போலத் தோணுதே, ராகம் சரியா அமையணுமேன்னு உள்ளூர உதைப்பு எனக்கு.

“ஆனால் அது அன்னைக்கு வாசிச்ச வாசிப்பு! ஆகா! அப்படியே என் எலும்புக்குள்ள பாய்ஞ்சு பரவசப்பட வெச்சுது. முன்னேல்லாம் கேட்டத விட அருமையான அபூர்வமான பிடிங்களெல்லாம் வந்து விழுந்துச்சு. சமுத்திரம் கூட அலையடங்கிப் போய் மௌனமாகக் கேட்டுக் கிட்டு நின்னது போல எனக்கு ஒரு பிரமை! அப்படியே ஒரு கால் மணி நேரம் எல்லாரையும் எங்கேயோ வான லோகத்துக்கு அழைச்சுக்கிட்டுப் போயி வேடிக்கை காட்டிட்டு தம்பி மெதுவா பூமியில இறக்கிவிட்டது. உடனே படபடான்னு என்ன கைதட்டல் என்கிறீங்க? தம்பியை அப்படியே கட்டி அணைச்சுக்கிடணும் போல என் மனசு துடிச்சது. அதுக்கு வர பெருமை எனக்கு சந்தோஷம் இல்லையா?”

“தம்பி ராகத்தை முடிச்சுட்டு ஏதோ ஒரு பக்கம் ;பார்த்தது. அப்படியே அதன் கண்ணு ரெண்டும் நிலைகுத்திப் போனாப் போலே ஆயிருச்சு. என்ன விஷயம்னு நானும் அந்தப் பக்கம் திரும்பினேண்_. பளீர்னு மின்னலடிச்சாப் போல வடிவு அங்கே நின்னுக்கிட்டிருந்தா! லேசா ஒரு புன்சிரிப்புக் கூடச் சிரிச்ச மாதிரி இருந்தது தம்பியைப் பார்த்து. எனக்கு அப்பவே பகீர்னு ஆயிப் போச்சு!

“அப்புறம் அன்னைக்குக் கச்சேரி முடிகிற வரைக்கும் நான் வயித்தில நெருப்பைக் கட்டிக்கிட்டுத்தான் இருந்தேன். ஏன்னு கேட்டீங்கன்னா, வடிவைக் பத்தி நான் நெறையக் கேள்விப் படிடிருக்கேன். தம்பி என்ன தான் எனக்கு அடங்கினவனா இருந்தாலும் வயசுப் பிள்ளையாச்சே!

“கச்சேரி முடிஞ்சு தங்கியிருந்த வீட்டுக்குத் திரும்புபோது வெளி மண்டபத்திலேயே வடிவு காத்துக் கிட்டு ஒயிலா நிக்கிறதைப் பார்த்தேன். நாங்க நெருங்கினதும்` தைரியமா ரெண்டெட்டு முன்னால வச்சு தம்பி கிட்டே “தோடி ரொம்ப அழகாயிருந்துச்சு. நான் கேட்டு அப்படியே சொக்கிப்போயிட்டேன். அந்த ராகப்பிரஸ்தாரம் காதிலே இன்னமும் ரீங்கரிக்குது. அதை வாசிச்ச கையை இப்படிக் கொடுங்கன்னு” பவ்யமாப் பேசி, வலுவிலே தம்பியின் கைகளைப் பிடிச்சுத் தன் கண்ணிலே ஒத்திக்கிட்டா. எனக்கு ஏதோ நாடகம் பாக்குற மாதிரி இருந்திச்சு. வடிவின் கண் வீச்சுப்பட்டால் சும்மாவா? தம்பியை வீட்டுக்கு அழைத்து வர நான் பட்ட பாடு கொஞ்சநஞ்சம் இல்லை.

“ராத்திரி பூரவும் என்னவோ பைத்தியம் பிடிச்ச மாதிரி தான் இருந்தது தம்பி. தானே சரியாகப் போயிடுமின்னு நான் கொஞ்சம் கண் அசந்துட்டேன். காலையில் கண் விழிச்சா ‘தங்கரத்தினத்தைக் காணோம்’ ன்னு தவசுப் பிள்ளை சொன்னான் உடனேயே எனக்கு பொக்குனு போயிடுச்சு. அது எங்கே போயிருக்குமின்னு எனக்குத் தெரியாதா?

“ஆள் மூலம் நான் நயமாவும் பயமாவும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அப்புறம் வெக்கம் மானத்தை விட்டு நானே போனேன் வடிவின் வீட்டு வசலுக்கு. கெஞ்சினேன். அந்தப் பொண்ணு அசைஞ்சிருக்குமா? “அவங்க வந்தாக் கூட்டிக்கிட்டுப் போங்க!” என்கிறா. அவனோ நகர மாட்டேன்னுட்டான்.

“அன்னைக்கி கோவிலே வடிவைப் பாரத்ததுமே என் மனசிலே ஏதோ கிளுகிளுப்பு ஏற்பட்டது அண்ணாச்சி! முன்னே எப்போவோ ஒரு பிறவியிலே அதோடே ரொம்ப இணஞ்சு இருந்த மாதிரி ஒரு ஞாபகம் உண்டாச்சு. “தோடி எடு”ன்னு நீங்க சொன்னதும் சட்டுனு அவ நினைப்புதான் எனக்கு வந்துச்சு. உடனே மனசு நடுங்க ஆரம்பிச்சது. வாசிக்கத் தைரியமே இல்லை. உங்க பேச்சுக்குக் கட்டுப்பட்டு எங்கே கண்ணைத் திறந்தா வடிவு பேரிலே கவனம் போயிடுமோன்னு கண்ணு ரெண்டையும் இறுக மூடிக்கிட்டுத்தான் வாசிச்சேன். அந்த தோடி தான் வடிவு மனசை இளக்கிடுச்சு. எந்த ஜன்மத்திலேயோ சேர்ந்திருந்து பிரிஞ்சு போன எங்க ரெண்டு பேரையும் தோடி தான் பழையபடியே சேர்த்து வெச்சது போல என் மனசுக்குள்ளே ஏதோ சொல்லுது” இந்த மாதிரி ஏதேதோ உளறிக்கிட்டிருந்தான் தங்கரத்தினம். முடிவிலே, “நீ வரப் போறியா இல்லையா?”ன்னேன். “அண்ணாச்சி மன்னிச்சிடுங்க”ன்னு தலையைக் குனிஞ்சிக்கிட்டு கையைப் பிசைஞ்சான்.

அப்புறந்தான் நான் நிதானத்தை இழந்துட்டேன். கன்னா பின்னான்னு கத்தினேன். ஆத்திரத்திலே திட்டினேன். அவனை முகலோபனமே பண்ணமாட்டேன். அவன் வாத்தியம் என் காதிலே விழப்படாதுன்னெல்லாம் சபதம் வச்சிட்டு கோபத்தோடே ஊர் திரும்பிட்டேன். அன்னையிலிருந்து பிடிச்சுது அனர்த்தம். தம்பி அங்கேயே ஐக்கியமாயிட்டுது. இப்போ நினைச்சுப் பார்த்தா நான் அவ்வளவு தூரம் பொறுமை இழந்து போய்ப் பேசியிருக்கக்கூடதுன்னு தான் தோணுது. ஆனால் உயிராட்டம் ஒட்டிக்கிட்டிருந்தவனை அப்படிக் கணத்திலே அந்த மாய்மாலக்காரி இழுத்துக் கிட்டாங்கிறதை யோசனை பண்ணினாத்தான் எனக்கு ஆறவேயில்லீங்க முதலியார்வாள்!”

பிள்ளைவாளின் முகம் வெளிறிப் போய் கிடந்தது. நடந்ததைக் கேட்டு நானே கலங்கிப் போய் விட்டேன். பிள்ளைவாள் துரும்பாக இளைத்துப் போயிருந்ததன் காரணத்தை அப்போது தான் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. மீனாட்சியம்மன் கோவிலை விட்டு நாங்கள் அன்று கிளம்பும் போது நடுராத்திரிக்கு மேலேயே ஆகிவிட்டது.

திருநெல்வெலி ஜங்ஷன் ஒரு வழியாக வந்தது. பிள்ளையின் வீட்டில் நான் போய் இறங்கியபோது என் பாபரப்பு உச்சத்தில் இருந்தது. அங்கே ஹாலில் சுவரில் ஷண்முக பிள்ளையின் பெரிய படம் மாட்டியிருந்தது. தீபங்கள் எரிந்து கொண்டிருந்தன. ஒரு இடத்தில் கட்டிலில் ஓர் உருவம் கிடந்தது. ஆ! தவுல் ஆவுடையப்பப் பிள்ளையா அது?

“பிள்ளைவாள்!”

துடிதுடித்துப் போபய் அவர் அருகில் நின்றேன். அந்த எலும்புக்கூட்டை அணைத்துக் கொண்டேன். முப்பது வருஷத்துப் பழக்கம், பாந்தவ்யம் என் கண்ணிலிருந்து கண்ணீராக வெளிப்பட்டது.

திணறித் திணறி மூச்சு விட்டுக் கொண்டே ஆவுடையப்ப பிள்ளை பேசினார், “முதலியார் வாள்! என் காரியம் அவ்வளவுதான்! இதோ முடிஞ்சு போயிடும் சீக்கிரமாவே. அதுக்கு முன்னே உங்களைப் பார்க்கணுமின்னு மனசு கெடந்து தவிச்சுது. அதான் தந்தி கொடுக்கச் சொன்னேன்.”

“மோசம் செய்து விட்டீர்களே, பிள்ளைவாள்! உடம்பு ஸ்திதி இவ்வளவு கேவலமாக ஆகும் வரையில் எனக்குத் தெரிவிக்காமல் இருந்து விட்டீர்களே! நான் இருந்து தான் என்ன பிரயோசனம்?”

“ஒங்க கிட்டே சொல்றதுக்கென்ன முதலியார்வாள்! தம்பியைப் பார்த்து ஒரு வருஷத்துக்கு மேலே ஆவுது. அதும் வாத்யத்தைக் கேட்டு லயிச்சுப் போகிற எனக்கு இந்த ஒரு வருஷமா அந்த பாக்கியம் கிட்டலே. அந்த வேதனை தான் இப்போ எனக்கு வியாதி!”

“அவ்வளவுதானே? ஒரு தந்தி கொடுத்து தங்கரத்தினத்தை வரவழைக்கட்டுமா?” அவரை தைரியப்படுத்த வேறொன்றும் சொல்ல எனக்குத் தெரியவில்லை.

“நீங்க எதுக்குங்க வீணா சிரமப்படுறிங்க? அது எங்கே வரப் போகுது. வடிவு விட்டு விடுவாளா?” என்றார் பிள்ளை ஹீனமான குரலில். ஆனால் அவனைப் பார்த்தால்தான் அவர் மனது நிம்மதியடையும் என்று நான் புரிந்து கொண்டு விட்டேன்.

“பிள்ளைவாள்! வருவது வரட்டும்! நானே இப்போது கிளம்பித் திருச்செந்தூருக்குப் போகிறேன். தம்பியைக் கையுடன் அழைத்து வருகிறேன்!”

என் துணிச்சலைக் கண்டு பிள்ளை ஆச்சரியப்பட்டுப் போனார். அங்கே நின்றால் அவர் தடுத்து நிறுத்தி விடுவார் என்கிற பயத்தில் உடனேயே நான் புறப்பட்டு விட்டேன். பிள்ளையின் மைத்துனரைக் கேட்டதில் அன்று இரவு தாண்ட வேண்டும் என்று வைத்தியர் கெடு வைத்திருப்பது தெரிய வந்தது. இருட்டுவதற்குள் திரும்பி விடுவது என்கிற தீர்மானத்துடன் ஸ்டேஷனுக்கு ஓடினேன்.

மரகதவடிவு வீட்டுக்கு ஒரு பர்லாங்கு தூரத்துக்கு இப்புறமேயே நாதஸ்வர நாதம் கேட்டுக் கொண்டிருந்தது. வாசலில் போய் நின்றதும் வந்த காரியத்தை மறந்து சில நிமிஷங்கள் அந்த இசை வெள்ளத்தில் கட்டுண்டு மெய்ம்மறந்தேன். ஆகா! இத்தகைய அருமையான வாசிப்பைக் கேட்காமல் பிள்ளை ஏங்கியதில் ஆச்சரியமே இல்லை என்று எனக்குத் தோன்றியது.

தெருவில் போய் வந்து கொண்டிருந்த சிலர் என்னை வெறிக்கப் பார்த்தனர். சுதாரித்துக் கொண்டு கதவைத் தட்டினேன்.

“தங்கரத்தினம்!”

சில விநாடிகளில் கதவு திறந்தது. ஆச்சரிய பாவத்துடன் வடிவு தான் நிலைப்படியில் நின்று கொண்டிருந்தாள். அப்பா! என்ன அழகு!

“தம்பியைப் பார்க்க வேண்டும்!”

“நீங்க யாரு?” அவள் புருவங்கள் நெரிந்தன.

“தங்கரத்தினத்திடம் சில வார்த்தைகள் பேச வேண்டும். வரச்சொல்லு!” எஎன் தைரியம் எனக்கே வியப்பாக இருந்தது. அதற்குள் அவனே வந்து விட்டான் குரல் கேட்டு.

“நீங்களா?”

அந்த இடத்தில் வடிவுடன் அவனையும் செர்த்து நான் பார்த்து விட்டதனால் அவன் முகம் வெட்கத்தில் சுருங்கியது.

“என்னைத் தெரிகிறதா?”

“தெரியாம என்னங்க? அண்ணாச்சி சௌக்யமா இருக்காங்களா?”:

“ஓஹோ! அவர் ஞாபகம் கூட இருக்கிறதா உனக்கு?”

“என்னங்க அப்படிச் சொல்லிப் போட்டீங்க? …இப்படித் திண்ணையிலே உட்காருங்க!”

“உட்கார நான் வரவில்லை. உன்னை அழைத்துப் போக வந்தேன்!”

கேள்விக்குறி போடும் பார்வையுடன் என்னை உற்று நோக்கினான் தங்கரத்தினம். “ஆமாம்! அங்கே உன் அருமை அண்ணாச்சி சாகக் கிடக்கிறாரப்பா!”

ஹா! இருவரும் பதறினார்கள். மரணம் என்ற சொல்லுக்குத் தான் எத்தனை சக்தி!

“நெசமாவா?”

“இப்போது நீ வந்தால் ஒருவேளை அவர் பிழைக்கலாம். இல்லை. இறந்தாலும் மனச்சாந்தியுடன் மடியலாம். உன் நினைவிலேயே அவர் துடித்துக் கொண்டிருக்கிறார்!”

சித்திரவதை செய்யப்படும் விலங்கு போலத் தவித்துக் கொண்டிருந்தான் தங்கரத்தினம். கண்களில் நீர் முட்டிற்று.

“அப்போ நான் போய்ப் பார்க்கணும் வடிவு!”

நான் அவள் முகத்தைப் பார்த்தேன்.

“நிச்சயமா நீங்க போகத்தான் வேணுங்க! அநியாயமா உங்களை அந்தப் பெரியவர் கிட்டேயிருந்து பிரிச்சது போதும். அவர் சாகிற காலத்தில் உங்ககளைப் போகக் கூடாதுன்னு தடுக்கிற பாவம் வேறே வேண்டாம் எனக்கு!”

மரகதவடிவா பேசுகிறாள்? அவள் கண்களில் கூடவா நீர் ததும்புகிறது? நான் வியப்பில் வாயடைத்து நின்றேன்.

“அம்மணி! நீ நன்றாக இருப்பாய். இந்த உதவிக்கு முருகன் என்றென்றும் உனக்குக் கருணை காட்டுவான்!” வார்த்தைகள் தடுமாறி, சிதறி வந்தன என்னிடமிருந்து.

“தம்ம்பி! கிளம்பு, சீக்கிரம்!”

ஒரு கணம் நான் நிதானித்தேன்.

“தங்கரத்தினம்! நாதஸ்வரத்தைக் கையோடு கொண்டு வா!” என்றேன்.

அவன் திகைத்தான். மறு விநாடியே போய் எடுத்துக் கொண்டு விரைந்து வந்தான்.

நாங்கள் வந்து சேரும்போது சந்திரன் மேலே நன்றாகக் கிளம்பிவிட்டது. எப்படியிருக்குமோ என்னவோ என்கிற பயத்துடன் தான் ஓடி வந்தோம். நல்லவேளை! என் நம்பிக்கை வீணாகவில்லை!

கட்டிலில் கிடந்த ஆவுடையப்ப பிள்ளையைக் கண்டதும் தங்கரத்தினம் அலறி விடான்.

“அண்ணாச்சி!”

“தம்பி! வந்துட்டியா?”

இருவருடைய கண்ணீரும் மற்றவருடைய கன்னத்தைக் கழுவியது.

“அண்ணாச்சி! என்னை மன்னிச்சிடுங்க. நான் பாவி!” தங்கரதினம் தேம்பினான் சிறு குழதை மாதிரி.

“தம்பி! அப்படி எல்லாம் ஒண்ணும் சொல்லாதே. அப்போ நடந்ததெல்லாம் அந்தத் தோடி ராகத்தின் மயக்குகிற சக்தி. அது தான் உன்னை வடிவு கிட்டே சேர்த்தது. இப்போ உன்னைப் பார்த்ததே எனக்கு சந்தோஷம். இனிமே நான் போகலாம் நிம்மதியாக!”
ஒரு கணம் கோரமான அமைதி.

“தமிபி! வாத்தியம் கொண்டு வந்திருக்கியா?”

தங்கரத்தினம் வியப்புடன் என்னையும் அவரையும் மாறி மாறிப் பார்த்தான். உடனேயே தாவி எழுந்து நயனத்துடன் அவர் எதிரே அமர்ந்தான். பிள்ளை கண்களை மூடியவாறே மெதுவான குரலில் பேசினார்.

“தம்பி! அன்னிக்குத் திருச்செந்தூரிலே வாசிச்சியே அதே மாதிரி இப்போ மறுபடியும் வாசி! உன் வத்தியத்தைக் கேட்டு எத்தனை நாளாச்சு!”

தங்கரத்தினம் கொஞ்சம் தயங்கினான்.

“ஒங்க இஷ்டத்தை நிறைவேத்தாம நான் வாத்யம் எடுத்து தான் என்ன பிரயோசனம்? இதோ உங்க பிரியப்படியே வாசிக்கிறேன்.”

நாயனம் அடுத்த கணமே அவன் உதடுகளில் படிந்தது. மதுரமான ஒலி அதிலிருந்து பிறந்தது. தங்கரத்தினம் தோடி வாசிக்க ஆரம்பித்தான். பிள்ளை கண்களை மூடியபடி ரஸித்துக் கொண்டிர்ந்தார்.

தங்கரத்தினம் வாசிக்கவில்லை. கண்களை மூடியபடி ஏதோ ஒரு அமானுஷ்ய வெறியுடன் ஊதினான். பிடிகள் பரபரவென்று விழுந்தன. அண்ணாச்சியின் கடைசி ஆசையை நிறைவேற்றி விட வேண்டுமென்ற ஒரு வேகம் அவனை இயக்கிற்று. அந்தத் துடிப்பில் விரல்கள் துளைக்கருவியின் மேல் மின்னல் வேகத்தில் நர்த்தனமாடின. ராகம் தன் முழு ஜீவனுடன் வெளிப்பட்டு அங்கு நிறைந்தது.

உள்ளத்தை உருக்கும் அந்த வாசிப்பு என் இதயத்தைத் தொட்டது. கண்கள் குளமாகி நின்றன. ஆவுடையப்ப பிள்ளையின் முகத்தைப் பார்த்தேன். மலர்ச்சியுடன் ஆனால் அயர்ந்து தூங்குபவர் போல அவர் தோன்றினார். சங்கீத தேவதை தோடியின் மூலம் அவரை ஆட்கொண்டு விட்டது என்பதைப் புரிந்து கொண்டபோது என் மெய் சிலிர்த்தது.

Print Friendly, PDF & Email

2 thoughts on “தோடி

  1. தோடி கதையைப் படித்தும், கதையாகத் தோன்றவில்லை; நிசமான நிகழ்வாகத் தோன்றி கண்களில் கண்ணீரை வரவழைத்தது. வாழ்த்துகள்.

  2. அறுபதுகளில் வெளிவந்த இந்த கதை இப்போது படித்தாலும் பிரிமிப்பாக இருக்கிறது. அவ்வளவு அழுத்தமான பாத்திர படைப்புகள். நெஞ்சைத் தொடும் நிகழ்வுகள்! தோடி ராகத்தைப் போலவே கதை நெடுக இனிமை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *