கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: March 6, 2013
பார்வையிட்டோர்: 12,877 
 

இலாபக் கணக்கு எவ்வளவு என்று வேதாசலம் மனம் வேகமாக போட்டுக் கொண்டிருந்தது. ஒரு தோசைக்கு ஒரு கரண்டி மாவு போதும். தேக்கரண்டிகள் அளவுகளுக்குள் அடங்கிவிடும் நான்கு வகையான சட்னி, துவையல், சாம்பார் என்று அனைத்திற்கும் சேர்த்து மூலப்பொருள், உற்பத்தி செலவு எல்லாம் சேர்ந்து அதிக பட்சமாய் போட்டால் கூட ரூபாய் பத்திற்குள் அடங்கி விடும்.

நோயினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் தனது அம்மாவைப் பார்க்க பிள்ளைகளுடன் மனைவி சென்றாள். காலை சிற்றுண்டி சாப்பிட வேதா வந்திருந்தபொழுது இவ்வாறு கணக்கு பண்ணிக் கொண்டுருந்தார். அந்த சிறுநகரத்தின் மூலை முடுக்கெல்லாம் புதியதாக திறக்கப்பட்டுள்ள ஒட்டல் கட்டடத்தின் டிஜிட்டல் பேனர் விளம்பரங்கள் மின்னி கண்ணைப் பறித்தன. அதில் கவரப்பட்டு சென்று மசால் தோசை கொண்டு வர சொன்னார். அந்த தோசையை சிறிது சிறிதாய் பிய்த்து ஒவ்வொரு கவளமாய் உண்டார். அந்த இடை நேரத்தில் விலைப்பட்டியலை கண்களால் மேய்ந்தார். மனதில் கணக்கிட்டு சீர்தூக்கி அலசினார். அலசிக் கொண்டே இருந்தார்.

இரண்டு இட்லிகள், ஒரு மசால் தோசை, காபிக்கு ரூபாய் நூறு விலையை எந்த பேரமும் பேசாமால் கொடுத்து விட்டுக் கிளம்பினார். அவர் மனதிலும் வயிற்றிலும் எழுந்த எரிச்சலை அவரால் கட்டுபடுத்த இயலவில்லை. நான்கு மாதங்கள் கடின உழைப்பில் விளைந்த நெல்லை காய்ச்சல் குறைவு… பதரை சரியாகத் தூற்றவில்லை… இந்த கந்தாயம் வௌச்சல் அதிகமானதால் நெல்விலை வீழ்ச்சி அடைந்து விட்டது… . கருக்கா* அதிகமாய் இருக்கிறது……. எத்தனை சால்ஜாப்புகள்… எத்துணை பேரங்கள்…

இந்த கருமாந்திரத்திற்குத் தான், நிலத்திற்கு நல்ல விலை வந்ததும், விளைச்சல் நிலம் என்றும் பாராமல் விற்று விட்டார். அந்த பணத்தை நிரந்தர வைப்புத் தொகையில் வங்கில் போட்டு வட்டி வாங்கி சாப்பிட்டு வருகிறார். அது முடிந்து போன கதை… ஏழையின் சொல் அம்பலம் ஏறாத பொழுது கணக்கு எங்கே அம்பலம் ஏறப்போகிறது என்று நினைத்தார்.

அதற்குள் அவரின் மனைவி அலைபேசியில் அழைத்தாள்.

“ஏங்க சாப்பிட்டிங்களா.. இன்னா சாப்பிட்டீங்க…. அரிசி தீர்த்து போயிடுச்சுங்க… அரிசி மூட்டை ஒன்னு மறக்காம் வாங்கி வந்துடுங்க” என்று பேசிவிட்டு அலைபேசியை வைத்து விட்டாள்.

அரிசி கடைக்குச் செல்ல வேண்டும் என்று நினைப்பு வந்தால்கூட அது அவரின் குற்ற உணர்ச்சியை, மன எரிச்சலைக் நிமிண்டி விடுகின்றது. ஆண்டுகள் உருண்டாலும் அந்த மருந்துகளின் நச்சு நாளங்களில் மெல்ல உடல் முழுவதும் ஊர்வது போன்ற பிரம்மை வந்து மனதை பேயாய்ப் பிடித்தாட்டுகிறது.

இந்த சிறு நகரில் இன்று மொத்த அரிசி வியாபாரக் கடைகள் பல முளைத்து விட்டு இருந்தன. மூன்று டிபார்மெண்டல் ஸ்டோர்கள் கூட இருக்கின்றன. எங்கு போய் அரிசி வாங்குவது என்று வேதாசலம் யோசித்தார். கண்ணில் பட்ட ஒரு அரிசிக் கடையில் தனது இருசக்கர ஊர்தியை நிறுத்தினார்.

இருபத்தைந்து கிலோ அரிசி மூட்டைகள் வண்ண வண்ணப் பைகளில் அணி வகுந்து அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.

“வெள்ளை அரிசி வேணும்….”

“ஆப்பாயில் அரிசி சார்…. பொன்னி சார்… சீப்பான விலை.. மூட்டை 850 ரூபாய் சார்.”

வேதாசலத்தின் மூளை கணக்கு போட்டு, வகுத்து, சமன் செய்ததில் ஒரு கிலோ 34 ரூபாய் வரும் என்று நினைத்தார்.

“வெள்ளை பொன்னி இருக்கா….” மீண்டும் அழுத்தம் திருத்தமாக கேட்டார்.

“டீலக்ஸ் பொன்னி இருக்குது…. சன்னமானது. சாப்பாட்டிற்கு நைசாக இருக்கும் சார்.”

வேதாசலத்தின் முகம் சுண்டி சிறுத்தது. நீதிமன்றத்தின் குற்றவாளி கூண்டிற்குள் நிற்கும் தன்னிடம் யாரோ பகவத் கீதையை நீட்டி சத்தியப் பிரமாணம் வாங்குவதைப் போன்று அவர் மனதிற்குள் குமைந்தார்.

“வெள்ளைப் பொன்னியை விட நல்லா மகசூல் தரும்.. பசுமை புரட்சியின் மைல்கல் இந்த புது ரக நெல்… எவ்வளவு உரம் போட்டாலும் தாங்கும்.. கீழே சாயாது.. நட்டுக்கினு நிக்கும்.. எலிகிலி எதுவும் கடிக்காது… தண்டு வலுவானது” என்று கூடி இருந்த உழவர் கூட்டத்தில் விவசாய விரிவாக்க அலுவலர் சுவாமிநாதன் ஒரே போடாய்ப் போட்டு தள்ளிக் கொண்டு இருந்தார்.

நான்கு காலாவதியான அசோஸ் பெரில்லம் நுண்ணுயிர் பாக்கெட்டுகளும், வரம்பில் விதைக்க இரண்டு கிலோ உளுந்தும் இலவசமாய் கொடுக்கிறார்கள் என்று ஊர் களத்துமேட்டில் கூடிய உழவர்கள் கூட்டத்தில் வேதாசலமும் அடக்கமாகி இருந்தார். விவசாய குடும்பத்தில் இருந்து தொழிலாளியாய்ப் போனவர். சிறுவிவசாயிகளுக்குரிய சுயமரியாதை, தொழிலாளர் உரிமை உணர்வுகள் உந்தப்பட்டு தொழிலாளர் உரிமைக்கான போராட்டத்தில் முன்னணியில் இருந்தார். கம்பெனி முதலாளி தகுந்த நேரத்தில் தொழிற்சங்கத் தலைவர்களை பழிவாங்கினான். வேதாசலமும் வழக்கு…. வாய்தா என்று நீதிமன்றத்தின் மடிகளில் ஏறி இறங்கிக் காத்திருக்கத் தொடங்கினர்.

வேறுவழியின்றி தனது குடும்பத்தின் வயிற்றுப் பாட்டிற்காகத் தனது குலத்தொழிலையைச் செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு வேதாசலம் தள்ளப்பட்டார். அண்ணன் தம்பிகள் பங்கு போட்டுப் பயிரிட்டுக் கொண்டிருந்த தனது நிலத்தை திரும்பப் பெற்று இவர் பயிரிட்டார். அவர்களுக்கு இதில் வருத்தம் தான்.. ஆனால், இவரால் என்ன செய்ய இயலும்?

பெரிய இலாபம் இல்லாவிட்டாலும் யாரிடமும் கையேந்தாமல் இவர் வாழ்க்கை ஒடியது. விதையில் ஆரம்பித்து ஏர் உழவு, நடவு, உரம், பூச்சிமருந்து, களைகூலி…அறுவடை என்று இவர் மனைவியின் நகைகள் ஒவ்வொன்றாக அடமானத்திற்கு வரிசையாய் அணிவகுத்துச் செல்லும். அறுவடைக்கு மீண்டும் ஒரு வழியாக நகைகள் திரும்ப மீட்கப்படும். மீண்டும் பயிரிட மீண்டும் வரிசையாய் நகைகள் அணிவகுத்து மார்வாடி கடைக்குச் செல்லும்.. இப்படி மீண்டும் மீண்டும் சுழற்சியில் இவரது பயிர்த் தொழிலும், வாழ்க்கையும் ஓடிக் கொண்டு இருந்தது.

சம்பா பருவத்தில் வெள்ளைப் பொன்னி நெல் ரகத்தை செம்பரம்பாக்கம் ஏரியைச் சுற்றியுள்ள கிராமங்களில் பயிரிடுவார்கள். இந்த நெல் ரகம் குறைந்த செலவில் நல்ல இலாபம் அளிக்கும் தன்மை உடையது. அதற்குக் காரணம் இதற்கு அதிகமாக செயற்கை உரமிட முடியாது. இதையும் மீறி யாரவது உழவன் அதிக ஆசையில் உரமிட்டால் நெடு நெடுவென வளர்ந்து விடும். கார்த்திகை மழைக்கும், புயல் காற்றிற்கும் தாள்கள் தரையில் சுத்தமாய் படுத்துக் கொள்ளும். அவைகளில் கதிர்கள் வந்தாலும் தண்டுகள் ஒடிந்து போனதால் நெல் மணியில் பால் சரியாகப் பிடிக்காமல் பதர்கள் அதிகமாகி விடும். ஒரு வேளை இதில் தப்பித்தாலும், கதிர்கள் திரண்டு முற்றியதும், அதன் பாரம் தாங்காமல் சிறிது காற்று பலமாய் அடித்தாலும் நீரில் படுத்து விடும். நீரில் முழுகிய நெல்மணிகள் அழுகிவிடும்.

ஒரளவிற்கு இயற்கை விவசாயத்திற்கான தன்மையை தன்னுள் இயல்பில் வெள்ளைப் பொன்னி ரகம் தக்க வைத்திருந்து. வாங்கின கூலிக்கு கூவ வேண்டும் என்பதால் அரசாங்கத்தின் வேளாண் அதிகாரிகள் புதிய ரகத்தைப் பாராட்டி புகழ்ந்தனர். நாள்தோறும் காலை பண்ணைச் செய்தியிலும், இரவு உழவர்களுக்கான நிகழ்ச்சியிலும் வானொலி அடுக்காக அடுக்கிப் புளுகி பிரச்சாரம் செய்தன. உரக்கடைக்காரர்கள் வானளவு முழங்கினர். வேறுவழியின்றி வேதாசலமும், மற்ற உழவர்களும், பசுமைப் புரட்சி செய்ய வீரிய ஓட்டுரகத்திற்குத் தாவினர்.

கல்லாவில் அமர்ந்திருந்து பட்டை திருநீறுணிந்த திருசெந்தூர் நாடார் வேதாசலத்தின் கையைப் பிடித்து “நேத்துதான் தீர்ந்து போச்சு சார்.. இன்னும் ரெண்டுநாளையில் வரும்….கர்நாடாகா பொன்னி இருக்கு… விலையும் குறைவு….வெள்ளைப் பொன்னி மாதிரி இருக்கும்….”

அவரை வேதா சிறிது நேரம் முறைத்துப் பார்த்தார். அதில் ஆயிரம் பொருள் பொதிந்து இருந்தன. விளக்கிக் கொள்வதற்கு அவருக்கும் புரியவைப்பதற்கு இவருக்கும் மனம் இல்லை. நேரமும் இல்லை. இன்னொரு அரிசிக் கடைக்குச் சென்றார். வேதா மீண்டும் கிளிப்பிள்ளை போல் அதையே கேட்டார்.

“வெள்ளைப் பொன்னி இருக்கா….”

“அதிசயப் பொன்னி இருக்கு சார்…. சில்க்கி பொன்னி இருக்கு… ஸ்டீம் பாயில் அரிசி நல்லா இருக்கும் சார்”

எரிச்சலில் உடனே ஏதுவும் பேசாமல் திரும்பி விட்டார். அந்த நகரின் இன்னொரு பெரிய அரிசி மொத்த மண்டிக்குச் சென்றார். ஆந்திரா பொன்னி, மப்பட்லால் பொன்னி, டீலக்ஸ் பொன்னி, சில்க் பொன்னி, அதிசய பொன்னி, சூப்பர் டீலக்ஸ் பொன்னி, நாகராஜா பொன்னி, ஆற்காடு பொன்னி, ஆரணி பொன்னி… என்று வரிசையாய் அரிசி மூட்டைகளின் மேல் எல்லா அரிசி வகைகளின் பின்னே பொன்னி என்று பெயர் வால் போல் ஒட்டிக் கொண்டிருந்தது.

வேதா மீண்டும் கிளிப்பிள்ளை போல் “வெள்ளைப் பொன்னி இருக்கா…..” என்று அங்கு நின்று கொண்டிருந்த இளைஞனிடம் கேட்டார்.

“வெள்ளைப் பொன்னியை விட டீலக்ஸ பொன்னி சூப்பரா இருக்கும் சார்… மாமா..மாமிகள் எல்லாம் இததான் வாங்கிட்டுப் போறாங்க சார். மல்லிப் பூவாட்டம் வெள்ளையா இருக்கும்” என்றான்.

“ஆமாம் மாமா மாமிங்க தான் ஏரோட்டி நடவு நட்டு, களை பறித்து அரிசியை கழனியில் இருந்து நேரிடையாக அறுவடை செய்யறாங்க… டீலக்ஸ் பொன்னியும் வெள்ளை பொன்னியும் ஒன்னா…” என்று கோபமாய்க் கேட்டார்.

“எல்லா ஒல்லி அரிசி …மல்லிப் பூ சன்னரகம்தான்.. சார் … டேஸ்ட் கொஞ்சம் வித்தியாசமா இருக்கலாம்..” என்று அந்த இளஞன் கூறினான்.

“நம்ம அரசாங்கம் சாதாரண பஸ்சை விதவிதமாய், பச்ச, நீலம் பெயிண்ட் அடிச்சி டீலக்ஸ், சூப்பர் டீலக்ஸ், சொகுசு, அதிவிரைவு என்று பல விதங்களில் பெயரைப் போட்டு ஏமாற்றுகின்ற கதையத்தான்… இங்க நீங்களும் செய்றீங்க… அது என்னங்க.. டீலக்ஸ் பொன்னி.. அதிசய பொன்னி… சில்க்கி.. எந்த ரகத்து நெல்லுக்கு இப்படி விவசாயிகள் பெயர்கள் வைக்கல்ல.. நீங்களாக மக்களை கவர்ந்து இழுக்க இப்படி பெயரைப் போடுரீங்க…. ஒன்னு சொல்லறேன் கேட்டுக்க.. வெள்ளை பொன்னி பார்க்க குண்டாக இருக்கும்.. ஆனா நன்றாக ஊறவைத்து வேக வைத்தால் அது பாசுமதியாட்டும் நீளவாட்டில் நீளும்.. மற்ற அரிசி எல்லாம் பக்கவாட்டில்தான் பெருத்து குண்டாகும்.. இதால ரைஸ்மில்லில் மத்த அரிசிகளைத் தீட்டி தீட்டி ஒல்லியாக்கி வெள்ளையாக்கி சக்கையாக்கி சன்னரகம்ன்னு விக்கறீங்க… நம்ம மக்களும் தொண்டையில் வாழப்பழம் மாதிரி நைசாக நழுவிப் போகுதுன்னு ஏமாந்து வாங்கறாங்க.. அதோடு வெள்ளைப் பொன்னி சோத்தில் தண்ணி ஊற்றி மறுநாள் சாயங்காலம் கூட சாப்பிடலாம்.. பழுது மணமாய் மணக்கும்.. சோறும் விறைத்துக் கொண்டு இருக்கும்… டீலக்ஸ்… சில்க்..எல்லாம் தண்ணிய ஊத்தி வைச்சா நொசநொசன்னு போயி நாத்தமடிக்கும்.. ஏன் தெரியுமா?” என்று காட்டமாய் வேதாசலம் பேசிக் கொண்ட சென்றார்.

சில ஆண்டுகளாய் வேதா அரிசி கடைகளுக்குப் போகும் பொழுதெல்லாம் எழும் மன உறுத்தலுக்கு இன்று வடிகால் கிடைத்தாக நினைத்து பேசிக் கொண்டு போனார்…..

எதை எதையோ சொல்லி அந்த வீரிய ஒட்டு ரக நெல்லை விவசாயிகள் தலையில் அரசாங்க அதிகாரிகள் கட்டினார்கள். அந்த ரகத்தின் தன்மையை விவசாயி புரிந்து கொள்வதற்குள், எல்லாம் அவன் கையை மீறிப் போய் விடுகிறது.

யூரியா, காம்ளக்ஸ், டி.ஏ.பி. என்று மாற்றி மாற்றி அடியுரம், மேலுரம், களையுரம் என்று குறிப்பிட்ட இடைவெளிக்குள் அடிக்கடி வேதா மாற்றி மாற்றி இட்டார். எவ்வளவு உரம், பூச்சி மருந்து போட்டாலும் அந்த நெல்ரகம் சிவனே என்று கிடந்தது; சாப்பிட்டது… எவ்வளவு உரம் போடுகின்றோமோ அந்த அளவுக்கு லாபம் வரும் என்று அதிகாரிகள் சொன்னதாக உழவர்களிடம் காற்றுவாக்கில் செய்திகள் பரவின.

பச்சை பசேலென வாளிப்பாய் பயிர்கள் தழைத்து உயரமாய் நட்டுக் கொண்டு நின்றன. நெல் பயிரின் தொண்டையில் கதிர்கள் இருந்தன. மாலை ஒளிக் கதிர்களை கிரகித்த அந்த வயல்கள் எந்த ஒவியனும் தீட்ட முடியாத ஒளிரும் பசுமையை சிதறச் செய்து அந்த வயலினை கவின் சோலையாக்கின.

பார்த்துக் கொண்டு இருக்கும்பொழுதே வயலின் ஒரு மூலையில் ஏதோ ஒன்று இலைகளின் பச்சையத்தை உறிஞ்சியது போல் சுருண்டது. நண்பர்கள் எண்ணுற்று பத்து பவுடர்* அடிக்கச் சொன்னார்கள். இருபது கிலோ பவுடர் வாங்கி, அதனுடன் வரட்டி சாம்பலை தூளாக்கி கலந்து அதிகாலையில் தெளித்தான். பதின்பருவ குமரியாய்ப் பூரித்துக் கொண்டிருந்த அந்த வயல், பவுடர் தெளித்த சிறிது நேரத்தில் கிழடுதட்டி களை இழந்து தொங்கிக் கொண்டிருந்ததது. எந்த உயிருக்கும் கருவுற்று சூல் கொள்ளும் பருவத்தை இயற்கை அளப்பரிய வனப்புடன் செழிக்க வைக்கிறது. வேதாசலம் வயலில் அங்காங்கே தென்பட்ட நெற்ப் பூக்கள் ஒரே நாளில் வயல் முழுவதும் பரவின. ஒன்று… இரண்டு மூன்றல்ல.. பல இலட்சம் பூக்கள் ஒரே நேரத்தில் வயலில் வெளிறிய இளம் பச்சை நிறத்தில் பூத்துக் குலுங்கின. அன்று மாலையில் வீசிய காற்றில் பரவிய அப்பூக்களின் மகரந்தத்தூள்கள் பரப்பிய இனிய மணம் பச்சிளம் குழந்தை தாய்ப்பாலை அருந்திய பின்பு மகிழ்ச்சியில் சிரிக்கும்பொழுது அதன் மிருதுவான கன்னத்தில் தேங்கி நிற்கும் வாசனை போல வீசியது.

மறுநாள் காலை வயலுக்குச் சென்ற வேதா திடுக்கிட்டார். சில இடங்களில் நெற்கற்றைகள் சுருண்டு வதங்கி காணப்பட்டன‌. பூச்சியா அல்லது நோயா என்று அவர் யோசித்து முடிப்பதற்குள் வயலில் பல இடங்களிலும் அது பரவியது. பதறிப் போய் பாதித்தப் பயிரிலிருந்து ஒரு தாள்க்கட்டை வேருடன் பிடுங்கி வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு கொண்டு சென்றார். அவனுக்கு முன்பு சுற்றுவட்ட கிராமங்களில் இருந்து வந்த பல உழவர்கள் அங்கு குவிந்து கிடந்தனர்.

“கதிர் வந்த பயிரில் மருந்து தெளித்தால் அரிசி விசமாயிடும்… இருந்தாலும் ஆபத்திற்குப் பாவமில்லை பாலிடாயிலும்* இனோசானும்* கலந்து ஸ்பிரே பண்ணுங்க.” என்று பட்டும்படாமலும் சுவாமிநாதன் சொன்னார்.

உரக்கடைகளில் பூச்சி மருந்துகள் வியாபாரம் சுறுசுறுப்படைந்தன. பகல் முழுவதும் பூச்சி மருந்து தெளிக்கும் விசைத் தெளிப்பான்களின் ஒசைகள் அந்த கிராமத்தில் தொடர்ந்து கேட்டுக் கொண்டு கிடந்தன. வேதாவின் வயலில் பூச்சி மருந்து அடித்தவர் முகத்தை துணியால் மூடி கொண்டு அடித்தார். இருந்தும் அந்த வீரிய மருத்தின் கொடிய விஷம் தாளாமல் தலைசுற்றி கீழே விழப் பார்த்தார். குவார்ட்டர் பிராந்தி வாங்கி வரச்சொல்லி அங்கேயே குடித்து விட்டு ஒரு மணி நேரம் உட்கார்ந்து கதை பேசிவிட்டுச் சென்றார்.

நெற்பூக்களின் மகரந்த மணம் அடியோடு அற்றுப் போய் மருத்தின் நாற்றம் வேதாவை குமட்டியது. மறுநாள் காலையில் வேதா வயலைப் பார்வையிடச் சென்றார். அந்த வயல் முழுவதும் பிணக்கடாய் மாறி நாறி கிடந்தது. புழுக்கள், பல வகையான பூச்சிகள், நீர்த்தவளைகள், சொறித்தவளைகள், அவற்றின் தலைப்பிரட்டைகள், குட்டிமீன்கள், நண்டுகள், வண்ண வண்ண சிலந்திகள் என்று அனைத்து உயிர்களும் செத்து நீரில் மிதந்து கொண்டிருந்தன‌. தீமை செய்யும் உயிரினங்களுடன் சேர்த்து நன்மை தரும் எத்தனை உயிர்களை சாகடித்து விட்டோம் என்று அவர் வருத்தப்பட்டார்

இதோடு பயிர் தெளிந்து விட்டால் அறுவடை முடிந்ததும் குலதெய்வமான காட்டேறி சாமிக்கு கோழி அறுத்து படையல் போடுவதாக வேதாசலம் வேண்டிக் கொண்டார்.

ஆனால் காட்டேறிக்கெல்லாம் பசுமைப் புரட்சி பயப்படவில்லை. ஒரு வாரம் வரை நிலைமை சரியாய்ப் போய்க் கொண்டிருந்த மாதிரி இருந்தது. வேதாவின் முகத்தில் கொஞ்சம் புன்னகை கூட வந்து குடியேறியது. நெற்கதிர்களில் பால் பிடித்திருந்தது. ஆனால், மீண்டும் வயலில் திட்டு திட்டாய் பசுந்தாள்கள் சுருண்டுக் கொண்டது. அது குலை நோயா ….வாடல்நோயா.. குருத்துப் பூச்சா ….. இலைசுருட்டுப் பூச்சா…. என்று இவர் மனதில் அசை போட்டு முளையை கசக்கி முடிப்பதற்குள் வயல் முழுக்க பாதிப்பு பரவி விட்டது. பயிர் முழுவதும் சாயியாகி* விடுமோ என்று அவன் பயந்தார்.

சமூகத்தின் பொதுப் புத்தியை மீறி, சொலவடையைப் புறந்தள்ளி அந்த உழவன் கணக்கு போட்டுப் பார்த்தான். அந்த வீரிய ரகத்திற்கு அவன் செய்த செலவிற்கு ஏக்கருக்கு 20 மூட்டையாவது விளைந்தால் தான் உழக்கு அரிசியாவது வந்து அவன் வீட்டுஉலையில் கொதிக்கும் என்று அறிவு சொல்லியது.

“பால் பிடித்த பின்னால் பயிருக்கு பூச்சி மருந்து தெளிப்பது தவறு” என்று கூறிய வேளாண்மை அதிகாரி கூடவே “ஆபத்திற்குப் பாவமில்ல … என்டோ சல்பான் அடித்தால் பயிர் தெளியும்” என்றும் ஒதினார். போனால் போகட்டும் என்று விட்டு விடும் நிலைமையிலோ அல்லது இந்த ஆபத்தில் இருந்து மீள இன்சுரன்ஸ் பணம் தரும் நிலைமையிலோவா இந்த சமூகம் உழவர்களை விட்டு வைத்துள்ளது?

மனைவியிடம் கடைசியாய் மிஞ்சி இருந்த கம்ம‌லும் மூக்குத்தியும் அடமானம் போனது. மீண்டும் அந்த கிராமம் முழுவதும் பூச்சி மருந்து விசைத் தெளிப்பான் ஒசைகள் ஒயாமல் கேட்டுக் கொண்டே இருந்தன‌. அந்தத் தம்பி வந்து என்டோ சல்பானை வேதாவின் வயலில் தெளித்தார். கடைசி டேங் அடிக்கும் பொழுது அவன் மயக்கம் போட்டு வயலில் விழுந்து விட்டான். காலையில் இருந்து 20 ஏக்கருக்கு மேல் வீரியமுள்ள என்டோ சல்பான் பூச்சி மருந்தை அடித்தால் எந்த திடகாத்திரமான உடம்பும் நெடித்து படுத்துக் கொள்ளத்தான் செய்யும். அவனை தூக்கி வண்டியில் போட்டுக் கொண்டு வேதா மருத்துவமனைக்கு ஒடினார்.

“ஆஸ்பிடல் வாசனையை விட உங்க பூச்சி மருந்து நாத்தம் தாங்க முடியல….” என்று மருத்துவர் கிண்டல் அடித்தார். அந்த மருத்துவமனை முழுக்க என்டோ சல்பான் பூச்சி மருந்து நாற்றம் அடித்தது உண்மைதான்! அவனுக்கு இரண்டு குளுக்கோஸ் பாட்டில் மருத்துவர் ஏற்றினார். அதன் பிறகு அந்தத் தம்பி இயல்பான நிலைக்குத் திரும்பினார்.

பொதுவாக நெல்மணிகள் உருண்டு திரள ஆரம்பித்தால் வானம்பாடிகளும், பலவண்ணக் குருவிகளும் கூட்டம் கூட்டமாய் வயலில் வட்டமடித்து நெல்மணிகளைக் களவாட வரும். விவசாயிகளுக்கு அது ஒரு விதத்தில் நட்டமானாலும் அவைகளை விரட்ட பெருமுயற்சிகள் எடுக்கமாட்டார்கள். வேதாசலம் தினமும் வயலில் நடக்கும் பொழுது மட்டும் உய்ய்ய்……உய்ய்ய் என்று குரல் எழுப்புவார். சர்ரென குருவிகள் கூட்டமாய்ப் பறந்து அவருக்கு போக்கு காட்டி விட்டு வயலில் இன்னொரு மூலைக்குச் சென்று அமரும். ஒரு புன்னகையுடன் தலையாட்டி விட்டு அவரும் வீடு திரும்புவார். இந்த முறை வானம்பாடிகள் வயலில் மீது வட்டமடித்து கீழே இறங்கிய அடுத்த வினாடி கீறிச்சிட்டவாறு அலறிக் கொண்டு வயலை விட்டு கண்காணாமல் பறந்து ஒடின. குருவி போன்ற சிறிய உயிர்க் கூட்டம் கூட தனது வயலை கண்டு பயப்படும்படி தான் செய்திருக்கும் செயலைக் கண்டு வேதாசலம் அதிர்ச்சி அடைந்தார்.

ஒருவாரம் கூட கழித்திருக்கவில்லை. மீண்டும் வீரியத்துடன் நெல் பயிரில் பாதிப்புகள் தோன்றி பன்மடங்கு வேகத்துடன் பரவின. மருந்து அடிக்கலாமா வேண்டாமா என்ற ஊசலாட்டத்தில் இரண்டு நாட்கள் சென்று இருக்கும். வயல் முழுமையும் நோயும், பூச்சியும் சேர்ந்து கொண்டு நர்த்தனமாடி விட்டன.

இப்படி விட்டு விட்டால் அறுவடை செய்ய கழனியில் வைக்கோல் கற்றைகள் கூட மிஞ்சாது என்று வேதாசலத்திற்குத் தோன்றியது. வேண்டா வெறுப்பாக மீண்டும் அதிக அளவில் வீரியமிக்க மருந்துகளைத் தெளித்தான். இந்த முறை அவர் மனைவியின் தாலியில் தொங்கிக் கொண்டிருந்த நான்கு நாணக்குழாய்கள் மார்வாடி கடைக்குள் குடியேறின.

அறுவடை எந்திரம் வந்து அறுவடைசெய்தது. நெல் அம்பாரத்தைப் பார்த்தால் அவனுக்கு எரிச்சலும் மனச் சோர்வும் மேலோங்கின. அறுவடை சமயத்தில் காகங்களும், மைனாக்களும், கருங்குருவிகளும், வாலாட்டிக்குருவிகளும் வயலைச் சூழ்ந்து கொள்ளும். வைக்கோல் தாள்கற்றைகளிலிருந்து சிதறியோடும், ஒளிந்திருக்கும் புழு, பூச்சிகளைக் கொத்தித் தின்பதற்கு அவைகள் அலைபாயும். காகங்களை கருங்குருவிகளும், மைனாக்களை காகங்களும் விரட்டும். கீறீச்…கீறீச் கீறீச்…கீறீச் என்று சண்டையிடும். உழவாரக் குருவிகள் நூற்றுக்கணக்கில் குறுக்கும் நெடுக்கும் பறந்து திரியும். பறவைகள் ஒலிகள் வயல் முழுதும் நிறைந்திருக்கும். இந்த முறை வேதாசலம் வயலில் காகம் இல்லை… மைனா இல்லை… எந்த உயிர்ப்பும் அங்கு இல்லை. அந்த வயல் ஒரு கல்லறையாய் மெளனித்து கேட்பாரற்றுக் கிடந்தது

பெரிய தொண்டா மரக்காலை கொண்டுவந்து விளைந்த நெல்லை குறை சொல்லிக் கொண்டு சிதம்பரம் செட்டியார் அளந்தார். நெல் விலையில் செட்டியாரிடம் எந்த பேரமும் பேசாமல் அவர் கொடுப்பதை வேதாசலம் வாங்கிக் கொள்வதற்குத் தான் இந்த சிதம்பர ராஜதந்திரங்கள்!

நெல் மூட்டைகள் என்ற பெயரில் பத்து நச்சு மூட்டைகள் லாரியில் ஏறின. செட்டியார் கொடுத்த பணம் வேதா அடமானம் வைத்த நகைகளில் பாதியைக் கூட திருப்ப முடியாததாக இருந்த‌து. கடைசியாய் களத்தில் சிதறிய நெல்லை அவர் பெருக்கி குவித்தார். அந்த நெல்லில் வீசிய மருந்து வாசம் அவர் நாசியைத் தொலைத்து என்னமோ செய்தன. வயலையும், களத்து மேட்டையும் சூழ்ந்து கொண்ட இருளில் அந்த உழவன் கரைந்து போய்க் கொண்டு இருந்தான்.

இதற்கு சில நாட்கள் கழித்து வேதாசலம் மளிகை வாங்க டிபார்மெண்டல் ஸ்டோருக்குச் சென்றார். அரிசி மூட்டைகளை லாரியில் இருந்து இறக்கிக் கொண்டிருந்தார்கள். மளிகை சாமானங்கள் வாங்க வந்த வேளாண்மை அதிகாரி சுவாமிநாதனும், உரக்கடைக்காரர் சேட்டும் டிபார்மெண்டல் ஸ்டோர் முதலாளியுடன் அளவளாவிக் கொண்டு இருந்தார்கள். அப்பொழுது லாரியில் இருந்து இறங்கி வந்த செட்டியாரும் அந்த கூட்டணிக்குள் ஐக்கியமானார்.

அங்கிருந்த பையனிடம் அரிசி வேண்டும் என்று வேதாசலம் கேட்டார்.

“டீலக்ஸ் பொன்னி சார்… சாப்பாடு சூப்பராய் இருக்கும் சார்…” என்று அவன் அளந்து கொண்டே சென்றான். வேதாசலம் குற்ற உணர்வும் எரிச்சலும் மேலிட அவர்களைப் பார்த்தான்.

அவர்கள் எப்பொழுதும் போல் இயல்பாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். அங்கிருந்த செயற்கையான கதம்ப மணத்துடன் டீலக்ஸ் பொன்னி அரிசியிலிருந்து வந்த பூச்சி மருந்து நாற்றமும் சேர்ந்து கொண்டது.

– ஆகஸ்ட் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *