இப்படியே போய்க்கொண்டிருந்தாள்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: October 11, 2012
பார்வையிட்டோர்: 12,897 
 
 

பத்திரிகைத் தொழிலில் உதவி ஆசிரியர் பதவி வகிக்கும் எல்லோருக்குமேவா கற்பனை வாராவாரம் ஊற்றெடுத்து, வாசகர்களின் நன்மதிப்பைப் பெறும்படியான விஷய தானம் செய்ய யோக்யதை இருக்கிறது?

”ஸார்! அடுத்த வார இதழில் இரண்டு பக்கத்திற்கு வரும்படியாக ஏதாவது கட்டுரை இரண்டு மணி நேரத்துக்குள் எழுதிக் கொடுங்கள். உடனே அச்சுக் கோக்கவேண்டும்” என்று வாய்க்குச் சுளுவாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டார் முதன்மை ஆசிரியர்.

சற்றுத் தொலைவில் ஓடிக்கொண்டு இருந்த ‘ரோட்டரி’ மிஷின், ராட்சஸ வேகத்தில் கழன்றுகொண்டிருந்தது. அயல் நாட்டு, உள்நாட்டு சமாசாரங்களைத் தெரிவிக்கும் டெலி பிரிண்டர் இயந்திரங்கள், ஓயாமல் பேசும் பெண்களைப் போல ‘டகடக’ என்று அடித்துச் செய்திகளை விநியோகம் செய்து கொண்டிருந்தன.

இரண்டு மணியில் இரண்டு பக்கங்களுக்குப் போதுமான விஷய தானம் என்ன செய்ய முடியும்? கற்பனை ஒரு சண்டிக் குதிரை ஆயிற்றே? ஷேக்ஸ்பியரின் நாடகம் வெள்ளித் திரையில் ருசிப்பது போல், காலேஜ் பாடப் புத்தகத்தில் ரஸிப்பதில்லையே? நிர்பந்தத்தில் கற்பனையும் அதே அளவில் நின்றது.

மேசையில் மேல், எழுதும் தாள்கள் மேலே சுழன்றுகொண்டு இருந்த மின் விசிறியின் காற்றில் சலசலவென்று அடித்துக் கொண் டன. திறந்த பேனாவின் முனை விஷய தானம் செய்வதற்கு ஆயத்தமாக இருந்தது. கைவிரல்களும் பேனாவைப் பிடித்து எழுதிக் கொண்டே போகத் துடித்தன. பக்கம் பக்கமாக எழுதினால், எடுத்துக் கொண்டு போக வாசல் கதவிடம் ஸ்டூலில் ஆள் உட்கார்ந்திருந்தான். ‘கல்யாணத்திற்கு எல்லாம் ரெடி; பெண்தான் குதிரவில்லை’ என்பது போல, கட்டுரைக்குப் பக்க வாத்தியங்களெல்லாம் ஆஜர்; என்ன எழுதுவது என்பதுதான் சூன்யமாய் நின்றது.

ஏதாவது நவீன காதல் கற்பனை பளிச்சிடுமோ என்று தெரு வழி யாய் ஓடும் பஸ்ஸைப் பார்த்தேன். எனது துரதிர்ஷ்டம் பிரயாணிகள் எல்லோரும் இறங்கிக்கொண்டிருந் தனர். பஸ் பிரேக் டௌன்! அப்ப டிப்பட்ட பஸ், என் கற்பனையை என்ன சுண்டிவிடமுடியும்? மணி அடித்து, ஸ்டூலில் உட்கார்ந்திருந்த பையனைக் கூப்பிட்டு, பக்கத்து ஓட்டலிலிருந்து ஒரு கப் காபி வாங்கி வர அனுப்பினேன்.

கண் எதிரில் கண்ட பஸ்ஸின் நிலைமையையே முதல் வரியாக வைத்துத் துவக்கினேன்.

‘போய்க்கொண்டிருந்த பஸ் நின்றது. பிரேக் டௌன்!’அத்துடன் என் எழுத்தும் நின்றது. பிரயாணி கள் எவ்வளவு எரிச்சலுடன் முகத்தைச் சுளித்துக்கொண்டு இறங்கினார்களோ, அதே எரிச்ச லுடன் முதல் காகிதத்தைச் கசக்கி குப்பைக்கூடையில் போட்டேன்.

ஜன்னல் ஓரமாக நின்று, பரந்த உலகத்தை விரிந்த கண்களுடன் பார்த்தேன். ‘இவ்வளவு ஜனங்கள் பரபரக்க ஓடிக்கொண்டிருக்கிறார் களே, எனக்கு இரண்டு பக்கம் கட்டுரைக்குத் தகுதியான கருத்து கொடுக்கமுடியவில்லையே’ என்று நொந்துகொண்டேன்.

மேசையில் அன்றைய தினசரித் தாள்கள் சிதறிக்கிடந்தன. எந்த ஆசிரியரின் மேசையில்தான் பேப் பர்களும், புத்தகங்களும் ஒழுங்காக அடுக்கப்பட்டு இருக்கின்றன? ஒவ்வொரு பத்திரிகையாகப் பிரித்துப் பார்த்தேன். முதன்மை ஆசிரியர் கொடுத்த இரண்டு மணி அவகாசத்தில் அரை மணி நேரம் கட்டுரைக்குச் சமாசாரம் தேடும் அலுவலிலேயே கழிந்து விட்டது. ஒன்றும் சிக்கவில்லை.

என் கையில் இருந்த ஒரு பிரபல ஆங்கிலப் பத்திரிகை, கொட்டை எழுத்துக்களில் ஒரு சமாசாரம் பிரசுரித்திருந்தது.

‘பூமி தன்னைத்தானே சுழலும் நேரம், கடந்த 5,000 ஆண்டுகளில் ஒன்றின் கீழ் லட்சம் செகண்டு கள் குறைந்துவிட்டது. இப்படியே போய்க் கொண்டிருந்தால்…’ எனப் பிரபல விஞ்ஞானியின் கண்டுபிடிப்பைப் பிரசுரித்திருந்தனர்.

‘இப்படியே போய்க்கொண்டி ருந்தால், இரண்டு கோடியே முப்பத்தைந்து லட்சத்து எழுபத் தையாயிரத்து முன்னூற்று நாற் பத்து நாலு ஆண்டுகளில் பூமியின் சுழற்சி நேரம் எவ்வளவு குறையும்? அதனால் விளையப்போகும் மாறுதல்கள் என்னென்ன? இப்போது குளிரில் நடுங்கும் நாடு களிலெல்லாம் உஷ்ணம் அதிக ரித்து, அவர்கள் வெப்பத்தில் தவிக்க நேரிடும். நம் போன்ற தேசங்கள் குளிரில் நடுங்கும்…’ – இம்மாதிரி மாறுதல்கள் சொல்லப் பட்டிருந்தன. என் உடல் ஒரே சமயம் வெப்பத்தையும் குளிரை யும் உணர்ந்தது. பத்திரிகையைப் பிடித்திருந்த கைகள் நடுங்கின.

சற்று நேரம் கழித்துதான் எனக்குத் தைரியம் வந்தது. ‘சரி, இவையெல்லாம் இன்னும் இரண்டு கோடி வருஷங்களுக்கு மேல்தானே? இப்போதே நடுங்கு வானேன்?’ என்று ஆள்காட்டி விரலால் என் நெற்றியைத் தட்டி விட்டுக்கொண்டேன்.

மற்றொரு பக்கத்தைப் பிரித் தேன். ஆவணி அவிட்டத்திற்கு, சங்கல்பத்திற்கு இடது உள்ளங்கையில் வலது உள்ளங்கையை அமுக்கி, வலது தொடையில் வைத்து சம்மணம் இட்டு உட்காருவது போல, ஜிப்பாவும் வேஷ்டியும் அணிந்து ஒரு மேல் நாட்டு மனிதர் உட்கார்ந்திருக்கும் படத்தைப் பிரசுரித்திருந்தனர். பூமியின் மந்தச் சூழலை விட இந்தப் படம் என் மனத்தை ஈர்த்தது. அந்தப் படத்தின் கீழே கொடுத்திருந்த செய்தி, அதை விட ஆச்சர்யமாக இருந்தது. அந்த வெள்ளையர் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக இருப்பவர். இந்து மத சம்பந்தமான பண்டிகைகள், அதன் தாத்பரியங்கள், அதனால் ஆத்மாவிற்கு ஏற்படும் நன்மைகள் பற்றிய விசேஷ தத்துவங்களை அறிந்து, தானே செய்து பார்த்து அனுபவம் பெறும் பொருட்டு, இந்தியாவில் முதலில் மதரா ஸூக்கு வந்திருந்தார். அன்று ஆவணி அவிட்டம் பண்டிகையானதால், அவரும் அந்த நாளில் ஜபித்துக்கொண்டு இருந்தார்.

மனத்தில் ஒரு கணம் திகைப்பு. ஆயிரம் ஆயிரம் மைல்களுக்கப்பால் இருந்த மனித ருக்கு நம் ஆவணி அவிட்டத்தில் இவ்வளவு மோகமா?

மற்றொரு வாரப் பத்திரிகையில், ஓர் ஆங்கில் மாதின் படம். முதல் தரமான காஞ்சிபுரம் பட்டுச் சேலை – குறைந்தபட்சம் ஒரு அடி ஜரிகை பார்டர் போட்டது – உடுத்தியிருந்தாள். நெற்றியில் பளபளக்கும் திலகம். தலை நடுவில் வகிடு எடுக்கப்பட்டு தொடை வரையிலும் தொங்கும் சடைப் பின்னல். சடை நுனியில் குஞ்சம். கை கால் நகங்களிலும் உள்ளங்கைகளிலும் மருதாணி இட்ட சாயம். புல்லாக்கு. தலை பூராவும் பூ அலங்காரம். என்ன கொள்ளை அழகு போங்கள்! கீழே, ‘இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருந்த ஜீன்ஸ் என்னும் இப்பெண்மணி பரத நாட்டியத்தில் மனத்தைப் பறிகொடுத்து, இரண்டு வரு டங்களாக மதராஸ் நட்டுவனார் ஒருவரிடம் நடனம் பயின்றார். இவருடைய ஆண்டாள் திருப்பாவை நடன அரங்கேற்றம் போன மாதம் நடந்தேறியது…’ என்று துவங்கி, மேலும் சில ருசிகரமான தகவல்கள் கொடுத்திருந்தது.

‘பேஷ்… பேஷ்’ என்று என் வாய் அந்தப் பெண்மணியை சிலா கித்து, ஆசீர்வதித்தது.

நம் கலாசாரத்தில் இவ்வளவு அக்கறையும் ஆர்வமும் காட்டுகி றார்களே அவர்கள்… நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?

கொஞ்ச நாழிகை யிலேயே அதற்கு பதில் வந்துவிட்டது. மதராஸ் பெண்மணி ஒருத்தி. கழுத்து வரையிலும் கேசம் வெட்டிவிடப் பட்டு சிங்கத்தின் பிடரி போல் சிலிர்த்துக் கொண்டு நின்றது. நெற்றி துடைத்து விட்டுப் பளபளவென்று இருந்தது. பரதநாட்டி யம் பயிலும் பெண்மணி மருதாணி சாயத்தில் திகழ்ந்ததுபோல், இவள் உதட்டுச் சாயத்தில் திகழ்ந்தாள். மூக்கு, கை எல்லாம் ஒரே மூளி! ஆடவர் நொண்டிக்கை பனியன் போல் நொண் டிக் கை ரவிக்கை.

‘எவ்வளவு அழகாக சிகரெட் பிடிக்கிறீர்கள்!’ என்று கொஞ்சும் பாவனையில், பக்கத்தில் இருந்த ஆடவனின் தோளின் மேல் சாய்ந்து, பற்பசை வெளுப்புச் செய்த பற்களைக் காட்டிச் சிரித்துக்கொண்டு இருப்பது போல் விளம்பரப் படம் இருந்தது. ஆடவன் மிடுக்கைப் பார்க்கவேண்டுமே… ஆவணி அவிட்ட சாயந்தர ஜபம் ஆத்மாவிற்குக் கொடுக்கும் தெம்பைப் போல் ஆயிரம் மடங்கு சிகரெட்டின் புகை கொடுத்த ஆனந்தம் முகத்தில் கூத்தாடிக்கொண்டு இருந்தது.

இதற்குள் பக்கத்து ஒட்டலுக்குப் போன பையன், ஒரு கிளாஸில் காபியைக் கொணர்ந்து மேசையில் வைத்தான்.

காபியை அருந்தினேன். கண்ணனின் மேனி போல் கறுத்த மேகத்தைக் கிழித்துப் பளிச்சிடும் மின்னல் போல் சுருண்ட என் கற்பனையில் ஒரு கருத்து பளிச்சிட்டது.

ஆவணி அவிட்டத்தின் தாத்பரியம் அறிய வந்த அமெரிக்க நிபுணர் போல் மேல் நாட்டவரின் ஆர்வம் வளர்ந்து கொண்டே இருந்தால், இன்னும் ஐம்பது வருடத்தில் நம் நாட்டின் கலை நிகழ்ச்சிகள் பட்டியலே வேறு விதமாக இருக்கலாம்.

ராமாயண-பாரத சத்சபையின் ஆதர வில் பத்து நாட்கள் ராம நவமி கொண் டாட்டம்.

ஹெரால்டு வின்ஸன், ராமாவதாரம் பற்றி சங்கீத காலட்சேபம் நடத்துவார்.

இரவு 9 மணி முதல் 12 மணி வரை கர்னாடக இன்னிசைக் கச்சேரி.

நியூயார்க் ஹெனலி ஸினட்ரா – பாட்டு; மிசிகன் ஹட்டன்ஸ் – பிடில்; சிகாகோ ஹமாண்டு டிரம்பர் – மிருதங்கம்…

கடைசி நாள் உஞ்சவிருத்தி பஜனை. ஆல்பர்ட் நோபிள் தலைமையில் ஸின்ட்ரா, ஹோப், கம்மின்ஸ் உள்பட பஜனைகோஷ்டி காலை 5 மணிக்குத் துவங்கி நான்கு மாட வீதிகளிலும் வரும்.

அமெரிக்க ஜனத்தொகையில் பாதி, நம் நாட்டில் தொப்பை தெரிய பஞ்சகச்சம் வேஷ்டி கட்டி, துளசி மாலையுடன் உலாவி வரலாம்.

அமெரிக்காவிலிருந்து வரும் பத்திரிகைகளில் பத்மா, கல்யாணி, கற்பகம் வனஜா என்ற பேர் கொண்ட பெண்கள் ஆடை அணி மாடல்களாகவும், கார் ஓட்டி வனிதைகளாகவும் விளங் கலாம். ‘முதல் இரவு முத்தம்’ என்னும் ஹாலிவுட் படத்தில் பார்வதி, உஷாதேவி, ‘காதல்’ குமார் போன்றோர் நடித்து, அவை நம் நாட்டுத் தியேட்டர்களில் காட்டப்படலாம். காமாட்சி, காயத்ரி போன்ற இளம் இந்தியக் கன்னிகைகள் இடுப்பை வளைத்து டிவிஸ்ட் நடனம் ஆடி, குடித்துக் கும்மாள மிட்டு வாழ்க்கை நடத்தலாம்.

அதே சமயம் மாம்பலத்திலும் மயிலாப்பூரிலும் எம்மா, எலிஸ பெத் கிட்டி என்ற ஆங்கிலப் பெண்கள் அழகழகான புடவை உடுத்தி, கொண்டை போட்டு வட்டமலர் சூடி, கையில் குங்குமச் சிமிழுடன் நவராத்திரி அழைப்பிற் குப் போய்க்கொண்டிருக்கலாம்.

பூமி சுழற்சியின் குறைந்த வேகத்தால் ஏற்படுவதைவிட இவை நடக்கக்கூடியவை. என் கற்பனை, லகான் போட முடியாமல் துள்ளியது.

‘விநாயக சதுர்த்திக்கு கொழுக் கட்டை சாப்பிட ஏன் மாமா நீங்களும் மாமியும் வரவில்லை?’ என்று ஓர் அமெரிக்கக் குழந்தை என்னைக் கேட்பது போல் காதில் ஒலித்துக்கொண்டிருந்தது. சல சலக்கும் புடவையை இழுத்து விட்டுக்கொண்டு மேல்தலைப்பை இழுத்துப் போர்த்திக்கொண்டு நடக்கும் மற்றோர் ஆங்கில மாது என் கண் முன் வந்தாள்.

இப்போது நடந்துகொண்டிருக்கும் கலாசார பரிவர்த்தனை இப்படியே போய்கொண்டு இருந்தால்…

”என்ன ஸார், கட்டுரை எழுதி விட்டீர்களா? அச்சகம் காத்துக்கொண்டிருக்கிறது” என்று முதன்மை ஆசிரியர் தலை நீட்டினார்.

அவரிடம் என் கட்டுரையை நீட்டினேன்.

– 04-12-1966

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *