முத்தையாவுக்கும், சுதாகருக்கும் ஒரே உணவகத்தில் வேலை. அவர்கள் தங்கியிருக்கும் அறை உணவகத்தின் மேலேயே இருந்தது. ஐம்பத்திரண்டு வயது முத்தையா அந்த உணவகத்தில் சமையலறை உதவியாளராய் வந்து இன்று காசாளராய் உயர்ந்திருப்பவர். இரவில் ஒரு குவார்ட்டர் இல்லாமல் அவரால் கண் அயர முடியாது. இப்போது ஆயிரங்களில் சம்பளம் வாங்கினாலும் குவார்ட்டர் என்ற அளவை அவர் மாற்றவில்லை. இது தவிர வாரத்தின் மூன்று நாட்களும் தலா பத்து வெள்ளிக்கு நான்கு நம்பர் பரிசுச் சீட்டு* எடுத்து விடுவார். சிங்கப்பூரைச் சூழும் புகை மூட்டம் போல அவ்வப்போது அதில் விழும் அதிர்ஷ்டப் பரிசும் ஐநூறு வெள்ளியைத் தாண்டியதே இல்லை. அதேபோல சம்பளத் தேதியின் மறுநாள் சூதாட்டக் கூடத்திற்குச் சென்று விடுவார். அங்கு சென்று திரும்பும் ஒவ்வொரு முறையும் அவரின் பணப்பை பிரசவத்திற்குப் பிந்தைய பிள்ளைத்தாச்சியாய் மாறிவிடும். ஆனாலும் அது பற்றி அவர் கவலைப்பட்டதே இல்லை. மகளுக்குத் திருமணம் செய்து விட்டதால் சேமிப்பு பற்றி அதிக அக்கறையின்றி ஊரில் இருக்கும் குடும்பத்திற்கு அவ்வப்போது சில நூறு வெள்ளிகளை ஏஜண்ட்* மூலம் அனுப்பி வைப்பார். சில மாதங்களில் அதுவும் கிடையாது. இத்தனை இருந்தும் வேலை விசயத்தில் முத்தையாவை அசைத்துப் பார்க்க முடியாது. தவிர்க்க முடியாத நிலையிலும் கூட வேலைக்கு வருவதைத் தவிர்க்கமாட்டார். வேலையின் மீது இருந்த அந்த மோகம் கடை முதலாளியிடம் அவரை எப்பொழுதும் செல்வாக்கு மிக்க ஊழியாராக வைத்திருந்தது.
சுதாகரும் அவருடைய ஊரைச் சேர்ந்தவன் என்பதோடு அவர் பார்க்க வளர்ந்த பையன். சுதாகரின் அப்பாவும், முத்தையாவும் சிநேகிதர்கள். மகளின் கல்யாணத்திற்கு நிறையக் கடன் வாங்கியதால் மிகுந்த சிக்கலில் இருப்பதால் கேட்டரிங் முடித்திருக்கும் தன் மகனுக்குச் சிங்கப்பூரில் ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்து கொடு என்று ஊருக்குச் சென்றிருந்த சமயத்தில் முத்தையாவிடம் சுதாகரின் அப்பா சொன்ன போது ”பார்க்கலாம்” என்று மட்டும் சொல்லி வைத்தார்.
அதன்பின் சிங்கப்பூர் திரும்பிய இரண்டே மாதத்தில் சமையலறை உதவியாளர் வேலைக்குச் சுதாகரை தான் வேலை பார்க்கும் கடைக்கே இறக்கி விட்டார். விமானப் பயணச்சீட்டுக்கு மட்டும் செலவு செய்து கொண்டு சிங்கப்பூர் வந்திறங்கிய சுதாகரை விமான நிலையத்திற்குச் சென்று அழைத்து வந்தார்.
முத்தையா இறக்கி விட்ட பையன் என்பதால் மற்ற ஊழியர்கள் அவனிடம் வேலை விசயத்தில் அதிகம் கடிந்து கொள்வதில்லை. வேலைக்குப் புதிதாய் வருபவர்கள் சில மாதங்கள் இப்படியான வேலையிடச் சிக்கலில் இருந்து தப்பி விட்டாலே போதும். அதன் பின் அவர்கள் அந்தச்சூழலில் தொடர்ந்து இயங்கப் பழகி விடுவார்கள். சுதாகரும் வந்த ஒரு மாதத்திற்குள் வேலைத் தன்மைகளை அறிந்து கொண்டான். ஊரில் இருந்து கிளம்பும் போதே, ”பழக்கத்துக்காக ஒரு காசு வாங்காமல் முத்தையா உன்னைய எடுத்திருக்கான். அங்குன போய் அவன் பெயரைக் கெடுக்காமல் நடந்துக்க” என்று தன் அப்பா சொல்லி அனுப்பியதை அடிக்கடி நினைத்துக் கொள்வான். அதனாலயே பல நேரங்களில் வேலையிடத்தில் மற்றவர்களை அனுசரித்துச் சென்றான்.
சில நடைமுறை விசயங்கள் அவனுக்குத் தெரிய ஆரம்பித்ததில் தன்னுடைய வேலைக்குரிய ஆட்களை இந்தியாவில் இருந்து அழைத்து வர ஏஜெண்ட்டுகள் நான்காயிரம் முதல் ஐயாயிரம் வெள்ளி வரை வசூலிப்பதை அறிந்து கொண்டான். தனக்கு வாங்கித் தந்த இந்த வேலையை வேறு யாருக்கேனும் முத்தையா வாங்கிக் கொடுத்திருந்தால் அவருக்கும் இந்தத் தொகை கிடைத்திருக்கும். தன் அப்பாவுக்காக அதை வாங்காமல் விட்டிருக்கிறார் என நினைத்த போது அவர் மீது அவனுக்கு இன்னும் மதிப்பு அதிகமானது,
முத்தையாவிற்கு ஷிப்ட் அடிப்படையில் வேலை என்பதால் காலையில் ஐந்து மணியில் இருந்து ஒன்பது மணிவரை காசாளர் வேலையைப் பார்த்து விட்டு அதன்பின் பசாருக்குச் சென்று கடைக்கு அன்றாடம் வேண்டிய காய்கறிகளை வாங்கிக் கொடுத்து விட்டு ஓய்வுக்குச் சென்று விடுவார். சாயங்காலம் நான்கு மணியிலிருந்து இரவு பன்னிரெண்டு மணி வரை காசாளர் வேலையைப் பார்ப்பார்.
முதலாளிக்கு இன்னும் இரண்டு உணவுக் கடைகள் இருந்தன. தேக்காவில் இருக்கும் கடையில் மட்டும் அதிக நேரம் இருப்பார், மற்ற இரு கடைகளுக்கும் தினமும் மதிய நேரத்தில் வந்து கணக்குகளைப் பார்த்து விட்டுத் தேவைகள் ஏதும் இருப்பின் ஏற்பாடு செய்து கொடுத்து விட்டுச் சென்று விடுவார். சுதாகர் வந்து ஏழு மாதங்கள் ஆகி இருந்த நிலையில் காசாளராக இரண்டாவது ஷிப்ட் வேலையில் இருந்தவருக்கு பணி நீட்டிப்பு கிடைக்காமல் போனது. அவருக்குப் பதிலாக யாரை நியமிக்கலாம் என முதலாளி முத்தையாவிடம் கேட்ட போது சற்றும் தயங்காமல் சுதாகரின் பெயரைச் சொன்னார். முத்தையாவின் பேச்சிற்கு பெரும்பாலும் முதலாளியின் பதில் சாதகமாகவே இருக்கும் என்பதால் சமையலறையில் இருந்து காசாளர் வேலைக்கு மாறி இருந்தான். அவனின் முதல் வேலைநாளன்று, ”.தம்பி இது வெளியில இருந்து பார்த்தா சல்லிசான வேலையாத் தெரியும். ஆனால் இந்த வேலை கடையில் இருக்குற வேலையிலயே சிக்கலானது. பணம் சம்பந்தப்பட்டதுங்கிறதால தவறு நடந்துருச்சுன்னா யாரும் நாக்கூசாம பேசிடுவானுக. ஒரு தடவை பழி வந்துட்டா பொழப்பு போயிடும். எந்த வியாபாரிக்குக் காசு கொடுத்தாலும் ரசீது கேட்டு வாங்கிடு. வேலையாட்களுக்குக்
காசு கொடுத்தால் பற்றுச் சீட்டுல கையெழுத்து வாங்கிடு. பண விசயத்துல அதுவும இன்னொருத்தர் காசைப் பராமரிக்கிற வேலையில் வாய் வார்த்தையை விடவும் பேப்பர் முக்கியம். எனக்கிட்ட இருந்து ஷிப்ட் மாத்தும் போதும் மறக்காமல் கணக்கு வாங்கிட்டு கல்லாவுல ஏறு. அண்ணங்கிற நினைப்பெல்லாம் கடைக்கும், வேலைக்கும் வெளியிலேயே இருக்கட்டும்.” எனப் பெரிய அறிவுரையோடு அன்றைய வரவு செலவுக் கணக்குகளை அவனிடம் ஒப்படைத்து விட்டுப் பசாருக்குக் கிளம்பிச் சென்றார். இத்தனை மாதங்களில் அவனிடம் அவர் சொன்ன ஒரே அறிவுரையும், நீண்ட பேச்சும் இதுவாக மட்டுமே இருந்தது!.
புதிய வேலைக்கு வந்த சந்தோசத்தை வீட்டிற்கு அலைபேசி வழியாகச் சொன்னவன் அதற்குக் காரணமான முத்தையாவிற்கு ஒரு குவார்ட்டர் வாங்கித் தன்னோடு வேலை செய்யும் இன்னொருவர் மூலம் கொடுத்தனுப்பினான். அவரும் மறுப்புச் சொல்லாமல் வாங்கிக் கொண்டார். காசாளர் வேலையில் இரண்டொரு மாதங்கள் சென்றிருந்த நிலையில் பசாருக்குச் சென்று திரும்பிய முத்தையா கடையில் அசாதாரண சூழல் நிலவுவதை உணர்ந்தார். கடையின் முகப்பில் இருந்த மேசையில் உட்கார்ந்திருந்த முதலாளி கடுமையான முகபாவத்தோடு ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். அவருக்குப் பக்கத்தில் தலையைக் கவிழ்ந்த படி சுதாகரும், கடையில் வேலை பார்க்கும் வேலையாட்களில் இருவரும் நின்று கொண்டிருந்தனர்.
முத்தையாவைக் கண்டதும் அவரை அழைத்த முதலாளி, ”என்னண்ணே இது? நல்ல பையன்னு நினைச்சு இந்த வேலைக்கு ஏத்துனேன். இப்ப பார்த்தீங்களா? பணத்தைக் கண்டதும் கைய வச்சுட்டான். கணக்குல ஆயிரத்தி ஐறூறு வெள்ளி குறையுது. சிட்டையும் இல்ல. வியாபாரிக்கு வரவும் வைக்கல. கேட்டாத் தெரியலைங்கிறான். காலையில ஷிப்ட் மாறும் போது உங்களிடமிருந்து கணக்கு வாங்காமல் விட்டுட்டேங்கிறான். என்ன கதைன்னு நீங்களே கேளுங்க?” என்றவர் மற்ற இரு ஊழியர்களிடமும் ”போய் வேலையைப் பாருங்க” எனச் சொல்லி அனுப்பி விட்டார். ஆரம்பகாலத்தில் இருந்தே முத்தையாவை முதலாளி பெயர் சொல்லி அழைப்பதில்லை. சில சமயங்களில் கோபமாகத் திட்டும் போது கூட அண்ணன் என்று சொல்லித் தான் ஏசுவார்.
கல்லாவில் இருப்பு இருக்கும் பணத்தையும், இதரச் சிட்டைகளையும் எப்பொழுதும் ஒத்துப் பார்த்து வாங்கிய பின்பே தன் வேலையைத் தொடர்பவன் அன்று அப்படிச் செய்யாதது பிழையாகப் போய்விட்டதோ? என்று தோன்றியதால் முதலாளியிடம் அப்படிச் சொன்னான், ஆனால் அந்த பதிலே முத்தையாவைக் குற்றம் சாட்டுவது போலத் திருப்பி விடப்படுவதை உணர்ந்தவன் இனி அந்தப் பதிலை நினைவூட்டி விடக்கூடாது என்ற நினைப்போடு அமைதியாக இருந்தான். சிட்டையெல்லாம் சரிபார்த்தாயா? என்று கேட்ட முத்தையாவிற்கு அவன் பதில் சொல்லாமல் நின்றான். அந்த சிசிடிவி கேமராவை ரிப்பேர் பண்ண வரச் சொல்லி மூன்று நாளாச்சு. இன்னும் வாரான். கூட்டாளின்னு சொல்லி வேலையைக் கொடுத்தா கழுத்தறுக்குறானுக. அன்னைக்கே வந்து சரிபண்ணியிருந்தான்னா இப்ப தெரிஞ்சிருக்கும். நான் கேட்ட போது வாயைத் திறந்தவன் நீங்க கேட்டால் வாயைத் திறக்குறானா பாருங்க? என்று கடுகடுத்த முதலாளி ”நான் மலேசியாவிற்குப் போயிட்டு நான்கு நாள் கழித்து வருவேன். அதுக்குள்ள யோசித்துப் பணம் என்னாச்சுன்னு சொல்லு. இல்லைன்னா சம்பளத்துல வெட்டிடுவேன். முத்தையா அண்ணன் முகத்துக்காக பார்க்கிறேன். இல்லைன்னா பணம் போனாலும் பரவாயில்லைன்னு பெர்மிட்டை வெட்டி இன்னைக்கே ஊருக்கு ஏத்தி இருப்பேன்” என்றார்.
முதலாளியின் வார்த்தைகள் சுதாகருக்கு கருக்குத் தரிக்காத பனைமட்டையை உடலெங்கும் வைத்து இழுத்தது போல் இருந்தது. அவன் வாய் ஊமை போல இருந்தாலும் கண்கள் கலங்கியது. மெதுவாக நிமிர்ந்து முத்தையாவைப் பார்த்தான். அவருடைய பார்வை ”இந்த வேலைக்கு ஏறும் போதே சொன்னேன்.. பொறுப்பில்லாமல் இருந்து விட்டாயே” என்று சொல்லாமல் சொல்வது போல் இருந்தது. ”சரி…….போய் வேலையைப் பாரு” என்று மட்டும் சொல்லி விட்டு ஓய்விற்காக அவரும் சென்று விட்டார்.
கடையில் வேலை செய்பவர்களை மட்டுமல்ல வாடிக்கையாளர்களையும் கூட அவனால் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. மற்றவர்களின் சாதாரணப் பார்வை கூட தன்னுள் ஊடுருவிப் பாய்வதைப் போல உணர்ந்தான். வேலை நேரம் முடிய இன்னும் சில மணி நேரங்கள் இருந்தது. கட்டுப்படுத்த முயன்றும் கண்ணீர் பெருக்கெடுத்து வழியத் தயாராய் இருந்தது. சிங்கப்பூருக்குக் கிளம்பும் போது, “அங்குன போய் முத்தையா பெயரைக் கெடுத்துடாமல் நடந்துக்க” என்று தன் அப்பா சொல்லி அனுப்பியது நினைவுக்கு வந்தது. தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தால் முத்தையாவிற்குக் கலங்கம் வந்து விட்டதே என்று நினைத்த போது அவனின் தொண்டை கனமாய் அடைத்தது. தன் வேலை நேரம் முடிந்ததும் ஷிப்ட் மாற்றுவதற்கு வந்த முத்தையாவிடம் அன்றைய கணக்குகளை ஒப்படைத்து விட்டு அறைக்கு வந்து அழுது தீர்த்தான்.
தான் தவறு செய்யாத போதும் அதை மறுக்கச் சரியான ஆதாரம் இல்லாததால் ஒத்துக் கொள்ளவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல் சிலந்தி வலை ஈயாய் மாட்டிக் கொண்டு நிற்கும் தன் நிலையை நொந்த படியே உறக்கம் பிடிக்காமல் படுக்கையில் கிடந்தான். மறுநாள் வேலைக்கு வந்த போதும் மனம் நேற்றைய நிகழ்வுக்குள் சிக்குண்டே கிடந்தது. கடைத் தொகுதியில் இருந்த மற்ற இனத்தைச் சேர்ந்த கடைக்காரர்களில் சிலருக்கும் விசயம் கசிந்திருந்தது. அவர்களின் பார்வை அதைக் காட்டியும் கொடுத்தது. மறுநாள் ஹஜ் பெருநாள் என்பதால் கடைக்கு விடுமுறை விட்டிருந்தார்கள். எங்கும் செல்லாமல் அறையிலேயே முடங்கிக் கிடந்தான். இவனையும், முத்தையாவையும் தவிர மற்றவர்கள் காலையிலேயே வெளியில் கிளம்பிச் சென்றிருந்தார்கள். முத்தையாவை ஏறிட்டுப் பார்க்க முடியாதவனாய் தலையணையில் முகத்தைப் புதைத்துக் கொண்டிருந்தவனுக்கு அவரும் வழக்கத்திற்கு மாறாகக் கொஞ்சம் பதற்றமாகவே இருப்பது போல் தெரிந்தது. பேசத் தயக்காமாக இருந்ததால் அவரிடம் எதுவும் கேட்காமல் இருந்தான்.
இரவு ஊருக்குப் போன் செய்த போது அவருடைய பதற்றத்துக்கான காரணம் புரிந்தது. பேசி முடித்த கையோடு வேகமாக அறைக்குத் திரும்பியவன் அவரின் அருகில் போய் அமர்ந்து கொண்டு, ”அப்பா சொன்னார். என்ன ஆச்சுண்ணே?” என்றான்.
”கரும்பு ஆலைக்கு தினச் சம்பளத்துக்குப் போயிக்கிட்டு இருந்தவன் இரண்டு நாளைக்கு முன்னாடி மாதச் சம்பளக்காரனா ஆனான். அது பிடிக்காத எந்தப் பாவியோ தப்புப் பண்ணிட்டு இவனைப் பலியாடா ஆக்கிட்டானுக. திருட்டுப் பழியைச் சுமந்து கிட்டு என்ன செய்றதுன்னு தெரியாமல் நின்னதால போலீசுல கேசு கொடுத்து ஜெயிலுக்கு கொண்டு போயிட்டானுகளாம். கம்பெனிக்காரன் சமரசத்துக்கு ஒத்துக்க மாட்டேனுட்டானாம். நாளைக்குத் தான் வக்கீல வச்சு ஜாமின் எடுக்க முடியுமாம். சொகுசா வளர்ந்த பையன். ஜெயில்ல கொண்டு போய் நிக்க வச்சுட்டானுக. நாளைக்குக் கல்யாணம் செய்யப் பொண்ணு தேடுனா எவன் கொடுப்பான்? செய்யாத தப்புக்குத் தண்டனை அனுபவிக்கனும்னு என் மகனுக்கு தலை எழுத்து எழுதி இருக்கு போல” எனக் கதறி அழுதவரின் கைகளை இன்னும் இறுக்கமாய் பிடித்துக் கொண்ட சுதாகர், ”கவலைப்படாதீங்கண்ணே. நாளைக்கு ஜாமீன் கிடைச்சிடும்னு வக்கீல் சொன்னதா அப்பா சொன்னார். தைரியமா இருங்க” என்றான்.
எந்தச் சூழலிலும் வேலை விசயத்தில் சமரசம் செய்து கொள்வதில் உடன்பாடில்லாத முத்தையா மறுநாள் காலையில் வேலைக்குக் கிளம்பி விட்டார். அவர் முகத்தில் இருந்த குழப்பத்தைக் கண்டு பலரும் நலம் விசாரிக்க ஆரம்பித்து விட்டனர். எல்லோருக்கும் வெவ்வேறு வகையான உடல் மொழி மூலம் பதில் சொல்லிச் சமாளித்துக் கொண்டிருந்தார். மதியவாக்கில் மகன் ஜெயிலில் இருந்து வெளியாகி விட்டான் என்ற செய்தி ஊரிலிருந்து வந்த பின்னரே சகஜமானார்.
மலேசியாவில் இருந்து திரும்பியிருந்த முதலாளி கடைக்கு வந்து உட்கார்ந்ததும் சுதாகரை அழைத்தார். என்ன முடிவு செஞ்சிருக்க? இப்பவாது பேசுவியா? இல்லை ஊமையா நிக்கப்போறியா? என்றார்.
”சம்பளத்துல அந்தக் காசை வெட்டிக்கிடுங்க. இனிமேல் எனக்கு இந்த வேலை வேணாம். பழைய வேலையவே செய்றேன்” என்றான்.
”அன்னைக்குக் கேட்டப்பவே இதைச் சொல்லியிருக்கலாம்ல? திமிரு. நீயே நினைச்சாலும் இந்த வேலை இனி உனக்கு இல்லை. உனக்கெல்லாம் புறக்கடை தான் லாய்க்கு. படிச்சிருக்கியேன்னு நம்பிக் கொடுத்தா களவாணிப் புத்தியக் காட்டுற. நாளையிலிருந்து புறக்கடை வேலையை மட்டும் செய்” என்றார்.
ஷிப்ட் மாற்ற வந்த முத்தையாவிடம் கணக்குக் கொடுக்கும் போது, ”நான் முதலாளியிடம் ஒத்துக்கிட்டேன். புறக்கடை வேலையவே செய்றேன்னு சொல்லிட்டேன்” என்றான். ”அவசரப்பட்டுட்டியே” என்று சொன்ன முத்தையா சற்று அதிர்ச்சியும், ஆச்சர்யமுமாய் அவனையே பார்த்தார். மறுநாள் எந்தச் சலனமும் இல்லாமல் தன் பழைய வேலையை சுதாகர் பார்க்கத் தொடங்கினான் ஒரு நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு உயர்ந்தவன் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பினால் இருக்கும் துயரம் ஏதுமற்ற மனநிலையில். இருக்கிறானா? அல்லது அப்படி நடிக்கிறானா? என்ற சந்தேகத்தோடு உடன் வேலை பார்ப்பவர்கள் அவனைப் பார்த்தனர். அழுத்தித் தேய்த்த முழுக்கால் சட்டையும், முழங்கைச் சட்டையுமாய் நேற்று வரை இருந்தவன் இன்று ரப்பர் சப்பாத்துடன்* சட்டிபானைகளை உருட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்த முத்தையாவிற்குச் சங்கடமாக இருந்தது. நாளாக நாளாக இந்த விசயத்தின் ஈரம் காய ஆரம்பித்திருந்தாலும். உடன் இருப்பவர்கள் ”திருடன்” என்ற அடைமொழிக்குரியவனாகவே அவனைப் பார்ப்பது மட்டும் குறைந்திருக்கவில்லை.
இரண்டு வாரங்கள் சென்றிருந்த நிலையில் ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று இருள் சூழ ஆரம்பித்திருந்த நேரத்தில் சுதாகரை அழைத்த முத்தையா கொஞ்சம் வெளியில் போய் வருவோமா? என்றார். இதற்கு முன் பல தடவை அவர் இப்படி அழைத்திருந்தாலும் இம்முறை அழைப்பது நடந்து முடித்த விசயம் குறித்துப் பேசுவதற்காக இருக்குமோ? முதலாளி ஏதும் சொல்லி இருப்பாரோ? என்ற நினைப்பை அவனுக்குத் தந்தது. தயக்கத்துடன் சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பியவனின் மனம் முழுவதும் அந்த நினைப்பிலேயே நின்றது. வழியில் இருந்த பல் பொருள் அங்காடிக்குள் நுழைந்த முத்தையா வழக்கமாக அருந்தும் குவார்ட்டரில் வழக்கத்திற்கு மாறாக இரு பாட்டில்களோடு இரண்டு பெப்சி, கொறிப்பதற்கு நிலக்கடலை ஆகியவைகளையும் வாங்கிக் கொண்டு சற்று தள்ளி இருந்த மரப்பாலத்தில் வந்து அமர்ந்தார்.
ஒரு பெப்சியை அவன் பக்கமாக நகர்த்தியவர் குவார்ட்டரில் இன்னொரு பெப்சியைக் கலந்து வேகம், வேகமாக குடிக்க ஆரம்பித்தார். போதை ஏற ஆரம்பித்து விட்டதற்கான அடையாளமாய் அவரின் கைகள் துலாவ ஆரம்பித்தன. வியர்வை சட்டைக்கு மேல் வடிய ஆரம்பித்திருந்தது. தன்னை உற்றுப் பார்த்த படி இருந்தவரை என்ன சொல்லப் போகிறாரோ? என்ற பதை பதைப்போடு நேருக்கு நேர் பார்க்க முடியாதவனாய் சுதாகர் தலையைக் கவிழ்ந்து கொண்டான்.
சட்டென அவனுடைய இரு கைகளையும் பிடித்துத் தன் கண்களோடு ஒற்றிக் கொண்டவர், “என்னைய மன்னிச்சிடுயா. மாதச்சம்பள வேலைக்கு மாறனும்னா ஒரு இலட்சம் ரூபாயை உடனே கட்டனும்னு மகன் வேலை பார்த்த இடத்துல சொல்லிட்டாங்க. முதலாளிக்கிட்ட முன்னமே ஐயாயிரம் வெள்ளி கடன் இருந்ததாலயும், கூட்டாளிகளிடம் கைமாத்து வாங்குன கடன்கள் இருந்ததாலயும் யாருக்கிட்டயும் கேட்க முடியல. கால் ஊனமான பிள்ளைக்கு கிடைச்சிருக்கிற வேலையை வாங்கித்தர பணம் தர முடியலைன்னா அவனுக்கு அப்பன் சொல்லிக்கிறதுல அர்த்தமே இல்லைன்னு தோனுச்சு. எனக்கும் வேற வழி தெரியல. எப்பவும் கணக்கு வாங்கிட்டு ஷிப்ட் மாத்துற நீ அன்னைக்குக் கணக்கு வாங்காமல் மாத்துனதையும், கடையில மூனு நாளா சிசிடிவி கேமரா வேலை செய்யாமல் இருப்பதையும் சாதகமாக்கிக் கிட்டு அந்தப் பணத்தை எடுத்துட்டேன். மகன் மேல இருக்கிற பாசம் என் கண்ணை மறச்சிடுச்சு.
யாரோ செஞ்ச தப்புக்கு என் மகன் ஜெயிலுக்குப் போனதைக் கேட்டு அவன் மனம் படும் வேதனையை நினைச்சுப் பார்த்தப்ப ஈரக்குலையை நடுங்கிப்போச்சு. என் மகன் மாதிரியே நீயும் செய்யாத தப்புக்குத் திருட்டுப் பட்டத்தை வாங்கிக் கிட்டு அடுப்படி வேலைக்கு போறதைப் பார்த்த போது என் மனசே வெடிக்கிற மாதிரி ஆயிடுச்சு. என் மேல் எல்லோரும் வைத்திருக்கும் நம்பிக்கையும், என் சுய கெளரவமும் நான் செஞ்ச தப்பை மறைக்க வச்சிடுச்சு. என்னை விட வயசுல சின்னவனா போயிட்ட. இல்லைன்னா உன் காலில் நெடுஞ்சாண் கிடையா விழுந்திருப்பேன். குற்ற உணர்ச்சியில படுத்தா உறக்கம் வர மாட்டேங்குது. இந்தக்களவாணிப்பயல மன்னிச்சிட்டேன்னு ஒரு வார்த்தை சொல்லுயா” என அவன் கைகளால் தன்னுடைய முகத்தை அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தார்.
அவரின் கைகளைத் தன் கைக்குள் மாற்றிப் பிடித்த சுதாகர், ”நீங்க தான் அந்தப் பணத்தை எடுத்தீங்கன்னு எனக்கு மறுநாளே தெரியும்” என்று சொன்னதும் சற்றே பதறியவராய் நிமிர்ந்து பார்த்த முத்தையாவிடம், “நீங்க ஊருக்கு அனுப்பச் சொல்லி ஏஜெண்டுக்கு பணத்தை மாத்தி விட்டதுமே நான் கொடுக்க வேண்டிய பாக்கியைக் கேட்டு எனக்குப் போன் பண்ணினார். இன்னும் சம்பளம் போடலைன்னு சொன்னேன், இன்னைக்குச் சம்பளம் வந்துடுச்சுன்னு முத்தையா ஆயிரத்தி ஐநூறு வெள்ளி கொடுத்து பணம் அனுப்பச் சொல்லி இருக்காரு. உனக்கு மட்டும் போடலையாக்கும் என சப்தம் போட்டார். நீங்க சம்பளம்னு சொன்னதா ஏஜண்ட் சொன்னதுமே உங்க மேல சந்தேகம் வந்துடுச்சு. அதை நேரடியாக உங்களிடம் கேட்க மனசு வரவில்லை. உங்களையும், என்னையவும் தவிர கல்லாவுல வேற யாரும் பணத்தை எடுக்க முடியாதுன்னு எல்லாருக்கும் தெரிஞ்சிருந்தும் உங்களின் மீது இருந்த நம்பிக்கை என்னைத் திருடனாக்கிடுச்சு. இதுக்கப்புறம் நான் என்ன சொன்னாலும் அது தப்பாயிடும் என்பதால் மறுத்துப் பேசாமல் பழியை ஏற்றுக் கொண்டேன் என்று அவன் சொன்னதுமே முத்தையாவுக்குத் தன் தலையில் ஏறி நின்ற போதை வடிந்து விட்டதைப் போல இருந்தது.
வடிந்தோடிய கண்ணீரையும், மூக்கில் வழிந்த நீரையும் சட்டை நுனியால் துடைத்துக் கொண்டவர், ”இத்தனை வயசுக்கப்புறம் பணத்தைத் திருடிட்டேன்னு இங்கேயும், ஊருலயும் தெரிஞ்சா என்னால உயிர் வாழவே முடியாது. முட்டாள் தனமா நான் செஞ்ச தப்பை யாருக்கிட்டையும் சொல்லிடாதேயா” என்றவரிடம், ”நான் உங்களை அண்ணன்னு கூப்பிட்டாலும் உங்களுக்கும் என் அப்பா வயசு. நான் வந்த வேலைக்கு நாலாயிரம், ஐயாயிரம் வெள்ளின்னு ஏஜண்ட் கேட்கிறாங்க. நீங்க ஒரு வெள்ளி கூட வாங்காமல் என்னைய இறக்கி விட்டீங்க, அந்த நன்றியை மறக்க மாட்டேன். என் அப்பா இப்படி ஒரு தப்பு செஞ்சிருந்தா அதை யாருக்கிட்டேயும் நான் போய் சொல்வேனா? இதுக்காகவா இவ்வளவு தூரம் கூட்டிக்கிட்டு வந்து சின்னப் புள்ள மாதிரி அழறீங்க. வாங்கண்ணே ரூமுக்கு போவோம்” என்று அவரின் கையைப் பிடித்துத் தூக்கி விட்டான். திரும்பி வரும் போது இருவரும் ஒரு வார்த்தை கூடப் பேசிக் கொள்ளவில்லை. சுதாகரிடம் வரும் போது இருந்த பதற்றம் இப்போது விலகி இருந்தது.