சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: July 9, 2019
பார்வையிட்டோர்: 20,328 
 

நான் வீட்டுக்கு வெளியே இருந்தேன். கொஞ்ச நாளாய் குளியலறை நீர் வடிந்து ஓடித் தெரு சாக்கடையில் விழாமல் எரிச்சலை உண்டு பண்ணியது. குளிலயறையிலேயே குளம் கட்டி புரொஸ்டேட் நோயாளியின் சிறுநீர் போல மெல்ல மெல்லத்தான் வெளியானது. அது முற்றிலும் வடிந்த பின்னரும் அடித்தரையில் மெல்லிய வழுக்குப் பாசி. சிறுநீர் வீச்சம் இலவச இணைப்பாக. தினமும் தேய்த்து கழுவேண்டியதாயிற்று. கழுவிய நீர் கறைந்தோட பலமணி நேரப் பிடிவாதம். கணுக்கால் வரை அழுக்கேறித் தேங்கிய குளத்தில் நின்று குளிக்கும் நிலையைத் தவிர்க்கவியலாத போராட்டம். நான் அடைத்த சாக்கடையை ஹோஸ் பைப்பால் குத்தி தற்காலிக வடிகால் உண்டாக்கும் முயற்சிகள் பலனளிக்கவில்லை. குழாய் பொறுத்துனரை அழைத்தும் அவன் ‘தோ வரேன், நாளக்கி வரேன்’ என்று என் குளியளறை தரை போல வழுக்கிக்கொண்டிருந்தான்.

பள்ளி முடிந்து வீடு வந்து சேர்ந்திருந்தது மகளின் கார். சதீஸ் வாடிய முகத்தோடு இறங்கினான். அதற்கு நேர் முரணாக மகளின் முகத்தில் மாகாளி குடியேறியிருந்தாள்.

“ஏன் ஒரு மாரியா இருக்க?” என்று மனைவி கேட்க.

“ம்…? “என்ற முச்செறிதலிலிருந்து சினம் கனிந்து சிதறியது. புதிர் ஒன்றின் உள்ளார்ந்த மர்மத்தோடு..

“ என்னாச்சு?”

“அவனையே கேளுங்க..” என்றாள். அவன் பேசாமல் இருந்தான்.

பின்னர், “வகுப்பில நல்லா வாங்குனா எங்கிட்ட. மானம் போற மாதிரி சாத்துனேன்.?”

“பெத்த புள்ளைய எல்லார் முன்னாடியும் அடிக்கிறதா?” என்றேன் நான்.

“ ரொம்ப சாதாரண கேள்விக்குப் பதில் எழுதல. இவன விட மோசமான பையனெல்லாம் சரியா பதில் எழுதனப்ப.. தெரிஞ்ச கேள்விக்கே அஞ்சி மார்க் போச்சி..”

“ எல்லார் முன்னாலேயும் அடிக்கிறது.. மட்டமா பேசுறது சின்ன வயசுல எவ்ளோ உளவியல் பாதிப்ப உண்டாக்கும் தெரியுமா?” என்றேன்.

“ம்.. அவ்ளோ அடிச்சும் எரும மாறி சொரணயில்லாம நிக்கிறான்..உளவியல் பாதிப்பா? இவன் எல்லாம் எப்படிப்பா ஏழு ஏ போடறது? என்றாள்,” அவன் முகம் சிறுத்து கருகியதை நான் கவனித்தேன். பெற்ற அம்மா, பேணும் அப்பா, அகக்கண்களுக்கு ஒளிபாய்ச்சும் ஆசிரியர் எதிர்மறையாகப பேசினால் குற்றச்சாட்டு பாயும் என்ற சட்டம் இருந்தால் என்ன?

பின்னர் அவனைத் தனிமையில் சந்தித்துக் கேட்டேன். “ ஏன்யா.இப்படி அடிவாங்கித் தொலயிற..பாத்து கவனமா செய்ய வேண்டியதுதானே?”

“அந்த ஒரு கேள்விதான் தாத்தா. மத்த எல்லாக் கேள்வியும் சரியாத்தான் செஞ்சே..தொன்னூறு மார்க் பாத்தலையாம்..” என்றான். பெற்றோருக்கு நூற்றுக்கு, நூற்றுப் பத்து மார்க் கிடைத்தால் கூடப் போதாது. யுபிஎஸார் சோதனையின் அகோரப் பசிப் பிசாசுப் விரட்டிக்கொண்டே இருக்கிறது.

“சரி அவ்ளோ அடிச்சும் அழலையாமே நீ…”

அவன் தயங்கிய குரலில் சொன்னான், “நான் பாத்ரூம் போய் மொத்தமா அழறது யாருக்குத் தெரியும்?”

ஊத ஊதப் பெரிதாகும் நெருப்பு போல சோதனைக் கணல் பெரிதாகி பிரமாண்டமாகி அவனைச் சுற்றியுள்ளவர்களையும் மிரட்டிக்கொண்டிருந்தது. அவன் தரப்போகும் முடிவை பிறர் எதிர்பார்த்தல் அவனையே ஒரு கணம் இதெற்கெல்லாம் தன்னை ஏன் சம்பந்தப் படுத்த வேண்டும் என்ற வினா நாகமாய் தலை தூக்கி நின்றது.

மறுநாள் மேலுமொரு வன்மம் நடந்தேறியதைச் சொல்லித்தான் ஆகவேண்டும். முன்னதை விட ஆவேசமாய். நாளுக்கு நாள் அடைப்பு அதிகமாகவே நான் நீர்க் குழாய் பொறுத்தனரை வலிந்து அழைத்துகொண்டிருந்தேன் அப்போது திடாரென வீட்டுக்குள்ளிருந்து நாரசமான குரல் வந்தது. சதீசின் குரல். வலியில் துடிக்கும் அவல ஓசை. அவனுக்கான தண்டனையன்றி வேறேதும் நடந்திருக்க வாய்ப்பில்லை.. மேலும் அடிகள் விழாதிருக்க வாசற் கதவை அவசரமாய்த் திறந்தபடி உள்ளே ஓடினேன்.கதவு தடாலென்று சுவரில் அடித்துத் கனத்த ஓசையைக் கிளப்பி மீண்டும் அதிர்ந்து திரும்பி அதே இடத்தில் நிற்க முயற்சி செய்தது.

சதீஸ் மூன்று நான்கடி தன் அம்மாவிடமிருந்து விலகி நின்றிருந்தான்.. மேலும் தாக்குதல் எட்டாதிருக்க லாவகமாய் அவன் ஏற்படுத்திக்கொண்ட வியூகம் அது. அவன் கால்கள் நடுங்கிக்கொண்டிருந்தன. வலியில் “அம்மா அம்மா” என்று முனகினான். அடி பட்ட இடங்களைத் தேய்க்க முயன்று கொண்டிருந்தான். காயம்பட்ட சில இடங்கள் அவன் கைக்கு எட்டாமல் கண்ணா மூச்சி காட்டியது. அவன் விரல் துடித்து வலிக்கும் இடத்தை தொட முயன்றுகொண்டிருந்தன. எத்தனைக் காயங்களைத்தான் கைகள் ஒரே நேரத்தில் ஸ்பரிசிக்கும்?

கொசுவை வீசிக்கொல்லும் ரேக்கெட் பிளந்து அக்க அக்க கழன்றித் தொங்கியது. நல்ல கனமான ரேக்கெட் அது. அது கொண்டு தாக்குவதை நினைத்துப் பார்க்க முடியவில்லை. நான் உடனே மகளின் கையிலிருந்த மட்டையை மேலும் தாக்காமல் இருப்பதற்கு பறிக்க முயன்றேன். கொஞ்ச நேரம் இழுபறி. சினத்தில் இறுகிய பிடி.யைத் தளர்த்தாமல் தன் பக்கம் இழுத்தபடியே மல்லுக்கு நின்றாள். அவள் சினம் ரேக்கெட் வழியாக என் கைக்கு ஊடுறுத்து பாய்வது போல பட்டது. ஓய்ந்த தருணத்தில் சாதூர்யமாக அதனை விசுக்கென்று பறித்துவிட்டேன்.

“இதுல தான் அடிக்கிறதா?,” என் ஆதங்கத்தை பொருட்படுத்தாமல் அவள் மேலும் தாக்க எழுந்தாள். நான் அவனை மறைத்துத் தடுப்பாக நின்றேன். என் பின்னால் அவன் விசும்பும் ஒலி காதருகில் ஒலிக்கப் பதறியது எனக்கு. அவள் கைகளுக்கு எட்டாமல் என்னை கவசமாக்கிக் கொண்டான்.

“தண்டிக்கிறதுக்கு ஒரு மொற இல்லையா…மாட்ட அடிக்கிற மாரி அடிச்சிருக்க?” என்று ரேக்கேட்டைக் காட்டிச் சொன்னேன்.

அவள் கோபத்தில் திணறும் மூச்சு சீறியது. “நீங்க ஒதுங்குங்க…” பிடிவாதமாய் அரணாக நின்றுகொண்டிருந்தேன். அவன் மேல் அடிவிழுவதைச் சகிக்க முடியாதவனாய்- பிட்டுக்கு மண் சுமந்த சிவனின் உடலிலும் விழுந்த அடி போல எனக்கும் வலித்தது.

“இப்போ எதுக்கு இந்த அடி அடிக்குற பெத்த புள்ளைய போயி?”

“அவன் புக்க பாருங்க ‘ஓ’ வ ‘யு’ மாதிரி எழுதுறான். வட்டம் பூர்த்தி அடையுறதுல்ல. எத்தன தடவ சொல்றது? வீணால ஒரு மார்க் போய்டும்!”

“இனிமே போடமாட்டான்..வுட்டுடு நான் பாத்துக்கிறேன்,”

“இப்படி செல்லம் குடுத்து குடுத்துதான் கெடுத்து வச்சிருக்கீங்க.!” பேரப் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வதற்கு அவ்வப்போது கிடைக்கும் அங்கீகாரச் சான்றிதழ்கள் என்னிடம் நிறைச் சேர்த்திருந்தன..

“இன்னைக்கு பெரிய வாத்தியாரு..என்ன சொன்னாரு தெரியும? இவனால மானமே போது ஸ்கூல்ல,” அவள் சொற்களால் அவளே சினமேற்றப்பட்டு அல்லது சினமேற்றப்பட்டதால் சொற்களாகச் சீறி, கீழுதட்டை மடித்து கடித்து, மீண்டும் என்னிடமிருந்து அவனை இழுத்துத் தாக்க முற்பட்டாள். நான் அவனை பாதுக்காக்க, மறைத்து, அவளை என் ‘பத்மவியூக’ அரண் உடை படாமல் தடுத்தேன். என் மேலும் சில கொசுறாய் உராய்ந்து சென்றன.

“இவனுக்கு ஏழு ஏ தகுதி இல்லை. எப்படி ஏழு ஏ சாசாரான்ல போட்டிருக்கீங்க? கணக்கு அறிவியல் ரெண்டு பாடத்திலேயும் இவனால ஏ போட முடியாது. பரீட்சைக்கு இன்னும் மூனு வாரம்தானே இருக்கு. என்னா பண்ணப் போறீங்கன்னு, நாலஞ்சி வாத்தியாரு முன்னுக்கு திட்டுறாங்க. அப்பியே மென்னிய பிடுச்சி கொன்னுறனும் போல இருந்திச்சி.”

“ஏன் அஞ்சி ஏ வாங்கனா என்னா கொறஞ்சிப் போச்சாம்? அஞ்சி ஏ எல்லாம் கணக்குல சேராதா? அப்போ 5 ஈய என்னா பண்ணப் போறீங்க? 5 ஏ அதுக்கும் கீழயும் போட்டவன் பெரிய ஆள ஆனதில்லையா என்ன?”

“ அப்பா..அதுல என் கௌரவம் இருக்குப்பா!“

“எப்படிம்மா அவன் ஏழு ஏ எடுக்கிறது ஒனக்கு கௌரமாகும்? நீ பெரும படலாம், ஒம் புள்ளன்னு. எதுக்கும் கௌரம் ஈகோ கன்றாவியெல்லாம்? அவனுக்குக் கௌரவம்னு சொல்ல மாட்டீங்கிறீங்க. அந்த இரவல் கௌரவத்தில சிலுத்துக்கிறதுக்கா? என்ன அநியாயம் இது. இந்த வயசுல அவன ஓரளவு அழுத்தம் கொடுக்கலாம். அதுக்கப்புறம் அவனுக்கு எவ்ளோ கிடைக்கட்டுமோ கெடைக்கட்டும். இன்னும் படிப்புல போக வேண்டிய தூரம் ரொம்ப இருக்குமா. இப்பியே வளர்ர பச்ச செடிய முறிச்சு போட்றாதீங்க? மெல்ல வளர விடுங்க. பெரிசா வளர்ர மரத்த போன்சாய் போல சின்னதாக்கி பாக்காதீங்க.” குறுகய காலத்திலேயே ரசவாதத்தை நிகழ்த்த முயற்சிக்கும் விநோதத்தில் எனக்கு உடன்பாடில்லை.

“அப்பா இவன் ஒருத்தன் தான் ஏழுவுக்கு ஸ்கூல்ல டார்ஜெட் பண்ணியிருக்கோம். கெடைக்குலேன்னா பள்ளிக்கூட மானமே போய்டும்.”

“என்னம்மா இது? ஒரு பையன் ஏழு ஏ போடாததனால ஒரு நிறுவனத்தோட மானமே போய்டும்னா..அப்போ பள்ளிக்கோடத்துக்குப் பெருமைய சம்பாதிக்க வேற வழியே இல்லையா? ஏன் இப்படி பள்ளிக்கோடத்து கௌரவம்..பெரிய வாத்தியாரு மானம், பிபிடி மரியாதை, ஜே பி என் அந்தஸ்து, பெற்றோர் ஆசிரியர் சங்க பிரசஸ்டிஜின்னு, ஒங்க ஒட்டுமொத்த அழுதத்த ஒரு பன்னெண்டு வயசு பையன் மேல திணிக்கிறீஙக? என்ன நாயம் இது?”

“அப்பா நீங்க இதுல தலையிடாதீங்க..! ஒங்க தத்துவமெல்லாம் எடுபடாது. நீங்க ஒதுங்குங்க! இவன இன்னிக்கி உண்டு இல்லேன்னு பாத்துர்றேன்.” என்று மீண்டும் பாய்ந்தாள். அவள் உடம்பில் சினம் பொங்கி எல்லா முட்களும் சிலிர்த்து நின்றிருந்தன.

இவனுடைய வெற்றியில் அவர்கள் கௌரவம் சம்பாதிப்பது எனக்குப் போலித்தனமாகவே பட்டது. ஆனால் அதே நேரத்தில் அவன் தகுதிக்குட்பட்ட வெற்றிக்குள் அவனைக் கொண்டாடா விடாமல் தடுப்பது அவர்கள் அகந்தையன்றி வேறென்ன?

அவளின் கொந்தளிக்கும் சினத்தை ஆசுவாசப் படுத்த என் சொற்கள் பலமிழந்து-பலனிழந்து நின்றன. என் பாதுகாப்பு அரணிலிருந்து அவனைக் கைப்பற்றும் பிரயத்தனங்களை நான் முறியடித்தேன். அவனை பலவந்தமாக என் அறைக்குள் கொண்டு சென்று உள்ளே தாழிட்டேன். அடைத்த கதவு வழியாக அவளின் உரத்த குரலும், தட்டலும் ஊடுறுத்து அச்சுறுத்தியது. மூடப்பட்ட அறைக்குள், என் பாதுக்காப்புக்குள் இருந்தும் சதீஸ் மிரண்டான்.

என் கையில் கொசு அடிக்கும் ரேக்கெட் உருக்குலைந்து கிடந்தது. அதன் பகுதிகள் கட்டமைப்பை விட்டு முறிந்து கோணல மாணலாய் தொங்கியது. அடியின் தாக்கம் அதன் நிலகுலைவைப் பார்த்ததும் புலனானது. . பழுத்துகொண்டிருக்கும் பப்பாளியைப் போல திப்பித் திப்பியாய் சிவந்து விம்மிக் கிடக்கும் தழும்புகள் அவன் மேல். அந்த தழும்புகளின் மேல் சில மின்னற் கோடுகள் தெறித்து வெளிப்பட்டன. கிட்ட தட்ட ரத்தம் கசிந்து உறைந்த கோடுகள். சிவந்த மேனியில் கனிந்தவிட்ட தழும்பு துலக்கமாய் வெளிப்பட்டுக்கொண்டிருந்தது. அந்த புண்ணாகப் போகும ரணங்களின் தடையங்களை என் கண்களால் பார்க்க முடியவில்லை. சற்று நேரத்துக்கு கண் பார்வை பறி போயிருந்தால் தேவலாம் போலிருந்தது. இப்படி அடி வாங்குவது எத்தனையாவது முறை? நல்ல வேளையாய் நடு முதுகின், ஜீவ நரம்பு ஓடிக்கொண்டிருக்கும் முதுகுத் தண்டில் அடி விழவில்லை. எனக்குத் தெரிந்த ஒரு பையன் அடிவாங்கி முதுகுத் தண்டின் உயிர் நரம்பு செயல் இழந்து வாழ்நாள் முழுதும் கால்கள் செத்த ஜடமாய்ப் படுத்துக் கிடக்கிறான். உயிருள்ள பிணம்! சின்ன வயசு!

அவன் விலாப் பகுதிகளிலும் முதுகிலும் விம்மிச் சிவந்து கனிந்துச் சிவந்த ரணத்தை அவன் என்னக் கவனிக்காத தருணங்களில் பார்த்துக்கொண்டிருந்தேன், அல்லது என் கண்களை அவை ஈர்த்த வண்ணம் இருந்தன. அது என்னை என்னவோ செய்தது.

அவனை அருகில் அழைத்துக் கட்டிப்பிடித்து , அம்மாதான அடிச்சாங்க..” என்றேன். அவன் செறுமினான். சூடான மூச்சு நெஞ்சை ஏற்றி இறக்கியது.

“நான் படிக்க மாட்டேன் தாத்தா…எனக்குப் பிடிக்கல! நான் படிக்கமாட்டேன் ” என்றான்.

விசும்பலுக்குள் அவன் காட்டும் வெறுப்பின் அடிநாதம் எது?

அன்று மாலை சதீஸின் மாமா வீட்டுக்கு வந்திருந்தான். எப்போது வந்தாலும் ஒரு பெரிய மூட்டையில் அறிவுரைகளைச் சுமந்து வருவன். ஆனால் அவன் அந்த அறிவுரைகள் அவன் முன்னேற்றத்துக்கு எவ்வகையில் பயன்பட்டிருந்ததாக வரலாற்றில் இல்லை! சதீஸைக் கண்டதுமே,” என்னடா ஒழுங்கா படி! யுபிஎஸார் இருக்குல்ல, போடா போய்ப்படி, எந்நேரமும் புக்கும் கையுமாத்தான் இருக்கணும்.” என்றான். நான் நுணுக்கமாய் கவனித்துதான் வருகிறேன். அம்மா , அப்பா, மாமா, அத்தை, பாட்டி, அண்ணன் , அக்காள், ஆசிரியர் என எல்லாருமே சதீஸைச் சந்திக்குந் தோறும் ‘போய் படி’, ‘படிச்சியா,’ ‘படிக்கணும்’, ‘படிக்கலைனா மாடுதான் மேய்க்கணும்’ என்ற சொல் திரும்பத் திரும்ப சொல்லபடும் அறிவுரை வேறுரு கொண்டு வேம்பாய்க் கசக்க வைத்துக் கொண்டிருக்கிறது. ‘நான் படிக்கமாட்டேன்’ என்று அவன் தீர்க்கமாய் சொல்வதன் காரணிகள் என்னுள் குமிழ்களாய் வெடித்தன. அதற்குள் அடங்கியிருக்கும் அதிகாரம், மிரட்டல், எதிர்பார்ப்பு எத்தனை கரிசனமற்றது?. ஒருவனை எத்தனை ஆயிரம் முறைதான் படி என்று வற்புறுத்துவது? தேனே ஆனாலும் குடம் குடமாய் குடித்துவிட முடியுமா என்ன? நக்கிச் சுவைத்தால்தான் தேனுக்கும் மதிப்பு.

அறிவின் தேடலுக்கு அடிப்படையை அமைக்க வேண்டிய சொல் வர வர எப்படி வன்மச் சொல்லாகிப் போனது? விளையாட்டுப் பருவத்தை குழந்தைகளிடமிருந்து கருணையின்றி கபளீகரம் செய்யும் கல்வி எதற்கு? . தன் பிள்ளை இன்னொருவர் பிள்ளையை விட ஒரு படி மேலே இருக்கவேண்டும் என்ற ஒப்பீடுதான் ‘படியை’ அதிகாரச் சொல்லாக, படிப்பைச் சீரழிக்கும் முரணியக்கம் கொண்டியங்கியது. தன் பரம எதிரியைப் போல படிப்யை வெறுக்க வைக்கிறது குழந்தைகளை என்று எண்ணத்தோன்றியது.

இவர்கள் சிறார்களைப் படிப்பை நோக்கி நகர்த்தாமல் பரீட்சையை நோக்கி நகர்த்துவது ஒரு குறுகிய கால வெற்றியை மட்டுமே கொண்டாடத்தக்கது என்பதை மறந்தே விடுகிறார்கள். ஏழு ஏ கிடைக்கப் பெறாத பள்ளி மட்டமானது. அதன் தலைமை ஆசிரியர் நிர்வாகத் திறமையற்றவர். பெற்றோர் ஆசிரியர் சங்கம் பொறுப்பற்றது என்ற சமூகக் கருத்தாக்கம் ஊடகங்கள் வேறு ஊதி ஊதி கனன்று எரிய வைத்திருக்கிறது.

நான் அவனை ஆசுவாசப் படுத்த முயன்றுகொண்டிருந்தேன். ஆனால் அவனை சற்று நேரம் அழவிடுவது இப்போதைக்கான நிவாரணம் என்று புரிந்து அழவிட்டு காத்திருந்தேன். ரணங்கள் மேலும் சிவந்து விம்மி கண்களை கசிய வைத்தது. அவன் மீண்டும் சமநிலைக்கு வந்ததும் அன்று மாலை அவனை நான் நடைப் பயிற்சி செய்யும் திடலுக்கு அழைத்துச் செல்ல ஆயத்தமானேன்

ஒரு சர்க்கஸ் கோமாளிபோல உருண்டு, எம்பி, விண்ணைத் தொட்டு கால் சொல்வதைக் அடிமையாய்க் கேட்கும் காற்பந்து விளையாட்டுக்கு இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து அவனுக்கு தடை விதிக்கப் பட்டிருந்தது. “படி அது போதும். பந்து விளையாட்டு சோறு போடாது, என்று வெறும் சோற்றுப் பிண்டங்ளை வளர்க்கும் கல்வி எதற்கு என்று எனக்குத் தோன்றியது.

“இன்னைக்கு விளையாட மாட்டாங்க தாத்தா,” என்றான். இல்லையே நேத்தும் பாத்தனே..விளையாடுவாங்க வா,” என்றேன். வந்தான்.

அவன் சொன்னது போலவே அன்று திடலில் விரிந்து நிர்வாணமாய் நீண்டு கிடந்தது.

“சனி ஞாயிறுதான் விளையாடுவாங்க தாத்தா.” என்றான். வாரத்தில் ஐந்து நாட்களாவது நடைப் பயிற்சிக்கு வரும் நான் அதனை கவனிக்கவில்லை. போன ஆண்டு கடைசியாக இங்கே விளையாடியவனுக்கு தெரிந்திருக்கிறது அதன் கால அட்டவணை. அதன்மேல அவனுக்கிருந்த பற்றுதல். பந்து விளையாட்டை எவ்வளவு தவறவிட்டிருக்கிறான் பாவம்! அவன் கால்கள் சதிராடும், மனம் குதியாட்டம் போடும் காற்பந்து விளையாட்ட மட்டுமல்ல, அவன் பெரிதும் விரும்பு அகவுலக குதூகளிப்பு அனைத்தும் முற்றிலுமாக பிடுங்கப்பட்டு, சோதனயை மையமிடும் வரட்டு செயல்பாடுகள் மட்டுமே அவன் எண்ணம் குவி மையமிடவேண்டும். மூளைப் பகுதியின் செயல்பாட்டை முடமாக்கும் செயல் . குழந்தை பருவத்தை அபகரிக்கும் சிறார் உரிமை மீறல். யு.பி.எஸ்.ஆர் மேல் எனக்கு எப்போதுமே நல அபிப்பிராயம் இல்லை. ஒரு சர்க்கஸ் யானையை வளையத்தில் பாயவும். பின்னங்கால்களில் நிற்கவும், பெஞ்சின் மேல் நடக்கவும் பயிற்சி அளிப்பதாக இருக்கிறது. காட்டில் வளரும் யானை மாதிரி கட்டற்ற எல்லையைக் கண்டடையும் நிலை தவிர்க்கப் பட்டிருந்தது!

அவனுக்குக் கிடைத்த தண்டனைக்குக் கூடுதலாக ஏன் இன்னொரு ஏமாற்றத்தைச் செய்தேன்?.

பலமுறை அழைத்த நீர்க்குழாய் பொறுத்துனர் வாசல் மணியை அடித்தார். குளையறையைக் காட்டினேன். குழாய் பதிக்கப்பட்ட இடங்களை விவரித்தேன். சில இடங்களில் குத்திக் கிளறிப் பார்த்தார்.பிறகு சொன்னார். முன்ன போடப்பட்ட பழைய பைப் ஸிஸ்டத்த ஒன்னும் பண்ண முடியாது. அது நாலஞ்சி எடத்துல அடைச்சு கெடக்கு. நல்ல இரும்புல செஞ்ச பைப் இல்ல அதனாலத்தான். துரு பிடிச்சு இத்து போச்சின்னு நெனைக்கிறேன். அத ஒன்னும் பலுது பாக்க முடியாது. அப்படி எல்லாத்தயும் பாக்கணும்னா ஒங்க பாத்ரூம முழுசா ஒடச்சாகணும். ரொம்ப செலவாகும் சிஸ்ட்த்தையே மாத்தியாகனும். பதுசா பைப் லைன் தொறந்தாத்தான் தண்ணி சீரா ஓடும். இந்த முனையில கொஞ்சம் ஒடைச்சா போதும். தண்ணி சள சளன்னு ஓடிடும்,” என்றார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *