கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: July 6, 2020
பார்வையிட்டோர்: 23,226 
 
 

‘அப்பா, அங்கே இருக்கே, அது வாங்கித் தாப்பா !

ஶ்ரீகாந்த் என்னிடம் கோரிக்கை விடுத்தான். ஶ்ரீகாந்தான். கை விரல் நீட்டப்பட்ட திசையில், பலசரக்குக்கடையில் ஒரு மெல்லிய குறுக்குவாட்டுக் கம்பியில் நீளமாய் பொட்டல வரிசைகள் தலைகீழாய்த் தொங்கிக் கொண்டிருந்தன.

‘எது வேணும்?’

‘அதோ, அந்த சிப்ஸ் பாக்கெட். அது ரொம்ப டேஸ்ட்டா இருக்கும்ப்பா. எனக்கு அது தான் வேணும் !’

‘வேணாங்க. அது ரொம்ப காரம். சிவப்பு மிளகாய் போட்ட காரம். நாக்கு எரியும். வேற எதாவது கேளுங்க’.

‘ம்ஹீம். எனக்கு அது தாம்ப்பா வேணும்!’

வேணாங்க. சொன்னாக்கேளுங்க. இது ரொம்பக்காரம். சாப்பிட்டா வயிறு எரியும். வேற ஏதாவது வாங்கித் தரவா? இந்த பிஸ்கட், இந்த ரஸ்க், இந்த கடலை மிட்டாய், ரஸ்தாளி வாழைப்பழம் வேணுமா? இதுல எதாவது வாங்கிக்கோங்க.

‘ம்ஹீம். மாட்டேன். எனக்கு எதுவும் வேணாம். அந்த சிப்ஸ் பாக்கெட், பொட்டேட்டோ சிப்ஸ். அது தான் வேணும்!’

ஶ்ரீகாந்த முரண்டு செய்யத் தொடங்கினான். எனக்கு அவனை சமாதானப்படுத்த வழி எதுவும் தெரியவில்லை. எங்கள் பட்டிமன்றத்தை அருகில் இருந்த கடைக்காரர் கவனித்துக் கொண்டிருந்தார்.

அந்த உருளைக்கிழங்கு சிப்ஸ் பொட்டலத்தை நான் மட்டமாகப் பேசியது குறித்து அவருக்கு சங்கடம் ஏற்பட்டிருக்க வேண்டும். அந்தக் கடைக்காரர் என் நல்ல நண்பர். இருபது வருடப்பழக்கம். புன்னகை மாறாத முகம். சிவந்த நிறம். விபூதி துலங்கும் நெற்றியில் அவர் முகத்தைப் பார்த்தாலே குளிர்ச்சி தான்.

எங்கள் பட்டிமன்றத்தைக் கவனித்து விட்டு, அவர் ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்தார். அந்தப் புன்னகை, அவரது டிரேட் மார்க் புன்னகை.

ஶ்ரீகாந்த் இப்போது என்னை மீண்டும் நச்சரிக்கத் தொடங்கினான். அவன் கை காட்டிய திசையில் தொங்கிக்கொண்டிருந்த சிப்ஸ் பாக்கெட்டைப்பார்த்தேன். அதில் உதிர்ந்த உருளைக்கிழங்கு சிப்ஸ் கீழே விழுவது போலவும், அதில் சிவப்பான மிளகாய்ச் சாறு சேர்வது போலவும் புகைப்படம் அச்சிடப்பட்டிருந்தது. அந்த டிரேட் மார்க் பெயருக்குக் கீழே ‘ரெட் பெப்பர்ஸ், அரிஸோனா, யு.எஸ்.ஏ.’ என்று ஆங்கிலத்தில் பொடி எழுத்துக்களில் தெள்ளத்தெளிவாய் அச்சிடப்பட்டிருந்தது.

சிப்ஸ் பாக்கெட்டின் உறை பளபளவென பொன் மஞ்சள் நிறத்தில் மின்னியது. அந்த உறையின் கீழே, ஒரு குள்ள மனிதன் கோட், சூட் மற்றும் உயரமான தொப்பி அணிந்திருந்தான். அவனது உடைகளில் வெள்ளை, நீலம், சிவப்பு, பட்டைக்கோடுகள் தெரிந்தன. அத்துடன் ஊதா நிற நட்சத்திரங்களும் அவனது சட்டை, தொப்பியை அலங்கரித்தன. அந்தக் குள்ள மனிதன் சிப்ஸ் பாக்கெட்டை சிபாரிசு செய்வது போல, ஒரு கையை உயர்த்திக் காட்டிக் கொண்டிருந்தான்.

ஒரு சிதறிய வட்டத்திற்குள் இந்த சிப்ஸ் பாக்கெட் விலை ரூ.10. என்று அச்சிடப்பட்டிருந்தது.

‘வேண்டாங்க. சொன்னாக் கேளுங்க. வேற எதாவது…. பனங்கற்கண்டு வாங்கிக்கோங்க. ரொம்ப இனிப்பா இருக்கும்’.

‘மாட்டேன். சிப்ஸ் தான் எனக்கு வேணும்!’

இப்போது கடைக்காரர் அரு.ராமநாதன் குறுக்கிட்டார்.

‘சார், பரவாயில்லை சார். வாங்கிக்கொடுங்க சார். பையன் பிரியப்பட்டுக் கேக்கறான்ல. போனாப்போகுது. இப்ப எல்லாக் குழந்தைகளும் இதைத்தான் விரும்பி சாப்பிடுறாங்க. இது இப்ப ரொம்ப ஃபேஷன் சார். வெறும் பத்து ரூபாய் தான்’ என்று பலசரக்குக் கடைக்காரர் சிபாரிசு செய்தார்.

‘ரூபாய்க்காக இல்ல சார். இது வெறும் உருளைக்கிழங்கு மட்டுமல்ல. இதுல கெமிக்கல்ஸ் யூஸ் பண்ணியிருக்காங்க. அதனால் இதைச் சாப்பிட்டா, குடல் அல்சர் வருமாம். அதனால் தான் இதப் போயி குழந்தைக்கு வாங்கித்தரணுமான்னு யோசனையாயிருக்கு’

‘அப்படிப் பார்த்தா இப்ப இருக்கற காலத்துல எதுவுமே சாப்பிட முடியாது சார். எதுல தான் ரசாயனப் பொருள் இல்ல. சொல்லுங்க சார்! கடைக்காரர் என்னுடன் விவாதத்துக்கு வந்தார்.

பொதுவாக வியாபார இடங்களில் நான் விவாதம் செய்வதில்லை. அது யாருடைய வியாபாரத்தையாவது பாதிக்கும் என்பதால் நான் எந்தப் பொருளையும் குறித்து ஒரு கடையில் நின்று கொண்டு விமர்சிப்பதில்லை.

என்னுடைய ஊரில் உள்ள பலசரக்குக் கடைகள் மிகச்சிறியவை. அவைகளில் வியாபாரம் தொடர்ந்து நடப்பதே பெரிய விஷயம். ஒரு நாளைக்கு நூறு ரூபாய் அல்லது இருநூறு ரூபாய் நடந்தாலே அது கூடப் போதும் என்று திருப்திப்பட்டுக் கொள்கிற பல அப்பாவிகள் சிறு கடைகள் வைத்து எங்கள் ஊரில் வியாபாரம் செய்கின்றனர். ஒரு பத்து ரூபாய் சிப்ஸ் பாக்கெட் குறித்து ஏதாவது நான் பிரசங்கம் செய்து வைக்க, அதன் எதிர் விளைவு ஏதாவது இருக்கத்தான் செய்யும்.

ஶ்ரீகாந்த் இப்போது தன் குரல் சாரீரத்தை சுருதி கூட்டினான்.

‘அப்பா சிப்ஸ்ஸீ’.

இப்போது குரலில் ஸ்தாயி கூடியது.

‘அப்பா, சிப்ஸ்ஸ்… வாங்கித் தா’.

‘ஏன் ஶ்ரீகாந்த், இப்படி அப்பாவைப் படுத்தறீங்க?’

‘சிப்ஸ் ரொம்ப நல்லதுப்பா… சிப்ஸ்ஸ்,’

இப்போது குரலில் ஸ்வரம் ஏறியது. இது துவக்கம். இதை விட்டால் அடுத்தது பல்லவி என்று அழ ஆரம்பித்து விடுவான். பிறகு அனுபல்லவி கூடவே வரும்.

இப்போதே தரையில் அவன் கால்களைப் பார்க்கிறேன். அவை நிலை கொள்ளாமல் ‘லெஃப்ட் ரைட், லெஃப்ட் ரைட்’ என்று உயர்ந்து உயர்ந்து தாழ்கின்றன. அடுத்து அவன் ஓங்கிய குரலில் அழ ஆரம்பித்து விடுவான். பிறகு அவனை யாராலும் சமாதானம் பண்ண முடியாது, எதிர் வீட்டு நண்பன் கோகுலைத் தவிர.

‘அப்பா, சிப்ஸ்’.

இப்போது குழந்தையின் குரல் ஒரு மாதிரி இருந்தது. ஶ்ரீகாந்த் என் ஒரே பிள்ளை. வயது ஏழு. ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள மெட்ரிக்குலேஷன் பள்ளியில் இரண்டாம் வகுப்பில், ஒவ்வொரு தேர்விலும் பத்தாவது ரேங்குக்குள் ஒரு ரேங்க் வாங்கும் மாணவன். அவன் என்ன கேட்டாலும் நான் இல்லையென்று சொல்வதே இல்லை. இரண்டு ரூபாய் விஷயத்தில் ஆரம்பித்து, இருநூறு ரூபாய் விஷயம் வரை அவன் கோரிக்கை நீளாத விஷயமே இல்லை.

இனி மேலும் ஶ்ரீகாந்தை சமாதானம் பண்ண வழியில்லை. வேறு என்ன பொருள் கேட்டாலும் வாங்கித்தர தயாராய்த் தான் இருந்தேன். ஆனால், ஶ்ரீகாந்த் நீட்டிய கையை மடக்கவில்லை. எனக்கு அச்சூழலில் வேறு வழி தெரியவில்லை. என் விரல்கள் சட்டைப் பையில் நுழைந்தன.

‘ஶ்ரீகாந்த், சொன்னாக் கேளுங்க. வீட்டுக்குப் போய், பிரிச்சுச் சாப்பிடுங்க’.

‘சரிப்பா’.

அந்தப் பொன் மஞ்கள் நிற உறையிட்ட சிப்ஸ் பாக்கெட் இப்போது என் பையில் இருந்தது. பிற மளிகைச் சாமான்கள் அதன் கீழே தங்கியிருந்தன.

இது உருளைக்கிழங்கு துருவல். ஏதோ ஒரு எண்ணையில் வறுத்து, உப்பும், மிளகாய்த்தூளும் தூவி, சோடியம்-பை-கார்பனேட் எனும் சமையல் சோடா, சோடியம் குளூட்டோமேட் எனும் உணவு பதனப் பொருள், பல ரசாயன வர்ணங்கள், இதர பதனப்பொருட்கள் கலந்த ஒரு கலவை.

என் கல்யாணத்தில், மத்தியான சாப்பாட்டு பந்தியில் அமர்ந்திருந்த போது, முதன் முதலாய் நறுக்கிய வாழைப்பழத் துண்டுகள் மற்றும் இனிப்பு கொண்டு வந்து வைத்தார்கள். பிறகு, மிளகாய்ப் பொடியில் புரட்டிய வாழைக்காய் சிப்ஸ் கொண்டு வந்து இலையில் போட்டார்கள். பார்த்ததும், நாவில் எச்சில் ஊறியது. இதோ இந்த சிப்ஸ் பாக்கெட். உருளைக்கிழங்கின் துருவல். இது இக்கால குழந்தைகளின் அபிமானத்திற்குரிய நொறுக்குத் தீனி.

நொறுக்குத்தீனி செய்வதில் அலமேலுப் பாட்டியை அடித்துக் கொள்ள என் ஊரிலேயே ஆள் கிடையாது. அதிலும் சாயங்காலப் பொழுதில், ஏதாவது சாப்பிடத் தோன்றினால், அந்நேரம் பாட்டியே ஏதாவது எடுத்துக் கொண்டு வருவாள். நாம் எதுவும் கோரிக்கை வைக்க வேண்டாம்.

சாயங்காலப் பொழுதுகளில் அவள் எனக்கு சாப்பிடத்தந்த பொருட்களில் மிகச் சிறந்தது காராமணி என எண்ணுகிறேன். காராமணி, ஒரு அற்புதமான, ருசியான உணவுப் பண்டம். நொறுக்குத் தீனிகளின் மகாராஜா அது தான்.

கேழ்வரகு, தட்டைப்பயறு, மொச்சைப்பயறு, நிலக்கடலைப் பருப்பு, கொஞ்சம் கொள்ளு, பாசிப்பயறு மற்றும் இதர பயறு வகைகள், தானியங்களை தண்ணீரில் ஒரு நாள் ஊற வைத்து, பிறகு சுத்தமான வெள்ளைத் துணியில் (அதாவது தாத்தாவின் வேஷ்டியில்) முளை கட்டி, பிறகு வெய்யிலில் காய வைத்து, லேசாக பொன்னிறமாக வறுத்து, உப்பும், மிளகாய்ப் பொடியும் கலந்து, நன்கு கிளறி, பிறகு ஒரு பெரிய பித்தளைத் தூக்குவாளியில் எடுத்து வைத்துக் கொள்வாள். சாயங்காலம் ஆனதும், ஒரு குழிந்த பாத்திரத்தில் இதை எடுத்து வைத்துக் கொண்டு, வாயில் போட்டுக் கொண்டு அரவை செய்து கொண்டிருப்பாள். எனக்கும் இந்த நளபாக நொறுக்குத்தீனியில் பங்கு உண்டு. ஒவ்வொரு சாயங்காலமும் எப்போது வரும் என காத்திருப்பேன். நான் கேட்காமலேயே இந்த நொறுக்குத்தீனி எனக்கு வந்து விடும். நான் இதைச் சாப்பிட ஆரம்பித்ததும், அலமேலுப்பாட்டி சமையற்கட்டிற்குள் நுழைந்து விடுவாள். அங்கே கரியிட்ட இரும்பு அடுப்பில், பால் பாத்திரத்தை ஏற்றிக் காபி தயார் செய்ய ஆரம்பித்து விடுவாள்.

காபி போடுதல் என்றால், எங்கள் ஊர் செட்டியார் பலசரக்குக் கடையில் உள்ள காப்பித்தூள் ரகங்களிலேயே எது மிக மலிவானதோ அது தான் காப்பி தயாரிக்கப் பயன்படுத்தப்படும். அய்யனார் காபி, ஆஞ்சநேயர் காபி, வடிவேலர் காபி, சிவன் காபி, என்று இன்ன பிற டிரேட் மார்க் சட்டங்களால் பாதிக்கப்படாத காப்பி நிறுவனங்கள் விநியோகிக்கும் மிக மலிவான காப்பித்தூளில் தான் காப்பி போடுவாள் டிகாக்‌ஷனை ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைத்து விட்டு, ஒரு சதுரத் துணியில் வடிகட்டுவாள். அவள் போடும் காபி அவ்வளவு ருசியாக இருக்கும். வாயில் வைத்து டம்ளரை உறிஞ்சுவது கூடாது. அது எச்சில் என்பாள்.

‘அன்னாக்க வாத்துக்கோ’ என்பாள்.

‘உதடுகளில் படாமல் காபி தம்ப்ளரை உயர்த்தி நேரே வாயில் ஊற்றிக் கொள்’ என்று அதற்குப் பொருள். காப்பி சாப்பிட்டு முடித்ததும், சாயங்கால நேரத்தில் வெளியே புறப்பட்டு விடுவேன். பட்சணங்கள் செய்வதில் பாட்டிக்கு நிகர் பாட்டி தான். தேங்காய் இட்ட அப்பம் செய்தாள் என்றால், தெற்கு மாட வீதியில் உள்ள வீடுகளில் உள்ள யாவருக்கும் விநியோகம் உண்டு. வீட்டுக்கே வந்து உரிமையோடு கேட்டு, வாங்கிக் கொண்டு போவார்கள். சாதாரண அப்பம் தான். அரிசி மாவில் வெல்லம் கரைத்தது தான். அதில் தேங்காயை நறுக்கிப் போட்டு, குறிப்பிட்ட பக்குவத்தில் நல்லெண்ணையில் பொரித்து எடுப்பதில் தான் அவள் சாமர்த்தியம் இருந்தது. எல்லோருக்கும் தெரிந்த ஒன்று, அவள் கைப்பக்குவத்தில் வேறு ஒன்றாக மாறும். அந்த தேங்காய் அப்பத்தின் வாசம், அதன் திவ்விய நறுமணம், ஒரு பரம ரகசியம். பிற்பாடு, ஒரு நாள் அவள் சமையல் செய்யும் போது, அருகில் நின்று அவளைக் கவனித்தேன்.

புது நல்லெண்ணையை இலுப்பச் சட்டியில் வார்த்து, அதை நன்கு சூடுபடக் காய்ச்சியதும், பிறகு நாட்டு வாழைப்பழத்தை எடுத்து உரித்து, அதில் போட்டு, அதை நன்கு பொரித்து எடுத்து விட்டால், நல்லெண்ணையின் கசப்புத் தன்மை போய் விடும். அந்த வாழைப்பழம் நன்கு பொரிந்து விடும். பிறகு, அதை எடுத்துப் போட்டு விட்டால், அதற்கு அடுத்து அந்த எண்ணையில் எது வேண்டுமானாலும் பொரிக்கலாம். அதன் ருசியே தனி. அலமேலுப் பாட்டியின் பொரி விளங்காய் உருண்டை ருசி, ஶ்ரீவில்லிப்புத்தூரிலும், அதற்குத் தெற்கே உள்ள பல கிராமங்களிலும் பிரசித்தி.

புழுங்கலரிசி, கோதுமை, கேழ்வரகு, சோளம், பொரிகடலை, வெல்லம் இவைகளை வைத்து அவள் செய்யும் பொரி விளங்காய் உருண்டை, இக்கால சமையல் கலை பட்டப்படிப்புகளில் பாடமாகப் போதிக்கப்படாத ஒன்று. திரட்டுப்பால், சீரகம் போட்ட முறுக்கு, தேன்குழல், ஒக்கோரை, நெய் மைசூர்பாகு, சீனி லட்டு, வெல்லப்பாகு இட்ட கேப்பைத் தோசை, அக்கார வடிசல், மோதகம், கல்கண்டு சாதம், தவல் வடை… அவள் சமைத்துத் தராத தின்பண்டங்களே இல்லை.

கொல்லைப்புறத்தில் கட்டியிருந்த பசு மாடு, கன்று ஈன்றால் முதலில் வரும் சீம்பாலை எடுத்துக் காய்ச்சி, சீனியிட்டு திரட்டுப்பால் செய்து தருவாள். அதன் ருசி இன்னமும் நினைவில் இருக்கிறது.

தின்பண்ட பட்சணங்கள் தான் என்றில்லை. அவள் செய்த சமையலே தனி ரகம் தான். அந்த சமையலை அவள் எல்லோருக்கும் விளம்பரம் செய்து, தன் தலையில் கிரீடம் வைத்துக் கொள்ளவில்லை. அவ்வளவு தான்.

அலமேலுப் பாட்டி சமையலுக்குப் பயன்படுத்தியது வெறும் குமிட்டி அடுப்பு தான். எரிக்க பருத்திமார் கட்டு. ஒவ்வொரு வருஷமும் பருத்தி வெள்ளாமை முடிந்ததும், பருவகாரன் மாரியப்பன் கட்டுக்கட்டாய் பருத்திமார் கட்டுக்களைக் கொண்டு வந்து வீட்டுக் கொல்லைப்புறத்தில் வைத்து விட்டுப் போவான்.

ஆறு மாசங்களுக்கு அவளுக்கு அது போதும். அது தீர்ந்ததும் புளியமர விறகு. பருத்திமார் சாமானியத்தில் எரியாது. ஒரு தடவை பற்ற வைத்து விட்டால், அது தரும் உஷ்ணத்தில், தொடர்ந்து பருத்திமாரை அடுப்பிற்குள் சொருகிக் கொண்டே இருக்க வேண்டும். சீமத்தண்ணி எல்லாம் அலமேலுப் பாட்டிக்கு விலையுயர்ந்த ஆடம்பர சமாச்சாரங்கள். பருத்திமாரில் சமையல் செய்தால் அதில் உண்டாகும் சமையலே தனி ருசி தான். சாதம் வடிப்பது வெண்கலப் பானையில். உருண்ட வெண்கலப் பானையில் சமையல் செய்ததும், அது கரியினால் அடிப்பிடித்துப் போகும். அதைத் துணியினால் எடுத்து வந்து அதன் மேல்பரப்பில் வெந்த பருப்பு சேர்த்து. பிறகு கூடத்தில் மூலையில் இருக்கும் கோயில் ஆழ்வான் சந்நிதி முன்னால் வைத்து, அதன் மரக்கதவுகளைத் திறந்து, உள்ளே இருக்கும் விஷ்வக்சேனர், சூர்யாதேவி தாமிர உருவங்களுக்கும், பெரிய தாத்தாவின் மரத்தாலான பாதக்குறடுகளுக்கும் நைவேத்தியம் செய்து விட்டு, பிறகு தான் எனக்கு மதியச் சாப்பாடு போடுவாள்.

காலை பெரும்பாலும் பழையதும், மொச்சைப் பயறு இட்ட கெட்டியான குழம்பும் கிடைக்கும். தாமரை இலை அல்லது வாழை இலைகள் எப்போதும் ஒரு மூலையில் கோணிச் சாக்கில் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும். காய்ந்து போன வாழை இலையை எடுத்து விரித்துக் கொண்டு, அவள் முன்னே உட்கார வேண்டும். அந்த இலையில் உலகில் உள்ள அத்தனை மேடு பள்ளங்களும் இருக்கும். அதில் கல் சட்டியில் வைக்கப்பட்டிருக்கும் முந்தின நாள் பழையதை எடுத்துப்போடுவாள். பிறகு ஈயப்பாத்திரத்தில் இருக்கும் தயிரைக் கடைந்து, புளித்த மோரை எடுத்து, அந்த பழைய சாதத்தின் தலையில் ஊற்றுவாள். புளித்த மோர், பழைய சாதத்தில் விழுந்ததும், கண்மாயை உடைத்து, மறுகால் ஓடும் மழைத்தண்ணீர் போல அங்குமிங்கும் மோர் ஓடும். அதை அங்குமிங்கும் ஓடாதபடி சாதத்தால் அணை கட்டுவதற்கு ஒரு இஞ்சினியரின் சாமர்த்தியம் கட்டாயம் வேண்டும்.

இலையின் ஓரத்தில் கொஞ்சம் கல் உப்பும் வைப்பாள். இதையெல்லாம் பிசைந்து, அது கசங்கிய, பழைய பழுப்பு நிற வாழையிலையின் விளிம்புகளைத் தாண்டி, எல்லை கடந்து, அந்நிய தேசத்திற்குள் புகுந்து விடாதபடி கைகளால் சாதத்திற்கு எல்லைப் பாதுகாப்பு செய்ய வேண்டும். அது சாப்பிடுவதற்கு ஒரு ராஜ தந்திரம் வேண்டும். சாதமும், மோரும் குழைத்து வைத்துக் கொண்டு, அவள் முகத்தைப் பார்த்தால், உடனே புரிந்து கொண்டு, கையில் ஒரு சிரட்டையில் கொண்டு வந்திருக்கும் தேங்காய்த் துவையலை எடுத்து, இலையின் ஒரு மூலையில போடுவாள். புளி, தேங்காய், மிளகாய், பருப்புக் கலவையில் அரைத்து, கார்ப்பும், புளிப்பும், காரமும் கூடிய ஒரு பல்சுவைக் குவியல் அந்த துவையல். அது உப்பின் கார்ப்பா அல்லது புளிப்பா என்று நாவால் ருசித்து முடிவு செய்தவற்குள், மிளகாயின் காரம் முந்திக் கொண்டு விடும். இந்தப் பழைய சாதத்திற்கு வைணவர்கள் இட்ட பெயர் ‘மடிப்பழையது’

காலையில் மடியாய் குளித்து விட்டு, உத்திரத்திலிருந்து குறுக்காய்த் தொங்கும் மூங்கில் கம்பிலிருந்து ஒரு வேஷ்டியை, ஒரு மூங்கில் குச்சியால் கெந்தி எடுத்துக் கொண்டு, அதை உடுத்திக் கொண்டு, நெற்றியில் திருமண் இட்டுக் கொண்டு, இடுப்பில் ஒரு உத்தரியத் துண்டை இறுக்கிக் கட்டிக் கொண்டு, வேகம் வேகமாக ஆண்டாள் கோவிலுக்குள் விஸ்வரூப தரிசனத்திற்குப் போய், அங்கிருக்கும் கோஷ்டியோடு சேர்ந்து விட வேண்டும்.

அங்கு விஸ்வரூப தரிசனம் முடித்து வீடு திரும்பியதும், மேற்சொன்ன ‘மடிப்பழையது’ தான் பாட்டி தரும் காலை ஆகாரம். அந்தக் கல் சட்டியில் ஊற வைத்த பழைய சாதத்தின் குளிர்ச்சியும், அதன் ருசியும். அதற்கு ஈடாக வேறெதுவும் சொல்ல முடியாது. மதியம் சாப்பிட ஒரு வேளை அதிர்ஷ்டம் இருந்தால், நல்ல வாழை இலையில் சாதம் கிடைக்கும். நல்ல வாழை இலை, பருவக்காரன் மாரியப்பனின் கைங்கரியத்தில் தான் இருந்தது.

தரையில் அமர்ந்ததும், நல்ல நுனி வாழை இலையில் நீர் தெளித்து, வாழைக்காய் பொரியல், கொத்தவரங்காய் அல்லது சேப்பங்கிழங்கு பொரியல், வயக்காட்டுப் புடலங்காயில் செய்த பருப்பு போட்ட கூட்டு பரிமாறி, பின்னர் வெண்கலப் பானையில் செய்த சாதத்தை எடுத்து ஒரு சிப்பலில் வைத்துக் கொண்டு, இலையில் போட்டதும்,

‘போதுமா? இலையைப் பார்த்துச் சொல்லு!’ என்பாள்

சூடாய் ஆவி பறக்கும் பச்சரிசி சாதத்தில் பருப்பு இட்டு, நெய் விட்டதும், வாழை இலையிலிருந்து மேலெழும்பும் சூடான ஆவி நாசியைத் துளைக்கும். அந்த மணம் திவ்வியமான சமையல் மணம். பாட்டியின் கைப்பக்குவ மணம். நாசி வழியே நுழையும் அந்த மணம், கண்களைச் செருக வைக்கும். கடலைப்பருப்பும், நறுக்கிய கத்தரிக்காயும், பச்சை மிளகாயும் இட்ட குழம்பு சேர்த்து, சூடான சாதத்தை கவளம், கவளமாக விழுங்க, விழுங்க, நாவில் நீர் ஊறி, அதன் ருசி மேலும் மேலும் நிறைய கவளங்களை உருட்டி உள்ளே அனுப்ப வைக்கும். ‘சாற்றமுது’ என்றால் வைணவ அகராதியில் ‘ரசம்’ என்று அர்த்தம். குறுமிளகும், தக்காளியும் இட்ட அந்த ரசத்தை வாழை இலையில் அங்குமிங்கும் ஆறு போல ஓட விடாது, விரல்களால் அணைத்து எடுத்து, சாதத்துடன் சேர்த்து வாய்க்குள் ‘சர், சர்ரென்று’ உறிஞ்சித் தள்ளுவது ஒரு தனிக்கலை. அப்படிச் சாப்பிடத் தனித்திறமை வேண்டும். தட்டில் ரசம் சாப்பிடுவது எளிது. எடுத்து உறிஞ்சி விடலாம். வாழை இலையில் அதே சாற்றமுதை உறிஞ்சி, சுவைத்தல் தனி விதம்.

அலமேலுப் பாட்டி சமையலில் சாற்றுமுதுக்கு தனி இடம் உண்டு. இலையில் ஊற்றியதும், அதை உறிஞ்சிச் சாப்பிடும் யாவரும் சப்புக் கொட்டிக் சாப்பிடுவதைப் பார்த்திருக்கிறேன். சாப்பிடுபவர் தலையை ஆட்டிக் கொண்டே, அந்த சாற்றமுதின் ருசியை ஆமோதிப்பது, பக்க வாத்தியக்காரனின் தனி ஆவர்த்தனத்தை அங்கீகரித்து அதை ரசிக்கும் மேடை பாகவதரின் தலையசைப்பு போன்றது. பாட்டியின் சாற்றமுது தெற்கத்திச் சமையலின் முத்தாய்ப்பு. அதன் ரகசியத்தை வெகு யதேச்சையாய்ப் பார்த்தேன். விறகு அடுப்பில் ரசம் கொதிக்கும் போது, ஒரு சிறு அச்சு வெல்லத் துண்டை எடுத்து அந்தப் பாத்திரத்திற்குள் பாட்டி போட்டு விடுவாள். அந்த நளபாக ரகசியம் கிட்டத்தட்ட சிதம்பர ரகசியம் போன்றே இருந்து, பிற்பாடு தான் அதைக் கண்டுபிடித்தேன்.

‘திருக்கண்ணமுது’ என்ற பாயாசம் கெட்டியாக இருக்க வேண்டும். பால் இட்ட பாயாசத்தில், ஏலமும், முந்திரிப்பருப்பும், கிஸ்மிஸ் பழமும் நம்மைப் பார்த்துக் கண்ணடித்துச் சிரிக்கும்.

‘வாய்யா, வந்து மாட்டிக்கிட்டியா?’ என்று பால் பாயாசம் நம்மைப் பார்த்து பரிகசிப்பது போலத் தோன்றும்.

மோர் சாதம் என்றால் அலமேலுப் பாட்டி அகராதியில், தயிர் சாதம் என்று அர்த்தம். ஈயக் குண்டானில் முந்தா நாள் ஊறை பூத்திய தயிர் கெட்டியாய் இருக்கும். கத்தி வைத்து வெட்டலாம் போலத் தோன்றும். அந்தப் புளித்த தயிரும், உப்பும் இட்ட சூடான தயிர் சாதம், தேவாமிர்தத்தை இரண்டாம் இடத்துக்குத் தள்ளி, தான் முதலிடம் பிடித்து விடும். சில சமயங்களில் தயிர் சாதத்துக்குத் தொட்டுக் கொள்ள பிரண்டைத் துவையல் போடுவாள். அந்தப் பிரண்டைத் துவையல் ருசி எவரையும் கிறங்க அடிக்கும் போதை வஸ்து. பார்த்தாலே வாய் முழுக்க ஜலம் ஊறும். பிரண்டை நல்ல மூலிகை என்று பிற்பாடு தான் தெரிந்து கொண்டேன்.

‘சாதத்தை மோர் விட்டு, நன்றாகப் பந்து மாதிரி பிசைந்து, உருட்டி எடுத்து, ஒருத்தன் மேல் வீசினால், அவனுக்குக் காயம் வர வேண்டும். அப்படிப் பிசைந்து உருட்ட வேண்டும்’ என்பாள் அலமேலு அம்மாள் என்ற அலமேலுப் பாட்டி.

தண்ணீரும், காற்றும், நிலமும், சாப்பிடும் ஆகாரமும், ஏன் மனிதர்களும் கூட அசுத்தப்படாமல் இருந்த காலத்தில் வாழ்ந்த அலமேலு அம்மாள், சமையலிலும், வாழ்விலும் சிக்கனத்தைத்தான் கடைபிடித்தாள். மாதம் ஒண்ணாந்தேதி அவளிடம் குடும்பச் செலவுக்கு நூறு ரூபாய் கொடுத்தால், மாதக்கடைசியில் எழுபது ரூபாயை என் அப்பாவிடம் திருப்பித் தருவாள்.

வீட்டில் சமையல் எல்லாமே அவளது ராஜரீகம் தான். இரண்டு நாற்பது வாட்ஸ் பல்பு மட்டும் விளக்கெரிக்க. சீமத்தண்ணி ஊற்றிய சுவரொட்டி விளக்கு, கூடத்தில் மினுக், மினுக் கென்று வெளிச்சம் தரும். ஃபேன், ரேடியோ, டிவி, மிக்சி, கிரைண்டர் இத்தியாதிகள் எதுவுமே கிடையாது.

அலமேலு அம்மாள் காராமணி சாப்பிடும் விதமே தனி அழகு தான். அதே போல் நானும் சாப்பிட்டுப் பார்த்திருக்கிறேன். காராமணியை ஒரு பூவரச இலை தொன்னையில் எடுத்து வைத்துக்கொண்டு, பிறகு கையில் சிறிது எடுத்து வாயில் போட்டதும், கண்களை மூடிக் கொள்ள வேண்டும். காராமணியின் உப்பும், உறைப்பும் நாக்கைத் துளைக்கும். மெதுவாக வாயால் அரைக்க, அரைக்க அதன் பயறு மணிகளின் ருசி கொஞ்சம், கொஞ்சமாய்ப் புலன்களுக்கு உணர வரும். உடலுக்கு தீங்கு செய்யாத, ரசாயனப் பொடிகள் கலக்காத நல்ல பண்டம் காராமணி. எனக்குக் காராமணி செய்து தந்த அலமேலு அம்மாள் என்னுடன் இப்போது இல்லை.

திண்ணையில், குழந்தை ஶ்ரீகாந்த் சாப்பிட்டு விட்டுக் கீழே போட்ட உருளைக்கிழங்கு சிப்ஸ் பொட்டலத்தின் வண்ணக் காகிதம் கிழிபட்டுக் கிடந்தது. கீழே குனிந்து அதை எடுத்துப் பார்த்தேன். நீல, சிவப்பு, வெள்ளை வர்ணங்களில் கோட், சூட், தொப்பி அணிந்த அந்த அமெரிக்க வெள்ளைக்காரன், சிப்ஸ் பொட்டலத்தை சிபாரிசு செய்யும் வண்ணம் இடது கையை உயர்த்திக் காட்டிக் கொண்டிருந்தான். அவனது சட்டையில் நீல நிற நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருந்தன. எனக்கென்னவோ அவனது உருவத்தை ரசிக்கப் பிடிக்கவில்லை.

– 2014ல் வெளியான அடியேனின் “முத்தா” சிறுகதைத்தொகுப்பில் இந்தச்சிறுகதை வெளியானது.”முத்தா” -சிறுகதைத்தொகுப்பு, தமிழக அரசின், தமிழ் வளர்ச்சித்துறையின் நிதி பெற்று வெளியிடப்பட்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *