கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 16,739 
 
 

முன்னொரு காலத்தில் யாழ்ப்பாணப் பட்டினத்துக்கு ஒரு புதுப் படம் வந்தால், அதைக் கிராமங்களில் விளம்பரப்படுத்துவதற்கு மாட்டு வண்டிகளைப் பயன்படுத்துவார்கள். வண்டியின் இரண்டு பக்கங்களிலும் தொங்கும் விளம்பரத் தட்டிகளில், எம்.கே.டி பாகவதரோ, டி.ஆர்.ராஜகுமாரியோ, எம்.எஸ்.சுப்புலட்சுமியோ, பி.யு.சின்னப்பாவோ காட்சி அளிப்பது வழக்கம். மேளம் அடித்தபடி வண்டி கிராமத்து ஒழுங்கைகளில் ஓடும். அப்படி ஓடும்போது, விளம்பரத் துண்டுகளை அள்ளி வீசுவார்கள். வாழ்நாள் முழுக்க இந்த ஒரு தருணத்துக்காகவே காத்திருந்ததுபோல, நானும் தம்பியும் பாய்ந்து புழுதியில் விழுந்து, புரண்டு அந்தத் துண்டுகளைப் பொறுக்குவோம்.

முன்னொரு அதே காலத்தில், எங்கள் வீட்டில் பெரிய அண்ணரும் சின்ன அண்ணரும் அடிக்கடி சண்டை போட்டார்கள். பெரிய அண்ணர், எம்.கே.டி பாகவதர் பக்தர். அவர் நடித்த அத்தனை படங்களையும் பார்த்து இருந்தார். சில படங்களைப் பல தடவைகள். சின்ன அண்ணர், பி.யு.சின்னப்பா பக்கம். அவருடைய முழுப் பாடல்களையும் மனப்பாடம் செய்து இருந்தார்; பாடவும் செய்வார். எம்.கே.டி-யின் ஒரு பாடலைக் கூடப் பாட மாட்டார். அப்படி ஒரு வன்மம்.

எங்கள் ஊர் கடையன்றின் கிராமபோன் பெட்டியில் தியாகராஜ பாகவதரின் பாட்டுக்களை வைப்பார்கள். என்னுடைய பெரிய அண்ணர் குழாய்க்குள் தலையைவிட்டு பாட்டுக்களைக் கேட்பார். கடைக்காரர் பி.யு.சின்னப்பா பாடல்களையும் போடுவார். அப்போது இரண்டாவது அண்ணர் விழுந்தடித்து கடைக்கு ஓடுவார். நானும் தம்பியும் சில சமயம் பெரிய அண்ணர் பக்கமும், சில சமயம் சின்ன அண்ணர் பக்கமும் சாய்ந்து அவர்களை மகிழ்விப்போம்.

சினிமா என்கிற சமாசாரத்தை நாங்கள் பார்த்தது கிடையாது. பெரிய அண்ணரும் சின்ன அண்ணரும் தாங்கள் பார்த்த படக் கதைகளை அளக்கும்போது, நாங்கள் ஒரு கற்பனை உலகை சிருஷ்டித்து அதற்குள் மூழ்கிக்கிடப்போம்.

‘ஜகதலப்ரதாபன்’ விளம்பரத் துண்டுகளைப் பொறுக்கிய நாளில் இருந்து, எனக்கும் தம்பிக்கும் எப்படியாவது அந்தப் படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை பெருகத் தொடங்கியது. அந்த ஆசை இன்னும் தங்கச்சிக்கு வரவில்லை. பிறந்ததில் இருந்து அவள் நோஞ்சானாக இருந்தாள். உடம்பில் எந்தப் பகுதியைத் தொட்டாலும் அங்கே ஓர் எலும்பு இருக்கும். சிரித்து விளையாடுவாள். திடீர் என்று படுத்துவிடுவாள். பெலன் காணாது என்று பரியாரியார் சொல்லி, ஓர் ஆடும் குட்டியும் அவளுக்காக வாங்கி வீட்டில் விட்டார்கள். அவள் ஆட்டுப் பால்தான் குடிப்பாள். ஆட்டுக் குட்டிதான் அவள் ஆரோக்கியமாக வளர்வதற்குக் காரணம். ஆட்டுக் குட்டிக்கு செங்கமலம் என்று பெயர். தங்கச்சி ‘செங்கி… செங்கி’ என்று கத்துவாள். அது துள்ளினால்தான் வாயைத் திறப்பாள். அம்மா ஒரு வாய் தீத்திவிடுவார். இப்படி, தங்கச்சி தேறி வந்தாள்.

ஒருநாள் நாங்கள் எல்லோரும் வீட்டில் இருந்தோம். அது பள்ளி விடுமுறை நாளாக இருந் ததால், தங்கச்சி நடுவிலே நின்று, எல்லோருக்கும் விளையாட்டுக் காட்டினாள். ஒரு வீட்டில் எத்தனை பேர் இருந்தாலும், ஒருவரைச் சுற்றித்தான் அது இயங்கிக்கொண்டு இருக்கும். எங்கள் வீட்டில் அது தங்கச்சிதான்.

இடுப்பிலே கைகளைவைத்து, இரண்டு வயதுப் பின்னல் எழும்பி எழும்பி அதே இடத்தில் விழ, அவள் ஆட நாங்கள் விழுந்து விழுந்து சிரித்தோம். அந்த நேரம் கதவை யாரோ தட்டினார்கள். ‘நில், நில்’ என்று வீட்டில் இருந்த அத்தனை பேரும் கத்த… குடுகுடு என்று ஓடிச் சென்று நாதாங்கியை இழுத்து கதவைத் திறந்துவிட்டாள் என் தங்கச்சி. கதவைத் திறக்க அவளால் முடியும் என்பது முதல் ஆச்சர்யம். வாசலில் நின்ற அந்தப் பெண்மணியைப் பார்த்தது எங்களுக்கு இரண்டாவது ஆச்சர்யம்.

எங்கள் ஊர் பணக்காரருடைய மனைவி அவர். அம்மாவைக் கண்டால், பல்லுக் கொதி வந்த மாதிரி முகத்தை மாற்றிவிடுவார். அம்மாவுக்கு அவரைப் பிடிக்காது. சாதாரணமாக எங்கள் வீடுகளுக்கு எல்லாம் அவர் வர மாட்டார். அன்றைக்கு மஞ்சள் சேலை உடுத்தி, தலை மொட்டை அடித்து, பெரிய பொட்டுவைத்து, வாயைத் திறந்து ஒன்றுமே பேசாமல் சேலை மடியை விரித்துப் பிடித்துக்கொண்டு நின்றது துயரமான காட்சி. அம்மா உள்ளே வரும்படி உபசாரத்துக்கு அழைத்தும், அவர் ஒரு சொல் சொல்லாமல் அசையாது நின்றார். நத்தை ஊர்ந்த தடம்போல முகத்திலே கண்ணீர் காய்ந்த கோடு. அம்மா உள்ளே போய் ஒரு கைப்பிடி அரிசி கொண்டுவந்து அவர் மடியில் போட்டார். தலையை ஆட்டிவிட்டு அவர் அடுத்த வீட்டுக்குப் புறப்பட்டார்.

அம்மா அவர் மடிப் பிச்சை எடுக்கிறார் என்று சொன்னார். ஏழு வீடுகளுக்குப் போய் பிச்சை எடுத்து, கஞ்சி காய்ச்சிக் குடிப்பார். அது மிகத் தீவிரமான நேர்த்திக் கடன். ஊரிலே நெருப்புக் காய்ச்சல் பரவி வந்த நேரம் அது. அவர்களுடைய ஒரே மகனுக்கு நெருப்புக் காய்ச்சல் கண்டு, அவன் படுத்த படுக்கையாகக்கிடந்தான். அதற்காகத்தான் விரதம் என்றார் அம்மா. அதன் பிறகு, அவர் சொன்னதுதான் எங்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. ‘அவர்கள் வீட்டிலே மூட்டை மூட்டையாக அரிசி அடுக்கிவைக்கப்பட்டு இருக்கும். மடிப் பிச்சை எடுக்கிறது எவ்வளவு வெட்கக் கேடு.’ அம்மாவின் வாயில் இருந்து இப்படியான வார்த்தைகள் எப்படி வந்தன என்றே தெரியவில்லை. இரண்டு நாட்கள் கழித்து அழுதுகொண்டே அம்மா அவர்கள் சாவீட்டுக்குப் போனார்; அழுதுகொண்டே திரும்பி வந்தார். அப்படியும் அவருக்கு அழுகை முடிவடையவில்லை.

பி.யு.சின்னப்பா நடித்த ‘ஜகதலப்ரதாபன்’ படம் விண்ட்சர் தியேட்டரில் ஆறு மாதங்கள் ஓடின. அந்தப் படத்தைப் பார்க்காமல் வாழ்வதில் ஒருவிதப் பிரயோசனமும் இல்லை என்பது என்னுடைய இரண்டாவது அண்ணரின் முடிவான எண்ணம். அம்மாவிடம் போய், ‘படத்தை மாத்தப் போறாங்கள். படம் மாறினால் பின்னர் பார்க்கவே முடியாது’ என்றெல்லாம் கெஞ்சினார். நாங்களும் ‘முன் வீட்டு மாமி எங்களுக்கு அம்மாவாகப் பிறந்து இருக்கலாம் அல்லது பக்கத்து வீட்டு அக்கா அம்மாவாகப் பிறந்து இருக்கலாம்’ என்றெல்லாம் சொல்லி, அம்மாவின் ஆத்திரத்தைக் கூட்டினோம். கடைசியில், சின்ன அண்ணர் சொன்னதைக் கேட்ட அம்மாவின் வாய் அப்படியே பிளந்துபோய் நின்றது. ‘நான் வயித்திலே இருந்த போது நீங்கள் என்னைக் கரைக்கப் பார்த்தது எனக்குத் தெரியும். நான் பிறந்து இருக்கவே கூடாது. என்னிலே உங்களுக்கு பட்சமே இல்லை’ என்றார். அது வேலை செய்தது.

அம்மா ஒருவரும் எதிர்பாராத காரியம் ஒன்று செய்தார். தங்கச்சியின் ஆட்டுக் குட்டியை முன்பின் யோசிக்காமல் விலை பேசி விற்றார். படத்துக்கு அளவான காசைப் பெரிய அண்ண ரிடம் எண்ணிக் கொடுத்து, எங்களை பட்டினத் துக்குக் கூட்டிப் போய் படத்தைக் காட்டிவிட்டு வரச் சொன்னார். அதுதான் நானும் தம்பியும் பார்க்கப்போகும் முதல் படம். நாங்கள் தியேட்டருக்கு கிட்டத்தட்ட பறந்துதான் போய்ச் சேர்ந்தோம். அங்கே ஏற்கெனவே வரிசை நீண்டுபோய்க் கிடந்தது. அத்தனை சனங்களும் ஆடுகளை விற்று வந்திருக்கிறார்கள் என்பதை நினைத்தபோது மலைப்பானது. கேட் திறந்ததுதான் தாமதம்… நாங்கள் நின்ற வரிசை மறைந்து புதிதாக வரிசைகள் முளைத்தன. சிலர் ஆட்களுக்கு மேல் ஏறி வந்து டிக்கெட் வாங்குவதை அன்றுதான் பார்த்தேன்.

ஒடுக்கமான வாங்குகளில் முதுகுகளை நேராக்கிக்கொண்டு நெருக்கி அடித்தவாறு நாங்கள் உட்கார்ந்தோம். வலது பக்கத்தில் கயிறு கட்டி சிறைக்கூடம்போலச் செய்து, அதற்குள் பெண்கள் உட்கார்ந்து இருந்தார்கள். சோடா, சிகரெட், கடலை என்று தோளிலே தொங்கிய பெட்டியில் இருந்து சின்னப் பெடியன்கள் விற்றார்கள். பிரமாண்டமான வெள்ளைத் திரை முன்னே இருந்தது. சும்மா அந்தத் திரையைப் பார்த்துக்கொண்டு இருப்பதே புளகாங்கிதம் தரக்கூடியது. அத்தனை கண்களும் அதையே பார்த்தன. எங்கே தங்களுக்குத் தெரியாமல் படம் ஆரம்பமாகி விடுமோ என்ற பயத்தில், அடிக்கடி திரையில் ரோர்ச் லைட் அடித்து சோதனை செய்தார்கள். முதல் மணி அடித்து, இரண்டாவது மணியும் ஒலித்தபோது, விளக்குகள் அணைந்தன. என்னுடைய இருதயம் என்றைக்கும் இல்லாத மாதிரி ஏன் அவ்வளவு வேகமாக அடித்தது என்பது புரியாத புதிர்தான். என் நெஞ்சு எலும்பு தடுத்து இருக்காவிட்டால், இருதயம் வெளியே வந்து விழுந்து இருக்கும் என்று நான் அப்போது பயந்தேன்.

இப்போது நினைவில் இருப்பது எல்லாம் பிரமிப்புதான். அன்றைக்கும் இன்றைக்கும் மறக்க முடியாத ஆச்சர்யத்தைத் தந்தது, பி.யு சின்னப்பா பல வேடங்களில் ஒரு காட்சியில் தோன்றியது. அவரே மிருதங்கம், அவரே கடம், அவரே வயலின், அவரே வாய்ப் பாட்டு, அவரே கொன்னக்கோல். சின்ன அண்ணர் ஸீட்டில் இருக்க முடியாமல் துள்ளினார். நான் என்னை உயரமாக்குவதற்கு என் கை மேலேயே உட்கார்ந்து இருந்தேன். அதனால் துள்ளவில்லை. படம் முடிந்த பிறகும்கூட எங்களுக்கு வெளியே போகத் தோன்றவில்லை. சின்ன அண்ணர் பி.யு.சின்னப்பாவின் பாட்டுகளைப் பாட, நாங்கள் ஊரை நோக்கி நடந்தோம். அங்கே எந்த வீதியில் எந்த நாய் என்பது எங்களுக்குத் தெரியும். அவற்றுக்கும் எங்களைத் தெரியும். அவை குலைத்துக்கொண்டே எங்கள் பின்னால் எல்லை முடியும் வரை வந்தன. அதன் பின்னர் அடுத்த நாய் எங்களைத் தொடர்ந்தது. இப்படியாக ஒருவாறு வீடு வந்து சேர்ந்தோம்.

அம்மா எங்களுக்காக சோற்றை வைத்துக்கொண்டு காத்திருந்தார். படக் கதையை சின்ன அண்ணர் உணர்ச்சியோடு, ஒரு சொல் மற்ற சொல்லை இடித்துக்கொண்டு வெளியே வர, சொன்னார். மிதமிஞ்சிய ஆர்வத்தில் உருட்டிய சோற்றை வாய்க்குள் வைக்காமல், கையிலே பிடித்துக்கொண்டு நீண்ட நேரம் காட்சியை வர்ணித்தார். சின்ன அண்ணருக்கு ஆகப் பிடித்த ஸீன் பி.யு.சின்னப்பாவின் சாகசங்கள் நிறைந்த வாள் சண்டைகளும், கம்புச் சண்டைகளும்தான். அம்மா ‘சோறு காயப்போகுது. முதலில் வாய்க்குள் வை, பிறகு கதையைச் சொல்லு’ என்றார். பெரிய அண்ணர் வாயைத் திறந்தால் சின்ன அண்ணர் முழுசிப் பார்த்தார். பி.யு.சின்னப்பா அவருக்குத்தான் சொந்தம். அவர்தான் கதையைச் சொல்ல வேண்டும் என்று நினைத்தார். தங்கச்சி நித்திரை ஆகிவிட்டாள் என்று மட்டுமே அம்மா சொன்னார். அவள் ‘செங்கி… செங்கி’ என்று ஆட்டுக் குட்டியைக் கேட்டு நீண்ட நேரம் அரற்றியதையும், எவ்வளவு முயன்றும் சாப்பிடாமலே அழுதபடி தூங்கச் சென்றதையும் எங்களுக்குச் சொல்லவில்லை.

அடுத்த நாளும் தங்கச்சி சாப்பிட மறுத்துவிட்டாள். முதலில் அவள் உடம்பு பொட்டுப் பொட்டாகச் சிவந்து தடித்தது. அம்மா எண்ணெய் தடவிவிட்டார். கொஞ்சம் காய்ச்சல்தனமாக இருந்ததால், கை மருந்து கொடுத்தார். நாள் செல்லச் செல்ல, காய்ச்சல் நிற்காமல் ஏறிக்கொண்டே போனது. பரியாரியாரைக் கூட்டி வந்ததும், அவர் கையைப் பிடித்துப் பார்த்துவிட்டு, நிமிடம்கூட யோசிக்காமல், நெருப்புக் காய்ச்சல் என்றார். அவ்வளவு எச்சரிக்கையாக இருந்தும் தப்ப முடியவில்லை

. வைத்தியர் கொடுத்த குளிசையை முலைப் பாலில் கரைத்து அம்மா பருகினார். காய்ச்சல் விடவில்லை. வர வர கூடிக்கொண்டே போனது. காய்ச்சலின் உச்சத்தில் தங்கச்சி ‘செங்கி… செங்கி’ என்று பிதற்றத் தொடங்கினாள். நோயின் கடைசிக் கட்டம் அது என்று பேசிக்கொண்டார்கள். பரியாரியார் வந்து கையைப் பிடித்துப் பார்த்துவிட்டு, இரண்டு நாளைக்குப் பிறகுதான் சொல்லலாம் என்றார்.

பல வருடங்களுக்குப் பின்னர் இந்தச் சம்பவத்தை நினைத்துப் பார்க்கும்போது என் மனக் கண்ணில் மீண்டும் மீண்டும் ஒரு சித்திரமே வந்து போகும். ‘ஜகதலப்ரதாபன்’ படத்தில் பௌர்ணமி வெளிச்சத்தில் அரசன் தன் மகன்களைக் கூப்பிட்டு, அப்படியான ஓர் அற்புத இரவில் என்ன செய்யத் தோன்றுகிறது என்று கேட்பான். எல்லாப் புதல்வர்களும் அரசனுக்குப் பிடித்த காரியத்தையே சொல்வார்கள். ஜகதல ப்ரதாபன் மாத்திரம் துணிச்சலோடு தான் மஞ்சத்தில் படுத்திருக்க, இந்திராணி, நாககுமாரி, அக்னிகுமாரி, வருணகுமாரி ஆகிய நால்வரும் வெண்சாமரம் வீசியும், இசை பாடியும், நடனமாடியும் பணிவிடை செய்து தன்னை மகிழ்விக்க வேண்டும் என்று மன்னனிடம் சொல்வான். அரசன் அவனைத் துரத்திவிடுவான். இறுதிக் காட்சியில் ஜகதலப்ரதாபன் சொன்னதைச் செய்து சபதத்தை முடிப்பான். அவனுடைய வெற்றியைப் பார்த்து நாங்கள் மகிழ்ந்து இருந்த அதே வேளை, எங்கள் தங்கச்சி ‘செங்கி… செங்கி’ என்று வீட்டிலே கத்தி அழுதுகொண்டு இருந்திருப்பாள். அன்று முதல் ‘ஜகதலப்ரதாபன்’ படத்தை எங்கே, எந்தச் சமயத்தில் நினைத்தாலும் என் தங்கச்சியின் நினைவும் சேர்ந்தே வரும்.

சில நாட்களாகத் தங்கச்சி படுத்திருக்கும் அறைக்குள் போகக் கூடாது என்பது அம்மாவின் கட்டளை. கயிற்றுக் கட்டிலின் நடுவே அவள் தனியாகப் படுத்துக்கிடந்தாள். எலும்பான உடம்பு என்றபடியால், அவள் கட்டிலில் கிடப்பதே சில வேளை கண்ணுக்குத் தெரியாது. நாங்கள் யன்னல் வழியாக வேடிக்கை காட்டுவோம். வீடு நிறைய இருந்த தங்கச்சி படுத்தவுடன் வீடு ஸ்தம்பித்த நிலைக்கு வந்திருந்தது. அவள் படுக்கையில் கிடக்க, என் தம்பி நாகலோகத்தில் பேபி கமலா ஆடிய பாம்பு நடனத்தை அப்படியே நெளிந்து நெளிந்து ஆடினான். தங்கச்சி வழக்கத்தில் கைதட்டி விழுந்து விழுந்து சிரிப்பாள். அன்று மெள்ள உதடுகளை அசைத்து தான் சிரிப்பதாகக் காட்டினாள். சில நேரங்களில் அதைக்கூடச் செய்யாமல், சோர்ந்துபோய் தூங்கிவிடுவாள். நாங்கள் ஒவ்வொ ருவராக படுக்கச் செல்வோம். அம்மா விளக்கைக் குறைத்துவிட்டு, தங்கச்சிக்குப் பக்கத்தில் அமர்ந்து கொள்வார்.

இரவு முழுக்க அப்பாவும் அம்மாவும் தூங்க வில்லை என்றுதான் தோன்றியது. கிரமமாக மருந்து கொடுத்துக்கொண்டும் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டும் இருந்தார்கள். அதிகாலையில் சத்தம் கேட்டு விழிப்பு ஏற்பட்டபோது, மங்கலாக உருவங்கள் அசைந்தன. ரகஸ்யமான குரலில் பேச்சு நடந்தது. அப்பா கதவுக்குப் பக்கத்தில் நிற்பது புகைபோலத் தெரிந்தது. சத்தம் செய்யக் கூடாது என்ற கவனத்துடன் கதவு நாதாங்கி உருவப்பட்டபோது, ணங் என்ற மெல்லிய ஒலி எழும்பி வீட்டை நிறைத்தது. கதவை மெள்ளத் திறந்து, மஞ்சள் சேலை உடுத்தி, மொட்டை அடித்திருந்த என் அம்மா வெளியே போனார்!

– மார்ச் 2011

Print Friendly, PDF & Email

1 thought on “ஜகதலப்ரதாபன்

  1. நன்றாகப் படம் பிடித்திருக்கிறார் ஆசிரியர் .வீட்டுக்குழந்தை பாலுக்கு அழ திருட்டுப் பயலின் கட் அவுட் டுக்கு பால் அபிடேகம் செய்யும் மானம் கெட்டவர்கள் அன்றும் என்றும் இருக்கிறார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *