கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: February 6, 2013
பார்வையிட்டோர்: 10,410 
 
 

தேவராஜ் விசிலடித்துக் கொண்டே படியிறங்கினார். மனது நிறைந்து, சந்தோஷமாக இருக்கும் போதெல்லாம் விசிலடிப்பது அவர் வழக்கம். இருக்காதா என்ன ? 80 லட்ச காண்ட்ராக்ட் கைவசம் வந்து விட்டதே ! வேலையை முடிக்கும் போது கிட்டத்தட்ட 20 லட்சம் கையில் பார்த்து விடலாம். அதுவும் கடுமையான போட்டிக்கு இடையே அந்த காண்ட்ராக்டை பிடிப்பது என்றால் சும்மாவா ?

அன்றைக்கு டிரைவர் இல்லாததால் அவரே காரை எடுத்தார். பேக்டரி வாசலைத் தாண்டி 50 மீட்டர் கூட போயிருக்க மாட்டார். அப்போது திடீரென்று பன்றிக் கூட்டம்ஒன்று யாரோ விரட்டவே கண்ணிமைக்கும் நேரத்தில் சாலை நடுவில் ஓடி வந்து விட்டது. சட்டென பிரேக்கை மிதித்தும் முழுதாக வண்டி நிற்கவில்லை. அப்படியும் அதன் மீது மோதாமல் இருக்க வண்டியை முழுக்க இடது புறம் திரும்பினார். அந்தப் பன்றிகளின் போதாத நேரம் எதிர்புறமாகவும் ஒரு லாரி வந்ததால் ஓடிய கூட்டதில் சில குட்டிகள் மீண்டும் இந்தப் பக்கமே திரும்பி ஓடி வந்தன. வண்டியை முழுக்க இடதுபுறம் திருப்பியதால், டமால் ! என்ற சத்தத்துடன் ரோட்டோரத்தில் இருந்த மரத்தில் மோதி கார் நின்றது.

நொடிப் பொழுதில் நிகழ்ந்து விட்ட அந்த அதிர்ச்சியில் இருந்து மீளுவதற்குள் சாலையின் பக்கத்தில் இருந்து ஓடி வந்தவர்கள் கார் கதவைத் திறந்து அவரை வெளியே இழுத்தனர். தேவராஜுக்கு அடி ஏதுமில்லை. வெறும் அதிர்ச்சிதான். அதற்குள் பாக்டரியின் செக்யூரிட்டி உட்பட பலரும் ஓடி வந்து சேர்ந்தனர்.

சார் ! சார் ! வாங்க ! டாக்டர் கிட்ட போகலாம்னு ஆள் ஆளுக்கு சொல்ல, தேவராஜ் “எனக்கு ஒண்ணுமில்ல அப்புறம் பாத்துக்கறேன்னு” சொல்லி காரை ஒரு நோட்டம் விட்டார். காரின் பானட்டின் இடதுபுறம் நன்றாகவே நசுங்கிப் போயிருந்தது. முன்பக்க விளக்குகள் இரண்டுமேஉடைந்து இருந்தன. பம்பரும் உடைந்திருந்தது.

எப்படியும் இருபதாயிரம் செலவாகும். இன்ஷ்யூரன்ஸில் வாங்கிவிடலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதுதான் கவனித்தார் முன் சக்கரத்தின் கீழே கருப்பு நிறத்தில் ரத்தச் சகதியில் ஒரு பன்றிக்குட்டி செத்துக் கிடந்ததை.

அப்போது அந்தக் கூட்டத்தை விலக்கிக் கொண்டு அழுக்கடைந்த கட்டம் போட்ட கைலியோடும் தலையில் கட்டிய துண்டோடும் சட்டை போடாமல் கறுத்த மேனியுடன் அந்த பன்னிக்காரன் ஓடி வந்தான். கீழே கிடந்த பன்றிக்குட்டியைப் பார்த்ததும் லபோ திபோ வென்று வாயிலும் நெஞ்சிலும் அடித்துக் கொண்டு கத்தினான். சாமீ ! இப்படிப் பண்ணிட்டியே சாமீ ! அநியாயமாய் சாவடிச்சிட்டியே சாமீ ! நான் இன்னா செய்வேன் சாமீ என்று கத்தினான்.

அதற்குள் அந்த வழியாக வந்த டிராபிக் கான்ஸ்டபிள் வண்டியை நிறுத்தி விட்டு வந்தார். காரை சுற்றிப் பார்த்துவிட்டு எப்படி சார் நடந்தது என்று கேட்டார். தேவராஜ் நடந்ததைச் சொன்னார். யாருக்கும் ஒண்ணும் அடியில்லையே என்று கேட்ட போது சாமீ ! இங்கே பாரு சாமீ அநியாயமா கொன்னுட்டாங்க சாமீ ! என்று குரல் கொடுத்தான் அந்தப் பன்னிக் காரன்.

அப்போதுதான் கீழே பார்த்த கான்ஸ்டபிள் அந்த ரத்தச் சிதைவை பார்த்து தலையை ஆட்டிக் கொண்டு முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டு எழுந்தார். தேவராஜ் மீண்டும் சொன்னார், “நானும் இதை காப்பாத்தனும்னுதான் காரை முழுக்க திருப்பி மரத்துல இடிச்சேன் . இதுங்களும் ரோட்டைக் கிராஸ் செஞ்சு அந்தப் பக்கம் போயிடுச்சு. ஆனா எதிர் பக்கம் வந்த ஒரு லாரி மேல மோதாம இருக்க திரும்பவும் இந்தப் பக்கமே ஓடி வந்ததுனால வந்து மாட்டிக்கிச்சு போல” என்றார்.

எப்படி சார் ? கேஸ் ஏதாவது போடுறீங்களா ? என்ற கான்ஸ்டபிளை இடைமறித்த தேவராஜ் ” இல்ல சார் ! நான் இன்ஷ்யூரன்ஸ்ல பாத்துக்கறேன்” என்றார். சரி சார் ! வண்டியை உடனே எடுத்துடுங்க ! சும்மா ரோட்டுல நின்னு வேடிக்கை பாக்குற கூட்டம் டிராபிக்கை இடைஞ்சல் பண்ணும் ! என்று புறப்படப் போனார் கான்ஸ்டபிள்.

என்னா சாமீ ! கெளம்புற ! எனக்கு ஒரு வழி செஞ்சுட்டு போ சாமீ என்று ஓங்கி குரல் கொடுத்துக் கொண்டே எழுந்த அந்த பன்னிக்காரனை அடிக்க கை ஓங்கினார் கான்ஸ்டபிள். ஏண்டா ! நீ ஊருக்குள்ளே மேய உடுறது இல்லாம இந்த அசிங்கம் புடிச்சதுகள ரோட்டில வேற உலாவவிடுவே. ரோட்டுல ஆளுங்க நடக்குறதா இல்லையாடா ! நாயே ! இந்தக் காருக்கு இருபதாயிரம் நீயாடா குடுப்பே ? சாருக்கு ஒன்னு கெடக்க ஒன்னு ஆனா நீயாடா வந்து நிப்பே ? உதைச்சு ஒரு வாரம் உள்ளே வச்சா தெரியும் பொழப்பு. சாரு ஏதோ நல்ல மனசு பண்ணி கேஸ் வேணாங்கிறாரு. அவரு கேஸ் போட்டா ஸ்டேஷனுக்கும் கோர்ட்டுக்கும் வருவியாடா ? இந்த அசிங்கத்தை எடுத்துட்டு உடனே எடத்தைக் காலி பண்ணுடா ! என்று ஓங்கிக் குரல் கொடுத்து விட்டு தன் லத்தியால் அவன் பக்கத்தில் தரையில் ஓங்கி அடித்தார்.

இவனுங்கல்லாம் ரோட்டையே குத்தகைக்கு எடுத்துடுவானுங்க ! எல்லா பன்னியையும் குறவனுன்களை வச்சு சுடுங்க சார் ! ஊரையே அசிங்கப்படுத்திட்டு …. என்றார் வேடிக்கை பாத்துக் கொண்டிருந்த ஒரு நலம் விரும்பி.

பயந்து போன அந்த பன்னிக்காரன் இப்போ ரொம்ப கீழே இறங்கி வந்து தேவராஜைப் பாத்து ” சாமீ ! நீயெல்லாம் பெரிய மனுஷன் சாமீ. என் வயித்துல அடிக்காத சாமீ ! எதுன்னா பாத்து குடுத்துட்டு போ சாமீ ! ஒரு குட்டி ரெண்டாயிரம் ஆகும் சாமீ ! அதுலேயும் பொட்ட குட்டி சாமீ ! என்றான்.

கான்ஸ்டபிள் தேவராஜைத் தனியே கூப்பிட்டு ” பாவம் சார் ! ஏதாவது கொஞ்சம் பாத்து குடுங்க சார் ! ஆனா ஐநூறு ரூபாய்க்கு மேலே தராதீங்க ! அதையும் ரெண்டு மூணு நாள் தள்ளிக் குடுங்க ! என்றார் சன்னமான குரலில் .

சரி ! சரி ! எல்லாம் எடத்தை காலி பண்ணுங்க ! டேய் ! இத அள்ளிப் போட்டுட்டு இடத்தை காலி பண்ணு மூணு நாள் கழிச்சு வந்து ஐயாவைப் பாரு குடுக்குறதை வாங்கிட்டுப் போயிடணும். ஏதாவது கலாட்டா கிலாட்டா பண்ணுனா முட்டிக்கு முட்டி தட்டி ஜெயில்ல போட்டுருவேன்”னு மிரட்டிட்டு போய் விட்டார். கூட்டம் கலைந்தது. அந்த போலீஸ் ஸ்டேஷனை அவ்வபோது கவனித்து விடுவதால் சிக்கல் எதுவும் இருக்காது என்பது தேவராஜுக்கு முன்னமே தெரிந்ததுதான்.

மூணு நாள் கழித்து செக்யூரிட்டியிடம் ஐநூறு ரூபாயைக் கொடுத்து அந்த பன்னிக்காரன் வந்தால் கொடுத்து விடச் சொன்னார். பேச்சுவாக்கில் செக்யூரிடியைக் கேட்டார் “உண்மையிலேயே செத்துப் போன அந்தப் பன்னிக் குட்டி எவ்வளவு பெறும் என்று”. சார் ! ஒவ்வொரு பெண் குட்டியும் வருஷத்திற்கு பத்து குட்டிகளையாவது பெத்துப் போடும். அதுங்களை வளக்கறதுக்கும் ஒன்னும் செலவாகாது அதுவா ஊர் மேய்ஞ்சுக்கும். கூட்டிக் கழிச்சு பாத்தா அவனுக்கு வரப் போற வருமானம் ரெண்டாயிரம் கொறஞ்சு போனது என்னவோ வாஸ்தவந்தான். ஆனா நீங்க பெரிய மனசு வச்சு இவ்வளவு குடுக்கறதே பெரிசு சார் ! போதும் விடுங்க ! என்றார்.

தேவராஜ் அந்த சனிக்கிழமை பாக்டரிக்குப் போய்க் கொண்டிருந்தார். அன்றைக்கு இரண்டே வேலைதான். முதல் வேலை எல்லா காண்டிராக்டர்களுக்கும் பணம் பட்டுவாடா செய்வது. இரண்டாம் வேலை காரை விற்பதற்காக பேப்பரில் விளம்பரம் பார்ப்பது. பன்னி அடித்த கார் ராசியில்லை. வச்சுக்கக் கூடாது, உடனே வித்துருங்கன்னு ஏற்கனவே ஏழெட்டுப் பேர் சொல்லிவிட்டார்கள்.

போகும் வழியில் ரோட்டோரமாய் அந்தப் பன்னிக்காரன் நின்றுகொண்டிருந்தான். இவரைப் பார்த்ததும் மடித்துக் கட்டியிருந்த கைலியை இறக்கி விட்டு வணக்கம் சொன்னான். ஐநூறு ரூபாய் போய் சேர்ந்திருக்க வேண்டும். பணம் தன் வேலையைச் கச்சிதமாகச் செய்திருந்தது.

நேரம் மதியம் பன்னிரண்டு மணி. எல்லா காண்டிராக்டர்களுக்கும் செக் கொடுத்தாகிவிட்டது – ஒன்றைத்தவிர. சலாம் பாயின் செக் மட்டும் மேசை மீதிருந்தது. சலாம் பாய், தேவராஜுடைய அப்பாவின் பால்ய நண்பர். வாக்கு சுத்தம் மனசு சுத்தம் என்பதை அவரைப் பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டும்.அவர் எப்போதுமே நேராக வந்துதான் பணம் வாங்குவார். அப்போதுதான் தன்னுடைய சப்ளையிலோ சர்ப்வீஸிலோ குறை இருந்தால் நேரடியாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

எப்போதுமே மதியம் ஒரு மணி தான் அவர் வரும் நேரம். அது வரை பேப்பரை எடுத்து கார்கள் வாங்க என்ற பகுதியில் சில எண்களை கோடிட்டு வைத்தார். சில புரோக்கர்களுடன் பேசினார். அந்தப் பேப்பரிலேயே விலை விவரங்களையும் குறித்து வைத்தார். அதிகமான விலை எங்கே கிடைக்கிறதோ அங்கே விற்று விட வேண்டியதுதான். நாளை ஞாயிற்றுக்கிழமை முடிவு செய்து விடலாம்.

சலாம் பாய் சரியாக ஒரு மணிக்கு வந்து விட்டார். செக்கை வாங்கிக் கொண்டு ஐந்து நிமிடம் பேசி விட்டு கிளம்பினார். தேவராஜும் இறங்கி கூடவே.கார் வரை சென்றார். முக்கியமான கிளையன்ட் ஆச்சே ! சலாம் பாயின் பழைய இண்டிகா கார் நின்றிருந்தது.

என்ன சார் ! போன தடவையே காரை மாத்தனும்னு சொல்லிட்டிருந்தீங்களே ? என்றார் தேவராஜ்.

நானும் அப்படித்தான் தம்பி நெனச்சுட்டிருந்தேன். பத்து நாள் முன்னாடி வீட்டுக்குப் போய்க்கிட்டு இருந்தேன். ரோட்டு ஓரமா கூட்டமா இருந்துச்சு. ஏதோ ஆக்ஸிடன்ட் போல. பக்கத்துலேயே எனக்குப் பழக்கமான எங்க ஏரியா இன்ஸ்பெக்டர் நின்னுட்டு இருந்தாரு. அவரும் என் தெருவிலதான் இருக்கார். அவர் தெரிஞ்சவர்னால நிறுத்துனேன்.

இன்ஸ்பெக்டர் “ பாவம் சார் ! புருஷன் பொண்டாட்டி சின்னப் பையன் மூணு பேரும் ஸ்கூட்டியில வந்திட்டிருக்காங்க. தண்ணி லாரிக்காரன் கண்ணு மண்ணு தெரியாம வந்து அடிச்சிட்டு நிக்காமப் போயிட்டான்”னார். எட்டிப் பார்த்தேன். இந்தப் பையனும், அப்பாவும் அடிபட்டு மயக்கமாக் கிடந்தாங்க அந்தப் பெண் மட்டும் ரெண்டு பேரையும் மடியிலே போட்டுக்கிட்டு நெஞ்சில அடிச்சுட்டு அழுதுட்டிருந்துச்சு. இன்ஸ்பெக்டர் சொன்னார் “ஆம்புலன்ஸுக்கு சொல்லியிருக்கு சார் !. அரை மணி நேரம் ஆகும் போல. ரத்தம் வேற போயிட்டே இருக்கு அது வரைக்கும் தாங்குமான்னு தெரியல”.

நான் தயங்கியபடியே “ஏன் சார் ! நம்ம கார்ல வேணா ஏத்திக்கலாமா ? என்றவுடன் முகம் மலர்ந்தார். இதுவரை வேடிக்கை பாத்துக் கொண்டிருந்த கூட்டமும் சட்டென உதவிக்கு வந்தது. மடமடவென்று எல்லோருமாய்ச் சேர்ந்து மூன்று பேரையும் பின் சீட்டில் உட்கார வைத்தோம் இன்ஸ்பெக்டர் ஓடி வந்து முன்னால் உட்கார்ந்து கொண்டார். பத்து நிமிடத்தில் ஆஸ்பத்திரியில் எமர்ஜென்சி வார்டில் சேர்த்து விட்டு காருக்கு திரும்பினேன். காரின் பின் சீட்டைப் பார்த்தேன். சீட்டின் கவர், தரை மற்றும் கதவின் உள்புறம் இவற்றில் அங்கங்கே ரத்தம் திட்டாய் உறைந்திருந்தது. காரை நேரே ஒரு சர்வீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று கழுவி வீட்டுக்கு எடுத்து வந்தேன். அதோடு அதை மறந்து விட்டேன்.

ஆனால் அடுத்த வாரம் ஒரு நாள் என் கார் தெரு முனையில் திரும்பும் போது இன்ஸ்பெக்டர் அங்கே பஸ் ஸ்டான்டில் நின்றிருந்தார். “எங்கே சார் ? என்று கேட்டேன். “அந்த கேஸ்தான் சார். ஆஸ்பத்திரிக்கு ஸ்டேட்மென்ட் கையெழுத்து வாங்கப் போறேன்” என்றார். அந்த அப்பாவும் பிள்ளையும் பிழைத்துக் கொண்டதாகச் சொன்னபோது மனது நிம்மதியாக இருந்தது. போகும் வழிதானே இறங்கிக் கொள்ளுங்கள் என்றேன்.

ஆஸ்பத்திரி வந்ததும் அவர் சொன்னார் ” அந்த அம்மா உங்களை ரொம்பா கேட்டாங்க சார். உங்களுக்கு ஒண்ணும் லேட்டாகலைன்னா ஒரு நடை எட்டிப் பாத்துட்டு போங்களேன். எனக்கும் கையெழுத்து வாங்கினதுக்கு அப்புறம் வேற வேலையில்லை உங்களோடவே வந்து ஸ்டேஷன்ல இறங்கிக்குவேன்னார். அவ்வளவு தூரம் கேட்டுக்கிட்டதுனால நானும் அவர் கூடவே உள்ளே போனேன்

அந்தப் பெண் என்னைப் பாத்ததும் அப்படியே கால்ல விழுந்துடிச்சு. .ஐயா ! நீங்க மட்டும் அந்த நேரத்துல உங்க கார்ல தூக்கிப் போட்டு வரலன்னா என் புருஷனும் புள்ளயும் என்னை விட்டுப் போயிருப்பாங்க அதோடு நானும் உசுரோட இருந்திருக்க மாட்டேன். நான் கும்புடுற மாரியாத்தாதான் உங்களை அனுப்பிச்சிருக்கா என்று அழுதார். ஆபத்துக் கட்டத்த தாண்டிட்டதாகவும் இனி பயமில்லை என்று டாக்டர்கள் சொன்னதாகவும் சொன்னார்.

கிளம்பும் போது அந்தப் பெண்ணின் அப்பா என் கைகளைப் பிடித்துக் கொண்டு சொன்னார். “லாரியோடு எமனை அனுப்புன கடவுள் பின்னாடியே காப்பாத்துறதுக்கு காரோடு உங்களை அனுப்பிச்சிட்டாருன்னுதான் சொல்லனும். நீங்களும் உங்க குடும்பமும் நூறு ஆயுசு வாழணும் தம்பி”

சலாம் பாய் தேவராஜிடம் சொன்னார் ஒண்ணு மட்டும் புரிஞ்சுது தம்பி. இந்த உலகத்துல நமக்கு சம்பந்தமே இல்லைன்னு நெனச்சிகிட்டு இருக்கிற விஷயங்களைக் கூட கடவுள் ஏதோ ஒரு வகையிலே நம்மோடு சம்பந்தப் படுத்தி வச்சிருக்காரு. “இல்லைன்னா முன்னப் பின்ன சம்பந்தமே இல்லாத என்னை, கடவுள் ஏன் அந்த இடத்துக்கு அனுப்பனும் ? அந்த ரெண்டு பேரையும் காரிலே ஏத்திக்கனும்னு எனக்கு ஏன் தோணனும் ? இவ்வளவு நாளா இந்தக் காரை பயன்படுத்தினது எல்லாமே எனக்காகத்தான். ஆனா அன்னைக்கு அந்தக் காரை நான் பயன் படுத்துனது என்னவோ கடவுளுக்காகத்தான்னு என் மனசுக்கு தோணுச்சு.

“அந்த வகையிலே, இது நாள் வரைக்கும் இந்த காரை நான் வெறும் உயிரில்லாத இரும்பு சாமானாத்தான் தம்பி நெனச்சிட்டிருந்தேன். எல்லோரிடமும் “இரும்புக்கு என்னய்யா மதிப்பு” ன்னு தான் சொல்லுவேன். ஆனா அதுவே கடவுள் மாதிரி வந்து ரெண்டு உசுரை காப்பாத்திடுச்சுன்னு நினைக்கும் போது இந்தக் கார் மேலேயே ஒரு மரியாதை வந்திடுச்சு தம்பி !. கிடக்கட்டும் ! என் மனசுக்குள்ள இந்த ஈரம் இருக்குற வரைக்கும் இந்த காரும் ஒரு ஓரமா இருந்துட்டு போகுது” என்று சொல்லிக் காரிலேறிப் போய் விட்டார்..

சலாம் பாய் போன பின் தேவராஜ் தன் சேரில் உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருந்தார். வேகமாக அடித்த காற்றில், அவர் மனதைப் போலவே ஜன்னல் திரைச்சீலையும் சலசலத்துக் கொண்டிருந்தது. சில மனிதர்கள் இப்படித்தான், போகிற போக்கில் சில நல்ல எண்ணங்களை விதைத்து விட்டுப் போய் விடுவார்கள். அந்த விதைகள் வேர் விட்டு, விருட்சமாகி நிழலையும் கனியையும் பலனையும் யாருக்கு கொடுக்கப் போகிறது என்ற கணக்கெல்லாம் அவர்கள் எண்ணத்திலோ, செயலிலோ இருக்காது.

தேவராஜுக்கு சென்ற வாரம் நடந்த விபத்தும் அந்த பன்னிக்காரனும் நினைவில் வந்தனர். இந்தக் கார் யாருக்கு ராசியில்லை. உயிரை விட்ட அந்த பன்றிக்குட்டிக்கா ? இரண்டாயிரம் ரூபாய் குட்டியை இழந்து ஐநூறு ரூபாயில் திருப்தியடைந்த அந்தப் பன்னிக்காரனுக்கா ? அல்லது தனக்கா ?

யோசனையின் முடிவில் தேவராஜ் ஒரு கவரை எடுத்தார். அதன் உள்ளே நான்கு ஐநூறு ரூபாய் நோட்டுக்களை திணித்தார், செக்யூரிட்டியைக் கூப்பிட்டார். இந்தாப்பா ! அந்தப் பன்னிக்காரனை உனக்கு தெரியும்ல. இதை அவன்கிட்ட குடுத்துடுன்னு சொல்லி அந்தக் கவரைக் கொடுத்தார். இந்தா ! இதை செலவுக்கு வச்சுக்க ! என்று ஒரு நூறு ரூபாய்த்தாளை அவன் கையில் திணித்தார். காரை விற்பது பற்றிய குறிப்பெழுதியிருந்த பேப்பரை கையில் எடுத்தார். இனி தேவையில்லை என்று கிழித்து குப்பைக் கூடையில் போட்டார்.

தன் வேலை முடிந்துவிட்ட திருப்தியில் பெட்டியை எடுத்துக் கொண்டு விசிலடித்துக் கொண்டே படியிறங்கினார். மனது நிறைந்து, சந்தோஷமாக இருக்கும் போதெல்லாம் விசிலடிப்பது அவர் வழக்கம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *