கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: December 18, 2013
பார்வையிட்டோர்: 10,893 
 

மூர்த்தி.இவனை நீங்கள் பாளை மத்திய சிறை அருகில் பார்த்திருக்க வாய்ப்புண்டு. அந்த ரெயில்வே கிராசிங் அருகில் இருக்குமே. அங்கு தான் ஜெயிலராக வேலை பார்க்கிறான். ஆறடி குறையாமலிருப்பான். அகன்ற மார்பு. கணீரென்ற குரல். ‘டேய்…..மவனே என்று கத்தினால் மிரண்டோடும் கைதிகள். புத்தகத்தை பிடிக்காது. இதயம் பேசுகிறது மட்டும் படிப்பான். அதுவும் இப்போது நின்று விட்டதால் அவன் இலக்கிய ரசனை தூங்கி கொண்டிருந்தது.இரண்டு நாளைக்கு ஒரு சிகரெட் பாக்கெட்டும், சனிக்கிழமை மட்டும் உ.பா. தொடும் மத்தியஸ்த்தன். ரஜினி கமல் படம் வந்தால் மட்டுமே தியேட்டருக்கு சென்று இடைவெளியில் இரண்டு பாக்கெட் பாப் கார்னும் ஒரு கோன் ஐஸ் வாங்கி வந்து சுஜியிடம் ‘ஒருதடவ நீ சாப்பிட்டு கொடு சுஜி’. என்று கொடுப்பான். ஸாரி. சுஜி யாரென்று சொல்லவில்லை அல்லவா? சுஜிதா அவன் மனைவி. புதுப்பெண். சுஜி என்று தான் கூப்பிடுவான். கல்யாணமாகி ஆறு மாதங்கள் தான் ஆகிறது. இங்கு தான் VMS மண்டபத்தில் சுற்றம் நட்பும் சூழ மணந்தார்கள். அடுத்த வாரமே ஊட்டி போய் வந்தார்கள். பனியிலும் நடுங்கிக்கொண்டே நடந்தார்கள். மூர்த்தி கண்ணடித்து நிறைய சில்மிஷம் செய்தான். சுஜிக்கு முதலில் வெட்கமாக இருந்தது. பிறகு பழகிவிட்டது. ஒரு வாரத்தில் திரும்பி வந்திருந்தார்கள். அதற்க்கு அடுத்த வாரமே வாந்தி எடுத்தாள். குடும்பமே சந்தோஷபட்டது. டாக்டரிடம் கூட்டி சென்று உறுதி செய்தார்கள். கோயிலுக்கு போனார்கள். பொங்கல் வைத்து பக்கத்து வீட்டிற்க்கு கொடுத்தார்கள். கொண்டாடினார்கள்.

சுஜிக்கு சந்தோஷமாக இருந்தது. ஒவ்வொரு தடவை வாந்தி எடுக்கும்போதும் மூர்த்தி அவள் தலையை பிடித்து கொண்டான். வெந்நீர் வைத்து கொடுத்தான். கால் பிடித்து விரலில் சொடக்கு எடுத்தான். தினமும் மாலை வாக்கிங் கூட்டி சென்றான். தலை நிறைய பூ வாங்கி கொடுத்தான். கோவில் சென்றார்கள்.. முடியாத நேரத்தில் அவளுக்கு சமைத்து கொடுத்தான். ஒவ்வொரு மாதமும் டாக்டரிடம் அழைத்து சென்றான். எடை ஏறுகிறதா என்று குறித்து கொண்டான். அவளுக்கு என்னென்ன பிடிக்குமோ அதையெல்லாம் கேட்டு கேட்டு வாங்கி கொடுத்தான். இரு கைகளில் ஏந்தினான்.

வழக்கம்போல் இந்த மாதமும் செக்கப்புக்காக செல்ல வேண்டும். ஐந்து கிலோமீட்டர் தாண்டி இருக்கும் ஒரு தனியார் கிளினிக்கில் காமித்து கொண்டிருந்தார்கள்.

மூர்த்தி, ‘சுஜி, இன்னைக்கு செக்கப் போகணும்ல? இப்போதான் ஞாபகம் வருது?’

சுஜி, ‘ஆமாங்க, டாக்டர பாக்கணும், பழய மருந்து சீட்டெல்லாம் எடுத்து வச்சிருக்கேன்’.

சுஜி, ‘இங்க பாருங்க. அங்க இல்லை. இங்க கை வச்சு பாருங்க.’ சுஜி அவன் கையை எடுத்து தன் வயிற்றில் வைத்து கொண்டாள்.

‘அட ஆமா.’ கையை எடுத்து விட்டு காதை வைத்தான். ‘களுக்’ என்று சத்தம் கேட்டது. குழந்தை உதைத்திருக்க கூடும்.மூர்த்திக்கு சந்தோஷமாக இருந்தது. அவன் வித்து. விதையாகி கொண்டிருந்தது. பேர் சொல்ல, தன் பேரை சுமக்கும் ஒரு பிள்ளை. எல்லா இடங்களிலும் வந்து ஒட்டிக்கொள்ளும். செய்யும் காரியங்கள் எல்லாவற்றையும் கூர்ந்து கவனிக்கும். திருப்பி செய்யும். காலை கட்டி கொள்ளும். கடைக்கு கூட்டி போக சொல்லும். அதன் மொழியை காற்று கொடுக்கும்.உணவைத்தவிர மற்ற எல்லாவற்றையும் வாயில் வைத்து முழுங்க முயற்சி செய்யும். தத்தி தத்தி நடந்து அறையில் எட்டி பார்த்து ‘பே’ என்று பயம் காட்டும். பொக்கை வாய் காட்டி சிரிக்கும். கண்ணாடி போல் பிரதிபலிக்கும். வாழும் வாழ்க்கைக்கு சாட்சியாய் வளர்ந்து நிற்கும்.நினைக்கும்போதே மூர்த்திக்கு சிலாகித்தது. ஆனால் அவனது துரதிர்ஷ்டம் மூர்த்தி இன்று இறந்து விடுவான்.

டூவீலரை ஸ்டார்ட் செய்து கொண்டான். சுஜியை அழைத்து செல்லும்போதெல்லாம் மெதுவாக ஓட்டினான். மேடு பள்ளம் நின்று சென்றான்.

‘சுஜி, இன்னைக்கு செக்கப் முடிச்சிட்டு அப்டியே வெளில போயி சாப்டுட்டு வரலாமே. நீ வேற ரொம்ப நாள சொல்லிட்டு இருக்க?’

‘உங்களுக்கு இப்பாதான் நேரம் கிடைச்சுதாக்கும்?. எத்தன நாள் சொல்லிருக்கேன்?”

வயிற்றில் பிசுபிசுப்பாக ஏதோ தடவி மவுஸ் போன்றதொரு வாஸ்துவை வைத்து டாக்டர் உருட்டி கொண்டிருந்தார்.

‘இது பேபியோட ஹெட். இங்க ரெண்டு கை தெரியுது பாருங்க. இப்போ கேக்றதுதான் ஹார்ட் பீட்.

மூர்த்தி ஆர்வத்தோடு கேட்டு கொண்டிருந்தான்.

‘பல்ஸ் நார்மல். பிரெசர் நார்மல். நிறைய தண்ணி குடிங்க. வெளில பே பன்னிட்டு வெயிட் பண்ணி ரிப்போர்ட் வாங்கிட்டு போங்க.’

பெஞ்சில் உட்கார்ந்து கொண்டார்கள். பிறக்க போகும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள். அரைமணியில் ரிப்போர்ட் வந்தது. வண்டியை உதைத்து ஸ்டார்ட் செய்தான்,

‘மணி ஏழாயிட்டு சுஜி. கடை திறந்துருக்கும்ல?’

‘இப்பதான் திறந்திருப்பான். நீங்க பொறுமையா மெதுவா ஒட்டுங்க?’

புழுக்கமாக இருந்ததால் தலையில் இருந்த ஹெல்மெட்டை அகற்றினான்.

‘உங்கள எத்தன தடவ சொல்றது? ஹெல்மட் போடாம ஒட்டாதிங்கனு?

‘இன்னும் ரெண்டு கிலோமீட்டர் தானே. போய்டலம்மா.’

இரவதாலால் ஒளிர்விளக்குகள் கண்ணை கூசியது. சிட்டியிலிருந்து பிரிந்து NH சாலைக்கு வந்திருந்தார்கள். சாலை சீராக இருந்தது. மூர்த்தி மெதுவாகத்தான் ஓட்டினான் ஆனால் புல்லட் பீர் அடித்த போதையில் எதிரே ஒரு பிஹாரி ஒட்டி வந்த லாரி இவர்களை கவனித்தாக தெரியவில்லை. ஹோண்டாவின் ஹேலோஜன் விளக்கு அவனுக்கு மின்மினி போல தெரிந்திருக்க வேண்டும். ஓரமாக வந்த மூர்த்திக்கோ சடுதியில் அந்த லாரி வந்து மோதும் என்று எதிர்பார்க்க முடியவில்லை. கோடு போட்டாற்போல நேரே வந்து மோதினான். மோதிய வேகத்தில் மூர்த்தி தூக்கி வீசப்பட்டான். சிகரட் அட்டயை கிழித்து சாலையில் ஓட விடுவது போல் மூன்று நான்கு கரணம் அடித்து கீழே விழுந்தான்.

தலை நேராக மோதியதால் உள்ளே இருந்த மூளை பல தடவை குலுங்கியது. மண்டையோட்டில் மோதியதால் உடனே மூளையின் திசுக்களிலும் நாளங்களிலும் ரத்த கசிவு ஏற்பட ஆரம்பித்தது. மிக வேகமாக நியூரோனல் அக்ஸான் பழுதடைந்து உடலில் மற்ற பாகங்களுக்கு செய்தி சொல்லும் வேலை உடனே நிறுத்திக்கொண்டது. உடலின் மற்ற பாகங்கள் ஒவ்வொன்றும் மூளையின் கட்டளை இல்லாமல் மெதுவாக செயலிழக்க ஆரம்பித்திருந்தன.

ஒரு சில நிமிடங்களில் இது நடந்து விட, சுஜி விழித்துக்கொண்டாள். வண்டி அவள் மேலே விழுந்திருந்தது. உடனே வயிற்றில் கை வைத்து பார்த்தாள்.

‘அசைவு தெரிகிறது.’ தனக்கு தானே சொல்லிக்கொண்டாள்.

மூர்த்தியை தேடினாள். தூரத்தில் நிழலாக தெரிந்தான். கை கால்கள் அகல விரித்துக்கொண்டு வானத்தை பார்த்து அமைதியாக தூங்குவது போல் தெரிந்தது. நகர முயன்றாள். முடியவில்லை. காலில் மரண வலி. வீக்கம் அதிகமாகியிருந்தது. ‘Life is full of Surprises. Some surprises are difficult to surpass’. எங்கோ படித்தது ஞாபகம் வந்தது.வலியோடு தவழ்ந்து மூர்த்திக்கு அருகில் சென்றாள். கூப்பிட்டு பார்த்தாள். ம்ஹூம்.அசய்வில்லை. சட்டை பையில் துளாவி கைபேசியை எடுத்தாள். விபத்து நடந்த இடம் அருகிலேயே மூர்த்தியின் ஜெயில் இருந்தது. எண்களை ஒற்றி குணசேகரனை அழைத்தாள். மூர்த்தியின் நண்பன்.

அடுத்த இரண்டு நிமிடங்களில் ஷிஃபா மருத்துவமனையின் ஆம்புலன்ஸ்க்கு தகவல் சென்றது.பிளாஸ்டிக் கப்பில் பாதி டீ குடித்து கொண்டிருந்த டிரைவர் மீதி டீயையும் உறிந்து குடித்துவிட்டு, இரண்டு வடைகளை சாப்பிட்டு சில்லரை கொடுத்து மீதி வாங்கி, ஒரு பதினைந்து நிமிடத்தில் ஆம்புலன்ஸ் ஸ்டார்ட் செய்யப்பட்டு, அடுத்த அரை மணியில் மூர்த்தி மருத்துவமனையில் இருந்தான். நியூரோடிரான்ஸிமிட்டார் என்ற வேதியல் வஸ்து முழுவதுமாக செயலிழந்து மூளைக்கும் உடலின் மற்ற பாகங்களுக்கும் உண்டான தொடர்பை முழுவதுமாக துண்டித்திருந்தது. மரணத்தை நெருகிக்கொண்டிருந்தான். ICUவில் அனுமதிக்கபட்டு, பல்ஸ் பார்த்து, CRP போன்ற முதலுதவிகள் அளிக்கப்பட்டு, சீஃப் டாக்டரின் வருகைக்காக சிறிது நேரம் உயிரை கைய்யில் பிடித்து வைத்திருந்தான்..

சுஜிக்கோ காலில் எலும்பு முறிவும், தலையில் சிறு அடியுமாக நினைவிழந்திருந்தாள்.முதுலுதவி அளிக்கபட்டு வயிற்றில் இருக்கும் குழந்தையின் நலன் பரிசோதிக்கபட்டது.ஸ்கேன் செய்தார்கள். மூவ்மண்ட் குறித்துக்கொண்டார்கள்.

சீஃப் டாக்டர் வரும்பொழுது மூர்த்தி முழுவதுமாக நினைவிழந்து சுவாசிக்க மறந்திருந்தான்.

‘பல்ஸ் பாதாச்சா? தலையில உள்ள அடிபட்டிருக்கும்போல இருக்குது. ஸிஸ்டர், உடனே MRI சொல்லிடுங்க. ஸ்கேன் பண்ணி பாக்கணும். க்விக் க்விக்’.

ஏதேதோ இஞ்ஜெக்ஷன் கொடுத்து பல சாதனங்கள் பொறுத்தி மற்ற டாக்டர்களிடம் ஆலோசித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் இதயம் துடிக்க மறுத்து. சீஃப் வந்து தன்பலம் கொண்ட மட்டும் கைய்யால் நெஞ்சில் அழுத்த மூர்த்தி இறந்து போனான்.

‘ஸாரி.’ என்று ஒற்றை வார்த்தையில் மூர்த்தியை மறந்தார் சீஃப்.

சுஜிக்கு நினைவு திரும்ப, உடனே தன் கணவனைத்தேடினாள். அருகில் சுஜியின் பெற்றோர் மருண்ட விழிகளுடன் உடக்கார்ந்திருக்க,

சுஜி,’ அவர் எப்டி இருக்காரு? எங்க இருக்காரு? என்ன கூட்டிட்டு போங்க. நான் பாக்கணும்’ என்றாள்.

‘நல்லருக்கருமா. ஒரு ஆபரேஷன் மட்டும் தான் பாக்கி. ரெண்டு நாளைக்குள்ள சரியாய்டுவாருனு டாக்டருங்க சொல்றாங்க’ என்று சுஜிதாவின் அப்பா பொய் பேசினார்.

அடுத்த சில நிமிடங்களில் செடேட்டிவ் கொடுக்கபட்டு சுஜியின் காலில் ஆபேரேஷனுக்காக ஏற்பாடு செய்தார்கள். இரண்டு மணி நேரத்தில் ஆபரேஷன் முடிந்தது.ப்ளேட் வைத்திருந்தார்கள்.

‘அவளுக்கு இப்போ எப்டி இருக்கு டாக்டர்.

‘ஷீ இஸ் ஆல்ரைட். நடக்க இப்போ பிரயத்னபடவேண்டாம். மோர் இம்பார்டண்ட். மூர்த்தி விஷயத்தை இப்போ சொல்ல வேணாம்.பேபிக்கு நல்லதில்ல.’

மூர்த்தியின் உறவு, நட்புக்கு சொல்லப்பட்டது.ஒவ்வாருவராக வந்து ஒவ்வொன்றாக பேசிக்கொண்டார்கள்.

‘நேத்து கூட போன்ல பேசினான்பா’.

‘குழந்தைக்கு தொட்டில் கூட வாங்கி வச்சிருந்தான்’.

அரசு ஊழியன் என்பதால் உடனே மூர்த்தியின் அலுவலக்த்திற்கு தெரிவிக்கபட்டது. உடனடியாக போஸ்ட்மார்டம் செய்து அடாப்சி ரிபோர்ட் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கபட்டது. மதியமே மின்சார இடுகாட்டில் வைத்து மூர்த்தி எரிக்கபட்டு, ஒரு செம்பில் சாம்பலாக வெளியே வந்தான்.

சுஜிதா, மூர்த்தி அவர்களது குழந்தை சரண் எல்லோரும் பொட்டணிக்கல் கார்டனில் குளிரில் நடுங்கி கொண்டிருக்கிறார்கள்.

சுஜி,’ சரண் இங்க வாடா. ஓடாத. வழுக்குது. அம்மா உனக்கு பொம்ம வாங்கித்தாரேன்.

குழந்தை வேகமாக ஓடியது. ‘வரமாத்தேன்’ என்று மழலை பேசியது.

‘இங்க வாடா செல்லம்’

‘வரமாத்தேன் இன்னும் கொஞ்ச நேரம் விளயாடித்து தான் வருவேன்.’

’நம்ம அந்த கடைல பாத்தோமே. அந்த ஸ்வட்டர் சரணுக்கு நல்லாருக்குங்க. சாய்ங்காலாம் வாங்கிட்டு போகாலாம்.’

மூர்த்தி தலையசைத்து கண்ணடித்தான்.

‘ச்சீ போங்க.’ என்று வெட்கபட்டாள் சுஜிதா.

ஆபரேஷன் முடிந்தபின் வலியை மறப்பதற்காக கொடுக்கப்பட்ட செடட்டிவின் தாக்கத்தில் கனவு கலையாது, சுஜிதா தூங்கிக்கொண்டிருக்கிறாள்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *