(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இந்தக் கதை, மலேசியாவில், எவ்வாறு ஒரு காலத்தில் அனைத்து இனத்தவரும் மனதில் கல்மிஷம் இல்லாமல் ஓரினத்தவராக வாழ்ந்தோம் என்பதையும், இன்று “ஒரே மலேசியா” என்று பிரதமர் கூப்பாடு போட்டும் மனங்கள் ஒட்ட வில்லை என்பதையும் பின்னணியாகக் கொண்டு கால பிரக்ஞையோடு எழுதப்பட்டக் கதை. அந்தக் காலத்தில் மற்ற இனத்தவரோடு பழகியவர்களுக்கு, இந்தக் கதை, அந்த இனிமையான நாட்களுக்கான நாட்டத்தை (nostalgia) தராமல் இருக்காது. வடிவுக்கு, அவள் கணவன் விபத்தில் அடிபட்டு படுத்தபடுக்கையாகி விட்டபோது, அவன் காய்கறி விற்ற கம்பத்தின் பெங்குலுதான் (தலைவர்) குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்து அவள் அந்த வியா பாரத்தை எடுத்து நடத்த உதவுகிறார்.
வடிவு அந்த வியாபாரத்தை மட்டுமன்றி தன் குடும்பத் தையும் தன் உழைப்பாலும் விவேகத்தாலும் செம்மையாக நடத்தி சாதனை படைக்கிறாள். இந்தச் சூழலில், குடும்ப நலவாரிய இயக்குநரான, பெங்குலுவின் மகன் அரிபினுக்கு தேசிய ரீதியில் அந்த வருடத்தின், குடும்ப மேம்பாட்டுக்காக உழைத்து, பெற்ற பிள்ளைகளை உயர்நிலைக்கு கொண்டு வந்த ஒரு கடமைமிக்க பெண்மணியை தேர்வு செய்து கௌர விக்கும் பொறுப்புத் தரப்படுகிறது. எந்தமுயற்சியும் எடுக் காமல், முழு அரசாங்க உதவியில் பிள்ளைகளை வளர்த்த தாய்மார்களையே, பரிந்துரை செய்யப் போகிறான் அரிபின். பெங்குலுவோ, வடிவைத் தேர்வு செய்ய வேண்டும் என்று மனதார விரும்புகிறார். இந்த முடிவை ஏற்க முடியாது தவிக்கும் அவரிடம், விவேகமுடைய வடிவு, அந்த கௌரவம் தனக்கு வேண்டாம் என்று சொல்வதோடு, தன் உழைப்பு தன் குடும்பத்துக்குத்தானே, அது தன் கடமைதானே என்று சொல்லி, பெங்குலுவின் மனதிலும், வாசகரின் மனதிலும் உச்சத்தில் போய் நிற்கிறாள்.
பெங்குலு, நாம் வாழ்ந்த பழைய மலேசியாவின் பிரதிநிதி. அவர் மகனோ, இன்றைய மலேசியாவின் எடுத்துக்காட்டு. இதற்கிடையில் வடிவோ, “ஒரே மலேசியா” என்ற, நடை முறைக்கு ஒவ்வாத கோட்பாட்டிற்குள் சிக்குண்டு சிதைவடை யாமல், தன் நிலையிலேயே நிறைவு கொள்ளும், நடைமுறை (practical) பெண். இந்தச் சிறிய கதையில் பெங்குலு மற்றும் வடிவு எனும் பாத்திரங்கள் நம்பக்கூடிய வகையில் முதிர்ச்சி அடைந்திருக்கின்றன. எவ்வாறு இந்த நாட்டில் பூடகமாகப் பல விடயங்கள் நடந்து வந்தனவோ, நடந்து கொண்டிருக் கின்றனவோ அதே பூடகத்தை நடையில் நுட்பமாக காண்பிக் கிறார் ஆசிரியர். இன்றைய சமுதாய மற்றும் அரசியல் புரிந் துணர்வோடு எழுதப்பட்ட கதை.
***
அன்று ஞாயிற்றுக்கிழமை. எந்த அவசரமும் காட்டாமல் பெங்குலு ஒஸ்மான், தன் வீட்டு வாசலில் நின்றபடி தன் பார்வையை சற்று தூரத்தில் படரவிட்டார். நேற்று வரை மாமூல் காட்சிகளாக இருந்தவை இன்று முற்றிலும் மாறுபட்டு இருப்பது போன்ற உணர்வு.
ஒட்டு மொத்தமாக மலாய்க்காரர்கள் வாழும் பெரிய கம்பம் அது. நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில், சற்றுத் தள்ளி நிற்கும் அந்த பெரிய மரத் தின் நிழலில் வடிவு, காய்கறி மீன் வியாபாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தாள்.
அவளின் சிறிய, ஒரு டன் லாரியைச் சுற்றி நிறைய வாடிக்கையாளர்கள். முகத்தில் முழுமையான புன்னகையைத் தேக்கிக் கொண்டு வடிவு, கடமையில் கண்ணாக இருந்தாள்.
வடிவுக்கரசியின் இரண்டு பெண் பிள்ளைகளும் அம்மாவும் ஒத்தாசையாக இருந்தார்கள். பிரியாவும், கண்மணியும் பல்கலைக்கழகப் படிப்பை முடித்து விட்டு, தற்காலிக வேலையில் இருக்கிறார்கள். எந்தவொரு வெட்கமும் கௌரவமும் பார்க்காமல், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் லாரியில் வந்து அம்மாவுக்கு உதவி செய்கிறார்கள்.
இது அந்தக் கம்பத்து மக்கள் யாவருக்கும் நன்கு தெரியும். சுமார் பத்து வருட காலமாக வடிவு அந்தக் கம்பத்தில், ஏன், இதே இடத்தில்
வியாபாரம் செய்கிறாள். கம்பத்து மக்கள் வடிவுக்கரசியை ஒரு வியாபாரியாகப் பார்ப்பது இல்லை. அவளைத் தங்கள் குடும்பத்தில் ஒருத்தியாகவே நினைத்துப் பழகி வந்தார்கள்.
பிரியா, அம்மாவுடன் எடுபிடி வேலையில் இருக்கிறாள். கண்மணி அன்றைய நாளிதழ்களையும் மாத வார தேசிய மொழி சஞ்சிகைகளையும் மேஜை மேல் பரப்பி வைத்துக் கொண்டு விறுவிறுவென்று விற்றுக் கொண்டிருந்தாள்.
பிற்பகல் ஒரு மணிக்கெல்லாம் வியாபாரத்தை முடித்து கொண்டு, வடிவு பிள்ளைகளுடன் வீட்டுக்குச் சென்று விடுவாள்.
காலைப் பசியாறலைக் கூட மறந்து விட்டு ஒஸ்மான், வடிவின் குடும்பத்தாரின் நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்தார். நீண்டதொரு பெருமூச்சு அவர் உள்ளத்திலிருந்து வெளிப்படுகிறது. பாவம் வடிவுக்கரசி. அவளின் பத்து வருடப் போராட்டம் ஏறக்குறைய ஒரு முடிவுக்கு வந்துவிட்டதைப் போல் தெரிந்தாலும் அவள் இன்னும் தன் எல்லைக்கோடு தன் பிடிக்குள் முழுமையாக அடங்கவில்லை என்று விடாமல் உழைத்துக் கொண்டிருக்கிறாள்!
வடிவுக்கரசியின் குடும்ப வளர்ச்சியைப் பற்றி நினைத்து பார்க்கும்போது பெங்குலுவுக்கு மனசுக்குள் சந்தோஷமாக இருந்தாலும் உள்ளத்தில் ஒரு முனையில் சிறிய பச்சாதாபமும் முளைவிடத்தான் செய்தது.
அன்று இரவு வார விடுமுறையில் வீட்டில் தங்கி இருக்கும் மூத்த மகனிடம், தூங்கும் நேரம் கடந்தும் பொறுமையாக விவாதித்த சம்பவங்கள் மீண்டும் கண்களுக்குள் நிழலாடின.
ஒஸ்மானின் மகன் அரிபின், மக்கள் குடும்ப நல வாரியத்தில் ஒரு இயக்குனர். தேசிய ரீதியில் குடும்ப மேம்பாட்டுக்காக உழைத்து பெற்ற பிள்ளைகளை உயர்நிலைக்குக் கொண்டு வந்த ஒரு கடமைமிக்க பெண்மணி யைத் தேர்வு செய்து, கௌரவிக்கும் பொறுப்பை அரிபின் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
ஆய்வுகளும் பலதரப்பட்ட நேர்காணல்களுக்குப் பின் மூன்று தாய்மார் களின் விவரங்கள் அடங்கிய பட்டியல் அரிபினின் கைகளில் இருக்கிறது.
கம்பத்து வீட்டுக்கு வந்திருந்த அரிபின், தனக்குப் பணிக்கப்பட்ட வேலையைப் பற்றி அப்பாவிடம் ஆலோசனை கேட்டுக் கொண்டிருந்தான்.
பெங்குலுவுக்கு வயது எழுபதுக்கு மேல் ஆகிவிட்டது. அரசாங்க உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றவர். பக்கத்திலுள்ள டவுனில் இருந்த தபால் நிலையத்தில் உயர் அதிகாரியாக இருந்தவர்.
நேர்மையான உழைப்பும், எல்லாரிடமும் பாகுபாடு காட்டாமல் பழகும் தன்மையையும் அனுபவத்தையும் கணக்கில் கொண்டு மாநில அரசாங்கம் ஒஸ்மானை அந்த கம்பத்துக்கு பெங்குலுவாக நியமனம் செய்தது. மற்றும் அந்த கம்பத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பது அதிகபட்ச தகவல்!
எந்த ஒரு வறட்டுக் கௌரவமும் காட்டாமல் தனக்கும் முழு மரியாதை கொடுத்து ஆலோசனைகளைக் கேட்ட அரிபினை, மனதுக்குள் பாராட்டினாலும், இறுதியில் மொத்த தேர்வின் முடிவை மகன் தன்னகத்தே வைத்துக் கொண்டிருந்ததை ஒஸ்மான் கொஞ்சமும் விரும்பவில்லை.
தர்க்கங்கள் பல செய்து யாரோ ஒருவரை தகுதியானவர் என்று ஒஸ்மான் முன் நிறுத்த விரும்பவில்லை. ஆனால், நிஜத்தையும் எப்படிப்பட்ட தடித்த ஜமுக்காளத்தைக் கொண்டும் மூடி மறைக்க முடியாதுதான்.
அரிபின் காட்டிய அந்த மூன்று பெண்மணிகளின் பின்னணி விபரங்கள் அவ்வளவும் திருப்தி அளிக்கக்கூடியதாக இல்லை. அந்த மூவருடைய பிள்ளைகளின் உயர்கல்வி பயில்வதிலிருந்து வேலை வாய்ப்புகள் கிடைக்க அரசாங்கச் சார்பற்ற நிறுவனங்களே முழுப் பொறுப்பும் ஏற்றுக் கொண்டிருந் ததை ஒஸ்மான் தெரிந்து கொண்டார்.
பெங்குலுவுக்கு மனம் சற்று கசக்கச் செய்தது. அவருக்கு அவ்வளவும் திருப்தி இல்லை. எல்லாமே இலவசம். ஒவ்வொரு பெண்மணியும் முறையே ஐந்து, ஆறு, ஏழு என்ற கணக்கில், தங்களின் பிள்ளைகளைப் பல்கலைக் கழகங்கள், வெளிநாட்டு உயர்கல்விகள் கற்று சிறப்பான பதவிகள் அடை வதற்கு பல தியாகங்கள் செய்துள்ளதாக நீண்ட பட்டியல் குறிப்புக்கள் இணைக்கப்பட்டிருந்தன.
ஒஸ்மான் மீண்டும் படித்துப் பார்க்கிறார். அதில் ஒருவிதமான வெறுமை கலந்திருப்பது போல் அவர் உணர்ந்தார். எலும்பும் தோலுமாய் தாங்கள் பெற்ற குழந்தைகளை செவிலித்தாய் தத்தெடுத்து ஊட்டி வளர்த்து, கொழுகொழுவென பெரியவர்களாக்கி பெற்றவர்களிடம் திருப்பி ஒப்படைப்பது போல் காணப்பட்டது.
பெங்குலு அன்று இரவு முழுவதும் நல்ல தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். எந்த சலனமும் இல்லாமல் வாழ்ந்து விட்டவர். இப்போது அவருடைய மனதில் ஏதோ ஒரு கல் குறிபார்த்து எறியப்பட்டதைப் போல் அவதிப்பட்டார்! அவருடைய சிந்தனை முழுவதும் வடிவு, அவளது கணவன் முனியாண்டியையே சுற்றிச் சுற்றி வந்தது!
இந்தப் பத்து வருடக் காலத்தில் குடும்பத்தைத் தூக்கி நிறுத்த வடிவுபட்ட கஷ்டங்கள் ஒன்றா இரண்டா? குறிப்பாக முனியாண்டி லோரி விபத்தில் சிக்குண்டு, நடமாட முடியாமல் படுக்கையே கதி என்று கிடந்தபோது,
வாழ்க்கையே தன் கையைவிட்டு’ நழுவிப் போய் விட்டதே என்று அவள் அழுத காட்சி எப்படிப்பட்ட கல் நெஞ்சனையும் நிச்சயம் உருக வைத்திருக்கும்.
நஞ்சானும், குஞ்சானுமாக நான்கு பிள்ளைகள். அவர்களைப் படிக்க வைத்து ஆளாக்க வேண்டும். வயதான வயோதிக மாமனார், மாமியா முறிந்து விழுந்த கிளையென கணவன்!
ஐயோ! இவர்களை எல்லாம் எப்படி கரை சேர்ப்பது. வடிவு கதி கலங்கி செய்வதறியாது கலங்கி நின்ற காலம். அன்று மட்டும் பெங்குலு, வடிவுக் கரசிக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி உற்சாகம் ஊட்டாமல் இருந்திருந் தால்… வீட்டில் கிடக்கும் கிழிந்து போன பாய்களைப் போல், மனமும் நார் நாராக பிய்ந்துதான் போயிருக்கும்.
வருடங்கள் பல கடந்தும், வடிவுக்கரசி பெங்குலு செய்த உதவிகளை மறந்துவிடவில்லை.
அந்தக் கம்பத்தில் எல்லாரையும்விட ஒஸ்மானுக்கு, வடிவுக்கரசியின் குடும்ப நிலவரங்கள் அத்துபடி! ஏதோ அவர்களையும் தன் குடும்பத்தில் ஒரு அங்கத்தினராகவே பெங்குலு கருதினார்.
இந்த நெருக்கத்திற்கு காரணம் முனியாண்டிதான்.
அவனது அணுகுமுறைகளும், பெரியவர்களிடம் காட்டும் அப்பழுக்கற்ற மரியாதையும்தான். அவனிடம் எவ்விதமான நடிப்பும் இல்லை. அதேபோல் காரியக்கார சுயநலத் தன்மையும் இல்லை.
அப்போது ஒஸ்மான் அந்த கம்பத்துக்கு பெங்குலுமாக நியமனம் செய்யப்பட்ட புதிது.
முனியாண்டி, மோட்டார் சைக்கிள் கேரியரில் பெரிய தகரப் பெட்டியைக் கட்டிக் கொண்டு ஒவ்வொரு தாமானாகச் சென்று காய்கறிகள் மற்றும் மீன் வியாபாரம் செய்து கொண்டிருந்தான்.
காலையிலிருந்து பிற்பகல் வரை சுற்றிச் சுற்றி வந்தாலும் அலுப்புத்தான் மிஞ்சும். நிறைய போட்டிகள். நிறைய காய்கறிகள், மீன்கள் விற்க முடியாமல் மீதம் நிறைய கிடந்தன.
கம்பமாக இருந்தாலும் மீற முடியாத ஒரு சில விதிமுறைகள் எங்கும் இருக்கத்தானே செய்யும். அதன் பேரில்தான் ஒஸ்மானைப் பார்க்க வந்தான்.
“இங்க பாரு முனியாண்டி, உன்னைப் பார்த்தால் நல்லவனாகத் தெரியுற, நீ வந்து மோட்டார் சைக்கிள்ல வியாபாரம் செய்யுறது, ஏற்கனவே கம்பத்துல இருக்கிற இரண்டு மளிகைக் கடைக்காரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதுதான் நாங்கள் வெளி வியாபாரிகளை உள்ளே விடுவதில்லை”.
பெங்குலுவின் கறாறான பதிலை முனியாண்டி சற்றும் எதிர்பார்க்க வில்லை. இருந்தும் அடக்கமாக, “நீங்கள் சொல்வது உண்மைதான் பெங்குலு. நான் இரண்டு நாளா வந்து ஒரு சின்ன ஆய்வு பண்ணிப் பார்த்தேன். மளிகைக் கடைகளும் மற்ற கடைகளும் கம்பத்தின் நடு மையத்தில் இல்லை. நான் ஒரு சின்ன வியாபாரி, அதோ அந்த நான்கு சாலைகள் சந்திக்கும் த்தில் ஓரத்தில் இருக்கும் மரத்து நிழலில் வியாபாரம் செய்யலாம்னு நினைக்கிறேன்” என்று தன் ஆசையை கூறினான்.
முனியாண்டியின் பேச்சைக் கேட்டதும், பெங்குலு சிரித்தே விட்டார். “ஓ.. பரவாயில்லையே! வியாபாரம் செய்ய இன்னும் அனுமதியே கிடைக்கல, அதுக்குள்ள இடத்தையே புக் பண்ணிட்டியா?”
“ஐயய்யோ அப்படி இல்லைங்க ஐயா, நீங்க ஒப்புதல் தராமல் நான் எதுவும் செய்யமாட்டேன். என்னால யாருக்கும் எந்த பாதிப்பும் வராமல் பார்த்துக்குவேன்”
ஒஸ்மானுக்கு முனியாண்டி சொன்னதில் நியாயம் இருப்பதாகவே தெரிந்தது.
“சரி முனியாண்டி நீ ரெண்டு நாள் கழித்து என்னை வந்து பாரு. நான் அந்த மளிகைக் கடை வியாபாரிகளைப் பார்த்து பேசுறேன். முடிஞ்ச உதவி நாங்க செய்கிறோம்.”
இப்படிச் சொல்லி, பின்னர் அனுமதியும் தந்து, முனியாண்டியை நல்ல வியாபாரியாக்கிவிட்ட பெருமை பெங்குலு ஒஸ்மானுக்கே சேரும். வழக்கம் போல் ஆரம்பத்தில் கம்பத்து மக்கள் முனியாண்டியின் வருகையை விரும்ப வில்லைதான். இருந்தும், பெங்குலுவின் ஆதரவு முனியாண்டிக்கு இருந்ததால் பிரச்சினைகள் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டன.
பெங்குலுவின் பார்வை வியாபாரத்தில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும். வடிவு அவளது பெண் பிள்ளைகளின் பால் நிலை கொண்டிருந்தாலும், அவர் மனதில், அந்த சோகமான சம்பவங்கள் சிற்றலைகள் போல் ஒன்றன் பின் ஒன்றாக ஓடி வருகின்றன.
வியாபாரம் நன்கு சூடுபிடிக்க ஆரம்பித்ததும், முனியாண்டி அதை சற்று விரிவுபடுத்த நினைத்தான். துணிச்சலாக, ஒரு சின்ன லோரியை செகண்ட் ஹேண்ட் விலைக்கு வாங்கினான். அத்துடன் தன் மனைவி வடிவுக்கரசியையும் துணைக்கு வைத்துக் கொண்டான்.
எந்த சின்ன முயற்சியையும் ஒன்றுவிடாமல், பெங்குறு ஒஸ்மானிடம் சொல்வது, முனியாண்டிக்கு ஒரு மன திருப்தி. இது பார்ப்பதற்கு சிறுபிள்ளை
தனமாக இருந்தாலும், அவர் மனம் நிறைந்து வாழ்த்துவது முனியாண்டிக்கு சாட்சாத் தன் அப்பாவே வாழ்த்தி ஆசிர்வதிப்பதைப் போல் உணர்வான்.
லாரி வாங்கிய விஷயத்தை முனியாண்டி சொன்னபோது மனதில் எந்த மாசும், மருவும் காட்டாமல், ஒஸ்மான் அவனைத் தோளில் தட்டிக் கொடுத்துப் பாராட்டினார்.
“முனியாண்டி, நியும், வடிவுக்கரசியும் அயராது உழைக்கிறீங்க உங்க குடும்பம் நிச்சயம் நல்ல நிலைக்கு வரும். என் வாழ்த்துகள்” என்று சொல்லி நிறுத்தியபோது, வடிவு கூட ஒன்றும் விளங்காமல் ஓஸ்மானைப் பார்த்தார்.
“முனியாண்டி, நீ வடிவுக்கு லாரி ஒட்டுற லைசென்ஸ் எடுத்துக்கொடுத்திடு, அவங்களவிட நீ உயரம் கம்மி. பார்க்க நல்ல திடகாத்திரமாக இருக்காங்க. லாரி ஓட்டும் உரிமம் கிடைப்பதில் பிரச்சினை இருக்காது. ஒருக்கால், நீ இல்லாத சமயம், அவங்களே தனியாக லாரி ஓட்டி வியாபாரம் செய்யலாம் இல்லையா? நீ கொடுத்து வச்ச மகராசன்பா. உனக்கு ஈடுகொடுத்து உழைக்கும் வடிவைப் பார்க்கும்போது எனக்கு சந்தோஷமாக இருக்கு!..”
இப்படி பெங்குலு சொன்னதைக் கேட்டதும், முனியாண்டி வெட்கத்தால் உடல் கோணித்தான் போனான்.
இரண்டே வாரத்தில், வடிவு லாரி ஓட்டிப் பழகியது மட்டுமல்லாமல், ட்டுநர் உரிமமும் எடுத்துவிட்டாள். இந்த நல்ல செய்தியை முனியாண்டி ஒஸ்மானிடம் சொல்ல முடியாமலே போய்விட்டது.
வேடிக்கையாகவும் கேலியாகவும் பேசும் வார்த்தைகள், அபசகுணங்கள் போல் அப்படியே நடந்துவிட்டால் எப்படி இருக்கும்?
தான் ஒரு கருநாக்குக் கொண்ட மனிதனோ, சொன்னபடியே நடந்துவிட்டதே என்று நினைத்து ஒஸ்மான் கதிகலங்கப் போனார். அன்று லாரி வாங்கிய விஷயத்தை, மகிழ்ச்சிப் பொங்க முனியாண்டி, பெங்குலுவிடம் சொன்னபோது, “நீ இல்லாத சமயத்தில் வடிவு தனியாக லாரி ஓட்டி வியாபாரம் செய்யலாம்” என்ற வார்த்தைகள் உண்மையிலேயே பலித்துதான் விட்டது.
இன்று இரவு நேரத்தில் முனியாண்டி, குறைவான விளக்கு வெளிச்சத்தில் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் டவுனிலிருந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தான்,
அப்போது, எதிர்முனையிலிருந்து பயங்கர வேகத்தில் வந்து கொண்டிருந்த டிரெய்லர் லாரி, அவனை மோதித் தள்ளி விட்டு நிற்காமல் இருட்டில் மறைந்துவிட்டது.
பின்னர் அவ்வழியில் காரில் வந்து கொண்டிருந்த இந்திய இளைஞர்கள், முனியாண்டியைக் காரில் அள்ளிப் போட்டுக்கொண்டு பெரிய மருத்துவ மனையில் சேர்த்தனர்.
முனியாண்டிக்கு உடம்பெல்லாம் பலத்த அடி. அதற்கும் மேலாக இடுப்புப் பகுதியில் பட்ட கடுமையான காயம். முனியாண்டியைப் படுக்கையில் அசைவற்றுக் கிடக்கும் நிலைக்குக் கொண்டு போய்விட்டது.
விஷயம் தெரிந்ததும் ஒஸ்மான் கருக்கலுக்கு முன்னரே மருத்துவமனைக்கு விரைந்து வந்தார்.
அப்போது வடிவு தன் நான்கு பிள்ளைகளையும் கட்டி அணைத்தபடி, மருத்துவமனை என்று பாராமல், அழுது புலம்பிக் கொண்டிருந்தாள். பெங்குலுவை கண்டதும் அவளின் அழுகை இருமடங்காக ஆனது. சோகத் தைப் பிழிந்தெடுத்த அந்த காட்சி. பார்ப்போரை நெஞ்சம் கரைய வைத்தது.
பெங்குலு செய்வதறியாது விக்கித்து நின்றார். அவரால் எதைச் சொல்லி, எப்படி வடிவுக்கரசியை தேற்றுவது என்றே தெரியவில்லை.
அவர் கண்களிலிருந்து பொலபொலவென்று கண்ணீர் பெருகெடுத்தது. தன் சொந்த மகனுக்கே, இந்த கோரச் சம்பவம் நடந்துவிட்டதைப் போல நெஞ்சுருகினார்.
அதற்குள் செய்தியை தெரிந்துகொண்ட கம்பத்து மக்கள், ஒருவர் பின் ஒருவராக மருத்துவமனைக்கு கூடத் தொடங்கினர். ஒஸ்மானுக்கு வந்து குவியும் மக்களை பார்த்ததும் ஒரே ஆச்சரியம். வந்தவர்கள் ஒவ்வொருவரும் பழங்கள் முதல் ஏதேதோ தின்பண்டங்களை வடிவிடமும், பிள்ளைகளிடமும் கொடுத்தார்கள்.
மூன்று வார சிகிச்சைக்குப் பின் முனியாண்டி ஆம்புலன்சில் வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டான். மூன்று அறைகள் கொண்ட சாதாரணப் பலகை வீடு. அதில் முனியாண் டிக்கு ஒரு அறையை வடிவு ஒதுக்கினாள்.
வடிவுக்கு எதிர்காலமே இருட்டடைந்து விட்டதைப் போல் ஒரு பயம். ஏறக்குறைய ஒரு மாதம் வியாபாரத்திற்கு போகவில்லை. வாடிக்கையாளர் களை இழந்துவிடுவோமோ என்ற அச்சமும் அவள் நெஞ்சில் திகிலைக் கொண்டு வந்தது.
அதே நேரத்தில் பெங்குலு ஒஸ்மான் இல்லாமல் போயிருந்தால் வீட்டில் கிடக்கும் கிழிந்துபோன பாய்களைப் போல், மனமும் செய்வதறியாது, நார் நாராகப் பிய்ந்துதான் போயிருக்கும்.
“ஏம்மா வடிவு, நீ இப்படியே வீட்டில் அழுதபடி முடங்கி கிடந்தால் எப்படி? நீ எதிர் நீச்சல் போட்டுத்தான் ஆக வேண்டும். கம்பத்து மக்களைப் பற்றி நீ பயப்படாதே. உன்னுடைய வியாபாரம் எந்த காலத்திலும் பாதிக்கப்படாது. எல்லாரும் உனக்காகத்தான் காத்திருக்காங்க எல்லாம் உன் புருஷன் சம்பாதித்து வைத்த நட்புதான். அதனால் நீ பழையபடி வியாபாரத்தை துவங்கியே ஆகணும்.”
ஒஸ்மான் இப்படிச் சொன்னதும், வடிவுக்கரசி அப்படியே நெஞ்சைப் பிடித்துக் கொண்டாள். கம்பத்து மக்களின் பாசம் அவளை பேசவிடாமல் செய்தது. கண்ணுக்குள் முட்டி உறுத்துகின்ற கண்ணீரைத் தன்மானத்துடன் விழுங்கிக் கொண்டாள்.
வடிவுக்கரசியின் கண்களில் மின்னல் போன்ற பிரகாசம். அந்த ஒளி நெஞ்சில் இறங்கி, நாவிலும் துடித்துக் கொண்டிருந்தது. இனியும் விடக்கூடாது. ஜெயித்துக் காட்டுவேன் என்ற ஆவேசம் வடிவுக்கரசியின் ரத்த நாளங்களில் ஒட்டிக் கொண்டு கர்ஜித்துக் கொண்டிருந்தது.
பட்டும் படாமலும் சிதறலுடன் காணப்பட்ட தன்னுடைய கூந்தலை, கூட்டி முடித்து கோடாரிக் காம்புபோல் முடுச்சுப் போட்டுக் கொண்டாள்.
நான்கு பிள்ளைகளையும் பக்கத்தில் அமர வைத்தாள். ஒவ்வொருவரும் என்னென்ன செய்ய வேண்டும் என்று கட்டளை இட்டாள். படுத்த படுக்கையாக இருக்கும் அப்பாவை, மாறி மாறி நேரத்துக்குத் தகுந்தபடி பார்த்துக் கொள்ளச் சொன்னாள்.
வடிவுக்கரசியின் நெஞ்சில் உழைப்பைத் தவிர வேறு ஒன்றும் நிலை கொள்ளவில்லை. அவள் மனதில் உழைப்பே தாரக மந்திரமாக ஒலித்தது.
இதயத்தில் பட்ட வலிய அடி, அதன் தீவிர பாதிப்பு, மனசுக்குள் உருவாக்கிக் கொண்ட சவால்… அதன் உத்வேகம்! இந்த பத்து வருட கால ஓயாத உழைப்பு வடிவுக்கரசி வீட்டை மட்டும் புதுப்பிக்கவில்லை! அவளது குடும்ப வாழ்க்கையை, புரட்டிப் போட்டு, பதியம் பண்ணி, புதுப் பொலிவுக்கு அச்சாரம் விடச் செய்தது.
வடிவு, தான் கட்டிய மனக்கோட்டைகளை, நிஜமான மாளிகையாக உருவாக்கம் செய்து கொண்டிருந்தாள்.
வடிவுக்கரசியின் ஒவ்வொரு அணுகுமுறையையும் அர்ப்பணிப்பையும் கண்கூடாகப் பார்த்தவர்தான் பெங்குலு ஒஸ்மான். வடிவுக்கரசி தன் நான்கு பிள்ளைகளையும் பல்கலைக்கழகம் செல்ல வழிகாட்டி விட்டாள். அவர்களுக்கு எந்த நிறுவனம் உபகாரச் சம்பளமோ, கல்விக்கடன் உதவியோ கொடுத்ததில்லை
அப்படி இருக்கையில், என் மகனிடம் வடிவுக்கரசியைப் பற்றிய முழு விவரங்களைச் சொல்லி, அந்த வருடத்தின் சிறந்த சாதனை செய்த தாயாக ஏன் தேர்வு செய்யக்கூடாது.
அரிபினுக்கு வடிவுக்கரசியைப் பற்றி நன்கு தெரியும்தான். இருந்தும் நேற்று இரவில் நடந்த உரையாடல்களுக்குப் பின்னர்தான் ஒஸ்மானுக்கு வடிவுக்கரசியின் ஒவ்வொரு செயல்பாடுகளும் நினைவு நாடாவை மீண்டும் இயக்கிப் பார்க்க வாய்ப்பு கிடைத்தது.
உண்மையைச் சொன்னால், மகன் அரிபின் தன் கருத்துகளுக்கு நிச்சயம் மதிப்பளிப்பான் என்று பெங்குலு நம்பினார்.
யார், யாரோ திரட்டி வந்து கொடுத்த ஆதாரங்கள், குறிப்புகள் வைத்து, தேர்வு நியமனம் செய்வதை விட தங்களின் கண் எதிரே, ஒன்றல்ல, இரண் டல்ல, சுமார் பத்து வருடங்களே ஏன், அதற்கு மேலும் குடும்பக் கப்பலை, மாலுமியாக நின்று இயக்கி, வெற்றியும் அடைந்த வடிவுக்கரசியை ஏன் சிறந்த தாயாக முன்நிறுத்தக்கூடாது?
பெங்குலுவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. தன் மகளைப் போல் நினைக்கும் வடிவுக்கரசியை நாளைக்கே மேடையில் எல்லார் முன்னிலையில் பட்டங்கள், பதக்கங்கள் சூட்டுவதை பார்ப்பது போல் ஒரு உவகை.
ஒஸ்மான் கையில் கட்டியிருந்த கடிகாரத்தைப் பார்க்கிறார். மணி ஒன்று இருபது. இன்னும் கொஞ்ச நேரத்தில் வடிவும் பிள்ளைகளும் தங்களுடைய வியாபாரத்தை முடித்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்பி விடுவார்கள். அதற்குள் வடிவுக்கரசியிடம் தன் மனதில் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும் அந்த மகிழ்ச்சியான செய்தியைச் சொல்லிவிட வேண்டும். விஷயத்தை கேட்டால், வடிவு சந்தோஷத்தில் திக்கு முக்காடித்தான் போவாள்.
பெங்குலு, வடிவுக்கரசி வியாபாரம் செய்யும் இடத்துக்கு வந்தார். வாயெல்லாம் உவகை கொப்பளிக்க, தானும் தன் மகன் அரிபினும் செய்ய போகும் முயற்சிகளையும் தீர்மானங்களையும் ஒன்று விடாமல் சொன்னார்.
ஒஸ்மான் பேச்சை வடிவு மிகவும் நிதானமாக கேட்டுக் கொண்டிருந்தாள். அவள் முகத்தில் எந்தவித சலனமும் இல்லை. தனக்காக ஏன் இந்த வயோதிகர் தேவை இல்லாமல் போராடிக் கொண்டிருக்கிறார்?
தன்னை அவ்வருடந்திய சிறந்த தாயாக தேர்வு செய்தால்…? நிச்சயம் பெரும் சர்ச்சைகள் ஏற்படலாம். பெங்குலு ஐயா சொன்னது போல், ஒரே மலேசியா என்ற கோட்பாட்டில் அங்கீகாரங்களும் வாய்ப்புகளும் பரவலாக்க, தங்கள் முயற்சியில் முதல் பதிவு என்று ஒஸ்மான் சொல்வது கேட்க நன்றாக இருக்கலாம். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் இதை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறார்கள் என்பது என்ன நிச்சயம்?
பெங்குலு ஒஸ்மானும் அவரின் மகன் அரிபினும் தன்னால் மற்றவர்கள் முன் பலிகடா ஆவதை வடிவுக்கரசி சற்றும் விரும்பவில்லை. அவள் பெங்குலுவைப் பார்க்கிறாள். வெள்ளந்தியான அவர் முகத்தில் என்ன என்ன உணர்வுகள்! பெங்குலு ஐயா, எங்களுக்கு நீங்கள் எவ்வளவோ உதவிகள் செய்து இருக்கிறீர்கள். எங்கள் குடும்பம், வாழ்நாள் முழுவதும் அதற்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது. நாங்கள் உழைத்த உழைப்பு மற்றவர்களின் அங்கீகாரங்கள் பெறுவதற்கு அல்ல. உங்களின் சிபாரிசு என்னை மெய்மறக்க செய்கிறது. மிக்க நன்றி.
இருந்தும் நீங்கள் கொடுக்க நினைக்கும் அந்த உயர்ந்த விருது மற்றும் அங்கீகாரம் என்னையும் என் குடும்பத்தையும் எந்தவிதத்திலும் வாழ வைத்துவிட முடியாது. நாங்கள் கஷ்டத்திலும் வறுமையிலும் வாழ்ந்தபோது, தெய்வம் போல் நீங்கள்தான் உதவிகள் பல செய்தீர்கள்.
விபத்தில் சிக்குண்டு என் கணவர், நடமாடக்கூட முடியாமல் படுத்த படுக்கையாக கிடந்தார். டாக்டர்கள் இனி ஒன்றும் செய்ய முடியாது என்று கைவிட்டு விட்டனர். நீங்கள் உங்களுக்குத் தெரிந்த நாட்டு வைத்தியரான ‘போமோ’வை அழைத்து வந்து சிகிச்சை செய்ய வைத்தீர்கள்.
பல வருடங்கள் விடாது செய்த நாட்டு வைத்தியத்தால், என் கணவர் இப்போது மாமூல் நிலைக்கு திரும்பி இருக்கிறார்.
பெங்குலு ஐயா, இதற்கெல்லாம் நான் எப்படி கைமாறு செய்யப் போகிறேன் என்றே தெரியவில்லை.
வடிவு பேசுகிறாள். அவளை அறியாமல் அவள் கண்கள் பனிக்கின்றன. பெங்குலு அதைக் கவனிக்கிறார்.
“அப்படியானால் வடிவு, உனக்கு எந்த அந்தஸ்தும் அங்கீகாரமும் வேண்டாாமா?”
இதைக் கேட்ட வடிவுக்கரசி, ஒரு வறட்டு புன்னகை சிந்தினாள். முகத்தில் விழுந்து கிடந்த தலைமுடியை ஒதுக்கித் தள்ளியபடி,
“மன்னிக்கணும் ஐயா. இதில் எனக்கு ஒரு நாட்டமும் இல்லை. அப்படி என்ன பெரிய சாதனையை நான் செய்துவிட்டேன். அதுவும் யாருக்காக உழைத்தேன்? என் குடும்பத்துக்காகத்தான! அது என் கடமை. இதுக் கெல்லாம் எதற்கு ஐயா அங்கீகாரங்களும் அடையாளங்களும்? உங்கள் முயற்சிக்கு நன்றி. நேரமாகிறது. என் கணவருக்கும் மற்றவர்களுக்கும் சமைக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை நாட்களில் தான் எல்லாரும் ஒன்றாகச் சேர்ந்து சாப்பிட நேரம் கிடைக்கிறது. நன்றி பெங்குலு ஐயா. நாங்கள் வருகிறோம்” என்று சொன்னபடி வடிவு லாரியின் இன்ஜினை இயக்குகிறாள்.
அதைப் பார்த்து ஒஸ்மான் செய்வதறியாது விக்கித்துப் போய் நின்றார்!
(நயனம், 15 ஜனவரி, 2012)
– 2012 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைகள், முதற்பதிப்பு: 2013, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், கோலாலம்பூர்