அருகம்புல்லின் அற்புதம்!
வளங்கள் நிறைந்த மிதிலா தேசம். ஜனகனின் அரண்மனை! அவைக்குள் நுழைந்த நாரதரை வணங்கி வரவேற்றனர் அமைச்சர்கள். ஜனகர் மட்டும், ஆசனத்தில் அமர்ந்தபடியே வரவேற்றார்! இதைப் பொருட்படுத்தாத நாரதர், ”நீ விரும்பிய அனைத்தையும் இறைவன் உனக்கு அருள்வான்” என்று ஜனகரை ஆசீர்வதித்தார்.
இதைக் கேட்டதும் விழுந்து விழுந்து சிரித்த ஜனகர், ”நாரதரே… இறைவன் வேறு; நாம் வேறா? பேதமற்ற அபேத ஞானம் தேவை அல்லவா? அனைத்தையும் கொடுப்பவனும் நானே! கொடுத்ததை அனுபவிப்பவனும் நானே! அவற்றை வெறுப்பவனும் நானே! நானே பிரம்மமாக இருக்கிறேன்” என்றார் ஜனகர்.
ஆணவமான இந்த பதிலைக் கேட்டு கலங்கிய நாரதர், கனத்த மனதுடன் வெளியேறினார். விறுவிறுவென நடந்து கௌண்டின்ய முனிவரது ஆஸ்ரமத்தை அடைந்தவர், கௌண்டின்யர் வழிபட்ட விநாயகரின் முன் நின்றார். ”பெருமானே! ஞானிகள் அனுபவிக்கும் அத்வைதத் தத்துவத்தை ஜனகன் உணரவில்லை! தானே பரப்பிரம்மம் என கர்வத்துடன் பேசுகிறான். மன்னன் இப்படியிருந்தால், மக்கள் எப்படி நலமுடன் இருப்பார்கள்? ஜனகனுக்கு நல்லறிவு புகட்டுங்கள்!” என்று வேண்டிச் சென்றார்.
அதேநேரம்… ஜனகரின் அரண்மனை வாசலில் அந்தணர் ஒருவர் நின்றார். உடலெங்கும் வெண் குஷ்டம்! காவலர்கள் தகவல் தர… அவரை அழைத்து வரப் பணித்தார் ஜனகர். அதன்படி, அந்தணர் உள்ளே வந்ததும், ”என்ன வேண்டும்?” என்று கேட்டார் ஜனகர்.
”கடும் பசி! உணவு வேண்டும்!”- என்றார் அந்தணர்.
”அட… இவ்வளவுதானா?” என்ற ஜனகர், பசி தீரும் வரை அந்தணருக்கு உணவு கொடுக்குமாறு தன் மகனைப் பணித்தார்.
அதன்படி அந்தணருக்கு உணவு பரிமாறப் பட்டது. அந்தணர் இலையில் கை வைத்ததும் மொத்த உணவும் காணாமல் போனது. அனைவரும் அதிர்ந்தனர். மீண்டும் உணவு பரிமாற… அதுவும் அந்த நிமிடமே காணாமல் போனது! இப்படியாக அரண்மனையில் இருந்த அனைத்து வகை உணவுகளும் காலியாயின!
பரிமாறியவர்கள் சோர்ந்து போனார்கள். ”இனியும் உணவு தேவையெனில், சமைத்துதான் பரிமாற வேண்டும்” என்றனர். இதைக் கேட்ட அந்தணர், ”முதலில், வந்த பசியைத் தீருங்கள்! வருகின்ற பசியைத் தீர்க்கும் வழியைப் பிறகு பார்க்கலாம்” என்றார். திகைத்துப்போன பணியாளர்கள், கடைசியில்… தானியக் களஞ்சியங்களைத் திறந்துவிட்டனர். ”முடிந்தவரை சாப்பிடுங்கள்!” என்றனர்.
அந்தணர் களஞ்சியத்துக்குள் நுழைந்தார். நொடிப் பொழுதில் தானியக் களஞ்சியமும் காலியானது! தகவல் அறிந்த ஜனகர் அதிர்ச்சி அடைந்தார்.
”நகருக்குள் சென்று கிடைக்கும் உணவையெல்லாம் எடுத்து வாருங்கள்” என்று உத்தரவிட்டார். அப்படியே எடுத்து வந்தனர் ஊழியர்கள். அத்தனை உணவையும் காலி செய்தார் அந்தணர். ‘யார் இவன்? அசுரனா… பூதமா?’ என்று வியந்து நடுங்கினர் அமைச்சர்கள்.
‘இனியும் இவனுக்கு உணவு வழங்க இயலாது. முதலில், இவனை வெளியில் அனுப்புவதே உத்தமம்!’ என எண்ணிய ஜனகர், ”உணவு கேட்டீர்கள்; கொடுத்தேன். ஆனால், உங்களது பசி ஒழிந்தபாடில்லை. எனவே, தீராத பசியைத் தீர்க்கும் இடத்துக்கு தாங்கள் செல்லலாம்” என்றார்.
உடனே அந்தணர், ”வள்ளல் எனப் பேரெடுத்த நீ, என் பசியைப் போக்குவாய் என்றுதானே உன்னிடம் வந்தேன்? நெருப்பில் நெய் விட்டது போல், கொஞ்சமே கொஞ்சம் உணவைத் தந்து, எனது பசியை அதிகரிக்கச் செய்துவிட்டு, வேறு இடத்துக்குப் போ என்கிறாயே? ‘நானே பரப்பிரம்மம்! கொடுப்பதும் வாங்குவதும் நானேதான்!’ என்று அகம்பாவமாகப் பேசும் உனக்கு, என் பசியைப் போக்கும் சக்தி இல்லையா? ஒரு பொருளை ஆக்கவும் அழிக்கவும் வல்ல பிரம்மம் என்றாயே? பிரம்ம நிலை என்பது மிகவும் உயர்ந்த நிலை. உனது அர்த்தமற்ற பிரம்மத்துவத்தை நெருப்பில் போடு!” என்று கூறிவிட்டு, விறுவிறுவென வெளியேறினார்!
ஜனகர் திடுக்கிட்டார். ‘அஹம் பிரம்மாஸ்மி’ என்று அகங்காரத்துடன் அலைந்தது தவறுதான். அந்தணர் எனக்கு சரியான பாடம் புகட்டி விட்டார்! என்று தனது தவறை உணர்ந்து திருந்தினார்.
திரிசிரன் என்பவரது குடிசைக்கு வந்து சேர்ந்தார் அந்தணர். அப்போதுதான், திரிசிரனும் அவரின் மனைவி விரோசனையும் விநாயக வழிபாட்டை முடித்திருந்தனர். அந்தணரை இன்முகத்துடன் வரவேற்றனர்.
அந்தணர், வந்த நோக்கத்தைச் சொன்னார். ”கடும்பசி! ஜனகனின் அரண்மனைக்குப் போனேன். அவனும் ஏதோ போட்டான். இருந்தாலும் என் பசி தீரவில்லை. எனவே இங்கு வந்தேன்!” என்றார்.
திரிசிரன் தம்பதி ஆடிப் போனார்கள்! ”என்ன ஸ்வாமி இது? குளத்து நீர் முழுவதையும் குடித்துத் தீராத தாகம், ஒரு கை தண்ணீரைக் குடிப்பதால் தீர்ந்து விடுமா? நேற்று வரை யாசகம் எடுத்து, சாப்பிட்டு வந்தோம். இன்றைக்கு அந்த உணவுகூட கிடைக்கவில்லை. விநாயகரை வழிபட, அருகம்புல்கூட எடுத்துவர முடியவில்லை. இதோ… ஒரேயரு அருகுதான் இன்றைக்கு பகவானுக்குக் கொடுக்க முடிந்தது. இதை கணவருக்கு தந்துவிட்டு, தண்ணீரைக் குடித்து பசியாற எண்ணியுள்ளேன்” என்று கண்ணீருடன் இயலாமை பொங்கத் தெரிவித்தாள் விரோசனை.
வாய்விட்டுச் சிரித்த அந்தணர், ”கோடி கொடுத்தாலும் அன்பில்லாதவர் தந்தால், அதனால் எந்தப் பலனும் இல்லை. ஏழைகளாக இருப்பினும் அவர்கள் அன்புடன் தருவதை மகிழ்ச்சியுடன் ஏற்பேன். மேலும், குஷ்ட நோயைத் தீர்க்க அருகு தைலத்தைவிட சிறந்த மருந்து ஏது? அதுவும், அன்பும் பண்பும் நிறைந்த தங்களின் கரத்தால் அதைப் பெறுவது எவ்வளவு சிறப்பு?!” என்றவர், சட்டென்று விரோசனையின் கையில் இருந்த அருகம்புல்லைப் பிடுங்கி, வாயில் போட்டுக் கொண்டார்.
மறுகணம்… திரிசிரனின் குடிசை மாளிகையானது! தானியங்களாலும் பொன்- பொருளாலும் மாளிகை நிரம்பி வழிந்தது. ஸ்ரீவிநாயகராகக் காட்சி தந்தார் அந்தணர். ஆனந்தக் கூத்தாடினர் திரிசிரன் தம்பதி. ”ஸ்வாமி… தங்களை தரிசித்தது நாங்கள் செய்த பாக்கியம். தங்களின் திருவடி நிழலில் எங்களுக்கு இடம் தாருங்கள்” என வேண்டினர். வானிலிருந்து பூமாரி பொழிந்தது. திரிசிரனின் மாளிகை மட்டுமா? மிதிலா நகரமே செல்வத்தில் கொழித்தது. ‘உணவு கேட்டு வந்தவர் விநாயகரே’ என்பதை அறிந்த ஜனகர், திரிசிரனின் மாளிகைக்கு ஓடோடி வந்தார். விநாயகரை வணங்கி, மன்னிப்பு வேண்டியவர், ”அடியேனுக்கு, கடைத்தேறும் வழியை அருளுங்கள்!” எனப் பிரார்த்தித்தார்.
”ஜனகா! உன்னிடம் பிரம்ம ஞானம் இல்லை. அறியாமையே உள்ளது. சுருதி வாக்கியம், குரு வாக்கியம் மற்றும் உனது அனுபவம் மூன்றுமே நீ பிரம்மம் அல்ல என்பதை உனக்கு உணர்த்தும்” என அருளி மறைந்தார் விநாயகர்.
அருகம்புல்லின் மகிமையையும் ஆனைமுகனின் அருளையும் அறிந்த ஜனகர், விநாயகர் ஆலயங்கள் பலவற்றை எழுப்பினார். அருகம்புல்லால் கணபதியை அர்ச்சித்து வணங்கினார். பிறகு, யாக்ஞவல்கிய மஹரிஷியிடம் உபதேசம் பெற்று, ராஜ யோகியானார். திரிசிரனும் விரோசனையும் அருகம்புல்லால் அர்ச்சித்ததன் பலனாக, விநாயகரின் திருவடியில் கலந்தனர்.
இன்னொரு தகவல்… குஷ்ட நோய்க்கு அருகம்புல் தைலம், தலைசிறந்த மருந்து என இந்தக் கால விஞ்ஞானம் கண்டறிந்துள்ளது!
– செப்டம்பர் 2009