கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: July 9, 2014
பார்வையிட்டோர்: 10,751 
 

இன்னைக்கு தோயறது கந்தன் வூட்டுப் பாவு. நூறாம் நெம்பர் ரகம்… தட் தட் தட். .பாவு விரிச்சி, நனைச்சி தட்டி தோது பண்ண ஆரம்பிச்சாச்சி..கஞ்சிப் பையை உருட்டும்போதே. பில்லூரும் போட்டு முடிக்க, பாவு பாதி காச்சலுக்கு வர்றதுக்கு காத்தால எட்டுக்கு மேல ஆயிட்ச்சி.. இதுக்கு மேல பாவடியில வெரசா வேல செய்யணும். காயற வெய்யில்ல, அடிக்கிற ஆடி காத்துல, சர்ர்னு ஈரம் இழுத்துக்கும். அதுக்குள்ள பாவை அலுவால தட்டி தட்டி, கீறிசுப்புலால கீறிவிட்டு… கீறிவிட்டு, அப்பத்தான் பாவுல கூழுபசை சீரா பரவும், இழைங்க ஒண்ணோட ஒண்ணு ஒட்டாது.. .இல்லன்னா கஞ்சி சுத்திக்கும். பசை காஞ்சிட்டுதுன்னா அப்புறம் பாவு ஓமப்பொடிதான். ஒண்ணுத்துக்கும் தேறாது. நாலுநாள் ஆனாலும் எச்சநூலு நுமிட்டி மாளாது. கெரகசாரம் அந்தநேரத்துக்குத்தானா. சாரங்கன் வூட்டு பலான வெவகாரம் அங்க வெட்டவெளிச்சமா களைகட்ட ஆரம்பிக்கணும்?.. போச்சி நல்லபடியா பாவு தோஞ்சாப்பலதான்.கொஞ்சநாளாவே ஊர்ல அந்த சங்கதிய பப்ளிக்கா பேசாம ஆளாளுக்கு பாவடியில,ஆலையில பாவு ஓட்றப்ப, ஒக்காந்து உண்டை நூலை சிலுப்பை சிலுப்பையா போட்டு எழைக்கிறப்ப, பாவு புனையேத்தயிலன்னு தறித் தொழிலின் எல்லா நேரங்களிலும் மறவா பேசி கும்மியடிச்சிக்கிணுதான் இருந்தாங்க.

..ஏன்?னா சாரங்கன் முள்ளிபாளையத்தான் வூட்டு வகையறா.. பங்காளிங்க, கொண்டான் குடுத்தான்னு ஊர்லியே பெரிய க்ரூப்பு அது. ஜன கட்டு ஜாஸ்தி. அத்தினியும் அடாவடி, வெல்லுவாயன்க.. அந்த வகையறான்னா ஊர்ல யாரும் அவங்ககிட்ட வெச்சிக்கிறதில்ல.பின்ன இப்ப மட்டும் எப்பிடியாச்சின்னா. பொகை வெளிய வந்தது பொட்டச்சிங்களால.. உள்ளூர்ல வாக்கப்பட்ட சாரங்கன் தங்கச்சி வேண்டாவுக்கும், கதிரு பொண்டாட்டி பவுனுக்கும் பாவடியில வெச்சி சண்டை மூண்டுகிட்ச்சி அப்பத்தான் பலான விசயம் வெடிச்சிது. அதுக்கப்புறம் நடந்த அம்புட்டுக்கும் அதான் புள்ளையார் சுழி போட்டாப்பல ஆயிப்போச்சி. பொட்டச்சிங்க ரெண்டும் லேசுப்பட்டதுங்க இல்ல.. காதுவரைக்கும் வாயி. வாய தொறந்தா கலீஜுதான். காத பொத்திக்கணும். அன்னைக்கோட ரெண்டுதுக்கும் இருந்த ரொம்பநாளு சிநேகிதம் புட்டுக்கிட்ச்சி. அத்தத்தொட்டு இத்தத்தொட்டு ஒம்பவுசு தெரியாதாடீ?. ஊருமேல மேயறவதானடீ நீ? யாருக்குதான் தெரியாது?.ன்னு வேண்டாதான் ஆரம்பிச்சவ.. பதிலுக்கு அவ இவ வூட்டு ஜாதகத்தையே புட்டுப் புட்டு வெச்சிப்புட்டா.

”ஆமாண்டீ! எஞ்சக்களத்தி! என்வூட்டு பாவைத்தான் யாரோ ஒரு மீசைக்காரன் வந்து வந்து தோஞ்சிட்டுப் போறான் பாரு. ஊரு பூராதான் சிரிப்பா சிரிக்குதே என்னை சொல்ல வந்துட்டா..”—–அவ்வளவுதான் வேண்டா வரிஞ்சி கட்டிக்கிணு வந்துட்டா. பாவுக்காரன் ஆடியபாதம் கவலையுடன் ஓடிவந்தார்.

“ஏம்மா பவுனு! இன்னாவேல செய்றே?.பாவுல ஈரம் இஸ்த்துக்கிச்சி பாரு.ஒங்களுக்கு புண்ணியமா போவுது வந்த வேலைய பார்த்துட்டு அப்புறம் சண்டை போடுங்கம்மா.”—–இவ வுட்டாலும் அவ வுட்றமாதிரி இல்ல..

“ஏய் தெவிடியா! இன்னாடீ எங்கவூட்டு பாவை யாரோ தோயறான்?.உடமாட்டேன் சொல்றீ.”

“க்கும்! என்ன ஏன் கேக்கற?, போயி உன் அண்ணிக்காரிய கேளு அன்னாடிக்கும் அண்ணங்காரன் இல்லாத நேரமா பார்த்து வூட்டுக்கு வர்ற மீசைக்கார வாத்தி யாருடீன்னு கேளு. வந்து பாடம் சொல்லித்தர்ற வெக்கக்கேட்ட கேளு ஊரே காரி மூய்து, சிலுப்பிக்கிணு வந்துட்டா.”.

பாவு தோஞ்சிக்கிட்டிருந்த ஆணு பொண்ணு அத்தினி பேரு மொவத்திலியும் நமட்டு சிரிப்பு. பாவு தோஞ்சி முடிக்கிறதுக்கு காத்தால பத்து மணிக்குமேல ஆயிப்போச்சி.. அதுவரைக்கும் ரெண்டுபேரும் கெளறி கெளறிப் பேசி சாரங்கன் வூட்டு சங்கதிய வெட்ட வெளிச்சமாக்கிட்டாளுங்க. வேண்டா அழுதுக்கிணே வூடுபோய் சேர்ந்தா. ஊருங்கள்ல ஈர பேனாக்கி பேன பெருமாளக்கிறதுன்னா இந்த பொட்டச்சிங்களுக்கு அல்வா துன்றமாதிரி. கண்ல தம்மாத்துண்டு தண்ணி காட்னா போறும்.வூட்டு ஆம்பளைங்க எகிறிஎகிறி பாய்வானுங்க. வூட்டுக்குப் போயி ஒண்ணுக்கு ரெண்டா இன்னா சொல்லி உசுப்பிவுட்டாளோ, மதியத்துக்கெல்லாம் வெவகாரம் திகுதிகுன்னு எரிய ஆரம்பிச்சது. சாரங்கன் பங்காளிங்க தொட தட்டிக்கிணு வந்துட்டானுங்க. வாய்பேச்சே அவனுங்ககிட்ட கெடையாது. நாலஞ்சி பேரா சேர்ந்தான். சிடுக்கா நேரத்தில கதிரு வூட்ட அடிச்சி தொம்சம் பண்ணிப்புட்டானுங்க.

ஒருபாவமும் அறியாத கதிருக்கு சரியான அடி. அத்தினியையும் ஊரு பார்த்துக்கிணுதான் இருந்துச்சி. முள்ளிப்பாளையத்தாமூட்டு வகையறா ஆளுங்க அடாவடிங்கள பாத்துப் பாத்து ஊரே நொந்து போயிதான் கெடக்கு.என்ன பண்றது?..ஆன்னா ஊன்னா எல்லாம் ஒண்ணு சேர்ந்துக்குறானுங்க. எல்லாம் இருப்புக்காரனுங்க வேற. எதனா விவகாரம் வில்லங்கமாகிப் போனா, நெட்டி செலவு பண்ணக் கூடியவனுங்க.. படுபாவிங்க இன்னாதான் கேக்க நாதியில்லன்னாலும் ஒரு மனுசனை இப்பிடியா ஏழெட்டுபேரு சேர்ந்துக்குணு மாட்ட அடிக்கிற மாரி போட்டு அடிப்பானுங்க. இதுகூட பரவாயில்லய்யா, இன்னொரு வேல பண்ணானுங்க பாரு அ.ப்.ப.ப்.பா..! ஐயய்யோ! கடவுளே! ஆண்டவனுக்கே இது பொறுக்காதுய்யா. பட்டப்பகல்ல ஊரு கொளத்தங்கரையாண்ட சாரங்கன் பங்காளிங்க நாலஞ்சிபேரு சேர்ந்துக்குணு புல்லா சாராயத்த குடிச்சிப்புட்டு வந்து, பவுனு பொண்ண கதறக்கதற அவ சேலைய உருவி தொடக்கூடாத எடத்துலயெல்லாம் தொட்டு….ஐயோ! .பெருமாளே! முருவா…என்னப்பனே!. அந்தபொண்ணு பாவம் நெனப்பு தப்பிப்போயி கீழ சாஞ்சிட்டா.. பாவிங்க அப்பவும் வுடலியே..

நம்ம கூட்டம் வருசாவருசம் ஆடி, சித்திரையில பாரதக் கூத்தும் அதில பாஞ்சாலிக்கு துச்சாதனன் துகிலுரிஞ்சி பண்ற அக்கிரமங்களையும் பார்த்துப் பார்த்து வளந்த கும்பலு. இது.எதை வொண்ணாலும் பொறுத்துக்கும் பொம்பளைக்கு ஒரு அக்கிரமம் நடந்துச்சின்னா தாளாது. வெறியேறிடும்.. அன்னிக்கு அப்பிடித்தான் சுருசுருன்னு ஏறிப்போச்சி.. சின்னபெர்தனமே தாளமாட்டாம தெருவுல எறங்கி கூச்ச போட ஆரம்பிச்சிட்டாரு.

அவ்வளவுதான் .இதுக்குமேல நடக்கிறது எதுவும் யாரு கையிலும் இல்ல. சாதி வித்தியாசமில்லாம மளமளன்னு ஊரு தெரண்டு போச்சி. அவனுங்கள பொரட்டியெடுக்கறதுன்னு கும்பலா கூச்ச போட்டுக்கிணு ஓட்னாங்க.. பாஞ்சி ஓடிய கும்பல பெரிய பெர்தனம் உத்தண்டிதான் வாணாம்னு கட்டுக்குள்ள கொண்டு வந்தாரு.மேற்படி க்ரூப்பு நெலம புரிஞ்சி அத்தோட சடார்னு எடத்த காலி பண்ணிடுச்சி. ஆனா ஊரு இத வுட்ருமா இன்னா?.. அப்பவே புள்ளையார் கோயில் திட்டுல பெர்தனங்க முன்னால ஊர் கூட்டம் ஏற்பாடாச்சி. ஊர்கட்டுப்பாடு ஜாஸ்தி. பெரும்பாலான ஊர் தாவாங்க அப்பப்ப ஊர்கூட்டத்திலியே வெச்சி பைசல் ஆயிடும். அதைத் தாண்டி போலீஸுக்கோ, கோர்ட்டுக்கோ எப்பவோ ஒண்ணுதான் போவும்.மேற்படி அக்கிரமத்த நடத்தின சாரங்கன் பங்காளிங்கள கூட்டியாற சொல்லி ஊர்சேவன (ஊர் சேவகன்) ஊரு அனுப்பியாச்சி.

ஊர்சேவகன்.—-இந்த அமாவாசையில இருந்து வர்ற அமாவாசை வரைக்கும் மொறை வெச்சி ஒவ்வொரு மாசமும் ஒவ்வொரு வூட்டு ஆளு பொறுப்பு ஏத்துக்கிணு ஊர்சேவகம் பாக்கணும். ஊர்கட்டளை. தினசரி புள்ளையாருக்கு பூசை பண்ணணும்,,பெர்தனத்துக்கு ஒத்தாசையா ஊர்கூட்டம் பத்தி வூடுவூடா போயி தகவல் சொல்றது, ஊர்ல நடக்கிற நல்லது கெட்டதுக்கு தெருத் தெருவா போயி தகவல் சொல்றது. கல்யாணம்னா ஆயிரம் வேலை கெடக்குது. கல்யாண வீட்டுக்காரன் ஊரைக் கூட்டி ஊர் ஒப்பு வாங்கணும், மூட்டுத்தளிக்கு(சமையல் வேலை.) அப்பல்லாம் கிராமங்கள்ல கல்யாண சமையல்வேலைய ஊரு ஆளுங்களே சேர்ந்து செய்றது வழக்கம். அதுக்கு யார்யாரு பொறுப்புன்னு அற்பதுங்கூடிதான் நியமிக்கணும்.அந்த கூட்டத்துக்கு ஏற்பாடு பண்றது ஊர்சேவன் வேலைதான். அது மட்டுமில்ல. பொண்ணழைப்பு விருந்துக்கு ஒருக்கா, கல்யாணத்தன்னைக்கு காலையில டிபனுக்கும்,மதியம் விருந்து சாப்பாடுக்கும் ஒருக்கா வூடுவூடா போயி கல்யாண வூட்டுக்காரங்க சார்பா சொல்லிட்டு வரணும்., இப்படீ…… இதுக்கு சம்பளம்னு மாசாமாசம் தலகட்டுக்கு அஞ்சி ரூபா,அப்புறம் தோயற பாவுக்கு அஞ்சி ரூபா ஊர்சேவன் காசுன்னு வசூல் பண்ணி ஊர்சேவம் பாக்கிறவன் கிட்ட குடுத்துட்றது. அந்த காசுல கோவிலுக்கு வெளக்கு ஏத்த எண்ணை செலவும் அடங்கும். கோயில்ல தட்டுல விழற காசுகளும் ஊர்சேவனுக்குத்தான் போவும். அது இன்னா சாடாசத்ரா துட்டு.. கூலி கட்டுமா?.. கடவா பல்லுக்கு காணாது. ஆனாலும் அது ஒரு மொறை. .எம்மாம் பெரிய ஆளுன்னாலும் அவங்க மொறை வர்றப்ப ஊர்சேவத்த செஞ்சே ஆவணும். முடியாதவங்க தன் சார்பா வேற யாரையாவது உபரியா தன் கைக்காசை போட்டு ஏற்பாடு பண்ணி அனுப்பலாம். இது ஊர் நடைமுறை ஊர்கூடி காத்துக்கிணு இருக்கு. ஊரு அறுவதும் வந்தாச்சி. கொஞ்ச நேரத்துக்கெல்லாம் போன ஊர்சேவன் வெறுங்கையோட திரும்பி வந்தான்

“.இப்ப வரமுடியாது,அவசர சோலியா டவுனுக்குப் போறோம்னு சொல்லிட்டு பஸ் ஏறிட்டாங்கபா.”. —-ஜனங்களுக்கு கொதிப்பாயிடுச்சி. கசமுசன்னு பேச்சு கெளம்பிட்ச்சி..

“டேய்! கெளம்புங்கடா. ஒதைக்கு மிஞ்சனது எதுவுமில்ல. அப்பத்தான் சரிப்படுவானுங்க.”

கும்பல் கூடிட்டா கோழைகூட வீரனாயிட்றான். அதே சமயம் oஉணர்ச்சிவசப்பட்டு முன்ன பின்ன எதையும் யோசிக்காம செஞ்சிட்ற மனுசங்க.. பெரிய பெர்தனம் எல்லாரையும் அடக்கி நாளைக்கு சாயரட்சை நாலு மணிக்கு ஊர்கூட்டம்னு சொல்லி ,கூட்டத்தை தள்ளி வெச்சாரு.

இன்னும் சூடு தணியாததால கரெக்டா மறுநாள் நாலுமணிக்கெல்லாம் ஊர் கூடியாச்சி. பொட்டச்சிக்கு நடந்த கொடுமைன்றதால ஊரு பொண்டுகளும் தெரண்டு வந்து நிக்குதுங்க.. சாரங்கன் வூட்டு ஆளுங்களுக்கும் ஆளனுப்பியாச்சி. அந்நேரத்துக்கு போலீஸ் ஜீப் கோயிலாண்டையே வந்து நின்னுச்சி. இன்ஸ்பெக்டரும், மூணு போலீஸ்களும் வந்திறங்கினாங்க. நேத்து அவசரமா டவுனுக்குப் போனவனுங்க இதுக்குத்தான் போனாங்க போல. இன்னா கம்ப்ளைண்ட் பண்ணானுங்களோ, விசாரிக்க வந்துட்டாங்க.

“ ஹும்! இவனுங்க வந்துட்டாலே நம்மகிட்ட பணம் கறக்காம போவமாட்டானுங்களே. தலையெழுத்து சாவற வரைக்கும் வைத்தியன் வுடமாட்டான், செத்தாலும் வுடமாட்டான் பஞ்சாங்கக்காரன்’.”. —— ஆனா பெரியபெர்தனம் உத்தண்டி படிச்சவரு. இதுக்கெல்லாம் அசர்றவரு இல்ல.

“சார்! இது எங்க ஊரு சமுதாயப் பிரச்சினை. எங்களுக்குன்ன்னு சில கட்டுப்பாடுங்க இருக்குது. உங்க கிட்ட பிராது குடுத்தவன் இந்த ஊரு இருந்தாங்குடி..

.( ஊருங்கள்ல மனுசங்களுக்குள்ள இருந்தாங்குடி,காய்ச்சாங்குடின்னு ரெண்டு பிரிவு உண்டு. :.இருந்தாங்குடி—-ஊரை பூர்வீகமாகக் கொண்டவனின் குடும்பம்.. ஊரில் அவன் சொல்லுக்கு ஒரு மரியாதை இருக்கும்.. ஊரின் முக்கிய பதவிகளுக்கு இவர்களுக்குதான் முதலிடம்.. :காய்ச்சாங்குடி—- இவன் வந்தேறி. பொழைக்க நடுவாந்திரத்தில வந்து சேர்ந்தவன் . இவன் சொல்லுக்கு கொஞ்சம் வாய்ப்பு குறைவு. ஊர் பெர்தனம் பதவிய கொடுக்கிறதில்ல. இவங்களுக்குப் பொறந்த புள்ளைங்கள இருந்தாங்குடியா ஊரு ஏத்துக்கும்..)

எங்க சாதிக்காரன்தான். ஒண்ணுக்குள்ள ஒண்ணு. உள்ளூர்லியே பொண்ண குடுத்திருக்கான்…அதுக்கோசரம் தப்பு செஞ்சவன்களை நாங்க தூக்கி வெச்சிக்கிறதில்ல. தப்பு தப்புதான். கதிர்வேலு. சாதுவான பையன். அவன் ஊருக்கு ஒருகுடி. எங்கள அண்டி பொழைக்க வந்தவன்.. கதிர்வேலு பொண்டாட்டி பவுனுக்கு வாய் கொஞ்சம் மீசரந்தான். அவ சண்டையில இன்னாதான் திட்டி இருக்கட்டும். பொட்டச்சிங்களுக்குள்ள வந்த சண்டை, இதுக்கு ஆம்பளைங்க போவக்கூடாது. இவனுங்க போனது தப்பு. அதுக்கு இந்த கம்மனாட்டி பசங்க ஃபுல்லா குடிச்சிப்புட்டு, இன்னாதான் கேக்க நாதி இல்லன்னாலும் , பட்டப்பகல்ல, அவள நாலுபேரா சேர்ந்துக்குணு ஐயய்யோ! வாயில சொல்ல வழங்காது..அப்பிடி அவ பொடவைய அவுத்து மானபங்கம் பண்ணிட்டானுங்க. ஊர்ல நாலு பொண்டுக ஓடிப்போயி ஒரு பொடவைய போர்த்தி அவனுங்க கிட்டயிருந்து போராடித்தான் விடுவிச்சி கூட்டியாந்துச்சிங்க. அந்த பொண்ணு ஆயாசம் வந்து கீழ விழுந்துடிச்சாம். இந்த ராஸ்கோலுங்க அப்பவும் வுடலீங்க..சொந்த ஜனக்கட்டு ஜாஸ்தின்ற திமிரு அவனுங்களுக்கு. இதுக்கப்புறமும் ஊரு சொம்மா இருக்குமா? அப்புறம் ஊருன்னு எதுக்கு இருக்குது.? சொல்லு சார். இதுல நாங்க யாரும் எங்க சாதிக்காரனாச்சேன்னு பாக்கல. ஒரு பொம்பளைக்கு நடந்த கொடுமை பொறுக்காமதான் இங்க கூடி நிக்கிறோம். இத .நாங்க பார்த்துக்கறோம். என்னா கூப்டு திட்டி எச்சரிக்கை பண்ணி அபராதம் போடுவோம்.”

இன்ஸ்பெக்டர் எதுவும் பேசாம வந்ததுக்கு செலவுன்னு பணம் புடுங்கிகிணு கெளம்பிப் பூட்டாரு அவரு போனவுட்டு .கொஞ்ச நேரத்துல இன்னிக்கும் வெறுங்கையோடதான் திரும்பி வந்தான் ஊர்சேவன், வேல இருக்குது இப்ப வறதுக்கு இல்லன்னு சொல்றாங்கய்யான்னு சொன்னான். அவ்வளவுதான் இந்த மாதிரி ஊருக்கு அடங்காதவங்கள இன்னா செய்றதுன்னு ஊருவழக்கம்னு ஒண்ணு இருக்குது. அது ஆளை ஊரைவுட்டு விலக்கி வெக்கிறது மாதிரி இல்ல. இது வேறமாதிரி. மொரட்டடி.. அவன் எம்மாம் பெரிய கொம்பன்னாலும் தப்பிக்க முடியாது.வுடமாட்டாங்க. ரொம்ப நாளா அந்த மொறைக்கு சந்தர்ப்பம் இல்லாமலிருந்து போன வருசந்தான் அதுக்கு வேளை வந்துச்சி. இதுக்கு முன்ன ஊரு பெர்தனம் பார்த்துக்கிட்டிருந்தது ஊரு இருந்தாங்குடி வம்பன் மாணிக்கம். வம்பன்ற பட்டப் பேரு ஊர் பண்ண குசும்பு. ஊரு கணக்குல ஏதோ தப்பு இருந்துச்சின்னு நடந்த வாய்ச்சண்டையில இந்த பெர்தனமும் வாணா, ஒரு மயிரும் வாணான்னு சொல்லி தாம்பூலத்த வெச்சிப்புட்டு பூட்டான். ஊருகூடி கோடிவூட்டு உத்தண்டிய பெரிய பெர்தனமா நியமிச்சாச்சி. ரெண்டுமாசமாச்சி இன்னும் கணக்கு வழக்க ஒப்படைக்கல. கேட்டுக்கேட்டு கணக்கு நோட்டுங்க மட்டும் வந்துச்சி. கையிருப்பு பணம் வரல. மறுபடியும் கேட்டுக் கேட்டு நச்சரிச்சதில ஒருமாசம் கழிச்சி பணம் வந்துச்சி. அப்பிடியும் ரூபா பத்தாயிரத்தை நிறுத்திக்கினான். இன்னா வேல இது?.

ஊர்லியே பெரிய பணக்காரன். ஏரிக்குக் கீழ மொத மடையில பதினஞ்சி ஏக்கரா பூமி இவன்து. மனுசனுக்கு மொத மடையில பூமி தகையறதுன்றது பூர்வபுண்ணியம். தண்ணி அருந்தட்டலு காலத்தில கூட ஏரிக்குக் கீழ ஊத்து ஓட்றதிலேயே கழனியில தண்ணி பெரளும். பெரள்ற தண்ணியில சேடை கலக்கி வெதை வுட்டுப்புட்டு வந்துட்டா, அறக்க கோணியோட போனா போறும்னு சொல்றது. இதில்லாம அந்தாளுக்கு டவுன்ல பெட்ரோல் பங்க்கு, காந்தி மார்க்கெட் பக்கம் டெக்ஸ்டைல் கடை, அப்புறம் ரியல்எஸ்டேட் பிஸினஸு வேற. இதுல பத்தாயிரம் ரூபான்றது சோத்தில சுண்டாங்கி. ஆனா வீம்புக்கு அடாவடி பண்றான்.. கடைசியா ஊர் அறுவதுங்கூடி ஒக்காந்துக்கிணு அந்தாள விசாரிக்க கூப்டாங்க. “வேல இருக்குது இப்ப வரறதுக்கு இல்ல. அடுத்த வாரம் பார்க்கலாம்னு சொல்லிட்டு ஊர்க்காரன்களயும், பெர்தனத்தையும் அசிங்கமா திட்டியிருக்கான்..ஒண்ணும் புடுங்க முடியாதுன்னு கொக்கரிச்சிருக்கான். அவ்வளவுதான் பொங்கியெழுந்த ஊரு கெளம்பி அவன் வாசலாண்ட போயி நின்னுடுச்சி. வெளிய தயாரா காரு நிக்குது. டவுனுக்குக் கெளம்பறான் போல. பளிச்னு கதர் சோமன், கதர் சொக்கா போட்டுக்குணு வெளியே வந்தான்.

நாலுபேர் ஓடிப்போயி, அந்தாளு டாய்!..டாய்!..ன்னு கத்தக்கத்த, வலுக்கட்டாயமா ஆள அமுக்கி சட்டைய கழட்டி, சோமன உருவி, நிக்கர், பனியனோட நிக்கவெச்சி கைங்கள பின்னால வளைச்சி கட்டிட்டாங்க.. ஊரு வேடிக்கைப் பாக்கறமாரி தெரு வழியா கூட்டிம் போனாங்க. ஊரோட ஒக்க நாட்டோட நடுவன்னு ஒத்துவாழாம திமிராட்டம் ஆட்றவனுங்கள ஒக்க தட்ற மொரட்டு வழி இது. தடிதடியா அவன் புள்ளைங்க டாய்!..டாய்!..னு ஓடியாந்தாங்க. வந்தவன்க கும்பலைப் பார்த்துப்புட்டு பம்மினாங்க. வம்பன் இத்த எதிர்பார்க்கல. நம்ம இருக்கிற அந்தஸ்த்துக்கு எவனால என்னா பண்ணமுடியும்னு கெர்வியா இருந்துட்டான். பணத்த இப்பவே குடுத்திட்றேன் விட்ருங்கன்னு அழமாட்டாத குறையா கெஞ்சறான். அதுக்கு பெர்தனம் “மாணிக்கம்! நிலுவை பணம்கூட பெருசு இல்லப்பா, ஊர நீ இன்னா மதிச்சன்றதுதான் இங்க நிக்கிது. மூணு மாசத்துக்கு மேல பொறுத்தாச்சி. ஊர் அறுவதையும் மதிக்காதவனுக்கு இதான நம்மூரு மொற?. ஒனுக்கு தெரியாதாப்பா. இனிமே. எத சொல்றதானாலும் கோயிலாண்டதான் நீ வந்து சொல்லணும்.”—- கூட்டம் கொல்லுன்னு சிரிச்சிது. ஒன்றிரண்டு நையாண்டி பேச்சுக்களும் எழுந்தன. அப்படி எதிரியை அசிங்கப்படுத்தணும்ன்றது சம்பிரதாயம். அத்தோடபாக்கி ஐயாயிரம் பைசலானதோடு, வம்பன் இருக்கிற எடம் தெரியாம போச்சு. வம்பன் இருக்கிற அந்தஸ்த்துக்கு போலீஸுக்குப் போயிருக்கலாம். ஆனா எத்தினி நாளைக்கு போலீஸ் வந்து பாதுகாப்பு குடுக்கும்?.அந்த பாயிண்ட்லதான் எப்பிடியாப் பட்டவனும் ஊர்கட்டுக்கு அடங்கியாவணும். இத்த படிக்கிற உங்களுக்கெல்லாம் இது தப்பான மொறையா தெரியலாம். ஆனா மனுசனுக்கு ஒரு திட்டம் இருக்கணும்.. அது இல்லாததினாலதான் இன்னிக்கு தலைக்குத் தலைக்கு ஆட்றான். அதால போலீஸ்காரன் பொழைக்கிறான்.

அன்னைக்குக் கத அன்னியோட போச்சின்னு. மறுநாள்லயிருந்து ஊரு பழையபடி வம்பன் மாணிக்கத்துக்கான எல்லா மரியாதையையும் குடுத்துக்கிணுதான் இருக்கணும்,இருக்குது.. பழையபடி ஊர்ல நடக்கிற முக்கிய விஷயங்கள் எல்லாத்துக்கும் அவரையும் முக்கியஸ்தரா கூப்பிட்டுக்கிட்டாங்க. அதுக்கப்புறம் எவனாவது அவர்கிட்டஏதாவது எக்குதப்பா பேச்சு பேசினான்னு வெய்யுங்க, கூப்டு ஊர்ல நிக்கவெச்சிடுவாங்க.

கோயில் திட்டுல ஊரே திரண்டு நிக்கிது. எதிர சாரங்கன் பங்காளிங்கள கைகளை பின்னால கட்டி உக்கார வெச்சிட்டாங்க. .வலது பக்கம் சற்று தூரத்தில் சாரங்கனும்,அவன் பொண்டாட்டியும், தலைகவுந்துக்கிணு நிக்கிறாங்க. .அவங்களுக்கு பின்னால சாரங்கன் வூட்டு கும்பல் தெரண்டு நிக்குது. இந்தப் பக்கம் கதிரையும், அவன் பொண்டாட்டி பவுனையும் ஒரு ஓரமா குந்த வெச்சிருந்தாங்க.. பவுனு முந்தானியால முக்காடு போட்டுக்கிணு தலை கவுந்துக்கிணு கீறா. மொகம், கழுத்தெல்லாம் கீறல் காயங்க. பெரிய பெர்தனம் பேச ஆரம்பிச்சாரு.. “ ஏம்பா! பவுனு பொண்ணு அப்பிடி இன்னா சொல்லிப்புட்டான்னு இத்தினி பேரு சேர்ந்துக்கிணு இந்த அக்கிரமத்த பண்ணீங்க?”—ஒருத்தனும் வாயைத் தொறக்கல. தடிதடியா நாலு ஆளுங்க அடிக்கிறமாரி கிட்ட நெருங்கவும் . . “எங்க சாரங்கன் சம்சாரத்த தப்பா பேசினாள்.” “இல்லாத பொறக்குமா?, அள்ளாத கொறையுமா?.—-ஒருத்தன் சொல்ல கொல்லுனு சிரிப்பு எழுந்துச்சி. ஊராரின் வதை படலம் ஆரம்பிச்சாச்சி.. “ஏம்பா! நாமதான் தப்பா நெனச்சிக்கிணோமா. அந்த மீசைக்கார வாத்தி சாரங்கன் வூட்ல கல்லுக்கா ஆட்றதுக்கு வர்றாம்போல.”—–மீண்டும் சிரிப்பலை எழுந்துச்சி.. “இவனுங்களையே கேட்டுங்கீறதில இன்னா இருக்கு. சம்பந்தப்பட்ட சாரங்கனையும், அவன் பொண்டாட்டியையும் விசாரிங்கய்யா…” ”ஆமாமா. பாலன் சொல்றதுதான் சரி. மாமா மொதல்ல அவங்கள விசாரிங்க..ரெண்டுபேரையும் விசாரிச்சாதான் உள்ளது தெரியும். ..” “அதுவும் சரிதான்.”.—–சொல்லிவிட்டு ஊர்சேவனைப் பார்க்க, அவன் போய் சாரங்கன் பக்கத்தில நிக்க அவங்க ரெண்டு பேரும் எழுந்து நின்னாங்க. “ஏம்மா கனகா! உன் வூட்டுக்கு யாரோ மீசைக்கார வாத்தி அப்பப்ப வர்றானாமே. எதுக்கு வர்றான்?.” கும்பல்ல இருந்து ஒருத்தன் ”ஆங் பல்லாங்குழி ஆட்றதுக்கு.”.——கொல்லென்று சிரிப்பு எழுந்தடங்கியது. அங்கிருந்த பொண்டுகள்லாம் சத்தமில்லாம ஐயோன்னு நின்னுதுங்க. “சே! டேய்! சாரங்கா! இன்னா இதெல்லாம்?..” “ஆங் அவனைக் கேளு. பொட்ட கம்மனாட்டி.. இவன் ஒழுங்கா இருந்திருந்தா மீசைக்காரன் ஏன்யா இங்க வர்றான்.?. அவனுக்கும் இவுளுக்கும் எம்மாம் தொவுரு இருக்கணும்?. இவள வுடக்கூடாது. கண்ணெதிர சோரம் போறவள கண்டந்துண்டமா வெட்டத்தேவல? வுட்டு வெச்சிருக்கான் பாரு. அப்பிடியே .கூறுகூறா வகுந்திருக்கணும்..” —– ஒருத்தன் ஆத்திரத்துடன் கத்தினான்.கேட்டுக் கொண்டிருந்த பொம்பளைங்க கூட்டத்திலிருந்து வாய் துடுக்கான ஒருத்தி மெதுவான குரலில். ”ஆமாமா வீராதி வீரனுங்க சூராதி சூரனுங்க அப்பிடியே வெட்டி வகுந்துடுவாங்க. நம்மூரு ஆம்பளைங்க எம்மா யோக்கியங்கடீ?. தப்பாம கூத்தியா வூட்டுக்குப் போற யோக்கியங்களாச்சே….”—- பொம்பளைங்க வெளியே தெரியாதபடி கள்ள சிரிப்பு சிரிச்சிக்கிட்டாளுங்க. ஒரு கெழவி ரகசியமா கண்களை உருட்டி “டியேய்! வாய அடக்குடீ. அங்க கேட்ரப் போவுது.அப்புறம் ஒம் பொடவைக்கும் பங்கம் வந்துடும்…” “க்கும் ஆன்னா ஊன்னா முண்டைங்களுக்கு இதான தெரியும்? .ஆமாம் இதுவரைக்கும் ஊர்ல அப்பிடி எம்மாம் பேரை வெட்டி வகுந்துப்புட்டாங்களாம்?.” —– வாய்துடுக்குக்காரி முணுமுணுப்பாய் பேசினாள்.கெழவி உடனே அடி குரலில்

” அடி பொண்ணே! தெரியல?,மீசை அசலூரான்றதாலதான் அகல கடையறானுங்கடீ.. இவ ஒரு துப்புகெட்டவ உள்ளூரான அதக்கியிருந்தா சங்கதி கமுக்கமா போயிருக்குமில்ல.”—–பொண்டுகளுக்குள்ள குபீர் னு சிரிப்பு பொத்துக்குச்சி…சின்ன பெர்தனம் பொம்பளைங்க பக்கம் திரும்பி முறைக்க, அடங்குச்சி

“அட! இவன் இன்னாய்யா பண்ணுவான் தேவாங்கு மாதிரி பொறப்பு,. அது சும்மா குதிரகணக்கா இருக்குது அதான் அடங்கல, தளத்தி வுட்டுட்டான். ஒறவு முறையாள் மூத்திரத்த முழுங்கவும் முடியாது, துப்பவும் முடியாது”– ன்ற கதைதான்யா.இன்னா பண்ணுவான்?.”—– கூட்டத்திலிருந்து கைத்தட்டலும், சிரிப்பும் எழுந்தடங்கிச்சி.. ”சாரங்கன் கடைய தெறக்க அப்படி போனவுட்டு மீசைக்காரன் சடக்குனு வந்திடுவான்ல.?.”—கனகா மொவத்த பொத்திக்கிணு குலுங்கிக் குலுங்கி அழுவுறா. இதுவரைக்கும் பேசாம நின்னிருந்த சாரங்கன் மொததடவையா வாயைத் தொறந்தான். “மாமா! இவ ஒரு பாவமும் அறியாதவ. எனக்குத் தெரியும். அது எனக்குத்தான தெரியணும்?. இப்படி ஒரு அத்து இல்லாம ஆளாளுக்கு பேசறீங்களே?.” –பரிதாபமாக கேட்டான். அதுக்கு சின்னபெர்தனம் “ஆங்! அங்காடிக்காரிய சங்கீதம் பாடச்சொன்னா, வெங்காயம், கறிவேப்பிலைன்னுதான் பாடுவா. ஆங்! சாரங்கா! அதுக்கு ஒம் பங்காளிங்கள அடக்கி வெச்சிருக்கணும். ஒண்ணுமில்லாமயா மீசைக்காரன் அப்பப்ப வர்றான்?…” —மீண்டும் கூட்டம் கெக்கலிச்சிது. பொம்பளைங்க கும்பல்ல இருந்த ஒரு நடுத்தர வயசுக்காரி அடிக்குரலில் “ சின்னபெர்தனமாம். ஹும்! ஆளப்பாரு பில்தடுக்கி பயில்வான்.. டீயேய்! எவளும் அவன் கிட்டபோய் சிரிச்சி வெக்காதீங்கடீ! எட்டி கையப் புடிச்சிடுவான். மொறை தெறைலாம் கெடையாது இவனுக்கு.”.— எல்லா பொண்டுகளும் அவனைப் பத்தி சிரிச்சி கிசுகிசுன்னு பேசுதுங்க., ஊர்கூட்டத்தில அங்க ஒரு கூத்து நடக்குதுன்னா, தனியா இங்கியும் ஒரு கதை நடந்துக்கிட்டுதான் இருக்கு. .அந்தப் பக்கம் கனகா அழுதுக்கிட்டே “நான் ஒண்ணும் அவிசாரியா பொறக்கல.. எங்க வூட்ல அப்பிடி வளர்க்கல.” “ ஆமா எல்லாந்தெரியும். ஒண்ணுந்தெரியாத பாப்பா போட்டுக்கினாளாம் தாப்பா.” —கூட்டம் பெருத்த சத்தத்துடன் சிரிச்சிது. “ஐயோ அடபாவத்த, இந்த பொண்ணுகிட்ட தப்பில்ல போல கீதுடீ..”—-கெழவி தனக்குத்தானே பேசிக்கிட்டா அந்நேரத்துக்கு ஒருத்தன் கனகாவைப் பார்த்து அறுவறுப்பான அபிநயம் காட்டி சிரிக்க, அவள் ஓன்னு கத்திக்கதற,, பார்த்துப்புட்டு பொம்பளைங்க கூட்டம் ஐயோ!…ஐயோ!…ன்னு தெகைச்சி நிக்க,, திடீர்னு கதிர்வேலு தடுக்க தடுக்க பவுனு அவனை ஒதறிட்டு ஓட்றா. “தே சும்மாயிரு! இந்த அநியாயத்த பார்த்துப்புட்டு பொட்டச்சிக்குப் பொட்டச்சி பதைக்கலன்னா, எதுக்கு இந்த ஜென்மம்?.”—சொல்லிட்டு ஓடிப்போயி கனகாவை அணைச்சிக்கிணா. மெதுவான குரலில் .

“ தே! எக்கா! ச்சீய்! உள்ள கீலகம் இல்லாதவ இன்னாத்துக்கு அழுவற?. அய்யே கண்ண தொடச்சிக்கமே.அழுவாத. அழுவ அழுவதான் இந்தஊரு ஆம்பளைங்களுக்கு எளப்பம். ஜாஸ்தியாவும்.அய்யே! கண்ணை தொடச்சிக்கமே..”

“தோ பவுனு! இன்னா?, தூரப்போ உன்ன யாரு இங்க கூப்டது?..”.

“ பவுனு இன்னா தெகிரியமா பாஞ்சிட்டா பார்த்தீங்களாடீ.”——கெழவி

“க்கும்! முச்சூடும் நெனைஞ்சிட்டவளுக்கு முக்காடு இன்னாத்துக்கு” பெண்கள் கூட்டம் மொவரையில கைய வெச்சி பேசிக்கிட்டுது…

”.ஐயா பெரிய மனுசங்கள!, பெர்தனக்கரரே! உங்க எல்லாரையுந்தான் கேக்கறேன். .இவ உத்தமியா தட்டுவாணியான்னு கட்னவனுக்கு தெரிஞ்சா போறாது?.உங்களுக்கு காட்டணுமா?.”

—–உடனே கூட்டத்திலிருந்து ஏய்…ஏய்!னு கோவக்குரல் எழுந்திச்சி. சின்ன பெர்தனம் “ஏய்! ஒதடா அவள. இன்னாடா பொட்டக்கழுத மணியம் பாக்க வந்துடிச்சா?.தள்ளுங்கடா அப்பால. ஊருக்கே புத்தி சொல்லுதா?.”.—-என்றார்.

பவுனு இதுக்கெல்லாம் அசந்து போறவ இல்ல. வாயாடியாச்சே. ” பெர்தனக்காரரே! கனகாக்கா இந்த எடத்தில நின்னு ஆமாம் நானு மீசைக்கார வாத்திய வெச்சிங்கீறேன்னு சொல்லிப்புட்டா அப்புறம் இன்னா பண்ணப்போற?. சரீ இல்லேன்னு சொல்லிப்புட்டா இன்னா பண்ணப்போற?.அட சொல்லன்யா..” “ஏய்! ஜ்யேய்! அடீங்.”—–கூட்டத்திலிருந்து மூலைக்குமூலை கோவக்குரல் எழுந்துச்சி. பவுனு எதுக்கும் அசர்றவ இல்ல.

”பொட்டச்சிங்க சண்டையில வேண்டா ஒண்ணு தப்பா சொன்னா, நான் ஒண்ணு சொன்னேன். அத்த மோந்து மோந்து, நாங்க ஊருக்கு ஒத்த குடின்றதால கேக்க நாதியில்லன்னு என் ஜென்மமே சிவிங்கிப் போனாப்புல அப்பிடியொரு அக்கிரமத்த எனக்கு பண்ணிப்புட்டாங்க. நானு கெயக்க போறமட்டும் எனுக்கு உள்ளே அந்த கறை கீதோ இல்லியோ, இந்த ஊரு அதை வெச்சிக்கிணுதான் இருக்கப்போவுது”—- அப்புறம் நாலு வார்த்த வெளிய சொல்லமுடியாதபடியா வெண்டைவெண்டையா அவனுங்கள திட்டிப்புட்டு கொஞ்ச நேரம் அழுதாள். ”

”நான் என் வூட்டுக்காரனுக்கு மட்டும் முந்தாணி விரிக்கிறது சத்தியம்னா இவங்கள அதோ எரிஞ்சிம்போறான எங்கப்பன் அவன் பாத்துக்குவான்யா. கேக்கறேன் தப்பு செஞ்சவனத்தான கொண்ணாந்து கட்டி வெச்சி தண்டனை குடுக்கிறது ஊரு வழக்கம்?. அப்பிடித்தான வம்பன் ஐயாவுக்குக் செஞ்ச?.அதான ஊரு மொறை?. தப்பு செஞ்சவங்க அத்தினி பேரும் அதோ ஒக்காந்துங்கீறாங்க. அவங்களை வுட்டுப்புட்டு இங்க ஒரு பொட்டச்சிய கொண்டாந்து நடுவுல நிக்கவெச்சி, ஊரு முச்சூடும் கூடிக்கிணு நாக்குல நரம்பில்லாம வாயில வந்தமாரில்லாம் கேக்கறீங்களே., எனுக்கு இந்த பாவிங்க செஞ்சதுக்கும் இங்க நீங்கள்லாம் கும்ப கூடிக்கிணு இந்த அக்காவுக்கு செய்றதுக்கும் இன்னா வித்தியாசம் கீது? சொல்லுய்யா.. இப்ப ஒரு கேடுகெட் நாயி ஜென்மம் அவள பார்த்து சைகை காட்டுச்சே பாக்கலே. ச்சீ! வாந்தி வருதுய்யா.த்தூ! .இவங்களுக்கெல்லாம் யாருய்யா கூலி குடுக்கிறது?.” —-எல்லாரும் ஏய்!…ஏய்!..அடீங்..தூர போம்மே ன்னு சத்தம் போட்டாங்களேயொழிய, அந்த சத்தத்தில இப்ப.சுரம் கொறைஞ்சிப் போயிருந்துச்சி. பெர்தனம் நேரா பவுனை பார்க்காம, தூரப்பார்வை பார்க்க, சின்ன பெர்தனம் கோவத்துடன் பொம்பளைங்க கூட்டத்தைப் பார்த்து

“தே! பாஞ்சால! இன்னா? எல்லாரும் இவள பேசவுட்டுட்டு வேடிக்கை பாக்கிறீங்களா?.ஆங்! அம்மாந்தூரம் ஆயிப்போச்சா?” —-அதுக்கு பொம்பளைங்க கூட்டம் அசைஞ்சி குடுக்கல.வாயையும் தொறக்கல. மவுனமா இருந்துச்சிங்க ..பின்னாலிருந்து ஒரு குரல். “

.அவ கேட்டதில இன்னா தப்பு?.” —.அதைத் தொடர்ந்து பொண்டுகள் பக்கமிருந்து கசமுசன்னு பேச்சு கெளம்பியது. “ஏய்! யாரது கேட்டது?. முன்னவா.”. “ அட ஒத்துங்கடீ”—–கிழவி தள்ளிக் கொண்டு முன்னே வந்தாள். ”.இன்னாடா?”— கோபமாய் சீறினாள்.. ”நாந்தான்டா கேட்டேன்.. தப்பு செஞ்சவன்களுக்கு அங்க சிம்மாசனம் போட்டு ஒக்கார வெச்சிப்புட்டு இங்க பொட்டச்சிய சபையில நிறுத்தி துச்சாதனன் மாரி அக்கிரமத்த பண்றீங்களே இது பெரிய மனுசன்க வேலையா இது?. ச்சீய்! பில்லகா பசங்க”——-அதுக்கு ஆம்பளைங்க பக்கமிருந்து ஏய்!..ஏய்!..னு எதிர்ப்பு கூச்சல் கெளம்பியது..

திடீர்னு அந்த நடுவயசுக்காரியும்,கிழவியும், போய் கனகாவையும், பவுனையும் கையைப் புடிச்சி இழுத்தாங்க. கிழவி உரக்க குரல் குடுத்தாள் .

”ச்சீய்! வாங்கடீ.போக்கத்தவங்களே!.இந்த கல்லெடுப்பு ஊர்ல ஓட்றவனும் அம்மணம், தொரத்தறவனும் அம்மணந்தான்டீ .த்தூ!.” — பெரியபெர்தனம்,சின்னபெர்தனம், இன்னும் இதர முக்கியஸ்தர்கள் அத்தனை பேரும் அதட்டி கூச்சல் போட்டுக் கொண்டிருக்கும்போதே அமைதியாக அவர்களோடு மொத்த பொம்பளைங்க கூட்டமும் கும்பலாய் வெளியேறியது.

****************************************************************************

நன்றி —— `தாமரை’—ஜூன் 2014 இதழில் பிரசுரமான கதை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *