ரயிலில் அவளைப் பார்த்தபோது, அவன் வாழ்வில் அவ்வளவு பெரிய மாற்றங் களை அவள் ஏற்படுத்துவாள் என்று கருணா எதிர்பார்க்கவில்லை. ஜன்னல் ஓரத்தில் ஒரு கொக்கிபோல் முடங்கி உட்கார்ந்திருந்தவள் டிக்கெட் பரிசோதகர் வந்தபோதுதான் முகத்தை முழுசாகக் காட்டினாள். பதின்வயதின் பளபளப் புடன் செழுமையான கன்னங்கள், அவள் கை அழுத்திய இடங்களில் சிவந்திருந்தன.
அழுது சிவந்திருந்த பெரிய கண்கள் அவரைப் பார்த்ததும் சற்று அச்சம்கொண்டு விரிந்தன. கால்களை இருக்கையில் இருந்து இறக்கினாள். அவள் உயர் ரக உடைகள் அணிந்திருந்தது புலப்பட்டது.
”டிக்கெட் இல்ல…” என்றாள், குரல் சிக்க.
உடனடியாகப் பரிசோதகர் முகத்தில் தர்பாரில் அமர்ந்த அரசனின் அதிகாரக் களை!
”அபராதத்தோடு சேர்த்து 720 ரூவா எடு” என்று மடிப் பாக்கெட்டில் இருந்து ஒரு நசுங்கிய ரசீதுப் புத்தகத்தை எடுத்தார்.
”காசு இல்ல…” என்று முனகினாள்.
”ஒங்கிட்ட கடன் கேட்ட மாதிரி கைய விரிக்கற? எந்திரி… அட, எந்திரின்றேன்…”
அவள் மிரண்டு எழுந்தபோது, கால்கள் துவண்டன. ஜன்னல் கம்பியைப் பிடித்து நிதானித்தாள். உதடுகள் நடுங்கின. ”ஸாரி சார்… இந்தத் தடவ மட்டும்!”
அவளை வாக்கியத்தை முடிக்க விடாமல் குரைத்தார். ”அப்டி வாசக்கிட்ட போய் நில்லு. அடுத்த ஸ்டேஷன்ல ரயில்வே போலீஸ்ல ஒப்படைக்கறேன்!”
உதடுகளைக் கவ்வி அடக்கப் பார்த்தும் அழுகையில் முகமே கோரமானது. இமைகளின் விளிம்புகளை உடைத்துக் கண்ணீர் திரண்டு வழிந்தது. அந்தக் கணம்தான் கருணா பேசினான்.
”சார், பாவம் சார்… போலீஸ் கீலீஸ்னு மெரட்டாதீங்க..”
கழுகுபோல் அவன் பக்கம் சரக்கென்று திரும்பியவர், ”அப்ப ஃபைன நீ கட்டு” என்றார்.
”கட்றேன் சார்” என்று பர்ஸை எடுத்தான். அவளைப் பார்த்து ‘உட்கார்’ என்று கண்களால் சொன்னான்.
”மச்சி, எதுக்குடா வம்பு?” என்றான் சிவா.
கருணா தன்னிடம் இருந்த காசை எண்ணிப் பார்த்தான். ”400 ரூபா கொறயுது. டேய், ஆளுக்குக் கொஞ்சம் கொடுங்கடா.’
‘சொல்லச் சொல்ல ஏன்டா இப்படிச் செய்கிறான்?’ என்ற பார்வையால் அடுத்திருந்த முத்துவைப் பார்த்துவிட்டு, சிவா நூறு ரூபா எடுத்துக் கொடுத்தான். முத்து வும், கோவிந்துவும் மிச்சத்தைக் கொடுக்க, டிக்கெட் பரிசோதகர் உட்கார்ந்து ரசீது எழுதிக் கிழித்தார்.
”இதுவே ஒரு கெழவன் மாட்டியிருந்தா குடுப்பீங்களா தம்பி?” என்று கேட்டு நக்கலாகச் சிரித்துவிட்டு எழுந்து போனார்.
”தேங்க்ஸ்!” என்றாள்.
”போய் முகத்தைக் கழுவிட்டு வாங்க” என்றான் கருணா.
மறுபேச்சு சொல்லாமல் எழுந்துபோனாள்.
”டேய்… யாரு, என்னனு தெரியாம எதுக்குடா நீ ஹெல்ப் பண்ற?”
”தீவிரவாதிங்கள்ல நெறையப் பேரு அழகான பொண்ணுங்கதான் தெரியுமா?”
”மெதுவாப் பேசுங்கடா… அவ காதுல விழப் போகுது.”
”மச்சி, லக்கேஜ் இல்ல. ஓடி வரச் சொல்லிட்டு லவ்வரு கழட்டி விட்டுட்டுப் போயிருப்பான்!”
”வராடா… சும்மார்றா!”
வந்து அதே ஜன்னல் ஓர இருக்கையில் உட்கார்ந்தாள். முகம் கழுவியதில், பளிச்சென்று இருந்தாள். பேசும் பெரிய கண்கள். வடிவமான புருவங்கள். பூச்சு இல்லாத ரோஜா நிற இதழ்கள். அவர்களைப் பொதுவாகப் பார்த்துப் புன்னகைத்தாள்.
”நீங்க எங்க போகணும்?” என்றான் சிவா.
பதில் சொல்லாமல் தலை குனிந்தாள். மறுபடியும் கண்கள் ஈரமாயின.
”ஸாரி நாங்க கேக்கல” என்றான் கருணா.
அவளுடைய இருப்பால் அவர்களுடைய சகஜ நிலை பாதிக்கப்பட்டு அதிரச் சிரிக்க முடியாமல், உரக்கப் பேச முடியா மல், நண்பர்கள் வேறு காலியிடம் தேடிப் போனார்கள். கருணாவைத் தவிர.
எங்கோ தூரத்து மரங்களுக்குப் பின்னே பாயும் சூரியனின் மஞ்சள் வெளிச்சக் கீற்றுகள் அவள் கன்னங்களில் விழுந்து ஓடிய மின்னல்களில் அவள் மிக அழகானவளாக, அதே சமயம் ஆழமானவளாகத் தெரிந்தாள். அழுகைச் சலனங்கள் ஓய்ந்து அடங்கியிருந்தாள்.
அடுத்த ஸ்டேஷனில் பிஸ்கட்டும் பழமும் வாங்கிக் கொடுத்தான். மறுக்காமல் சாப்பிட்டாள்.
”நாங்க வேலூர் காலேஜ்ல படிக்கறோம். நாலு பேரும் ஃபைனல் இயர்”- கருணாவின் குரல் அவளைத் திரும்பிப் பார்க்க வைத்தது.
‘அப்படியா?’ என்பதுபோல் புன்னகைத்தாள்.
”நீங்க?”
அவனுக்குப் பதில் சொல்லாமல் இருப்பது அவமரியாதை செய்வதுபோல் என்று நினைத்தவள்போல், ”டிப்ளமோ ஃபர்ஸ்ட் இயர்!” என்றாள்.
”சென்னைல எங்கே போறீங்க?”
”எங்கேயும் இல்ல” என்றாள். குரல் முழுமையாக வரவில்லை.
”வீட்ல சண்டையா?”
கண்கள் கலங்க ‘ம்’ என்று தலையசைத்தாள். ”இனிமே அந்த வீட்டுக்குப் போக மாட்டேன்.”
”வேற எங்க போவீங்க?”
”எங்கியோ விழுந்து சாவேன். ஆனா, எங்கப்பா மூஞ்சில முழிக்க மாட்டேன்!”
”சரி, ரெஸ்ட் எடுங்க.”
அவன் சொன்னது எதையும் மறுக்கத் தயாராக இல்லாதவள்போல் உடனே ஜன்னலில் தலை சாய்த் துக்கொண்டாள். வெளியே வெளிச்சம் முற்றிலும் விலகி நிலங்கள், மரங்கள், கட்டடங்கள் எல்லாம்இருட் டில் கரைந்தன. தடதட கடகடவென்று ரயில் சப்தித் துக்கொண்டு சென்னையில் நுழைந்தது. காத்திருந்தவள் போல் விருட்டென்று சுருட்டிக்கொண்டு எழுந்தாள்.
மேலே வைத்த தங்கள் பைகளை நண்பர்கள் அள்ளிக்கொண்டனர். இறங்கியதும், அவள் திகைத்து நின்றாள். கண்களில் மருட்சியும் தீர்மானமின்மையும் பளீரிட்டன. கடந்துபோகிறவர்களில் சிலர் தன்னிச்சை யாக அவள் பக்கம் பார்வையால் மேய்ந்து சென்றனர்.
இருள் அடர்ந்த வேளையில், இரவின் ஆபத்தில் அவ்வளவு இளம் வயதுப் பெண்ணைத் தனியே ரயில் நிலையத்தில் விட்டுச் செல்ல மனம் இல்லை.
”எங்க வீட்டுக்கு வாங்க. அம்மா கையால டிபன் சாப்பிடுங்க. அப்புறம் என்ன செய்யணுமோ செய்யுங்க!” என்றான் கருணா.
நண்பர்களின் முகங்களில் அதிர்ச்சி. அவன் சொல்வது எதையும் தட்டக் கூடாது என்று தீர்மானித் தவள்போல், அவள் உடனே தலை அசைத்தாள்.
”தப்பு பண்றடா…” என்று எச்சரித்தான் கோவிந்து.
”நாளைக்குப் பாப்போம் மச்சி!”
அவள் கருணாவோடு ஒட்டி நடந்தாள்.
திருவல்லிக்கேணியின் அந்த முட்டுச் சந்தில் சாணத்தில் படுத்திருந்த எருமைகளைச் சுற்றிக்கொண்டு நடந்தபோது, அவள் மூக்கைத் துணியால் பொத்திக் கொண்ட விதத்திலேயே அவளுக்கு இதெல்லாம் புதுசு என்று புரிந்தது. அலமாரியில் அடைத்த புத்தகங்களைப்போல் நெருக்கி அடுக்கியிருந்த வீடுகளில் கம்பிகள் வேய்ந்த ஒரு கதவை கருணா தட்டினான்.
”கருணா வந்துட்டான்” என்று கனமான பெண் குரலைத் தொடர்ந்து கதவு திறந்தது. கதவைத் திறந்தவளுக்கு 45 வயது இருக்கலாம். மெலிந்த தேகம். மலிவான சேலை. சாய்ந்து நின்ற விதத்திலேயே களைப்பு இருந்தது. உழைப்பின் வியர்வை வீசியது.
”யாருடா கருணா இது?” என்று வழியை மறித்து நின்றபோது, கண்களில் சந்தேகம் துள்ளியது. குரலில் உடலுக்கு மீறிய அடர்த்தி.
”சொல்றேம்மா…” என்று அவள் பக்கம் திரும்பி, ”உள்ள வாங்க…” என்றான் கருணா.
மின்னல்களாக விரிசல் விட்டிருந்த சிமென்ட் தரையில் அவள் காலெடுத்துவைத்தாள். குறுகலான பாதை சிறிய கூடத்தில் கொண்டுவிட்டது. வலது புறம் திறந்தவெளி முற்றத்தில் அடிகுழாய். தண்ணீர் நிரப்பப்பட்ட பழைய பெயின்ட் டப்பாக்கள். சில பிளாஸ்டிக் குடங்கள். தேய்க்கப்போட்ட அலுமினியச் சமையல் பாத்திரங்கள்.
அவளைப் பார்த்துக்கொண்டே, ”தப்பா எதுவும் பண்ணலியே, கருணா?” என்று அம்மா கேட்க, அந்தக் குரல் எட்டியோ என்னவோ, பின்கட்டில் ஏதோ ஒரு கதவு திறந்து, இரண்டு தலைகள் வெளியே நீண்டன.
”யாரு கருணாவா? எப்ப தம்பி வந்த?” என்று கேட்டுக்கொண்டு, ஒரு கனமான பெண்மணிநைட்டி புரள வந்தாள். அவன் நலம் அறிவதைவிட நாட்டு நடப்பை அறிவதில்தான் அவள் ஆர்வம் என்பது போல், கேள்வி கருணாவுக்கானதாக இருந்தாலும், பார்வை புதிதாக வந்தவளையே பிறாண்டியது.
”இப்பதாங்க” என்று புன்னகைத்துவிட்டு இவள் பக்கம் திரும்பி, ”நீங்க உள்ள போய் ஒக்காருங்க” என்று பாதி திறந்திருந்த கதவைக் காட்டினான். உடனடியாக, அவள் கதவு திறந்து உள்ளே போய் மறைந்தாள்.
அந்த சின்னஞ் சிறிய அறையில் ஜன்னல் ஓர இரும்பு நாடாக் கட்டிலில் படுத்திருந்தவரின் கண்களில் பொங்கிய குழப்பத்தைப் பார்த்தபடி, அவள் என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து நின்றிருந்தாள்.
கருணாவைப் பார்த்ததும், ”ஒங்களுக்கு ரொம்பத் தொந்தரவு கொடுக்கறேனா?” என்றாள், குரல் நடுங்க.
”அதல்லாம் ஒண்ணும் இல்ல. ஒங்க வீடு மாதிரி நெனைச்சுக்குங்க. இது எங்கப்பா” என்று அவரை நெருங்கி, அவர் நெஞ்சை நீவிக் கொடுத்தான். அவர் கண்களில் கேள்விகள் இருந்தனவே தவிர, எதுவும் பேசவில்லை.
அறை வசாலில் நிழலாடியது. ”கருணா, நெஞ்சுல நெருப்பள்ளிக் கொட்டிடாதடா!” என்று அவன் அம்மா நடுங்கும் குரலில் சொன்னாள்.
”இவங்க பேர்கூடத் தெரியாதும்மா.”
”என் பேரு சரண்யா. வீட்ல கோச்சுட்டு வந்துட்டேன்!” என்றாள் அவள், சன்னமான குரலில். அவனுடைய நிலையைத் தெளிவு செய்வதற்கான அவசரம் அதில் இருந்தது.
”ரெண்டு பேருக்கும் பசிக்குதும்மா. சாப்டுட்டே மிச்சத்தப் பேசலாமே?”
சரண்யா முற்றத்தில் இறங்கினாள். அங்கிருந்த தேய்ந்த சோப்பைப் பயன்படுத்த மனது இல்லாமல், தண்ணீர் அறைந்துமுகம் கழுவி, கைகால் கழுவி, அவள் திரும்பியதும், கருணா உலர்ந்த துண்டு ஒன்றை நீட்டினான். முகத்தில் அழுத்தியபோது, அதில் வெயிலின் வாசம் இருந்தது.
கூடத்து அலமாரியில் இருந்து அவன் தையல் இலைகளை எடுத்துப் போட்டான். சுடச்சுட இட்லியும், கரைசலான தேங்காய்ச் சட்னியும் அமுதமாக இருந்தன.
”அம்மா, இவங்கள நம்ம கோகிலானு நெனைச்சுக்க. ரயில்ல பாத்தேன். தனியா நைட்டுலவிட மனசு இல்ல!”
உடனடியாக அவன் அம்மாவின் முகத்தில் நிம்மதி வந்தது.
”இன்னும் கொஞ்சம் சட்னி வெச்சுக்க கண்ணு!” என்று கண்களில் பாசம் பொங்கியது.
அவள் அடுத்ததை எடுத்து வர அடுப் படிக்குப் போனதும், ”கோகிலா யாரு?” என்றாள்.
”தங்கச்சி… செத்துப்போயிட்டா!”
அவள் அதிர்ந்துபோக, ”ஸாரி, சாப்பிடுங்க” என்றான்.
”கைய நவுத்து… இன்னும் ரெண்டு வெச்சுக்க” என்று இலையில் வைக்கப்பட்ட இட்லிகளை அவள் கண்ணீருடன் பார்த்து, ”இவ்ளவு சாஃப்ட்டா இட்லி சாப்பிட்டதே இல்ல” என்றாள்.
”அம்மாவ நான் சமாளிச்சுப்பேன். சொல்ல வேணாம்னு நெனைச்சா, எதையும் சொல்ல வேணாம்!”
அவள் கண்கள் கலங்கின.
”ஒங்ககிட்ட சொல்லப்போறேன்…”
மொட்டைமாடியில் காற்று அள்ளிக்கொண்டு போனது. காரை பெயர்ந்திருந்த நிலா உச்சத்தில் உலா நகர்ந்தது.
”கண்ணு… அழக் கூடாது. எதுவா இருந்தாலும், சரி பண்ணிரலாம்” – கருணாவின் அம்மா அவள் தலையைக் கோதிவிட்டாள்.
சரண்யா துப்பட்டாவால் கண்களை, மூக்கைத் துடைத்து நிமிர்ந்தாள்.
”எங்க வீடு நரகம். அப்பாவுக்கு ஆறு மெடிக்கல் ஸ்டோர் இருக்கு. அமோகமான பிசினஸ். கட்சில வேற செல்வாக்கு உண்டு. மினிஸ்டர்லாம் வந்தா எங்க கெஸ்ட் ஹவுஸ்லதான் தங்குவாங்க. அம்மா அழகா இருப்பாங்க…”
சில கணங்கள் தயங்கினாள். தீர்மானமாகித் தொடர்ந்தாள்.
”அம்மாவுக்கு எங்க டிரைவர்கிட்ட ஒரு மயக்கம். ஒண்ணு ரெண்டு தடவ என்கிட்டயே மாட்டிருக்காங்க. அப்பாட்ட சொல்லாதனு அழுதுருக்காங்க. அந்தச் சமயத்துலலாம் ஒடைஞ்சி போயிருக்கேன். ஆனா, யார்கிட்ட சொல்லி அழ முடியும்? எப்படியோ அப்பாவுக்குத் தெரிஞ்சுபோச்சு. வீடு ரணகளமாச்சு. அம்மாவுக்கு நெத்தில ஏழு தையல். அந்த டிரைவர் ஓடிப்போனான். ஆனா, ரெண்டு நாள்ல ரயில் தண்டவாளத்துல செத்துக்கெடந்தான். தற்கொலைனு கேஸ க்ளோஸ் பண்ணிட்டாங்க. ஆனா, அப்பாதான் ஆள் வெச்சுக் கொல பண்ணிட்டார்னு அம்மா அழுதாங்க. அந்த சாவுக்கு நான்தான் காரணம்… அவங்கள நான்தான் மாட்டி விட்டேன்னு அம்மா நெனைக்குறாங்க. என்னைக் கண்டாலே எரிச்சலும், வெறுப்பும், கோபமும் பொங்குது.”
மூச்சை சீர்ப்படுத்திக்கொண்டு, தொடர்ந்தாள், ”அப்பா வேற மாதிரி டார்ச்சர், ‘நீ யாருக்குடி பொறந்தே?’னு என் தலைமுடியப் பிடிச்சி செவுத்துல மோதறாரு. தெனம் இதே நரகம். வாழவும் பிடிக்காம, சாகவும் முடியாமக் கௌம்பி வந்துட்டேன்.”
அவள் தன்னை நிலைப்படுத்திக்கொள்ளும் வரை பொறுத்திருந்து, அம்மா கேட்டாள், ”வந்துட்ட, சரி. ஆனா, என்ன செய்யப் போற?”
அவளிடம் பதில் இல்லை.
”நான் சொன்னா கேப்பியா? வீட்டுக்குப் போ. வயசுக்கு வந்த பொண்ணு சொல்லாமக்கொள்ளாம வந்தா தப்பு, கண்ணு. வீட்ல இருக்கப் பிடிக்கலைன்னா ஹாஸ்டல்ல சேர்ந்து படி. எந்த ஊருன்னு சொன்னே?”
”எங்கப்பா யாரு, பேரு என்னனுலாம் கேக்காதீங்க. ரெண்டு நாள் எங்கியாவது நிம்மதியா இருந்துட்டு, வீட்டுக்குப் போறேனே, ப்ளீஸ்…”
”என்ன கொடும இது? கருணா, வசதியா வாழ்ந்த பொண்ணா தெரியுது. நம்ம வீட்ல கக்கூஸுகூட வாசப் பக்கம் இருக்கு. சிநேகா படிக்குதே, அந்த ஹாஸ்டல்ல கொண்டுவிட்ரு.”
”இல்ல ஆன்ட்டி… நான் ஒங்க வீட்லயே ஓரமாப் படுத்துக்கறேன், ப்ளீஸ்…”
”வார்த்தைக்கு வார்த்தை ப்ளீஸ் போட வேணாம்” என்றான் கருணா.
”நான் காலைல கௌம்பி வேலைக்குப் போயிருவேம்மா. இவங்கப்பாவும் முடியாமக் கெடக்காரு.”
”நைட்டு நம்ம வீட்ல இருக்கட்டு மேம்மா. ஒன்கூட படுக்கட்டும். நான் மொட்டை மாடில படுத்துக்கறேன்!”
காலை பக்கத்துத் தெருவில் இருந்த ராஜியின் வீட்டுக்கு அழைத்துப் போனான். கல்லூரித் தோழி என்று அறிமுகம் செய்தான். அவள் குளித்து அதே உடைகளை அணிந்து வந்தாள்.
மார்க்கெட்டில் காய் வாங்கும்போது கேட்டாள், ”உங்க அப்பாவுக்கு என்ன?”
”அப்பா பெயின்ட்டர். ஏணி பொரண்டு, ரெண்டாவது மாடியில்இருந்து விழுந்துட்டாரு. முதுகுத் தண்டுல அடி. கைகால் அசையல. பேச்சு போயிருச்சு. அம்மாதான் எல்லாம் பண்ணிவிடறாங்க. நாலஞ்சு ஆபீஸ்ல பெருக்கித் துடைச்சு, பாத்ரூம் கழுவி, தண்ணி பிடிச்சுவெச்சு அம்மா கொண்டு வர பணத்துலதான் குடும்பம் நடக்குது. ஒரு நல்லவரு என்னைப் படிக்க வெக்கறாரு. கேம்பஸ்ல ஐ.டி. கம்பெனில நான் செலெக்ட் ஆயிட்டேன். இன்னும் ஆறு மாசத்துல எல்லாப் பிரச்னையும் தீர்ந்துரும். டிகிரி வாங்கறதுக்காகக் காத்துட்டு இருக்கேன்.”
வீட்டை நெருங்கியபோது கேட்டான். ”உங்க வீட்ல தேட மாட்டாங்க?”
”தேடட்டும்… தேடித் தவிக்கட்டும்!”
”அப்பாவுக்கு போன் பண்ணி ஒரு வார்த்தை பேசிட்டா நல்லது இல்ல?”
”அவங்கள மறந்து முழுசா ஒருநாள் நிம்மதியா இருக்கேனே, ப்ளீஸ்..?”
அவன் முகத்தில் அதற்கான ஆமோதிப்பு இல்லாததைக்கண்டு, ”இப்ப பேசினா என் நிம்மதி போயிரும். ஈவினிங் பேசறேன், நிச்சயமா!”
கருணாவின் முகத்தில் புன்னகை வந்தது.
அவளைப் பல்கலைக்கழக நூலகத்துக்கு அழைத்துச் சென்றான். அண்ணா நினைவிடம் சுற்றிக் காட்டினான். புதிய சட்டசபை வளாகத்தை தூர இருந்து விளக்கினான்.
”நான் இவ்ளோ சந்தோஷமா இருந்ததே இல்ல!” என்றாள்.
”ஒங்கள பாரமா நெனைக்கறதா நெனைச்சுராதீங்க. தப்பா நெனைக்கலேன்னா ஒண்ணு சொல்லவா?”
அவள் முகத்தில் தெளிவு இருந்தது. ”தவிக்கவிட்டது போதும், வீட்டுக்குப் போலாம்னு நானும் நெனைச்சேன்…”
அவன் முகம் மலர்ந்தது.
”ரொம்ப புத்திசாலித்தனமான முடிவு. அப்பாகிட்ட பேசிட்டீங்கன்னா, ஊர்ல நானே கொண்டுவிடறேன்.”
”லஞ்ச் முடிச்சதும் பேசறேன்.”
சாப்பாட்டு நேரம் வீட்டுக்கு அழைத்து வந்தான்.
சந்து முனையில் ஜீப் நின்றிருந்தது. அவன் வீட்டு வாசலில் போலீஸ் தலைகள் தெரிந்தன. எல்லா ஜன்னல்களிலும் வம்பு பேசும் முகங்கள் தென்பட்டன. அம்மாவின் கூக்குரல் தெருமுனை வரை கேட்டது. பதறிக்கொண்டு ஓடினான்.
வீட்டு வாசலை மிதித்தபோது, பொளேர் என்று கன்னத்தில் அறைபட்டான். அந்த வேகத்தில் படி பிசகி மல்லாந்தான். அறைந்த போலீஸ்காரரின் கை சிவந்தது. அவன் பார்வை யில் பொறி பறந்தது.
”சார், நாய் வந்துட்டான்” என்று அவர் உள்ளே பார்த்துக் குரல் கொடுக்க, ஒரு சப்- இன்ஸ்பெக்டர் வேட்டையாடும் வேகத்தோடு வெளியே வந்தார்.
”ஐயோ!” என்று ஓடி வந்த சரண்யாவை பெண் போலீஸ் அணைத்து நிறுத்தினாள்.
”கருணா, நான், வேலை செய்ற எடத்துல வந்து அசிங்கம் பண்ணிட்டாங்கடா. ஒன்னப்பத்தி என்னென்னவோ சொல்றாங்கடா” என்று அம்மா தலையில் அடித்துக்கொண்டு கதறினாள். கருணாவுக்குப் பார்வை மசமசத்தது. தரையில் கையூன்றி மெள்ள எழுந்தான்.
”ஏன்டா, மைனர் பொண்ணக் கடத்திட்டு வந்து வீட்ல வெச்சுக்கிட்டா, எங்களால கண்டுபிடிக்க முடியாதா?”
”ஐயோ, கடத்தல்லாம் இல்ல சார், நானாத்தான் வந்தேன். அவங்க பேர்ல எந்தத் தப்பும் இல்ல, சார்” என்று சரண்யா அழுதாள்.
”செல்வி, அவளை ஸ்டேஷனுக்கு அழைச்சு கிட்டுப் போ…”
பெண் போலீஸ் சரண்யாவை அணைத்துத் திமிறத் திமிற ஜீப்புக்கு இழுத்துப் போனாள்.
சப்-இன்ஸ்பெக்டர் போனைக் காதில் வைத்தார்.
”பொண்ணு பத்திரமா கெடைச்சுட்டா சார். ரயில்ல விசாரிச்சு, ரிசர்வேஷன் பாத்து, காலேஜ்ல என்கொயரி பண்ணி, அட்ரஸ் பிடிச்சு, வெயிட் பண்ணி, ரவுண்டப் பண்ணிட்டோம் சார். ஐயோ, இதுக்கெல்லாம் எதுக்கு சார் தேங்க்ஸ்? ஒங்க வீட்டுப் பொண்ணுன்னா, நம்ம வீட்டுப் பொண்ணு மாதிரி சார். மினிஸ்டர் எல்லாம் சொன்னார், சார். நான்பெயிலபிள்ல போட்டுர்றேன் சார்” – போனை அணைத்தார். காலில் விழுந்து கதறிய அம்மாவை அலட்சியம் செய்தார்.
கருணாவைப் பின் கழுத்தில் பிடித்து நெம்பினார்.
”மவனே, ஒனக்கு எதிர்காலமே இல்லாமப் பண்ணிடறேன், வா…” என்று முதுகில் உதைத்துத் தெருவில் இழுத்துப் போனார்.
வெளியே நடக்கும் ஆர்பாட்டம் காதில் விழுந்து அறைந்தாலும், எட்டிப் பார்க்க முடியாமல், கருணாவின் அப்பா கூரையையே வெறித்துக்கொண்டு இருந்தார்!
– ஜனவரி 2011
அனைத்தும் நல்ல கதைகள். சுபாவுக்கு பாராட்டுக்கள்.