கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: September 11, 2018
பார்வையிட்டோர்: 11,008 
 
 

ஏங்க ரொம்ப வலிக்குது முடியல சீக்கிரம் இங்க வாங்க.

ஏம்மா என்னாச்சு சொல்லு தமிழ் வலிக்குதா? உண்மையாவா? சொல்லு.

அட ஆமாங்க வலிக்குது. எங்க அப்பா அம்மாவிற்கு போன் போட்டு வரச்சொல்லுங்க.

சரியாத்தான் சொல்றீயா? ஏங்க நான் ஏன்? இதிலப்போய் பொய் சொல்லப்போறேன். நான் இவ்வளவு தூரம் சொல்றேன். நீங்க இன்னும் புரிஞ்சிக்க மாட்றீங்க.

சரிமா நான் ஏன் கேக்குறேன்னா நாம பாக்குற ஹாஸ்பிடல் 100 கிலோமீட்டர் தூரத்துல இருக்கு. அவ்வளவு தூரம் போயிட்டு சாதாரண வலிதான் என்று டாக்டர்கள் சொன்னா நமக்கு சங்கடமா போயிடும்.

அதுலாம் ஒன்னும் இல்லீங்க. இது அந்த வலிதான்.

இப்படி பேசிக்கொண்டே இருக்க எதிர்பாராத விதமாக தமிழின் அப்பாவும் அம்மாவும் வீட்டின் உள்ளே வருகின்றனர்.

தமிழ் தமிழ் என்னம்மா கிளம்பலாமா? என்னங்க மாப்பிள்ளை இவ்வளவு ஸ்லோவா இருக்கீங்க. உடனே கிளம்புங்க.

அதெல்லாம் ஒன்னுமில்ல மாமா. உங்களுக்காகத்தான் காத்திட்டு இருந்தேன். கார் டிரைவருக்கு போன் போட்டு சொல்லிட்டேன். இன்னும் பத்து நிமிஷத்தில இங்க வந்திடுவாரு. அம்மா அந்த பையில நமக்குத் தேவையான பொருட்களை எல்லாம் எடுத்து வச்சிடுங்க

ம்மா என்று தமிழ் சொல்ல பிரியனின் அத்தை தேவையான துணி, சொம்பு, டம்ளர், சோப்பு, சீப்பு, கண்ணாடி குழந்தைக்கு ஏற்கனவே வாங்கி வந்த பழையத்துணி, புதியத் துணி என்று எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக எடுத்து வைத்துக்கொண்டிருந்தார்.

ஏங்க அவசரத்தில நீங்க சாப்பிடமா வந்திடாதீங்க. செஞ்சு வச்சிருக்கிற சாப்பாட்டெல்லாம் நீங்கள் மூவரும் சாப்பிட்டு விட்டு வாங்க.

அப்பா அங்கிருக்கிற தண்ணி பாட்டிலை எடுங்க. தாகமாக இருக்கு என்று கேட்டு தண்ணீர் வாங்கி குடிக்கிறார்.

ஏங்க பின்னாடி பாருங்க கார் டிரைவர் வந்திருக்கிறாரு.

ஏம்பா வாப்பா உங்களத்தான் இவ்வளவு நேரம் எதிர்பார்த்திட்டு இருந்தோம்.

வாங்க எல்லாரும் புறப்படலாம் என்று சொல்லி வீட்டின் மாடியிலிருந்து மெதுவாக கீழிறங்கி காரில் ஏறச் செல்கின்றனர்.

பிரியனின் மனது ஆகாயத்தில் பறக்கத் தொடங்கியது. இனம்புரியாத ஆசைகளில் மிதந்து கொண்டிருந்தான். நம் வீட்டிற்கு புதிய உறவு வரப்போகிறது என்று உள்ளுக்குள் மகிழ்ச்சி பொங்க தன் மனைவியின் கைகளைப் பிடித்துக்கொண்டு மெல்ல படிக்கட்டில் இறங்கி காரை நோக்கி பயணித்தான். பார்த்து பார்த்து வந்து, காரில் ஏறுங்கள் என்று கார் டிரைவர் சொல்ல மெதுவாக தமிழ் காரில் ஏறி உட்கார்ந்தாள்.

தமிழின் அப்பாவும் அம்மாவும் ஏதோ இனம்புரியாத பதட்டத்தில் இருந்தனர். பிரியன் தன் மனைவியிடம் ஏதேஏதோ பழைய நினைவுகளையும் படித்தத் தகவல்களையும் சொல்லிக்கொண்டே வந்தான்.

ஏங்க என்னால முடியலங்க. ரொம்ப வலியா இருக்கு.

ஏம்மா தமிழ் கொஞ்சம் நேரம் பொறுத்துகும்மா. இன்னும் ஒரு மணிநேரத்தில ஹாஸ்பிடல் போயிடலாம்.

அய்யய்யோ இன்னும் ஒரு மணிநேரமா? என்னால முடியுமா? என்று தெரியவில்லை என்று தமிழ் கத்திகொண்டே காரில் பயணிக்கிறாள்.

பிரியனின் மனம் பதட்டத்தில் இருக்கிறது. உடன் தன் மாமாவும் அத்தையும் வருவது ஒன்றே அவருக்கு ஆறுதலாக இருந்தது. தான் வெளியூரில் இருக்கின்ற காரணத்தினால் தன் பெற்றோரும், உடன்பிறந்தவர்களும் இந்த சமயத்தில் இல்லாதது நினைத்து ரொம்பவே கவலைப்பட்டான். தமிழால் சொல்லமுடியாத அவஸ்தைகளை ஓசைகளால் சொல்லிக் கொண்டே வந்தாள். நினைவுகளை மாற்ற பிரியன் அடிக்கடி ஆறுதலும் தைரியமும் கூறிக்கொண்டே வந்தான்.

பெண்களின் வலியையும் உன்னதத்தை அந்நேரம் ஒருவாறு யூகித்துக் கொண்டே பயணித்தான். சாலையைப் பார்க்கிறான். அப்போது கார் பத்து கிலோமீட்டர்தான் தாண்டி இருப்பதைப் பார்த்து வருந்தினான்.

தமிழ் உனக்கு எந்தக் குழந்தை பிடிக்கும் சொல்லு பார்ப்போம்.

ஏங்க குழந்தைகளில் எந்தக் குழந்தையாக இருந்தாலும் எனக்கு மகிழ்ச்சிதான்.

இல்ல தமிழ் எனக்கு பெண் குழந்தையின்னா கொஞ்சம் கூடுதல் மகிழ்ச்சி என்று கூற, உங்க இஷ்டம் போல அமைய வாழ்த்துகிறேன் என்று தமிழ் கூறினாள்.

ஏம்மா தமிழ், மாப்பிள்ளை இது இப்ப ரொம்ப முக்கியமா?. இல்ல மாமா என்று பிரியன் ஏதோ சொல்ல வருவதற்குள் மாமாவோ எனக்கு என் பொண்ணுதான் முக்கியம் என்று தமிழைக் காட்டி சொல்ல டிரைவர் சிரிக்க அனைவரும் சிரித்தனர்.

சிலநேரம் அவஸ்தையாகவும் மற்றவர்கள் பேசும் பேச்சுகளில் தன் கவனம் சென்றாலும் அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும் என்பது அவளுக்குத் தெரியும். உள்ளே நிகழும் மாற்றங்களை வெளியில் சொல்லாமல் விம்மிக் கொண்டே நேரத்தைக் கடந்து வந்தாள் தமிழ்.

கார் டிரைவரைப் பார்த்து இன்னும் எவ்வளவு தூரம் ஆகுமென்று பிரியன் கேட்க, போயிடலாம் சார் என்று சொல்ல, தமிழ் எவ்வளவு நேரம் ஆகுமென்று சொல்லுங்கள் என்று கேட்கிறாள். இன்னும் பத்து நிமிடத்தில் போயிடலாம் என்றார் டிரைவர். இதைக்கேட்ட தமிழ் நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

பிரியன் தன் பார்வையைச் சாலையில் உள்ள பெயர்ப்பலகையைப் பார்க்க, ஹாஸ்பிடலுக்கு இன்னும்அறுபது கிலோமீட்டர் இருக்கும் போது டிரைவர் எப்படி பத்து நிமிஷத்தில போவாரு என்று நினைத்துக் கொள்கிறான். இன்னும் பத்து நிமிடம் என்று சொன்னதின் அர்த்தத்தில் நம்பிக்கை அடைந்த தமிழைப் பார்த்து புன்னகைத்தான்.

ஏங்க இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் உண்மையைச் சொல்லுங்கள் என்று கேட்க பிரியனும் பத்து நிமிடத்தில் போயிடலாம் என்று சொல்லி மீண்டும் ஆறுதல் தந்தான். தன் மனைவியின் இருகைகளையும் பற்றி மீண்டும் அன்பான நம்பிக்கையின் நெருக்கத்தைக் கொடுத்தான்.

தன் மகளின் இயல்பு அறிந்த அவளுடைய அம்மாவால் எதையும் சொல்லமுடியாததால் மென்று முழுங்கிக் கொண்டே வந்தார். ஏம்பா சீக்கிரம் போப்பா என்று தமிழின் அப்பா கூற இதோ போயிடுறேன் என்று டிரைவர் கூறினார். வேகம் முக்கியமா?விவேகம் முக்கியமா ?என்றால் தேவைக்கேற்ப நடந்து கொள்வதே சிறந்தது என தமிழ் டிரைவரிடம் கூற புரிந்து கொண்ட டிரைவரும் காரை விரைவுபடுத்தினார்.

பத்து நிமிடம் பத்து நிமிடம் என்று நீங்க சொல்றீங்க ஆனால் முப்பது நிமிடம் ஆச்சு. இன்னும் ஹாஸ்பிடல் வரவில்லையே என்று தமிழ் கோபமாகக் கேட்டார்.

இன்னும் கொஞ்சம் நேரம் பொறுத்துக்குங்க அம்மா. இதோ பாருங்கள் ஹாஸ்பிடல் வந்திடுச்சி என பிரியன் கூறுகிறான்.

தன் எண்ணக் கனவுகளை மிதக்க விட்டான் பிரியன். தன்னுடைய குழந்தையை நினைத்து உள்ளம் பூரிக்க மனது பட்டாம்பூச்சியாகப் பறக்க பிறகு ஒருவாறாக திரும்பி தன் மனைவியின் முகத்தைப் பார்த்து கோவிச்சுக்காத செல்லம் இன்னும் ஒரு அஞ்சு நிமிஷத்தில ஹாஸ்பிடல் போயிடலாமென்று சொல்வதைக் கேட்ட தமிழ், அடப்போங்க என்னால ஒன்னும் முடியல என்று சொல்லிக் கொண்டே வந்தாள்.

டிரைவரின் சாமர்த்தியத்தால் இரண்டு மணி நேரத்தில் கடக்க வேண்டிய தூரத்தை ஒன்னேகால் மணிநேரத்தில் கடந்தார். தன் மனைவியின் முகத்தைப் பார்த்து இதோ பார் தமிழ் ஹாஸ்பிடல் என்று சொல்ல, அப்பாடா வந்திருச்சா? ஓகே ரொம்ப தேங்க்ஸ் டிரைவர் என்று நிம்மதி அடைந்தாள் தமிழ். அவசர அவசரமாக தன் மனைவியை அழைத்துக் கொண்டு மருத்துவ மனையின் பிரசவ அறைக்கு அழைத்துச் சென்றான் பிரியன்.

டாக்டர்ஸ் இன்முகத்தோடு மனைவியை அழைத்துச் செல்வதை நினைத்து நிம்மதி அடைந்தான். தன் கார் டிரைவரிடம் சென்று அவருக்குத் தேவையானதை செய்து கொடுத்து விட்டு மீண்டும் மருத்துவ மனைக்கு திரும்பினான். தன் கண்ணில் மனைவி தமிழ் வலியால் துடித்துக் கொண்டே சென்றதை நினைத்து வருந்தினான் பிரியன். நர்ஸ் ஒவ்வொரு குழுந்தையாக தூக்கிக்கொண்டு வந்து அக்குழந்தையின் தந்தையின் பெயரைச் சொல்லும் போதெல்லாம் தன் பெயரை சொல்லமாட்டார்களா? என்று ஆதங்கப்பட்டான் பிரியன். நர்ஸ் தமிழ் என்பவருக்கு குழந்தை பிறந்துவிட்டதா கொஞ்சம் சொல்லுங்களேன். ஓ தமிழுக்கா இன்னும் குழந்தை பிறக்கவில்லை. கொஞ்சம் பொறுங்கள் என்று சொல்லிக்கொண்டே நர்ஸ் உள்ளே சென்றார்.

மருத்துவர்களின் ஆலோசனைப்பேரில் சில மருந்துகளையும் மருத்துவ மனைக்குக் கட்ட வேண்டிய பணத்தில் அட்வான்ஸையும் கட்டி விட்டு வந்து தன் மகன் குழந்தையை நினைத்து மகிழ்வாக நேரத்தை கழித்தான்.ஒருபக்கம் தன்னுடைய மனைவி நல்லா இருந்தா போதும் அடுத்துதான் குழந்தை எல்லாம் என்று இயல்பு நிலைக்குத் திரும்பினான். தமிழின் அப்பாவும் ஓரிடத்தில் நிற்காமல் இங்கும் அங்குமாக சுற்றிக்கொண்டே இருந்தார். அன்றைய இரவு அவர்களுக்குப் பகலாக இருந்தது.

பிஞ்சுகளின் அழுகுரலில் அந்த இரவும் அவர்களுக்கு மேலும் பிரகாசமானதாக மாறியது. பிரியன் யாரு இங்க வாங்க உங்களுக்கு குழந்தை பிறந்திருக்கு என்று நர்ஸ் சொல்ல உள்ளுக்குள் ஏதோ சாதித்து விட்டதாக சொல்லொனா இன்பங்களின் உச்சியில் சென்றதாக தன்னை உணர்ந்தான் பிரியன். சொல்லுங்க நான் தான் பிரியன். இதோ பாருங்கள் இவுங்கதான் உங்கள் குழந்தை என்று சொல்ல ஆசையோடுப் பார்த்ததும் உடனே அவன் மனம் தமிழ் எப்படி இருக்கிறார் என்று கேட்க …ஓஓ நல்லா இருக்காங்க நார்மல் டெலிவரிதான் என்று சொல்ல ரொம்ப தேங்க்ஸ் என்று கூறி தன் சட்டைப்பையில் இருந்து ஒரு ஐநூறு ரூபாய் தாளை நர்ஸிடம் கொடுத்தான். மனதில் மகிழ்ச்சி பொங்கியது. அது அவனது கண்களில் தெரிந்தது.

தன் மாமாவிடம் சென்று என்ன மாமா குழந்தையைப் பார்த்தீங்களா என்று கேட்க ஊம் நான் பார்த்தேன். ரொம்ப அழகா இருக்கு. ஆண்குழந்தை தானே என்று கேட்க, பிரியன் என்ன மாமா இப்படி கேட்கிறீங்களே, நீங்க சரியாக பார்க்கலையா ? என்ன மாப்பிள்ளை இப்படி கேக்கிறீங்க?. பின்ன என்ன மாமா நான் நெனச்ச மாதிரியே பெண் குழந்தை ,குழந்தைதானே பிறந்திருக்காங்கன்னு மகிழ்ச்சி பொங்க கூறினான். இருந்தாலும் மாப்பிள்ளை நான்தான் பார்த்தேனே…ஆம்பள குழந்தைதானே என்று கேட்க பிரியன் என்ன மாமா இதிலப்போய் பொய்சொல்லப் போறேன். சொல்லிக்கொண்டே ரிசப்ஷன்ல இருந்த ரிதஸ்தர் நோட்டை எடுத்து காண்பித்தான். அதைப்பார்த்த அவனது மாமாவும் அட ஆமாம் மாப்பிள்ளை பெண் குழந்தேதான் ஓகே சூப்பரு என மனதைத் தேற்றிக்கொண்டே நகர்ந்தார்.

நர்ஸ் கொஞ்சம் நேரம் கழித்து குழந்தையை பிரியனிடம் கொண்டு வந்து கொடுக்க , தன் கையில் வாங்கிய பிரியன் கூறமுடியாத இன்பத்தையும் வேறொரு உலகத்தையும் தன் உயிரான குழந்தையைத் தொட்டு பேரின்பம் அடைந்தான். தேவதைகள் கதையை நான் கேட்டிருக்கிறேன். நான் இப்போது நேரில் பார்க்கிறேன் என்று சொல்லிக்கொண்டே தன மாமாவை அழைத்து குழந்தையைக் கொடுத்தான்.

உள்ளிருந்து படுக்கையில் படுத்தபடியே வரும் தன் மனைவியைப் பார்த்து மகிழ்ந்தான். மாமாவிடம் உள்ள குழந்தையை வாங்கி இதோ பார் தமிழ் நம் உலகம் என்று சொல்லிக்கொண்டே தமிழின் நெற்றியில் முத்தமிட அங்கிருந்த அனைவரும் வியந்தே போயினர்.ஆம் அவர்களின் உலகம் இன்னொரு புதிய உலகமாக தோற்றம் கொண்டது தேவதையின் வரவால்…..

Print Friendly, PDF & Email

4 thoughts on “தேவதை

  1. சிறிய கதைக்கு அருமையான திரைக்கதை யால் நீள் கதை படித்த பூரிப்பு உண்டாயிற்று மனதில்…..

  2. அய்யோ!! அருமை அருமை ஐயா.மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *