கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: October 22, 2020
பார்வையிட்டோர்: 14,729 
 
 

இயல்; அப்பா! அப்பா! என்று கூப்பிட்டுக்கொண்டே மாடிப்படிகளில் ஏறி ஒடிவந்தாள். என்னம்மா. இப்படி ஓடிவராதே என்று உனக்கு எத்தனை தடவை சொல்வது? சந்தானம், செல்லமாக கடிந்துகொண்டான். பக்கதிலிருந்த மல்லிகா, “ம்க்கும். கழுதை வயதாகிறது. இன்னமும் செல்லம்” கழுத்தை நொடித்தாள். “சுளுக்கிக்கப் போகிறது சித்தி”

.அப்பாவும் மகளும் சிரிப்பதைப் பார்த்து மல்லிகாவும் சிரித்தாள்.

“சாமி வந்திருக்கார் அப்பா! கீழே வாங்க” நீலகண்டனை அவள் சாமியார் என்றுதான் அழைப்பாள்.

ஓ. நீலகண்டனா? வந்திருக்கானா?

மூவரும் கீழே விரைந்து சென்றனர். நீலகண்டன், ஹாலில் அமர்ந்திருந்தான். இயல், அவனை சாமி எனக் கூப்பிடுவதற்குக் காரணமாக எந்த பெரிய அடையாளமும் அவனிடம் காணப்படவில்லை. .பேன்ட், ஷர்ட் அணிந்திருந்தான். ஸ்படிகமாலை கொஞ்சமாக காலருக்கடியிலிருந்து எட்டிப் பார்த்தது. அவ்வளவுதான்.

அவர்களுக்கு அன்றைய மாலைப்பொழுது முழுவதும் நீலகண்டனுடன் அளவளாவுவதில் மகிழ்ச்சியுடன் கழிந்தது. இரவு சாப்பாட்டுக்குப் பிறகு, சந்தானமும், நீலகண்டனும் காற்றாட உலவிவிட்டு வர அருகிலிருந்த தென்னந் தோப்பிற்குள் நடந்தனர். முழுநிலா பகலைப் போல காய்ந்துகொண்டிருத்தது. தோப்பின் நடுவில் ஒரே ஒரு மாமரம் தன் அடர்த்தியான கிளைகளைப் பரப்பிக் கொண்டு நிலவொளியை மறைத்துக்கொண்டிருந்தது. அவர்கள் இருவரும் அந்த மரத்தடியில், இருளின் மடியில் அமர்ந்துகொண்டனர்.

“சொல் அப்புறம்” சந்தானம், உரையாடலை ஆரம்பித்துவைத்தான்.

“பாபனாசம் மலைக்குப் போனேன். சித்திரை பௌர்ணமி சந்தன மழையில் நனைந்தேன். திரும்ப கீழே இறங்கி வரும் போதுதான், மலையாண்டி; அடிவாரத்தில் டீக்கடையில் டீ குடித்துக்கொண்டு இருந்ததைக் கவனித்தேன். அருகில் சென்று வணங்கினேன். அவருடைய இடுப்பிலிருந்த சுருக்குப் பையைத் திறந்து கொஞ்சம் விபூதியை எடுத்தார்.. அருகில் கிடந்த கசங்கிய கிழிந்த காகிதத்தை எடுத்து. அதில் அந்த விபூதியை வைத்து மடித்து எனக்கு கொடுத்தார். அதன்பிறகு, “அதில் சொல்லி இருகிறபடி நட” என்று கூறி விட்டு வேகமாக அவ்விடம் விட்டு நகர்ந்துவிட்டார். எதில் சொல்லியிருக்கிறபடி, என்ன ஏது என்று எனக்கு ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றேன். அந்த கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பையன் இதுகாறும் எங்களை கவனித்த வண்ணம் இருந்தான். அவன் என்னை நெருங்கி வந்து “ஒன்றும் புரியவில்லையா சார். அந்த காகிதத்தில் என்ன இருக்குன்னு படித்துதான் பாருங்களேன்.” விபூதி இருந்த காகிதத்தை சுட்டிக்காட்டினான். அது ஏதோ பழைய கிழிந்த துண்டுகாகிதம். கசங்கி அழுக்கடைந்து போயிருக்கு. அதையா படிக்கச் சொல்கிறாய்?. அவசரமாக விபூதியை கையில் கொட்டி நெற்றியில் அணிந்துகொண்டு காகிதத்தின் சுருக்கங்களை நீவிவிட்டு படிக்கலானேன்.”

“குழந்தையின் அம்மா என்று நினைத்து தவறுதலாக அனாதைப் பிணத்தின் உடலை தானம் செய்த இருவர்.குழந்தையின் தாய் உயிருடன் இருக்கிறார். தன் குழந்தையைத்தேடிக்கொண்டு இருக்கிறார். மேலும் அந்தப் பெண் குழந்தையின் அப்பா நீலகண்டன் என்று மருத்துவக் குறிப்பில் இருந்தாலும் அதனை மறுக்கும் தாய். ஏழு வருடங்களுக்கு முன் கணவனின் குடும்பத்தாரால் கைவிடப்பட்டு கொலை மிரட்டலால் பயந்து நிறை மாதகர்ப்பிணியாக ஒளிந்து பிரயாணிக்கையில் பிரசவம் ஆனதாகவும் செய்தி. அந்த பெண்ணை கீழ்க்காணும் விலாசத்தில் சந்திக்கவும்” விலாசம் குறிஞ்சிக்காடு என்று இருந்தது.

“என்ன சந்தானம்? பேசாமல் இருக்கிறாய்? அப்படியே செய்துவிடலாம். சித்தரின் கட்டளையை மீற முடியாது.

இந்த ஏழு வருடங்களாக மலையாண்டி எங்கே போயிருந்தார்? கூறிஞ்சிக்காடு எங்கேன்னு தேடிகிட்டு போகனுமா? அனாதைப் பிணத்தையா நாம் இந்த குழந்தையின்; இயலின்; தாய் என்று நினைத்தோம்? இயல் என்னுடைய உயிர். என் உயிரைக் கேட்கிறாயே. கொடுக்கமுடியாது. இது என் முடிவான வார்த்தை. அன்று அவளுக்காக நான் பட்ட அவமானங்களையும், துன்பங்களையும் நீ அறிவாய். இன்று இயல் அனைத்திற்கும் மருந்தாக இருக்கிறாள். வேறு பேச்சு இருந்தால் பேசு. இல்லாவிட்டால் சும்மா இரு. குழந்தையை அதன் அம்மாவிடம் கொடு என்றேல்லாம் இந்த காகிதத்தில் இல்லையே.

மௌனம், அவர்களை ஏழு வருடங்களுக்கு முன் இட்டுச் சென்றது. சந்தானமும், நீலகண்டனும் நண்பர்கள். ஒரே பள்ளியில் பணியாற்றிவந்த ஆசிரியர்கள். ஒவ்வொரு விடுமுறைக்கும் கோயில்கள், மலைப்பிரதேசங்கள் என சுற்றித் திரிந்தனர். பக்தி மார்கத்தில் சென்றபோதும், அவர்களுக்கு விளையாட்டுத்தனமும் துணிச்சலும் மிக அதிகமாக இருந்தது. சித்தர்கள் பற்றி அவர்களுக்கு மிக அதிகமான ஈடுபாடும், ஜீவசமாதிகளுக்கு சென்று வழிபடும் ஆர்வமும் மிகுதியாக இருந்தது.

உள்ளூர் கோவிலில் அவர்களுக்கு உண்டான அனுபவம் புதுமை.. ஒரு நாள் சிவன் கோவில் சென்று பக்தியுடன் சாமி கும்பிட்டுவிட்டு பிறகு வெளிப் ப்ரகாரத்தில் உட்கார்ந்து அரட்டை அடித்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிவயோகி ஒருவர் ப்ரகாரம் சுற்றி வந்துகொண்டிருந்தார்.. அவரைக் கவனித்துக் கொண்டிருந்த நீலகண்டன், “நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புஷ்பம் சாற்றியே சுற்றிவந்து முணமுணக்கும்…… “ என்ற சிவ வாக்கியர் பாடலை அவர் காதில் விழ சத்தமாக பாடவே, அவர் நின்று நிதானித்துவிட்டு பிறகு, அவர்கள் அருகே வந்தமர்ந்தார். நீலகண்டன்தானே உன் பெயர்? நீ சிவவாக்கியர் பாடலைப் பாடினதால், என் ஆசீர்வதங்கள் உனக்கும், உன் நண்பன் சந்தானத்திற்கும் எப்பொழுதும் உண்டு. திருவண்ணாமலைக்குப் போய்வாருங்கள். சுபிட்ஷம் ஏற்படும் என சொல்லிவிட்டு எழுந்தார். ஆச்சரியத்தில் இருவரும் வாயடைத்துப் போயிருக்க , அவர் வேஷ்டியின் மணலைத் தட்டிவிட்டுக் கொண்டு போயே போய்விட்டார்.

அடுத்த நாள் பௌர்ணமி. திருவண்ணாமலைக்குப் போய்வர தீர்மானம் செய்தார்கள்.

பௌர்ணமி தினமாதலால் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. மக்கள். இறைவனின் திருநாமத்தை உரக்க ஜபித்துக்கொண்டு கும்பல் கும்பலாக சென்று கொண்டிருந்தனர் .ஒருசிலர் நடைபாதைக் கடைகளில் பொருட்கள் வாங்கிக்கொண்டும் ஆங்காங்கே தின்பண்டகளை வாங்கி புசித்துக்கொண்டும் கூட்டத்தின் ஊடே முன்னேறிச் சென்றனர்.

இருவரும் சேஷாத்ரி ஸ்வாமிகளின் ஆசிரமத்தை அடைந்தனர். சுவாமிகளின் சமாதி அருகே துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவர், இருவரையும் அருகில் வரும்படி சைகை செய்தார். அருகில் சென்றபோது. “நிறைமாத கர்ப்பிணிக்கு உங்கள் உதவி தேவைப்படுகிறது. சீக்கிரமாக நடங்கள்”. என சொல்லியவாறு விபூதி கொடுத்தனுப்பினார். அவர்கள் விரைவாக ப்ரகார சுற்றைத் தொடர்ந்தனர். அதுகாறும் இறைவனை நினைத்தபடி மெள்ளமாக நடந்தவர்கள்; இப்பொழுது வேகமாக நடந்தனர். கர்ப்பிணிப் பெண் எங்காகிலும் கண்களில் தட்டுப்படுகிறாளா என சுற்றுப்புறத்தைக் கவனித்துக்கொண்டே நடந்தார்கள்.. சிறிது தூரத்திலேயே சாலையின் பக்கவாட்டில் ஒரு பெண் இடுப்பைப் பிடித்துக்கொண்டு, அம்மா! அம்மா! என கதறிய வண்ணம் இருந்ததைப் பார்த்து, அவ்வழியே சென்ற ஆட்டோவை நிறுத்தி, அவளை ஏற்றிக் கொண்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அது ஒரு அரசாங்க மருத்துவமனை. டாக்டர்களுக்கோ, மருந்துக்கோ அதிகம் செலவு செய்யத் தேவை இல்லை. அது இலவசங்களை; இல்லாத மக்களுக்காக தாராளமாக சலுகை காட்டும் மருத்துவமனை. இல்லாத மக்கள் இந்தியாவில் அதிகம் போலும். அங்கும் மக்கள் கூட்டம்.

அவளிருந்த நிலைமையைப் பார்த்த மருத்துவர்; அவளை உடனேயே பிரசவ அறைக்கு அனுப்பினார். அழைத்துச் செல்வதற்கு முன் நீலகண்டன், அவளிடம் உன் பெயர் என்னம்மா? எனக் கேட்டுவைத்தான். அவள் கண்ணைத் திறக்க அரும்பாடுபட்டு கொஞ்சமாகக் கண்ணைத்திறந்தாள். திக்கித்திணறி “அபு அபு அன் அன்” என்று சொல்லிவிட்டு கண்ணை மூடிக்கொண்டாள். ஓ “அன்பு” என்று சொல்கிறார்கள் எனபது நீலகண்டனின் புரிதலாக இருந்தது.

அவர்கள் இருவரும் மிகுந்த கவலையுடன் பிரசவ அறைக்கு வெளியில் காத்திருந்தனர். இங்குமங்கும் செவிலியர்கள் வேகமாக இயங்கிக் கொண்டிருந்தனர். ஒரு பெண் காலில் கட்டுடன் அங்குள்ள தூணில் சாய்ந்தபடி உட்கார்ந்திருந்தாள். அவளைப் பார்த்து, “ஆயா! இன்னைக்கு என்ன லீவா?” போகிற போக்கில் ஒரு செவிலி, கேள்வி கேட்டுவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் ஒடினாள்.

குழந்தையின் அழுகுரல் உள்ளே ஒலித்தது. கொஞ்ச நேரத்தில் செவிலி; சின்னஞ்சிறு பாப்பாவைத் தூக்கிவந்து இவர்களிடம் காண்பித்தாள். “பெண் குழந்தை சார். குளிப்பாட்டியாச்சு. பிடியுங்கள். அம்மா சீரியசா இருக்காங்க.” என்றாள்.. நீலகண்டன் தயங்கி நிற்க, சந்தானம் வாங்கிக் கொண்டான். செவிலியை அறைக்குள் இருந்த மருத்துவர் அழைக்கவே அவள் அவசரமாக உள்ளே ஓடினாள். மருத்துவமனையின் வழக்கமான பரிசாக கொடுக்கப்பட்ட சின்னசட்டையை குழந்தை அணிந்திருந்தது. மருத்துவமனையின் சின்ன துண்டு சுற்றப்பட்டிருந்தது.

கொஞ்ச நேரத்திலேயே மற்றொரு செவிலி; பிணம் கிடத்தப்பட்ட ஸ்டச்சரைத் தள்ளிக் கொண்டு வந்து இவர்களிடம் சாரி சார். இறந்து விட்டார்கள். அலுவலகம் சென்று பதிவு பண்ணிவிட்டு எடுத்துச் செல்லுங்கள். உங்கள் கூடவே இந்த மருத்துவ பணியாளர் வருவார். திகைத்த இருவரும், சித்தர் துணை இருக்கு. இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றுவோம் என்றபடி அலுவலகத்திற்குச் சென்றார்கள். அப்பொழுது அங்கே அமர்ந்திருந்த, காலில் கட்டு போட்டிருந்த பெண்மணி ஐயா! ஐயா! எனக் கூப்பிட்டுக்கொண்டு, நொண்டிக்கொண்டே பின்தொடர்ந்து வந்தாள். “எங்கே போனாலும் இவர்களது தொல்லைதான்” என முணுமுணுத்துக் கொண்டே வேகமாக அலுவலகம் சென்று இறப்பைப் பதிவு செய்துவிட்டு, குழந்தையின் பிறப்பையும் பதிவு செய்தார்கள். குழந்தையின் அம்மாவின் பெயரை “அன்பு”, என பதிவிட்டவர்கள், குழந்தையின் அப்பா என்ற இடத்தில் நீலகண்டன் என தவறுதலாக நீலகண்டனே எழுதிவிட்டு, “சரி என்ன இப்ப” என்றும் சொல்லிக்கொண்டான். குழந்தைக்கு பெயர், “இயல்”என பதிவிட்டார்கள். சந்தானம், இயலை தூக்கிக்கொண்டிருந்ததால் நீலகண்டனே எல்லாப் பதிவுகளையும் செய்தான்.

பிணத்தை எடுத்துப் போங்கள் என்றபோது திகைத்தார்கள், இறந்துபோனவர் தன் உடலை தானம் செய்துவிடும்படி சொல்லி இருக்கிறார்கள். என சமயோசிதமாக புளுகி அதற்கான படிவங்களைப் பூர்த்தி செய்து கொடுத்துவிட்டு மருத்துவமனையை விட்டு வெளியேற இருந்த போது, அதே பெண்மணி நொண்டியவாறு “என்ன சார்? உங்களை எங்கெல்லாம் தேடுவது?” என்றபடி எதிர்ப்பட்டாள். நீலகண்டன், தன் சட்டைப் பையிலிருந்து ஒரு ஐம்பது ரூபாயை எடுத்து அவள் கையில் திணித்தார். பிறகு அவ்விருவரும் வெகு வேகமாக அவ்விடம் விட்டு அகன்றனர். அந்தப் பெண்மணியும் சார்! சார்! என்றழைத்தவண்ணம் பின் தொடர்ந்தாள். திரும்பிப்பார்க்காமல்; அழுதுகொண்டே இருந்த இயலைத் தூக்கிக்கொண்டு ஓடாத குறையாக சேஷாத்திரி ஆசிரமத்தை அடைந்தார்கள்.

“கர்ப்பிணி பெண்ணுக்கு உங்கள் உதவி தேவைப்படுகிறது” எனச் சொன்ன அந்த துறவியை அங்கே காணோம். இயல், அழுதுகொண்டே இருந்தது. இதைப் பார்த்துக்கொண்டு அங்கு நின்றிருந்த மூதாட்டி, இயலைத் தூக்கிக் கொண்டார்கள். அருகிலிருந்த டீக் கடையிலிருந்து சிறிது காய்ச்சிய பாலை வாங்கி வரச் சொன்னார்கள். மருந்துக் கடையிலிருந்து பஞ்சு வாங்கிவரச் சொல்லி பாலைப் ,பஞ்சில் நனைத்து சிறிது சிறிதாக குழந்தைக்குப் புகட்டினார்கள்.

அதுவரை கொஞ்சம் தள்ளி நின்ற இருவரும் விவாதங்கள், மற்றும் தீவீர ஆலோசனைகளுக்குப் பிறகு, பாட்டியிடம் சென்று கெஞ்சி தங்களுடன் வருமாறு கோரிக்கை விடுத்தனர்.. பாட்டியும் பிறந்த உடனேயே தாயைப் பறிகொடுத்திருந்த குழந்தைக்காக மனம் இரங்கி, மாத சம்பளமாக கணிசமான தொகையையும் பேசிக்கொண்டு சம்மதம் தெரிவித்தார்கள். பாட்டி கேட்டுக் கொண்டபடி குழந்தைக்கு வேண்டிய பால் பவுடர், துணிமணிகள் வாங்கிக் கொண்டு தங்கள் ஊரை அடைந்தனர்.

பஸ்ஸை விட்டு இறங்கிய அவர்கள், பாட்டியை உட்காரவைத்துவிட்டு ஆட்டோ பிடிப்பதற்காக சென்றனர். குழந்தையுடனும், அவர்கள் எல்லோருடைய பெட்டிகளுடனும் பாட்டி காத்திருந்த வேளையில் அந்த ஊர்க்காரர்கள் பாட்டியை நெருங்கினர். அதில் ஒருவர், எங்கே சந்தானமும், நீலகண்டனும் அவசரமாகப் போகிறார்கள்?. என கேள்வி கேட்க ஆரம்பித்தார் .

பாட்டி “ஆட்டோ பிடிக்க” என்று மட்டும் சொல்லிவிட்டு சும்மா இருந்திருக்காலாம். “பாவம் சந்தானம். பிரசவத்தில் சந்தானத்தின் மனைவி இறந்து போய்விட்டார்கள். கைப்பிள்ளையை வைத்துக்கொண்டு திண்டாடிக் கொண்டிருந்ததால், உதவி செய்வதற்காக நான் வந்திருக்கிறேன்.” என தானாக ஊகித்துக்கொண்ட விவரத்தை சொன்னார்கள். பாட்டிக்கு நடந்தனவற்றை சொல்லவேண்டும் என நண்பர்களுக்குத் தெரியாமல்போனது பரிதாபம். ஊர் முழுதும் இச்செய்தி பரவியதுடன், சந்தானத்தின் பெற்றோருக்கும் இந்த செய்தி போனது. ஆட்டோவிலிருந்து மூவரும் குழந்தை இயலுடன் இறங்கியதும், சந்தானத்தின் வீட்டு வாசல் கதவு அடித்து சாத்தப்பட்டது. “இங்கு உனக்கு இடமில்லை. போ வெளியே”. என்று தந்தையும், தாயுமே சொல்ல, சந்தானம் இடிந்து போனான். எந்த ஒரு விளக்கமும் அவன் சொல்லத் தயாரில்லை. என்ன ஏது என்ற கேள்விக்கே இடமில்லை என்றபோது விளக்கம் மட்டும் சொல்ல அவன் விருப்பப்படவில்லை. அடுத்து ஒரு பஸ் நிறுத்தம் தள்ளி இருந்த நீலகண்டன், வீட்டிற்குப் போன போதும் ஏறக்குறைய இதே வரவேற்புதான்.

கொஞ்சம் வேறுமாதிரி எனச் சொல்லலாம்.. இந்த மாதிரி நட்பு வேண்டாம் என்று தலையில் அடித்துக்கொண்டாலும் நீ கேட்கப் போவதில்லை என நீலகண்டனுக்கு அர்ச்சனை நடந்தது. எந்த விளக்கமும் யாரிடமும் சொல்லக்கூடது என சந்தானம் நீலகண்டனிடம் மிகவும் வற்புறுத்தி கேட்டுக்கொண்டான். அங்கிருந்தும் வெளியேறி இப்பொழுது இருக்கும் வாடகை வீட்டில் சந்தானம், பாட்டியுடனும், இயலுடனும் குடிபுகுந்தான்.

சந்தானத்தைக் காதலித்த ராதையும் அவனைக் கைவிட்டுவிட்டாள். அவன்மேல் ஒருதலைக் காதல் கொண்டிருந்த மல்லிகா, இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டாள். அவளுடைய அப்பா, மகளின் பிடிவாதத்தால்,அவர்களுக்கு மணம் முடித்து வைத்தார்.

சந்தானம், மல்லிகா இல்லறம் இனிமையாகவே இருந்தது. என்றாலும், இயல் பற்றிய எந்த கேள்விகளுக்கும் சந்தானம் மனைவியிடம் பதில் கூற முடியாமல் இருந்தான். காரணம் அந்த அளவுக்கு அவன் மனம் புண் பட்டிருந்தது. மல்லிகாவும் தொடர்ந்து கேள்விகள் கேட்பதை விட்டு விட்டு இயலை தன் மகள் போலவே வளர்த்து வந்தாள்.

மல்லிகாவுக்கு குழந்தை பிறக்கவில்லை. மருத்துவர்களிடம் காண்பித்தபோது அவளுக்கு கர்ப்ப பையில் பிரச்சனையின் காரணமாக எப்போதுமே குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என கூறிவிட்டார்கள். இயலின் பள்ளி சான்றிதழ்களில் அவள் அப்பா பெயர் நீலகண்டன் என்று இருக்கிறதே எனக் கேட்ட மல்லிகாவிற்கு அவனிடம் பதில் இல்லை. என்ன பதிலை சொல்வது? அவனுக்கே தெரியாத போது! வழக்கம் போல மல்லிகா கேள்விகள் கேட்பதை அடியோடு விட்டு விட்டாள். அவள்,இயல் மீது தன் உயிரையே வைத்திருந்தாள். சந்தானமும் அவ்வாறே.

ராதைக்கு ஏதோ தீராத வியாதி வந்து மருத்துவத்திற்கு கட்டுப்படாமல் இறந்துவிட்ட செய்தி அறிந்து சந்தானம் துடித்துதான் போனான். நீலகண்டனுக்கும் எதனாலோ திருமணம் தள்ளிப் போய்க்கொண்டிருந்தது.

ஏழு வருடங்கள் கடந்துவந்த பாதையின் சுவடுகளின் நீங்காத நினைவுகளிலிருந்து மீண்டு; நிகழ்காலத்திற்கு வந்தும் நண்பர்களின் மௌனம் தொடர்ந்தது. எதுவும் பேசாமலேயே எழுந்து கொண்டு வீட்டை நோக்கி நடந்தார்கள்.

அடுத்த நாள், நீலகண்டன், தன் வீட்டிற்குப் போக புறப்பட்டான். சந்தானமும் வழி அனுப்ப கூடவே சென்றான். வழியில் சந்தானம், அவர்கள் பட்ட சிரமங்களை நினைவு படுத்தினான்.

“நாம் முதன்முதலில் நம் ஊர் கோவிலில் பார்த்த சிவயோகி நம்மை திருவண்ணாமலைக்குப் போகும்படி சொன்னார். சித்தர்கள் மேல் நாம் கொண்டிருந்த தீவீர ஈர்ப்பு காரணமாக அவர் சொன்னபடி அங்கு போனோம். அங்கும் ஒரு சித்தர் மாதிரி தோற்றம் கொண்ட ஒருவர்; கர்ப்பிணி பெண்ணிற்கு உதவி செய்யச் சொன்னார்.. அதன்படி செய்து பெரிய இக்கட்டுகளில் மாட்டிக்கொண்டொம். நான் பெற்றோரைப் பிரிந்தேன் ராதை என்னை வெறுத்து ஒதுக்கினாள். இப்ப மலையாண்டி என் உயிரைக் கேட்கிறார்.. நடக்காது. சித்தர்களை இனி நம்பப் போவதில்லை. அவர்கள் என் விஷயத்தில் இனிமேல் எதுவும் செய்துவிட முடியாது.”

நீலகண்டன் திகைத்துப்போனான். “இப்படி ஒரு எதிர்மறையான கண்ணோட்டம் உனக்கு இருக்கா? நன்றாக சிந்தித்துப் பார். ராதைக்கு அல்பாயுசு. திருமணத்திற்கு முன்பே இறந்து போவாள் என்று சித்தர்கள் கணக்கு போட்டிருப்பார்கள். மல்லிகாவுக்கு குழந்தைப் பேறு இல்லை. அதனால், உனக்கு இயல் பாப்பாவை பரிசளித்திருகிறார்கள்.”

“எந்த கணக்கைப் போட்டு; பரிசளித்ததைப் பிடுங்கிக் கொள்ளப் பார்க்கிறார்கள்? சித்தர்கள் வெறும் பித்தர்கள்.” சந்தானம் சொல்லி வாய்மூடவில்லை. பித்துகொண்ட ஒருவன் அழுக்கு உடைகளுடன் பயங்கரமாக சிரித்தபடி இவர்களைக் கடந்து சென்றான். “சரி. நான் குறிஞ்சிக்காடு போய்ப் பார்த்துவிட்டு வருவதாக இருக்கிறேன். நீ வரமாட்டாய் என்று நினைக்கிறேன்.” பஸ் வந்துவிடவே நீலகண்டன் விடை பெற்றான்.

நீலகண்டன், மறுநாளே குறிஞ்சிக்காட்டை சென்றடைந்தான். எதிர்ப்பட்ட ஒருவரிடம் விலாசம் சொல்லி விசாரித்தான். “ஓ. அப்சர் அன்வர் டீச்சரா? அதோ அந்த மாடி வீடுதான்.” என கைகாட்டினார். நீலகண்டனுக்கு திருவண்ணாமலை மருத்துவமனையில்,”உன் பெயர் என்ன” என அந்த கர்ப்பிணிப் பெண்ணிடம் கேட்டதும் ,அவள், அப் அப் என்றும் அன் அன் என்றும் திக்கித்திணறி பேசமுடியாமல் கண்ணை மூடிக்கொண்டது நினைவுக்கு வந்தது.

நீலகண்டன்; அந்த வீட்டின் கதவைத் தட்டிவிட்டுக் காத்திருந்தான். அழகே உருவான ஒரு பெண், கதவைக் கொஞ்சமாகத் திறந்துகொண்டு “யார் நீங்கள்?” எனக் கேட்க, நீலகண்டன், எப்படி ஆரம்பிப்பது, என்ன சொல்வது, ஒன்றும் புரிபடாமல், திருவண்ணாமலையில்… என ஆரம்பித்தபோது, அந்த பெண் கதவை விரியத் திறந்து, வாருங்கள். வாருங்கள். உள்ளே வந்து உட்காருங்கள். என உபசரித்தாள். “நாகம்மா! யார் வந்திருக்காங்கன்னு வந்து பாருங்க. அப்படியே கொஞ்சம் கூல்ட்ரிங்க் கொண்டு வாங்க”

உள்ளிருந்து வந்த பெண்மணியைப் பார்த்ததும் நீலகண்டனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அன்று மருத்துவமனையி.ல் கால்கட்டுடன் தங்களைத் துரத்திக்கொண்டு வந்த பெண் என்று அவனுக்குப் புரிந்தது. தவறாக நினைத்து ஐம்பது ரூபாய்கள் கொடுத்துவிட்டு அங்கிருந்து ஒட்டமாக ஒடியதை நினைத்து வெட்கப்பட்டான். நாகம்மா, அப்பொழுது அந்த மருத்துவமனையில் ஆயாவாக பணிபுரிந்தார்கள். சந்தானமும், நீலகண்டனும் அறியாமல் செய்துகொண்டிருந்த தவறுகளை (குழந்தையின் அம்மா உயிருடன் இருக்க அனாதைப் பிணத்தை குழந்தை பெற்றவள் என அவர்கள் தவறாக நினைததை } அவர்களுக்கு சொல்லவே அவர்கள் பின்னால் ஓடிக்கொண்டிருந்தார்கள். நாகம்மா திரும்பவந்து அப்சரிடம், நடந்த விவரங்களை சொன்னதால், குழந்தை உயிருடன் இருப்பது அறிந்து அப்சர் நிம்மதி அடைந்தாள். சுந்தரம் அனுப்பிய கொலைகாரகும்பல், கர்ப்பிணி இறந்துவிட்டாள் என்ற செய்தியை அவரிடம் சொல்லி, குழந்தையை யாரோ இருவர் தூக்கிச் சென்றுவிட்டனர். என்றும் சொல்லவே, சுந்தரம் அத்துடன் வாளாய் இருந்துவிட்டான்.

வாப்பா! வாப்பா! என அப்சர் அழைக்க, வராண்டாவின் கடைக் கோடியிலிருந்த அறையிலிருந்து ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் வெளிப்பட்டார். பின்னாலேயே ஒரு நடுத்தர வயது பெண்ணும் வந்தார். “நீலகண்டன் நீங்கள்தானே?” எடுத்தவுடனேயே அவருடைய முதல் கேள்வி இதுவாகத்தான் இருந்தது.

“ஆமாம். என் பெயர் உங்களுக்கு எப்படி?”

“பள்ளிவாசலில் ஃபக்கீர் சொன்னார்.”

மனிதர்களுக்குள் மேம்பட்ட ஆத்மாக்கள் ஃபக்கீர் என்றோ சித்தர் என்றோ அறியப்படுவார்கள். அவர்களுக்குள் வித்யாசம் ஏதும் இல்லை என நீலகண்டன் நினைத்தான்.

அதன் பிறகு அவர்களுக்குள் நடந்த சம்பாஷணையில், அவன் தெரிந்துகொண்ட அனைத்தும் பெரும் புராண இதிகாசங்களைத் தோற்கடிக்கும் வகையில் இருந்தது. அப்சர், சம்பத் இருவரின் காதலுக்கும் இருவீட்டாரின் எதிர்ப்பும் இருக்கவே, அவர்கள் பதிவுத் திருமணம் செய்துகொண்டார்கள். அதனை மறைத்து, காலம் கருதி அவரவர் வீட்டிலேயே இருந்துகொண்டனர். காலத்தை எதிர்கொண்டு காத்திருந்தனர். அப்சரின் வாப்பா அன்வர், விஷயம் தெரிந்ததும் கோபப்பட்டாலும், ஒரே மகள் என்பதால், அவளை மன்னித்து அவர்களுடைய காதலை ஏற்றுக்கொண்டார்.

சம்பத்தின் வீட்டிலோ விஷயமே விசித்திரமாக இருந்தது. சம்பத்தின் குடும்பத்தில் அவனுடைய தாய்மாமா, சுந்தரத்தின் தலையீடு அதிகமாக இருந்தது. அவன் அம்மாவுக்கு தன் தம்பி மீது பாசம் அதிகம். புகுந்த வீட்டிற்கு வந்தவுடனேயே தன் தம்பியை அவளுடனேயே இருக்கும்படி வரவழைத்துக்கொண்டாள். கல்யாணம் ஆன புதிதில் சம்பத்தின் அப்பாவும், தன் மனைவியின் விருப்பத்தை தன்னுடைய விருப்பமாகவே எண்ணினார். அதன் விளைவு பிறவியிலேயே மூர்கனான சுந்தரம், மேலும் முரடனானான். அவனுக்கு மணம் செய்துவிட்டால் சரியாகி விடுவான் என உறவுக்கார பெண்ணான சுசீலாவை மணமுடித்தார்கள். அவளோ அவன் மூர்க்க குணத்திற்கு மேலும் தூபம் போடுபவளாக இருந்தாள்.

சுசீலா; தனக்கு பெண்குழந்தை பிறந்ததுமே சம்பத்திற்குத்தான் என சொல்லி சொல்லி ஆனந்தப்பட்டுக் கொண்டாள். சம்பத்திற்கு வரப்போகும் சம்பத்துதான் அவளது நோக்கமாக இருந்தது. அந்த எண்ணம் வலுத்த போது, அவள் அந்த வீட்டின் எஜமானியாகவே தன்னை பாவித்துக் கொண்டாள். வீட்டின் எல்லா வேலைகளையும் தன் மேற்பார்வையில் வைத்துக் கொண்டாள். சம்பத்தின் அம்மாவோ வேலை பளு குறைந்தது என எண்ணி அது குறித்து வாளாயிருந்துவிட்டாள்.

சம்பதின் அப்பா வேலாயுதம், தன் வணிக அலுவல்களில் மூழ்கி பணத்தைக் குவித்தவண்ணம் இருந்தார். சம்பத் படிப்பில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தான். அவன் அப்சர் மேல் காதல் கொண்டு பதிவுத்திருமணமும் செய்துகொண்டது குறித்து தன் அம்மாவிடம் பேசப் போனபோதுதான், அவனுக்கு நிலவரம் புரிந்தது. மாமாதான் நம் குடும்பத்தையே கவனித்துக் கொள்கிறார். அவரிடம் கேட்டு சொல்கிறேன் என்ற அம்மாவை, அவனுடைய குடும்பத்தின் மஹாராணியை; மாமா எப்படி ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறார் என்பது அவனுக்குப் புரிந்துபோனது. அம்மாவுக்கு புரியவே இல்லையே என அவன் ஆதங்கப்பட்டான். மாமாவின் லீலைகளை சம்பத் ஓரளவு அறிந்தே இருந்தான். வேலைக்காரர்களை அடிப்பது, திட்டுவது மட்டுமில்லாமல் வெளி இடங்களில் சண்டை, சச்சரவுகள் வேறு. சம்பத் இப்பொழுது அவரது நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தான்.

ஒருமுறை வயதானவர் ஒருவர் கண்ணீர் விட்டபடி மாமாவைப் பார்க்க வந்தார். அவருடைய மகன்; சுந்தரத்தை சந்திக்க குடோனுக்கு வந்தவன் பிறகு காணாமல் போனான். அதுபற்றி கேட்க வந்தவரை சுந்தரம் தன் கௌரவத்திற்கு பங்கம் ஏற்படும் வகையில் நடந்தால், போலீசில் புகார், செய்து தர்ம அடி கொடுக்கச்செய்வேன் என மிரட்டி விரட்டியடித்தார். பிறகு பதட்டத்துடன் யாருக்கோ போன் செய்து, பெரியவர் வந்துசென்ற விஷயத்தை சொல்லிக் கொண்டிருந்தார். சம்பத் ஆடிப்போனான். தங்கள் வீட்டில் நடப்பது ஒன்றையுமே அப்பாவோ அம்மாவோ கண்டுகொள்ளாது இருப்பது அவனுக்கு அதிருப்தியை தந்தது.

இவ்வாறு இருக்கையில் மாமா அவனை சந்திக்க அவன் அறைக்கே வருகை தந்தார். நீ யாரையோ கல்யாணம் செய்து கொண்டாய் என்று அம்மாவிடம் சொன்னாயாம். பெண் யார்? பெயர் என்ன? என்று விசாரணையின் பெயரில் போருக்கான கேள்விக் கணைகளைத் தொடுத்தார். சம்பத் ஜாக்கிரதையானான். “அம்மாவிடமே சொல்லிவிடுகிறேன் மாமா.”

“அம்மா என்னடா? ஆட்டுக்குட்டி? சொல் இப்பவே.”

அப்பொழுது ஜன்னல் வழியாக தற்செயலாக அவனுடைய பார்வை சென்றது. சாலையில் மைதிலி சென்று கொண்டிருதாள். மைதிலிதான் மாமா என புளுகி வைத்தான். அப்படி சொன்னதன் தீவீரத்தை அடுத்த நாளே உணர்ந்துகொண்டான். அப்சர் என்று சொன்னால் நிச்சயம் சம்மதம் கிடைக்காதோ என சந்தேகத்தின் பெயரில்தான் அப்படி சொன்னான். அடுத்த நாள் மைதிலி ஒரு கார் விபத்தில் மரணம் அடைந்த செய்தியினால், அரண்டு போனான்.

அப்சரும், இதையெல்லாம் கேட்டபோது பயந்தாள். அவள் பெற்றோர் சம்பத் தங்கள் வீட்டிற்கு வந்துபோவதை ஆட்ஷேபிக்கவில்லை. விளைவு அப்சர் அடுத்த மாதத்திலேயே கர்ப்பவதி ஆனாள்.

சம்பத், தன் அப்பாவின் அலுவலகத்திற்குப் போய்வர ஆரம்பித்தான். வேலாயுதம், மிகவும் மகிழ்ந்து போனார். அவர் சிறந்த நிர்வாகியானதால் எல்லாவற்றையும் திறம்பட நடத்திக்கொண்டிருந்தார். கணக்குவழக்குகளைப் நேர்த்தியாக வைத்திருந்தார். வீட்டில்தான் மாமாவின் ஆட்சி. வீட்டிற்குப் போகும் பணத்தில் மட்டுமே மாமா கைவைக்க முடிந்தது. இதனை ஒருநாள் அப்பாவிடம் எடுத்துச் சொன்ன போது அது அப்பாவுக்கும் தெரிந்திருந்தது என்பது ஆச்சரியமான விஷயமாக இருந்தது. ஆக, அப்பா, மாமாவுக்கு மிகவும் பயப்படுகிறார் என்பது அவனுக்கு விளங்கியது. தன் மண வாழ்க்கையைப் பற்றியும் அப்பாவிடம் சீக்கிரமாக எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஒருநாள் அப்பாவிடம் தன் மனைவியைப் பற்றித் தெரிவிக்கலானான்.

அவள் நிறைமாத கர்ப்பிணி என்றும் திருவண்ணாமலைக்குப் போயிருப்பதாகவும் தெரிவித்துக் கொண்டிருந்த போது அறைக்கு வெளியே சத்தம் கேட்டது. அங்கிருந்த அலங்காரக் கோப்பை; சின்ன முக்காலியிலிருந்து கீழே விழும் சப்தம். மேற்கொண்டு பேசவேண்டாம் என செய்கையில் தெரிவித்த அப்பாவின் கண்களில் பீதி தெரிந்தது. “இப்பொழுது பெயர், ஊர், விலாசம் ஒன்றும் சொல்லாதே.” என எழுதிக் காண்பித்துவிட்டு அந்த காகிதத்தைக் கிழித்து குப்பையில் போட்டுவிட்டார்.

அடுத்த நாளில் சம்பத் உயிருடன் இல்லை. கார் விபத்து என சொன்னார்கள். சோகம் தாக்கியபோது வேலாயுதம் விழித்துக்கொண்டார். மனைவியிடம் புரியவைத்தார். சம்பத்தின் அம்மா தன் கணவனுக்கும் ஆபத்து நேர்ந்துவிடுமோ என அஞ்சி தன் தம்பியை குடும்பத்தோடு வீட்டைவிட்டு கட்டாயப்படுத்தி அனுப்பிவிட்டார்கள்.

இயல் தன் வகுப்பில் முதல் மதிப்பெண்கள் பெறும் மாணவியாக இருந்தாள். புதிய இளம் ஆசிரியை இசை; அந்த வகுப்பிற்குப் பாடம் எடுக்க வந்தாள். அவளுக்கு இயலை மிகவும் பிடித்துப் போய்விட்டது. இயல் சந்தானத்திடமும், மல்லிகாவிடமும் தன் புது ஆசிரியை குறித்து வானளாவப் புகழ்ந்து கொண்டிருப்பாள்.

சந்தானமும் மல்லிகாவும் இயலின் ஆசிரியையை நேரில் சென்று தங்கள் மகிழ்சியைத் தெரிவித்துக் கொண்டனர். அவர்களுக்கும் இசையைப் பிடித்துப் போய்விட அவர்களுக்குள் நட்பு வளர்ந்து. நீலகண்டனுக்கு இசையை மணம் செய்துவைத்தால் என்ன என சந்தானம் நினைக்க ஆரம்பித்தான். குறிஞ்சிக்காட்டில் இருந்த தன் நண்பனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டான். இசை குடும்பத்தாரிடம் சென்று அது பற்றிப் பேசினான். அக்குடும்பத்தாரை ஏனோ மல்லிகாவுக்குப் பிடிக்கவில்லை. இசையைத் தானே நம் நண்பனுக்குப் பார்கிறோம் என சொல்லி சந்தானம் அவள் பயத்தைப் போக்கினான். இசையின் அப்பா சுந்தரம், தன் அக்காவீட்டிலிருந்து துரத்தப்பட்டபின் அந்த ஊருக்கு வந்து குடியேறியிருந்தான். அங்குள்ள பள்ளியில் இசை வேலைக்குச் சேர்ந்திருந்தாள். நீலகண்டன் பற்றிக் கேட்டறிந்த சுந்தரத்திற்கு அவனை மிகவும் பிடித்துப் போய்விட்டது. நேரில் பார்க்க ரோம்பவே ஆவலுடன் இருந்தான்.

நீலகண்டன்; அப்சரிடம் இயல் குறித்த விவரங்களைச் சொல்லிக் கொண்டிருந்தான். இயல் சந்தானத்தையும், மல்லிகாவையும் பிரிய மாட்டாள். அவர்களும் அவ்வாறே என்பதை அப்சருக்குப் புரியவைத்தான். என்னையும் என் குழந்தையையும் துரத்திவந்த கொலைகாரர்களிடமிருந்து தெரிந்தோ தெரியாமலோ சுந்தரத்தின் ஆட்களிடமிருந்து காப்பாற்றியவர்களுக்கு மன வருத்தம் வேண்டாம். ஆனால் இயலை நான் தினந்தோறும் பார்த்துக் கொண்டிருந்தால் போதுமானது. என் மகள் என்றுகூட உரிமை பாராட்டமாட்டேன். என்று வாக்குறுதி அளித்தாள். அதிகமான உணர்ச்சிகளால் மயக்கமடைந்து தள்ளாடிய அவளை நீலகண்டன் தாங்கிப் பிடித்துக் கொண்டான்.

அவசரக்காரன் சுந்தரம், தன் மாப்பிள்ளை ஆகப்போகும் நீலகண்டனைப் பார்க்க ஏதோ காரணங்கள் கூறிக்கொண்டு குறிஞ்சிக்காடு வந்தடைந்தான். விசாரித்துக்கொண்டு அப்சரின் வீட்டை அடைந்தான். மூர்க்கனான அவன் கதவைத் தட்டக்கூட இல்லாமல் உள் நுழைந்தான். அங்கு நீலகண்டன் மார்பில் அப்சர். போடோவில் நீலகண்டனைப் பார்த்திருந்ததால் சுந்தரத்திற்கு அவனை அடையாளம் நன்றாகவே தெரிந்தது.

அவன் அப்பொழுது கத்திய சொற்கள் காது கொடுத்துக் கேட்க முடியாத வகையில் இருந்தது.. வந்திருப்பது யார் எவர் என்று அறியாமலும் ஏன் இவ்வாறு கத்திக்கொண்டு இருக்கிரார் என்று தெரியாமலும் அங்கிருந்தவர்கள் திகைத்துப்போயிருந்தனர். அவனுடைய சொல்லத்தகாத வார்த்தைகளினால் அப்சர் மேலும் கலக்கமடைந்து, ஆமாம் இவரை நான் வைத்துக்கொண்டுதான் இருக்கிறேன் என்று சொல்ல; அப்சரின் பெற்றோர் உள்ளுக்குள் மகிழ்சி அடைந்தனர் என்றே சொல்ல வேண்டும். புயலாக வந்தவன்; அப்சரின் சொல்லைக் கேட்டவுடன் அதே வேகத்தில் வீட்டை விட்டு வெளியேறிப் போய்விட்டான்.

அப்சருக்கு வெட்கம் வந்ததும் நீலகண்டன் மெல்ல சிரித்தான். அப்படி என்றால், என்னை மணந்தால் சந்தானத்தின் வீட்டு மாடியிலேயே நாம் குடி இருக்கலாம். இயல் நம்மோடுதான் இருப்பாள்.என்றான்.

அவ்வாறே எல்லாம் இனிது முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *