கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்  
கதைப்பதிவு: December 17, 2014
பார்வையிட்டோர்: 24,298 
 
 

கி.பி.2040. உலகளவில் உள்ள சுற்றுச் சூழல் விஞ்ஞானிகளும்,உலகின் எல்லா நாட்டு பிரதிநிதிகளும் அந்த அரங்கத்தில் நிறைந்திருந்தனர். இதுஅக்டோபர் மாதக் கடைசி. அடைமழையில் எங்கும் சேறும்சகதியுமாய் இருக்கவேண்டிய மாதம்., ஆனால் இந்தமாலைப் பொழுதில் கூட வெப்பம் மனிதர்களை வறுத்தெடுக்கிறது.. நகரத்தைத் தாண்டி புற நகர் பகுதியில் கூட எங்கெங்கும்பொட்டல் வெளிகள். தென்னை பனை ,பாக்கு போன்ற சல்லிவேர் மரங்கள்உலர்ந்து பாடம் பண்ணிய சவம் போல அசையாமல் நிற்கின்றன.. இந்த மாலை நேரத்திலும் வெப்பம்—120 டிகிரிF என்றால்,.நடுப்பகல் வேதனையைப்பற்றி சொல்ல என்ன இருக்கிறது?.மனித இனம் தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கிறது. கடல் நீர் குடிநீராகி மக்கள் தாகத்தைஓரளவு தணித்துக் கொண்டிருக்கிறது. கடற்கரைப் பகுதிகளில் அங்கங்கே நிறைய வாட்டர் டிஸ்டிலேஷன் ப்ளாண்ட்டுகள் வந்து விட்டன. மற்றப் பகுதிகளில் வறண்டு கிடக்கும்ஆற்றுப் படுகைகளில் அறு நூறு எழு நூறு அடி ஆழங்களிலிருந்துகிடைக்கும் தண்ணீரில் ஒப்பேற்றப்படுகிறது. அங்கங்கே மக்கள் குடிதண்ணீருக்காக தேடித்தேடி சாவதும், குடிதண்ணீரின்றி சாவதும் சகஜமான நிகழ்வுகளாகி விட்டன…சரீ ஜனங்க மத்த விஷயங்களின் தண்ணீர் தேவைகளுக்கு என்ன பண்றாங்க?. வேண்டாம், அதை சொன்னால் குமட்டி வாந்தி பண்ணுவீங்க., உலகம் பூராவும் தீவிரமாக அதை எதிர்த்த மக்கள் இன்றுஅதை விட்டால் நமக்கு வேறு கதியே இல்லையென்று ஏற்றுக் கொண்டிருக்கும்ஒரு விஷயம். அணுமின் நிலையங்கள்

உணவு பஞ்சம், தண்ணீர் பஞ்சம், மின்சார பற்றாக்குறை, எரிவாயு வாசனைக்குக் கூட இப்போது இல்லை. தாங்க முடியாத பூமியின் வெப்பம், ஐந்தாறு வருஷங்களாக மழையே இல்லை. பெய்யும் மழையெல்லாம் கடலிலேயே கொட்டுகிறது. இது இங்க மட்டுமில்லை சார், உலகம் பூராவுந்தான். வாழ்க்கையில ஒரு நிச்சயமில்லாத தன்மை தெரியல .உங்களுக்கு?. உலகப் பேரழிவின் விளிம்புலதான் இப்ப நாம நிற்கிறோம். நடக்கப் போகிற விபரீதத்தை புரிஞ்சிக்கோங்க. நாம பூமியை காலி செய்ய வேண்டிய…ஓ! சாரி…சாரி..பூமி நம்மளை காலி செய்யப்போற நேரம் நெருங்கிடுச்சி.இவ்வளவு சீக்கிரத்திலேயா?. எஸ்!. மனித யத்தனங்களெல்லாம் பொய்த்துப் போய், அடுத்த கட்டம் என்னவென்று கூட யூகிக்க முடியாமல் விஞ்ஞானிகள் கூட்டம் அலறிக் கொண்டு கிடக்கிறது.

அந்த அரங்கத்தில் செக்யூரிட்டி .டைட்டாக இருக்கு.ஆடிட்டோரியத்தைச் சுற்றி குறுக்கும் நெடுக்குமாக கையில் வாக்கிடாக்கியுடன் போலீஸ்கள் ஓடிக் கொண்டிருக்கின்றனர்..உள்ளேயும், வெளியேயும் உயரத்தில் அங்கங்கே சர்ச் கேமராக்கள்..ஆயுதம் தாங்கிய படை இறங்கியிருந்தது. ஏன்?என்னாச்சி?. இங்கே வந்திருப்பவர்களில் யாரையோ குறிவெச்சி ஒரு தீவிரவாத கும்பல் உள்ளே நுழைஞ்சிருக்காம்…சே! மதங்களின் பெயரால், சாதிகளின் பெயரால், பிறந்த மண்ணின் பெயரால், இஸங்களின் பெயரால், தொழில்களின் பெயரால்,…சே! எதற்குத்தான் என்றில்லை. அல்பமான விஷயங்களுக்குக் கூட பத்து பேர் சேர்ந்துக் கொண்டு தீவிரவாதி என்று முத்திரை குத்திக் கொண்டு அடாவடி பண்ணி அழிந்துப் போகிற காலமிது. காரணம் இருக்கிறது. பஞ்சம், பசி, பட்டினி. கிடைக்கும் ஒரு கிண்ணம் சோற்றுக்கு நாலு பேர் நிற்கிறார்கள்… என்ன பண்றது?. இத்தகைய கொடுமையான பீரியட்டில் மனித வாழ்க்கை முறை எப்படி இருக்கிறது ,என்பதை மனித நாகரீகங் கருதி சொல்லாமல் விட்டு விடுவதே சிறப்பு. மொத்தத்தில் மனிதனும் இன்னொரு விலங்கே. ஸோ போலீஸ்களுக்கு கண்டதும் சுட ஆணையிருக்கிறது .

அரங்கத்தின் வெளியே ஒரே போலீஸ் கும்பல். சில நிமிஷங்களில் கூட்டம் ஆரம்பிக்கவிருக்கிறது. அந்த நேரத்தில்தான் கருப்புக் கண்ணாடி அணிந்த இரு இளைஞர்கள் நுழைவாயிலை நெருங்கினார்கள்.. கண்ணாடி மறைக்க உள்ளே திருட்டுப் பார்வை. அதில் நெட்டையான ஒருத்தன் கை லேசாக உதறியது. கூட இருந்தவன் அவன் கையை கெட்டியாக பற்றினான்.. ”பஷீர்! மாட்டிக்குவோம்னு தோணுதுடா .” —நெட்டையான ரஞ்சித் நடுங்கினான் “ நீமட்டும் உளறாம இரு போதும், மத்ததை நான் பார்த்துக்கிறேன்.உள்ளே நுழைஞ்சிடலாம். இந்த உலகத்துக்கு நாம யார்னு காட்டணும் புரியுதா?. உம் உம்..சரி..சரி.. முகத்தை கேஷுவலா வெச்சிக்க.”—- இருவரும் குளோபல் வார்மிங் பற்றி பாவனையாய் சீரியஸ்ஸாக டிஸ்கஸ் பண்ணியபடியே செக்யூரிட்டியிடம் அலட்சியமாக .தங்களுடைய போலி அடையாள அட்டையைக் காட்டிவிட்டு உள்ளே நுழைந்தனர். உள்ளே ஆணுக்கு நிகராய் பெண் விஞ்ஞானிகளும் என்று அரங்கு நிறைந்திருந்தது. பெண்களின் ஐக்யூ அவர்களின் உடை சிக்கனத்தில் தெரிகிறது..இரண்டும் எதிர்விகிதம் போலும். இருவரும் பேசியபடியே ஐந்தாவது வரிசையில் போய் உட்கார்ந்தார்கள். கூட்டம் ஆரம்பித்தது. இந்தியாவின் சார்பில் டாக்டர். சுனில்குப்தா கவலையுடன் பேச்சைத் துவக்கினார்.. அவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறையின் இயக்குனர், டெல்லி. .“நண்பர்களே! நாம் என்ன செய்யப் போகிறோம்?. இந்த அபாயம் குறித்த சரியான புரிதல் நம்மிடம் இருக்கிறதா?.நம் சந்ததியினரை மீட்டெடுக்க நாம் என்ன திட்டம் வைத்திருக்கிறோம்? அது எவ்வளவு தூரம் பலன் தரும்?…இல்லை ஒட்டுமொத்தமாக அழிந்து போயிடுவோமா?. இப்படி ஏகப்பட்ட கேள்வியை எழுப்பியிருக்கிறது இன்றைக்கு இரண்டு விதங்களில் நம்மை நெருங்கும் குளோபல் டேஞ்சர். எஸ்! காற்று மண்டலத்தில் கார்பன்டையாக்ஸைட் என்கிற கரியமிலவாயுவின் அளவு அபாய கட்டத்தை நெருங்கிக்கிட்டிருக்கு. கி.பி.2060 க்குள் 610 PPM அளவை தாண்டிவிடும் என்பது விஞ்ஞானிகள் கணிப்பு. இன்னும் சீக்கிரமாகவே கூட அந்த அளவை எட்டலாம் என்கிற ஒரு கணிப்பும் இருக்கு. அப்போது பூமியின் வெப்பம்160 டிகிரிF அளவு இருக்கும். அது உலகத்தின் பேரழிவுக்கான காலம். அதற்கு முன்னதாகவே குழந்தைகள், முதியவர்கள், பெண்கள்என்று பாதிமக்கள் மடிந்து போய்விடுவார்கள். அதேசமயம் ஆக்ஸிஜன் எனும் பிராண வாயுவும் கணிசமாக குறைந்து நம் மூச்சை திணறடிக்க போகிறது. அதற்குள் எதையாவது செய்து மனிதகுலத்தை காப்பாத்திடலாம் என்பது அனுமானம். ஆனால் எதுவும் முடியாது என்பது நிதர்சனம். இனி என்ன செய்யப் போகிறோம்?.. அப்படி நடக்குமா?. இல்லை மிகையான கற்பனையா?. இல்லை இது நிச்சயமாக நடக்கும் என்று ஒட்டு மொத்த விஞ்ஞானிகளும், புவியியலாளர்களும் சொல்கிறார்கள்.புள்ளிவிவரப்படி 2014ஆம்வருஷத்திலேயே டெல்லியில் வெப்பம் 115 டிகிரிFஅளவுக்கு இருந்திருக்கிறது.. இன்றைக்கு நாம அனுபவித்துக் கொண்டிருக்கிற 120.டிகிரி F உஷ்ணத்துக்கே தேன்சிட்டு,தையல்சிட்டு, சிட்டுக்குருவி, குயில், கோட்டான் ,கொண்டலாத்தி, மீன்கொத்தி, கிளுவை, கானாங்கோழி, செங்குருவி, கவுதாரி, பல நாரையினங்கள், வானம்பாடி, பருந்து இனங்கள், இப்படி நூத்தி எட்டு வகை பறவை இனங்கள் அழிஞ்சிப் போச்சின்னு பறவை நேசர்கள் துடிக்கிறாங்க.. நாமளும் தினசரி அந்த கோரங்களை பார்த்துக்கிட்டுத்தானே இருக்கிறோம்?…நேற்று கூட வெய்யில் தாளாமல் இந்த ஏரியாவில் அங்கங்கே வல்லூறுகள் செத்து விழுந்து கிடந்தன.. காகங்கள் பெருமளவு காணாமல் போய்விட்டன.. பாம்பு, தேளு, பூச்சியினங்கள், பட்டாம்பூச்சி, தேனீக்கள், ஏன்? கொசு, கரப்பான் பூச்சி உட்பட அத்தனையும் அடியோட காலி.அதன் அழிவுகளையும் கண்கூடாக பார்த்துக்கிட்டுத்தான் இருக்கிறோம். வெப்பம்170.டிகிரிF யை தாண்டும்போது அநேகமாய். பொரிந்து போயிருப்போம். உலகில் எல்லா நாடுகளும் வரப்போகும் இந்த ஆபத்துகளை மக்களுக்கு தெரியாமல் ரகசியமாய் மூடி வைத்திருக்கின்றன. தெரிந்து விட்டால். உலகில் முழுமையாக சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய்விடும் ஆபத்து இருக்கிறது. ஸோ இது உங்களனைவருக்கும் எச்சரிக்கை இந்த ரகசியம் வெளியே கசியக்கூடாது.”—— சுனில்குப்தா சற்று நேரம் மவுனமாக நின்றார். அப்போது ரஞ்சித் பஷீரிடம் ரகசியமாய் “எஸ் பஷீர்! எல்லோரும் சீக்கிரத்திலேயே சாகப்போகிறோம் என்ற முடிவு மக்களுக்கு தெரிஞ்சிட்டா எல்லாவற்றையும் முழுமையாக வரைமுறை இல்லாமல்அனுபவித்துவிடும் அவசரமும், ஆவேசமும் அவர்களுக்கு வந்துவிடும். விளைவு…? உலகில் பாவம் பெண்கள் நிலமைதான் மிகவும் பரிதாபமாகிவிடும்.”

“ இல்லை. அந்த நேரத்தில் பெண்களின் மேல் திணிக்கப்பட்டுள்ள கற்பு கட்டுப்பாடுகள் சிதைந்து போகுமானால் அப்போது ஆண்கள் நிலைமைதான் திண்டாட்டமாகி விடும்.”.— சொல்லிவிட்டு பஷீர் சிரித்தான்.- டாக்டர் சுனில்குப்தா மீண்டும் பேச ஆரம்பித்தார்.

”இப்போதே ஆர்க்டிக், அண்டார்ட்டிக்காவில் 60% க்கு மேல் ஐஸ் பாளங்களைக் காணவில்லை. உஷ்ணம் தாளாமல் அங்கே துருவக் கரடிகளும், பெங்குவின்களும், ஸீல்களும், கும்பல் கும்பலாய் செத்து மடிகின்றன. தினசரி சேனல்களில் ஒளிபரப்புகிறார்கள். ஐயோ! மனசு பதைக்கிறது. உடனுக்குடன் அவைகள் அப்புறப் படுத்தப்பட்டு டின் பேக்டு மீட்டாக விற்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் கடலோர மாவட்டம், இந்தியாவின் தெற்கு பகுதியில் 8% நிலப்பகுதி, ஜப்பானில்8%, அமெரிக்காவில் 7%, மொரீஷியஸ்ஸில் 10%,ஆஸ்த்திரேலியாவில் 9% என்று நிலத்தையும், அங்கிருந்த லட்சக்கணக்கான நம் மக்களையும் கடலுக்கு பறி கொடுத்து விட்டு நிற்கிறோம். இன்னமும் சில பகுதிகள் கடலில் மூழ்கவிருக்கின்றன.. இயற்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட நூறு வருஷங்கள், ஆயிரம் வருஷங்கள், லட்சம் வருஷங்கள் ஆகும் என்பது தியரி.. ஆனால் மூணு வருஷங்களுக்கு முன்பிருந்த நிலப் பகுதிகள் இன்றைக்கு நம்மிடம் இல்லை.

இவ்வளவு காலமாக விஞ்ஞானிகள் ஸ்விப்ட் டட்டில் வால்நட்சத்திரம் வந்து மோதப்போவதால், பெரிய ஆஸ்ட்ராய்டுகள் வந்து மோதுவதால், பூகம்பத்தால், சுனாமியால், அணுகுண்டின் கதிர் வீச்சினால், இப்படி பல காரணங்களை உலகப் பேரழிவுக்கு சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் கரியமில வாயுதான் காரணமாகப் போகிறது என்று ஆருடம் சொன்னதில்லை.உலக அழிவைப் பற்றி ஆருடம் எழுதி வைத்த பிரான்ஸ் நாட்டின் யூத இனத்து மேதை நாஸ்டர்டாம்கூட இந்த வகையான ஆபத்தை சொல்லவில்லை. ஐயோ! கடவுளர்களே! உங்களில் யார் வந்து எங்களை இந்த ஆபத்திலிருந்து மீட்கப்போகிறீர்கள்?. எங்களின் மீட்பன் யார்?. காலங்காலமாய் தேன் அபிஷேகம், பால் அபிஷேகம், நெய் அபிஷேகம், தயிர் அபிஷேகம் என்று உங்களை குளிப்பாட்டி,எங்கள் முன்னோர்கள் சொல்லிக் கொடுத்த கீர்த்தனைகளாலும், பாசுரங்களாலும் ஆராதனை செய்து வந்திருக்கிறோமே, எங்களை .மீட்கமாட்டீர்களா?. நன்றி உணர்ச்சி எங்களுக்கு இருக்கவேண்டும் என்கிறார்களே,அது உங்களுக்கும் தானே?..”.——- சற்று நேரம் சுனில்குப்தா பேச்சின்றி அமைதியாக நின்றார்.அந்த அரங்கத்தில் ஒரு இறுக்கமான சூழல் நிலவியது.

“நாம் பெருமளவில் காடுகளை அழித்தது நாம் செய்துக் கொண்ட தவணை முறை தற்கொலை. இனி அழுது பிரயோசனமில்லை. மீண்டும் காடுகளை வளர்ப்பதுதான் ஒரே வழி.”—- இது சீன விஞ்ஞானி.

“ இந்த நிலமைகளுக்கு ஆசிய நாடுகள்தான் காரணம். அவர்களால்தான் கரியமில வாயுவின் உற்பத்தி அதிகமானது…”—– என்று அமெரிக்க தூதர் கத்தினார். அவ்வளவுதான் உடனே இந்தியா,சீனா,பாகிஸ்தான்,ரஷ்யா என்று ஆசிய கண்டத்தைச் சார்ந்த அத்தனை நாடுகளும் ஆவேசமாக எழுந்துக் கொண்டன.

“ மிஸ்டர் ஜென்டில் மேன்! இன்னமும் உன் சட்டாம்பிள்ளைத்தனம் இங்க செல்லாது..உன் நாட்டில மட்டும் மிகப்பெரிய நிலக்கரி தெர்மல் பவர் பிளாண்ட்கள், மொத்தம் இருபத்தஞ்சி. பிளாண்ட்கள் இயங்கிக்கிட்டிருக்கு.. மொதல்ல அதை நிறுத்து. கரியமில வாயுவின் மெயின் ஸோர்ஸே அங்கிருந்துதான். ஆரம்பிக்குது. எங்க நாடுகள்ல எல்லாத்தையும் இழுத்து மூடி ரெண்டு வருஷங்களாச்சி. நிலக்கரி காலி…”——..என்று கத்தினார்கள். இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகள் எழுந்து அமெரிக்காவை சப்போர்ட் பண்ண, அடுத்த பத்து நிமிடங்களுக்கு அங்கே ஒரு தெருச்சண்டை, குழாயடிசண்டை நடந்தேறியது. சுனில்குப்தா இடைமறித்து எல்லோரையும் அமைதியாக்கினார். “ப்ளீஸ்! கைக்கெட்டும் தூரத்தில் நம் எல்லோருடைய அழிவும் காத்திருக்கிறது?. இன்னமும் நாம் சண்டையிட்டுக் கொண்டிருப்பது அறிவிலித்தனம்.” —–அப்போது இத்தாலியின் பெண் விஞ்ஞானி எழுந்து “ முக்காலும் நமக்கு ஆக்ஸிஜன் என்கிற பிராணவாயு கிடைப்பதும், கரியமில வாயு அழிவதும் தாவரங்களின் ஒளிச்சேர்க்கை மூலம் தான். ஆனால் இப்ப காடுகளும் இல்லை, விவசாயமும் சரிவர நடக்கவில்லை. இனிமேல் எப்ப காட்டை உருவாக்கி, அது வளர்ந்து…,.?.அதுக்கு இடமும் கிடையாது, தண்ணீரும் கிடையாது. அவ்வளவு தொலை தூரத்தில் நம் அழிவும் இல்லை. ” பிரான்ஸின் பிரதிநிதி எழுந்தார்..

“சரி வேற என்னதான் வழி? ஐந்தாண்டுகளுக்கு முன்னே கரியமில வாயுவை உறிஞ்சியெடுக்க செயற்கை மரங்களை நம் விஞ்ஞானிகள் உருவாக்கினாங்க.. உலகம் பூராவும் பத்து மில்லியன் மரங்களை நட்டிருக்கிறோம். அதன் பை புராடக்டாய் மலைமலையாக பைகார்பனேட் உப்புக்கள் குவிந்தனவேயொழிய ஒரு வருஷத்தில் அரை.PPM அளவுக்குத்தான் கரியமில வாயுவின் அளவை குறைக்க முடிகிறது.”. ——- ரஷ்யாவிலிருந்து வந்திருந்த ஜியாலஜிஸ்ட் எழுந்து பேசினார். ”ஈக்கோ சிஸ்ட்டத்தின் நியதிகள் பொய்த்துப் போச்சி. எல்லா உயிரினங்களையும் அழித்து விட்டு மனித இனம் மட்டுமே விபரீதமாக பெருத்துப் போய் கிடக்கிறது. லூயிஸ் தாமஸின் கையா சித்தாந்தப்படி இந்த பூமி மனிதஇனத்தை அழித்து சமன் செய்யுயுங்காலம் வந்துவிட்டது. இதுதான் காலத்தின் கட்டாயம். இயற்கை பொறுமையானதும் ,கொடைத்தன்மை கொண்டதுவும் மட்டுமில்லை, ஈவு இரக்கங்கள் அற்றவையும் கூட.. அதிகமான ஜனப்பெருக்கம் தான் நம் கஷ்டங்களுக்குக் காரணம் என்ற விஷயத்தை தவிர்த்து மற்றவைகளை எல்லாம் பேசி நம்மளை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம். கி.பி. 2060 ல் உலக ஜனத்தொகை 11.8..பில்லியன்களைத் தாண்டப் போகிறது.. என்ன செய்யப் போகிறோம்?,.”. “ அதை பார்க்க அதுவரை யாரும்உயிரோடு இருக்கப் போறதில்லை…”—– பாகிஸ்தான் விஞ்ஞானி விரக்தியுடன் பேசினார். அடுத்து உலக விஞ்ஞானிகளின் சார்பாக ஜெர்மன் நாட்டு விஞ்ஞானி அன்ஸோபெர்ட் எழுந்தார். “ உலகத்திலுள்ள எல்லா விஞ்ஞானிகளும் வழி தெரியாமல்தான் நிற்கிறோம்..கரியமில வாயுவை குறைப்பதில் பல பல யுக்திகளை முயன்று தோற்றிருக்கிறோம்.. ஒரு வருஷத்தில் சுமார் 33.7.பில்லியன் டன் கரியமில வாயு காற்றில் கலக்கிறது. என்னதான் பண்ண முடியும்.?. நமக்கிருக்கும் ஒரே சாய்ஸ் இன்னும் கூடுதலாக இருபது மில்லியன் செயற்கை மரங்களை நடுவதுதான்…”

அப்போது அரங்கத்தின் வெளியே பட..பட..வென்று துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்கிறது..சிறிது நேரத்திலேயே சத்தம் அடங்கி விட்டது. போலீஸ் தீவிரவாதிகளைபிடித்து விட்டது. . கையில் துப்பாக்கியுடனிருந்த மூன்று உடல்களை தரதரவென்று இழுத்துக் கொண்டு சென்றார்கள்.முகம்,சட்டையெல்லாம் ரத்தம். வெளியே சாலையில் குப்பை குப்பையாய் மனிதர்கள்…மனிதர்கள். நேரப்போகும் ஒட்டு மொத்த அழிவைப் பற்றி அறியாமல் ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்கள். காதலே(காமமே) உயிர் மூச்சு எனும் இளைஞர்கள், இளைஞிகள் கூட்டம், ஏமாற்றி பிழைக்கும் திருடர்கள் கூட்டம், பெருத்த அளவில் திருடி அந்த பணத்தை மூட்டைமூட்டையாய் கட்டி ஸ்விஸ் பேங்க்கில் போட்டுவிட்டு மிதப்பில் வாழும் அரசியல் திருடர்கள் கூட்டம், கணவனும்,குழந்தைகளுந்தான் வாழ்க்கை என்று உழைத்து களைத்துக் கிடக்கும் பெண்மணிகள் கூட்டம்,,பெண் சுதந்திரம் என்ற கோஷங்களுடன் சுற்றும் பெண் விடுதலை விரும்பிகள் கூட்டம், லஞ்சம் வாங்கி சொத்து சேர்க்கும் அரசு அதிகாரிகள் கூட்டம், நீயே கதி என்று தேவாரம், திருவாசகங்களையும், ஆண்டாள் பாசுரங்களையும், ப்ளஸ் இதர மதங்களின் புனிதமறைகளையும் ஓதிக் கொண்டிருக்கும் ஆன்மீகக் கூட்டங்கள். அத்தனை பேரும் கரியமிலவாயுவின் ஆபத்து பற்றி அறியாமல்,இந்தவாழ்க்கை சாஸ்வதம் என்றுதானே பாவம் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்? இப்போது உள்ளே அமெரிக்க விஞ்ஞானி பேச ஆரம்பித்திருந்தார்..

நண்பர்களே! இவ்வளவு நேரம் மிஸ்டர்.சுனில்குப்தா பூமியின் இன்றைய நிலைமைகளை தெளிவாக சொல்லி விட்டார். அடுத்து என்ன செய்றதுன்னு யாருக்கும் தெரியல. இதுக்கு உங்க யார் கிட்டயாவது சொல்யூஷன் இருக்கா?. சரியான திட்டத்தை தருபவர்களுக்கு என்ன விலையும் கொடுக்க இந்த உலகம் தயாராக இருக்கிறது. அதற்காகத்தான் இந்த கான்பரன்ஸை இந்தியா ஏற்பாடு செஞ்சிருக்கு.. கையை உயர்த்துங்கள்..”——–சபை அமைதியாக இருந்தது. ஒருத்தரும் கையை உயர்த்த வில்லை. ரஞ்சித்தும்,பஷீரும் ஒருத்தரையொருத்தர் பார்த்துக் கொண்டார்கள். அமெரிக்க விஞ்ஞானிகளும், இதர விஞ்ஞானிகளும் தலையில் கையை வைத்துக் கொண்டார்கள். “ ஓ காட்! நமக்கு விடிவே இல்லையா?. ஐயோ! எந்த நாட்டிலிருந்தாவது புதிய சித்தாந்தத்தை யாராவது கொண்டு வருவார்கள் என்று நிறைய எதிர்பார்த்தோமே. உலகத்தில் எந்த மூலையிலும் இதற்கு விடை இல்லையா?”— அமெரிக்க விஞ்ஞானிகள் கூச்சலிட, அந்த அரங்கம் முழுவதும் இறுக்கமான அமைதி நிலவியது. “ஓகே நம் அழிவை சந்திக்க மனசளவில் தயாராவோம். நாம் இப்போது வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் நிற்கிறோம். கடைசி முயற்சி. மிஸ்டர்.அன்ஸோபெர்ட் சொன்னதைப் போல கரியமில வாயுவை உறிஞ்சி எடுக்கும் இருபது மில்லியன் செயற்கை மரங்களை புதியதாக உடனே நடுவோம். சரியா?. நமக்கு வேற வழியில்லை.”—– அப்போதுதான் சடக்கென்று எழுந்து நின்று கையை உயர்த்தி நிரஞ்சனும், பஷீரும், சொடக்கு போட்டார்கள்..

“சரியான தீர்வு எங்க கிட்ட இருக்கு சார்! .” — உரக்கக் கத்தினார்கள்.சபை திடுக்கிட்டு பார்த்தது. வாலிப பசங்க.காமெடி பண்றாங்க போல என்று சிரித்தார்கள். ஆனால் அமெரிக்க விஞ்ஞானி சிரிக்கவில்லை. அவர்களை மேலே வரும்படி சமிக்ஞை செய்தார். இருவரும் இரண்டு எட்டில் பாய்ந்தார்கள். .

“ஒருத்தனுடைய ஆர்வத்தை வைத்தே திறமையை உணர்ந்து அவனை ஊக்குவிப்பதில் அமெரிக்கர்களை மிஞ்சறதுக்கு உலகத்தில எவனுமே இல்ல சார், நாங்க என்னதான் சொல்றோம்னு கேட்கலாம்னு உங்களுக்கு தோனுச்சி பாருங்க..”— கண்களை துடைத்துக் கொண்டு சல்யூட் அடித்தார்கள்.

” நான் நிரஞ்சன், மரீன் பையாலஜியில் பிஎச்டி பண்ணிக்கிட்டிருக்கேன். இவன் பஷீர், ஜெனெட்டிக் இன்ஜினியரிங்கில் ரிஸர்ச் ஸ்காலர்.. நாங்க ஸ்டூடண்ட்ஸ் என்பதால் எங்க திட்டத்தை காது கொடுத்து கேட்கக் கூட இந்தியாவில் ஒரு விஞ்ஞானியும் தயாரில்லை. போன இடங்களில் எல்லாம் வெளியேற்றப்பட்டோம்.இங்கே நுழைவதற்கான பாஸ் கூட எங்களுக்கு மறுக்கப்பட்டது. போலி பாஸை வெச்சித்தான் ஏமாற்றி உள்ளே வந்திருக்கிறோம். வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற வெறியினால் காற்றில் கரியமில வாயுவின் அளவை குறைக்கும் ஆராய்ச்சியில் முழுமூச்சாய் இறங்கினோம்…இரண்டு மாதங்களுக்கு முன்னால் தீர்வை கண்டு பிடிச்சிட்டோம்..அன்றிலிருந்து இன்றுவரை எங்கெங்கியோ முட்டிப் பார்த்து விட்டோம். ஹும்! அலட்சியம்,நக்கல் பேச்சு, புறக்கணிப்பு, நொந்து போயிட்டோம் யாரும் எங்க கண்டுபிடிப்பை நம்பத் தயாராக இல்லை..”

”சகோதரா! பரவாயில்லை விடுங்க. உங்க கண்டுபிடிப்பின் மேல் அவர்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போயிருக்கலாம். உங்க திட்டத்தை முதலில் சொல்லுங்கள். நடக்குமா?ன்னு பார்க்கணும். அதை விஞ்ஞானிகளிடம் நிரூபிக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. இன் ஃபேக்ட் எங்களுக்கும் கூட உங்கள் கண்டுபிடிப்பின் மேல் நம்பிக்கை வரவில்லை.”—என்றார் அங்கிருந்த அமெரிக்க விஞ்ஞானி ஒருத்தர். உடனே ரஞ்சித்தும், பஷீரும் சீரியஸாக பேச ஆரம்பித்தனர்.

“கடல் பாசிதான் எங்க டார்கெட் சார். கடலின் எல்லையில்லா விஸ்தீரணம்தான் முக்கிய காரணம். இரண்டு வருஷ போராட்டம். ஆய்வில் வெற்றி பெற்ற அந்த கடைசி ஆய்வில் நாங்கள் எடுத்துக் கொண்ட தாவரம்– லெட்யூஸ் வகையைச் சார்ந்த `அல்வா ரிஜிடா’ (Ulvaa rigida ) என்ற கடல் பாசி ப்ளஸ் சர்காஸம் (Sargassum ) என்கிற மிதக்கும் வகை கடல் பாசி. இரண்டையும இணைத்து உருவான ஒட்டுரக இனத்தில் ஜீன்ம்யூட்டேஷன் செய்து பூநார்க்—2 என்ற ஒரு புது கடல் பாசியினத்தை உருவாக்கியிருக்கிறோம்.எங்கள் காலேஜ் லேப்பில் வெச்சித்தான் அதை செய்தோம்.அது பாசியின் தன்மையிலிருந்து மாறி பெருசாக ஆகாச தாமரை அளவுக்கு தண்டுகளுடன் வளர்ந்து மிதக்கிறது. ஒவ்வொரு பாசியும் சாதாரண பாசியை விட எட்டு மடங்கு கரியமில வாயுவை காற்றிலிருந்து உறிஞ்சக்கூடியது. எங்கள் திட்டம் இதுதான். நடுக்கடலில் அதை வளர்த்து கிடைக்கும் அதன் ஸ்போர்களை கடலில் குறைஞ்சது ஒரு பத்து லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்புக்காவது ஹெலிகாப்டர் மூலம் தூவிவிடவேண்டும்.இன் அடிஷன் அது வேகமாக வளர்ந்து அசுர வேகத்தில் பரவக்கூடியது.. .கம்ப்யூட்டரில் கொடுத்து அலசிவிட்டோம். எங்கள் கணக்குப் படி வருடத்திற்கு 10—16..PPM.அளவிற்கு காற்று மண்டலத்தில் கரியமிலவாயுவின் அளவை அவைகள் உறிஞ்சி எடுத்துவிடும். ஸோ கி.பி.2050க்குள் கரியமில வாயுவின் அளவு—300.ppm ( மிக ஆரோக்கியமான அளவு ) க்கு வந்துவிடும்.. இதைப் பற்றிய மொத்த விபரமும் இந்த CDயில் இருக்கிறது அளவுக்கதிகமாக பெருகும்போது அந்த பாசிகளை விவசாயத்தில் அடி உரமாக போடலாம் ரிச் ஸோர்ஸ் ஆஃப் கார்பன்.”

அந்த அரங்கமே சத்தமில்லாமல் அதிர்ந்து நின்றது. அமெரிக்க தூதரும், அமெரிக்க விஞ்ஞானியும் ஓடி வந்து அவர்களை அலக்காக தூக்கிக் கொண்டு குதித்தார்கள்.எவ்வளவு பெரிய விஷயத்தை இந்த மாணவர்கள் சைலண்ட்டாக சாதித்திருக்கிறார்கள்? சுனில்குப்தாவும், இந்திய விஞ்ஞானிகளும் நம்பமுடியாமல் நாமா? என்று திகைத்து, பின்பு அடக்கமாக சிரித்தனர்..

“ உலக விஞ்ஞானிகள் எல்லோரும் வழி தெரியாமல் மண்டையை பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வாலிபர்கள் எந்த வசதியும் இல்லாமல் அனாயாசமாக கண்டுபிடிச்சிருக்காங்க. எங்களால் நம்பவே முடியவில்லை.இறுதியில் நாம் ஜெயித்து விட்டோமா?. .உலகமே பெருமைப் படவேண்டிய விஷயம். ஒவ்வொரு இந்தியனும் பெருமைப் படுங்கள்..”— இருவர்களிடமும் கைகுலுக்கினார்கள். அமெரிக்க விஞ்ஞானி அந்த C.D..க்காக நிரஞ்சனிடம் கையை நீட்ட, பஷீர் அவரிடம்.

“இந்த பெருமைகள் என் நாட்டிற்கு சேரவேண்டியது சார். மன்னியுங்கள்.”—என்று பணிவாய் சொன்னான்.சொல்லிவிட்டு தன் சின்ன தோல்பையை திறந்து ஒரு சின்ன அட்டைப் பெட்டியை எடுத்தான். “இதுதான் பூநார்க்–2 பாசி.” —-விஞ்ஞானி ஆவலுடன் திறக்க, உள்ளே ஒரு சின்ன குடுவை நீரில் மிதந்தபடி வெளிர் பச்சையாக ஆகாச தாமரை போன்று சற்று அகலமான இலையுடன், அந்த பாசியினம் தளதளவென்று இளந்தளிருடன் பூமியில் உயிரினங்களின் வாழ்வை நீட்டிப்பதற்கான சஞ்சீவி மூலிகை மிதந்துக் கொண்டிருந்தது. நிரஞ்சன் அந்த சி.டி.யை சுனில் குப்தாவிடம் ஒப்படைத்தான். பளிச் பளிச்சென்று ஃப்ளாஷ் ஒளி அவர்களை மொய்த்துக் கொள்ள, அரங்கமே எழுந்து நின்று நெடு நேரம் கைதட்டி ஆரவாரம் செய்தது.. அடுத்த ஆண்டு நோபல் பரிசு பெறப்போகிற இரட்டையர்கள் மிஸ்டர். நிரஞ்சன் அண்டு மிஸ்டர்.பஷீர், என்று அமெரிக்க விஞ்ஞானி உற்சாகமாய் கத்தினார்.அடுத்த பத்து நிமிடங்களுக்குள் ஊடகங்கள் செய்தியை உலகம் பூராவுக்கும் கொண்டு சென்றன. கூடவே பூநார்க்–2 ன் புகைப்படமும் வெளியாகி கலக்க ஆரம்பித்தது. அன்றிலிருந்து உலகமே விழாக் கோலமெடுத்தது. எல்லா நாட்டு எல்லா பத்திரிகைகளிலும் ஹீரோக்கள் நிரஞ்சன்,பஷீர் தான். அவர்கள் படங்களைப் போட்டு ஆர்ட்டிகிள்கள் வெளிவந்தன.

அடுத்த ஆறு மாதங்களில் நிரஞ்சன், பஷீரின் கண்டுபிடிப்பை உலகவிஞ்ஞானிகள் கூட்டம்ஆமோதித்து உறுதிசெய்ததோடு,போர்கால நடவடிக்கையாய் பூநார்க்—2 பாசியின் ஸ்போர்களை தயாரிக்க ஆரம்பித்தார்கள். ஸ்போர்கள் சேரச்சேர உடனே கடலில் போக்குவரத்து இல்லாத பகுதிகளில் தூவிக்கொண்டே வந்தார்கள்.. ஒவ்வொரு நாடும் பாசியின் ஸ்போர்களை வாங்கிச் சென்று தத்தம் கடல் பகுதியில் தூவின..

:அடுத்து வந்த காலங்களில் படிப்படியாக சீதோஷ்ண மாற்றங்களை பளிச்சென உணர முடிந்தது.. வெப்பம்குறைய ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாய் பருவ மழைகள் பெய்வதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தன. காலக்கிரமத்தில் பருவக் காற்றுகள் காலத்தோடு வீசி பலத்த பருவமழைகள் பெய்ய, பூமி குளிர்ந்தது. ஐந்தாம் வருஷ ஆரம்பத்திலேயே ஆறுகள், நதிகள், ஓடைகள், கண்மாய்கள், ஏரிகள், எல்லாம் புத்துயிர் பெற ஆரம்பித்தன. நிலத்தடி நீர் ஊற ஆரம்பித்தது. தூரத்திலிருந்து பார்க்க அங்கங்கே கடல் நீலநிறத்திலிருந்து மாறி பச்சை நீறமாக தோற்றமளிக்க ஆரம்பித்தது. துருவ பிரதேசங்களில் குளிர்ச்சி சப் ஸீரோ டிகிரிக்குப் போக பனிமலைகள் தோன்ற ஆரம்பித்தன. மக்கள் விவசாய வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தனர். அதேசமயம் கடல்வாழ் உயினிங்களுக்கு தேவையான ஆக்ஸிஜனும் மேற்படி பாசிகளால் கிடைத்துக் கொண்டிருக்கிறது. மனித இனப்பெருக்கத்தை கட்டுப் படுத்தச் சொல்லி இயற்கை விடுத்திருக்கும் எச்சரிக்கை இது. உஷாரய்யா…உஷாரு. மீண்டும் ஒருமுறை இயற்கையின் தேர்வில் மனிதன் வென்றிருக்கிறான்.ஹ..ஹ..ஹா… . வெற்றிக்கு வித்திட்டவர்கள் இரண்டு தமிழர்கள். என்பதில் மக்கள் விழா கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

ஆதியில் 300.மில்லியன் வருஷங்களுக்கு முன்பு மரங்கள், தாவரங்கள், ,புழு பூச்சிகள் மட்டுமே வாழ்ந்திருந்த கார்பானிஃபெரஸ் ( Carboniferous era) காலத்தில் சின்ன ஒரு நெருப்புப் பொறியினால் உலகம் ஒரு முறை முழுமையாக எரிந்து வெந்து தணிந்தது. காரணம் அன்றைக்கு காற்றில் பிராணவாயு அதீதமான அளவாக 35% இருந்ததுதான். இந்த விஷயத்தை எதுக்கு இப்ப சொல்றேன்னா விஷயம் இருக்கு. `பூநார்க்—2’ பாசிகள் விஷயத்தில் இதுவரை ஆராயப்படாதது மட்டுமில்லை, அதுபற்றிய எச்சரிக்கை உணர்வும் இல்லாமல் போனதுவுமான ஒரு பிரச்சினை, `பூநார்க்—2’ பாசிகள் வெளிவிடும் பிராணவாயுவின் அளவும் எட்டு மடங்காக இருக்கிறது என்பதுதான். பூமியிலிருக்கும் எல்லா உயிரினங்களும் சுவாசிக்கும் போது செலவழியும் பிராணவாயுவின் அளவை பல்வேறு கணக்கீடுகள் மூலம் நிர்ணயித்து இது கவலைப்படும் விஷயமில்லை அப்படியே இருந்தாலும் அதை பின்னால் மெதுவாக பார்த்துக் கொள்ளலாம். உடனடியாக கரியமில வாயுவை குறைப்பதே உயிர்போகும் பிரச்சினை என்று மனிதன் சற்று அசட்டையாக இருந்து விட்டதின் விளைவு-, இன்றைக்கு ஒரு பயங்கரமான பேரழிவு நிகழவிருக்கிறது.காற்றில் பிராணவாயு கார்பானிஃபெரஸ் காலத்திய அந்த அபாயகரமான அளவான 35% ஐ தொட இன்னும் 3.2% தான் பாக்கி இருக்கிறது. ஐயோ! உலக விஞ்ஞானிகள் அதை சரியாக மானிட்டர் பண்ணாமல் இவ்வளவு அலட்சியமாகவா இருப்பார்கள்?. நம்பமுடியவில்லையே என்றால், இதுதான் ஊழ். அதற்கு எந்த விளக்கங்களும் கிடையாது. உறுத்து வந்து ஊட்டும். ஊழிற் பெருவலி யாவுள?. இந்த மனித இனம் ஐயய்யோ! என்று அலறி எழுந்து, எப்படி இந்த பிரச்சினையை வெல்லப் போகிறோம் என்று விஞ்ஞானிகள் மட்டத்தில் மாநில அளவில், உள்நாட்டளவில், உலகளவில், கூடிக்கூடி மாநாடுகள், செமினார்கள் நடத்தி, ஆராய்ச்சியில் ஈடுபட்டு,, பேசிப்பேசி தீர்வை கண்டுபிடிப்பதற்குள் நம் பூமி நெருப்புக் கோளமாகியிருக்கும் சாத்தியங்கள் அதிகம். ஆ….ஆ….!.. ஐயய்யோ! அப்படியென்றால்…? எஸ்! தமிழன் வென்றானா? என்பதற்கும், பூமியில் உயிரினங்களின் சர்வைவலுக்கும் இயற்கை வைத்திருக்கும் செக்— 3.2%

நன்றி—திண்ணை.காம் இணையதள பத்திரிகை —— 01—12–2014 .

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *