கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: June 15, 2013
பார்வையிட்டோர்: 15,915 
 
 

இன்னும் இரண்டு நாள் தான் மாடமுத்துவின் மனம் கணக்குப் போட்டது. பத்து வருடக் காத்திருப்புக்குப் பின் வரப் போகும் திருநாள். மாடமுத்துவுக்கும் அவன் மனைவி பூவம்மாவுக்கும் கால் தரையில் பாவவில்லை. வருவோர் போவோரிடமெல்லாம் சொல்லிச் சொல்லி சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

விஷயம் வேறு ஒன்றுமில்லை மாடமுத்து பூவம்மா தம்பதியின் ஒரே மகன் குமார் தன் குடும்ப சகிதம் சென்னையிலிருந்து ஆழ்வார்குறிச்சி கிராமத்துக்கு இன்னும் இரண்டு நாளில் வருகிறான். ஒரு வாரம் முன்னதகாவே இவர்களுக்கு ஃபோனில் சொல்லி விட்டான். ஏதோ தெய்வமே நேரில் வருவதாகச் சொன்ன மகிழ்ச்சி அந்தக் கிழ தம்பதியருக்கு. ஏற்கனவே பூவம்மா வாசலில் நின்று கொண்டு எல்லாரிடமும் பேசிக் கொண்டிருப்பாள். இப்போது கேட்கவே வேண்டாம்.

“ஏங்க! நம்ம மகன் மட்டும்னா பரவாயில்ல கூட மருமக நித்யாவும் நம்ம பேரப்புள்ளையும் வராங்க இல்ல? வீட்டுக்கு வெள்ளை அடிக்க வேண்டாம்?”

“ஏட்டி! நீ ஒரு கூறு கெட்டவ! இப்பந்தானே அவன் செலவழிச்சு வீட்டை இடிச்சுக் கட்டி இன்னும் எட்டு மாசங்கூட ஆகல்ல! அதுக்குள்ள என்னளா வெள்ளையடிப்பு? எல்லாம் புதுசாத்தானே இருக்கு?”

ஆனாலும் மனம் ஒப்பவில்லை கிழவிக்கு. பரணிலிருந்து சாமான்களை எல்லாம் இறக்கி தூசி தட்ட வைத்து , மீண்டும் அவற்றை ஏற்றி , டியூப் லைட்டுகளைத் துடைத்து , ஃபேனைச் சுத்தம் செய்து என்று மாடமுத்துவை பெண்டு நிமிர்த்தி விட்டாள். அது போதாதென்று ஊரின் ஒரே ஃபேன்சிக் கடையான காசாக் கடையில் போயி நின்று கொண்டு

“ஏ! ராசா! எம் மருமவா வாரா! அடுத்த வாரம்! நீ நிறைய கலரு வாங்கி வெச்சுக்கப்பா! அவா அதைத்தான் குடிப்பா! என் பேரனும் அப்படித்தான். அவ்வோ வந்தப்புறம் இது இல்ல அது இல்லங்கப்படாது! பிசுகோத்து , முட்டாயி எல்லாம் ஒரு எட்டு திருநெல்வேலி போயி வாங்கிட்டு வந்திரு. ” என்றாள். காசாவும் சிரித்துக் கொண்டே “ஆட்டும்” என்று கூறி விட்டான். பூவம்மாவுக்கு ஒரு கவலை விட்டது.

அடுத்தது குருநாதன் மளிகைக்கடை.

“ஏய்யா! குருநாதா! நல்ல கருப்பட்டி , மல்லி விதை , மொளகா எல்லாம் வாங்கி வெச்சுக்கலே! பூச்சியா எனக்குக் குடுப்பியே அந்த மாரி குடுத்துடாத! ”

அலப்பறை பண்ணிக் கொண்டிருந்தாள் பூவு. மாடமுத்து மட்டும் சளைத்தவரா? அவரும் வீட்டுத் திண்ணையில் இருந்தவாறே மகனின் வரவை ஒலொபரப்பிஉக் கொண்டிருந்தார். வாசலில் இருந்த பழைய மாட்டு வண்டி வைக்கும் பிறை அழுக்காக அவர் கண்ணை உறுத்தியது. அதைத் தூய்மைப் படுத்துவதில் முனைந்தார்.

“ஏனுங்க! வண்டிப்பிறைய திறக்கப் போறீயளா?”

“ஆமா”

“நானும் கூட இருக்கேன்! நீரு என்னமும் எடக்கு மடக்கா செஞ்சு போடுவீரு”

“சும்மா இருடி! எல்லாம் நான் பாத்துக்கிடுதேன்! எனக்கென்னா கோட்டியா பிடிச்சிருக்கு? ” என்று சொல்லி மனைவியை உள்ளே அனுப்பி விட்டார். வண்டிப்பிறையின் சாவியை எடுக்கும் போது கை நடுங்கியது.

“ஏயப்பா! எத்தனை வருசம்? இருவது வருசம் இருக்குமா? இருக்கும் இருக்கும்! அந்தப்பய குமாரு சென்னைக்கு ரயிலேறுறதுக்கு முந்தின நாள் பூட்டுப் போட்டது. அப்புறம் இப்பந்தான் திறக்கேன். ”

நெடு நாள் ஆகியிருந்ததால் சாவி மக்கர் பண்ணியது அவர் மனசைப் போல. கொஞ்சம் அழுத்தியதும் திறந்து கொண்டது. மங்கலான வெளிச்சத்தில் இரு ஆறடி உயர உருவங்கள் இவரை சோகமாகப் பார்த்தபடி இருந்தன. மாடமுத்துவுக்கு கண்ணில் நீர் கோர்த்தது. மெதுவாக நடந்து அதன் அருகில் போனார்.

“ஏ இருளா! எப்படில இருக்க? எம்மா இருளாயி எப்படிட்டி இருக்க?” அந்த உருவ பொம்மைகளை கட்டிக் கொண்டார். கண்களில் இருந்து நீர் அது பாட்டுக்கு வழிந்து கொண்டிருந்தது. பல வருடத்திய தூசும் தும்பும் வேறு அவர் மூக்கைப் பாடாய்ப்படுத்தின.

“மன்னிச்சுக்கங்களா! ஆலிகளா சாமி முன்னாடி ஆடிக்கிட்டிருந்த ஒங்கள இப்படி பொம்மையா மூலையில கோண்டாந்து போட்டு வெச்சிருக்கேன். நீங்க பாக்காத கூட்டமா? நீங்க வாங்காத கைத்தட்டா? எத்தனை வருசம்? எத்தனை திருவிளா? எத்தனை சாமி? ஹூம்! எல்லாம் போச்சு! இந்தப்பய குமாரு தான் ரொம்பப் பிடிவாதம் புடிச்சான். நான் ஆலி ஆடுனா அவனுக்கு அவமானமாம்! எல்லாம் காலம். அப்படி ஆலி ஆடித்தானேலே நான் உன்னிய படிக்க வெச்சேன்? அப்பம் தெரியலையோ இது கோமாளித்தனமுன்னு? ” அவனை நேரில் கேட்பது போலப் பேசினார்.

மாடமுத்துவின் கை பட்டு இருளாயி அணிந்திருந்த பாம்படம் லேசாக ஆடியது.

அந்த ஆட்டம் மாடமுத்துவிற்கு அவர் சேக்காளி இசக்கியை நினைவு படுத்தியது.

“எசக்கி! நானும் அவனுமா எப்படி ஆடுவோம்! அவனும் போய்ச் சேந்து இன்னியோட நாலு வருசமாச்சு! நான் இன்னும் இருக்கேன் பூமிக்குப் பாரமா? ”

இசக்கியின் நினைவும் , ஆலிகளின் இருப்பும் மாடமுத்துவை பழைய காலங்களுக்கே அழைத்துச் சென்றன. கண்களில் நீர் பெருக நினைவுகளில் மூழ்கினார் அவர்.

மாடமுத்துவும் அவரது சேக்காளி இசக்கியும் ஆலி ஆட வருகிறார்கள் என்றால் கோயில் திருவிழாவே களை கட்டி விடும். ஆழ்வார்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கோயில் கொடையென்றால் இவர்கள் ஆலி ஆட்டம் கண்டிப்பாக இருக்கும். இசக்கி ஆள் ஆலியான இருளனுக்குள் புகுந்து கொள்ள மாடமுத்து இருளாயியைத் தூக்கிக் கொண்டு ஆடுவார். ஊர் மக்கள் கரகாஅட்டத்தைக் கூடப் பார்க்காமல் இவர்கள் ஆடும் ஆலி ஆட்டத்தையே தான் பார்ப்பார்கள். வளைந்து வளைந்து அந்த நிறை சுமையைக் குழந்தையை சுமப்பது போலத் தூக்கிக் கோண்டு ஆடுவார்கள். அவர்களைச் சுற்றி எப்போதும் குழந்தைகள் , பெண்கள் கூட்டம் இருக்கும். மாடமுத்து பண்ணும் சேட்டைகளை ரசித்துச் சிரித்துக் கை தட்டுவார்கள்.

அப்போது குமாருக்கு பத்து வயதிருக்கும். அவனுக்கு தன் தந்தை இப்படி கோமாளி போல எல்லாரையும் சிரிக்க வைப்பது பிடிக்கவில்லை. குமாரும் விடாமல் உடம்பு வலிக்கும் என்றான் , எலும்புகள் பலவீனமாகும் என்றான் , இன்னும் என்னென்னவோ சொல்லிப் பார்த்தான். மாடமுத்து கேட்கவேயில்லை. ஆட்டத்தையும் நிறுத்தவில்லை. ஒரு நிலையில் அப்பனுக்கும் மகனுக்கும் பேச்சு வார்த்தை நின்று போய் விடுமோ என்று பயந்தாள் பூவம்மா.

குமாருக்கு நன்றாகத் தெரியும் தன் தகப்பனின் ஒரே கனவு தான் படித்து முடித்து ஒரு நல்ல வேலையில் அமர்வது தான் என்று. அதையே தன் துருப்புச் சீட்டாக உபயோகித்தான்.

“எப்பா! நான் நல்லாப் படிச்சி முன்னுக்கு வரணும்னா நீ ஆலி ஆடக் கூடாது! ” என்று ஒரே போடாகப் போட்டான்.

நெஞ்சடைத்துக் கண்ணில் பூச்சி பறந்தாலும் சமாளித்துக் கொண்டு ” ஏல! உனக்கு என்னிக்கு பெரிய வேலை கிடைக்குதோ அன்னிலருந்து விட்டுதம்லா ஆலியை” என்று சொல்லி விட்டான் தன்னை அறியாமல். அந்த ஒரு வார்த்தையை பிடித்துக் கொண்டு நன்றாகப் படித்து உள்ளூர்க் கல்லூரியில் எம் எஸ் சி முடித்தான். யார் யாரையோ பிடித்து சென்னையில் ஒரு நல்ல கம்பெனியில் வேலையும் வாங்கி விட்டான் குமார்.

வேலையை ஒப்புக் கொள்ள சென்னை ரயிலேறும் முந்தின நாள் “எப்பா! நான் சொன்னதை நிறைவேத்திட்டேன்! இப்பம் நீ சொன்னதை நிறைவேத்து!” என்றான். மறு பேச்சுப் பேசாமல் வண்டிப்பிறையைத் திறந்து இரு ஆலிகளையும் உள்ளே வைத்துப் பூட்டியவன் தான். இதோ இப்போது தான் திறக்கிறான்.

குமார் சென்னையிலே கூட வேலை பார்க்கும் பெண்ணை காதலித்துத் திருமணம் செய்து கொண்டான். மாடமுத்துவும் , பூவம்மாளும் ஏதோ விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்களே அன்றி அவர்களுக்கு மனது ஒட்டவில்லை. ஆனால் அப்படி இருக்க மருமகள் அனுமதிக்கவில்லை. இவர்களோடு நன்றாகப் பழகினாள். ஒரு முறைப் பேரன் பிறந்த பிறகு அவனைப் பார்க்கவென இருவரும் சென்னை போய் வந்தார்கள். அதோடு சரி. பிறகு இந்த வருடம் தான் குமார் வீட்டை இடித்துப் புதிதாகக் கட்டி இருக்கிறான். அதைப் பார்க்கத்தான் பத்து வருடம் கழித்து இந்த கிராமத்து விஜயம்.

நினைவுகளிலிருந்து மீண்டு எழுந்தவர் ஆலியைத் தூசி தட்டி பள பளவென ஆக்கினார்.

ஆயிற்று குமார் குடும்பத்தோடு வந்து விட்டான்.

பேரனும் , மருமகளும் ஊரை மிகவும் ரசித்தனர். அமைதியான சூழல் , டிராஃபிக் இல்லாத ரோடுகள் என அவர்களுக்கு எல்லாமே பிடித்திருந்தது. பூவம்மாள் செய்திருந்த சாப்பாட்டை ஒரு பிடி பிடித்தனர். பெரியவர்கள் அனைவரும் சற்று தூங்கும் நேரத்தில் ராகுல் தாத்தா பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டான்.

“வா! ராசா! சாப்பிட்டியா கண்ணு?”

“சாப்பிட்டேன் தாத்தா. ஆமா! நீங்க என்னை ஏன் கண்ணுன்னு கூப்பிடறீங்க? என் பேரு ராகுல். அப்படிக் கூப்பிடுங்க தாத்தா”

“அந்தப்பேரு என் வாயில நொளயல்ல கண்ணு! அதான் கண்ணுன்னு கூப்பிடுதேன்.”

“ஏன் தாத்தா? அதோ பெருசா ஒரு பொம்மை இருக்கே அது என்ன? எதுக்கு அதை இங்க வெச்சுருக்கீங்க?”

பேரன் கேட்க சந்தோஷத்தில் துள்ளியது கிழவர் உள்ளம்.

“அதுவா கண்ணு..” என்று ஆரம்பித்து எல்லாம் சொன்னார் தாத்தா.ஆசையோடு கேட்டான் பேரன்.

“அப்ப தாத்தா உங்களுக்கு இதை வெச்சு ஆடத் தெரியுமா? ஒண்டர்ஃபுல் , சுப்பர்ப்” என்றான்.

என்ன சொல்கிறான் என்று புரியாவிட்டாலும் தன்னைப் புகழ்கிறான் என்று புரிந்தது பெரியவருக்கு. மகிழ்ச்சியில் தலை தோளில் நிற்கவில்லை அவருக்கு. பேரன் முகத்தை வழித்து திருஷ்டி கழித்தார்.

“தாத்தா! எனக்காக கொஞ்சம் ஆடிக் காமிங்களேன். பிளீஸ் தாத்தா!” என்று பேரன் கெஞ்ச மாடமுத்துவுக்கு தொண்டை அடைத்தது.

யாரும் பார்க்கவில்லை என்று உறுதி செய்து கொண்டு ஆலியுள் புகுந்து ஆடத் தொடங்கினார். ஆட்டமான ஆட்டம். வளைந்து , நெளிந்து உட்கார்ந்து என்று ஆசை தீர ஆடினார். வாயடைத்துப் போய் பார்த்திருந்தான் ராகுல். வயதாகி விட்டதால் ரொம்ப நேரம் ஆடமுடியவில்லை. களைத்துப் போய் உட்கார்ந்தவரிடம் ,

“தாத்தா! இந்த பொம்மை மாதிரி சின்னதா செஞ்சுகுடுங்க தாத்தா! எனக்கு இது ரொம்பப் பிடிச்சிருக்கு. இந்த வருஷ ஸ்கூல் டேக்கு நான் இந்த டேன்ஸ் தான் ஆடப் போறேன் . எனக்குக் கத்துக்குடுங்க தாத்தா.” என்று அழுத்தம் திருத்தமாகப் பேசியவனை திறந்த வாய் மூடாமல் பார்த்திருந்தான் அப்போது தான் எழுந்து வந்த குமார்.

மகன் மீது பொருள் நிறைந்த மகிழ்ச்சிப் பார்வையை வீசி விட்டு அடுத்த ஆலி ஆட்டக்காரனை தயார் செய்யக் கிளம்பினார் மாடமுத்து.

– ஜூன் 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *