அப்பாவின் நண்பர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: October 10, 2017
பார்வையிட்டோர்: 7,474 
 
 

எல்லாருக்குமே நேரான படிப்பு அமைவதில்லை. உயர்வகுப்பு வெறும் அனுபவங்களைக் காவியதோடு முடிந்து விட, கொக்குவில் தொழினுட்பக்கல்லூரியில் புதிதாக படம்பயில்வரைஞர் வகுப்பில் படிக்க குலேந்திரன் தெரிவாகி இருந்தான். முதல் நாள் பஸ்ஸில் வந்திருக்கலாம். ஓட்டைச் சைக்கிளில் உழக்கி வேர்க்க விறுவிறுக்க வந்திருந்தான். உடம்பு சூடாக இருந்ததது. ஓபிசில் இருக்கிற கிளார்க், “வகுப்பு மாடியில் இருக்கிறது” என சொல்ல மேலேற காற்றும் வீச இதமாக இருக்கிறது. உடம்பில் ஓடி மறையிற குளிரை அனுபவித்தான். “முருகா, இந்த வகுப்பாவது ஒரு வேலைக்குரிய தகமையை பெற வைப்பாயா?” என வேண்டிக் கொண்டு கலகலவென இருக்கிற வகுப்பினுள் நுழைந்தான்.

அவனைக் கண்டு விட்ட சந்திரன் “ஹாய்! குலேந்திரன்” என்று அவனிடம் வந்தான். இவனுக்கும் ஆச்சரியத்தால் கண்கள் விரிகின்றன. சந்திரனை சிறு வயதிலிருந்தே தெரியும். அப்ப, இவனும், அவனும் குட்டியர்கள். அவ்வளவாக பழகியதில்லை, ஆனால் தெரியும் ஆச்சி வீட்டிற்கு அயலிலே இருந்தவர்கள். அவனுக்கு 2 அண்ணரும், ஒரு தங்கச்சியும். சின்னண்ணன் இவனுடைய அண்ணருடன் ஒரே வகுப்பில் படிக்கிறவன். பெரியவர், இவனின் மாமாவின் (அம்மாட கடைசித் தம்பி) நண்பர். அவர்களுடைய அப்பர் கொழும்பிலே பிரபல கம்பெனி ஒன்றிலே நல்ல பதவியிலே இருந்தார்.. இப்ப அவரும் காலமாகி விட்டார் என்பது தெரியும்.

ஆச்சி வீட்டிலே, காலம் சென்ற சுந்தரி சின்னம்மாவின் பிள்ளைகளும் இருந்தார்கள், இவனை விட மூத்தவர்களும்; அக்கா, அண்ணாவின் வயசு மட்டத்தவர்கள், அவர்கள் தான் இவர்களை மேய்க்கிறவர்கள். அக்காவும், அண்ணாவும் அங்கே இருந்தே இந்து, மகளிர் கல்லுரிகளில் படித்துக் கொண்டிருந்தார்கள். சனி, ஞாயிறுகளில் சிலசமயம் தான் கிராமத்து வீட்டுக்கு வருவார்கள். அம்மாவோடு இவனோ, தங்கச்சிகளில் ஒருவரோ அடிக்கடி ஆச்சி வீட்ட விசிட் பண்ணுவார்கள் . வருடாந்த‌ பள்ளி விடுமுறையில் ஓரேயடியாய் சென்று ஒன்று, இரண்டு கிழமை என்று ஆச்சி வீட்டிலே வந்து தங்கி விடுவார்கள். அப்பா, அவ்வளவாய் அங்கே வருவதில்லை.
சந்திரன் குடும்பத்தினர், வீடு மாறி சென்று விட்டாலும் அண்ணர், மாமா மூலமாக பழக்கம் தொடர்ந்தது. .மாமாவோட வார ரவி, “என்ன குலா ஐய்யா, எப்படி இருக்கிறே” என்று இவனை விசாரிப்பார். இவனை ‘ஐய்யா’போட்டு கூப்பிட்ட ஆள் அவர் ஒருத்தர் தான்.

சந்திரன் மத்திய‌ கல்லூரியில் படிக்கிறான் என்று தெரியும். உயர் வகுப்பில் தவறி விட்டால், அடுத்தது… தொழினுட்ப கல்லூரி தானே… வருகிறார்கள்.

“என்ன, நீ இங்கே?” இவனை விட படித்தவன் ,ஈழநாடு மாணவர் பகுதியில் எல்லாம் எழுதுகிறவன்.

.”உயிரியல் பிரிவில் படித்தோமில்லையா! இங்கே அரைவாசிக்கு மேலே அந்த பிரிவினர் தான். நீயும் அந்த பிரிவு தானே.” சிரிக்கிறான்.

உயர் வகுப்பில் முதல் வருசத்தில் அவனோட படிக்கிற போது குமணன் பல தடவைகள் எச்சரித்திருக்கிறான்.

“டேய் உயிரியலை எடவாடே, வகுப்பிலே நாலோ, ஐந்து பேர்கள் என தேறுகிறவர்கள். கணிதப் பிரிவில் படி. கட்டாயம் கம்பஸ் போவாய்”

அப்ப, அதை யார் கேட்டார்கள். அவன் கட்டிடக்கலைஞர் படிக்க மொராட்டுவா போய் விட்டான்..

சந்திரன், தன்னுடைய‌ நெருங்கிய நண்பன் கிருஸ்ணனை “இவன் கிற்றோ” என அறிமுகப்படுத்தினான். சிறிதாக காந்தி அணியிற மாதிரி உருண்டையான பிரேம் போட்ட கண்ணாடி அணிந்திருந்தான். முகத்தில் முஸ்பாத்தித் தனம் சுடர் விட்டது. மலர்ந்து சிரித்து கையை நீட்டுகிறான். சந்திரனை விட உயரம் குறைவு.

“இவன் நல்லாய் புல்லாங்குழல் வாசிப்பான்.” கூறுகிறான். சிரித்தான்.

“இவனுடைய அக்கா, தங்கச்சிமார் பாட்டுக்காரிகள், அண்ணர் மிருதங்கம். ஒருநாள் பெருமாள் கோவில் வந்து கச்சேரி செய்யிற போது கேட்டுப் பாரேன், தெரியும்”என்று சொல்ல, “அளக்கிறான்”என்று கிற்றோ பெரிதாய் சிரித்தான்.

சந்திரன்,வகுப்பிற்று வந்த பிறகு சிலரை நண்பனாக்கிக் கொண்டிருந்தான்.

“இவன் சுந்தா, கமல், இவர்களைப் பற்றி நானும் கூட இனிமேல் தான் தெரிய வேண்டும்.

வகுப்பு 35, 40 பேர்களால் நிரம்பியிருந்தது. அரைவாசிப் பேர்கள் பெண்கள். அவர்களை எல்லாம் போகப்போக அறிய வேண்டும். கடைசி வரிசைக்கு கூட்டிச் சென்றான்.

.”இங்கையும் கடைசியா?”என குலாய் கேட்க,

“எங்களிற்கு விதித்தது இது தானே”என்று கூறி கிற்றோ சிரித்தான்.

வகுப்பில் ஒவ்வொரு ஆசிரியர்களாக வந்து தம்மை அறிமுகப்படுத்தி விட்டு, ஒவ்வொருவரைப் பற்றியும் துப்பு துலக்கிறது மாதிரி கேட்டார்கள்.

பழைய ஒ.லெவலில் பத்துப் பாடங்கள். இதிலேயும் பத்துப் பாடங்கள். பிறகு, நாலு பாடங்களாக கதிரையை தேய்த்து விட்டு திரும்பவும் பத்து …என்கிற போது அலுப்பாக இருந்தது.

நிலவளவை ஆசிரியர், சதாசிவம் வந்தார். கொஞ்சம் உருளையான தோற்றம். தலைமயிர் ..கறுகறுவென இருந்தது. முதுமை அவரை ஒன்றும் செய்யவில்லை. அவர் வித்தியாசமாக

“உங்கப்பா,அம்மா பேர் என்ன?என்ன செய்கினம்” என்று விசாரித்தார். தனது நண்பர்களை தேடியது போல இருந்தது.

குலேந்திரனைக் கேட்ட போது “அப்பா பாலசிங்கம், அம்மா புனிதா” என்றான்.

“டோல் பாலசிங்கமா?”என தனக்குள் கேட்டுக் கொண்டவர்

,”என்ன வேலை செய்கிறார்?’எனக் கேட்டார்.

“இளைப்பாரிய நிலவளவையாளர், இப்ப உயிரோட இல்லை” என்றான்.

“அவனே தான்” என்று தன்னை மீறிக் கத்தியவர்,

“டேய், உங்கப்பா ,நான், சுந்தரம், இன்னொரு பாலசிங்கம் இருக்கிறான், அவனை வேறு படுத்த சோர்ட் பாலசிங்கம் என்று கூப்பிடுவோம். எல்லோரும் தியத்தலாவ பயிற்சிக் கல்லூரியிலே படித்தோம்” என்றார்.

“உங்கப்பா ஒரு அப்துல்கலாம்டா. வகுப்பிலே வைக்கிற பரீட்சைப் பேப்பர்களை விரைவாக செய்து முடித்து விடுவான். அதனால், கூட படித்த சில சிங்களவர்களிற்கு எப்பவும் உங்கப்பா மேலே ஒரு வித‌ பொறாமை இருந்தது.” என்று பழைய நினைவுகளில் கரைந்தார்.

அவருக்கு அவனைக் கண்டதில் பெரும் புளுகம்.

அம்மா கூறுறது அவனுக்கு ஞாபகம் வந்தது.

“அப்பா,வேலையை விரவாக முடித்து விட்டு தொழிலாளர்களுடன் சமமாக இருந்து குடிப்பாராம் அதை சிங்கள நிலவளவையார் ஒருத்தர் ‘வேலையில் குடிக்கிறார்’ என அடிக்கடி பெட்டிசன் எழுதி மேலே இருப்பவரிற்கு அனுப்பி விடுவாராம். அதனால் நெடுக விசாரணை என ஏற்பட்டு, கடைசியில் பத்து வருசம் வேலை செய்தாகி விட்டது என அலுப்படைந்து பென்சன் எடுத்துக் கொண்டு விட்டார்”.

சதாசிவம் சிங்களவர்கள் கோவம் பற்றிக் குறிப்பிடுகிறார்.

“இந்த பாடத்தில் பரிட்சையில் வித்தியாசமாக புள்ளிகள் போடப்படுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்”என்று தொடர்ந்தார்.

“கணக்குப் பாடத்தைப் போலவே இங்கேயும் ஒவ்வொரு ஸ்டெப்பிற்கும் புள்ளிகள் இடப்படும். ஆனால், அதிலே விடுற பிழைகளிற்கும் புள்ளிகள் இடப்பட்டு, நீங்கள் சரியாக செய்து எடுத்திருக்கிற புள்ளிகளிலிருந்து கழித்தே புள்ளிகளைப் பெறுவீர்கள். அதனாலே, எவருமே இதிலே எழுபது மார்க்ஸை தாண்டுவதில்லை” என்ற குண்டையும் தூக்கிப் போட்டார்.

வகுப்பில் தூய‌கணிதம், பிரயோகக்கணிதம் என இரு பாடங்கள் இருந்தன. அவை பழைய ஒ.லெவல் சிலபஸைக் கொண்டிருந்தன. இவர்கள் புதிய கல்விமுறையில் அகப்பட்டுக் கொண்டவர்கள். அதில் பத்தாம் வகுப்பே இல்லை. ஒன்பதாம் வகுப்பை அதற்கு தரம் உயர்த்தி பரீட்சைகள் வைக்கப்பட்டன. பிறகு, உயர் வகுப்பான‌ கணிதப் பிரிவில் தான் பழைய பத்தாம் வகுப்புக் கணிதங்கள் படிப்பிக்கப்பட்டன. இவர்கள் உயிரியல் எடுத்ததால் அந்த கணிதங்கள் தெரியாதவர்கள்.

மட்டகளப்பிலிருந்த சம்மாந்துறையிலிருந்து மாற்றலாகி வந்த சுப்பிரமணியம் ஆசிரியர் கணிதப்பாடங்களை படிப்பிக்க வந்தார்

.”பயப்படாதீர்கள்.புரியிற மாதிரி சொல்லித் தருவேன்”என்று உற்சாகப்படுத்தி பேசினார்.அப்படி முதல் நாளும் கழிந்தது.

கொஞ்சநாட்களிலே, நிலவளவைப் பாடமும், கணிதங்களுமே மிரட்டலாவை என்று அவர்களிற்குப் புரிந்தன.

சதாசிவம், அவனுக்கு அறிவுரை கூறும் உரிமையை எடுத்துக் கொண்டார்” நீ கசட்டிலே பார்த்து நிலவளவை ராட்ஸ்மன் பரீட்சைக்கும் அப்ளை பண்ணு, நானும் மற்றவர்களும் உதவுவோம்”என்றார்.அப்ப தான் அவனுக்கு நிலவளவையிலேயும் ட்ராவ்ஸ்மன் இருக்கிறதே தெரிந்தது..

“ஏதும் விளங்கவில்லை என்றால் சனிக்கிழமைகளில் பின்னேரம் போல வீட்ட வா! விளங்கப்படுத்துறேன் ” என்று கூறி, தனது விலாசத்தையும் சிறு பேப்பர் துண்டில் எழுதிக் கொடுத்தார்.

நண்பர்களை “அப்ளை பண்ணுவோமாடா?” எனக் கேட்டான்.

“இதிலே ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. புதிய தலைவலி வேண்டாமே. ஆனால், நீ மாஸ்ரரிடம் போற போது நாமும் வருகிறோம்”என்றார்கள்.

தபால்கந்தோரில், கசட் புத்தகத்தை எடுத்து தடவினான். அந்த விண்ணப்பம் கிடந்தது. கொப்பிப் பண்ணி, நிரப்பினான் அதில் 50 ரூபா காசோலையும் அனுப்ப கேட்கப்பட்டிருந்தது. அப்பா செத்தபிறகு அம்மா அவன் கேட்கிறதுக்கு மறுப்பு தெரிவிப்பதில்லை. பணத்தைப் பெற்று காசோலையாக மாற்றி தபாலில் வெற்றிகரமாக‌ அனுப்பினான்.

‘அதன் பரீட்சை’ கொழும்பில் மட்டுமே நடைபெறுவதாக இருந்தது. கொழும்பிற்கு போக முடியுமா எனத் தெரியவில்லை. ஆனால்,எல்லோரும் நடக்கும் என்றா முயற்சிகளில் இறங்குகிறார்கள்.

நிலவளவைப் பாட வெளிக்களப்பயிற்சி இரண்டு, மூன்று பாடநேரங்களையும் சேர்த்ததாக இருந்தது. மட்ட அளவியல் என கருவிகளுடன் வீதிகளில் இறங்கி விடுவார்கள். சதாசிவம் மாஸ்ரர் தான் தலைவர். ஏற்கனவே நிலவளவையாளர் கட‌ல் மட்டத்திலிருந்து இவ்வளவு உயரம் என அளந்து வீதிகளில் (பென்ஞ் …)அடையாளப் புள்ளிகளை வைத்திருப்பார்கள். அதைக் கண்டு பிடித்து அதை அடிப்படையாக வைத்து, அதில், ஒருவர் விசேசமான அளவுகோலைப் பிடிக்க, மட்ட தொலைகாட்டியை நிறுத்தி அதிலுள்ள வாசிப்புக்களை எடுக்கிறது சுவாரசியமாகவே இருந்தது. அப்படி வீதியின் ஏற்ற இறக்கங்களின் உயரங்களை கணித்தார்கள்.

மற்றது, ‘ காணி அளத்தல்’.அதற்கு முதலில் சங்கிலி அளவுநாடாவையும் ,தியோடலைற் கருவியையும் பாவித்தார்கள்.பிறகு, கயிறு கட்டியும் அதை சாதாரண அளவு நாடாவில் அளந்து கொண்டார்கள்.

கருவிகளில் தொலைநோக்கிக் ஊடாக ஒரு கண்ணைக் குறுக்கிக் கொண்டு கொக்கை குறிபார்த்து சுடுறது போல குறி பார்த்து வாசிப்புக்களை எடுக்கிற போது கொஞ்சம் திணறினார்கள். பயிற்சி போதவில்லை.நாகேஸ்,வடிவேலைப் போல கொக்கைப் பார்த்துச் சுட்டால் காகம் தொப்பென விழுகிறது போல் வாசிப்புகளும் எகிறச் செய்தன‌. இதற்கு ஏற்கனவே பயிற்சி இருந்தால் சற்று நல்லம்.சனசமூக நிலயங்கள் மரதன் ஓட்டம் வைப்பது போல அம்பு விடுற பயிற்சியையும் ஒரு விளையாட்டாக வைக்கலாம் தான். சுயராட்சியமில்லாததால் தமிழர்களின் நிறைய பாரம்பரிய விளையாட்டுக்கள் கவனிக்கப் படாதே இருக்கின்றன. இழப்புகள் அதிகமாக தெரிகின்றன‌.

காணி அளத்தலில் கவனத்தில் எடுக்க வேண்டிய மற்றொரு விசயம் இருக்கிறது.சிறிய காணிகளில் இது புறக்கணிப்புக்குரியது.

பெருங்காணிகளில் தவிர்க்க முடியாதது.புவி, சமமட்டம் போல தோன்றினாலும் அது வளைவான பரப்பைக் கொண்ட கோளம் தான். அந்த வளவைக் கண்டறிந்து கூட்டியோ,குறைத்தோ தான் உண்மையான தரவுகளைப் பெற்று பரப்பளவைக் காண வேண்டும்.அந்த செய்கை தான் கஸ்டமானது .சிதம்பரச்சக்கரமாக தலையை பிடித்து ஆட்டி வைத்து விடும்.

ஏற்கனவே புவியின் வளைவை அளந்து வைத்திருக்கிறார்கள்.பை.ஆர் வர்க்கம் போல இதற்கும் ஒரு சமன்பாடும் இருக்கிறது.எளிமையான விசயங்கள். ஆனால்,யாழ்நூலகங்களில் ஆங்கிலத்தில் கூட‌ நிலவளவைப் புத்தகங்களை தேடினீர்கள் என்றால் தோற்றுத் தான் போவீர்கள்.

வேற எங்கு தான் எடுப்பீர்கள்?

“கொழும்பு பெட்டாப் பகுதியில் பழைய புத்தகங்களை பரப்பி வைத்திருக்கிற வியாபாரிகளிடம் பெற அதிகமாக சந்தர்ப்பம் இருக்கிறது” என அங்கிருந்து வார கிராமத்தவர்கள் தெரிவித்தார்கள்.

அதற்கும் வழி வகைகள் தேட வேண்டும்.

ஆனால்,தமிழில் நிலவளவைப் பற்றிய புத்தகங்களே கிடையாது.10008 நிலவளவையாளர்கள் இருந்திருக்கிறார்கள்.அவர்களையும் குறை கூற முடியாது.எழுதுற குறிப்புக்கள் சரி பார்க்கப்பட வேண்டும்.எழுத்துப் பிழைகள் திருத்த வேண்டும்.புரூப் பார்க்கிறதுற்கு.தகுதியானவர்கள் வேண்டும்.அதாவது, சரிவர ‘எடிட்’ பண்ணப்பட வேண்டும்.தமிழர்கள் படித்தவர்கள் என்று சிங்களவர்களிற்கு எல்லாம் பொறாமை.ஆனால், அவர்களில் எத்தனைப் பேர்கள் விலாசம் காட்டிய துறைகளில் புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள்?.

அவர்களிற்கு எழுத வராது.டியூசனிலும் பலர் சிறந்திருக்கிறார்கள்.அவர்களும் கூட‌ எழுதவில்லை.

ஏன்,ஏன்?

‘புத்தகம்’ ஒன்று வெளி வருவது என்பது குழந்தையைப் பெறுவது போல பலவித சிரமங்களுடன் கூடிய‌ செலவான விசயம்.

நம்மூர் தர்மபத்தினிகளும் புருசன் புத்தகமாக்க எழுதி வைத்திருந்தால்,அதைத் தான் முதல்க் காரியமாக‌ குப்பைக்கு எறிந்து விட்டு,”வீட்டை பொறுப்பாய் பாருங்கள்”என்பார்கள்.

இதெல்லாம் ஒரு சமூகம் ‘அரசாங்கம்’ செய்ய வேண்டிய வேலைகள்.

நமக்கோ… குறைந்தப்பட்ச மாவது ஒரு மாகாணவர சை அமைய விடாது சிங்களவர்கள் இறைமைப் போராட்டம் நடத்துகிறார்கள்.

அதனால், எளிமையான பரீட்சைகள் எல்லாம் கூட‌ எமக்கு மல்லுக் கட்டுவதைப் போலாக்கப் பட்டுக் கிடக்கின்றன.ஆயுதப் போராட்டமும் பூதக்கண்ணாடியால் பயங்கரவாதப் போராட்டமாக சித்தரிக்கப்பட்டு நசுக்கப் படுகிறது. எப்படித் தான் நம்மவர்கள் விடுதலைப் பெறுவ தாம்?தெரியவில்லை.

புத்தரையையே மறந்து விட்டவர்கள் காந்திய போராட்டங்களை ஏறெடுத்துப் பார்க்கவா போறார்கள்?

நிலவளவையிலே,’கட்டை’ அடித்தல் என்ற செயற்பாடும் ஒன்றும் இருக்கிறது. அதை எப்படி மேற்கொள்வது. பற்றி இவர்களிற்கு விபரமாக‌ கற்பிக்கப் படவில்லை.

.சிலபஸிலேயும் இல்லை.

இவன், மட்ட அளவியல் மூலம் எடுக்கப்படும் தரவுகளைக் கொண்டு தான் சமவுயர வரைபடம் தயாரிக்கப்படுகிறதாக கொஞ்சம் அறிகிறான்.அவ்வளவு தெளிவாக அதிலேயும் அறிவு கிடையாது.சமவுயர வரைபடங்களை வாசிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

ஏற்கனவே பென்ஞ் அடையாளப்புள்ளியில் கடல் மட்டத்திலிருந்து எவ்வளவு உயரத்தில் நிலப்பகுதி இருக்கிறது என தெரிகிறது. அதைக் கொண்டு ஏற்ற, இறக்க தரவுகளை கடல்மட்ட உயரத்திற்கு காணலாம்.அதைக் வைத்து சமவுயர வரைப்படத்தையும் தயாரிக்கலாம்.

சொல்ல இலகுவாக இருக்கிறது. ஆனால்,தயாரிப்பது சவாலானது.

இவன் பிழையாக அறிந்து வைத்திருக்கிறான் என்றால்…அதற்கு புள்ளிகள் போடப்பட்டு சரியாக செய்தவற்றிலிருந்து வேறு கழிக்கப்பட்டு விடும்.

பண்ணிப் பாருங்கள்.நிலவளவைப் பாடம் மொத்தத்தில் கஸ்டமானது தான்..

சுந்தா,அவன்ர இடத்திலிருக்கிற நெப்போலியன் விளையாட்டுக்கழகத்திலும் இருந்தவ‌ன்.இடைக்கிடை குலாய்யின் தோளை தட்டி “தம்பி, பரீட்சைகளில் தேறுறது முக்கியமில்லை,பங்கு பற்றுறது தான் முக்கியம்.”என்று சொல்லிச் சிரிப்பான்.அவனிலே ஒரு சிறப்பு இருந்தது.புலோலிப் பக்க கோவில் திருவிழா ஒன்றிலே சிலம்பம் நிகழ்ச்சியும் இடம் பெறும். அதிலே, பயிற்சி செய்கிற ஆட்களில் அவனும் ஒருத்தன். “இவன் நல்லாய் சிலம்பு சுழட்டுவான்” என கமல் கூறினான்.

“கமல்,அநுராதப்புரத்தில் கடை வைத்திருந்து நல்லாய் இருந்த குடும்பத்தைச் சேர்ந்தவன். 77ம் ஆண்டு இடம் பெற்ற‌ கலவரத்தில் அவர்களது கடை எரிக்கப்பட்டு,சொத்துக்களை இழந்து ,சில நல்லிதயம் கொண்ட சிங்களவர்களால் காப்பாற்றப்பட்டு ஊர் திரும்பியவர்கள். அவனுடைய அப்பா அதிர்ச்சியில் நோயாளியாகி ஏழாதவராகப் போய் விட்டார்.கஸ்டதசையில் அவர்கள் வாழ்க்கை ஓடுகிறது” என்பதை அவன் பக்கத்தில் இல்லாத போது சுந்தா தெரிவித்திருந்தான். ஆனால், கமல் பகிடி விட்டு கதைப்பதில் வல்லவன்.அந்த குழுவில் மற்றவர்களிற்கு அப்படியான திறமை இருக்கவில்லை.கடவுள் சிலபேர்களிற்கு தான் சில திறமைகளை அளிக்கிறார்.

குலாய்யும், சந்திரனும் பழைய மாணவர் ஒருவரிடமிருந்த பரீட்சைப் பேப்பரிலிருந்து ஒரு கேள்வியை எடுத்துக் கொண்டு சதாசிவம் மாஸ்ரின் வீட்டிற்குப் போனார்கள்.அவனை ” இவன் என்ர நண்பனின் மகன் ” என வீட்டிலிருந்தவர்களிற்கு அறிமுகப்படுத்தினார்.

அவருக்கு அவனுடைய அண்ணர்ர வயதில் செந்தில் என்ற மகனும், அக்காவின் வயதில் மஞ்சு என்ற மகளும் இருக்கிறார்கள்.இருவரும் பல்கலைக்கழகத்தில் படிக்கிறார்கள்.

பிஸ்கட்,டீ எல்லாம் வந்தன.

கேள்வியை விளங்கப்படுத்தி வ‌ழுவை எடுத்துக் காட்டினார். இவர்களிற்கும் விளங்கின மாதிரி இருந்தது .

திங்கட் கிழமை வகுப்பில் “டேய், என்னம் சந்தேகமிருந்தால் இங்கே கேள்.வகுப்பு முடிய நின்று விளங்கப் படுத்துறேன்”என்றார்.வீட்டிலே அவர் மனைவி விரும்பவில்லை போல இருக்கிறது.தொழினுட்பக்கல்லூரியில் ஒப்பந்த அடிப்படையிலே ஆசிரியராக வேலை செய்கிறார்.கடந்த வருடம் சுந்தரம் ஆசிரியராக இருந்ததும். ,சோர்ட் பாலசிங்கம் இந்த வேலைக்கு விரும்பவில்லை என்பதும் அவர் சொல்லிய தகவல்கள் தான்.

அடுத்த வருசம் தொழினுட்பக்கல்லூரி, இன்னொரு இளைப்பாரிய நிலவளவையாளரை வலை போட்டு தான் தேட வேண்டியிருக்கும். கொடுக்கப்படுற‌ சம்பளம் பத்தாது. .நிலவளவையாளர்கள் ஒன்றும் பணக்காரர்கள் கிடையாது.ஓரளவு வசதியானவர்கள்.

“வகுப்பு மாணவர்களை எல்லாம் வீட்ட கூட்டி வர வேண்டாம்” என உத்தரவு போட்டிருக்க வேண்டும்.

“டேய்,சுந்தரம் பழைய பரீட்சைப் பேப்பர்கள் சில‌ வைத்திருக்கிறான்.போய்க் கேள் தருவான்”என்று சொல்லி அவருடைய விலாசத்தையும் எழுதி அவனிடம் தந்தார்.

இந்த முறை சந்திரனுக்கு நேரமில்லை.அவன் தனியாகவே போனான்.

வகுப்பில் படிக்கிற சொரூபனின் சகோதரங்கள் போல அவருக்கு ஒல்லியான ஆண்,பெண் என நாலைஞ்சுப் பிள்ளைகள்.;எல்லோருமே அவனை விட சிறியவர்கள், உள்ளே இருந்து வந்த‌ அவர் விசாரித்தார்.

அவன்,’ சதாசிவம் மாஸ்ர்ர வகுப்பில் படிக்கிறதையும்,நிலவளவை ட்ராவ்ஸ்மன் பரீட்சைக்கும் அப்ளை பண்ணியதையும்,, தன்னைப் பற்றியும் அவர் தான் அனுப்பினார் என்றும் கூறினான்.

“உங்கப்பா யாழ்ப்பாணம் வந்தால் இங்கே வந்திட்டு போவான்,கொஞ்ச வயதிலே போய் விட்டான்.கொஞ்சம் ஓவராக குடியிலே வீழ்ந்ததாலே…ஏற்பட்டிருக்கிறது” என்றவர்

“ கொழும்பிலே யாரும் தெரிந்தவர் இருக்கின்றார்களா,எப்படி போவாய்?”எனக் கேட்டார்.

“இல்லை!,.அப்ப பார்த்துக் கொள்ளலாம்”என்றான்.அவர் சிரித்தார்.

“பேப்பர்கள் கவனம் .கொப்பி பண்ணிப் போட்டு கொண்டு வந்து தா.உனக்கு என்னம் சந்தேகம் இருந்தால் தாராளமாய் கேள். சொல்லித் தாரேன்”என்றார்

.”கதிர்,அந்த பெட்டியிலே இருக்கிற பேப்பர்களை எடுத்து வா”என உள்ளே குரல் கொடுத்தார்.முதலில் பார்த்த சிறுவன் ஒருவன் எடுத்து வந்து கொடுத்தான்.

அடுத்த நாள் வகுப்பில் சொரூபனிடம் “அப்பாவின் நண்பர்கள் ஒவ்வொருவரைச் சந்திக்கிறேன்.சோர்ட் பாலசிங்கத்தைத் தான் சந்திக்கவில்லை” என்று கதைத்தான்.அன்று சந்திரனும் கிற்றோவும் வகுப்பிற்கு வரவில்லை சொரூபன் கொக்குவிலில் இருப்பவன்

.”எனக்கு அவரைத் தெரியுமடா” என்றான். “நீயும் இதே ஊர் தானே, கோவில் வழியே கண்டிருப்பாய்” என்றான் குலாய்.

“அப்படி இல்லையடா, என்ர சின்ன மாமாவும், அவருடைய மகளும் மொராட்டுவாவேயிலே ஒன்றாய் படித்தவர்கள் . அவர்களுக்கிடையில் சினேகிதம் ஏற்பட்டு விட்டது.” என்றான்.

“பிறகு, என்ன, டும்! டும்!! தானே” என்று கேட்டான்

இவன் .”அதிலே, ஒரு சிக்கலாடா” என்று சிரித்தான்

.”இது யாழ்ப்பாணம். இங்கேயும் சிக்கலா?” என குலாய் கேட்க,

“ஏன் கிடையாது, இதுவும் முந்தி கிராமம் தானே!, ஆனால், அங்க போல கத்திச் சண்டைக‌ள் இல்லை, வேற வேற சாதி என்பதால், வெளிநாட்டுக்கு அனுப்பினமாம், அங்கே கட்டிக் கொண்டு இருக்கச் சொல்லினம்”என்றான்

.”ஓடிப் பிடிச்சு விளையாடினம். நாட்டு நிலமையும் நல்லதில்லை, போறது நல்லது தானே” கேட்டான்

“இரண்டு தரப்பும் சம்மதிச்சு விட்டினம். இப்ப அந்த அலுவலைத் தான் ஏஜென்ஜி மூலமாக பார்த்துக் கொண்டிருக்கினம்” என்று பதிலளித்தான்.

குலேந்திரனுக்கு இவற்றை எல்லாம் கேட்க ஆச்சரியமாகவே இருந்தன.

ஆச்சி வீட்ட போன போது சின்னம்மாவிடம் “நிலவளவையார் சுந்தரம் கிட்டவாகத் தான் இருக்கிறார் . அப்பாவோடு படித்தவராம்” என்று சொல்ல,

“நல்லாய்த் தெரியுமடா . இங்கால வார போது ஆச்சியை பார்த்து கதைத்து விட்டே போறவர். அவர் முடித்தது கூட‌ என்னோட படித்த கீதாவைத் தான். அவளும் இங்கே வாரவள்” என்றார்.

அவனுக்குத் தான் ஒன்றும் தெரியாமல் இருந்திருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் அரசியல் நிலவரம் நல்லாவே இருக்கவில்லை. படிப்பும் முடிவுக்கு வந்து கொண்டிருந்தது. பரீட்சைக்கு சந்திரனும், அவனும் கிற்றோ வீட்டிற்குப் போய் சேர்ந்து விழுந்து விழுந்து எல்லாம் படித்தார்கள். அரசு, யாழ்ப்பாணத்திற்கு பேப்பர்களை அனுப்பி,எழுதியதை திரும்ப பெறுவது… எல்லாம் பாதுகாப்பாய் இல்லை” எனச் சொல்லி “பரீட்சையை தள்ளி வைத்து விட்டது.

“பாவிகள் போற இடமெல்லாம் பள்ளமும் மேடும் தான்” என‌ பெண்கள் அழாக்குறையாக முணுமுணுத்தார்கள் .

இந்த பரீட்சையை அடுத்த கோர்ஸ்காரர்களுடன் சேர்ந்து எடுக்கப் போறார்கள்.

கடவுள், இந்த தடங்கலை ஏன் ஏற்படுத்துகிறார்?

இதிலே, இனி எத்தனைப் பேர்கள் எடுக்கப் போறார்கள்?

எத்தனைப் பேர் வெளிநாடு போய் விடப் போறார்கள்?

அப்படி போறவர்களையும் அதிகம் குற்றம் சொல்ல‌ முடியாது தான்.

பாதுகாப்புச்சட்டங்கள் இங்கே உள்ள பெடியள்களின் பாதுகாப்பையும் கேள்விக் குறியாக்கியே விட்டிருக்கின்றன!

குலேந்திரனாலும் கொழும்பிற்கும் போக முடியவில்லை.

நேரான படிப்பு குழம்பினால் குழம்பியது தான்.

தரப்படுத்தலால் தள்ளப்பட்டவர்கள் அரற்றுறது இன்னும் இரண்டு மடங்காக இருக்கின்றன.

வடமராட்சி சுந்தா,கமல்,சூரியின் தொடர்புகள் ஏறத்தாழ அறுந்தே போய் விட்டிருந்தன‌.

சந்திரன் ,கிற்றோ, சோரூபனே.. தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருந்தார்கள்.

இரண்டு மூன்று நாளாய் யாழ்ப்பாணம் குண்டு வெடிப்பால் அதிர்ந்து கொண்டிருந்தது. ஒரே பதற்றமுமாக கிடந்தது. ஒரு கிழமைக்குப் பிறகு எல்லாம் அடங்க‌ ,சந்திரனோடு ஆச்சி வீட்டச் சென்றான். எதிர் கொண்ட சின்னம்மா “எடே உனக்கு விசயம் தெரியுமா? உன்ர அப்பர்ர நண்பரின் வீட்டிலே எல்லோ செல் விழுந்து விட்டது. இவர் மட்டும் தான் அந்த நேரம் முற்றத்தில் நின்றவர். சிதறிப் போனார்.” என்றார் துயரத்துடன்.

இனி, அந்த பிள்ளைகளின் நிலை? அழுகையாக வந்தது. இருவரின் கண்களும் உடைப்பெடுக்கும் போல‌ கலங்கின‌. அவரிடம் திருப்பிக் கொடுபதற்காக எடுத்து வந்திருந்த ஒரிஜினல்ப் பேப்பர்கள்… வேறு கையிலிருந்து‌ காற்றில் படபடத்துக் கொண்டிருந்தன‌.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *