கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: December 19, 2018
பார்வையிட்டோர்: 8,518 
 

தேவாலயத்தில் ஜெபம் செய்துவிட்டு வெளியே வந்தார் ஜோசப். ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. ‘தோத்திரம் செய்வேனே இரட்சகனே தோத்திரம் செய்வேனே’ உள்ளே பாடிய பாடல் இன்னும் காதில் ஒலித்தது.

அவர் பின்னால் மனைவி மேரி ஏதோ யோசனையோடு வந்தார். வழக்கமாகப் பிள்ளைகளோடு வருவார்கள். மகன்கள் இருவரும் இப்பொழுது பல்கலைக்கழகத்தில் படிக்கிறார்கள். மூத்தவன் டேவிட் பினாங்கில். இளையவன் பீட்டர் சபாவில். ஒருவாறாக, பிள்ளைகள் கல்வியில் கரையேறி விட்டார்கள். கல்விக் கடமை முடிந்ததாய் மனம் நிம்மதிகொள்ள வேண்டிய தருணம்.

ஆனால், போன வாரம்வரை இருந்த நிம்மதி இன்று மனத்தில் இல்லை. எப்படி இருக்கும்? ஒரு கடிதம் அந்த நிம்மதியை நிலைகுலையச் செய்துவிட முடியுமா? முடியும் என்றுதான் மனம் திரும்பத் திரும்ப ஓலமிடுகிறது.

எப்பொழுதும் தேவாலயத்தைவிட்டு வெளியேறும்போது மனம் அமைதிப் பூங்காவாக இருக்கும். முகத்தில் சாந்தம் தவழும். புத்துணர்ச்சி பிரவகித்து இதயத்தை நனைக்கும். தேவாலயத்தின் வெளியே புறாக்கள் தாழ்வாகப் பறந்து இரைதேடும் அழகை மனம் ஆராதிக்கும். தேவாலய வளாகத்தில் வளர்ந்துள்ள பச்சைத் தாவரங்களும் பல வண்ணங்களில் மலர்ந்த பூக்களும் இயற்கையில் மூழ்கும் மனத்திற்கு இதம் சேர்க்கும். உடன் வருபவர்களிடம் சிரித்துப் பேசிக்கொண்டு வருவார்.

யாரிடமும் பேச விருப்பமின்றி இன்று இனம்புரியாத கலக்கம் மனத்தில் கசிந்தது.

ஜோசப் கர்த்தரின் பெயரை மனத்தில் விடாமல் உச்சரித்தார். இயேசுவே கர்த்தரே என்னைக் கைவிடாதீர் என்று ஆழ்மனம் பிரார்த்தித்தது. “இறைவன் சன்னிதானத்தில் உங்கள் குறைகளை முன் வைத்தீர். இறைவன் உங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு நல்லருள் புரிவான்” தேவாலய ஊழியர் கூறிய வாசகங்களை மனம் அசை போட்டது.

அறுபது வயதில் ஓய்வு பெற, இதோ இன்னும் மூன்று மாதங்களே உள்ளன. பென்சன், ஓய்வூதியம் எனக் காலத்தை நிம்மதியாகக் கழிக்கப்போகும் சூழலில் இப்படியொரு சிக்கல் முளைக்குமென்று ஜோசப் எதிர்பார்க்கவில்லை. நாளை, புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் ஒழிப்பு ஆணையத்திற்கு விசாரணைக்கு வரச்சொல்லி கடிதம் வந்திருக்கிறது. என்னவாக இருக்கும்?

* * * * * *

“ஒண்ணும் இருக்காது. நீங்க ஏன் அதையே நெனச்சிக்கிட்டு இருக்கீங்க. உங்களுக்கு மேல இருக்கிற அதிகாரிங்க யாரும் லஞ்சம் வாங்கினதா புகார் போயிருக்கும். அதப்பத்தி விசாரிக்கத்தான் கூப்பிட்டிருப்பாங்க” கணவர்மேல் மேரிக்கு அத்துணை நம்பிக்கை.

மதிய உணவு தயாராகி மேசையில் காத்திருந்தது. அதுவும் அவருக்குப் பிடித்த நண்டு பிரட்டல். மேரியின் கைப்பக்குவமே தனி. ஆனால், சாப்பிட விருப்பமில்லாமல் ஜோசப்பின் மனம் முரண்டு பிடித்தது.

“அதுக்கு ஏன் என்ன கூப்பிடணும்? என்னமோ வில்லங்கம் இருக்குன்னு நெனக்கிறேன். யாரோ பொறாமையில செய்திருக்கணும்” மனம் தனக்குத்தானே காரணங்களைக் கற்பித்துக்கொண்டது.

“ஒண்ணும் இருக்காது. ஒரு புகார் வந்தா அதப் பத்தி நாலு பேர அழைச்சு விசாரிக்கத்தான் செய்வாங்க. அப்படி நெனச்சுங்குங்க. உங்கள மட்டும் அழைக்கிலயே”

அதுதான் அவருக்கு மனத்தில் பீதியைக் கசியச் செய்வதாக இருந்தது. அவரோடு பணிபுரியும் இரண்டு அதிகாரிகளையும் அழைத்திருந்தார்கள். ஏதும் புகார் போகாமலா இந்த அழைப்பு? அங்குப் போனால் பல மணி நேரம் விசாரணை என நாளிதழ் செய்தி அடிக்கடி வருகிறது. அரசு ஊழியர்கள் ஊழல் ஒழிப்பு ஆணைய விசாரணைக்குப் பிறகு, ‘லோக்கப் எஸ்ஆர்எம்’ வாசகம் பொறிக்கப்பட்ட ஆரஞ்சு நிற உடையில் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும் காட்சிகள் நிறைய தொலைக்காட்சியில் வந்து விட்டன.

இனி, நானும் அந்த உடையில் காட்சி தர நேருமோ? சே, என்ன இந்த மனம் அதன் போக்கில் எதையெதையோ கற்பனை செய்கிறதே.. இன்னும் மூன்று மாதங்கள்தானே. அதற்குள் என்ன?

“அதையே நெனச்சி மனச போட்டு அலட்டிக்காதீங்க. நாளைய பொழுது நல்ல பொழுதா அமைய கர்த்தரு நமக்கு வழி காட்டுவாரு. வாங்க, உங்களுக்குப் பிடிச்ச நண்டு பிரட்டல். நேரமாகுது சாப்பிடுங்க” சமையல் பக்குவம் மட்டுமல்ல. மனத்தையும் சமைக்கும் பக்குவமும் மேரிக்கு இருப்பதை எண்ணிப் பார்த்தார் ஜோசப். முப்பது வருட இல்வாழ்க்கையில் இரண்டு ஆண்மக்களைப் பெற்று வளர்த்து ஆளாக்கி குடும்ப வாழ்வுக்குச் சுவையூட்டிய மனைவிதான் அவருக்கு ஆதார சுருதி. எனக்கு ஏதும் ஒன்று என்றால் இவள் எப்படித் தாங்கிக்கொள்வாள்?

மதிய உணவு முடித்து மனம் கொஞ்சம் அமைதியடைய நாளிதழைப் புரட்டினார். ‘கையூட்டு வாங்கிய அரசு அதிகாரிகள் கைது’ என்று மூன்றாம் பக்கச் செய்தி கலக்கத்தை ஏற்படுத்தியது.

சாரங்கன், வேலவன், மார்கிரெட், புனிதவதி, அன்பானந்தன், அமுதவல்லி, சுப்ரமணியம், கந்தசாமி, சுந்தர் என எத்தனையோ பேர் அன்போடும் ஆசையோடும் தந்திருக்கிறார்கள். எல்லாம் வாங்கிக் கணக்கு முடித்து அவர்களுக்குப் பதவி உயர்வும் தந்தாகிவிட்டது. இப்பொழுது என்ன? புகார் ஏதும் போயிருக்குமோ? அதனால்தான் அழைப்பு வந்திருக்குமோ? கையிலுள்ள புண்ணைப் பிறாண்டிப் பார்ப்பதுபோல் பொல்லாத மனம் அதிலேயே உழன்று கொண்டு படாதபாடு படுத்தியது.

துணைத்தலைமையாசிரியர் நியமனம் வேண்டி ஆசையாய்த் தந்தவர்கள் பட்டியல் வேறு நினைவில் இடறியது.

யாராக இருக்கும்? இந்தக் கேள்விக்கு நாளைதான் விடை கிடைக்குமோ? அதுவரை பொறுமை காக்க வேண்டுமே? பதவி உயர்வி கிடைக்காதவர்கள் காழ்ப்புணர்வில் செய்த வேலையா?

அந்த இளங்கண்ணன் வேலையாக இருக்குமோ? அவன்தானே என்னோடு வம்பு செய்தான்?

கஸ்தூரி டீச்சரின் கணவன் வந்து அலுவலகத்தில் கத்திபேசி வம்பு செய்தானே. ஏன் அவனாக இருக்கக் கூடாது? ஒவ்வொருவராக நினைவில் எட்டிப் பார்த்தார்கள்.

* * * * * *

அலுவலக நேரம் முடிந்து எல்லாரும் போய் விட்டார்கள். வர வர போக்குவரத்து நெரிசல் நகரில் மோசமாகி விட்டது. வேலை நேரம் முடிந்த கையோடு சாலை நெரிசலில் சிக்காமல் தப்பிப்பதே எல்லாருக்கும் வாழ்க்கையாகி விட்டது.

ஜோசப் இன்னும் போகவில்லை. யாருக்கோ காத்திருந்தார். சில கோப்புகளில் கையெழுத்துப் போட்டு மூடினார். மணியைப் பார்த்தார். மாலை மணி ஐந்தரை ஆகிவிட்டது. எதிர்பார்த்தவர் வரும் நேரம்தான்.

மார்கிரேட் சொன்ன நேரத்திற்கு வந்துவிட்டார்.

“வாங்க டீச்சர். என்ன விசயமாக பேச வந்தீங்க. சொல்லுங்க. உங்களுக்கு உதவ நான் காத்திருக்கிறேன்” இதமாகப் பேசுவது ஜோசப்புக்குக் கைவந்த கலை. அதிர்ந்து பேசாத அவரின் மென்மையான போக்குப் பலருக்கும் தெரியும்.

“சார், உங்களுக்குத் தெரியும். ஆறு வருசமா பிரோமோஷனுக்குக் காத்திருக்கேன். இண்டர்வியூ எல்லாம் எப்பவோ முடிஞ்சது. இன்னும் வாய்ப்பு வரல. நீங்க மனசு வச்சீங்கனா எனக்கு இப்ப வாய்ப்பு கிடைக்கும்..” துணைத்தலைமையாசிரியை மார்கிரேட் கெஞ்சலோடும் தயக்கத்தோடும் கூறினார்.

“உண்மைதான் டீச்சர். சரியான நேரத்துல வந்திருக்கீங்க. நல்ல வாய்ப்பு வருது. அதுவும் உங்க பக்கத்து பள்ளியிலேயே வாய்ப்பு வருது. இத விட்டா இனி எப்போ கிடைக்குமோ சொல்ல முடியாது. நீங்களும் கொஞ்சம் மனசு வைக்கணும். உங்களுக்குப் புரியும்ணு நெனைக்கிறேன்.” ஜோசப் சொல்ல வேண்டியதை நாசுக்காக சொல்லி விட்டார்.

“நீங்க என்ன சொல்றீங்கன்னு கொஞ்சம் தெளிவா சொன்னா நல்லது” தெரிந்தும் தெரியாததுபோல் மார்கிரேட் கேட்டார்.

“கொஞ்சம் செலவாகும். அத புரிஞ்சிக்கிட்டு நீங்க ஒத்துழைப்பு கொடுத்தா இந்த வேலையை உங்களுக்கு ஏற்பாடு செஞ்சிடலாம். என்ன சொல்றீங்க?”

“எவ்வளவுன்னு சொன்னா நான் முடிவு சொல்லலாம்..” மார்கிரேட் எதற்கும் தயாராகவே இருந்தார்.

“அதிகம் இல்ல. பன்னிரண்டாயிரம் கொடுத்தா இத முடிச்சிடலாம். எல்லாம் உங்க கையிலதான் இருக்கு. எதற்கும் யோசிச்சு சொல்லுங்க. ஒண்ணும் அவசமில்ல. இந்தப் பள்ளிக்கு உங்களோடு சேர்த்து ஐந்து பேரு முயற்சி செய்றாங்க. உங்களுக்குத்தான் கிடைக்கணும்னு இருந்தா உங்க கைய விட்டுப் போகாது. எனக்கு மேலே அதிகாரி இருக்காரு. அவரையும் கவனிக்க வேண்டியிருக்கு. அப்புறம் உங்க இஷ்டம்” பலரிடம் பேசிப் பேசி மனத்தில் பதிந்துபோன வரிகள். மீண்டும் ஒப்புவித்தார்.

“இதுல யோசிக்க என்ன இருக்கு சார். நான் கூட இன்னும் அதிகமா இருக்குமோன்னு நெனச்சேன். நான் முன்னமே உங்களைப் பார்க்க வந்திருக்கணும். சீக்கிரம் ஏற்பாடு செய்றேன். யாரும் முந்திக்காம பார்த்துக்குங்க சார்” மார்கிரேட் இப்போதே தலைமையாசிரியர் ஆகிவிட்ட உணர்வோடு எழுந்தார். எல்லாரையும்விட நாம் முந்திக்கொள்ள வேண்டும். ஏமாந்து போகக்கூடாது. அவர் மனமெங்கும் புதிய நம்பிக்கை துளிர்விட்டது.

“அப்படியே செஞ்சுடுவோம்” ஜோசப் தன் குறிப்புப் புத்தகத்தைத் திறந்து வர வேண்டிய தொகையை எழுதிக்கொண்டார்.

* * * * * *

“எட்டு வருசமா பிரமோஷனுக்குக் காத்திருக்கேன். என்னைவிட ஜூனியர்களுக்கு பதவி உயர்வு தரீங்க. என்னை மட்டும் தவிர்க்கிறீங்க. ஏன் சார்?” நியாயமான ஆதங்கம் துணைத்தலைமையாசிரியர் இளங்கண்ணனுக்கு. எப்போதோ தலைமையாசிரியர் பதவிக்கு வர வேண்டியவர். இன்னும் காத்திருக்கிறார். தலைமையாசிரியர் பணிக்கான பயிற்சியை முடித்துவிட்டார். யாரிடமும் எதற்காகவும் கையேந்தி நின்று கெஞ்ச விரும்பாதவர். நண்பர்கள் தூண்டுதலால் வந்திருந்தார்.

“இங்க பாருங்க இளங்கண்ணன். நீங்க நினைக்கிற மாதிரி அப்படியெல்லாம் இங்க பாகுபாடு காட்டுறதில்ல. சிலருக்குக் சீக்கிரம் கிடைக்குது. சிலர் கொஞ்ச காலம் காத்திருக்கணும். அவ்வளவுதான். வேலையில அடைவுநிலை, சில தகுதிகள் காரணமா உங்களுக்குத் தள்ளி போகுது”

“என்ன சார் தகுதி? எனக்கு எல்லா தகுதியும் இருக்குன்னு உங்களுக்கும் நல்லா தெரியும். சீக்கிரம் கிடைக்கிறதுக்கு ஏதும் வழியிருந்தா சொல்லுங்க சார். நானும் இன்னும் எவ்வளவு காலத்துக்கு காத்திருக்க முடியும்? எனக்கு வயசாகுது”

“வழி இருக்கு. உங்களுக்கும் தெரியும். கொஞ்சம் செலவாகும். புரிஞ்சிக்கிங்க. அப்புறம் உங்க இஷ்டம்”

“எவ்வளவு சார்? நேரிடையா சொல்லுங்க. முடியுமான்னு பார்க்கிறேன்”

“ரொம்ப இல்ல. பன்னிரண்டாயிரம்தான். இதை நீங்க இரண்டு மூனு வருசத்துல பள்ளியில சம்பாதிச்சிடலாம். நீங்க முடியாதுன்னா கொடுக்க இன்னும் ஆறுபேர் வரிசையில் நிக்கிறாங்க. அப்புறம் உங்க முடிவு” ஜோசப் நேரடியாகச் சொல்லி விட்டார்.

இளங்கண்ணன் அதிர்ந்து போனார். பொறுமை மறைந்து முகம் கடுமைக்கு மாறியது.

“என்ன சார். அநியாயமா இருக்கே. எனக்கு இருக்கிறதே இன்னும் அஞ்சு வருசம்தான். இதுக்காக நான் பள்ளியில அநியாயத்துக்குப் பொய் கணக்கு எழுதணுமே. அந்தப் பாவக் கணக்கை எப்படி தீர்க்கிறது? பரவாயில்ல சார். எனக்கு வேண்டாம். யார் கொடுக்கிறாங்களோ அவங்களுக்கு கொடுங்க” இளங்கண்ணன் எழுந்து கொண்டார். அவர் முகத்தில் கோபக்கனல் வெளிப்பட்டது. முன்கோபியான அவர் சிரமப்பட்டுத் தன்னைக் கட்டுப்படுத்தினார்.

“கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க இளங்கண்ணன். உங்க நன்மைக்குத்தான் சொல்றேன். இதை ஏன் இவ்வளவு சீரியசா எடுத்துக்கிறீங்க. கொஞ்சம் பொறுமையாக உட்காருங்க. இது ஒண்ணும் புதுசு இல்ல”

“எது? பள்ளியில பொய் கணக்கு எழுதி சம்பாதிக்கிறதா?. நான் வரேன்” இளங்கண்ணன் போய் விட்டார்.

ஜோசப் அதை எதிர்பார்க்கவில்லை. பிழைக்கத்தெரியாத மனிதராக இருக்கிறாரே என்று அவருக்காக இரக்கப்பட்டார். குறிப்புப் புத்தகத்தில் இளங்கண்ணன் பெயரையும் பக்கத்தில் எழுதியிருந்த எண்களையும் பேனாவால் நீக்கினார்.

* * * * * *

“சொல்லுங்க டீச்சர். உங்களுக்கு என்ன செய்யணும்? என்ன உதவியினாலும் தயங்காம கேளுங்க. பள்ளியில வேலையெல்லாம் எப்படி இருக்கு? ஏதும் பிரச்சினை? என்ன பார்க்க வரவங்க பல பேரு பிரச்சினையாதான் வராங்க”

“வேலையில எந்தப் பிரச்சினையும் இல்ல சார். ரொம்ப காலமா ஆசிரியரா இருக்கேன். எங்கூட வந்தவங்க பலபேரு துணைத்தலைமையாசிரியா புரோமோஷன் வாங்கிட்டாங்க. நான் இன்னும் சாதாரண டீச்சரா இருக்கேன். ரவாங் பக்கம் போஸ்ட் காலியாகிறதா கேள்விப்பட்டேன். எங்க எச்எம் உங்கள வந்து பார்க்கச் சொன்னாரு. அதான் வந்தேன்” ஆசிரியர் கஸ்தூரி தயக்கத்தோடு கூறினார்.

“எத்தன வருசமா சேர்விஸ்ல இருக்கீங்க?”

“பன்னிரண்டு வருசம் சார்” அவர் கூறியதைக் குறிப்புப் புத்தகத்தில் ஜோசப் குறித்துக் கொண்டார். கொஞ்ச நேரம் சிந்தனைவயப்பட்டவராகப் போக்குக் காட்டினார்.

“ஆமாம் டீச்சர். நீங்க சொல்றது சரிதான். இந்நேரம் உங்களுக்குப் புரோமோஷன் கிடைச்சிருக்கணும். எப்படியோ தவறிப்போச்சு. அதனால் என்ன? இப்ப முயற்சி செய்யலாம். சொல்ல முடியாது. இந்த வாய்ப்புகூட உங்களுக்குக் கிடைக்கலாம்” மனத்தை வளைக்கும் கலையில் ஜோசப் நன்கு தேறியிருந்தார்.

“கொஞ்சம் உதவி செய்யுங்க சார். உங்க உதவியை நான் என்னைக்கும் மறக்க மாட்டேன்.” கஸ்தூரி உணர்ச்சிவயப்பட்டுக் கூறினார்.

“நீங்களும் மனசு வைக்கணும் டீச்சர். அப்பதான் இது கைக்கு எட்டும். செலவைப் பத்தி யோசிக்காம ஒத்துழைச்சீங்கனா உங்கள் புரோமோஷனுக்கு ஏற்பாடு செய்யலாம். காதும் காதும் வைச்ச மாதிரி காரியத்த முடிக்கணும். மத்தவங்களுக்குத் தெரிஞ்சா அப்பறம் இது கைய விட்டுப் போயிடும்.” இலக்கு நோக்கி மிக லாவகமாக அம்பை எறிந்தார் ஜோசப்.

கஸ்தூரிக்குக் குழப்பமாக இருந்தது. புரோமோஷனுக்கும் செலவுக்கும் அவரால் முடிச்சு போட்டுப் பார்க்க முடியவில்லை. ஜோசப் பரிந்துரை செய்தால் புரோமோஷன் தனக்குக் கிடைத்துவிடும். இதற்கு ஏன் செலவு? இதையேன் காதும் காதும் வைச்ச மாதிரி முடிக்கணும்?

“செலவுன்னு சொல்றீங்க. எவ்வளவு ஆகும் சார்?” திரைமறைவில் அரங்கேறும் நாடகங்களை அறியாத கஸ்தூரி அப்பாவித்தனமாகக் கேட்டார்.

“வெரிகுட். உங்கள மாதிரி எத்தனையோ பேருக்கு உதவி செஞ்சு இன்னைக்கு அவங்க நல்லா இருக்காங்க. ரொம்ப இல்ல டீச்சர். எட்டாயிரம் கொடுத்தா இத உங்களுக்கு ஏற்பாடு செய்யலாம்.”

துணைத்தலைமையாசிரியர் போஸ்ட்டுக்கு எட்டாயிரமா? கஸ்தூரிக்கு மயக்கமே வந்து விடும் போலிருந்தது. அதிர்ச்சியும் ஏமாற்றமும் அவர் முகத்தில் முகாமிட்டன.

“சரிங்க சார். நான் கொஞ்சம் யோசிச்சு முடிவு சொல்றேன்” அவசரமாக விடைபெற்று வெளியே போனார்.

சற்று நேரத்தில், கஸ்தூரியை அழைத்துப்போக வெளியே காத்திருந்த அவரின் கணவர் மாயவன் அலுவலகக் கதவை வேகமாய்த் தள்ளித் திறந்து உள்ளே வந்தார்.

“யார் நீங்க?” ஜோசப் அதை மட்டும்தான் கேட்க முடிந்தது. அதற்குள் வந்தவர் முந்திக்கொண்டார்.

“அரசாங்கத்துல வேல செஞ்சுக்கிட்டு அரசு ஊழியர்கிட்டயே கொள்ளையா அடிக்கிற? இது அநியாயமா தெரியில்லே? அரசாங்கம் மாறிடுச்சு. நீங்க எப்ப மாறப் போறீங்க? ஏன் நீங்க பார்க்கிற வேலைக்குச் சம்பளம்தான் கொடுக்குறாங்களே, அது பத்தலயா? இத தின்னுதான் பொண்டாட்டி பிள்ளையெல்லாம் உயிர் வளர்க்குன்னுமா? அறம் அறம்னு சொல்றாங்களே. அது மேலே அறவே நம்பிக்கை இல்லையா? தமிழ் படிச்சவன்தானே நீ? இத மட்டும் படிக்கலையா?

திருந்தப் பாருங்க. இல்லாட்டி மேல ஒருத்தன் இருக்கான். உங்கள் தலைஎழுத்த மாத்தி எழுதிடுவான்.” பொங்கி வந்த கோபத்தைச் சொற்களாகக் கொட்டிவிட்டு, ஜோசப்பிடம் எந்த மறுமொழியையும் எதிர்பார்க்காமல் வந்த வேகத்தில் கதவைத் தள்ளிக்கொண்டு வெளியே போனார் மாயவன்.

நல்ல வேளை. அலுவலகத்தில் யாரும் இல்லை. வேலை நேரம் முடிந்து எல்லாரும் போய் விட்டார்கள்.

ஜோசப் கைக்குட்டையால் முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டார். மாயவன் மாதிரி எத்தனையோ பேரைப் பார்த்துவிட்டார். இதற்கெல்லாம் அலட்டிகொள்ளக் கூடாது என்று ஆழ்மனத்தில் அழுத்தமாய்ச் சொல்லிக்கொண்டார்.

அவர் முன்னே திறந்து கிடந்த குறிப்புப் புத்தகத்தின் பக்கத்தில் ஒன்றும் எழுதப்படாமல் இருந்தது.

* * * * * *

புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் ஒழிப்பு ஆணையத்தில் விசாரணை முடிந்து வெளியே வந்தபோது ஜோசப் களைத்துப் போயிருந்தார். முகம் வாடிப் போயிருந்தது. காலையில் நம்பிக்கை ஊட்டி

அனுப்பிய மனைவி மேரியின் முகம் மனக்கண்ணில் தோன்றி மறைந்தது.

ஐந்து மணி நேர விசாரணை அவர் எதிர்பார்க்காதது. இடக்கு மடக்காக எத்தனையோ கேள்விகள். எல்லாவற்றையும் சமாளித்துப் பார்த்தார். அந்தக் கைபேசிப் பதிவுதான் வண்டாகக் குடைந்தது. இளங்கண்ணனோடு பேசியவை எல்லாம் தெளிவாகப் பதிவாகியிருந்தன. சே! எப்பொழுதும் கவனமாக இருப்பவன் இதில் எப்படி ஏமாந்தேன். தன்னையே நொந்துகொண்டார்.

இயேசுவே கர்த்தரே என்னை ஏன் கைவிட்டீர்? ஜோசப்பின் மனம் கலங்கித் தவித்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *