கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: March 31, 2018
பார்வையிட்டோர்: 10,532 
 

தமிழ் என்ற பெயரை ஆங்கிலத்தில் எழுதியதில் அவளுக்கு அவ்வளவாக ஈடுபாடில்லை.விண்ணப்பம் ஆங்கிலத்தில் இருந்ததால் வேறு வழியில்லை.தொடர்ந்து தனது பிறந்த தேதியை குறிப்பிட்டு முடித்ததும் அந்த சொற்களை கண்டாள்.அந்த சொற்க்கள் அவளுக்கு வலி கலந்த கோவத்தை பொங்க செய்தது.இது அவளுக்கு புதியதில்லை.கோவ பிரளயம் ஏற்பட காரணம் விண்ணப்பத்தில் விண்ணப்பதாரருடைய பாலினம் ஆணா பெண்ணா என்று கேட்கப்பட்டிருந்தது.

சற்றென்று எழுச்சி பெற்று தன்னம்பிக்கையோடு எழுதுகோலை எடுத்து மாற்று பாலினம் என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டாள்.அந்த கோவம் அடங்கவதற்கும் தனிவதற்கும் வாய்ப்பே இல்லாதபடி அடுத்து வந்த கணை அவளை குத்தி கிழித்தது.அது தந்தை பெயர் என்னும் வடிவில் வந்தது.தந்தை? தந்தை? தன் மனதிற்குள்ளாகவே கேட்டுக்கொண்டாள்.அந்த முகம் அவளுக்கு தற்போது எரிச்சலூட்டுவதாக நினைவுக்கு வந்தது.

அதை விடுத்து மற்ற விவரங்களை பூர்த்தி செய்து முடித்தாள்.மீதம் இருந்தது.தந்தை பெயர்.அதை மட்டும் பூர்த்தி செய்துவிட்டால் போதும் இத்தனை நாளாக எதிர்ப்பாத்த வேலை கிடைத்துவிடும். எத்தனையோ பத்திரிக்கை அலுவலகங்கள், தொலைகாட்சி அலுவலகங்களை அணுகிவிட்டாள்.பலவற்றில் ஏமாற்றமே மிஞ்சியது.நல்ல படியாக இந்த அலுவலகத்தில் உள்ள பெண் மேலாளர் பணி தருவதாக உறுதி அளித்துள்ளார். அதற்கு இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்தாக வேண்டும்.அந்த உறுதி மொழியை வீணாக்கிவிடகூடாது. இது தான் அவளுக்கு கிடைத்துள்ள முதல் வாய்ப்பு.இந்த வாய்ப்பை பயன்படுத்தி தான் அவள் நிறைய செய்யவேண்டும் என்று திட்டமிட்டிருந்தாள்.

என்ன மேடம் முடிச்சிடீங்களா என்ற குரல் கேட்டு திரும்பி பார்த்தாள் தமிழ்.அந்த பெண் மேலாளர் நின்று கொண்டிருந்தார்.இதோ முடிச்சிட்டேன் மேடம் என்றாள் தமிழ்.கொண்டு வாங்க என்று சொல்லிக் கொண்டே அறைக்குள் சென்றார்.உடனே எழுதுகோலை எடுத்து தந்தை பெயர் என்பதற்கு நேராக சூரஜ் என்று குறிப்பிட்டாள்.சூரஜ் ஒரு சமூக சேவகர்.பள்ளி படிப்பை முடிக்காமல் வீட்டிலிருந்து வெளியேறிய தமிழ் இன்று ஊடகவியல் பட்டதாரியாக இருப்பதற்கு அவரே காரணம்.

விண்ணப்பத்தை வாங்கி படித்துவிட்டு,மாற்று பாலினம் என்று ஆங்கிலத்தில் எழுதியிருப்பதை பார்த்துவிட்டு இனிமேல் விண்ணப்பத்தை மாற்றி அடிக்கணும்.நாளைல இருந்தே வேலைக்கு வந்துடுங்க.சரியான நேரத்துக்கு வந்துடணும் என்றார்.சரியென்று மகிழ்வுடன் விடைபெற்றுக் கொண்டாள் தமிழ்.மறுநாள் பணியில் மும்முரமாக ஈடுப்பட்டாள்.பிழை திருத்துதல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டிருந்த அவளுக்கு சில மாதங்கள் கழிந்த பின்பு ஒரு கட்டுரை எழுதும் வாய்ப்பு கிடைத்தது.அதை நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டுமென்று அவள் நினைத்து கொண்டிருந்தாள்.

மாற்று பாலினமே மாற்று சமுகத்தை என்ற தலைப்பில் மாற்று பாலினம் குறித்து ஒரு வீரியமிக்க கட்டுரையை எழுதினாள்.அது அப்படியே அச்சுக்கு வந்தது. அதன் மூலம் அவள் புகழ்பெற துவங்கினாள்.மாற்று பாலினத்திற்காக போராடும் பலர் அவளை அனுகினார்கள்.பலரின் நட்பு அவளுக்கு கிடைத்தது.நாளடைவில் ஒரு நல்ல எழுத்தாளராக அறியப்பட்டாள்.நிறைய எழுதினாள்.அதன் வழியே தனது கருத்துக்களை பதிவு செய்தாள்.ஒருநாள் சில மாற்று பாலினத்தவர் குழுவாக அவளை சந்தித்தனர்.நமது உரிமைகளை வலியுறுத்தி ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தை இருக்கலாம் என்றார்கள்.

நாம் ஒருபக்கம் போராடிக் கொண்டிருந்தால் அரசாங்கம் ஒருபக்கம் அதன் வேலையை பார்த்து கொண்டு தான் இருக்கும் என்றாள் தமிழ்.இருந்த போதும் சமூகத்தின் கவனத்தை பெற ஒரு அடையாளத்திற்காக செய்யலாம் என்றது குழு.பேச்சுவார்த்தைக்கு வந்த காவலதிகாரி தகாத வார்த்தைகளோடு போராட்டத்தை கைவிட மிரட்டினார்.”இல்லையென்றால் அனைவர் மீதும் வழக்குகள் போட்டு தொலைச்சிடுவேன்” என்று பயமுறுத்தினார்.கோவத்தின் உச்சிக்கே சென்ற தமிழ் போராட்டத்தை காலவரையரை அற்றதாக மாற்றினாள்.ஊடகங்களில் செய்தி பரவியது.ஆதரவும் பெருகியது. வேறுவழியின்றி அரசாங்கமும் பேச்சு வார்த்தைக்கு அழைத்தது.

தமிழுடன் சிலர் பேச்சு வார்த்தைக்கு சென்றனர்.அதிகாரி பேச்சுவார்த்தையை தொடங்கினார்.உங்களுக்கு என்ன வேண்டும்?.வேலை வேண்டுமா? உதவி தொகை வேண்டுமா? கடன் உதவி வேண்டுமா?. இல்லை ஏதாவது இடஒதுக்கீடு போன்று ஏதாவது வேண்டுமா ஏளனமாக சிரித்து கொண்டே கேட்டார். வீரியத்துடன் பேச தொடங்கினாள் தமிழ்.நீங்கள் கொடுக்கும் எதுவும் எங்களுக்கு வேண்டாம்,எங்களுக்கு வேண்டியதெல்லாம் அங்கீகாரம்.அங்கிகாரமென்ற ஒன்று மட்டுமே.அதை நீங்கள் கொடுத்தால் நீங்கள் சொன்ன வேலை,கடன்,உதவித்தொகை, இடஒதுக்கீடு உதவி தொகை எல்லாம் தானாக எங்களுக்கு கிடைத்துவிடும்.

பெற்றோர்களை பராமரிக்காதவர்களையும், பிள்ளைகளுக்கு கொடுமை கொடுப்பவர்களையும் தண்டிக்க சட்டம் இருக்கிறது.அதுபோல,மாற்றுபாலினத்தவரை பராமரிக்காதவர்களையும் தண்டிக்க சட்டம் கொண்டு வந்துள்ளீர்களா.அது சம்பந்தமான நடவடிக்கை தொடங்கப்பட்டுலதா.இது போன்ற அங்கிகாரம்.அது ஒன்று தான் புரிகிறதா.சொல்லுங்கள் உங்கள் அரசாங்கத்திடம்.

அங்கீகாரம் கிடைத்தால் உரிமைகள் தானாக வந்துவிடும்.வியந்து போன அதிகாரி இது குறித்து மேலிடத்தில் பேசுவதாக கூறினார். வெளியேறியதும் தமிழுடன் வந்தவளுள் ஒருத்தி வெற்றி அக்கா என்றாள்.புன்னகைத்தவாறு தமிழ் சொன்னாள். “இல்லை இது வெற்றிக்கான முயற்சி!”.

சட்டத்தால் மட்டும் அங்கிகாரம் நமக்கு கிடைத்து விடாது.சாதிய வேற்றுமைகள் ஒழிக்கப்பட்டுவிட்டன என்று சட்டம் கூறுகிறது.ஆனால் நடைமுறையில் ஒழிந்தா விட்டது,இல்லையே.ஒரு எதார்த்தமான உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.அங்கீகாரம் தர வேண்டியது அரசாங்கமோ,சட்டமோ அல்ல;மக்கள்.

அவர்களின் மனநிலை,சமுதாயம்,சமுதாயத்தின் சிந்தனை, அவர்களின் அணுகுமுறை,கண்ணோட்டம் இங்கெல்லாம் தான் கிடைக்க வேண்டும் நமக்கு அந்த அங்கீகாரம்.அது மட்டும் கிடைத்துவிட்டால்!…

– இச்சிறுகதை கடந்த 2015-ஆம் ஆண்டு “புதுவை பாரதி” மாத இதழ் நடத்திய சிறுகதை போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *